• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அத்தியாயம் =11

“ஏய் ராமாயி அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க...இங்க பாரு ரசம் கேட்கிறாங்க....சீக்கிரம் வா என்பதற்குள் அக்கோ இந்த இலைக்கு பாயாசம் கொண்டுவாங்க என ஒருவர் அழைக்க ,ஏனுங்க வடை தீர்ந்து போய்டுச்சுங்க என ஒருவன் வந்து நிற்க ,ஏண்டா இதை கேட்கணுமா....அதான் மாவு இருந்தா வாழத்தாரு ஒன்னு அறுத்து பச்சிபோட்ருடா இத சொல்லனுமா” என ஒருவர் அதற்கு தகுமானம் சொல்லி கொண்டிருக்க, இப்படி பரபரப்பாக அங்கு அனைவரும் ஓடிக்கொண்டு இருந்தனர்.
அப்போது “ஐயா மூகூர்த்தகால் நடறதுக்கு குச்சி வெட்டனுமா...அருமைக்காரர் வந்து இருக்கார் உங்களை கூப்பிட்டாங்க” என ஒருவன் வந்து நிற்க...
“இருப்பா வரேன்.....மாமன் வீட்டு விருந்து முடிஞ்சதுக்கு பிறகு போகலாம்......ஏதாவது குத்தம் குறை இருந்தா மாப்பிள்ளைக்கு யாரு தகுமானம் சொல்றது “ என சொல்லிவிட்டு அங்கும் இங்கும் மேற்பார்வை இட்டு கொண்டு இருந்தார் நடராஜ் ஐயா.
இந்த கிராமத்தில் திருமணம் என்பது மூன்று நாள் நடக்கும் முதல் நாள் தாய் மாமன் விருந்து.இரண்டாம் நாள் மாப்பிள்ளை பெண் வீட்டு அழைப்பு,நிச்சியம்,இணைசீர்,முகூர்த்தகால் நடுதல் எல்லாம் நடக்கும்..மூன்றாம் நாள் அதிகாலை திருமணம் நாடக்கும்..எப்போதும் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் தாய்மாமன் விருந்து போடப்படும்.இதில் நெருங்கிய சொந்த பந்தங்கள் உற்றார் உறவினர் .ஊர்காரர்கள் அனைவரும் கலந்து கொள்வர்.....இந்த விருந்தின் போதுதான் பெண்ணிற்கு மெட்டியும்,திருமண வளையல்,மற்றும் கொலுசு மேலும் தாய்மாமன் எடுத்து கொடுக்கும் புடவைதான் அன்று மணப்பெண் உடுத்த வேண்டும்.அந்த விருந்துதான் இப்போது பூரணி வீட்டில் நடந்து கொண்டு இருந்தது.இந்த விருந்தில் குறை வந்தால் மாணிக்கத்திற்கு யார் பதில் சொல்வது என நினைத்தே அவர் நடக்கும் விருந்தை மேற்பார்வை இட்டு கொண்டு இருந்தார்.ஏனெனில் அந்த பொறுப்பை அவரிடம் தான் கொடுத்து இருந்தார் மணியம்மை. தங்கள் வீட்டு மாப்பிள்ளையே தன் பிள்ளைக்கு திருமணம் முடித்து சம்பந்தி ஆனாலும் பெண்ணை கொடுத்தவர்கள் அப்போதும் மாப்பிள்ளை மனம் வாடாமல் எல்லாம் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதில் எச்சரிக்கையாக இருப்பார்கள்.இது அந்த ஊரின் வழக்கம்.
அதற்குள் அங்கு மாணிக்கம் வர “என்ன மாணிக்கம் எல்லாம் திருப்தியா இருக்கா” என அவர் கேட்கவும்
“ஐயா நான் தான் எல்லாமே உங்க பொறுப்புல விட்டுட்டேன்....நீங்க இல்லனா இந்த கல்யாணமே நடந்து இருக்காது......நீங்க பார்த்து எதுவேனாலும் செய்ங்க” என அமைதியாக சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
அதற்குள் அங்கு வந்த மணியம்மை “ஐயா நாளைக்கு பொண்ணு அழைப்பு எத்தனை மணிக்குன்னு கேட்டு சொல்றிங்களா.... நல்ல நேரம் சொன்னாதான் நம்மளும் மாப்பிள்ளை அழைப்புக்கு வண்டி அனுப்ப முடியும் “ என கேட்கவும்
“அதுகென்ன அம்மணி.....இப்போ கேட்டு சொல்லிடறேன் என்றவர் மாப்பிள்ளை சொன்ன மாதிரி கண்ணாலத்தை வச்சிருந்தா நமக்கு இவ்ளோ அலைச்சல் இல்லை....உன் பொண்ணு எங்க கேட்கிறா.....இங்கதான் வைக்கணும்னு அடம் பிடிக்கிறா.....சரி விடு.....இது அவளோட கண்ணாலம் அவளுக்கு பிடிச்ச மாதிரியே நடக்கட்டும் என்றவர் மாப்பிள்ளையும் மூணு நாளுக்குள்ள கண்ணாலத்தை முடிச்சு ஆகணும்னு சொல்லிட்டாப்டி......ரெண்டு பெரும் பிடிவாதம் தான் என சிரித்து கொண்டே சொன்னவர் அப்புறம் அம்மணி இதுக்கு முன்னாடி அவங்க பேசி இருந்தத எல்லாம் மறந்திடுங்க.....இப்போ நமக்கு கண்ணாலம் நடக்கணும் அது மட்டும் தான் முக்கியம் ” என அவர் மெதுவாகவும் அழுத்தமாகவும் சொல்ல
மணியம்மையோ “ஐயா இப்போ நடக்கிறதை நான் எதிர்பார்க்கவே இல்லைங்க.....நான் கும்பிடற ஆத்தா முத்துமாரிதான் இதெல்லாம் நடத்திட்டு இருக்கா.....இனி இதுக்குமேல ஒரு தடங்களும் வராம நான் பார்த்துக்கிறேனுங்க” என அவரும் உறுதியுடன் சொன்னார்..
