• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியாக விளங்கும் வல்வெட்டித்துறைப் பிரதேசத்தின் நடு நாயகமாக விளங்கும் சிவன் கோவிலிலும் அம்மன் கோவிலிலும் பூஜை மணி ஒரே நேரத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.

அம்மன் கோவிலும் சிவன் கோவிலும் அருகருகே அமைக்கப்பட்டு இருந்தது அந்த ஊருக்கே ஒரு இலட்சணமாகத் திகழ்ந்து கொண்டிருந்தது.

அம்மன் கோவில் கண்ணைக் கவரும் வர்ணப் பூச்சுக்களோடு காட்சி கொடுக்க, சிவன் கோவிலோ பழமையான கருங்கல் கோபுரத்துடன் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது.

இருளும் அல்லாத பகலும் அல்லாத அந்த வைகறைப் பொழுதினிலே சிவன் கோவிலோடு ஒட்டியிருந்த தோட்டத்துப் பூச்செடிகளின் மலர்கள் மெல்ல மடல் அவிழ்ந்து கொண்டிருந்தன.

கோவில்களின் வெளி வீதியில் நின்றிருந்த மாமரத்துக் கிளையின் மேலே ஒரு இலையைக் குடையாக்கி மெல்லக் கண்ணயர்ந்து கொண்டிருந்த சின்னஞ்சிறு குருவி ஒன்று தனது குண்டுமணிக் கண்களை மெல்ல விரித்துச் சிறகுகளை அடித்துச் சோம்பல் முறித்துவிட்டுப் பறந்து சென்றது.

பட்சிகள் சில ஒன்று கூடி, வைகறையைத் தொடர்ந்து வரப் போகின்ற ஆதவன் வருகைக்கு ஆதரவு தெரிவிப்பது போலச் சப்தமிட்டுக் கொண்டிருந்தன.

வானத்திலே மங்கிய வடிவத்தில் இருந்த மதி தனது சேவை முடிந்து விட்டது என்பது போல ஓய்வுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

வானத்து மதி தன் சேவையை முடித்து ஓய்வுக்குப் புறப்பட்ட அந்த வேளையில் கோவில் வெளி வீதியில் அமைந்திருந்த வீடொன்றின் தலைவாசல் கதவைத் திறந்து கொண்டு வெள்ளிக் கொலுசுகள் ஓசை எழுப்பக் கையிலே கோலப் பொடியுடன் வெளியே வந்தாள் வான்மதி.

வெளியே தவழ்ந்து கொண்டிருந்த மெல்லிய குளிர் காற்று மெல்லத் தேகம் தீண்டிச் செல்லவே அவளது மேனியும் லேசாகச் சிலிர்த்தது.

சில நொடிகள் அதிகாலை நேரத்துத் தூய காற்றை நின்று ஆழ்ந்து சுவாசித்தாள் அவள்... பின்னர் வாசலைக் கூட்டித் தண்ணீர் தெளித்து அழகான பூக்கோலத்தைப் போட்டவள் மெல்ல எழுந்து நின்று தான் போட்ட கோலத்தைத் தானே இரசித்துப் பார்த்தாள்.

அந்த நேரத்தில் வெளியே வந்த பக்கத்து வீட்டுச் சீதாமாமி... தனது எதிர் வீட்டின் வாசலில் மின்குமிழ் ஒளிர்வதைப் பார்த்து விட்டு, தன் வீட்டு மதிலோரம் இருந்த கல்லில் ஏறி நின்று வான்மதி போட்ட கோலத்தை இரசித்தார்.

"மதிம்மா... உன்னால் மட்டும் எப்படி இப்படிச் சீக்கிரமாக எழுந்து கோலம் போட முடிகிறது... அதுவும் தினமும்..."
என்று கேட்ட சீதாமாமியை நிமிர்ந்து பார்த்த வான்மதி மெல்லிய புன்னகையோடு... பழகி விட்டது என்று சைகையில் காட்டினாள்.

