பகுதி – 29.
ப்ரதிக் வாசல் கதவை தட்டவே, அவனுக்கு கதவைத் திறந்துவிட்டவன், திடுமென தள்ளாடி விழ, ப்ரதிக் பதறிப் போனான்.
“ஆகாஷ்...” தன் கையில் இருந்த தட்டை தரையில் வைத்தவன், அவனைத் தாங்கிக் கொள்ள, வேகமாக அவனைத் தடுத்தவன், பின் படிக்கட்டுவழியாக இறங்கி ஓடினான்.
“அண்ணா... என்ன?” உள்ளே இருந்து பூமிகாவின் குரல் கேட்கவே,
“ஒன்னும் இல்லம்மா... ஆகாஷ்க்கு சாப்பாடு எடுத்துட்டு வந்தேன்...” சொன்னவன் அதை உள்ளே கொண்டு வைத்துவிட்டு, அவள் மேலே எதுவும் கேட்கும் முன்பு, ஆகாஷைத் தேடி ஓடினான்.
அவன் அங்கே தென்னந்தோப்புக்குள் செல்கையிலேயே, ஆகாஷின் அலறல் சத்தமும், சிவாவின் குரலும் ஒருங்கே கேட்க, உள்ளுக்குள் ஓடினான்.
அவன் அவர்களைக் காண்கையில், “ஆ...” அலறிக் கொண்டிருந்த ஆகாஷ், தன் வாயில் துணியை வைத்து அழுத்தமாக கட்டிக் கொள்ள, இப்பொழுது அவனது அலறல் குறைந்தாலும், அவன் வலியில் துடிப்பது தெரிய, வேகமாக அவனை நெருங்கினான்.
“சிவா... என்னடா...?” ப்ரதிக் அவனிடம் கேட்க,
“உனக்குத் தெரியாதா?” கேட்டவன், தன் நண்பனை இறுக கட்டிக்கொண்டு அவனை அடக்கினான். அப்படியும் ஆகாஷ் தலையைப் பற்றிக்கொண்டு துள்ளி துடிக்க, அவன் காதில் இருந்து வழிந்த ஒற்றைத்துளி ரத்தம் மற்றவர்களை பதறச் செய்தது.
“சிவா... ரத்தம்டா...” ப்ரதிக் கத்த,
“உடனே ஹாஸ்பிடல் போயாகணும், ஆம்புலன்சுக்கு தூக்கு...” சிவா அவசரப்படுத்த, ப்ரதிக் அவனைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டான்.
மறு நிமிடத்தின் துவக்கத்தில் அவன் ஆம்புலன்சில் இருக்க, சிவாவோ... வீட்டுக்குள் பாய்ந்து சில ஃபயில்களோடும், அலைபேசியில் யாரிடமோ உரையாடியவாறு ஆம்புலன்சில் வந்து ஏறினான்.
ஆம்புலன்ஸ் கிளம்பும் ஓசையில் அனைவரும் வெளியே வந்து பார்க்க, “தேனு... பூமி... பூமி...” வலியில் கதறிக் கொண்டிருந்தவன், வாய் கட்டை அவிழ்த்து, அவளிடம் சொல்ல, அவளோ ஸ்தம்பித்து போயிருந்தாள்.
‘என்ன...?’ என்ற விளக்கமோ, கேள்வியோ கேட்கும் முன்பு ஆம்புலஸ் கிளம்பி இருக்க,
“நானும் ஹாஸ்பிடல் போறேன்...” சொன்ன நித்யானந்தம் காருக்கு ஓட, காவேரி படியிலேயே அமர்ந்து அழத் துவங்கி இருந்தார்.
பிரபாவை தேன்மொழி பார்க்க, “நீ அவளைப் போய் பாரு... போ...” சொன்னவர், தானும் காவேரியின் அருகே அமர்ந்தார்.
“நாம ஒன்னு நினைச்சா, கடவுள் ஒன்னு நினைக்கறார்...” அவர் சொல்ல, காவேரி புடவைத் தலைப்பை வாயில் திணித்துக் கொண்டார்.