அவரின் பேச்சை கேட்டதும் சிரித்து கொண்டே “மாணிக்கத்துக்கு ஏத்த பொண்டாட்டி தான் நீ என்றவர் சரி அம்மணி இன்னிக்கே கண்ணால பொண்ண நல்லா சாப்பிட சொல்லிடு ...நாளைக்கு காலையில இருந்து விரதம் இருக்கணும். நிச்சியதார்த்தம் முடிஞ்சு தான் சாப்பிடனும் ...அதை தெளிவா சொல்லிடு என்றவர் அப்புறம் முதல்ல நீயும் மாணிக்கமும் போய் சாப்பிடுங்க.....எல்லா வேலையும் நான் பார்த்துகிறேன் என்றவர் டேய் நாவிதன் எங்க போனான்.......சீர்க்கு என்ன வேணும்னு எல்லாம் எழுதி வாங்குங்க என்றபடி அங்கிருந்து நகர்ந்தார்.

மறுநாள் மாலை “பூரணி என்ன பண்ணிக்கிட்டு இருக்க....இன்னுமா அலங்காரம் முடியலை என கேட்டுகொண்டே அங்கு வந்த மணியம்மை அவருடன் மூன்று பெண்கள் உடன் வர நேராக பூரணியிடம் சென்றவர் இங்க பாரு பூரணி இவங்க மாப்பிள்ளை வீட்டு பங்காளி வீடு...இவங்க தான் உன்னை திருமண மண்டபத்திற்கு அழச்சிட்டு வருவாங்க” என சொல்லவும்
பூரணியோ அவர்கள் யார் என்றே தெரியாமல் திரு திருவென்று முழிக்க
அவளின் பயத்தை கண்டு கொண்ட மணியம்மை “கவலைபடாத நம்ம சரோஜாக்கா ,பாரியும் கூட வருவாங்க” என சொன்னதும் அவள் முகத்தில் சற்று நிம்மதி வர சரி என்று தலை ஆட்டினாள்.
அதற்குள் “அம்மா கார் வந்திடுசுங்க ......மாப்பிள்ளைக்கு கண்ணாலத்துக்கு எடுத்த துணிமணி எல்லாம் மறக்காம எடுத்திட்டு வர சொன்னாருங்க ஐயா”என்றபடி ஒருவன் வர
“அதெல்லாம் எடுத்துகிட்டேன்......அப்புறம் மாப்பிள்ளை அழைப்புக்கு வேஷ்டி விரிக்கிறதுக்கு ஆளுங்க வந்தாச்சா ....இன்னைக்கு ஆத்துக்கு வெளுக்க போகவேண்டாம் நேரமே வந்திடுன்னு சொல்லிருந்தேன் ...வந்திட்டாளா” என மணியம்மை கேட்டதும்
“அவங்க எல்லாம் முன்னாடியே மண்டபத்துக்கு வந்திட்டாங்க ......ஓரம்பரை எல்லாம் வர ஆரம்பிச்சுட்டங்க...வரவேற்புல உங்களை காணோம்னு கேட்கிறாங்களாம் ...... ஐயா சீக்கிரம் கிளம்பி வர சொன்னாருங்க” என அவன் சொன்னதும்
“அதுக்குள்ள எல்லாரும் வந்துட்டங்காளா என்ற படி வேகமாக கிளம்பி காரில் ஏறியாவர் பாரி அக்காவை பார்த்து பத்திரமா அழச்சிட்டு வாங்க”என சொல்லிவிட்டு உள்ளே அமர்ந்தார்.
இங்கு பூரணியின் அறையில் “இங்கபாரு பூரணி எங்க ஊர்ல எல்லாம் இப்படி உம்ம்னு இருந்தா சரிபட்டு வராது....வாய் இருக்கிற பொண்ணுதான் பொழைக்கும்னு சொல்வாங்க.....நீ என்னடானா நாங்க வந்ததில இருந்து பேசாமையே இருக்க.....இப்படி இருந்தா அப்புறம் எங்க பையனோட நிலைமை என்னாவறது” என மாப்பிளை வீட்டாரின் உறவினர் பெண்களில் ஒருத்தி கிண்டலாக கேட்க
மற்றவரோ “அக்கா இப்ப இருக்க புள்ளைங்க எல்லாம் விவரம்...பேசவேண்டிய நேரத்துல பேசி புருஷனை கைக்குள்ள போட்டுக்குவாங்க ...நம்மளை மாதிரி கிடையாது’ என சொல்லி சிறிக்க
அதற்குள் அருகில் இருந்தவர் “நீ சொன்னா சரியாதான் இருக்கும்டி ......உன் மாமியாரும் இதை தான் அடிக்கடி சொல்வாங்க “என அதற்கு கிண்டலாவே பதிலடி கொடுக்க
உடனே அருகில் இருப்பவர்கள் எல்லாம் சிரிக்க ஆனால் பூரணி முகத்திலோ பயத்தின் ரேகை மட்டுமே ஓடிக்கொண்டு இருந்தது.அவர்களின் பேச்சு அவள் மனதில் புயலை கிளப்பி விட்டு இருந்தது.
“நேரமாச்சு...நேரமாச்சு சீக்கிரம் வாங்க” என சத்தம் கேட்க அனைவரும் கிளம்பி வெளியே வந்தவர்கள் அருகில் இருக்கும் பிள்ளயார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு காரில் திருமண மண்டபத்திற்கு சென்றனர்.
