• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரமாய் வந்தவளே ❤️ (பாகம் 4)

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52
வழமையை விட இன்று குதூகலமாய் இருந்தான் அபிமன்யு. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று லஷ்மியும் இன்று செல்வி ஆசிரியையின் வீட்டிற்கு வருகிறாள். அபிமன்யுவிற்கு லஷ்மி மேல் தனி விருப்பம். கலகலப்பானவள். அமைதியானவள். ஏனைய மாணவர்கள் அபிமன்யுவை ஒதுக்கி வைத்த போது.... இவள் மட்டும் அவனுடன் சேர்ந்திருந்தாள் என்று இல்லைத்தான். ஆனால் மற்றவர்கள் சேராததற்கான காரணத்தைக் கூறி அபியை கொஞ்சம் சுத்தமாக வருமாறு எச்சரித்தது அவள்தான். அவள் கூறிய நிஜம் சற்று வலித்தாலும், தன்னிடம் உண்மையாகப் பழகும் ஒருத்தி என அபிக்கு அவள் மேல் தனி அன்பு உண்டு.

காலையிலும் பாடசாலையில் அபியைக் கண்காணித்துக்கொண்டு தானிருந்தார் செல்வி. இப்போதெல்லாம் அவன் முன்பு போலில்லை. சோர்ந்து விழுவதில்லை; நல்ல உற்சாகமாகவே இருந்தான். அனைவருடனும் சேர்ந்து விளையாடினான். புது ஷேட், ஷோட்ஸ், ஷு என ஆளே மாறியிருந்தான். அனைத்து மாணவர்களும் அபியைத் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆனாலும் அபி லஷ்மியை வால்பிடித்துக் கொண்டு சுற்றுவதையும் கவனிக்கத் தவறவில்லை அவர்.

மாலையானது. லஷ்மி, அபி இருவரும் ஆசிரியை வீட்டில் இருந்தனர். இருவருக்கும் சிறு சிறு ஆங்கிலக் கட்டுரைகள் எழுத வைத்து வழி நடத்திக் கொண்டிருந்தார் செல்வி. முதலில் அபி தான் தொடங்கினான்.

'மிஸ் நேத்துக் கதை சொல்றன்னீங்க.'

'ம்ம்..கண்டிப்பா சொல்றேன். இதை எழுதி முடி.'

கதை கேட்கும் ஆர்வத்திலேயோ என்னமோ, இருவரும் விரைவாகவே எழுதி முடித்திருந்தனர். அதைத் திருத்திய செல்வியும் கதை கூறலானார்.

'உன்னை மாதிரித்தான் ஒரு ஊர்ல ஒரு குட்டிப் பையன் இருந்தான். அவனுக்குக் கோயிலுக்குப் போறதில ஆர்வமே இல்லை. ஆனா அவனோட அப்பாக்கு நல்ல இறைபக்தி இருந்திச்சு. அவருக்கு இவனை நினைச்சுக் கவலை. இவனுக்கும் கடவுள் மேல பக்தி வரணும். கோயிலுக்குலாம் போய் வரணும்னு ஆசைப்பட்டார்.
ஒரு வெள்ளிக்கிழமை அவனை வலுகட்டாயமாக் கோயிலுக்குக் கூட்டியும் போனார். இவனும் மனமில்லாம, கட்டாயத்துக்கு கோயிலுக்குப் போயிருக்கான். அங்க சாமி கும்பிட்டிட்டுத் திரும்பி வர நினைக்கும்போது, அந்தக் கோயில பூசாரி ஐயா இவனுக்குப் பொங்கல் குடுத்திருக்காரு. இவனுக்கு ஒரே ஆனந்தம். பொங்கலை வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டே சந்தோசமா வீட்டுக்கு வந்திருக்கான்.
அடுத்த நாளும் தகப்பனார் கோயிலுக்குப் போகக் கேட்டிருக்கார். இவன் என்ன கேட்டான் தெரியுமா? இன்னைக்கும் பொங்கல் தருவாங்களானு கேட்டிருக்கான். தந்தையாரும் ஆமானு சொல்லி அவனைச் சம்மதிக்க வைச்சுக் கூட்டிப் போயிருக்காரு. அன்னைக்கும் பொங்கல் குடுத்திருக்காங்க. இவன் அதே குஷிலயே ஒவ்வொருநாளும் கோயில் போக ஆரம்பிச்சிருக்கான். நாளடைவிலேயே அவனுக்கு கோயிலுக்குப் போகப் பிடிக்க ஆரம்பிச்சுது. பொங்கலுக்காக இல்லை; கடவுளுக்காக. ஏன்னாக் கோயிலுக்குப் போனாக் கிடைக்கிற சந்தோசம் அப்பிடி. அதனால இவன் தந்தைகிட்ட என்ன சொன்னான் தெரியுமா? 'அப்பா எனக்கு இனிமேப் பிரசாதம் தரலனாலும் நான் கோயிலுக்கு வருவேன்' னு சொல்லியிருக்கான்.'
அந்த மாதிரித்தான் இருந்திச்சு, நேற்று நீ போகும்போது எனக்குச் சொன்ன கதை.'

