• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

யாத்திசை - 05

kkp 52

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 7, 2023
46
27
18
Tamilnadu
" எதைச் செய்தாலும் எல்லாவற்றையும்
தேவனுடைய மகிமைக்கென்றுச் செய்யுங்கள் "

பிரதான கதவின் நிலப்படியின் மேல்வாட்டில் எழுதப்பட்ட வேத வாசகம் ஔவியனையும் இலங்கோவையும் மௌனமாய் வரவேற்க,

" வாங்க ஔவியன் , இலங்கோ வாங்க. "
என வார்த்தைகளால் வரவேற்றாள் மரினோவின் தாயான ருக்மணி போல்தாஸ் தம்பதிகளின் மகள் ஸ்டெல்லா மேரி .

இருவரும் முன்னறையில் முழுதாய் இடம்பிடித்து மூன்று பக்க சுவர்களுக்குள் இறுகிக்கிடந்த விசாலமான சோபாவில் அமராது அதன் அருகிலிருந்த இரு பிளாஸ்டிக் கதிரையில் அமர்ந்தார்கள். சோபா குளிரில் இழுத்து போர்த்திக்கொண்டிருக்க, அதை ஏன் தொந்தரவு செய்வான்?

சோபா இருந்த நீளச் சுவரில் , மென் பூக்கள் நிறைந்த அமைதி பேசும் ஒரு காட்சிப்படம்
"உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும் உன் அரமனைக்குள்ளே சுகமும் தங்குவதாக " என்ற வாசகத்தோடு காட்சியளித்து இருவர் மனதிலும் ஓர் சமாதானத்தை ஏற்படுத்தியது.

ஆங்காங்கே இன்னும் சில வாசகங்களும் பார்வையில் பட ஒவ்வொன்றாய் வாசித்துக்கொண்டிருந்தார்கள்.


பயண ஆடையோடு வந்து நின்றான் மரினோ. மேரியும்தான்.

நால்வரும் வெளியியேற, வலது புற பக்கத்துவீட்டில் வசிக்கும் டேனியலின் சித்தப்பாவின் மகளிடம் "கோகிலா..... , மக கிளாஸ் முடிஞ்சி கொஞ்சத்துல வந்துருவா. இந்தா வீீீட்டுட்சாவி. அவ வந்ததும் கொடுத்துரு. அவள கொஞ்சம் பாத்துக்க. நா பொலிஸ்க்கு போய்ட்டு அப்படியே ஹொஸ்ப்பிடலுக்கும் போய்ட்டுதான் வருவெ." என்று கூறிவிட்டு வீட்டுச் சாவியை அவளிடம் கொடுத்துவிட்டு சென்றாள்.

சிறிது தூரம் நடக்க, முச்சந்தியில் ஊருக்குள் ஹயர்க்காக வந்த நகரத்து டீசல் முச்சக்கர வண்டியொன்று "யாரேனும் நகரத்துக்குச் செல்வதற்காக வரமாட்டார்களா..?" என ஏக்கத்தோடு திரும்பிச் செல்கையிலும் ஒரு தொகையை கரந்துக்கொள்வதற்காக காத்திருக்க, வந்த நால்வரும் அதில் ஏற வண்டி நகரத்தை நோக்கி நகர்ந்தது.

அந்த பாதையில் தள்ளாடி தள்ளாடி உருண்டோடி கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலயத்தில் நகரத்தை அடைந்ததும், சாரதியிடம் "பொலிஸ்கிட்ட கொஞ்சம் போடுங்க " என இலங்கோ சொல்ல வண்டி காவல் நிலையத்தை அடைந்தது.


"பொலிஸ் ஸ்தானய"
"பொலிஸ் நிலையம்"
"பொலிஸ் ஸ்டேஷன்"

என சிங்களம், தமிழ் ஆங்கிலம் என முறையே மூன்று மொழிகளாலும் பெயர்்ப்்்்ப்்பதாகை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சில ஆண்டுகளாகத்தான் தமிழ் இரண்டாவது இடத்தை பிடத்து நிற்கிறது. முன்பெல்லாம் மூன்றாவது இடத்தில் தான் தமிழ் ஓரமாய் பல்லைக்காட்டிக்கொண்டிருக்கும், மூன்றாவது இடத்திலாவது இருக்கிறோமே என்ற பெருமையோடு.

தமிழ் படித்தவர்களே இல்லாத நாடு போல் பொது பெயர் பலகைகள் கூட எழுத்து பிழைகளோடு தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைப் போல் பரிதாபமாய் கிடந்த ஒரு காலமும் இருந்தது. சில பத்திரிகைகாரர்களின் துனிச்சலான செயல்களால் ஏதோ சிறு சிறு மாற்றங்கள் இன்று.