மண்டபத்தின் வாயிலில் கார் நிற்க ...அதற்குள் மண்டபத்திற்குள் இருந்து நாதஸ்வர பார்ட்டிகள் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் பெண்ணை அழைக்க வெளியே வந்து நின்றனர்.
காரில் இருந்து இறங்கியதும் மத்தளங்கள் முழங்க அனைவரும் அவளை அன்புடன் அழைக்க மண்டபத்தை பார்த்த பூரணியோ ஒரு நிமிடம் அசையாது சிலை போல் நின்றாள்.திருமணம் என்பது ஒவ்வோருவர் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வு.அது இப்போது அவள் கண் முன்னே நடந்து கொண்டு இருக்க மனமோ பல நினைவுகளில் தவித்து கொண்டு இருந்தது.
அதற்குள் அருகில் இருந்த “பாரி ...வாவ் ரொம்ப அழகா அலங்கரிச்சு இருக்காங்க என்றவள் ......பொள்ளாச்சி முறையில அழகான தோரணங்களுடன் மணபந்தல் முன்புறம் வீற்று இருக்க நடைபாதை முழுவதும் கம்பளம் விரித்து பூக்களால் தூவபட்டிருக்க,வழி நெடுகிலும் பூக்களின் அலங்காரமும் அதன் மனமும் அனைவரையும் ஈர்க்க ,திருமண மண்டபம் போல் இல்லாமல் ஒரு அரண்மனை போல் காட்சி அளித்தது அந்த இடம். “பூரணி மச்சான்கிட்ட இத நான் எதிர்பார்க்கவே இல்லை....இதுக்குதான் மண்டப அலங்காரத்தை நான் தான் செய்வேன்னு சொன்னாரா .......மூணு நாளைகுல்ல எப்படி இப்படி பண்ணிருக்காரு....கல்யாண மண்டபம் மாதிரியே இல்ல......ஏதோ பேலஸுக்குல நுழையற மாதிரி இருக்கு என அதிசியத்து சிலாகித்தவள்.....மச்சான் கலக்கிட்டாரு என பாராட்ட”..பூரணியோ ஏதும் பேசாமல் அமைதியாக நின்றாள்.
கூட வந்த பெண்களோ “இங்க பாருங்களேன்...... அவசர கண்ணாலம் ஆச்சே எப்டி இருக்குமோனு பார்த்தா தாலி கட்றதுக்கு முன்னாடியே இவன் இப்படி செலவு பண்றானே...தாலி கட்டிட்டா என்ன பண்ணுவானோ” என பூரணியை பார்த்துகொண்டே பொறாமையில் பேசியவர்கள் “ம்ம்ம் அதுக்கும் மச்சம் வேணும்......எத கண்டு மயங்கி இப்படி பண்றானோ” என வயிற்று எரிச்சலில் என்ன பேசுகிறோம் என தெரியாமல் அவர்கள் பேச பூரணிக்கோ கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.
அதற்குள் அவளை இரு பெண்கள் கையைபிடித்து மண்டபத்திற்குள் அழைத்து செல்ல அவற்றை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தவன் மனதில் சந்தோசமும் வருத்தமும்கலந்த கலவையான உணர்வு வந்து சென்றது.

பின்னர் உறவினர்கள் வந்த உடன் நிச்சயதார்த்த பத்திரிக்கை படிக்க வேண்டும் என சொல்லவும் மாப்பிள்ளை பெண் வீட்டாரின் சார்பில் பங்காளிகள் ,மாமன்மச்சான் முறைமார்கள் அனைவரும் மணவறை முன் அமர்ந்தனர்.ஊரின் பொது மனிதரும் வயதில் பெரியவருமான நடராஜ் ஐயா நடுவில் அமர்ந்து இருந்தார்.
 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
“என்னப்பா நிச்சயதார்த்த பத்திரிக்கை வாசிக்கலாமா” என அவர் பெண்வீட்டரை பார்த்து கேட்க
அவர்கள் வாசிக்கலாம் என்று தலை ஆட்டியதும் “சரிப்பா அந்த நாவிதனை வர சொல்லு.....தேங்காய்பழதட்டு. நிச்சிய புடவை எல்லாம் எடுத்து வைக்க சொல்லு ...அப்புறம் மாப்பிள்ளையோட கூட பிறந்தவங்க இருந்தா வந்து இந்த குத்துவிளக்கை ஏத்துங்க” என செய்ய வேண்டிய முறைகளை சொன்னவர் பின்னர் பெரிய மனிதர்கள் நிரம்பி இருக்கும் அந்த சபையில் நிச்சய பத்திரிக்கையை வாசித்து முடித்தார்.
“என்னப்பா எல்லாரும் சம்மதம் தானே என கேட்க இரண்டு பக்கமும் சம்மதம் என்ற பதில் வர உடனே வெற்றிலைபாக்கை இரண்டு குடும்பத்தினரும் மாற்றி சம்பந்தத்தை உறுதி படுத்தினர். பிறகு மணப்பெண்ணை வரவழைத்து நிச்சயதார்த்த புடவை கொடுக்க அதை உடுத்தி கொண்டு வந்தவள் அங்கு அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி கொள்ள அப்புறம் “பொண்ணுக்கு நகை போடறதா இருந்தா போடுங்க” என நாவிதன் சொன்னதும்
தோகை விரித்து ஆடும் அழகிய மயிலின் உருவம் பொறித்த வைர அட்டிகை அவள் கழுத்தில் மாப்பிள்ளையின் பங்காளிவீட்டு பெண் ஒருவர் போட பார்த்து கொண்டிருந்த அனைவருமே வாயடைத்து நின்றனர்.அவர்களின் பார்வையே இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என தெரிய அதற்குள் மணியம்மையின் அருகில் நின்ற பெண்மணி “ம்ம்ம்ம் எடுத்து வச்சு பொறந்தாலும் கொடுத்து வச்சு பிறந்திருக்கனும்னு சும்மாவா சொன்னாங்க.....இந்த பூரணிக்கு வந்த வவுசு பாரேன்....அப்படியே மின்னுதுள்ள” என தனக்குள் சொல்வது போல ஆற்றாமையை சொல்லி பெருமூச்சுவிட கேட்டுகொண்டிருந்த மணியம்மைக்கோ மனதில் பெருமையாக இருந்தாலும் திருமணம் நல்ல படியாக முடியவேண்டும் என்ற ஒரு பயம் அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது.பெண்ணின் வீட்டு சார்பில் மாப்பிள்ளைக்கும் மோதிரம் போடப்பட்டது.
