• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
வரிசையாக நின்றிருந்த தென்னை மரங்களில் ஒரு தென்னையில் இருந்து தேங்காயொன்று பொத்தென விழுந்த போது தான் இசைவேந்தனுக்கு உணர்ச்சியே வந்தது.

திடுக்கிட்டு நிமிர்ந்தவன் அப்போதும் நம்ப முடியாத பார்வையொன்றையே வான்மதியின் பக்கம் வீசினான்.
"மதியால் பேச முடியாதா?"
என்ற கேள்வியே அவனைக் குடைந்து கொண்டே இருந்தது.

"என்ன நடந்தது அண்ணா..."
என்று திக்கியவாறு கேட்டவனைப் பிடித்துப் பக்கத்தில் கிடந்த வாங்கில் அமர வைத்த தமிழ்
"முள்ளிவாய்க்காலில் நடந்த யுத்தத்தில் அவளுக்குத் தொண்டையில் குண்டடி பட்டு விட்டது இசை..."
என அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் முணுமுணுத்தான்.

அண்ணனை ஒரு பார்வை பார்த்தவன் மெல்லத் திரும்பி வான்மதியைப் பார்த்தான். அவளோ புன்சிரிப்பு மாறாமல் அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

எட்டி அவளது கரத்தைப் பற்றித் தன்னருகே அமர்த்திக் கொண்டு
"உனக்கு இதெல்லாம் கஷ்டமாக இல்லையா மதிம்மா... எப்படி அதையெல்லாம் தாங்கிக் கொண்டாய்... எனக்கு ஒரு மாதிரி ரொம்ப வலியாக இருக்கிறது மதீ..."
என உண்மையான வருத்தத்துடன் கேட்டான் இசை.

அவளோ அவனது கரத்தைத் தட்டிக் கொடுத்தபடி
"எல்லாம் விதி...எனக்கும் எல்லாம் பழகி விட்டது... நீ கவலைப் படாதே..."
என்பது போலச் சைகையில் காட்டினாள்.
தன் வலியை மறைத்துத் தன்னைத் தேற்றியவளை இமைக்க மறந்து பார்த்த இசையின் மனதில் வான்மதி பக்குவப்பட்ட பாவையாக உயர்ந்து நின்றாள்.

அந்த நேரத்து இறுக்கமான சூழ்நிலையை மாற்ற விரும்பிய தமிழ்
"மற்றவர்கள் எல்லாம் எங்கே அம்பூ..."
எனக் கேட்க, அப்போது தான் அப்படி ஒருவன் அங்கே இருக்கிறான் என்பதை உணர்ந்த வான்மதி அவன் முகம் பாராமல் வீ்ட்டின் உட்பக்கமாகக் கையை நீட்டினாள்.

"என்ன அம்பூ... இப்படியே வாசலோடேயே அனுப்பி வைத்து விட உத்தேசமோ... நந்தன் மாமா, ஞானகி அத்தை, சாருக்குட்டி, தனுக்குட்டி எல்லாம் எங்கே உள்ளே இருக்கிறார்களா? இல்லை எங்கேயாவது வெளியே போய் விட்டார்களா....வீட்டினுள்ளே எல்லாம் எங்களை அழைத்துக் கொண்டு போக மாட்டாயா..."
என்று உண்மை நிலை தெரியாத தமிழ் பேசிக் கொண்டே போக வான்மதி பதில் சொல்ல முடியாமல் திணறித்தான் போனாள்.

அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கைகளைப் பிசைந்தவாறே வீட்டினுள்ளே எட்டிப் பார்த்தாள். அவளை மேலும் சோதிக்காமல் உள்ளே இருந்து
"அக்காச்சி வெளியே என்ன சத்தம்... வீரன் சூரன் யாருடன் மல்லுக் கட்டிக் கொண்டு இருக்கிறான்..."
எனக் கேட்டுக் கொண்டு தேன்மதி வெளியே வந்தாள்.
வலது காலைப் பிடித்துக் கொண்டு மெல்ல நடந்து வந்த தேன்மதி வெளி வாங்கில் அமர்ந்து கொண்டு
அப்போது தான் அங்கே இருந்தவர்களைப் பார்த்தாள்.

தமிழனைப் பார்த்ததும் கால் வலியில் சுருங்கி இருந்த அவள் முகம் வேகமாகப் புன்னகையைத் தத்தெடுத்துக் கொண்டது.

