• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
காற்று சற்றே பலமாக வீசியதால் மரக் கிளைகள் நர்த்தனம் ஆடுவது போல ஆடி அசைந்து கொண்டிருந்தன. அதிலும் வான்மதி வீட்டின் முற்றத்தில் நின்றிருந்த வேப்பமரம் காற்றில் அசைந்து அசைந்து வேப்பம் பூக்களைக் கீழே உள்ளவர்கள் மீது உதிர்த்துக் கொண்டிருந்தது.

அதைப் பார்க்கும் போது பல வருடங்களுக்குப் பிறகு பார்த்துக் கொண்ட அன்பு உள்ளங்களுக்குப் பூமாரி பொழிந்து வாழ்த்துக் கூறுவது போல இருந்தது.

வான்மதியின் தலையில் வேப்பம் பூவோடு விழுந்த வாலெறும்பு ஒன்றைத் தட்டி விட்டவாறே
"என்ன நிலா... நானும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் நீ வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேன் என்கிறாய்... ஒரு வேளை இன்று மௌன விரதமா..."
என்று கேட்டார் அமுதா.

"எங்களைப் பார்த்த அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் விட்டாள் போல..."
என்றவாறே வான்மதியின் கன்னத்தைப் பற்றித் தன் பக்கமாகத் திருப்பினார் அம்பிகை.

அவர்கள் இருவரும் சொன்னதைக் கேட்டதும் என்ன செய்வது என்பது போலத் தன் தங்கை தேன்மதியைப் பார்த்தாள் வான்மதி.

இவர்கள் பேசிக் கொள்வதைப் பார்த்தவாறு நின்றிருந்த சீதாவுக்கு அப்போது தான் வான்மதிக்குப் பேச்சு வராது என்பது அவர்களுக்குத் தெரியாது என்பதே புரிந்தது. அதோடு வான்மதியைப் பார்க்கவும் அவருக்குப் பாவமாக இருந்தது. அந்தச் சங்கடமான சூழலை மாற்றுவதற்காக அவரே அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்தார்.

"அக்கா... இதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் சொல்லித் தானே ஆக வேண்டும். மதியால் பேச முடியாது அவளுக்குப் பேச்சு வராது..."
என்று சுற்றி வளைக்காமல் விஷயத்தைச் சொல்லி முடித்து விட்டார் சீதா.

என்னடி சொல்கிறாய் என்பது போலச் சீதாவைப் புரியாத பார்வை பார்த்தார்கள் அமுதாவும் அம்பிகையும்.
அவர்கள் இருவரது முகபாவனையையும் பார்த்த தேன்மதி
"அம்மம்மா... நடந்த யுத்தத்தில் அக்காவின் தொண்டைப் பக்கமாகக் குண்டு பட்டதால் ஏற்பட்ட பிரச்சினையால் அக்காவுக்குப் பேச்சுப் போய் விட்டது..."
என்று அவர்களுக்குப் புரியும் படி கூறினாள்.

அதைக் கேட்டதும் மற்ற இருவருக்கும் என்ன சொல்வது என்ன செய்வது என்றே புரியவில்லை ஒரு கணம் பேச்சற்றுப் போய் நின்றிருந்தார்கள்.

தன்னைத் தானே சுதாரித்துக் கொண்ட அமுதா தன் காதில் விழுந்த செய்தி உண்மை தானா என்ற கலக்கம் மாறாமல்
"என்னடியம்மா சொல்கிறாய்..."
என்றபடி தேனுவைப் பிடித்து உலுக்கினார்.

அம்பிகையோ அதிர்ச்சி மாறாமல் அப்படியே வான்மதியைப் பார்த்தபடி நின்றுருந்தார்.

கண்கள் கலங்க நீ சொல்வது உண்மைதானா என்பது போலத் தன்னை மறந்து தேன்மதியைப் பிடித்து உலுக்கியபடியிருந்த அமுதாவின் தோள் தொட்டுத் தன் பக்கமாகத் திருப்பினாள் வான்மதி.

அவளது மென்மையான ஸ்பரிசத்தில் திடுக்குற்றுத் திரும்பிய அமுதாவின் வலது கையை எடுத்துத் தன் கழுத்தில் வைத்து
"தேனு சொல்வது உண்மை தான்..."
என்பது போலச் சைகையில் செய்து காட்டினாள் வான்மதி.

அவளது சைகையை நொடியில் புரிந்து கொண்ட அமுதாவிற்கு அழுகை வெடித்துக் கொண்டு வரவே வான்மதியை இழுத்து இறுக அணைத்துக் கொண்டு தன் மனக் கவலையை அழுதே தீர்த்து விட்டார்.

தன் கழுத்தில் முகத்தை மறைத்து அழுது கொண்டிருந்த தன் அமுதமாமியை மெல்ல நிமிர்த்தி அவரது கண்களை அழுந்தத் துடைத்த வான்மதி மெல்லத் திரும்பித் தன் தங்கையைப் பார்த்தாள்.

தமக்கையின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட தேன்மதி, அமுதாவின் முகம் பார்த்து
"அமுதமாமி... இந்த விஷயத்துக்கே இப்படிக் கண்ணீரைச் செலவு செய்தால் மீதி விஷயங்களுக்குக் கண்ணீர் போதாமல் போய் விடும் அல்லவா... முதலில் வீட்டுக்குள் வாருங்கள் உங்களை எல்லாம் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகி விட்டன... உள்ளே வந்து அக்காவின் கையால் செய்த வாழைக்காய்ப் பஜ்ஜியைச் சாப்பிட்டு அது எப்படி இருக்கிறது என்று சான்றிதழ் வழங்குங்கள்..."
என்று சொல்லியபடி சீதாவையும் வரச் சொல்லி விட்டு அமுதாவின் கையைப் பிடித்து வீட்டினுள் அழைத்து சென்றாள் தேன்மதி.

அதிர்ந்து போய் அசையாமல் நின்ற அம்பிகையின் அருகில் சென்று அவரை அணைத்தபடி வீட்டினுள் அழைத்துச் சென்றாள் வான்மதி.

வீட்டின் முன் பக்கமாக இருந்த அந்த நீளமான அறையில் எல்லோரையும் அமர வைத்து விட்டு ஏற்கனவே செய்து வைத்திருந்த வாழைக்காய்ப் பஜ்ஜியுடன் சுடச் சுடத் தேநீரையும் கொண்டு வந்து பரிமாறினாள் வான்மதி.

"சரி அதெல்லாம் இருக்கட்டும் அப்பா மற்றவர்கள் எல்லாம் எங்கே நிலா..."
என்று வான்மதியைப் பார்த்துக் கேட்டார் அம்பிகை.

லேசான விரக்திப் புன்னகையுடன் வீட்டின் அந்த நீளமான அறையில் தொங்க விடப் பட்டிருந்த படங்களைக் காட்டினாள் அவள்.

அதை நிமிர்ந்து பார்த்த அம்பிகைக்கும் அமுதாவிற்கும் அடுத்த இடி தலையில் விழுந்தது. யார் யாரை எல்லாம் பார்க்க வேண்டும் அன்பைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று இத்தனை வருடங்களாக யார் யார் மூலமாகத் தேடி அலைந்தார்களோ அவர்களில் ஒன்றிரண்டு உறவுகள் சுவரில் மாலையுடன் தொங்குவதைப் பார்க்கையில் அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை அவர்களது முகத்தில் தெரிந்த வேதனை பறைசாற்றியது.

ஒரு நீண்ட நெடிய நேரம் யாருமே ஒன்றுமே பேசிக் கொள்ளாது தரையை வெறித்தபடி அமர்ந்திருந்தார்கள்.

அந்த நேரத்தின் அமைதியைத் தாங்கிக் கொள்ள முடியாத சீதா அந்தக் கன அமைதியை உடைப்பதற்காக மெல்லப் பேச்சுக் கொடுத்து அந்தச் சூழ்நிலையை மாற்ற முயன்றார்.

"சரி சரி முடிந்து போன விஷயத்தை நினைத்து அதைப் பற்றிப் பேசி அந்தப் பிள்ளைகளையும் கண்கலங்க வைக்காமல் நீங்கள் நீண்ட வருடங்களுக்குப் பிறகாவது பார்த்துக் கொண்டீர்களே இந்த நொடியைச் சந்தோஷமாக்குங்கள்..."
என்றபடி தன் பெரியம்மாவையும் அக்காவையும் சமாதானப் படுத்தினார்.

அப்போதும் கூட அவர்கள் தரையை வெறித்துப் பார்த்தபடி இருப்பதைப் பார்த்துத் தாங்கிக் கொள்ள முடியாமல்
"அக்கா... அப்பாம்மா என்று எந்தப் பெரியவர்களுமே துணையில்லாமல் இருக்கும் இந்தப் பிள்ளைகளுக்கு நீங்கள் தானே தாய் போல இருந்து இனிமேல் பார்த்துக் கொள்ள வேண்டும்... அதை விட்டு நீங்களுமே இப்படி இடிந்து போய் இருந்தால் பாவம் சின்னவர்கள் என்ன செய்வார்கள் சொல்லுங்கள்..."
என்று ஆதங்கத்துடன் கேட்டார் சீதா.

அவர் அவ்விதம் கேட்டதற்குப் பலன் இருந்தது. சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த படத்தைக் காட்டி விட்டுச் சமையலறையினுள் போய் விட்டிருந்த வான்மதியையும் தேன்மதியையும் தேடி உள்ளே சென்றார் அமுதா.

சமையற்கட்டில் நின்றிருந்த இருவர் கைகளையும் இறுகப் பற்றிக் கொண்டு
"எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லைமா... நான் நினைத்து வைத்திருந்தது வேறு இங்கே நடந்தது வேறு... இப்போது தான் இந்த இழப்பைப் பற்றித் தெரிந்து கொண்டேன் அதைத் தெரிந்து கொண்ட நொடியில் இருந்து என்னாலேயே அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை... நீங்கள் இருவரும் அந்த இழப்பையும் தாங்கிக் கொண்டு எத்தனை தைரியத்துடன் இப்படித் தனியாகத் திடமாக உங்கள் சொந்தக் காலில் யாரையும் சார்ந்து இருக்காமல் நிற்கிறீர்கள்... இதைப் பார்க்கும் போது எனக்கு உங்களை நினைத்துப் பெருமையாக இருக்கிறது தெரியுமா..."
என்று தன் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப் படுத்தினார்.

அவரது கையை மெல்லத் தட்டிக் கொடுத்தபடி
"அமுதமாமி... உங்களுக்கு இன்னொருவரைப் பற்றியும் சொல்ல வேண்டும். உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் அவனைப் பற்றிச் சொல்ல மறந்து விட்டேன்..."
என்று தேன்மதி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே
"பெரியக்காச்சி..."
என்று கத்தியபடி வீட்டினுள் நுழைந்தான் அபிராம்.

உள்ளே நுழைந்தவனை வெளியறையில் அமர்ந்திருந்த அம்பிகையும் சமையலறையினுள் நின்றிருந்த அமுதாவும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தார்கள்.

அபிராமும் அப்போது தான் உள்ளே இருந்த புதியவர்களைப் பார்த்தான். யாரோ அக்காக்களுக்குத் தெரிந்தவர்கள் போல என நினைத்தவன் சீதாவைப் பார்த்து மெல்லப் புன்னகைத்து விட்டுச் சமையற்கட்டினுள் புகுந்து
"யார் அக்காச்சி அது சீதாமாமியோடு வந்து இருக்கிறார்கள்..."
என்று கேட்டபடி அங்கே நின்ற அமுதாவைப் பார்த்தான்.

"அபி... இவர்களை உனக்கு அடையாளம் தெரிகிறதா?"
என்று மெல்லிய புன்னகையுடன் கேட்ட தன் சின்னக்காவையும் அமுதாவையும் சில நொடிகள் மாற்றி மாற்றிப் பார்த்தவனோ
"இவர்கள்... அமுதமாமி தானே"
என லேசான சந்தேகத்துடன் இழுத்தான்.

"நானே தான்டா கண்ணா..."
என்றவாறு அவனது தோளைத் தட்டியபடியே
"எவ்வளவு உயரமாக வளர்ந்து விட்டான் இவன்... உள்ளே வரும் போதே வாசலின் நிலைக்கதவு வரை அவனது தலை முட்டுவதைப் பார்த்தேனே..."
என்று அமுதா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அம்பிகையும் சமையலறையினுள் வந்து விட்டார்.

உள்ளே வந்தவரோ அபிராமைப் பார்த்தபடி
"இந்தப் பையன் நந்தனின் கடைக்குட்டி ராமன் தானே... அப்படியே அவனது அப்பாவைப் போலவே நல்ல வளர்த்தியாக இருக்கிறான்... அதனால் நீங்கள் யாரும் சொல்லாமலேயே எனக்கு அவனை அடையாளம் தெரிந்து விட்டது."
என்று சொல்லி விட்டு அபிராமின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

அபிராமுக்கு அப்போது இருந்த சந்தோஷத்தை அவன் முகம் அப்படியே காட்டியது. அவர்களைப் பார்த்த நொடியில் இருந்து அவனுக்குள் ஏதோ ஒரு நிம்மதி ஊற்றெடுத்தது. தங்களுக்கு இனிமேல் யாரும் இல்லை என்ற கவலை இனி இருக்காது என்பதை அவனது ஆழ் மனது அவனுக்குக் கூறுவது போல இருந்தது.

முகமெல்லாம் பிரகாசமான புன்னகையுடன்
"அம்மம்மா... மாமா, அண்ணாக்கள் எல்லாம் எங்கே நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள்... இனிமேலாவது எங்களோடு இருப்பீர்களா?"
என்று அபிராம் ஒரு வித எதிர்பார்ப்புடன் கேட்டபடி அமுதாவையும் அம்பிகையையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கேட்டான்.

அவனை அருகில் இருந்த சமையல் மேடையில் அமர வைத்து அவனது தலையைக் கோதி விட்ட அம்பிகை
"உங்களை எல்லாம் பார்த்து விட்ட பிறகு அப்படியே விட்டு விட்டுப் போய் விடுவோமா நாங்கள்... உங்கள் சீதாமாமி வீட்டில் தான் இருக்கிறோம்...
மாமாவும் அண்ணாக்களும் அங்கே தான் இருக்கிறார்கள்... நாங்களே இப்போது தானே உங்களைப் பார்த்தோம்..."
என்று சொன்னவர் சீதாவைப் பார்த்து
அமுதாவின் கணவர் கவிவாணனையும் தன் பேரப் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வருமாறு சொல்லி விட்டார்.

சீதாவுடன் நடந்தபடியே
"என்னம்மா... என்ன விஷயம்? கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக உன் அக்காவையும் காணவில்லை என் மாமியாரையும் காணவில்லை... இப்போது நீ எங்கே அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லாமலேயே கூட்டிச் செல்கிறாயே..."
என்றவாறு சொல்லிக் கொண்டு வந்தார் கவிவாணன்.

"அதெல்லாம் சொல்ல முடியாது பெரியத்தான்... நீங்களே வந்து பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் அது ஒரு இரகசியம்"
என்று சொல்லி விட்டு வான்மதியின் வீட்டினுள் நுழைந்தார் சீதா.

தானும் அந்த வீட்டினுள் நுழைந்தபடி
"இது யாருடைய வீடு... ஒரு வேளை உன் அக்காள் பூக்கன்றுகள் எதையாவது திருடப் போய் அவளைப் பிடித்துக் கட்டி வைத்து இருக்கிறார்களா?"
என்று சிரித்தபடியே கேட்ட கவிவாணன் வான்மதியின் வீட்டைச் சுற்று முற்றும் பார்த்தார்.

அதற்குள் வீட்டின் முன் பக்க அறையினுள் நுழைந்த சீதா
"முதலில் உள்ளே வாருங்கள் பெரியத்தான்... உங்களின் வருகையை எதிர்பார்த்து உள்ளே ஒரு கூட்டமே காத்து நிற்கிறது."
என்று சத்தமாக அழைத்தார்.

"என்னம்மா... உன் அக்காளுக்குப் பதிலாக என்னைப் பிடித்துக் கட்டப் போகிறார்களா என்ன?"
என்று மீண்டும் சிரித்தபடியே வீட்டினுள் வந்த கவிவாணன் உள்ளே நின்றவர்களைப் பார்த்ததும் ஒரு கணம் நிதானித்து நின்றார்.

அவரைப் பார்த்து விட்ட அமுதாவோ
"அத்தான்... இவர்களை யார் என்று தெரிகிறதா?"
என்று கேட்டு விட்டுக் கணவன் யோசிக்கும் முன்பாகவே
"நம் நந்தன் அண்ணாவின் பிள்ளைகள் இவள் நிலா இவள் தேனு இவன் ராமன்..."
என்று முகமெல்லாம் பூரிப்போடு அவர்களை அறிமுகப் படுத்தி விட்டுக் கணவன் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தார்.

கவிவாணனும் அப்போது தான் மூவரையும் பார்த்தார் அவருக்கும் லேசாகக் கண்கள் கலங்கியிருந்தது. அவரது சிறு வயதுத் தோழன் தான் வான்மதியின் தந்தை நந்தன். இடையில் இலங்கையில் நடந்த முள்ளிவாய்க்கால் போரினால் அவர்கள் எல்லோருமே திக்குத் திசை தெரியாமல் சிதறி ஓடிப் போனதால் ஒருவரைப் பற்றி ஒருவருக்கு எந்தத் தகவலுமே கிடைக்கவில்லை. ஆனாலும் கவிவாணன் தன்னுடைய நண்பர்கள் அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் என நிறைய ஆட்கள் மூலமாகத் தன்னுடைய நந்தன் பற்றித் தேடிக் கொண்டு தான் இருந்தார். ஆனால் இன்று தான் அவர்கள் குடும்பத்தை அவரால் பார்க்க முடிந்தது.

பெண் பிள்ளைகள் இல்லாத கவிவாணனுக்கு நந்தனின் மகள்கள் மீது தனிப் பாசமே உண்டு. அவர்களை இத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில் அவருக்கும் வார்த்தைகள் வெளிப்படாமல் சொல்ல முடியாத மகிழ்ச்சியாக இருந்தது.

"நிலா, தேனு"
என்று குரல் தடுமாற அழைத்தவரை
"மாமா... என்னை எல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லையா உங்களுக்கு..."
என்று கேட்டபடி கவிவாணனை அணைத்துக் கொண்டான் அபிராம்.

அவனது தோளில் தட்டியபடி புன்னகைத்தவர்
"அப்படி எல்லாம் இல்லை அபி நீ மாமாவைக் கோபித்துக் கொள்ளாதே..."
என்று அவனைச் சமாதானப் படுத்து விட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தார்.

அவர் யாரைத் தேடுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட அமுதா அவருக்குப் பதில் சொல்வதற்கு முன்பாக
"இவன் நந்தன் எங்கே ஆளையே காணவில்லை... ஒருவேளை வெளியே எங்காவது போய் விட்டானா? அவன் என்னைப் பார்த்தால் என்ன செய்வான் எப்படிச் சந்தோஷத்தை வெளிப் படுத்துவான் என்பதைப் பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது..."
என்று மீண்டும் வீட்டினைப் பார்வையால் சல்லடை போட்டார் கவிவாணன்.

அவரிடம் விடயத்தை எப்படிச் சொல்வது என்று எல்லோரும் தயங்கி நிற்கத் தேன்மதி தானே சொல்லி விட வேண்டியது தான் என்பது போலச் சொல்ல வரவும் அவளது கையை இறுகப் பற்றி அமுதா ஒன்றும் சொல்லி விடாதே என்பது போலக் கண்களால் ஜாடை காட்டினார்.

அமுதா அப்படி ஜாடை காட்டியதற்குக் காரணமும் இருந்தது. கவிவாணன் ஒரு இருதய நோயாளி அவருக்கு அதிர்ச்சியான விடயங்கள் எதையும் சொல்லக் கூடாது என்பது மருத்துவரின் கண்டிப்பான கட்டளையாக இருந்தது.

அதனை அப்போது தான் நினைவிற் கொண்ட அமுதா சற்றே நிதானித்தார். தன் நண்பனை இத்தனை ஆண்டுகள் பாராமல் பேசாமல் இருந்ததையே தன் கணவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்போது அந்த நண்பன் உயிருடனேயே இல்லை என்றால் அதை அவரால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும் என்று யோசித்து விட்டு அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க முயன்றார்.

"அத்தான் அதைப் பற்றி நான் வந்து சொல்கிறேன். இப்போது நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள் மாத்திரை போட்டுக் கொள்ளும் நேரம் வந்து விட்டது."
என்று அவரை மெல்ல வீட்டுக்கு அனுப்ப முயன்றார் அமுதா.

"அடி போடி இவளே... எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு என் பிள்ளைகளைப் பார்க்கிறேன் அவர்களுடன் சந்தோஷமாக நான்கு வார்த்தைகள் பேச விடாமல் இப்படி விரட்டலாமா நீ..."
என்று மனைவியைச் செல்லக் கோபத்துடன் பார்த்து விட்டு வான்மதியின் பக்கம் திரும்பி அவரிடம் குசலம் விசாரிக்கத் தொடங்கினார்.

"இன்றைக்கே எல்லாவற்றையும் பேசி முடிக்கப் போகிறீர்களா அத்தான் நீங்கள்... அம்மா உங்கள் மருமகனை அழைத்துக் கொண்டு செல்லுங்கள்..."
என்று சொல்லி விட்டுத் தன் கணவனைப் பிடித்து வாசற்பக்கமாகத் திருப்பி விட்டார்.

அப்போதும் வீட்டுக்குப் போகப் பிடிக்காமல் நின்ற கணவனிடம்
"அத்தான்... இன்னும் சிறிது நேரத்தில் இவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறேன் இப்போது நீங்கள் வெல்லுங்கள்... வெளியே சென்ற தமிழும் வேந்தனும் வீட்டுக்கு வந்து எங்களைத் தேடப் போகிறார்கள்..."
என்று எதை எதையோ சொல்லித் தன் கணவனைத் தன் தாயுடன் அனுப்பி வைத்தார் அமுதா.

கணவனுக்குப் பின்னால் சென்ற தாயின் காதுகளில் மட்டும்
"அம்மா... மறந்து போயும் நந்தன் அண்ணா பற்றி ஒன்றும் சொல்லி விடாதீர்கள்..."
என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

கணவனும் தாயும் சென்றதும்
"உங்கள் மாமாவுக்கு இதயத்தில் பிரச்சினை இருப்பதால் அவருக்கு அதிர்ச்சி தரும் செய்திகள் எதையும் சொல்லக் கூடாது என்று மருத்துவர் கண்டிப்பாகச் சொல்லி இருக்கிறார்... அவருக்கு நந்தன் அண்ணா என்றால் உயிர் இத்தனை ஆண்டுகளாக அவரைப் பார்க்காமல் பேசாமல் இருந்ததையே அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை... அப்படி இருக்கும் போது இப்போது நந்தன் அண்ணாவே இல்ல என்றால் அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது... இந்த விஷயத்தைத் தற்சமயம் அவரிடம் இருந்து மறைத்து தான் ஆக வேண்டும்... பிறகு மெதுவாகப் பக்குவமாகச் சொல்லிக் கொள்ளலாம்..."
என்று விளக்கமாகச் சொன்ன அமுதாவின் கருத்தை மற்றவர்களும் ஆமோதிப்பது போலத் தலையாட்டினார்கள்.

தன் அருகே நின்றிருந்த அமுதாவின் தோளில் மெல்லச் சாய்ந்து கொண்டாள் வான்மதி.

அதுவரையிலும் திடமாக நின்றிருந்த வான்மதியின் உணர்ச்சிகள் கண்ணீராய் உருமாறி அவளது கன்னங்களை நனைத்தது.

"விதியே இது யார் போட்ட சாபம்

மதியே உன் காயங்கள் எப்போது ஆறும்"
 
Last edited:
Top