• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரமாய் வந்தவளே ❤️ (பாகம் 2)

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52
'நீ.. நீ வேலைக்குப் போறியா அபி?', நடுங்கலாக வெளிவந்தது வார்த்தைகள். கிட்டத்தட்டச் சித்திரவதை போன்றதல்லவா இது. வெறும் ஏழே வயதான குழந்தைக்கு என்ன வேலை கொடுத்து விட முடியும், என அறியும் ஆர்வம் வேறு.
'ஆமா மிஸ். அம்மாக்கு உடம்புக்கு முடியாம ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கம். அம்மாக்கு முடியாமப் போனதுக்கப்புறம் அப்பா வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். அவங்க வேற வீட்ல இருக்காங்க. தங்கச்சிக்கு அஞ்சு வயசு. அவ வீட்டுக்குப் பக்கத்திலயே நர்ஸரி போறா. பக்கத்து வீட்டு அஸ்வதி ஆன்டி தான் எங்களைப் பாத்துப்பாங்க. நைட்ல எங்க கூடத் தங்கிட்டுக் காலைல போய்டுவாங்க. காலமை சாப்பாடும் தருவாங்க. ரெண்டு பேருக்குத் தேவையான சாப்பாடு தருவாங்க. அதில தங்கைச்சிக்கு சாப்பிடக் குடுத்திட்டு மிச்சத்த அவ ஸ்கூல் போகும் போது குடுத்து விடுவன்.'
'அப்போ உனக்கு?'
'எனக்குத்தான் இங்க சாப்பாடு கிடைக்குமே. நீங்கதான் நிறையத் தருவீங்களே. சாப்பிட்டு மிச்சத்த வீட்ட கொண்டு போவன். அதை நானும் தங்கைச்சியும் ஷியார் பண்ணிப்போம்.'
'நீ எங்க வேலைக்குப் போற?'
'சித்தி வீட்டுக்கு. அவங்க வீட்டுல குட்டிக் குட்டி மரங்களுக்குத் தண்ணி ஊத்துவன். கல்லுப் பொறுக்குவன். கஷ்டமான வேலை ஒண்ணும் தர மாட்டாங்க.'
'எவ்ளோ காசு தருவாங்க?'
'ஒரு நாளைக்கு அம்பது ரூபாத் தருவாங்க. அப்பப்போ அப்பாவும் பத்து இருபது ரூபாத் தருவார். '
'அதை என்ன பண்ணுவ?'
'தங்கச்சிக்கு சூ, சொக்ஸ், புக்ஸ் எல்லாம் வாங்குவன்.'
'தங்கச்சினா அவ்ளோ பிடிக்குமா?'
'எனக்குனு அவ மட்டும் தானே இருக்கா?'
'உனக்குனு நான் இருக்கேன்' என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது செல்விக்கு. ஆனால் சிறுவன் எந்த அளவுக்குப் புரிந்து கொள்வானோ தெரியாது.
'நீ எனக்கு ஒரு உதவி செய்வியா?'
'கண்டிப்பா மிஸ்.'
'இனிமே நீ எங்க வீட்டுக்கு வேலைக்கு வாறியா?'
'----'
'ஒரு நாளைக்கு நூறு ரூபாத் தாறன்டா'
'----'
'தங்கைச்சிக்கு மட்டுமில்ல; உனக்கும் சேர்த்து எல்லாம் வாங்கிக்கலாம். இம்முறை முகம் ஒருநொடி பிரகாசமாகிப் பின் அமைதியானது.
'என்னடா?'
'இல்ல மிஸ். சித்தி வீட்டிலதான் இவ்ளோ நாள் வேலை செஞ்சேன். அங்கேயே இருந்துக்கிறேன்.'
'சித்தினா யாரு? அம்மாவோட தங்கைச்சியா?'
'இல்ல மிஸ். அப்பாவோட ரெண்டாவது மனைவி.'
தனது வீட்டிலேயே சொந்தப் பிள்ளையை வேலை வாங்கும் தந்தையை நினைக்க கொலைவெறி வந்தது செல்விக்கு. 'உங்கப்பாகிட்ட நான் பேசுறன். நீ நாளைல இருந்து என் வீட்டுக்கு வா.'
'அப்பா உங்ககிட்ட சொன்னன்னு தெரிஞ்சா அடிப்பார் மிஸ்.'
'பேச வேண்டிய விதத்தில நான் பேசுறன்.'
'சரி மிஸ். அப்போ நான் நாளைக்கே வரவா?'
'சரி வா.'
'என்ன வேலை தருவீங்க எனக்கு?'
சற்றுக் கூடுதலான பணம் கிடைக்கப் போகும் சந்தோசத்திலோ என்னமோ, உற்சாகமாகவே கேட்கும் குழந்தையைப் பார்த்துக் கண்கள் பனித்தது செல்விக்கு.
'படிக்கணும். அது தான் உன்னோட வேலை. அதோட ஒரு மணி நேரம் உற்சாகமா விளையாடணும். ரெண்டும் பண்ணினா உனக்கு நான் நூறு ரூபாத் தருவேன். அதைக் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு.... உன்னோட தங்கைச்சிக்கு மட்டுமில்ல உனக்கும் சேர்த்து எல்லாம் வாங்கிக்கோ.'
'ம்ம். ஆனா இதனால உங்களுக்கு என்ன கிடைக்கும்?'
இந்தக் கேள்வியை எதிர்பார்க்காவிடினும் சட்டெனச் சுதாகரித்துக் கொண்டார் செல்வி. 'நீ நல்லாப் படிச்சு வந்தா.... அதுக்கு நான் தான் காரணம்னு எல்லார்கிட்டவும் சொல்லுவேன். அப்போ நானும் ஃபேமஸ் ஆகிடுவன்ல. அதுதான்.'
சும்மா வாயில் வந்ததை அடித்துவிட்டார்.