"அது சரி தான்... ஆனால் பழகுவது தான் எனக்குக் கொஞ்சம் இல்லை ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது... என்ன செய்வது என் தலைவிதி தினமும் சீக்கிரமாக எழுந்து, வீட்டுக்கே வடித்துக் கொட்டும் வேலையைப் பார்க்க வேண்டும்... ஒரு நாளாவது எனக்கு விடுமுறை கொடுக்க வேண்டும் என்று இந்த வீட்டில் யாருக்காவது தோன்றுகிறதா? கேட்டால் நான் தான் இங்கே வீட்டரசியாம்... பேசாமல் வீட்டுரசி என்று சொல்லலாம்... காலை மாலை என்று நேரகாலம் இல்லாமல் இந்த வீட்டையும் பாத்திரங்களையும் உரசி உரசிக் கழுவுவது தானே என் வேலை..."
என்று வழமை போலத் தன் மனக்கிடக்கையை வான்மதியிடம் கொட்டினார் சீதாமாமி.

இந்த ஆதங்கத்திற்கு வான்மதியிடம் இருந்து எந்த மறுமொழியும் வரப் போவதில்லை என்பது சீதாமாமிக்கு நன்கு தெரியும். ஆனாலும் அவளிடம் எதையாவது சொல்லும் போது ஆறுதல்மொழிக்குப் பதிலாக அவள் கண்களாலேயே காட்டும் அந்த உணர்ச்சியின் வெளிப்பாடு அவருக்குச் சொல்ல முடியாத ஆறுதலைக் கொடுக்கும்.

அவ்வாறே அன்றும்
"எல்லோருடனும் ஒரு நாள் அமர்ந்து பேசுங்கள் எல்லாமே சரி ஆகி விடும்"
என்பது போலச் சைகையில் காட்டி, ஆறுதல் போலக் கண்களை மூடித் திறந்து கொண்டாள் வான்மதி...

அவளது செய்கையையும் கண்ணசைவையும் பார்த்த சீதாமாமி பதிலுக்கு முறுவலித்து விட்டுத் தன் வேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டார்.

வெளி வேலைகளை முடித்து விட்டு வீட்டினுள் நுழைந்த வான்மதியை
"பெரியக்கா... எனக்குத் தேநீர் வேண்டாம் தேவைப்படும் போது நானே போட்டுக் கொள்கிறேன்"
என்ற தம்பியின் குரல் அவள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நினைவு படுத்தியது.

அவசரமாக ஓடிச் சென்று படுக்கையறையினுள் எட்டிப் பார்த்தாள். அங்கே போர்வைகள் எல்லாம் அழகாக மடிக்கப் பட்டு ஓரமாக அடுக்கப் பட்டிருந்தன.

"அங்கே என்ன அக்கா பார்க்கிறீர்கள்... இன்று நானாகவே எழுந்து விட்டேன்... இனிமேலும் நானே சீக்கிரமாக எழுந்து உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் தெரியுமா?"
என்று முகத்தைத் துடைத்த படி வந்தாள் தங்கை தேன்மதி.

அவளைப் பார்த்துச் சிரித்து விட்டுச் சமையலறையினுள் நுழைந்த தமக்கையைப் பின் தொடர்ந்தபடி
"ஏன் அக்கா சிரிக்கிறீர்கள்... நான் உண்மையாகத் தான் சொல்லுகிறேன்..."
என்று சிணுங்கியபடி சொன்னாள் தேன்மதி.

"பரமசிவன் படியளக்க வருகின்ற இந்த அதிகாலை நேரத்தில் எதற்காக இப்படி ஒரு பொய் சொல்லுகிறாய் சின்னக்கா..."
என்றபடி சமையலறையினுள் வந்தான் தம்பி அபிராம்.