தேன்மொழிக்கோ எதுவும் புரியாத குழப்பத்தில் அறைக்குச் செல்ல, அவளைப் பார்த்த பூமிகாவின் கண்கள், தன்னவனைத்தான் எங்கே எனத் தேடியது.
‘அவரை எங்கே?’ பூமிகா கேட்க, அவளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.
“எங்கேயோ வெளியே போயிருக்காங்க... வந்துடுவாங்க...” அவள் சொல்ல,
‘இப்போவா? என்னை விட்டுட்டா? இருக்காதே...’ என எண்ணியவள், இமைகளை மூட, அதன் பிறகு பூமிகா கண் விழிக்கவே இல்லை.
***அடுத்த இரண்டு நாட்கள்... ஆகாஷ் கோமாவுக்கு சென்றுவிட்டான் என்ற செய்தி, பூமிகாவை எட்ட, வென்டிலேட்டரின் உதவியோடு சுவாசித்திருந்தவளுக்கு எதுவும் ஏறவில்லை.
ஆகாஷின் பெற்றவர்கள், உடன்பிறந்தவன் என அனைவரும் அங்கே வந்திருக்க, அவர்கள் மூலமாக உண்மைகளைத் தெரிந்துகொண்ட தேன்மொழிக்கு உச்ச அதிர்ச்சியே.
ஆகாஷ் என்பவன்... ஆகாஷே இல்லை... ‘விஷ்வா’ என்பதும், பிரபலமான இளம் வயது எடிட்டர் என்ற பெயரும், திறமைசாலியும், பல விருதுகளைப் பெற்றவனும் என்ற செய்தியும், அவனுக்கு மூளைக்கட்டி என்ற உண்மையும், இது அவனது இறுதி உறக்கமாக கூட இருக்கலாம் என்ற சேதியும் கிடைக்க, அவள் தோழிக்காக பார்க்கவா? அவனுக்காக பார்க்கவா?
“அறிவு... என் புள்ளை இப்படி கிடக்கானேடா... இதைப் பார்க்கவா வந்தேன்?” வடிவு அழ,
“அம்மா, அண்ணா சந்தோஷமா இருந்திருக்கானே... அது போதாதா? சும்மா இருங்க. இப்படியே நீங்க அழுதுட்டு இருந்தா, இங்கே இருந்து கூட்டி போய்டுவேன்...” அவன் மிரட்ட, அது சரியாக வேலை செய்தது.
சிவாவும், காவேரியும், ஆகாஷின் (விஷ்வா)வின் வருகை, அவனது கோரிக்கை, பிடிவாதம், விளையாட்டு, கூடவே பூமிகாவைப் பற்றி என அத்தனையையும் சொல்ல, சில மாதங்களாக காணாமல் போயிருந்த மகனின் வாழ்க்கையில், சிறு சந்தோஷமும், நிம்மதியும் பூமிகாவால் இருந்திருக்கிறது எனத் தெரிந்தவருக்கு பெருத்த நிம்மதி.
விஷ்வாவின் கதையைக் கேட்டு அனைவருக்குமே வருத்தம்தான். ஆனாலும் அவனைப் பார்த்த அன்றே ப்ரதிக்கிற்கு ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, அவனைப்பற்றி அறிய முயன்று, அனைத்து விஷயங்களும் அவர்களுக்கு முன்பே தெரிய வந்திருந்தது.
‘விஷ்வா’ என்னும் எடிட்டர், திரையுலகில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் மொத்தமாக கண்காணாமல் போய்விட்டான்’ என்பது சினிமா வட்டத்தில் செய்தியாக இருக்க, ப்ரதிக்கோ நேராக அவனது ஸ்டுடியோவில் சென்று நின்றான்.
