• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
இலங்கைத் திருநாட்டில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோவில்களில் மிக முக்கியமான முருகன் கோவிலான யாழ் நகரில் அமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி கோவிலில் அதிகாலை நேரத்திற்கான பூஜை மணி ஆழ் துயிலில் இருக்கும் ஊரையே எழுப்புவது போல ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

கோவிலோடு ஒட்டி அமைக்கப் பட்டு இருந்த பூந்தோட்டத்தில் புதிதாகப் பூத்த பூக்கள் தங்களது இனிய வாசனையைத் தாராளமாகக் காற்றுடன் சங்கமிக்க விட்டுக் கொண்டிருந்தன.

பூக்களின் இனிய சுகந்தத்தைப் பெருமிதத்துடன் ஏந்திக் கொண்ட புத்தம் புதிய காற்று மெல்லத் தவழ்ந்து சென்று கொண்டிருந்தது.

நல்லூரானின் ஆலயத்தின் பின் வீதியில் கொஞ்சத் தூரம் தள்ளி வரிசையாக வீடுகள் அமைந்திருந்தன. ஓரிரு வீடுகளைத் தவிர மற்றைய வீடுகள் எல்லாம் பழமை வாய்ந்த வீடுகளாகவே காணப்பட்டன.

அந்த வீடுகளில் பச்சை வண்ணம் பூசப் பட்டு அம்பிகை இல்லம் என்று வெள்ளை நிறக் கல்லில் பொறிக்கப் பட்டு இருந்த வீடு மட்டும் தனித்துவமாகக் கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் கம்பீரமாக நின்றிருந்தது.

அந்த வீட்டினுள் இருந்து கந்தசஷ்டிக் கவசம் மெல்ல மெல்லக் கசிந்து வந்து ஏற்கனவே தெய்வீகமயமாக இருந்த தெருவை மேலும் மெருகேற்றிக் கொண்டிருந்தது.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் தலைக்குக் குளித்து விட்டு வாசலில் கோலம் போடுவதற்காக வெளியே வந்தார் அந்த வீட்டின் அரசி அமுதவாணி.

கோவிலுக்குக் கொண்டு செல்வதற்காகப் பூமரங்களில் இருந்த பூக்களைக் கொய்து கொண்டிருந்தார் அமுதவாணியின் கணவர் கவிவாணன்.

"அத்தான்... பெரியவனையும் சின்னவனையும் எழுப்பி விட்டீர்களா?"
என்று கேட்டபடி பக்கத்துக் காணியில் இருந்து பறித்து வந்த பூசணிப் பூவைக் கோலத்தின் நடுவில் வைத்தார் அமுதவாணி.

மனைவியைத் திரும்பிப் பார்த்த கவிவாணன்
"அம்மா தாயே அமுதா... நீ போய்த் திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்பினால் தான் நம் குலக் கொழுந்துகள் எழுந்து கொள்வார்கள் என்று உனக்குத் தெரியாதா..."
என்று சிரித்தபடி சொன்னார்.

அவ்விதம் சொன்ன கணவனை முறைத்தபடி வீட்டினுள் சென்ற அமுதவாணி
"தமிழா... வேந்தா..."
என்று குரல் கொடுத்தார்.

"பாவம் குழந்தைகள் கொஞ்சம் நேரம் தூங்கட்டுமே... எதற்கு எழுப்புகிறாய் வாணி..."
என்றபடி வந்தார் அமுதவாணியின் அன்னை அம்பிகை.

"என்னம்மா நீங்கள் இப்போதும் அவர்களைக் குழந்தைகள் என்று கொஞ்சுகிறீர்களே... நேற்று இரவே சொன்னேன் தானே நாளை காலை சீக்கிரமாக எழுந்து கொள்ள வேண்டும் என்று... அதனால் தானம்மா எழுப்ப வந்தேன்... சீக்கிரமாகக் கிளம்ப வேண்டாமா"
என்றபடி தன் மகன்கள் தூங்கிக் கொண்டிருந்த அறைக் கதவைப் பலமாகத் தட்டினார்.