மறைமுகமாகக் காசு விடயத்தைச் சொன்னாலும், இன்னொரு சிறுமியின் முன் வெளிப்படையாய் அதைச் சொல்ல விருப்பமில்லை செல்விக்கு. ஏனெனில் அபிமன்யுவிற்கு எல்லாம் செய்வது செல்வி எனத் தெரியக்கூடாதென்பது ஒரு புறம். மற்றையது அவள் சிறுமி. ஆசிரியைக்கு அவன் மேல்தான் விருப்பமென எண்ணி விடக் கூடாதென்பது இன்னொரு விடயம். ஆனால் அபிமன்யுவிற்கு இதெல்லாம் புரியாது தானே?

'அப்பிடினா என்னோட அப்பா, பூசாரி, கோயில், கடவுள் எல்லாமே நீங்கதான் மிஸ்.'

செல்விக்குப் புல்லரித்தது. 'ஏன்டா?'

'நீங்கதான் என்னை இங்க கூட்டி வந்தீங்க. நீங்க தான் படிப்போட முக்கியத்தை சொல்லித் தந்தீங்க. நீங்கதான் காசு குடு....'

'லஷ்மி அபிகூட விளையாடுறியாமா?' அவனை இடைமறித்து லஷ்மியிடம் வினவினார் செல்வி.

'விளையாட்றேன் மிஸ்.' உற்சாகமாய்ப் பதிலளித்தாள் சிறுமி. இரண்டு சிட்டுகளும் விளையாடுவதற்காக ஒன்றாய் வெளியே பறந்து சென்றன.

****
வகுப்பறையில் அறிமுகம் நடந்து கொண்டிருந்தது. பல்கலைக்கழகத்திற்குப் பொறுப்பான ஹெட் தான் முதலில் அறிமுகம் செய்து வைத்தார். 'இவர் இந்தப் பல்கலைக்கழகத்துக்குப் புதுசா வந்திருக்கிற ஆங்கிலப் பேராசிரியர். இனிமே எல்லாருமே இவர்கூட ஆங்கிலத்தில பேசத்தான் முயற்சி பண்ணணும். அப்போதான் உங்களால இங்லிஷை இம்புரூவ் பண்ண முடியும். மேலதிகமாக அவரே தங்களுடன் பேசுவார்', எனக் கூறி ஹெட் விடைபெற்றதும் அங்கே பரஸ்பர அறிமுகங்கள் நடைபெறலாயின. அவன் யாரென்று பார்த்தால் நம் பி எம் டபிள்யூ பார்ட்டி.

மாணவர்களுக்குப் பாடமெடுத்துவிட்டு இடைவேளைக்காக வெளிவந்த கவியிடம் வந்தாள் திவ்யா. 'கவி உனக்கொரு விசயம் தெரியுமா?'

'சொல்லு.'

'நம்ம யுனிக்கு புதுசா ஒரு புரொபெஸர் வந்திருக்கார் இங்லிஷ்கு. ஆள் செம்ம ஸ்மாட். வெள்ளைனு சொல்ல முடியாது. கொஞ்சம் கறுப்பு சைட் இருக்கிற பொதுநிறம்னு சொல்லலாம். சிரிச்சாக் கன்னத்தில குழி வேற விழுது. இவளுக எத்தனை பேர் அதில விழப் போறாளுகளோ?'

'அப்பிடியா? அவ்ளோ நல்லாவா இருக்கான். அப்போ கண்டிப்பாப் பாக்கணும்தான்.'

கன்டீனுக்கு சென்றால் அங்கே அவன் ஏனைய ஆசிரியர்களுடன் இருந்து டீ குடித்துக் கொண்டிருந்தான். அவனை ஒரு லுக் விட்ட கவிநிலானி, 'ம்ம் பாக்க நல்லாத்தான் இருக்கான்' என்றாள்.

'கவனம்டி. அப்புறம் அந்தக் குழில நீ விழுந்திடாத.'

'வேணாம்டி. ஒரு தடவை பட்டதே போதும். வேற வினையே வேணாம்', சென்னவள் கார்த்தியைச் சந்தித்த அந்த நொடியை நினைத்துப் பார்த்தாள்.

அன்று பல்கலைக்கழக விடுமுறை. தனது தங்கை நதியாவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்திருந்தான் கார்த்தி. வந்தவனிடம் ஓடிச்சென்றாள் தியா.

'அண்ணா ஒரு ஹெல்ப் பண்ணுவியா?'