அங்கே அவன் வாசுதேவனையும், முருகனையும் சந்தித்து ஆகாஷ் என்னும் விஷ்வாவைப் பற்றி கேட்க, முதலில் தயங்கினாலும், பிறகு அவனது உடல்நிலையைக் குறித்து சொல்லியிருக்க, அதை அப்படியே தன்னைப் பெற்றவர்களிடம் வந்து சொல்லிவிட்டான்.
அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி என்றாலும், ‘இதுதான் விதியோ?’ என எண்ணி தங்களை தேற்றிக் கொண்டார்கள். அதன்பிறகே அவர்களுக்குள் இருந்த குற்றவுணர்வும், தயக்கமும் அவர்களை விட்டு அகன்று இருந்தது.
விஷ்வா கோமாவுக்கு சென்றுவிட்டான் எனத் தெரியவே, ‘அவன் கண் விழிப்பானா?’ என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.
பூமிக்கு பன்னிரண்டு மணிநேரம்தான்.... என மருத்துவர் சொல்லியிருந்த பூமிகாவோ, தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உயிர் இழையோட காத்திருப்பது அதிர்வாக இருந்தது.
இரு குடும்பமும் சென்று நின்றது மருத்துவரிடம்தான்... அங்கே இருந்த இதய நிபுணரும் சரி, நியூரோ ஸ்பெஷலிஸ்ட்டும் சரி, சொன்ன விஷயம் ஒன்றுதான்...
‘கடவுள் ஏதாவது அதிசயம் செய்தால் இருவரும் கண் விழிக்கலாம். இல்லையா, அவன் கோமாவிலேயே இறுதி பயணத்தை துவங்கலாம், அவளது வெண்டிலேட்டர் நீக்கப்பட்டவுடன் அவளது இதயத்துடிப்பு நிற்கலாம்’.
அவர்களது இந்த பதிலைக் கேட்ட பிறகு, இருவரையும் மேலே சிகிச்சைக்கென எங்கேயும் கொண்டுசெல்ல கூட அவர்களால் நினைக்க முடியவில்லை.
அனைவரும் அமைதியாக இருக்கவே, “டாக்டர், அண்ணாவோட இந்த நிலைமைக்கு என்ன காரணம்? இதுக்கு முன்னாடியும் ஒரு வாரம் கோமாவில் இருந்து அண்ணா ரெக்கவர் ஆகி இருக்காரே” அறிவு தன் சந்தேகத்தை அவரிடம் கேட்க, அனைவரின் பார்வையும் ஒரு எதிர்பார்ப்போடு அவரை ஏறிட்டது.
“சாரி டூ சே திஸ்... உங்க அண்ணாவோட டியூமர் பாதி வெடிச்சிருச்சு... ஆனா அவர் எப்படி சர்வைவ் ஆகறார் என்பதுதான் எங்களுக்கு ஆச்சரியமே. மிச்சமும் முழுசா...” அவர் சொல்ல முயல,
“போதும் டாக்டர்...” சொன்னவன் வெளியே வர, சிவா அவனை எதிர்கொண்டான்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்... இந்த நாலு மாசமா என் அண்ணாவை நீங்க பார்த்துகிட்டதுக்கு, தேங்க்ஸ்ங்கற வார்த்தை போதாது, ஆனாலும் என்னால் இப்போ அதை மட்டும்தான் சொல்ல முடியும்” நெகிழ்ந்து கிடந்தவன், சிவாவின் கரத்தைப் பற்றி நெற்றியில் வைத்துக் கொண்டான்.
“உங்க அண்ணாவுக்காக இல்ல... என் ஃப்ரண்ட்டுக்காக நான் செய்தேன். நானும் அவனும் ஒரே காலேஜ்... ரெண்டு வருஷம் கூட முழுசா படிக்கலைன்னாலும், நாங்க அப்போவே கொஞ்சம் திக் ப்ரண்ட்ஸ் தான்.
“பல வருஷத்துக்கு பிறகு, திடீர்ன்னு ஒரு நாள் நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷன்ல அவனைப் பார்த்தப்போ, எனக்கு சுத்தமா அடையாளமே தெரியலை. ஒரு சந்தேகத்தில் பேசினா, அவன்தான்னு தெரிஞ்சது...