தம்பியைப் பார்த்து முறைத்தபடி
"நீ கூடத் தான் தேநீர் வேண்டாம் தேவை என்றால் நானே போட்டுக் கொள்கிறேன் என்று அக்காவிடம் ஒரு பொய் சொன்னாய்... நான் ஏதாவது சொன்னேனா?"
என்று பதிலடி கொடுத்தாள் தேன்மதி.

சமையல் மேடையில் இருந்த தேயிலைப் பேணியையும் சீனிப் பேணியையும் எடுத்தபடி
"நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை இதோ தேநீர் ஊற்றப் போகிறேன்... உனக்கும் சேர்த்துத் தான்..."
என்ற தம்பியிடம் நானே தேநீர் தயாரிக்கிறேன் என்று வான்மதி சைகை காட்டியதை அவன் கண்டு கொள்ளாமல் மூவருக்கும் சேர்த்துத் தானே தேநீர் தாயாரித்தான்.

தம்பியின் தலையை ஆதுரத்துடன் மெல்லக் கோதியவள் தேன்மதியைத் திரும்பிப் பார்த்தாள். தமக்கையின் பார்வையைப் புரிந்து கொண்ட சின்னவளோ
"எனக்கு ஆறு மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டால் சரியாக இருக்கும் அக்கா... மதியம் கடந்து தான் வருவேன் அதனால் மதிய உணவு எனக்கு வேண்டாம்..."
என்று சொன்னாள்.

"உனக்கு மதிய உணவும் கட்டிக் கொடுக்கிறேன்... நீ வெளியே எங்கும் சாப்பிட வேண்டாம்..."
என்று அவசரமாகச் சைகையில் காட்டிய மூத்தவள் சமையல் வேலையில் இறங்கினாள்.

காலை உணவுக்கு மரவள்ளிக்கிழங்குத் தோசையும் அதோடு தொட்டுக் கொள்ளச் சிவப்பு மிளகாய்ச் சம்பலும் தயாரித்தாள்.
தோசையை வான்மதி சுட்டு எடுக்க, சம்பலை அபிராம் இடித்து எடுத்து வைத்தான்.

மதியத்திற்குச் சின்னவளுக்குக் கொடுத்து விடுவதற்காக இருந்த காய்கறிகள் எல்லாவற்றையும் போட்டு மரக்கறிச்சாதம் தயாரித்துக் கொடுத்தாள் வான்மதி.

தேன்மதி யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்ற பாடசாலைகளில் ஒன்றான கொக்குவில்லில் அமைந்துள்ள கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆசிரியையாகப் பணி புரிகிறாள்.

காலையில் ஆறு மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டால் தான் ஆறு முப்பது மணி அளவில் வல்வெட்டித்துறைச் சந்தியில் வருகின்ற அரச பேருந்தில் அவளால் ஏறிக் கொள்ள முடியும்.

பேருந்துக்குச் செல்வதற்குத் தயாராகி வந்த சின்னக்காவைத் தனது துவிச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வெளியே புறப்பட்டான் அபிராம்.

அவள் பேருந்து ஏறும் இடம் நடந்தே சென்று விடக்கூடிய இடம் தான் ஆனால் அவளது வலது காலில் அடிக்கடி ஏற்படும் ஒரு வலியினால் அவளால் கொஞ்சத் தூரத்துக்கு நடப்பதே கடினம். அதனால் பக்கத்து இடத்துக்குச் செல்வது என்றாலுமே தேன்மதிக்கு எப்போதுமே அபிராம் தான் சாரதி.

தேன்மதியைப் பேருந்துத் தரிப்பிடத்தில் இறக்கி விட்டு அவள் பேருந்தில் ஏறும் வரை நின்று பார்த்து விட்டே சின்னவன் வீட்டுக்கு வருவான்.
அதன் பிறகே அவன் சின்னச் சின்ன வேலைகளை எல்லாம் செய்வதும் பள்ளிக்குச் செல்வதற்குத் தயாராவதும் நடக்கும்.