உடனே அருமைக்காரர் “சரிப்பா ...பொண்ணும் மாப்பிள்ளையும் சாப்பிடாம இருப்பாங்க...அவங்களுக்கு முதல்ல சாப்பாட்ட போடுங்க என்று சொன்னவர் அப்புறம் நாவிதனை வர சொல்லுங்க...முகூர்த்த கால போடணும்....அதுக்கு வேண்டியது எல்லாம் எடுத்து வைக்க சொல்லுங்க” என்றபடி அங்கிருந்து நகர மற்றவர்களும் களைந்து சென்றனர்.
பூரணியை சாப்பிடுவதற்கு அழைக்க அவளோ தனக்கு பசியில்லை என்று சொல்லவும்......உடனே அருகில் இருந்த பெண்கள் “அது எப்படி இப்ப பசிக்கும்....இன்னும் நாளைக்கு ராத்திரி வரைக்கும் பசிக்காதுல்ல என ஒரு மாதிரி குரலில் சொல்லி கிண்டல் பண்ண பூரணியோ வேகமாக அறையைவிட்டு சாப்பிடும் அறையை நோக்கி நடந்தாள். ....இரு இரு நாங்களும் வரோம் என்றவர்கள் வெட்கத்தை பாரேன்...சொல்லாம கொள்ளாம எப்படி ஓட்றா” என சொல்லி சிரித்துகொன்டே அவளுடன் இணைந்து நடந்தனர்.
சாப்பிட்டு முடித்து அனைவரும் சிறிது நேரம் கண்ணுறங்க பூரணியோ நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்தவள் எல்லாம் கனவில் நடந்து போல் இருக்க சிறிது நேரம் அந்த நினைவில் மூழ்கியவள் அப்படியே ஆயாசமாக சுவற்றில் சாய்ந்தபடி உறங்கிபோனாள்..
அதற்குள் ஒரு பெண்மணி வேகமாக உள்ளே வந்தவர் “இந்தாங்க இது வெத்தலை கூரை புடவை.....இதை மேல போட்டுக்குங்க என்றபடி ஒரு பட்டு புடவையை கொடுத்தார்.மேலும் முகூர்த்தகால் போட்டு மாப்பிள்ளை வீட்டு இணைசீர் நடந்துகிட்டு இருக்கு....அது முடிஞ்சதும் கொஞ்ச நேரம் கழிச்சு நீராட பொண்ண அழைச்சுட்டு வாங்க” என சொல்லிவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் இணைசீர் முடிஞ்சுடுச்சு இந்தாங்க முகூர்த்த புடவை என ஒருவர் கொண்டு வர அதை பார்த்தவர்கள் “ஆனாலும் இந்த பையன் ஒன்னுதெரியாதவனாட்ட இருந்திட்டு எப்படி எடுத்திருக்கான் பாரு...கலரே கண்ணுல ஒத்திக்கிற மாதிரி இருக்கு .... ஏனக்கா இது என்னவிலை வரும்” என ஒரு பெண்மணி கேட்க
எதுவும் பேசாமல் அந்த புடவயை வைய்த்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்த அவர் “என்னை கேட்டா எனக்கெப்படி தெரியும்....உன்ற மாமன் எனக்கு புடவை எடுத்து வர சொன்னா முப்பது பெர்சென்ட் தள்ளுபடி போட்டான்னு சொல்லி கட்டம் போட்ட மாதிரி புடவைன்னு சொல்லி ஒரு போர்வையை எடுத்திட்டு வந்து நீட்டுனாறு...என்கிரகம் அதை கட்டிக்கிட்டு அந்த ஆளோட குடும்பம் நடத்த வேண்டியதா இருக்கு...ம்ம்க்கும் என முகத்தை சுளித்தவாறே பதில் சொன்னவர் ...... ...ம்ம்ம்ம் எல்லாத்துக்கும் ஒரு அம்சம் வேணும்” என ஓரகண்ணால் பூரணியை பார்த்தபடி பெருமூச்சு விட ஆனால் அவளோ அதோ கண்டு கொள்ளாமல் மண் போல் அமர்ந்திருந்தாள்.
மீண்டும் எல்லாரும் பரபரவென தங்கள் வேலைகளை ஆரம்பிக்க முகூர்த்த நாள் அன்று அதிகாலை பொழுதில் நீராடுதல் மற்றும் தட்ட சுற்றி ஆக்கை தாண்டுதல் போன்ற சாங்கீதங்கள் மணபெண்ணிர்க்கும் மாப்பிள்ளைக்கும்தனி தனியாக நடைபெற்றது. பின்னர் செஞ்சோறு சுற்றி ஆரத்தி எடுத்து முடித்தவர்கள் அடுத்து கோவிலுக்கு போகணும்...புறப்பட்டு வாங்க என சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தனர்.
