• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரமாய் வந்தவளே ❤️ (பாகம் 1)

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52
இடைவேளை மணி ஒலித்ததும் தத்தமது உணவுத்தட்டை எடுத்துக் கொண்டு சாப்பாட்டு வாளியின் முன் அணிவகுத்து நின்றனர் அவ்வகுப்பு மாணவர்கள். எப்போதும்போல் கடைசியாக நின்றிருந்த நம் அபிமன்யுவிற்கு ஏழு வயது. எப்போதும் போலவே, மற்றவர்களை விடச் சற்று அதிகமாகவே அவனது தட்டில் உணவிட்டார் வகுப்பாசிரியை செல்வி. வழமை போலவே அவனது கண்கள் இன்றும், செல்வியைத் தன் கடவுகளாகவே பார்த்தன. பசியின் கொடுமையை உணர்ந்தவனுக்குத்தானே சாப்பாட்டின் அருமை தெரியும்! அபிமன்யுவின் உச்சத் தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஏழையின் தன்மை தெரிந்தது. எப்போதும் சற்று அழுக்காகவே இருக்கும் அபிமன்யுவை ஏனைய சிறுவர்கள் அவ்வளவு அண்டுவதில்லை. பாவம் அவர்களும் குழந்தைகள் தானே? ஆனால் சமீப காலமாக ஏனைய மாணவர்களும் தன் மீது அன்பு செலுத்துவதை அபிமன்யு சற்று உணர்ந்தான். அதற்கான காரணம் தெரியாவிட்டாலும், அவர்கள் தன்னை ஏற்றுக் கொண்டது சந்தோசமாகவே இருந்தது அவனுக்கு. அமைதியாக உணவருந்திக் கொண்டிருக்கும் ஏனைய மாணவர்களிடையே, பல நாள் பட்டினி கிடந்தவன் போல உணவுண்ணும் அபிமன்யு சற்று விசித்திரமாகவே தோன்றினான் ஆசிரியை செல்விக்கு.

செல்வி இந்த வகுப்பாசிரியையாகி கிட்டத்தட்ட ஒரு கிழமையே முடிந்திருந்தது. முடிந்தவரை இந்த ஒரு கிழமையில் மாணவர்களை நன்கு புரிந்துகொள்ள முயன்ற செல்விக்கு, இந்த அபிமன்யு மடடும் ஒரு புரியாத புதிர். ஏனைய மாணவர்கள் மத்தியில் அவனைத் தனியே அழைத்து, மற்றவர்களுக்கு அபியைக் கேலிப் பொருளாக்க விருப்பமில்லை அவருக்கு. ஆனால் மற்றவர்கள் அறியாமல் அபியுடன் தனியாகக் கதைக்கும் சந்தர்ப்பம்தான் அவருக்குக் கிடைக்கவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக அபியையும் ஒரு சாதாரண குழந்தையாக வாழ வைக்க வேண்டுமென்ற எண்ணம் அவருள் துளிர் விட்டது. இந்த ஒரு கிழமையில் பார்த்ததில் படிப்பிலும் அபி சற்று மட்டமாகவே இருப்பது போல் தோன்றியது. எது எவ்வாறெனினும் அவனுடன் மனம் விட்டுக் கதைத்து, அவனுடைய பிரச்சினையை அறிந்து அவனுக்கு நல்ல வழிகாட்ட வேண்டுமென உறுதி பூண்டுகொண்டிருந்தவருக்கு.... அன்று பிற்பகலே அந்த சந்தர்ப்பம் கிட்டியது.