அபிராம் வல்வெட்டித்துறையை அடுத்து உள்ள பிரதேசமான உடுப்பிட்டியில் அமைந்துள்ள உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் உயர்தரத்தில் படிக்கிறான்.
வீட்டில் இருந்து ஏழு முப்பது மணியளவில் அவன் துவிச்சக்கர வண்டியில் புறப்பட்டால் தான் அவனால் பள்ளி மணி அடிப்பதற்குள் பாடசாலையினுள் நுழைய முடியும்.

தம்பியும் தங்கையும் வெளியே புறப்பட்டுச் சென்றதும் தான் சுட்ட மரவள்ளித்தோசையில் எட்டுத் தோசையை எடுத்து ஒரு தட்டத்தில் வைத்து மூடியபடி வீட்டு வெளிக் கதவைப் பூட்டி விட்டுத் தெருவில் இறங்கி நடந்தாள் வான்மதி.

கூடவே அவளின் செல்ல நாய்க்குட்டி வீரனும் தொற்றிக் கொண்டது. வான்மதி வீட்டை விட்டு எங்கே சென்றாலும் அவளது நிழலைப் போல எப்போதுமே அவள் கூடவே தான் செல்லும் அந்தக் குட்டி நாய்.

மழை நாளொன்றில் தெருவோரம் ஒதுங்க இடம் இல்லாமல் நடுங்கிக் கொண்டு தன் வட்டவடிவக் குட்டிக் கண்களால் வருவோரையும் போவோரையும் பார்த்துப் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தவன் தான் இந்த வீரன்.

உடலில் தெருநாய்களிடம் இலவசமாக வாங்கிக் கொண்ட கடிகள் வேறு பார்ப்பதற்கே பாவமாக இருக்கும் அளவிற்கு இரத்தக் காயமாக இருந்தது.

யாருமே தன்னைக் கண்டு கொள்ள மாட்டார்களா? என்பது போல இருந்த அந்தக் குட்டி நாயின் பார்வை தெருவில் வந்து கொண்டிருந்த வான்மதியின் பார்வையில் விழுந்தது தான் வீரனுக்கு கிடைத்த அதிஷ்டம்.

தன் கைகளால் அந்தக் குட்டி நாயை வாரி எடுத்து அணைத்துக் கொண்டவளோடு அதுவும் வாகாகப் பொருந்திக் கொண்டது.
அன்றிலிருந்து இன்றுவரை இருவரும் இணை பிரியாமல் இருக்கிறார்கள்.

சிவன் கோவிலும் அம்மன் கோவிலும் கிழக்குப் பக்கம் பார்த்தவாறு அமைந்து இருக்க இரு கோவில்களுக்கும் தென்கிழக்குப் பக்கத்தில் பிள்ளையார் கோவிலும் முருகன் கோவிலும் அமைக்கப்பட்டிருந்தது.
தாய் தந்தை இருவரும் தங்கள் மைந்தர்கள் இருவரையும் தம்மோடு அருகாகவே வைத்திருப்பது போல இருக்கும் அந்தக் கோவில்களின் அமைப்பு.

பிள்ளையார் கோவிலுக்குப் பக்கத்தில் அமைந்திருந்த வீடு ஒன்றை நோக்கியே வான்மதி வீரன் பின் தொடர இப்போது வந்து கொண்டிருந்தாள்.

அந்த வீட்டில் ஒரு வயதான பெண்மணியும் அவரது வயதான கணவரும் மட்டுமே வசித்து வருகிறார்கள்.
வான்மதியும் அவளது சகோதரர்களும் தங்குவதற்கு ஒரு வீடு தேடி அலைந்த போது அவர்களுக்கு வீடு கொடுத்து உதவியது இந்த வயதான தம்பதியர்கள் தான்.

வீட்டு வாசலைத் திறந்து உள்ளே வந்த வான்மதியைப் பார்த்ததும் கலப்படம் அற்ற சிரிப்புடன்
"வாம்மா வாம்மா..."
என்று அழைத்தபடி வந்தார் செல்லம்மா.
வீரன் வாசலிலேயே படுத்துக் கொண்டது.

