• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

யாத்திசை - 17

kkp 52

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 7, 2023
46
27
18
Tamilnadu
"இலங்கை வேந்தே , சொல்லுங்கள். சிங்களவன் நம் மீது வன்முறை செலுத்தக் காரணம் என்னவோ? "

என்று இலக்கணத்தமிழ் நாடக தோரணையில் சொன்னப்படி இலங்கோவின் கையிலிருந்த கத்தியை பிடுங்கி கீழே போட்டான் வினோத்.

" நாங்க கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு பிறகு உங்க வேலைய செய்ங்க." கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் கற்பாறையில் இருக்கச்செய்தான் ருத்ரன்.

இலங்கோ , வெட்டிக்கொண்டிருந்த நீண்ட மெல்லிய மரத்திலிருந்து விழுந்த குருவிக்குஞ்சுக் கூட்டை கைகளில் ஏந்திக் கொண்டிருந்த பியதாசவை பார்த்தான். கூட்டிலிருந்து விழுந்த குஞ்சை எடுத்து கூட்டுக்குள் வைத்து சற்று தூரமாய் சென்று வேறொரு மரத்தில் வைத்துவிட்டு வந்துக்கொண்டிருந்தான்.

" நான் இருக்குறதாலா யோசிங்கிறிங்க போல. அது பரவாயில்ல. சும்மா சொல்லுங்க. " முகத்தில் எந்த வித்தியாசமும் காட்டாத பியதாசவின் மீது தனி மரியாதையே வந்தது இளசுகளுக்கு.


"ம்க்று ம்க்று " கரகரத்த தொண்டையை சரிசெய்துக்கொண்டு,


" என்னத்த சொல்றது....? 'எண்பத்தேழு வன்செயல் ' என்னு சொன்னாலே இப்பவும் எங்க அம்மா அப்பாவுக்கு நெஞ்சு நடுங்கும்.

இலங்கையின் அரசியல் கட்சி ஒன்னு லயத்துல இருந்த தமிழ் ஆக்கள் எல்லாத்தையும் திரும்ப இந்தியாவுக்கே அனுப்பச் சொல்லி ஆக்கள லயத்துலருந்து விரட்டியடித்தது. எங்க அம்மா, அப்பா பயந்துகிட்டு பதினொராம் வகுப்பு பரீட்சை எழுதவும் போகலன்னு சொல்லுவாங்க. ரோடெல்லாம் இரத்தமா கெடக்குமாம். அந்தியாகினதும் சாப்பாடெல்லாம் கட்டிகிட்டு காட்டுக்குள்ள போய் ஒழிஞ்சிப்பாங்களாம். வயசானவங்க, நோயாளிங்க எல்லாரமயும் தூக்கிட்டு ஓடுவாங்களாம். தூக்கி கொண்டுபோக முடியாத நேரத்துல முடிஞ்சளவு உயிர்கள காபாத்திப்பம்னு அவங்கள விட்டுட்டும் போய்ருக்காங்க. எங்க அப்பம்மாவ (பாட்டி) அப்படி விட்டுட்டு போய்டுவம்னு எங்க அப்பா சொல்லியிருக்காரு. ஆனா எங்க அம்மா அவங்கள விட்டுடல. ரப்பர் சீட்டொன்னுல சுத்தி தூக்கிட்டு போனாங்களாம். அந்த கலவரம் ஓரளவு நின்ன பிறகும் கூட நம்ம தமிழாக்கம் பொட்டு வச்சு பூ வச்சு ரோட்ல போக பயந்தாங்க. அப்படி ஒரு அடிமை காலமும் இருந்தது. சிலர் பயந்துகிட்டு இந்தியா போய்ச் சேந்தாங்க . சிலர் கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்புனு தமிழர் வாழ்ற பிரதேசத்துல குடிபெயர்ந்தாங்க. நம்ம தாத்தா பாட்டியெல்லாம் ஏதோ உயிர் பொழச்சி இங்கயே இருந்துடாங்க. "


கடகடவென சொல்லி முடித்தான் இலங்கோ.


கண்கள் சிவந்து கர்சிக்கும் சிங்கத்தின் சாடை ருத்ரனிடம் உருவேறிக்கொண்டிருந்தது.