'அப்போ சரி. நான் நாளைக்கே வாறன்.'
உற்சாகமாகப் பதிலளித்தான் அபி. இப்போதுதான் முதன்முதலில் அபி சந்தோசமாகச் சிரிப்பதைப் பார்க்கிறார் செல்வி.
இருவரும் கலர்ச் சோக் பெட்டியை எடுத்துவிட்டு வெளியில் வந்தாயிற்று. செல்வியிடம் சொல்லிவிட்டு, துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டாவெனத் துள்ளி ஓடினான் அபி. அவன் எண்ணம் முழுதும் ஆசிரியை செல்வியே நிறைந்திருந்தார்.
'நாளை முதல் படிக்கப் போகலாம். விளையாடலாம். மிஸ் தாற நூறு ரூபாயை வச்சு..... தங்கைச்சிக்கு புது டிரெஸ் வாங்கலாம், ஷூ வாங்கலாம், புக்ஸ் வாங்கலாம்....' இவ்வாறாக இருந்தது அவனின் எண்ணவோட்டம்.
இங்கு செல்வியின் மனம் முழுதும்கூட அபியே நிறைந்திருந்தான். 'நாளை முதல் படிக்க வருவான். நன்றாக விளையாடுவான். குழந்தைப் பருவத்தின் அத்தனை சந்தோசங்களையும் அவன் அடைய வேண்டும். பணம் கொடுப்பது கொஞ்சம் அதிகப்படிதான். சின்னப்பையன். கையில் பணமிருக்கிறது என்று தவறான பாதைக்குச் செல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும். தங்கைச்சி பாசம் இருக்கிறவரை தவறாகச் செல்ல மாட்டான். கடவுளே அந்தக் குழந்தையும் நல்லவொரு மனிதனாக சமுதாயத்தில் மிளிர நீ தான் உதவ வேண்டும். 'கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நடந்தார் செல்வி.
****
UNIVERSITY OF PERADENIYA
KANDY
எனும் பெயர்ப் பலகையைத் தாங்கி நின்ற பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தது அந்த நவீன பி எம் டபிள்யூ. அதிலிருந்து மிடுக்காக இறங்கினான் ஒரு இளைஞன். ஆறடி உயரம். ஆண்மைக்கே உரித்தான கம்பீரம். கறுப்பு நிறம். சிரித்தால் குழி விழும் கன்னம். சிரிக்கும்போது சற்றுக் கூடுதல் அழகாக இருந்தான். ப்ளூ கலர் ஷேட்டிற்கு ப்ளக் கலர் ஜீன்ஸ் என்று ஆளே அம்சமாக இருந்தான்.
அவனிலிருந்து சற்றுத் தொலைவிலிருந்த மரத்தடியில் அமர்ந்திருந்தாள் கவிநிலானி. பொதுநிறம். அவளின் இருபத்தாறு வயதிற்கேற்ற உயரம். திருமணப் பருவமடைந்த பெண்களுக்கேற்ற உடல்வாகு. பேரழகி என்று சொல்வதற்கில்லாவிடினும் அழகி என்று சொல்லலாம். அவள் இந்தப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பேராசிரியை. எப்போதும் கலகலப்பானவள். அதனாலேயே அவள்பால் பலரை ஈர்த்தவள். எத்தனை பேர் அவள்பின்னே வரினும், அவளின் கவனம் முழுக்க அவனிலேயே நிலைத்திருந்தது நேற்றுவரை.
அவன் "கார்த்திகேயன்". ஆறடிக்குச் சற்றுக் கூடுதலான உயரம். நிமிர்ந்த நடை. பௌர்ணமி நிலவின் முகம். எப்போதும் ஒட்டவைத்த புன்சிரிப்பு என நிச்சயம் அவன் பேரழகன்தான். அவனைத்தான் நம் கவிநிலானி உருகி உருகிக் காதலித்தாள் ஒன்றரை வருடங்களாக. ஆனால் விதியின் பலன். நேற்று அவன் இன்னொருத்தியின் கணவன். எப்பாடுபட்டாவது அவனின் மனதை மாற்றி விடலாமென நினைத்திருந்த கவிநிலானிக்கு இது பேரதிர்ச்சிதான். கண்களில் நீர் திரண்டு எதிரே இருந்தவற்றை மறைத்தது.
வாழ்க்கை இப்படித்தான். நாம் எதிர்பார்க்காத போது நமக்குச் சிலவற்றைத்தரும். நாம் எதிர்பார்க்கும்போது நமக்குத் தேவையான... அதிலும் மிகவும் முக்கியமானதை நம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளும். இதற்கெல்லாம் அசராது வாழ வேண்டுமென்றால் ஒரே வழி.... விதி கேட்பதைக் கொடுத்துவிட்டு, அது தருவதை எடுத்துக் கொள்வதுதான்.
எதிர்காலத்திற்கான கேள்வியோடு கண்களில் கண்ணீருடன் கவிநிலானி!

தொடரும்....
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️
அபி பையனுக்கும் அவன் தங்கச்சிக்கு விமோச்சனம் கிடைக்குமா செல்வி டீச்சர் மூலம் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️
அபி பையனுக்கும் அவன் தங்கச்சிக்கு விமோச்சனம் கிடைக்குமா செல்வி டீச்சர் மூலம் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
மிகவும் நன்றி சகோ 💖💖..... கிடைத்தால் சந்தோசம் தானே 💗
 
Top