வாசலில் சத்தம் கேட்டதும் எட்டிப் பார்த்த செல்லம்மாவின் கணவர் எதிர்வீரசிங்கம் வான்மதியைப் பார்த்ததும் விழுந்தது போக மீதம் இருந்த பற்கள் தெரியச் சிரித்தபடி அவளை வரவேற்றார்.

"உள்ளே வாம்மா... புழுக்கொடியல் மா இருக்கிறது சாப்பிடுகிறாயா..."
என்றபடி உள்ளே செல்லப் போன செல்லம்மாவிடம் வேண்டாம் என்பது போல சைகை காட்டியவள் தான் கொண்டு வந்திருந்த மரவள்ளிக்கிழங்குத் தோசையை அவரிடம் கொடுத்தாள்.

செல்லம்மா அதை வாங்குவதற்கு முன்பாகவே அவரின் கணவன் தோசையை வாங்கியபடி
"இவளுக்கு வேறு வேலையே இல்லை மதிம்மா... காலையிலேயே சத்துமா சித்துமா என்று எதையாவது கொடுத்துத் தொண்டைக் குழியை மாவாலேயே அடைத்து விடுவாள்... நான் இன்றும் நீ என்ன கொண்டு வருவாய் என்று தான் வழி மீது விழி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன் மதிம்மா..."
என்று சொல்லி விட்டுச் சிரித்தார்.

"ஏன் சொல்ல மாட்டீர்கள் அடுப்படியில் வேகுவது நான் தானே... செய்து கொடுப்பதும் பிடிக்கவில்லை என்றால் எனக்கும் சேர்த்து நீங்களே எதையாவது செய்து கொடுக்க வேண்டியது தானே..."
என்றபடி கணவனின் காதினை வலிக்காமல் முறுக்கினார் செல்லம்மா.

இருவரதும் அந்தச் செல்லச் சண்டையை இரசித்துப் பார்த்திருந்த வான்மதிக்கு லேசாகக் கண்கள் கலங்கியது.
அவர்கள் அறியாமல் விழி நீரைச் சுண்டி விட்டவள் "வீட்டுக்குப் போகிறேன் நிறைய வேலைகள் இருக்கிறது"
என்பது போல சைகையால் காட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.

வான்மதி வெளியே வந்ததும் அங்கே உள்ளே
"ஏன் செல்லா... இந்த ஊரில் தானே ஆண்டுக் கணக்காக இருக்கிறோம் எத்தனை பேருக்கு இருப்பதற்கு வீடு கொடுத்து இருக்கிறோம்... வயதான இந்த நேரத்தில் இப்படி யாராவது வந்து எங்களை அக்கறையாகப் பார்த்து இருக்கிறார்களா? நம் மதி என்ன ஒரு அருமையான பெண்... ஆனால் அவளது குடும்பத்தைக் கடவுள் பறித்து விட்டானே..."
என்று சொல்லி ஆதங்கப் பட்டார் எதிர்வீர சிங்கம்.

கணவன் சொன்னதைக் கேட்டதும்
"கடவுள் குடும்பத்தை மட்டுமா பறித்தான் அந்தப் பிள்ளையின் பேச்சையும் சேர்த்து அல்லவா பறித்து விட்டான்..."
என்று தன் பங்குக்கு ஆதங்கப் பட்டார் செல்லம்மா.

வீட்டுக்கு வந்த வான்மதியை வாசலில் நின்றிருந்த பக்கத்து வீட்டுச் சீதாமாமி எதிர்கொண்டார்.