"அங்கே யாரைத் தேடுகிறீர்கள் அம்மா... நானும் அண்ணாவும் எப்போதோ எழுந்து விட்டோம் தெரியுமா... கொஞ்சம் தூரம் நடந்து விட்டு வரலாம் என்று வெளியே போய் விட்டு வந்தோம்..."
என்றபடி வீட்டினுள் நுழைந்தான் அமுதவாணியின் இரண்டாவது மைந்தன் இசைவேந்தன்.

சின்ன மகனைத் திரும்பிப் பார்த்தவரோ
"என்னடா சொல்கிறாய் நான் இங்கே வாசலில் தானே இருந்தேன் நீங்கள் வெளியே போனதை நான் பார்க்கவே இல்லையே..."
என்றார் அதிசயமாக.

"ஏன் அம்மா இந்த வீட்டுக்கு ஒரு வாசல் தானா இருக்கிறது... அதோடு சுவர் ஏறிக் குதித்து ரொம்பக் காலமாகி விட்டது என்று அண்ணா தான் ரொம்பக் கவலைப் பட்டான்..."
என்றபடி கண்ணடித்துச் சிரித்தான் இசைவேந்தன்.

"அடப்பாவி மக்களே சுவர் ஏறிக் குதித்தாடா சென்றீர்கள்..."
என்ற சின்னவனின் காதைப் பிடித்து வலிக்காமல் திருகினார் அம்பிகை.

"ஐயோ வலிக்கிறது அம்மம்மா..."
என்று சிரித்தபடி அவரின் கன்னங்களைக் கிள்ளினான் சின்னவன்.

"அண்ணா எங்கே வேந்தா..."
என்றபடி வந்தார் கவிவாணன்.

"அப்பா வரும் பாதை முழுவதும் எத்தனை ரகத்தில் காவற்காரர்கள் தெரியுமா... எல்லோரிடமும் இருந்து தப்பி வர வேண்டாமா சொல்லுங்கள்..."
என்றபடி தொப்பென்று கதிரையில் இருந்தான் இசைவேந்தன்.

"காவற்காரர்களா அது யாருப்பா..."
என்று கேட்ட அம்பிகைக்கு
"அவன் தெருவில் நிற்கும் நாய்களைச் சொல்கிறான் அம்மம்மா..."
என்று பதில் சொன்னபடி உள்ளே வந்தான் கவிவாணன் தம்பதியினரின் மூத்த மகன் தமிழ்பரிதி.

"என்னப்பா நாயிடம் ஏதும் கடி வாங்கி வைத்து விட்டாயா..."
என்றபடி சிறு பதட்டத்துடன் தன்னை ஆராய்ந்த அன்னையை
"அப்படி எல்லாம் இல்லையம்மா..."
என்று சமாதானப் படுத்தினான் மூத்தவன்.

"சரி சரி இப்படியே பேசிக் கொண்டு இருக்காமல் எல்லோரும் தயாராகுங்கள்... சரியாக ஏழு மணிக்கு வாகனத்தை வரச் சொல்லி இருக்கிறேன்... கொழும்பில் இருந்து நம் வாகனத்தை இங்கே கொண்டு வரும் வரைக்கும் வாடகைக்குத் தான் வாகனத்தை ஒழுங்கு செய்ய வேண்டும்..."
என்றபடி கவிவாணன் உள்ளே போய் விட்டார்.

"அண்ணா... புது ஊர் புதுச் சொந்தங்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று ஒரே பரபரப்பாக இருக்கிறது... உனக்கு அப்படி ஒன்றுமே இல்லையா?"
என்று தன் தமையனிடம் விளக்கம் கேட்டான் சின்னவன்.

"ஏன் அப்பன் நமக்கு இந்தப் புதுப் புது ஊர் புதிய புதிய சொந்தங்களை எல்லாம் பார்ப்பது இது தான் முதல் தடவையா... நான் காண விரும்புவர்களைத் தான் எங்கு போனாலும் கண்கள் தேடுகிறது... அவர்கள் யாரையும் இதுவரை பார்க்கவே முடியவில்லை என்றதும் அந்த ஏமாற்றம் எல்லாம் எனக்குப் பழகி விட்டது... எனக்கு ஒரு பரபரப்பும் இலலை..."
என்று சலித்தபடி உள்ளே போய் விட்டான் தமிழ்பரிதி.

தமையனின் உள்ளம் புரிந்த தம்பியுடையான் வேறு ஒன்றும் பேசாமல் அமைதியானான்.