இப்போது மாப்பிள்ளை வீட்டினர் கோவிலுக்கு செல்ல அங்கு சாமி கும்பிட்ட பின்னர் மாப்பிள்ளை மண்டபத்திற்கு வரமாட்டேன் என்றபடி அடம்பிடிக்க அதற்கு பெண் வீட்டார் வந்து கெஞ்சி அழைத்து செல்ல வேண்டும்.
அனைவரும் சாமி கும்பிட்ட பின்னர் “என்ன மாப்பிள்ளை நாங்க வந்து கெஞ்சனுமா....எங்க பொண்ண கட்டிக்க உங்களுக்கு கொடுத்து வச்சிருக்கணும்......நீங்க மாட்டேனு சொன்னா இங்க மாமன் மச்சான் நிறையா இருக்கோம் எப்படி வசதி “ என்று பெண் வீட்டு உறவினர் ஒருவர் கேலியாக கேட்க
அருகில் இருக்கும் மாப்பிள்ளை தோழன் “என்ன இருந்தாலும் எங்க மாப்பிள்ளை மாதிரி வருமா...அதெல்லாம் கிடையாது ....நீங்க எங்களை தூக்கிட்டு போனாதான் வருவோம்” என அதற்கு பதில் கொடுக்க
“அப்படியா இதெல்லாம் சரிபட்டு வராது....எங்க பொண்ணு வேணும்னா நீங்கதான் இறங்கி வரணும்” என அவர்களும் கேலி செய்ய அதற்குள் நேரமாச்சு சீக்கிரம் வாங்க என சத்தம் கேட்டதும்
“ரொம்ப பிகு பண்ணாதீங்க மாப்பிள்ளை...வாங்க என்றபடி ஒரு இளவட்டம் வேகமாக கையை பிடித்து இழுத்தவாறு செல்லவும் ...இப்பவே இப்படி இழுத்திட்டு போறீங்க....அப்போ தாலி காட்டின பிறகு எங்க பையனோட நிலைமை என மாப்பிள்ளை வீட்டினர் கேட்கவும் .....உடனே பெண்வீட்டில் ஒருவர் அதெல்லாம் வெளிப்டையா சொல்ல முடியுமா என நையாண்டியாக சொல்ல ...... வெள்ளியம்பாலையத்து ஆளுங்க விவரம் தான்” என சிரித்தபடி மாப்பிள்ளை வீட்டார் அவர்களை பின் தொடர்ந்தனர்.
பின்னர் கங்கணம் கட்டுவதற்கு இருவரையும் அருமைக்காரர் மணவறைக்கு அழைக்க அது கட்டி முடித்ததும் மீண்டும் அறைக்குள் நுழைந்த பூரணி சோர்வில் அப்படியே நாற்காலியில் சரிந்தாள்.
உடன் இருப்பவர்கள் பயந்து “பூரணி பூரணி” என தட்டி அவளை எழுப்ப
அதற்குள் அங்கு வந்த நடராஜ் அய்யா ...”இரவு முழுக்க தூங்கலை அதுனால அப்படிதான் இருக்கும்.....கொஞ்சம் தண்ணீர் கொடுங்க என்றவர் அவள் குடித்ததும் அவ்ளோதான் அம்மணி தாலி கட்டி முடிச்ச உடனே சாப்பிட போய்டலாம்” என்றார். மாமன் வீட்டு பட்டம் கட்டுங்க என்ற குரல் கேட்கவும் மாப்பிள்ளை பொண்ணு இருவருக்கும் பட்டம் கட்டி இருவரையும் மணவறைக்கு அழைத்து வந்தனர்.
முதலில் மணமகன் வந்து அமர்ந்திருந்ததால் மணபெண்ணின் வருகையை தொலைவில் இருந்தே பார்த்து ரசிக்க முடிந்தது .. பன்னீர் ரோஜா இதழின் நிறத்தில் பட்டுடுத்தி ,சாந்தமான முகத்துடன் ...விழிகளை தாழ்த்தியபடி அடிமேல் அடிவைத்து அவள் நடந்து வர....அவளது நடைக்கு ஏற்றபடி அவளது இடை அசைந்து கொடுக்க ,காலின் கொலுசு சத்தமோ அவள் உடல் அசைவுக்கு ஏற்றபடி தாளம் போட பார்த்து கொண்டிருந்தவன் மனமோ அருவியில் இருந்து கொட்டு நீர்வீழ்ச்சி போல சந்தோசத்தில் சதிராட்டம் போட, அதன் துள்ளல் முகத்தில் தெரிய எல்லாவற்றையும் மறந்து தன்னவளின் அழகை கண்களால் அள்ளி பருகி கொண்டிருந்தான் புகழேந்தி என்கிற புகழ்..
அவள் வந்ததும் மணமகனின் அருகில் அமரவைத்தவர்கள் பின்னர் அருமைக்காரர் சில சம்ப்ரதாயங்களை செய்து முடிக்கவும் அதற்குள் ஒருவர் “முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு ..தாலிய கட்ட சொல்லுங்கப்பா என குரல் கொடுக்கவும் ... தாலி கட்ட போறாங்க” என்ற குரல் கேட்டதும் வரவேற்ப்பில் நின்று கொண்டு இருந்த மாணிக்கம் ,மணியம்மை மற்று அனைவரும் மணவரையில் வந்து நிற்க... “கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்ற குரல் ஒலிக்க தேவர்கள் அனைவரும் வானில் இருந்து பூ தூவ....அங்கு உள்ளவர்களின் மனங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் அவர்களை வாழ்த்த சுபயோக சுப திருநாளில் பூரணியின் கழுத்தில் மாங்கல்யத்தை பூட்டினான் புகழ்.