தேன்மொழி வாசலைத் தாண்டி வரும் போதே அவளை இசை பார்த்து விட்டான். பார்த்த உடனேயே அவள் சில மணி நேரங்களுக்கு முன்னால் தன்னைத் திட்டி விட்டுப் போன பெண் என்பதை தெரிந்து கொண்டும் விட்டான்.
"இந்த வாயாடி... அதிகப்பிரசங்கிக்கு இங்கே என்ன வேலை... ஆளும் முழியும்..."
என முணுமுணத்தவன் அவளை முறைத்துப் பார்த்தான்.

தமிழனைப் பார்த்து முறுவலித்தவளது பார்வை வட்டத்தினுள் அப்போது தான் அவளையே முறைத்திருந்த இசை விழுந்து தொலைத்தான்.
அவளுக்கும் அவனைத் தான் திட்டியதும் அவன் தன்னைத் திட்டியதும் நினைவுக்கு வந்து விடவே அவளும் சளைக்காமல் பதிலுக்கு முறைத்தாள்.

எதேச்சையாக இருவரும் முறைத்துக் கொண்டிருப்பதைத் தமிழ் பார்த்து விட்டான்.

யாரும் உணராத வண்ணம் தம்பியின் தோளில் மெல்ல இடித்தவன்
"என்னடா இசை... எதற்கு இப்படித் தேனுவை முறைக்கிறாய்... எனக்கு முன்பே தேனுவை நீ பார்த்து விட்டாயா... வழமை போல இருவரும் சட்டையைக் கிழித்துக் கொண்டு சண்டை போட்டீர்களா என்ன... இருவரது முழியுமே சரியில்லையே..."
என யோசனையுடன் கேட்க, தமையன் சொன்னதை உள்வாங்கிய இசை சட்டெனத் திரும்பித் தேன்மொழியின் பக்கம் பார்த்துக் கொண்டு
"இது... அந்தச் சண்டைக்கோழி தேன்மதியா அண்ணா..."
என முகத்தைச் சுளித்தபடி கேட்டான்.

தமிழோ அவ்வேளை இசை சொன்னதைச் சரியாகக் கவனிக்கவில்லை.
அவன் தேன்மதியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு இசையின் பக்கம் கைகாட்டி
"தேனும்மா... அது யாரென்று தெரிகிறதா... உன்னோடு எப்பொழுதுமே வம்பிழுத்துக் கொண்டு அலைவானே சிடுமூஞ்சி இசை வேந்தன்..."
என்று சொல்ல, அதைக் கேட்ட தேன்மதி இசையை அப்போது தான் நேர்கொண்டு முழுமையாகப் பார்த்தாள்.

இசையைப் பார்த்ததும் அவளது முகத்தில் அப்போது எந்த மாறுதலும் அப்பட்டமாகத் தெரியவில்லை.
அதோடு தமிழைப் பார்த்ததும் அவள் துள்ளிக் குதித்ததைப் போல இப்போது எந்தவொரு உற்சாகத்தையும் காட்டாது முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாது அமர்ந்திருந்தாள்.
இசையும் அதே போலத் தான் வான்மதியைப் பார்த்த போது காட்டிய உற்சாகத்தில் பாதியளவு கூடத் தேன்மதியைப் பார்த்ததும் காட்டாமல் உணர்ச்சி துடைத்த முகத்தோடு அமர்ந்திருந்தான்.

இருவரும் சின்னஞ்சிறு வயதில் இருந்தே கீரியும் பாம்பும் தான்... ஒரு விடயத்திலும் இருவருக்கும் ஒத்துப் போகாது.
இசை எதைச் செய்யக் கூடாது என்று சொல்கிறானோ அதை மட்டும் தான் தேனு செய்வாள், அதே போல தேனுவுக்குப் பிடிக்காத விடயம் மட்டும் தான் இசைக்கு மிகவும் பிடித்தமான விடயமாக இருக்கும். அதோடு இருவரையும் சண்டை போடும் போது அவர்களைச் சமாதானப் படுத்தி வைப்பதற்குள் இசையின் அம்மாஅமுதாவுக்கும், தேனுவின் அம்மா ஞானகிக்கும் போதும் போதுமென்றாகி விடும்.

தேனு அமைதியாக இருப்பதைப் பார்த்த தமிழ்
"என்ன தேனு... அமைதியாக இருக்கிறாய்..."
என அவளை லேசாக உலுக்கவும், இசையை முறைக்கும் அப்போதைய வேலையைக் கைவிட்ட தேன்மதி
"என்னத்தான் கேட்டீர்கள்..."
எனத் தமிழைப் பார்த்துக் கேட்டாள்.