சிறுவர்களாதலால் இறுதி இரண்டு பாடங்களும் அவர்களுக்கு விளையாட்டுத்தான். அன்றைய விளையாட்டு நேரத்தில் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடச் செய்து... ஒவ்வொரு மாணவனும் எதில் திறமைசாலி எனக் கண்டறிய வேண்டுமென நினைத்தார் செல்வி. முதலில் நாயும் இறைச்சியும் விளையாடச் சொல்லிக் கொடுத்தார். சிறுவர்கள் தானே. ஒரு சிலரைத் தவிரப் பெரும்பாலானவர்கள் சரியாக விளையாடவில்லை என்றே கூறலாம். ஆனால் விளையாட வைத்ததன் மூலம் அவர்களது ஒற்றுமை, சகிப்புத் தன்மை மற்றும் திறமை எந்த மட்டிலுள்ளது எனக் கணித்துக் கொண்டார்.
ஓட்டப் போட்டி வைத்தார். அதில் எந்த மாணவன்/மாணவி திறமையானவர் எனக் கணித்துக் கொண்டார். இவ்வாறு ஒவ்வொரு விளையாட்டாக விளையாட வைத்து ஒவ்வொருவரது திறமையையும் அறிந்த போதிலும், நம் அபிமன்யு விளையாட்டிலும் சற்றுப் பின் தங்கியிருந்ததாகவே தோன்றியது அவருக்கு. அவன் பின்தங்கியிருந்தான் என்பதை விட, அவனுக்கு எதிலும் ஆர்வமில்லை என்பதே உண்மை. ஆனால் நிச்சயம் எல்லோரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும். அபியிடமும்தான். அதை உணர்ந்து வெளிக் கொண்டுவர வேண்டுமென்ற எண்ணம் செல்வியினுள் உயர்ந்து நின்றது.

அன்றைய இரு விளையாட்டுப் பாடங்களும் முடிந்து வகுப்பறை செல்லும்போதும், விளையாடிய குஷியில் அனைத்து மாணவர்களும் உற்சாகமாகவே அணிவகுத்தனர். அவர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு அணி வகுத்ததில், ஏற்கனவே வரிசையில் நின்றிருந்த அபி சற்றுப் பின் தள்ளப்பட்டான். ஆனால் அவன் கோபப்படவோ, முகம் சுளிக்கவோ இல்லை, மாறாகத் தானாகவே நின்று வரிசைக் கடைசியில் நின்று கொண்டான். இதையும் கவனிக்கத் தவறவில்லை அவனது வகுப்பாசிரியை. "பொறுமையின் சிகரம்" என எண்ணிக் கொண்டார்.

எல்லா மாணவர்களும் அணி வகுத்து வீடு சென்றிருக்க, வகுப்பறையைப் பூட்டிக் கொண்டு புறப்பட்டார் செல்வி. இன்றும் அவனிடம் கதைக்க முடியாது போயிற்று என நொந்து கொண்டே சென்றவருக்கு எதிரே, "கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல" வந்து சேர்ந்தான் அபி. அவனைப் பார்த்து உற்சாகம் கொண்டவர், 'ஹே அபி! என்ன பண்ற, இன்னும் போகலயா?' என நட்பாக வினவ, 'இல்ல மிஸ். புதுக் கலர்ப் பெட்டி வாங்கினன். அதை டெஸ்க்குக்குள்ளயே விட்டிட்டுப் போய்டன். இப்போதான் ஞாபகம் வந்திச்சு. அதான் எடுத்திட்டுப் போலாம்னு வந்தன்' என மெல்லிய குரலில் மிழற்றினான்.

'ஓஓ, அப்பிடியா? நான் கிளாஸப் பூட்டிட்டு வந்திட்டன். வா. நாமளே போய் எடுத்திட்டு வருவம்.'

'இல்ல இல்ல, நீங்க பூட்டீட்டு வந்திட்டாப் பிரச்சினை இல்லை மிஸ். நான் வேணும்னா நாளைக்கு எடுத்துக்கிறன். பிரச்சினை இல்லை.'

'பரவாயில்லை வா. எடுத்திட்டு வருவம்.'

'உங்களுக்குக் கஷ்டம் மிஸ்'

'அடேய் பெரிய மனுஷா! எனக்கொரு கஷ்டமும் இல்லை. நீ வா. போய்ட்டு வருவம்.' கூறியபடி அபிமன்யுவையும் அழைத்துக் கொண்டு சென்றார் செல்வி.