பெரிய மைதானம். கால்வாசி இடங்களை கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஆக்கிரமித்திருந்தன. அவை சில பாகங்கள் துறுப்பிடித்து இறந்தும், சில பாகங்களை இழந்தும் கிடந்தன.

கட்டிடங்களின் உள்ளேயும் வெளியேயும் பல சிங்கள தலைகளுக்கு மத்தியில் ஓரிரண்டு தமிழ் தலைகளும் சீருடையில் இருந்தன . விசாரணை வரிசையிலும் புகார் வரிசையிலும் பல தமிழ் தலைகள் நிரம்பியிருக்கவே அது தமிழர் பிரதேசம்தான் என்பதை நினைவுபடுத்தியது.


புகார் வரிசையில் நீண்ட நேரம் காத்துகிடக்க, அவர்களின் வாய்ப்பு வர அழைக்கப்பட்டார்கள்.

உள்நுழைந்தாள் மேரி.

"சொல்லுங்க மேரி. என்ன பிரச்சினை? " சிங்களவன் வித்தியாசமான உச்சரிப்பில் அவன் கற்ற தமிழை பேசினான்.

" மகே மஹத்தயாவ... சம்பத் , எயாகே யாஹலுவா திசாநாயக்க கெஹுவா."

இவளுக்கு தெரிந்த சிங்களத்தில் பாதி எழுத்தை விழுங்கியும் பாதியை வேறு உச்சரிப்பிலும் சொன்னாள். தமிழில் பேசிய அதிகாரியிடம் தமிழிலியே பேசலாமே. ஆனால் அந்த அதிகாரி தமிழ் பேசிய விதத்திலுருந்தே புரிந்தது அந்த ஒரு சில வார்த்தைகள் மட்டும்தான் அவனுக்குத் தமிழில் தெரியும் என்று. பின் எப்படி இவள் தமிழில் பேசுவாள். இவளும் சிங்கள மொழியில் அடிமட்டம்தான். ஔவியனும் உள் நுழைய வேண்டியதாயிற்று.


அவன் அழகாக சிங்களம் பேசுவான். சிங்களவன் போலவே.

(சிங்கள மொழி உரையாடல் தமிழில்)


" இந்த பெண்ணின் கணவன் டேனியல். தோட்டத்துல ட்ரைவர் வேல. காலையில் வேலைக்குப் போனப்போ சம்பத், அவன் கூட்டாளி திசாநாயக்க ரெண்டு பேரும் சேந்து அடிச்சி போட்டுட்டு ஓடிடாங்க." சிங்களத்தில் சம்பவத்தை சுருக்கமாகச் சொல்லி முடித்தான்.

" இப்ப எங்க ஆள்?"

"ஹொஸ்பிடல்ல அட்மிட் பண்ணியாச்சி சேர்."

" அவங்கதான் அடிச்சாங்கன்னு எப்படி சொல்றிங்க? நேர்ல பாத்தவங்க யாரு?"

" ஸ்கூல் முன் தான் சம்பவம் நடந்துருக்கு. பிள்ளைகள் எல்லாரும் பாத்துருக்காங்க."

"டேனியல்ட மகனும் அந்த ஸ்கூல்தான். அவனுக்கும் இனி ஆபத்து இருக்கு சேர்."

"அது யேன்?"

" அவன் அவங்க அப்பாவ அடிக்குறத பாத்துட்டு கல்லெடுத்து அடிக்க ட்ரை பண்ணிருக்கான். ஆனால் கல் அவன் மேல் படல்ல. "

"ஆ... எங்க பையன் வந்துருக்கானா?"


வெளியில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மரினோவை சைகையால் ஔவியன் உள்ளே அழைக்க இலங்கோ "மரினோ உள்ள போ" என சிறுவனை தள்ளிவிட்டான்.

அதிகாரி சிறுவனை மேலிருந்து கீழ் வரை நோட்டமிட்டான். "


" கல் மேல்ல படாட்டியும் அந்த மாணவன ஸ்கூல்குள்ளேயே சம்பத் அடிக்க வந்துருக்கான் சேர். எங்க கண்டாலும் அடிப்பன்னு சொல்லி மிரட்டிட்டு போய்ருக்கான். பிள்ள பயந்துபோய் இருக்கான்"

"சரி சரி... இப்ப ஹொஸ்பிடல்க்கு பொலிஸ் போகும். டேனியல்டயும் வாக்கு மூலம் வாங்கிகிட்டு வழக்கு போடுவாங்க. அந்த திகதியில வாங்க" என அனைத்தையும் புகார் புத்தகத்தில் எழுதிக்கொண்டே கூறினான் அதிகாரி.