“அவன்கிட்டே பேசிப் பார்த்த பிறகு, அவன் எல்லா விஷயத்தையும் சொல்லவே, அவனை அங்கே தனியா விட்டு வர என்னால் முடியலை. பிடிவாதமா அவனை நான் என் வீட்டுக்கு கூப்ட்டப்போ, அவன் தயங்கவே, அவனை புது மனுஷனா மாத்த நான் அவனுக்கு வச்ச பேர் தான் ‘ஆகாஷ்...’.
“இப்படி இருக்கறவங்களுக்கு இரக்கப்பட்டா பிடிக்காதுன்னு எனக்கு கொஞ்சம் தெரியும். சோ... நானும் அம்மாவும் அவனைப்பத்தி பெருசா எதையும் நினைக்காமல், காட்டிக்காமல் அவனோட இருந்தோம்.
“அப்படியும் சில முறை அவனோட இந்த வலி, வேதனை எல்லாம் அதிகமாகும்போது, ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகச் சொல்லி சத்தம் போடுவேன். அப்போ எல்லாம், பூமிகாவை காரணம் காட்டி அவன் மறுக்கும்போது ரொம்ப கோபம் வரும்.
“கொஞ்ச நாள் முன்னாடி கூட, அவன் காணாமல் போயிருந்தது இந்த வலியால் தான். தொடர்ந்து தாங்கவே முடியாத வலி... இங்கேதான் வந்து அட்மிட் ஆகி இருந்தான்” சிவா சொல்லச் சொல்ல, அனைவரும் அமைதியாக கேட்டுக் கொண்டார்கள்.
“எங்க பூமியை பார்த்துக்க முடியாதுன்னு அப்போ சொன்னீங்க. உங்க ப்ரண்ட்டுன்ன உடனே அவருக்காக பாத்தீங்களா?” தேன்மொழி பட்டென அவனிடம் கேட்க, அவனோ மெல்லியதாக புன்னகைத்தான்.
“விஷ்வாவை ஒன்னும் என் பொண்டாட்டியா இங்கே கூட்டி வரலை. அதே மாதிரி, இருபத்திநாலு மணி நேரமும் நான் அவனை பார்த்துகிட்டேவும் இருக்கலை. உங்களுக்கே தெரியும்...” அவன் சொல்ல, அதில் இருந்த உண்மை புரியவே அமைதியானாள்.
“இப்போ இதுக்கு என்னதான் முடிவு...?” அறிவு கேட்க,
“முதல்ல அவங்களை இப்படி தனித்தனி இடத்துல வைச்சிருக்கறத்தை மாத்தணும். அவங்களை ஒண்ணா விடுங்க... எனக்கென்னவோ அதுதான் தோணுது” தேன்மொழி சொல்ல, அனைவருக்கும் அதுதான் சரியெனத் தோன்றியது.
அடுத்த இருபத்திநான்கு மணி நேரத்தில், இருவரையும் ஒரே ஐசியூவுக்கு மாற்ற, அடுத்ததாக அதிசயம் நேர காத்திருந்தார்கள்.
இங்கேயும் ஒரு அதிசயம் நேரவே செய்தது... வழக்கமாக வென்டிலேட்டரில் இருக்கையில், பூமிகா எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டுவது இல்லை.
ஆனால் இப்பொழுது... முதல் முறையாக அவனோடு அறைக்கு மாற்றிய பிறகு, அவளது கடைவிழியோரம் கண்ணீர் வழிந்துகொண்டே இருக்க, தேன்மொழி அவளது கரத்தை கெட்டியாக பற்றிக் கொண்டாள்.
“பூமி, அழாத... அவர் உன் கூடத்தான் இருக்கார்...” அவள் சொல்ல, பூமிகாவிடம் சிறு அசைவு தெரிந்தது.
