• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அத்தியாயம் -12


திருமணம் முடிந்ததும் புகழின் வீட்டிற்குச் செல்ல மணமக்கள் தயாராகி வந்தனர். தன் வீட்டில் தன்னுடனே வளைய வளைய வந்தவள், முதல் மகளாக பிறந்ததால் செல்லமாக சீரும் சிறப்புமாக வளர்ந்தவள், இன்று அவரை விட்டுப் பிரிந்து செல்கிறாள். இதுவரை எந்த ஊருக்கும் சென்று அவள் தனியாக தங்கியது இல்லை. பார்வைக்கு பதுவுசாக தெரிந்தாலும் கோபம் என்று வந்து விட்டால் அவளை கட்டுப்படுத்த யாராலும் முடியாது... அவள் போக்கிலே சென்றுதான் அவளை சமாதானப்படுத்த முடியும். இவை எல்லாம் மனதிற்குள் ஓட புகழைப்பற்றி நன்கு தெரிந்தாலும் திருமண வாழக்கையில் யார் எப்படி என்பதை யாரும் அறிய முடியாது. திருமணம் நடந்த சூழ்நிலை வேறு மணியம்மையின் பயத்தை மேலும் அதிகரிக்க ஒரு வித கலக்கத்துடனே நின்று கொண்டு இருந்தார் அவர்..
மணமக்கள் இருவரும் மாணிக்கம் மணியம்மையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அவர்களை மனமார வாழ்த்தியவர்கள் மணியம்மை பூரணியின் கைகளைப் பிடித்து அவள் தலையை மென்மையாக வருடியவர் ... “பூரணிம்மா பார்த்து நடந்துக்கோ” என சொல்லும் முன்பே அவர் கண்களில் கண்ணீர் வர அதை பார்த்ததும் அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் எல்லாம் சேர்ந்து கேவலுடன் வெளிவர தாயின் தோளில் சாய்ந்து தேம்பித்தேம்பி அவள் அழ அதை கண்டதும் மாணிக்கத்தின் மனம் சற்று அதிர்ந்து போனது .
தான் செய்தது தவறோ என அவர் ஒரு நிமிடம் யோசிக்க அதற்குள் அங்கு வந்த நடராஜ் ஐயா “என்னப்பா நேரமாச்சு கிளம்பலாமா” என கேட்கவும் மாணிக்கம் ஏதும் பேசாமல் தலைஅசைக்க, பூரணியோ கண்களில் ஏக்கத்துடன் அவர்களை விட்டு பிரிந்து காரில் புகழுடன் ஏறினாள்.
“நாங்க எல்லாம் உன்கூட தான் ஊருக்கு வரோம் பூரணி நீ அழுகாத ” என பாரி அவள் அருகில் வந்து சொல்லவும் அவள் கைகளை இறுக்கமாகப் பற்றி கொண்ட பூரணி“நீயும் என் கூட கார்ல வா பாரி” என சொல்லும்போதே அவள் குரல் நடுங்க அதைப் பார்த்துக் கொண்டிருந்த புகழும் “நீயும் கூட வா பாரி” என சொல்லவும் பாரியும் அவர்களுடன் சேர்ந்து காரில் அமர்ந்தாள்..
கார் ஓலயபாலயத்தை நோக்கிச் செல்ல பின்னால் உறவினர்கள் எல்லாம் செல்ல திடீரென்று மாணிக்கம் வண்டியை நிறுத்தியவர்” நீ மட்டும் அவங்க கூட போயிட்டு வா மணியம்மை” என சொல்லிவிட்டு அவர் வெள்ளியம்பாளையத்தை நோக்கி தனது வண்டியை திருப்பினார். பூரணியின் வாடிய முகமும் அவளது அழுகையும் அவரது மனதை பிசைய, அவர் தவறு செய்யவில்லை என்றாலும் தனது மகளின் ஆசையை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்ற குற்ற மனப்பான்மை அவரை இம்சிக்க, மேலும் எந்த திருமணத்திற்காக சொந்த மச்சினனிடம் வருத்தம் வந்ததோ இன்று அவர் குடும்பத்திற்கே தனது மகளை கொடுக்க வேண்டிய நிலை வந்து விட்டதே என எண்ணியவரின் மனம் வருந்த திருமணத்திற்கு முன் இதை பற்றி நன்கு யோசித்து வேறு வழி இல்லாமல் எடுத்த முடிவுதான் இது என்றாலும் ஏனோ இப்போது அவரது சுய கௌரவம் தடுக்க அங்கு செல்லாமல் திரும்பி வந்துவிட்டார்.
பத்து நாட்களுக்கு முன் புகழ் அவரது மருமகன் என யாராவது பேசி இருந்தால் அவர்களின் நிலைமை அதோ கதி தான்....... ஆனால் இன்றோ அதே குடும்பத்தில் தனது மகளை மருமகளாக அனுப்பிவைத்திருக்கிறார்மாணிக்கம்...... நினைத்து பார்க்கும்போதே அவருக்கே ஆயாசமாக இருக்க என்னஎன்னவெல்லாம் நடந்துவிட்டது.... அன்று அவர்கள் பேசிய பேச்சிற்கு இதைத் தவிர சிறந்த பதிலடி வேறு இல்லை...... என்ன மாதிரியான வார்த்தை பேசிவிட்டார் மாமா என நினைக்கும்போதே மாணிக்கத்தின் உடல் சிலிர்த்து அடங்கியது. அந்த நினைவுகள் அவர் கண் முன்னே ஓடியது.