சரியாக ஏழு மணியளவில் நல்லூர்க் கோவிலின் பின் வீதியில் இருந்து கவிவாணன் குடும்பத்தினரை ஏற்றிக் கொண்ட அந்தப் பெரிய வாகனம் வல்வெட்டித்துறையை நோக்கிப் புறப்பட்டது.

சரியாக ஒரு மணி நேரத்துப் பயணத்திற்குப் பின்னர் வல்வெட்டித்துறைச் சிவன் கோவில் வெளி வீதியில் இருந்த அந்த மாடி வீட்டுக்கு முன்னால் அவர்களது வாகனம் நின்றது.

வாசலிலேயே அவர்களை வரவேற்றபடி அந்த வீட்டினர் நின்றிருந்தனர்.

"எப்படி இருக்கிறாய் சீதா..."
என்றபடி தன் ஒன்று விட்ட தங்கையை அணைத்துக் கொண்டார் அமுதவாணி.

"வாசலில் நின்றே பேசாமல் எல்லோரும் உள்ளே வாருங்கள்" என்றபடி வந்தவர்களை உள்ளே அழைத்துச் சென்றார் சீதாவின் கணவர்.

எல்லோரும் உள்ளே சென்றதும் வாகனத்திற்கான வாடகைப் பணத்தைக் கொடுத்து விட்டு உள்ளே செல்லத் திரும்பிய தமிழ்பரிதியின் காதுகளில் கொலுசுச் சத்தம் கேட்கவே எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தான்.

கையில் ஒரு தண்ணீர் வாளியுடன் குட்டி நாயொன்றைக் குளிப்பாட்டுவதற்காகத் துரத்தியபடி ஒரு பெண் ஓடிக் கொண்டு இருந்தாள்.

அந்தக் காட்சி அவனுக்கு வேடிக்கையாக இருக்கவே அப்படியே நின்று அவள் என்ன செய்யப் போகிறாள் என்பது போலப் பார்த்திருந்தான்.

தன் குட்டி நாய் வீரனைக் குளிப்பாட்டுவதற்கு வான்மதி கிட்டத் தட்ட ஊரைப் பாதிச் சுற்றுச் சுற்றியிருந்தாள். வீரனுக்குக் குளிப்பது என்றால் சரியான கள்ளத்தனம். இன்றும் வான்மதியை ஓட வைத்துக் கொண்டிருந்தது.

விட்டால் இன்று முழுவதும் ஓட வேண்டியது தான் என நினைத்தவளோ சட்டென்று கீழே அமர்ந்து கால்களைப் பிடித்துக் கொண்டாள். ஓடிக் கொண்டிருந்த வீரன் வான்மதி கீழே அமர்ந்து கால்களைப் பிடிப்பதைப் பார்த்ததும் அவளருகில் ஓடி வந்து அருகில் இருந்த தண்ணீர் வாளியைத் தொட்டுக் காட்டியது.

ரொம்பத் தூரம் ஓடி வந்ததால் தனக்குக் கால்கள் வலிக்கிறது என அவள் கால்களைப் பிடித்துக் காட்டிச் சைகையில் சொன்னதால் தான் வீரன் மனமிரங்கி அவளருகில் வந்து நின்று வாளியைத் தொட்டுக் காட்டிக் குளிக்கிறேன் என்பது போல நின்றது.

அதிலும் அது முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு தன்னைப் பார்ப்பதைப் பார்த்ததும் அவளுக்குச் சிரிப்பு வந்தது. ரொம்ப நேரம் எல்லாம் குளிப்பாட்ட மாட்டேன் என்பது போலச் சைகையில் செய்து காட்டினாள்.
அவ்வளவு தான் வீரன் துள்ளிக் குதித்துக் கொண்டு அவளோடு வீடு நோக்கிச் செல்லத் தொடங்கியது.

நாய்க்குட்டியும் அவளும் தங்கள் வீட்டினுள் நுழையும் வரை அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தமிழ்பரிதி அதன் பிறகு தான் உள்ளே சென்றான்.
வான்மதியின் முகத்தை அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை.

