• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரமாய் வந்தவளே ❤️ (பாகம் 5)

Saunthu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 20, 2021
Messages
52
ஒவ்வொருநாளும் ஆமை வேகத்தில் நகர்ந்து அபிமன்யு, லஷ்மியின் ஆங்கிலப் போட்டி தினமும் வந்தது. அவர்கள் இருவரும் முழுமூச்சுடன் தயாராகி இருந்தனர். அவர்களை அழைத்துச்சென்று போட்டி நடக்குமிடத்தில் விட்ட செல்வி, "குட் லக்" எனப் பெருவிரலைத் தூக்கிக் காட்டிவிட்டு வெளியில் நின்று கொண்டார். அது அந்த மாவட்டத்திற்குள்ளான பாடசாலைகளுக்கிடையிலான போட்டி. செல்விக்குத் தனது இருபிள்ளைகள் மேலும் மிகுந்த நம்பிக்கை இருந்தது. தன் கவனிப்பின் மீதும்தான்.

போட்டி முடிந்து இருவரும் சந்தோசமாகவே வந்தார்கள்; காரணம்: கொடுக்கப்பட்ட தலைப்பு... அவர்கள் ஏற்கனவே பயிற்சி செய்தது. அவர்கள் இருவரையும் அழைத்துச்சென்று, ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, அவர்கள் சென்றிருந்த இடத்தை நன்கு சுற்றிக் காட்டிவிட்டே வீட்டுக்கு அழைத்து வந்தார் செல்வி. இரண்டு பிள்ளைகளும் தாங்கள் நன்றாகக் கட்டுரை எழுதிய திருப்தியிலேயே வீடு திரும்பினர்.

அடுத்த நாள் மாலை....
செல்வியின் வீட்டிற்கு வந்த அபிமன்யுவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் இன்று லஷ்மியைக் காணோம்.

'மிஸ், லஷ்மி இன்னும் வரலயா?'

'இல்லடா. அவ வர மாட்டா.'

'ஏன் மிஸ்?'

'லஷ்மி இங்லிஷ் கம்பட்டிஷனுக்குப் பிரக்டீஸ் பண்ணத்தான வந்தா? அதுதான் நேற்று முடிஞ்சிடிச்சே. சோ இனி வர மாட்டா'

அபியின் பிஞ்சு முகம் வாடிப்போனதை செல்வியும் கவனிக்கத் தவறவில்லை. சிறுகுழந்தைக்குத் தவறாக எதுவும் நினைக்கத் தெரியாதது அவருக்குத் தெரியும். அவனின் நட்புள்ளத்தை எண்ணி மகிழ்ந்தார்.

'லஷ்மியையும் இனிமேல் க்ளாஸ்கு கூப்பிட்டுப்பமா மிஸ்?'

'அவ வேற கிளாஸ்குப் போறாடா. அதான் ஸ்கூல் தொடங்கினா டெய்லி பாப்பியே. அப்புறமென்ன?'

'ம்ம்.'

அடுத்துவந்த இருதினங்கள் லஷ்மி இல்லாதது சற்று வலித்தாலும்... மூன்றாம் நாளிலிருந்து அதைப் பழகிக் கொண்டான் அபிமன்யு. நான்காம் நாள் மதிய வேளை அபிமன்யுவின் வீட்டிலிருந்தார் செல்வி.

'மிஸ், வாங்க மிஸ்.' ஆவலாக வரவேற்றான் அபிமன்யு. போதாக்குறைக்கு தன் தங்கையையும் கூப்பிட்டு செல்வியை அறிமுகம் செய்து வைத்தான்.

'அபி, நீ வேலையா இருக்கியா?'

'இல்ல மிஸ். படம் வரையக் கத்துக்கிட்டிருந்தேன். இதோ தங்கைச்சியோட ட்ராயிங்ஸ்.'

'வாவ்..... நைஸ்டா. ரொம்ப நல்லா வரைஞ்சிருக்கா. உன் பேர் என்னம்மா?'

'தர்ஷினி.'