தமிழோ அவளது காதொன்றினை வலிக்காமல் திருகியபடி
"நான் கேட்டது ஒரு பக்கம் இருக்கட்டும்... நான் உனக்கு அண்ணாவா... அத்தானா... என்று நீ ஒரு முடிவுக்கு வரும் வழியைப் பார்..."
எனச் செல்லக் கண்டிப்புடன் சொல்ல
"எனக்கு எந்த நேரத்தில் எப்படித் தோன்றுகிறதோ... அந்த நேரத்தில் அப்படி அழைக்கிறேன் போதுமா..."
என்று சொன்னவளைப் பார்த்துச் சிரித்தவன்
"ஏதோ மரியாதையாக அழைத்தால் சரி தான்..."
என்று விட்டு வான்மதியின் பக்கம் பார்த்து அவளருகே செல்ல எழுந்தான்.

அந் நேரம் பார்த்து அவனது அலைபேசி
"உன்னை நான் கேட்காமலே உன்னோடு நான் வாழ்கிறேன்... என்னை நீ சேராமலே என்னோடு நீ வாழ்கிறாய்... என் மூச்சிலே எப்போதுமே உன் காற்றை வாங்கினேன்... உன் காட்சி எப்போதுமே என் கண்ணால் பார்க்கிறேன்..."
என்ற வரிகளை இசைத்துத் தன் இருப்பை உணர்த்தவே, அந்த வரிகளை நிதானித்து இரசித்தபடி வான்மதியை ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே அழைப்பை எடுத்துக் காதில் வைத்தான்.

எதிர்முனையில் சொல்லப் பட்டதைக் கேட்டதும் இரண்டே வார்த்தைகளில் பேசி முடித்தவன் அலைபேசியை அணைத்தபடி
"இசை... நம் ஊர் நண்பர்கள் எல்லோரும் இன்று யாழ்ப்பதணம் போகிறார்களாம்... என்னையும் உன்னையும் அழைக்கிறார்கள்... வா போய் விட்டு வரலாம்..."
என்று சொல்லிக் கொண்டு இசையை இழுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தான்.

வாசலுக்கு வந்தவன் அப்போது தான் நினைவு வந்தவனாகத் தலையில் லேசாகத் தட்டிக் கொண்டு திரும்பி வந்து
"அம்பூ... தேனூ... நான் அவசரமாக யாழ்ப்பாணம் வரை போகிறேன்... என்னுடைய ஊர் நண்பர்களை எல்லாம் சந்திக்கப் போகிறேன்... நான் பிறகு இங்கே வருகிறேன்... மாமாவிடமும் அத்தையிடமும் நான் பிறகு வருகிறேன் என்று சொல்லு தேனூ..."
என்று வேகமாகச் சொன்னவன் அதே வேகத்துடன் வெளியே போயும் விட்டான். இசையும் அவனோடு இணைந்து கொண்டான்.

அவர்கள் இருவரும் போனதும் தமக்கையைப் பார்த்த தேனு
"அக்காச்சி... மாமாவிடமும் அத்தையிடமும் இவர்கள் நண்பர்களைச் சந்திக்க யாழ்ப்பாணத்திற்குப் போகிறார்களாம் என்று சொல்லி விட்டு வரட்டுமா... அத்தானும் அவர்களிடம் சொல்லி விடுமாறு சொன்னார் தானே..."
என்று சொல்ல, அவளருகில் வந்த வான்மதி அவளிடம் தனது சைகை மொழியில்
"தமிழத்தான்... மாமா அத்தை என்று குறிப்பிட்டது அவருடைய அப்பா அம்மாவை இல்லை... எங்களது அப்பாவையும் அம்மாவையும் தான்... அவருக்கு நம் அப்பா அம்மா இல்லை என்பது தெரியாது..."
என்று புரிய வைக்க, தேனுவோ அவளது சைகை மொழி சொன்ன விடயத்தில் விக்கித்துப் போய் அப்படியே அமர்ந்து இருந்தாள் நெடு நேரமாக...

அவளைத் தொட்டு தன் பக்கம் திருப்பிய வான்மதி
"விடு தேனு... பார்த்துக் கொள்ளலாம்... மழை வரப் போகிறது போல... வெளியே காயப் போட்ட துணிகளை எடுப்போம் வா..."
எனச் சைகை செய்தபடி அவளை அழைத்துச் சென்றாள்.