"சரி சேர்"

அதிகாரியிடமிருந்து விடைபெற்று வெளியேறினார்கள்.


வைத்தியசாலை.

சிங்கள மொழி பேசும் வைத்தியர்களும், தாதியர்களும் வைத்தியசாலையை மிக சுறுசுறுப்பாக அலங்கரித்துக்கொண்டிருந்தார்கள்.

டேனியலை பரிசோதித்துக் கொண்டிருந்தார் வைத்தியரொருவர்.

" ஆர் அடித்தது உம்ம? உந்த இடம் நோவுதா? கொஞ்சம் பொறுத்துக்கோங்கோ.... எக்ஸ்ரே ஒண்டு எடுத்து பார்ப்பம். நோவு குறைய மருந்து கொடுப்பாங்கள். குடிச்சிப்போட்டு கொஞ்சம் நித்திரகொள்ளுங்கோ என்ன."

அட தமிழ்மொழியில் பேசுகிறாரே இந்த வைத்தியர். டேனியலுக்கு ஓர் ஆறுதல். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர். அவருக்கு இந்த பிரதேசத்தில் தான் போஸ்டிங் கிடைத்திருக்கிறது போல.

இங்கு தமிழ் மொழி பேசும் வைத்தியரென்றால் ஒன்று வடக்கிலிருந்து வந்துதித்தவராக இருப்பார். இல்லை கிழக்கில் உதித்து வந்தவராக இருப்பார். மலையக மண்ணிலிருந்து ஒரு தமிழன் கூட வைத்தியனாகவோ பொறியியலாளனாகவோ ஆவதற்கு இதுவரை ஜாதகம் அமையவில்லை.

இங்கு கற்கின்ற மாணவர்களுக்கு வைத்தியர், பொறியியலாளர் எல்லாம் சிறு வயது இலட்சியங்கள் மாத்திரமே.

வைத்தியர் பரிசோதனை நேரம் முடிய நோயாளர் பார்வை நேரம்.

மேரி,மரினோ, ஔவியன், இலங்கோ நால்வரும் டேனியலின் கட்டிலைச் சுற்றி நின்றார்கள். நேரத்திற்கு பியதாசயும் வந்துச் சேர்ந்தான். டேனியலை வைத்தியசாலையில் அனுமதித்தவனல்லவா.


"என்னங்க ......." டேனியல் இருந்த நிலையைப்பார்த்து கண் கலங்கினாள் மேரி.

"பாவிங்க...நல்லாவே இருக்கமாட்டான்க. இப்படி போட்டு அடிச்சியிருக்கான்களே. இந்த மனுசனென்ன அவன்க திங்கிற சோத்துல மண்ணல்லியா போட்டது. படுபாவிங்க... இந்த மனுசன போய் அடிக்க எப்படிதான் மனசு வந்துச்சோ. " புலம்பியழுதாள்.

" பாரு சாமி உங்க அப்பாவ எப்படி அடிச்சியிருக்கான்கனு" மகனையும் அவள் உணர்ச்சியில் தூண்டிவிட்டாள்.

"மேரியக்கா, இது ஹோஸ்பிடல். அழாதிங்க... " இலங்கோ அவளின் உளக்குமுறலை குறைக்க முயன்றான். ஆனால் அதன் பின்னர்தான் அவளது உளக்குமுறல் ஆவேசமாக மாறியது.

"அவன்கள சும்மாவிடமாட்டெ. கோட்டுக்கு இழுத்து .... அவன்களுக்கு சரியான பாடம் படிப்பிக்காமல் விடமாட்டெ. கர்த்தரே... உன் குழந்தையை இந்த கதியில் தள்ளியவர் களுக்கு சரியான பாடம் புகட்டுவீரே..."

"மேரியக்கா.... அழாதிங்க. இப்ப டேனியலுக்கு குணமாகுறதத்தான் நாங்க யோசிக்கணும். நீங்க இப்படிலாம் பேசினா டேனியல் இன்னும் ஒடஞ்சி போய்டுவாரில்லையா?"
ஔவியன் தேற்றினான்.

" அடன்ன எபா மேரியக்கா. தெய்யோ (B)பலா(G)கனிய். ( "அழாதிங்க மேரியக்கா. கடவுள் பாத்துப்பான். " )
பியதாச அவள் படும் பாட்டை பொறுக்காது உணர்ச்சிவசப்பட்டவனாய் பேசினான்.