'நைஸ். சரி ரெண்டுபேரும் ஃப்ரீ தானே? இப்போ என்கூட வெளில வரப்போறீங்க.'

'எங்க மிஸ்.'

'உங்கம்மாவைப் பாக்கப்போறோம்.'
சொல்லிவிட்டு செல்வி எழ, சந்தோசமாகத் துள்ளி ஓடி வந்தனர் வாண்டுகளிருவரும்.'
****
"நிலா...." எனத் தனக்குள் சொல்லிப் பார்த்தவள், 'ம்ம் இது கூட நல்லாத் தானிருக்கு' எனத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

அதன் பிறகு அவள் கார்த்தியைப் பார்க்கவில்லை. விடுமுறை கழிந்து யுனிவர்சிட்டி ஆரம்பித்த அன்று, அவனைப் பார்ப்போமா? எனும் எண்ணம் அவளுள் வந்தது உண்மைதான். ஆனால் அதற்குக் காதலெனப் பெயர் சொல்லிக் கொள்ளும் அளவுக்குச் சிறு பிள்ளையல்ல அவள். பொதுவாகவே... தெரிந்த ஒருவரை எதிர்பார்ப்பது இயல்புதானே? அத்துடன் நிறுத்திக் கொண்டாள்.
நதியா வந்துகொண்டிருப்பதைக் கண்டவள், தானாகவே அவளருகில் செல்ல...' குட் மார்னிங் மிஸ்' என்றாள் நதியா.

'குட் மார்னிங் தியா. யார் கூட வந்த?'

'அப்பா கூட மிஸ். நெடுவாலி அமெரிக்கா போய்ட்டான்.'

'நெடுவாலி??'

'கார்த்தி. பிஸ்னஸ் விசயமாப் போயிருக்கான். அவன்னா பைக்ல வர செம்மயா இருக்கும். அப்பா... கார்ல... போர். ஸ்பீடா ஓட்டவே மாட்டார்.' சலித்துக் கொண்டாள் நதியா.

அதன்பின் கவியும் எதையும் கேட்கவில்லை. ஆனால் மறுபடியும் அவனைப் பார்க்க வேண்டி வந்தது; அதுவும் அவளாகவே சென்று....

திவ்யாவின் தொடுகையில் நிஜ உலகிற்குத் திரும்பினாள் கவி.

'என்ன திவி?'

'டைம் ஆச்சு. போலாமா?'

'ம்ம்'

செல்லும் வழியில் பி எம் டபிள்யூ பார்ட்டி வந்தான். இவர்களைப் பார்த்துச் சினேகமாகப் புன்னகைத்தான்.
'எக்ஸ்கியூஸ் மீ. இங்க செக்கண்ட் இயர் ஆட்ஸ் ஸ்டூடண்ட்ஸோட க்ளாஸ் ரூம் எது?'
அவன் கேட்க, திவ்யா பதில் சொன்னாள்.

'இப்பிடியே திரும்பிப் போனீங்கனா... ஃபிளவர் கார்டின் வரும். அதுக்கு வலப்புறமிருக்கிறது அவங்க க்ளாஸ் தான்.'

'ஓஓ தேங்க் யூ. நான் இன்னைக்குத் தான் இங்க ஜாய்ன் பண்ணன். சோ கொஞ்சம் அப்டேட் ஆகல.'

'இட்ஸ் ஓகே. போகப் போகப் பழகிடும். பை த வே.... என்னோட பேர் திவ்யா. இங்க மத்மட்டிக்ஸ் புரொபெஸர். இவ என் க்ளோஸ் ஃபிரெண்ட் கவிநிலானி. சைன்ஸ் புரொபெஸர்.'

'நைஸ். நான் அபிமன்யு. செல்லமாக் கூப்பிடணும்னா அபினு கூப்பிடலாம். அப்போ நீங்க இனிமேத் திவி. உங்க நேம் கவிநிலானி. கவி னும் கூப்பிடலாம். நிலா னும் கூப்பிடலாம். பட் எனக்கென்னமோ நிலா தான் பிடிச்சிருக்கு. சோ நான் உங்கள நிலானே கூப்பிட்றன்.'