"வெள்ளக்காரன்கள விட மோசமான மிருகம் தான் சிங்களவன்கள். " மூடி திறந்த போத்தலுக்குள் அடங்கிக் கிடந்த புகையென வேளியேறியது வார்த்தைகள்.

"யாத்ரா அந்த தண்ணிய எடு "
வியர்வை வடிய வந்தமர்ந்தான் ஔவியன்.


நீரால் முகத்தை அலம்பிவிட்டு ஒரு முடக்கு அருந்தி விட்டு,

" கிருபா.... நம்ம மேல அடி பட்டுருக்கதால நாம கோபப்பட்றது இயல்புதான். ஆனால் இன்னொரு பக்கம் யோசிச்சா சிங்கள ஆக்கள் மேல கோவப்பட எதுவும் இல்லனு புரியும். " என்றுச் சொன்ன ஔவியனை விரைத்து பார்த்தனர் மூவரும்.

" என்ன அண்ணா சொல்றிங்க? நாய அடிச்சி விரட்டுற மாதிரி விரட்டியிருக்கான்க. அவன்களுக்கு ஈவிரக்கமே இருந்துருக்காது. அவன்களுக்கு போய் சப்போட் பண்ணி பேசுறிங்க. ?"


" அப்படியில்ல ருத்ரன். சரி நா ஒன்னு கேட்குறெ... இப்போ சீனா நம்ம நாட்டுக்குள்ள வந்து வர்த்தகம் செய்யுது. இலங்கையில் பல பிரதேசங்களையும் பெறுமதிமிக்க இடங்களையும் குத்தகைக்கு எடுத்துருக்கு. ஹம்பாந்தோட்டை துறைமுகம் , கொழும்பு துறைமுக நகரத்தை கைப்பற்றியதில் இருந்து இலங்கையில சீனாட ஊடுருவல் இருக்கு இல்லையா? இப்போ
கொழும்பு துறைமுக நகரத்துக்கு போகனும்னா நாமலே பாஸ்போட் வீசாலாம் எடுத்துதான் போகவேண்டிவரும். இதெல்லாம் இப்ப சொல்லப்பட்ற விஷயங்கள். இதுக்கெல்லாம் நீங்க என்ன சொல்றிங்க?" ஔவியன் மறுபடியும் போத்தலை திறந்து அண்ணாந்து தண்ணீரை குடித்துவிட்டு போத்தலை கீழே வைத்துவிட்டு மூவரையும் பார்த்தான். மூவரும் விழித்துக்கொண்டிருந்தார்கள்.

" என்ன ருத்ரன், கிருபா? வினோத் பேச்ச காரணம்?" சீனா இங்க வந்து பிஸ்னஸ் செய்யட்டுமா ? இங்க இருக்க இட்களெல்லலாம் சீனர்களே வந்து வேல செய்யவிட்டுருவிங்களா? ம்...?"


"அதெப்படி அண்ணா? அவங்க இங்க வந்து தொழில் செய்து லாபத்தயெல்லாம் அவன் நாட்டுக்கு எடுத்துகிட்டு போவான். இங்க இருக்க நாங்க என்ன பண்றது அப்பறம்? " கிருபாவும் ருத்ரணும் சொல்ல முடியாது மென்று விழுங்கியதை கக்கினான் வினோத்.

"ஹா..... இதே நிலைலதான், அன்னைக்கு நம்ம ஆக்கள் இங்க வந்து வேல செய்யும் போதும் இங்க இருந்த சிங்கள ஆக்கள் இருந்திருப்பாங்க. இல்லையா ?"

வாய்மூடி சிந்தித்தார்கள் மூவரும். அவர்களிடமிருந்த கலகலப்பு மங்கிபோனதை கண்ட பியதாச,

" பாதிப்புனு பார்த்தால் ரெண்டு பக்கமும் தான் இருக்கு. ஆனால் தமிழாக்கள் ரொம்ப கஷ்டபட்டுடாங்க. இப்போ பழையதெல்லாம் மறந்துட்டு ஒற்றுமையா வாழத்தான் இருக்குது. எப்படியோ இவ்வளோ காலமா இந்த நாட்டோட பொருளாதாரத்துல தமிழர்ட பங்கு அதிகமாகவே இருக்குது. இனி இங்கருந்து போக சொல்ல யாருக்கும் உரிம கெடையாது. எல்லாருக்கும் எல்லா உரிமையும் உண்டு. இது தமிழ், சிங்களம், முஸ்லிம் மூவினத்தரின் நாடுதான். வேற கத இல்ல. என்ன நான் ச்சொல்றது ? " நான் சொல்வது சரிதானே என்பது போன்ற தொனியில் சொல்லி புன்முறுவலோடு ருத்ரனின் தோளில் கைபோட்டு குழுக்க "ஈ ...." என பல்லிலித்தான் அவனும்.