தன்னருகே மெல்ல நடைபோடும் அபியை, சற்று நிதானமாகவே எடை போட்டார் செல்வி.
கருகருவென சுருள் சுருளாக இருந்த முடி; அது எண்ணெயைக் கண்டு மாதக் கணக்காகியிருக்கும் போல. பரட்டையாக இருந்தது, முகம்; முடிக்குச் சற்றும் சளைக்காத கறுப்பு நிறம்; சிரித்தால் சற்றுப் பொலிவாக இருக்குமோ என எண்ணத் தோன்றியது, வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டிய ஷேர்ட்; பழுப்புக் கலரில் இருந்தது. நீல நிறக் காற்சட்டை; அது வெளிறிப் போயிருந்தது, காலில் சொக்ஸ்; இரண்டு காலுக்கும் வேறு வேறு ஜோடி சொக்ஸ்களில் ஒவ்வொன்றைத் தேர்ந்தெடுத்துப் போட்டிருப்பான் போல; ஒன்று முழங்காலைத் தொட்டிருக்க, மற்றையது அதன் அரை உயரத்தில் நின்று சிரித்தது, காலில் சப்பாத்து; முன்பகுதி பிய்ந்து அவனது கால்கள் எப்போதடா வெளிவருவோமென நின்றிருந்தது.

'இவ்வளவு ஏழ்மையா இவனுக்கு? இவனைக் கவனிக்க ஒருவருமே இல்லையா? ஏன் இவ்வளவு பின் தங்கிய நிலையில் இருக்கிறான்? கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இவனை நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும்' என எண்ணிக் கொண்டிருந்த செல்விக்கு சட்டெனப் பொறி தட்டியது.
'ஏன் அபி, நீ படம் நல்லா வரைவியா? கலர் சோக் வொக்ஸ் எடுக்கத்தானே கிளாஸ்கு வாற?'

'கலர் சோக் வொக்ஸ் எடுக்கத்தான் வாறன் மிஸ். ஆனா அது எனக்கில்ல. என் தங்கச்சிக்கு. அவ நல்லாப் படம் வரைவா. எனக்கு படம் வரைய வராது. ஆனாப் பிடிக்கும். இப்போ தங்கச்சிக்கிட்ட கேட்டுப் பழகிட்டிருக்கன். அவளுக்குத்தான் கலர்ச் சோக் பெட்டி வாங்கினன். அவளுக்குப் படம் வரைஞ்சு கலரடிக்கிறது ரொம்பப் பிடிக்கும். கலர் கலராக் காய்க்கிற மாதிரி ஒரு குட்டி மரம் இருக்குல? மழைகாலத்தில வருமே; அது. அதோட காயைப் பிடுங்கித் தான் கலரடிப்பா. ஆனா அது அவ்ளோ நல்லா இருக்காது. அவ வரைஞ்ச படத்தையே கெடுத்திடும். அதனால தான் கொஞ்ச கொஞ்சக் கொஞ்சமா காசு சேர்த்து அவளுக்குக் கலர்ச் சோக் பெட்டி வாங்கினேன். நாளைக்கு அவளுக்கு பர்த்டே. நான் பரிசாக் குடுக்கப் போறேன்.'
செல்விக்கு நெகிழ்ந்தது. வெறும் ஏழே வயதான அவனுக்கு, இப்படிக் கூடப் பாசம் வைக்கத் தெரியுமா என்றிருந்தது அவருக்கு.

'உண்மையாவே ரொம்பக் குடுத்து வைச்சவப்பா உன் தங்கைச்சி. ஆமா உனக்கு யார் தந்த காசைச் சேர்த்து வச்சு தங்கச்சிக்கு கிஃப்ட் வாங்கின?'

'நான் தான் வேலைக்குப் போறனே, அங்க தர்ற காச சேர்த்து வச்சு வாங்கினேன்.' என அவன் கூறிய பதிலில் அதிர்ந்து நின்றார் செல்வி.

தொடரும்....

(வழமைக்கு மாறாக காதல் கதை ஒன்றை முயற்சி செய்யலாமென நினைத்து எழுதத் தொடங்கிய தொடர் இது. இதற்கும் உங்கள் ஆதரவு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி ☺️🙏)
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,942
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️ஆரம்பமே மங்களகரமா பாசமலர்களை அறிமுக படுத்திடீங்க, சூப்பர் சூப்பர் சகி 😍😍😍😍😍😍😍😍😍
 

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52
அடுத்த epi க்கு waiting சகி starting epi செம செம சகி 😍😍😍😍😍😍
அடுத்த epi க்கு waiting சகி starting epi செம செம சகி 😍😍😍😍😍😍
ரொம்ப நன்றிம்மா..... சீக்கிரமே போட்டிடுவோம்..... இன்னைக்கு நைட் வரும் சிஸ்.
 
Top