"மதிம்மா... உன்னைத் தேடித்தான் வந்தேன்... என்னுடைய ஒன்று விட்ட அக்காவின் குடும்பம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து இருக்கிறார்கள். நாளைக்கு இங்கே என் வீட்டுக்கு வரப் போகிறார்கள் ஒரு ஐந்து நாட்கள் தங்கி இருப்பார்கள்... எனக்கு அந்த ஐந்து நாட்களும் சாப்பாடு தயாரித்துக் கொடுக்க வேண்டும் மதிம்மா... ஒரு நேர உணவிற்குக் கொடுக்கும் பணத்தை விடவும் மேலதிகமாகப் போட்டுத் தருகிறேன் மதிம்மா..."
என்று தான் அவளைத் தேடி வந்த விஷயத்தைச் சொன்னார் சீதாமாமி.

வாய்பேச முடியாத வான்மதியால் வெளியே சென்று எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. அதனால் ஒன்றும் அவள் சோர்ந்து போய் விடவில்லை. வீட்டிலேயே தன்னால் முடிந்த வேலைகளைச் செய்து பணம் சாம்பாதிக்கத் தொடங்கினாள். அதில் ஒன்று தான் சாப்பாடு தயாரித்து விற்பனை செய்வது. அவள் தயாரிக்கும் உணவு சுத்தமாகவும் ருசியாகவும் இருப்பதோடு பாரம்பரியம் மிக்கதாகவும் இருக்கும். அதனால் எப்போதுமே அவளுக்கு உணவு தயாரிக்கும் வேலை இருந்து கொண்டே தான் இருக்கும்.

செய்து கொடுக்கிறேன் எனத் தலையை ஆட்டிய வான்மதி எத்தனை பேர் வரப் போகிறார்கள் என்று சைகையில் கேட்டாள். அதற்கு ஐந்து பேர் என்று சொன்ன சீதாமாமி தன் வீட்டுக்குச் சென்று விட்டார்.

வீட்டில் உள்ளவர்களோடு புதிதாக வரும் ஐந்து பேருக்கும் சமைப்பது என்றால் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் காய்கறிகள் போதாது என நினைத்தவள் காய்கறிக் கூடையை எடுத்துக் கொண்டு வீரன் பின் தொடர வெளியே புறப்பட்டாள்.

இரண்டு தெரு தள்ளி இருக்கின்ற கனகலிங்கம் ஐயா பெரிய பெரிய காய்கறித் தோட்டம் வைத்து இருக்கிறார். இப்படி ஒரு அளவிற்கு பெரிய சமையல் வந்தால் அவள் அவரிடம் தான் மரக்கறி வாங்குவது. அவர் இயற்கைப் பசளை போட்டுத் தான் பயிர்களை வளர்க்கிறார் என்பதே அதற்குக் காரணம்.

கூடை நிறைய காய்கறிகளை வாங்கி வந்து வீட்டில் வைத்தவள் வெளியே மாமரத்துக்குக் கீழே இருந்து வைரமுத்துவின் தண்ணீர் தேசம் புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினாள். வீரன் அவளது காலருகில் படுத்துக் கொண்டது.

நாளைய தினத்தில் இருந்து அவளது வாழ்க்கை வேறு மாதிரிப் பயணிக்கப் போகிறது என்பதை அறியாதவளாப் புத்தகத்திற்குள் தன்னைப் புதைத்துக் கொண்டாள் வான்மதி

விதியோ என்றோ ஒரு நாள் காலத்தின் கட்டாயத்தில் பிரிந்தவர்களை மீண்டும் சந்திக்க வைப்பதற்காகத் தனது விளையாட்டைத் துவக்கியிருந்தது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தென்றல் காற்றுச் சில பொழுது
சூறைக் காற்றுச் சில பொழுது
வாழ்வில் வீசிச் செல்லும் நேரங்களில்
துவண்டு போகாது வாழ்க்கையைக் கொண்டு நடத்துவது அவரவர் சாமர்த்தியம்...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

Attachments

  • IMG_20211008_111009_931.jpg
    IMG_20211008_111009_931.jpg
    88.8 KB · Views: 19
Top