"மலரக்கா..... எல்லாரும் வாங்க, சாப்பிட்டு வேலைய செய்வோம் " சத்தமாய் அழைத்தான் ஔவியன்.

யாத்ரா, தான் கொண்டுவந்த உணவுப் பொதிகளை எடுத்தாள். ஒவ்வொருவராக கைகளை கழுவிக்கொண்டு வர அனைவருக்கும் பகிர்ந்தளித்தாள்.

வாழையிலையில் சுற்றப்பட்ட சோற்றுப்பொதி. திறக்கும்போதே வாசனையில் பாதி பசி ஆறியது.

"ஐயா.... இந்த லய வீட்ட விட்டு போகச் சொல்றியானு" கேட்டிங்கள்ள?"

உணவை பிசைந்தவாறே... "ம்" ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினார் பெரியவர்.

"ஐயா.... எத்தனையோ லயங்கள் வெறிச்சோடி போய் கெடக்கு. நிறைய பேர் வெளியில இடம் மாறி போய்டாங்க. இப்ப லயத்துல வாழ்ற சனங்கள் குறைஞ்சிபோச்சி. "


"இப்போ என்னதான் சொல்ல வாற நீ..." என்பது போல் இருந்தது அனைவரினதும் முக பாவனை. ஔவியன் தொடர்ந்தான்.

"லயங்கள விட்டு போங்க எண்டெல்லாம் நான் சொல் இல்ல. நகர வாழ்க்கைய விட இந்த கிராம வாழ்க்கைதான் மனசுக்கு நிறைவ தருது. இந்த ஊர் நமக்கு சொர்க்கம் தான். ஆனால்....."

" அப்ப இந்த லயத்துலயே வாழ்ந்துருவம் அண்ணா. காசு தேடி நெலம் வாங்கி, வீடு கட்டி.... எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்? " எனச் சொல்லி ஒரு வாய் உள்ளே தினித்துவிட்டு தலையை உயர்த்தி பார்க்கையில் ருத்ரனும் கிருபாவும் அவனை வெறித்தனமாய் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

உடனே வினோத்.. " " "இல்ல...சும்மா ...தெரியாதா.. அது...ஒரு காமடிக்காக..." என்று முளியை உருட்டி உருட்டி சமாளிக்க அனைவரும் சிரித்தே விட்டார்கள்.

" தூக்கனாங்குருவிகூட தானும் தன் இணையும் இருப்பதற்கு ஓர் அறை பிள்ளைகளுக்கு ஓர் அறைன்னு தான் கூடு கட்டுது. ஆனா நம்ம லய வீடுகள்...? சிலர் , இடம் இருக்க மாதிரி , வீட்ட முன்னுக்கு பின்னுக்கு எடுத்து ரூம்லாம் வச்சி பெருசா கட்டியிருக்காங்க. ஆனால் சிலர் ஆதி காலத்துல வெள்ளகாரன் எப்படி கட்டிக்கொடுத்தானோ....அதுல ஒரு கல்லக்கூட மாத்தாமல் அப்படியே வாழ்றாங்க. யாராவது வந்து செய்து கொடுக்கணும்னே பாத்துகிட்டுருக்காங்க." ஔவியன் சற்று இளக்காரமாக பேச சிலருக்கு ரோசம் லேசாக நிமிர்ந்து பார்த்தது போல. சொல்வது ஔவியன் ஆயிற்றே. என்பதால் சிலர் அடக்கிக்கொண்டார்கள். ஆனாலும் மலரின் வாயை கட்டுபடுத்த முடியவில்லை. ஔவியனிடம் மனம்விட்டு பேசும் ஒருவள் எனும் உரிமையில் வாய் திறந்தாள்.