ஆம் தன் உயிராக நினைத்தவளை ,பலவருடங்களாக அவனது மனதில் கனவுகளையும் ஆசைகளையும் விதைத்து கொண்டு இருந்தவளை ,அவனது வாழ்க்கையை சில மாதங்களுக்கு புயலென புரட்டி போட்டவளை,தன் உயிரோவியத்தை தன்னோடு இணைக்கும் அந்த மாங்கல்யத்தை அவள் கழுத்தில் பூட்டினான் புகழ்.
திருமாங்கல்யத்தை பூரணியின் கழுத்தில் பூட்டிய பின்பு புகழிடம் இருந்து ஆழ்ந்த பெருமூச்சு வெளிவர , அதுவரை இருந்த கலக்கங்கள் மறைந்து சற்று மனம் நிம்மதியடைய உடலின் படபடப்பு குறைந்து மிகவும் லேசாக உணர்ந்தவன் கண்களை மூடி ஒரு நிமிடம் அப்படியே அமர்ந்திருந்தான்.தான் செய்தது சரியா தவறா என்ற குழப்பத்திலே இருந்தவன் கெட்டிமேள சத்தத்தில் அவை எல்லாம் மறைந்து இவள் என்னவள் என்ற எண்ணம் மட்டுமே இப்போது மனம் முழுக்க நிறைந்து இருந்தது.நான் நினைத்தது நடந்து விட்டது என நினைக்கும்போதே அவன் நெஞ்சம் பெருமிதத்தில் புடைக்க அந்த நொடியை ஆழ்ந்து அவன் அனுபவிக்க
அதற்குள் அவன் பின்புறத்தில் இருந்த பெண்கள் சிலர் “ஏனுங்க மச்சான் தாலி கட்டுன உடனே இப்படி கண்ணை மூடி தூங்குனா எப்படி.... மாப்பிள்ளை நல்லாசூட்டிகைனு சொன்னாக .......நீங்க இப்படி இருக்கீங்க......அப்புறம் பொண்ணு கையை பிடிக்கிறதுக்கு பதிலா அருமைக்காரர் கையை பிடிச்சிடாதிங்க....பூரணி பார்த்து இருந்துக்கடி” என சொல்லி கிண்டல் பண்ணவும் சட்டென்று கண்களை திறந்தவன் அவர்களை பார்த்து ஈஈ என வழிய
“ஹப்பா மாப்பிள்ளை சிரிச்சாட்டாருடி ...உலக அதிசயத்துல இதையும் ஒண்ணா வச்சிடுங்க”.....என சொல்லி மேலும் நகைக்க
உடனே அருகில் இருந்தவர்கள் “ஏண்டி எங்க பையனுக்கு என்ன குறைச்சல் ....எட்டூரு ஜில்லாவும் அவன் பேச்சுக்கு கையை கட்டி நிற்கும் தெரியுமா ? எங்க புகழு தொட்ட காரியம் இதுவரைக்கும் துலங்காம இருந்தது இல்லை......எங்க புள்ளைங்க எல்லாம் அவனை மாதிரி இல்லையேன்னு நாங்க எவ்ளோ வருத்த பட்டு இருக்கோம்.......சொந்தம் விட்டு போக கூடாதுன்னு உங்க ஊரு பொண்ண காட்டுனா நீங்க என்னடானா இந்த அலப்பு அலப்பரிங்க.......என சொல்லவும்
புகழோ திடுக்கிட்டு பூரணியை பார்க்க
அவளை சட்டேன திரும்பி புகழை பார்க்க அந்த பார்வையில் தெரிந்த அக்னி ஜூவாலையில் தடுமாறி போனவன் அதற்கு பின்பு அவள் பக்கம் திரும்பவில்லை. ஆனால் அது தெரியாமல் இவர்கள் “நாளைக்கு எங்க ஊருக்கு வந்து நின்னு இப்படி பேசிப்பாருங்க........அப்புறம் ஒருத்தி கூட உருப்படியா ஊரு போய் சேரமாட்டிங்க தெரியும்ல ” என கதை அளந்து கொண்டு இருந்தனர்.
“கொஞ்சம் பேசாம அமைதியா இருக்கீங்களா” என அருமைக்காரர் ஒரு சத்தம் போட அவருக்கு கண்களாலே நன்றி சொன்னான் புகழ்.
அருகில் நின்று கொண்டிருந்த மாணிக்கமும் மணியம்மையும் நெஞ்சம் நிறய அவர்களை வாழ்த்த சுற்றி இருந்த அனைத்து உள்ளங்களும் அதுவரை இருந்த பொறாமை எல்லாம் மறந்து இருவரும் பலகாலம் சந்தோசமாக வாழ அட்சதை தூவி தங்களது ஆசிகளை வழங்கினர்..
தாலி கட்டி முடிந்ததும் புகழின் முகத்தில் தெரிந்த சந்தோசம் வெகுநாட்களுக்கு பிறகு அதை கண்ட பேச்சியம்மாவிற்க்கு அதுவரை மனதில் இருந்த கோபம் எல்லாம் மறைந்து ஒரு நிம்மதி ஏற்பட்டது.
தான் கனவிலும் நினைத்திடாத நிகழ்வு...தன் மகள் தான் பிறந்த வீட்டிற்கே மருமகளாக செல்வாள் என எதிர்பார்க்காத மணியம்மை இப்போது சந்தோசத்தில் திளைத்து நின்றார்..ஒரு திருமணத்தில் பிரிந்த சொந்தம் இன்னொரு திருமணத்தில் ஒன்று சேர்ந்ததை நினைத்து அவர் மனம் நிறைந்து இருந்தது.