'இவங்க எங்க சயன்ஸ் புரொபெசர். இவங்க போக வேண்டிய பஸ்ஸை மிஸ் பண்ணிட்டாங்க. நீ இவங்கள ட்ரொப் பண்ணி விட்றியா? பிளீஸ்'

'நான் கார்ல வரலயேடா. பைக்ல தான் வந்திருக்கன்.'

'தெரியும்டா. பட் நமக்கு வேற வழியில்ல. அவங்களும் பாவம்ல'
தியா தமையனிடம் கேட்க சங்கடமாய் உணர்ந்தாள் கவி. அவளுக்கு இதுவரை பைக்கில் ஒரு ஆடவனுடன் தனியே சென்று பழக்கமில்லை. நதியா நல்ல பெண். ஆனாலும் அவள் தமையன் நல்லவன் என்பதற்கு என்ன உத்தரவாதம்? மெல்ல நதியாவை அழைத்தவள், கூறினாள்.

'வேணாம் தியா. உங்களுக்கு சிரமம். நானே போய்டுவன். அடுத்த பஸ் ஒரு ஒண் அவர்குள்ள வந்திடும்.'
'நோ மிஸ். நீங்க தனியா வெய்ட் பண்ணுவீங்களா அதுவரைக்கும்? நோ வே. இவன் கொண்டுபோய் விடுவான். டோண்ட் வொரி.'

'தியாமா. வேணும்னா அவங்களுக்கு பஸ் வரும்வரை நாங்க வெய்ட் பண்ணுவமா? எனக்குப் புரொப்ளம் இல்லை.'

'உன்னோட புரொப்ளத்தை யார் கேட்டா? ஒரு மணித்தியாலம் வெய்ட் பண்றது கஷ்டம். நீ கூட்டிப்போய் விட்டிட்டு வா.'

அதற்குமேல் இருவராலும் மறுப்புக் கூற முடியவில்லை. கார்த்திகேயன் கவியைப் பார்த்தான்.அவள் பைக்கை நோக்கி நடந்தாள். அவனும் சத்தமில்லாமல் பின் சென்றவன், நின்றான்.
'நதி அப்போ அதுவரை நீ எங்க இருப்ப?'

'அதோ தெரியுதே கண்ணகி வீடு. அங்க நின்னுக்கிறேன். வந்து கூப்பிடு.'

'ம்ம்'. தியா கண்ணகியிடம் சென்று சேர்ந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு பைக்கை ஸ்டாட் செய்து கிளம்பினான் கார்த்தி. பத்தே நிமிடத்தில் கவி வீட்டு ஒழுங்கை வர, பைக்கை நிறுத்தச் சொன்னாள்.

'தாங்க்ஸ் மிஸ்டர்.... சாரி. அதோ தெரியுதே அதுதான் என் வீடு. வீட்ல இப்பிடி இன்னொருத்தர் கூட வர்றதை விரும்ப மாட்டாங்க. எனக்கும் அது விருப்பமில்லை. தியா கேக்கும் போது மறுக்க முடியல. மறுபடியும் சாரி உங்கள ஏதும் ஹர்ட் பண்ணினா.'

'நோ நோ. அப்பிடி ஒண்ணுமில்ல. தியா எங்க வீட்டுக் கடைக்குட்டி. இதெல்லாம் புரிஞ்சுக்கிற பக்குவத்தை அவளுக்கு அளிக்காதது எங்க தப்பும்தான். அவளுக்கு என்மேல இருக்கிற நம்பிக்கைலதான் உங்களை விட என்னை அனுப்பினா. பட் சாரி. நானுமே அவளை எதிர்க்க முடியாம.... மோ ஓவர் நீங்க ஓகேவா ரியாக்ட் பண்ணதுக்கப்புறம் கூட்டி வந்தேன். நானோ என் தங்கைச்சியோ ஏதும் தப்பாப் பண்ணியிருந்தா சாரி.'

'எவ்ளோ பெரிய உதவி பண்ணியிருக்கீங்க. நீங்க தப்பா? நோ வே. தாங்க்ஸ் ஏ லொட். பை த வே, ஐம் கவிநிலானி. கவினு கூப்பிடுவாங்க.'

'வாவ் நைஸ் நேம். பட் எனக்கு கவியைவிட நிலா ரொம்பப் பிடிச்சிருக்கு. ஐம் கார்த்திகேயன்; சுருக்கமாக் கார்த்தி.'

'சரி கார்த்தி. நாம பார்ப்போம். பை.'

'பை நிலா.'
கூறியவன் பைக்கைத் திருப்பிக் கொண்டு செல்ல, கவி மனதினுள் ஒருமுறை சொல்லிப்பார்த்துக் கொண்டாள். "நிலா...."

தொடரும்....
 

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52
💖💖
 
Top