‘என்னை தனியா விட்டு போய்டாத...’ ஆகாஷின் (விஷ்வாவின்) குரல் தன் காதுக்குள் ஒலிக்கும் உணர்வு. அந்த குரல்தான் அவளை இந்த உலகின் பயணத்தில் இருந்து செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.
இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க... அனைவரின் நம்பிக்கையும் கரையத் துவங்கி இருந்தது.
பூமிகாவின் பெற்றவர்களைத் தேடி வந்த மருத்துவரோ... “நீங்க என்ன முடிவு செய்து இருக்கீங்க? அவங்களுக்காக அந்த ‘வென்ட்’ தான் சுவாசிக்குது. அதை ரிமூவ் பண்ணா அவங்க... சர்வைவ் ஆக மாட்டாங்க... சோ...” முடிவை சீக்கிரம் எடுங்கள் என சொல்லாமல் சொல்லிச் செல்ல, தேன்மொழிதான் கதறித் தடுத்தாள்.
“இல்ல... பூமி உயிரோடதான் இருக்கா... அவளை கொல்ல நான் விட மாட்டேன். அவங்க ரெண்டுபேரும் இப்படியே இருந்து போக மாட்டாங்க..” அவள் அழுது கரைய, ப்ரதிக் அவளைத் தாங்கிக் கொண்டான்.
“இது நாம அவளுக்கு செய்யற கொடுமை மொழி...” தங்கையை நாளுக்குநாள் கஷ்டப்படுத்துவது அவனுக்குப் புரிகிறதே.
“இல்ல... அவ சந்தோஷமா சாகணும், இப்படி அழுதுட்டே இல்ல” அவள் கத்த, அனைவரின் கண்களும் கலங்கியது.
“இப்போ என்னதான் செய்யணும்னு சொல்ற?” அவன் கேட்க,
“அவர் இருக்கற வரைக்கும் அவ இருக்கட்டும்... அவளே போய்ட்டா எப்படியோ, ஆனா... இதுக்கு நான் விட மாட்டேன்” அவள் பிடிவாதம் பிடிக்க, யாரும் எதுவும் செய்யவில்லை.
சில பல நிமிடங்கள் கடக்க, ஐசியூவிற்கு சென்றவள், நேராக சென்று நின்றது விஷ்வாவிடம் தான்.
“ஹல்லோ... நீங்க உங்க மனசுக்குள்ள என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க? அவளை கஷ்டப்படுத்த விட மாட்டேன்னீங்க, இப்போ... அவளை அழ வச்சு பார்க்கறீங்களா? அவ அழுதுட்டே இருக்கா, நான் சொல்றது உங்களுக்கு கேக்குதா?
“அவ அழறான்னு சொன்னேன், ஒழுங்கா அவகிட்டே பேசுங்க... இப்போ நீங்க பேசலன்னா, கண்ணு முழிச்சா உங்களை நீங்களே கூட மன்னிக்க மாட்டீங்க” அமைதியாக உணர்வற்று படுத்திருந்த அவனிடம் அத்தனையாக கோபம் காட்டிவிட்டு வெளியேறி இருந்தாள்.
அங்கே இருந்த செவிலி அவளைத் தடுக்க முயன்றதை எல்லாம் அவள் கணக்கில் கொள்ளவே இல்லை.
அந்த நேசம் கொண்ட நெஞ்சங்களை மிக அருகே இருந்து பார்த்து இருக்கிறாள். இப்படியான ஒரு பிரியாவிடையை அவர்கள் வாங்குவதை அவளால் ஏற்க முடியாமல் திண்டாடிப் போயிருந்தாள்.
மறுநாள் மருத்துவர் ஒருவர் பூமிகாவின் உடல்நிலையை பரிசோதிக்க வர, மெதுவாக கண் விழித்தவள், தன் வெண்டிலேட்டரை அகற்றச் சொல்லி செய்கை செய்ய, அவர் பயிற்சி மருத்துவர் என்பதால் செவிலியைப் பார்க்க, அவள் மருத்துவரை அழைத்துவர ஓடினாள்.