உன்னை விட பெரிய இடத்தில் என் மகளுக்கு திருமணம் முடிக்கிறேன் என்ற சவால் விட்டு வந்த மாணிக்கம் ,சூழ்நிலையின் காரணமாக இந்த திருமணதிற்கு ஒத்துகொள்ள ஆனால் ஊரில் இருப்பவர்கள் அனைவரும் திருமணத்தை பற்றி புகழ்ந்து பேசும்போது அவர் முகத்திலும் ஒரு பெருமையும் பூரிப்பும் நிறைந்து காணப்பட்டது..
பார்த்து வெகுநாள் ஆச்சு.....திருமணத்திலாவது பார்க்கலாம் என்றபடி இரண்டாவது மச்சானை தேடிய கண்கள் அவன் ஊரில் இல்லை.......நண்பர்களுடன் கோவா சுற்றுலா சென்று இருக்கிறான்.திருமணம் முடிந்து தான் வருவான் என சொல்ல பட சோர்ந்து போய் இருந்தது அந்த சிறு பெண்ணின் மனம்.தோழிகள் வேறு பாரிஜாதம் உன் பாண்டி மச்சான் எங்கே என கேட்டு அவளை நச்சரிக்க அவளோ என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழித்து நின்றாள்.
பொண்ணு மாப்பிள்ளை இருவரும் கைகோர்த்து மணவரை சுற்றி வர ....பூரணியின் கைகளுடன் புகழின் கையை இணைக்க அப்போது பூரணி கையில் ஏற்பட்ட நடுக்கம் அவனுக்கு மனதில் வலியை ஏற்படுத்த.......அவனும் அவள் கைகளை அழுத்தி பிடித்து நான் இருக்கிறேன் என சொல்லாமல் சொல்ல ஆனால் கைகளின் நடுக்கம் அதிகமானதே தவிர குறையவில்லை. புகழோஅவளின் நிலை கண்டு சற்று கலங்கிபோனான் . பின்னர் மங்கள வாழ்த்துப்பாடல் நாவிதனால் வாசிக்கப்பட்டது.இந்த திருமணத்தில் இந்த பாடல் மிகவும் முக்கியமாக கருதப்படும்..பின்னர் அது முடிந்ததும் பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிகொண்டு பின்னர் மற்றவர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு இருவரும் சாப்பிட சென்றனர்.
திருமணத்தை கண்டு பெற்றோரும், உற்றார் உறவினர்களும் மகிழ்ந்து போய் இருக்க ஆனால் சந்தோசபடவேண்டியவளோ அதை கண்டு கொள்ளாமல் சாவி கொடுத்த பொம்மை போல் நடந்து கொண்டு இருந்தாள்.
இருவரையும் சாப்பிட அழைத்து சென்றவர்கள்.... இலையின் முன் அமர்ந்ததும் “இப்போ மாப்பிள்ளை பொண்ணுக்கு ஊட்டி விடுவாராம் என அருகில் இருந்தவர்கள் கிண்டலாக சொல்லவும்”,புகழோ ஏதும் சொல்லாமல் அமைதியாக இலையில் பார்வையை செலுத்த , பூரணியோ முகத்தை சுளிக்க ,அதற்குள் அருகில் இருந்த இன்னொரு பெண்மணி “ஏம்புள்ள எதுக்கு உன் முகம் இப்படி போகுது...உன்ற புருஷன் தான .......ஒரு வாய் நீதான் ஊட்டி விடறது....இப்பவே இந்த சிலுப்பு சிலுப்புற......என சொல்லிவிட்டு இங்க பாரு புகழு இப்பவே அடங்கிடாத...அப்புறம் ரொம்ப கஷ்டம்” என சொல்லவும்
“அட விடுக்கா.....இன்னைக்கு அவனுக்கு காரியம் ஆகணும்...அதுனால இப்படி இருக்கான்....என்ன புகழு நான் சொல்றது சரிதான” என விஷமமாக” சொல்லி ஒரு பெண் சிரிக்க
“அடிவெக்கங்கெட்டவளே ரெண்டு புள்ள பெத்தவ பேசற பேச்சா இது.......இந்த பேச்சுக்குதாண்டி உம்புருசன் உன்னை அடக்கி வச்சிருக்கான்...அப்பவும் அடங்கமாட்டேன்கிற” என சொல்லவும்....
“ம்ம்ம்ம் அதை வந்து அங்க கேட்டு பாரு தெரியும்” என தோள்பட்டையில் முகத்தை இடித்துகொண்டே சொன்னவள் பூரணியிடம் சென்று “இங்க பாருபுள்ள நான் உனக்கு நங்கை முறைதான்.....புகழுக்கு அக்கா முறை என்றவள் ...... இன்னைக்கு இந்த பையனை மடக்கினாதான் உண்டு....சண்டி மாடு இவன்....கடிவாளத்தை நல்லா இருக்கமா பிடி...இல்லை ரொம்ப கஷ்டம்” என முகத்தில் ஒரு கள்ள சிரிப்போடு சொன்னவள் “இந்த காலத்து பிள்ளைங்களுக்கு இது எல்லாம் சொல்லவே வேண்டாம் ....ஆனாலும் உனக்கு சொல்றேன்” என சொல்லவும்
அதற்குள் “ஏண்டி இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க...அங்க புள்ள அழுகுது பாரு என அவள் கணவன் வர ..... மீதிய நாளைக்கு வந்து சொல்றேன் புள்ள” என்றபடி அங்கிருந்து நகர
அவள் சென்றதும் பூரணி ஏதாவது தவறாக நினைத்து கொள்வாளோ என நினைத்து புகழ் ஓரக்கண்ணால் அவளை பார்க்க
அவளோ எதுவுமே நடக்காதது போல் சாப்பாட்டு வேலையில் கவனமாக இருந்தாள்.
டேய் புகழ் உன் நிலைமை ரொம்ப கஷ்டமாட்ட இருக்கே என மனதிற்குள் சொன்னவன் ...... அந்த நேரத்திலும் அவள் சாப்பிடுவதை அவன் மனம் ரசித்தது.