சிறிது நேரத்தில் பொலிசாரும் வந்து சேர்ந்தார்கள். இவர்கள் ஒதுங்கி இடம் கொடுக்க டேனியலோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


போதிய தகவல்களை திரட்டிக்கொண்ட பொலிசார் வழக்கிற்காக ஒரு திகதியை வழங்கிவிட்டு செல்ல பார்வை நேரமும் முடிந்தது.

அவசர அவசரமாக கொண்டு வந்த உணவை ஊட்டிவிட்டாள் மேரி. ஏனையோர் வெளியேறினார்கள். "நேரம் முடிந்தது. பார்வையாளர்கள் வெளியேறுங்கள்" என காவலாளிகள் சத்தம் கேட்க மேரி கையை கழுவிவிட்டு நீரை அருந்தச் செய்துவிட்டு வெளியேறினாள்.

மறுநாள் பொழுது விடிந்தது.

யாத்ரா நாடகத்தை எழுதிக் கொண்டிருந்தாள்.

மாலையில் ஒத்திகை பார்க்கவேண்டியிருந்ததால் ஔவியன் நடிகர்களை ஓரிடத்தில் ஒன்று சேர்ப்பதற்காக தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தான்.

மத்தியானம் ஆனது. அனைத்து கதா பாத்திரங்களும் வந்தாயிற்று. கதையின் பிரதான பாத்திரத்தை ஏற்று நடிக்கும் சிறுமியை இன்னும் காணவில்லை. அவள் வரும் வரை ஒரு காட்சியை ஒத்திகை பார்க்கலாமே என ஒருவன் கூற, அனைவரும் வட்டமாய் தரையில் அமர்ந்துக் கொண்டார்கள்.


வீரபாண்டி கட்டபொம்மன் போல ஒருவன் இடுப்பில் கைகளை வைத்து அழுத்தி, கால்களை தரையில் அகற்றி ஊன்றி தோட்பட்டைகளை உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தி நின்று,

" நான் சொல்கிறேன். இந்த லய வீட்டுச்சுவர்களையெல்லாம் உடைத்து தன்த்தனி வீடுகளாக கட்டுங்கள். இரண்டு வீடுகளை இணைத்து ஓர் வீடாய் ஆக்கி ஒரு குடும்பத்திற்கு சொந்தமாய் கொடுங்கள். வசதி உள்ளவன் அவன் வீட்டை அவன் விருப்பப்படி கட்டிக்கொள்ளட்டும். இது என் ஆணை. இன்றே அமுல்படுத்துங்கள். யார் வந்து தடுக்கிறார் என பார்ப்போம். என்னை மீறி தடுத்து நிறுத்த எவன் வருவான்? ஹா....ஹா....ஹா.... " யாத்ராவின் வீர வசனங்களை கம்பீரமான உரத்த குரலில் ஒப்புவித்தான்நிஜ ஆட்சியாளனைப் போலவே.



வழமையாக மாலை ஒத்திகையென்றால் மத்தியானமே அனைவரும் வந்து சேர்ந்துவிடுவார்கள். ஒருவேளை நர்மதாவிற்கு தகவல் போய்ச்சேரவில்லையோ என்றெண்ணிய ஔவியன், நாடக ஒத்திகை பார்ப்பதை நிறுத்திவிட்டு அச்சிறுமியின் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தினான். ஆனால் தொடர்பு இணைப்பில் இருக்கவில்லை.

அனைவரையும் பார்த்து சாப்பிட்டுவிட்டு காத்திருக்கும்படி கூறிவிட்டு,

"ஓரெட்டு நேர்லேயே போய் பாத்து பேசிட்டு நானே நர்மதாவ கையோடயே கூட்டிட்டு வாறேன். எல்லாருக்கும் சாப்பாடு கொடு யாத்ரா. " என யாத்ராவிடம் கூறிவிட்டு,

ஔவியனின் பயணங்களில் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும் தம்பி , இத்தனை நாளாக கெரஜிலிருந்து திருத்தமாகி நேற்று மாலைதான் புது பொலிவோடு வந்துசேர்ந்திருந்தான். அந்த ஹொண்டா பைக்கில் ஏறி அமர, "தம்பியுடையான் படைக்கஞ்சான்" என்றொரு தைரியம் இயல்பாகவே அவனுள் வந்துதிக்க மார்பை உயர்த்தி கம்பீரமாய் புறப்பட்டான்.

...விஞ்ஞானம் தீண்டா கலைகள் தொடரும்...
 
Last edited:

kkp 52

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 7, 2023
46
27
18
Tamilnadu
புண் பட்ட ஜனம் ஒருபுறம்
புரட்சி ஒருபுறம்.....
பார்ப்போம்... 💐💐💐💐💐
ம்..... பார்கக்கலாம்..என்தான் நடக்கப்போகுதுனு.... நன்றி சகோ.