" என்ன தம்பி சொல்ற நீ...? இங்க தோட்டத்துல கொடுக்குற சம்பளத்துல சாப்பிட்றதா? புள்ளங்கள படிக்க வக்கிறதா? கல்யாணம் வீடு , சாமத்திய வீடுன்னு வந்தால் அதுகள பாக்குறதா? ஒவ்வொரு மாச கடைசிலயும் கைல காசு இல்லாமல் திடிர்னு ஒரு நோய் வந்து மருந்தெடுக்கணும்னால் கூட கடன் தானே வாங்க வேண்டியிருக்கு. இந்த லட்சனத்துலதான் வாழ்ந்துகிட்டு எப்படி தம்பி வீட்ட கட்டுறது? எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி பேசுறியே..? " மலரின் பேச்சுத்தொணியில் கோவம் பாதி இயலாமையின் விரக்தி பாதி கலந்திருந்தது.


" சரிதா மலரக்கா. நீங்க சொல்றது எனக்கு புரியுது. ஆனால் நாம காலா காலத்துக்கும் இப்படியே அனுதாபம் தேடிகிட்டே வாழனுமா , சொல்லுங்க? உங்க எல்லாருக்கும் தெரியும். நானும் யாத்ராவும் கல்யாணம் முடிச்ச பிறகு வாழ்றதுக்கு ஒரு வீடு இல்லாம இருந்தோம். தற்காலிகமா போட்ட குடிசைய கூட ஒடச்சிபோட்டாங்க. அதுக்காக நாங்க யார்கிட்டயும் போய் வீடு கட்டிதாங்கன்னு கேட்கலயே. எங்க அம்மா அப்பாவுட்டு பென்சன் காசுல வீட்டுக்கு ஒரு காணியயும் இதோ இந்த காணியயும் வாங்கினம். இந்த பென்சன் காசுலதான் என் கல்யாணத்த செய்யணும்னு நினைச்சாங்க எங்க அம்மா அப்பா. ஆனால் கல்யாண விழாவ விட சொந்த நிலம் முக்கியம்னு முடிவெடுத்தோம் நாங்க. " அனைவரிலும் பேரமைதி நிலவியது.


" இதுவர எத்தன பேர் லச்ச கண்க்குல பென்சன் எடுத்துருப்பாங்க. ஒவ்வொருத்தரும் நெனச்சியிருந்தால் காணி எடுத்துருக்க முடியாதா ? அநேகமானவங்க த்ரிவிலும் பைக்கும் எடுக்குறதுல தானே ஆர்வமா இருக்காங்க. யேன் அந்த காசுல ஒரு நிலமோ சொந்த வீடோ வாங்கணும்னு தோணல? " இலங்கோவின் கேள்விக்குறிக்கு பதில் தெரியாது மீண்டு கேள்விக்குறியே தொற்றியது எல்லா முகங்களிலும்.

"இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல. லீவ் இல்லாமல் இப்ப தோட்டத்தொழிலாளிகளாக இருக்குற அவ்வளவு பேரும் லீவு இல்லாமல் தொடர்ச்சியா வேல செய்தால் நல்ல ஒரு தொக பென்சன் எடுக்கலாம். நம் பிள்ளைகளாவது சொந்த நிலம் வாங்கனும்ன்ற இலட்சியத்தோட தொடர்ந்து உழைக்கணும். சும்மா அன்னன்னைக்கு வாழனும்னு மட்டும் நினைக்காமல். " ஒரு உறுதி ஒளி அனைவரின் முகத்திலும் பிரகாசித்ததை காணமுடிந்தது.

கிருபாவும் ருத்ரணும் பேராச்சிரியத்தோடு ஔவியனையும் யாத்ராவையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சொந்த வீடு என்பதையும் தாண்டி சொந்த தோட்டம் என்பதில் அவர்களது இலட்சிய கனவு விரிந்திருக்கிறதே...

இலையிலிருந்த சாப்பாடு முடிய, பசி தீர்ந்ததோடு புது வழியும் நெஞ்சை நிறைத்த இன்பத்தில் கைகளை கழுவிட்டு மீதி வேலையை தொடர்ந்தார்கள்.