அவன் கூறிய இறுதி வார்த்தைகளில் அதிர்ந்து நிமிர்ந்தாள் கவி.
'வேணாம் வேணாம். என்னை யாரும் அப்பிடிக் கூப்பிட வேணாம். ஹலோ மிஸ்டர், நீங்க எதுக்கு என்னைக் கூப்பிடணும்? உங்க வேலையைப் பாத்திட்டுப் போங்க.'
கவி கத்திவிட்டு நகர அபிக்குத் தான் ஒரு மாதிரியாகப் போய்விட்டது.

'சா...சாரி சார். கவி பொதுவா இப்பிடி இல்ல.... அவளுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன்' சொல்லிவிட்டு முன்னே சென்று கொண்டிருந்த கவியின் பின் ஓடினாள் திவி.

அபிக்குத்தான் எதுவும் புரியவில்லை. 'ஒரு பெயருக்காக ஒரு பெண் இப்படி ரியாக்ட் பண்ணுவாளா? இத்தனைக்கும் இவள் பேராசிரியை. சரி அவளுக்கும் என்ன பிரச்சினையோ?' நினைத்துவிட்டுத் தன் வேலையைப் பார்க்கக் கிளம்பினான்.

கவிக்கு மீண்டும் பழைய நினைவுகள் வந்தன. அன்று விளையாட்டுப்போட்டிக்காகப் பணம் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். அது அப் பல்கலைக்கழகத்தின் நூற்றுஐம்பதாவது நினைவுதினத்தை ஒட்டிவரும் விளையாட்டுப்போட்டி. எனவே வேறு பல்கலைக்கழக மாணவர்களையும் அழைத்து, பொதுவான போட்டிகள் வைத்துப் பெரியளவில் நடாத்தத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதவில்லை. இதனால் அங்கு இருந்த சில பிரபலங்களிடம் சென்று நிதியுதவி கேட்டார்கள். அப்படிக் கவி சென்ற ஒரு இடத்தின் சொந்தக்காரன்தான் கார்த்திகேயன். அவளுக்கு அதிர்ச்சி. அவனை இந்தளவு பெரிய தொழிலதிபரென எதிர்பார்க்கவில்லை கவிநிலானி.

'கார்த்தி... நீங்களா?' அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றாள்.

'வாயை மூடுங்க மிஸ். கொசு போய்டப் போகுது. ஏன் எங்கள எல்லாம் பாத்தாக் கெத்தாத் தெரியலயா?'
அவனது ஆம்ஸை உயர்த்திக் காட்டினான்.

'அப்பிடி இல்லை. அன்னைக்கு ரொம்ப சிம்பிளா இருந்ததால எனக்கு அப்பிடி தோணியிருக்கல. இட்ஸ் ஓகே. சாரி. பை த வே... நான் ஏன் வந்தன்னா...'

'எனக்குத் தெரியும் நிலா. தியா சொன்னா. நானே வரணும்னு நினைச்சன். சாரி அதுக்குள்ள நீங்க வந்திட்டீங்க' கூறியபடியே தனது செக் புக்கை எடுத்து பத்து லட்சத்தை எழுதிக் கொடுத்தான்.

'இவ்ளோ வேணாம் கார்த்தி. இது ரொம்ப அதிகம். நிறையப் பேர்டக் கலெக்ட் பண்றோம். சோ இவ்ளோ அமௌண்ட் அதிகம்.'

'நோ நோ. நீங்க இதை விளையாட்டுப்போட்டிக்காகத் தான் யூஸ் பண்ணணும்னு இல்ல. எதுக்குனாலும் பிரயோசனமா யூஸ் பண்ணா சரி. எனக்கு ரொம்ப முக்கியமான ரெண்டு பேர் காலேஜ்ல இருக்கும்போது.... இதைக்கூடப் பண்ண மாட்டனா என்ன?'
அவன் அர்த்தமாகப் புன்னகைக்க... அந்தப் புன்னகையில் தன்னைத் தொலைத்தாள் கவிநிலானி.

தொடரும்....
 
Top