மனைவி, மகளின் சிரித்த முகம் அவர் மனதிற்கும்ஒரு நம்பிக்கையை கொடுக்க அவரும் உற்சாகத்துடன் தான் மறுநாள் காலை நடராஜ்ஐயாவுடன் தமக்கையின் வீட்டிற்கு சென்றார் மாணிக்கம்.
அந்த நேரத்தில் அவரை எதிர்பார்க்காத கோமதியோ ஆச்சரியத்துடன் “தம்பி.. வா வா” என்றவர் உடன் வந்திருக்கும் நடராஜ் ஐயாவையும் வரவேற்றார்.
சிறிது நேர நல விசாரிப்புக்கு பின்னர் “என்ன தம்பி ஏதாவது சோலியா இந்த பக்கம் வந்தியா” என கேட்கவும்
“இல்லக்கா மாமவ பார்த்து பேசலாம்னு வந்தேன்’” என்றார் மாணிக்கம்.
“மாமாகிட்ட பேசணுமா.... என்ன பேசணும் தம்பி” என இழுத்த கோமதி “எதை பத்தி தம்பி... கண்ணாலத்தை பத்தியா” என கேட்கும்போதே அவர் குரல் உள்ளே செல்ல
“ஆமாக்கா உங்க பேச்சை எல்லாம் நம்பி தான் நான் மாமாகிட்ட பேசாம இருந்திட்டேன்... அதான் இப்போ பேசலாம்னு வந்தேன்” என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே
“அடஅட வா மாணிக்கம்...... என்ன இந்த நேரத்துல இந்த பக்கம் என கேட்டுக் கொண்டேஅங்கு வந்த கோமதியின் கணவர் நேத்து ஊருக்கு வந்தப்பக் கூட வரேன்னு சமாச்சாரம் ஒன்னும் சொல்லலை” என்றபடி சோபாவில் அமர்ந்தார்.
“இல்லை மாமா அது வந்து” என மாணிக்கம் இழுக்க
அதற்குள் அருகில் இருக்கும் நடராஜ் ஐயா “அது வந்துங்க ஒரு முக்கியமான விஷயமா உங்களை பார்த்துப் பேசிட்டு போலாம்னு தான் வந்தோம்” என பெரியமனிதராக பேச்சை ஆரம்பித்தார்.
என்கிட்டே என்ன பேசணும் என புரியாமல் கோமதியின் கணவர் இருவரையும் பார்க்க
பெரியவர் மாணிக்கத்தை பார்க்க அவரோ அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருந்தார். பூரணியின் முகத்தை பார்த்ததும் எப்படியாவது மாமாவிடம் பேசி பூரணி அழகன் திருமணத்தை நடத்த வேண்டும் என்ற முடிவோடுதான் கிளம்பி வந்தார் மாணிக்கம்.. ஆனால் இப்போது அதை பேச நினைக்கையில் அவரது மனமோ ஊருக்கு நியாயம் சொல்பவராக இருந்துகொண்டு பலர் உன் பேச்சை கேட்க காத்திருக்க ஆனால் நீயோ இங்கு இன்னொருவரிடம் உதவி வேண்டி வந்திருப்பது உனக்கே கேவலமாக இல்லை என அவரை கேள்வி கேட்க.... பரம்பரை பரம்பரையாக பெரிய மனிதராக எதற்கும் தலை வணங்காமல் நின்ற மாணிக்கம் இன்று பெண்ணிற்காக அக்கா கணவர் முன் இப்படி வந்து பேசவேண்டுமா என்ற பரம்பரை கௌரவம் தடுக்க..... எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.
அவரின் முகத்தை பார்த்தே அவரது மனநிலைமையை புரிந்து கொண்ட அந்த பெரியவர்.... “அது வந்துங்க நம்ம அரசிக்கு கண்ணாலம் பேசி முடிச்சிருக்கிறதா மாணிக்கம் சொல்லுச்சுங்க என ஆரம்பித்து சிறிது நேரம் அதை பற்றி பேசிவிட்டு அப்புறம் இன்னொரு விஷயம்ங்க .....நீங்க எதோ பொண்ணு கொடுத்து பொண்ணு கட்டறதா கேள்விப்பட்டோம் ....... நம்ம சொந்தத்துல பொண்ணு இருக்கும்போது எதுக்கு அசல்ல போய் பொண்ணு கட்டணும்...... நமக்குள்ளே இருந்திட்டா ஒன்னுகுள்ள ஒண்ணா போய்டும்லங்க” என அவர் மெதுவாக பூரணி பேச்சை ஆரம்பித்தார்.

மாணிக்கம்கூட பெரியவர் இப்படி சொல்வார் என எதிர்பார்க்கவில்லை. இது இரண்டு போரையும் பாதிக்காமல் பேசுவது போல் இருந்தது. அதனால் மாணிக்கமும் நிமிர்ந்து அமர்ந்து ஆமாம் என்பது போல் தலை அசைத்து கொண்டு இருந்தார்.
 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
நீங்க என்ன சொல்ல வரீங்க என கோமதியின் கணவர் ஒரு மாதிரி குரலில் கேட்டதும்
“இல்லை நம்ம பூரணி இருக்கும்போது அழகன் தம்பிக்கு வெளியில எதுக்கு பொண்ணு எடுக்கணும் என அவர் இழுக்க .
“நாங்க ஒன்னும் வெளியல பொண்ணு எடுக்கலை... சொந்ததுலதான் பொண்ணு எடுக்கறோம்”என அவர் சாதரணமாக சொன்னதும்
“‘என்னது சொந்தமாஆஆஅ” என பெரியவரும் மாணிக்கமும் ஒரே நேரத்தில் கேட்க
‘ஆமா மாணிக்கம் நம்ம பொண்ணு கொடுத்தோம்னா அவங்க எனக்கு சொந்தம் தான..... அதான் ