• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
மதிய நேரத்துக்கே உரிய வெப்பக் காற்று முற்றத்தில் நின்றிருந்த மரங்களை மெல்ல அசைத்துச் செல்ல, மெல்லிய குளுமை ஒன்று அந்த இடத்தை மெதுவாக ஊடுருவிச் சென்றது.
ஆனால் அந்த மெல்லிய குளுமையால் கூட தமிழ்பரிதியின் தேகத்தைத் தீண்ட முடியவில்லை.
மனம் புழுங்கிக் கொண்டிருக்கும் போது வெளியே வீசும் குளுமையாலும் இதத்தைக் கொடுக்க முடியாது அல்லவா...

நெடு நேரமாகத் தலையைப் பிடித்தபடி கீழே இருந்த கட்டில் அமர்ந்திருந்த தன் பெரிய மகனின் பக்கம் குனிந்த அமுதவாணி
"தமிழ்... என்னடா நீ... இப்படி அமர்ந்து விட்டாய்... மதியின் முகத்தைப் பார்... உன்னை எப்படிப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள்... அவளுக்குத் தன்னைப் பார்த்து யாரும் அனுதாபப் படுவது பிடிக்காது என்று உனக்குத் தெரியாதா... அதிலும் நீயே இப்படிக் கவலையாக இருந்தால் அவளுக்குக் கவலை கூடுமே தவிரக் குறையாதுடா..."
என்று அதட்டுவது போலச் சொல்ல, அவரது அதட்டலுக்குப் பலன் இருந்தது.

ஆழமான மூச்சொன்றை இழுத்து விட்டபடி கண்களை மூடித் திறந்தவன் மெல்ல நிமிர்ந்து வான்மதியைப் பார்த்தான்.
அவளது விழிகளில் புதைந்திருந்த சோகம் அவனுக்கு ஆயிரங் கதைகள் சொன்னது. அந்தக் கதைகளை மிக மிகப் பொறுமையாக அவன் தான் அறிந்து கொள்ள வேண்டும்.


தன் அந் நேரத்து உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டு, எழுந்து வான்மதியின் அருகில் சென்று அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான். அவனது அந்த ஸ்பரிசம் அவளுக்குத் தேவைப் பட்டதோ இல்லையோ அவனுக்குத் தேவைப் பட்டது.

அவளை அணைத்தபடியே
"கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிட்டன் அம்பூ... உன்னைப் பல வருஷம் கழித்துப் பார்த்ததால் தான் அப்படி ஆகி விட்டேன் போல... அதை எல்லாம் மனசுல போட்டுக் குழப்பிக் கொள்ளாதே... வா வீட்டுக்குள்ள போவம்... இனிமேல் எப்பவுமே நீ என் கூட தான்... இல்லை இல்லை... நான் உன் கூட தான் இருப்பேன்..."
என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தவனின் கால்கள் தரையில் படவில்லை. அத்தனை தூரம் அவன் சந்தோஷக் கடலில் திளைத்துக் கொண்டிருந்தான்.

அவளால் வாய் பேச முடியாது என்ற கவலை கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னோக்கிப் போய் அவளைப் பார்த்த சந்தோஷம் வேகமாக வந்து முன்னே அமர்ந்து கொண்டது.

வான்மதியுடன் வீட்டினுள்ளே நுழைந்த தமிழின் விழிகள் உள்ளே இருந்தவர்களைப் பார்த்ததும் மீண்டும் விரிந்தன. அவனுக்கு முன்னால் நின்றிருந்த இருவரையும் அடையாளங் கண்டு கொள்ள அவனுக்கு நெடுநேரம் பிடிக்கவில்லை.

"தேனூ... அபீ..."
எனக் கத்தியபடி ஓடிச் சென்று இருவரையும் இறுக அணைத்துக் கொண்டவனைத் திகைத்துப் போய்ப் பார்த்தனர் தேன்மதியும் அபிராமும்... தமிழ்பரிதி அடையாளமே தெரியாத அளவிற்கு நெடு நெடுவென வளர்ந்திருந்தது ஒரு பக்கம் என்றால், யாரிவன் எங்கள் பெயரை உரிமையோடு சொல்லி அழைக்கிறான் என்று அவர்கள் உணரும் முன் அவர்களைத் தமிழ்பரிதி அணைத்திருந்தது ஒரு பக்கம் என்பதால், சின்னவர்களுக்கு அவனைச் சட்டென்று புரியவில்லை.

அவர்களது நிலையைப் பார்த்த அமுதவாணியோ
"உங்களின் தமிழண்ணா..."
என்று சிரித்தபடி சொல்ல மற்ற இருவரும் அவனை வாயைப் பிளந்து பார்த்தனர்.

"என்னடா அப்படிப் பார்க்கிறீர்கள்..."
என்று தமிழ் பதிலுக்குக் கேட்டது தான் தாமதம், இருவரும் அவனது இரண்டு பக்கத் தோள்களிலும் தொங்கியபடி அவனை அணைத்துக் கொண்டார்கள். தேன்மதியோ ஒரு படி மேலே போய் அவனது தோளில் முகத்தை மூடி அழவே தொடங்கி விட்டாள்.
தேனு அழுவதைப் பார்த்ததும் தமிழ் பதறிப் போய்
"தேனுக்குட்டீ... அது தான் அண்ணா உங்களிடம் திரும்பி வந்து விட்டேனே... பிறகு ஏன் இந்த அழுகை..."
என்று கேட்க, அவளது அழுகை கூடியதே தவிர குறைந்தபாடேயில்லை.

கவிவாணனுக்கும் தன் தேனு அழுவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வருடக் கணக்காகத் தொடர்புகள் இன்றி இருந்தாலும் அவருக்கு என்றுமே நந்தனின் பிள்ளைகள் என்றால் உயிர் அல்லவா...
"இனிமேல் நாங்கள்... உங்களை எல்லாம் விட்டு எங்குமே போக மாட்டோம் தேனுக்குட்டீ... இப்படி அழாதே... நீ அழுவதை என்னால் பார்க்க முடியவில்லை..."
என்று ஆதங்கத்துடன் கவிவாணன் சொல்ல,
"இத்தனை நாள் வரைக்கும் நீங்கள் அழுதது எல்லாம் போதும் தேனும்மா... இனிமேல் எப்போதுமே சிரிக்க மட்டும் தான் செய்யோணும்..."
என்று தன் பங்குக்கு அமுதவாணியும் சொல்ல, தேனுவுக்கோ தன் விருப்பத்துக்கு உரிய உறவுகளைப் பார்த்து விட்ட சந்தோஷத்திலும், அவர்கள் தொலைவில் பார்க்காமல் இருந்தாலும் அல்லும் பகலும் தங்களைப் பற்றித் தான் நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள் என்ற எண்ணம் கொடுத்த பூரிப்பிலும் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் எல்லாம் அழுகையாக வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது.
அவளால் அந்த அழுகையை நிறுத்தவே முடியவில்லை.

அவளது அழுகையை எப்படி நிப்பாட்டுவது என யோசனை செய்த தமிழுக்கு உடனே ஒரு எண்ணம் தோன்றவே மெல்லத் தேனுவின் தலையை நிமிர்த்தி
"தேனுக்குட்டீ... இது தான் சாக்கென்று உன் மூக்கைச் சிந்தி என் சட்டையில் துடைக்கிறாயோ..."
என்று கேட்க, அவன் அப்படிக் கேட்ட தினுசில் பக்கென்று சிரித்து விட்டாள் தேனு.

அதன் பிறகு தேனு அழவேயில்லை. இது வரை அழுதது போதும் என்று நினைத்தாளோ தெரியவில்லை. அவளது அழுது சிவந்த விழிகள் மெல்ல மெல்லப் புன்னகையைத் தத்தெடுத்துக் கொண்டன.

"இனிமேல் உங்களை எல்லாம் விட்டு எங்கேயும் போவதாக இல்லை... ஒரு வேளை வெளிநாடு போவது என்றாலும் உங்களை எல்லாம் பொட்டலம் கட்டிக் கொண்டு தான் போகப் போகிறோம்..."
என்று தமிழ் சொல்ல, அவன் விளையாட்டாகத் தான் சொல்கிறான் என்று வான்மதி நினைத்துக் கொண்டாள்.

ஆனால் தமிழ்பரிதி இனி ஒரு போதும் இவர்களை விட்டுப் பிரிவதில்லை என்பதில் எத்தனை உறுதியாக இருக்கிறான் என்று பாவம் அவளுக்கு அப்போது தெரிய வாய்ப்பில்லை அல்லவா.

மூவருக்காகவும் அமுதவாணியும் சீதாவும் குறுகிய நேரத்துக்குள் பார்த்துப் பார்த்து வகை வகையாகச் சிற்றுண்டிகளைத் தயாரித்து இருந்தனர். அது போக ஏற்கனவே செய்து வைத்திருந்த பலகாரங்களையும் சமையலறையில் எடுத்து வைத்தனர்

அந்தச் சிற்றுண்டி வகைகளை கவிவாணனும் தமிழ்பரிதியும் எடுத்து வந்து வெளி வரவேற்பறையில் கடை பரப்பினர்.

தங்களுக்கு முன்னால் வைக்கப் பட்ட அத்தனை வகைப் பலகாரங்களையும் விழி விரித்துப் பார்த்தான் அபிராம். அவனுக்கு எதை முதலில் எடுப்பது எதைப் பிறகு எடுப்பது என்று தெரியவில்லை. ஏனெனில் அங்கே
கடலை வடை
உளுந்து வடை
உளுத்தம் புட்டு
கிழங்குப் பொரியல்
பால் ரொட்டி
சீனிக் கிழங்கு
உள்ளி முறுக்கு
அன்னாசிக் கேசரி
பொரித்த கடலை
பனங்காய்ப் பணியாரம்
பூந்தி லட்டு
வாழைப்பழப் பணியாரம்
பயற்றுத் துவையல்
பால் பாயாசம்
தேங்காய்ப் பூ அல்வா
அரியதரம்
கச்சான் அல்வா
என அத்தனை வகைப் பலகாரங்களும் இனிப்புகளும் முன்னே கிடந்தன.

சில நொடிகள் என்ன என்ன வகை பலகாரங்கள் இருக்கிறது எனப் பார்த்து விட்டு அதனை உள்ளே தள்ளும் வேலையை அபிராம் செய்ய, அவனைத் தொடர்ந்து தேன்மதியும் அந்தப் பணியில் இறங்கினாள்.

சின்னவர்கள் இருவரும் ஆசையாக உண்பதைப் பார்த்துக் கொண்டே இருந்த தமிழ் எதேச்சையாக வான்மதியின் பக்கம் திரும்பினான். அவளோ கீழே பார்த்தபடி கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாள்.

தன் நெற்றியைத் தேய்த்தபடி அவளைச் சில நொடிகள் பார்த்தவன்
"அப்பா... துளசிச்சாறும் தூதுவளைச்சாறும் போட்டுத் தேநீர் ஒன்று கொண்டு வர முடியுமா..."
என்று தந்தையிடம் சொல்ல, அமுதவாணன் உத்தரவு மகாராஜா என்பது போலச் சமையலறையினுள் நுழைந்தார்.
தமிழ் மெல்ல எழுந்து வான்மதிக்கு அருகில் அமர்ந்து கொண்டான்.

அவன் தன்னருகே அமர்ந்ததைக் கூட உணராமல் தன் கைவிரல்களைப் போட்டு அப்படியும் இப்படியுமாக நெரித்துக் கொண்டிருந்தவளது கையை மெல்லப் பற்றிக் கொண்டான் தமிழ். அவனது ஸ்பரிசத்தில் பதறிப் போனவள் தன்னிச்சையாகக் கையை அவனிடம் இருந்து உருவிக் கொண்டாள். அப்போது தமிழ் அவளது அந்தச் செய்கையைப் பற்றி யோசிப்பதற்கு முன்பாக அமுதவாணன் கையில் தேநீர்க் குவளையோடு வந்தார்.

அவரிடம் இருந்து அந்த தூதுவளைச்சாறும் துளசிச்சாறும் கலந்த தேநீரை வாங்கி வான்மதியின் கையில் திணித்து
"இதைக் குடி அம்பு..."
என்று தமிழ் கொடுக்க, அவளுக்கும் அப்போதைக்கு அந்தத் தேநீர் தேவைப் படவே அதை வாங்கிப் பருகத் தொடங்கினாள்.