ஔவியனுக்கும் யாத்ராவிற்கும் சந்தோசமாய் இருந்தது. ஓர் ஊரே அவர்களுக்காக வந்து கூடியிருக்கிறதே! படித்த இருவர் என்பதால் மட்டுமல்ல, தன் சுய வாழ்க்கையில் மட்டும் அக்கறைக்கொள்ளாது தனது சமூக முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டவர்களாக இருப்பதே மொத்த ஊரும் அவர்களோடு இணைந்திருப்பதற்கு காரணம். டேனியலை தவிர.

மாலையானது.

"இன்னும் ரெண்டு மூனு நாள் வேல இருக்கு. " என்றபடி வந்தான் பியதாச.

ஒவ்வொருவராய் வியர்வைத்துளிகளை துடைத்துக்கொண்டு வர , மலையிலிருந்து கீழிறங்கினார்கள்.

ஆச்சரியத்திலிருந்து நீங்காத கிருபாவும் ருத்ரனும் ஏதோ யோசனையில் இறுதியாக இறங்கிக்கொண்டிருந்தார்கள்.

"என்ன....ஏதோ யோசனையில மூழ்கியிருக்குற மாதிரி இருக்கு.... பாத்து இறங்கு என்ன...?" என யாத்ரா சொல்ல ,

" அக்கா.... நீங்களும் ஔவியன் அண்ணாவும் செம்ம ...உங்க ரெண்டு பேரையும் பாக்க எவ்ளோ ப்ரௌட்டா இருக்கு தெரியுமா.." கிருபா சொல்கையில் அவனது முகத்தில் பேரொளி வீசியது. வலியினாலான குழப்பங்களின் பின்னராக வரும் தைரியமே அது.

"யேன் கிருபா...யேன் அப்படி சொல்ற நீ ?"

"ம்...... அப்படி ஒரு நிலை உருவாகினால், ஒரு குடும்பத்துல எல்லாருமே காலையிலிருந்து படிப்புக்கான தொழில செய்துட்டு வந்து அந்தியிலயும் லீவ் நாட்கள்ளயும் தோட்டத்துல நிப்பாங்க. " வினோத்தின் பேச்சியில் உருவேறிய கிருபாவின் வார்த்தைகள் தானாய் வந்து உதிர்ந்தன.

" இன்னைக்குதாண்டா உன் படிப்புக்கு ஏற்ற மாதிரி பேசியிருக்க. " என்ற ருத்ரன் " ஆனா.....இதெல்லாம் சாத்தியமானுதான் தெரியல " என்று அவநம்பிக்கையை வெளிபடுத்தினான்.

" யேன் சாத்தியமில்ல, நிறைய சிங்கள ஆட்கள் சின்ன எடத்துலயும் தேயில போட்டுவாங்க. முன்னமே சூதானமா காணி வாங்கி வச்ச ஒரு சில தமிழர்கள் கூட தேயிலை காணி செய்றாங்கதான். அவங்களாம் அந்தியிலயும் லீவ் நாள்ளயும் காணியிலதான் இருக்காங்க. அந்த ஒரு சிலர் என்றது முழு சமூகமாகவே மாறனும் என்றததான் இப்ப வினோத் சொல்றான். என யாத்ரா சொன்னதும் ருத்ரணின் அவநம்பிக்கை தூரமாய் ஓடிவிட்டது.


" சொந்த நிலம் வாங்குறதுக்காக இலங்கைக்கு வந்த நம்ம இலட்சியம் இதுவரை நிறைவேறாமல் இருந்துருக்கலாம். இனி படிச்ச பிள்ளைகளால நிறைவேறும். கல்வி மட்டுமே நம் கருவி" என்றாள் யாத்ரா.

....விஞ்ஞானம் தீண்டா கலைகள் தொடரும்....
 
  • Like
Reactions: kkp46

kkp46

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
7
6
63
Tamilnadu
யாத்ரா சொல்வதே சரி... கல்வி ஆயுதமே எதிர்த்து போராடவும், நிமிர்ந்து நிற்கவும் செய்யும்!
 
  • Like
Reactions: kkp 52

kkp 52

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 7, 2023
46
27
18
Tamilnadu
ஆமாம். மிக்க நன்றி.
 
  • Like
Reactions: kkp46