சாப்பிட்டு முடித்து பின்னர் அனைவரும் வீட்டிற்கு கிளம்பலாமா என நடராஜ் அய்யா சொல்லும்போது தான் ஒவ்வொருத்தர் முகத்திலும் பிரிவின் வலி மற்றும் புது சொந்தத்தின் பயம் வந்து நின்றது.
பெண்களை பொறுத்தவரை திருமணம் என்பது வேரோடு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வது.பிறந்த இடத்தின் உறவுகள் எல்லாம் தூரத்து சொந்தமாகிவிட இனி கணவனின் உறவுகள் மட்டுமே அவளுக்கு உரிமையாகிவிட அதை புரிந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும் வரை அந்த பெண்களின் நிலை மிகவும் கொடுமை.
உறவுகளின் நிலைமையே இப்படி என்கின்ற போது உரிமை உடையவனே அவளுக்கு அசலாக தெரிய மனம் அவனை ஏற்றுகொள்ள மறுக்க பின்னர் குடும்ப உறவுகளை அவள் மனம் ஏற்குமா?
கடமைக்காக திருமணம் என்றாலும் அதற்கு பின் வாழ்க்கையை நினைக்கும்போது அவள் மனம் கனக்க மண்டபத்தில் பலபேர் அவளை சுற்றி அமர்ந்து இருந்தாலும் தனி தீவில் இருப்பது போல அவள் உணர்ந்தாள்.
தன் மனதின் பாரத்தை பகிர்ந்து கொள்ள கூட ஆள் இல்லாமல் அவள் தடுமாறி கொண்டு இருந்தாள்.அவளது நெருங்கிய தோழிகள் இருவரும் ஏனோ மூன்று நாட்களாக அவள் கண்ணில் படவில்லை.இவளும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. நடப்பவை எல்லாம் அவளை மீறி சென்று கொண்டிருக்க வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழியில்லை என்றபின் அவள் எடுத்த முடிவுதான் இந்த திருமணம்.
அப்போது “என்னமா கிளம்பலாமா என நடராஜ் அய்யா கேட்டதும் தன நினைவில் இருந்து மீண்டவள் “ம்ம்ம் கிளம்பலாம்” என்றபடி எழுந்தவள் பெற்றோர்களை நோக்கி திரும்ப
அப்போது அவள் நகரமுடியாமல் அவள் கைகளை யாரோ பிடிக்க கோபமாக திரும்பி பார்த்தவள் .....அங்கு பட்டுவேஷ்ட்டி சட்டையில் கழுத்தில் மாலையுடன் அவள் மணாளன் புகழ் அவள் கைகளை பிடித்தபடி நின்று கொண்டு இருந்தான்.
இப்போதுதான் அவனை நேராக பார்க்கிறாள்.அவன் முகத்தின் தெளிவும், பார்ப்போரை கவரும் கண்களும் , திரண்ட தோள்களும் ,அளவான உடல்கட்டும் அந்த மாப்பிள்ளை அலங்காரம் அவனை ஆணழகனாக காட்ட சற்று நேரம் அவனை பார்த்து கொண்டு இருந்தவள்
அதற்குள் அவன் “என்ன” என்பதை போல் முகத்தை அசைக்க
அதில் சுயநினைவிற்கு வந்தவள் ...”என்ன” என அவள் அதையே சற்று கோபமாக கேட்க
அப்போது அருகில் இருந்த ஒரு பெண் “என்ன பூரணி இப்பவே மாப்பிள்ளைய மிரட்ற” என கேட்கவும்.....
“ச்ச்ச்” என சலித்தபடி முகத்தை சுளித்து கொண்டு அவள் அப்படியே நாற்கலியில் அமர......
சுற்றி இருப்பவர்கள் அவளை ஒரு மாதிரி பார்க்கவும்......
உடனே அவள் அருகில் அமர்ந்த புகழ் “எல்லாரும் பார்க்கிறாங்க.....பேசாம அமைதியா என்கூட வா.......ஏதாவது பேசி பிரச்னையை உண்டு பண்ணிடாத......இதுவரைக்கும் நீ பேசினது போதும்......இனி நான் சொல்றதை மட்டும் செய் ” என அழுத்தமான குரலில் சொல்ல
அவளோ அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்க்க
அவன் கண்களின் தீர்க்கமும்,அவன் உடலின் விறைப்பும் அவனது வார்த்தைக்கு மேலும் அழுத்தம் கொடுக்க எதுவும் பேசாமல் இயந்திரம் போல் அவன் பின்னே சென்றாள்.
திருமணம்
இருவேறு எண்ணங்களையும்
மனங்களையும் கொண்ட
இரண்டு உயிர்களை
ஒன்றாக சங்கமிக்க வைக்கும்
அழகிய நிகழ்வு!!!!!!
விண்ணை வளைத்து சிகை
அலங்காரமாய் அள்ளி முடித்து,
மூன்றாம் பிறையை நெற்றி சுட்டியாகவும்,
பூரணமற்ற வானின் கருமையை விழிகளில் தீட்டி,
விண்மீன்களே மூக்குத்தியாக அணிந்து கொண்டு,
மின்னல் கீற்றை இதழ்களில் தவழவிட்டு,
மழைத்துளிகளை மணிகளாக கோர்த்து
சங்கு கழுத்தில் பதிந்து இருக்க ....
வானவில்லை ஆடையாக உடுத்தி
வெண்மேக கூட்டம் போல்
வஞ்சி நீ அசைந்து வருகையிலே,
மனதின் சலனம் எல்லாம் மறந்து

கள்வெறி கொண்டேனடி சகியே!!!!!!
 
Top