அவள் பருகுவதையே பார்த்திருந்தவன் பிறகு ஏதோ யோசித்தவனாக உள்ளே எழுந்து செல்ல, அதைச் சாக்காக வைத்து மெல்ல எழுந்து கொண்ட வான்மதி தேனுவிடம் ஏதோ சைகையில் சொல்ல அதற்குத் தேனு
"மாமா... அக்கா எங்களுக்குத் தெரிந்த தாத்தா பாட்டிக்கு இந்தப் பலகாரங்களில் கொஞ்சத்தைக் கொண்டு போகலாமா என்று கேட்கிறாள்..."
என்று அமுதவாணனைப் பார்த்துக் கேட்க, அவரோ வேகமாக உள்ளே எழுந்து சென்று ஒரு தூக்குவாளி நிறையப் பலகாரங்களை எடுத்து வந்து வான்மதியின் கையில் கொடுத்தார்.

அவரிடமும் அமுதவாணியிடமும் தலையசைத்து விட்டு வேகமாக வெளியே கிளம்பி வந்தவளுக்கு தன் வீட்டில் இருந்த தன் அறைக்குள் நுழைந்ததும் தான் மூச்சே வந்தது.

"இனிமேல் தமிழத்தானைப் பார்ப்பதை முடிந்தவரை தவிர்த்து விட வேண்டும்"
என்று மனதினுள் உறுதி எடுத்துக் கொண்டவளுக்கு அந்த உறுதியைத் தன்னால் உறுதியாகச் செயற்படுத்த முடியாமல் போய் விடும் என்று அப்போது தெரியவில்லை.

ஆழ மூச்செடுத்துத் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு கிணற்றடிக்குச் சென்று முகத்தை அடித்துக் கழுவிக் கொண்டு வீரன் பின் வர, பலகாரம் நிரம்பிய தூக்குவாளியுடன் எதிர்வீரசிங்கம் செல்லம்மா வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள் வான்மதி.

அங்கே உள்ளே எழுந்து சென்ற தமிழ்பரிதி தன் பெட்டியின் அடியில் பத்திரப் படுத்தி வைத்திருந்த நாட்குறிப்பை எடுத்துக் கொண்டு வெளியே வர, வெளியே அவனின் அம்புஜத்தைக் காணவில்லை.
சுற்றுமுற்றும் பார்த்தபடி சமையலறைக்குள் புகுந்தவன் அங்கேயும் அவள் இல்லாமல் போகவே
"அப்பா... இவள் அம்புஜம் எங்கே..."
என்று தந்தையின் அருகே வந்து கேட்டான்.

"மதி... யாரோ அவளுக்குத் தெரிந்த தாத்தா பாட்டிக்குப் பலகாரம் கொடுக்கப் போய் விட்டாள்..."
என்று சொன்னவர் தேனுவின் பக்கம் திரும்பி ஊர்க்கதை பேசத் தொடங்கி விட்டார்.
தந்தை சொன்னதைக் கேட்ட தமிழுக்கோ என்னிடம் சொல்லாமல் போய் விட்டாளே என்று ஆதங்கமாக இருந்தது.
இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தானும் தன் தந்தையோடு இணைந்து ஊர்க்கதை பேசத் தொடங்கினான்.

இன்று மட்டும் இல்லை இனி வரும் நாட்களில் கூட அவள் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் தான் ஓடி ஒளியப் போகிறாள் என்பது அப்போது அவனுக்குத் தெரியவில்லை. அது தெரிய வரும் போது தான் தமிழ்பரிதி பற்றி வான்மதி முழுதாகப் புரிந்து கொள்வாள்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
"வானத்து மதியே மேகத்துள் ஒளிவதேனோ
வார்த்தைகள் தான் வீசாது போனாய் பார்வையாவது வீசாயோ
வாசம் கொண்ட மலர் உனைத் தேடி வண்டாய் நான் வர
வாசம் துரந்து வாடி வதங்கிப் போனதேனோ..."

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
 
Top