தேனுவும் தமக்கை தன் மனநிலையை மாற்றத் தான் அவ்விதம் தன்னை அழைக்கிறாள் என்பதனைப் புரிந்து கொண்டு எழுந்து அவளோடு மெல்ல நடக்கத் தொடங்கினாள்.

இருந்தாலும் மனதினுள் குடைந்து கொண்டிருந்த கேள்வியைத் தமக்கையிடம் கேட்கலாமோ வேண்டாமோ என யோசித்தவள் ஒரு முடிவு எடுத்தவளாக
"அக்காச்சி... அப்பாவும் அம்மாவும் இப்போது இல்லை என்பது அத்தானுக்கு தெரியாதா... அவருக்கு என்ன சொல்வது..."
எனக் கேட்டு விட,
"எப்படியும் தெரிய வேண்டிய விடயம் தானே... தானாக தெரியும் போது தெரிந்து கொள்ளட்டும்... நீ அதைப் பற்றி யோசித்து உன்னைக் குழப்பிக் கொள்ளாதே..."
எனச் சைகை மொழி செய்த வான்மதி வீட்டு வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள்.

சில நிமிடங்கள் அப்படியே இருந்து வானத்தை வெறித்துக் கொண்டிருந்த தேன்மதிக்கு வழமை போல வலது பக்கக் கால் வலிக்கத் தொடங்கி, ஓய்வுக்குக் கெஞ்சவே கால்களை அழுத்திப் பிடித்தபடி அப்படியே சாய்ந்து அமர்ந்து விட்டாள்.

சில நிமிடங்கள் அப்படியே கரைய கவிவாணனும் அபிராமும் கதை பேசிச் சிரித்தபடி வீட்டினுள்ளே நுழைந்தார்கள்.
அங்கே வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்த தேன்மதியை யோசனையாகப் பார்த்த கவிவாணன்
"தேனும்மா... தனியே அமர்ந்து என்ன யோசித்துக் கொண்டு இருக்கிறாய்... மதி எங்கே... இப்படியே தனியே அமர்ந்து இருப்பதற்குப் பதிலாக அங்கே வீட்டுக்கு வந்திருக்கலாமே... நானும் அபியும் இதுவரை சதுரங்கம் விளையாடி விட்டு இப்போது தான் எழுந்து வந்தோம்..."
என்று பேசியபடி அவளருகே அமர்ந்தார்.

நீட்டிய கால்களை மெல்ல இழுத்தபடி
"ஒன்றுமில்லை மாமா... உங்களுக்கு ஏதாவது குடிக்க எடுத்து வரவா..."
எனக் கேட்டபடி மெல்ல எழுந்து உள்ளே சென்ற தேனுவை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி
"அபி... தேனுக்குட்டிக்கு காலில் ஏதும் பிரச்சினையா..."
என அபிராமைப் பார்த்துக் கேட்டார் கவிவாணன்.

அவனும் எதையும் மறைக்காமல்
"சின்னக்காவுக்கு வலது பக்க காலில் குண்டடி பட்டது மாமா... அவள் வேகமாகவோ நிறைய தூரமோ நடக்க மாட்டாள்... அப்படி நடக்க வேண்டி வந்தால் அவளுடைய கால் பக்கம் இரத்தம் கசிந்து வலி தாங்க முடியாத அளவிற்கு இருக்கும் மாமா... இதை நான் தான் சொன்னேன் என்று அக்காவிடம் சொல்லி விடாதீர்கள்... பிறகு நெற்றிக் கண்ணைத் திறந்து விடுவாள்..."
என உண்மையைச் சொல்லி விட, அவன் சொன்ன விடயத்தைக் கேட்டு லேசாக வலிக்கத் தொடங்கிய நெஞ்சை மெல்ல நீவி விட்டார் கவிவாணன்.
அவரது மனத் திரையில் நந்தனின் முகம் வந்து போனது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"சின்ன மலரே சித்திர நிலவே
வலிகளை மறைத்து சிரிக்கும் வித்தைதனை எங்கே கற்றாய்...
எனக்கும் அதை கொஞ்சம்
சொல்லிக் கொடு கண்ணம்மா...
தவிக்கிறேன் துடிக்கிறேன்
வேதனைகளை நெஞ்சோடு
புதைக்க தெரியாமல்
விழிக்கிறேன்..."

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Last edited:
Top