"யார் அவள் குட்டி நாயோடு ஏதோ குழந்தையிடம் நடந்து கொள்வது போல சைகையில் எல்லாம் ஏதோ பேசுகிறாளே..."
என்று நினைத்தபடி உள்ளே சென்றவன் அங்கே நடந்த தடல்புடல் வரவேற்பில் அதன் பிறகு அவளையும் அவளின் குட்டி நாயையும் மறந்தே போய் விட்டான்.

"பயணம் எல்லாம் எப்படி இருந்தது அமுதா... ஒருவழியாக நாட்டுக்கு வந்து விட்டீர்கள்... எப்போது கிளிநொச்சியில் உள்ள உங்கள் சொந்த ஊரைப் போய்ப் பார்க்கப் போகிறீர்கள்..."
என்று கேட்டார் சீதாவின் அன்னை
அகிலா.

"போக வேண்டும் சித்தி இப்போது தானே யாழ்ப்பாணம் வந்து இருக்கிறோம்... ஒரு பத்து நாள் போகட்டும் அதன் பிறகு போகலாம் என்று இருக்கிறேன்... என்னை விடவும் உங்கள் பேரப் பிள்ளைகள் தான் அங்கே போக வேண்டும் என்று முனைப்பாக இருக்கிறார்கள்... ஆனால் பாருங்களேன் எனக்கு அங்கே போனால் மனது கனமாகி விடும் அதனால் தான் போகும் நாட்களைத் தள்ளிப் போட்டு இருக்கிறேன் சித்தி..."
என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார் அமுதவாணி.

"அங்கே வீடுகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கிறதோ என்ற எண்ணம் தான் எனக்கு அல்லும் பகலும்..."
என்ற அம்பிகையைப் பார்த்து
"சுத்தி இருந்தவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா அக்கா?"
என்று கேட்டார் அகிலா.

"அந்தக் கொடுமையை எல்லாம் ஏன் கேட்கிறீர்கள் சித்தி ஒருவரைப் பற்றிக் கூட ஒரு தகவலும் இல்லை... அதைக் கூட என்னால் ஒரு அளவுக்குத் தாங்கிக் கொள்ள முடிந்தது ஆனால் அங்கே எங்களின் வீட்டுக்குப் பக்கத்தில் நந்தன் அண்ணாவின் குடும்பத்தினர் இருந்தார்கள்... ரொம்ப அருமையான குடும்பம் எங்கள் மேல் அத்தனை பாசமாக இருப்பார்கள்... அவர்கள் எல்லாம் இப்போது எங்கே எப்படி இருக்கிறார்களோ என்பது தான் என்னுடைய ஒரே கவலை... வாய்ப்புக் கிடைத்ததுமே நாங்கள் தாய்நாட்டுக்கு வந்ததே அவர்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தான்..."
என்று கண் கலங்கியபடி சொன்னார் அமுதவாணி.

கண்கலங்கிய தாயைத் தன் தோளோடு அணைத்துக் கொண்ட படி
"கவலைப் படாதீர்கள் அம்மா எப்படியும் அவர்களை எல்லாம் பார்த்து விடுவோம் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..."
எனத் தாயோடு சேர்த்துத் தனக்கும் தைரியம் சொல்லிக் கொண்டான் தமிழ்பரிதி.

என்றோ ஒருநாள் காலத்தின் கட்டாயத்தில் தான் பிரித்த அன்பான உறவுகளை மீண்டும் இணைத்து வைப்பதற்காக விதி மனமிரங்கித் தன் விளையாட்டைத் துவக்கியிருந்தது.

அதை அறியாமல் இவர்கள் விதியை நொந்து கொண்டு இருந்தார்கள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வாழுகின்ற வீடுதனை மெருகேற்றும் போதோ வாழ்ந்த வீடு புகைபடிந்த ஓவியமென மனதிலே தோன்றி மறையாமல் கொல்ல...


என்ன செய்திடினும் தொலைந்த உறவுகளையும் தொலைத்த உயிர்களையும் இனி எங்கே காண்பது என்ற எண்ணமும் கொல்லாமல் கொல்ல...

இக் கொடூரங்கள் எல்லாம் வாழ்வின் ஓர் அங்கமாக ஒட்டிக் கொண்டு விட்டதை எப்படிச் சொல்ல...

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

Attachments

  • IMG_20211008_111009_931.jpg
    IMG_20211008_111009_931.jpg
    88.8 KB · Views: 20
Last edited:
Top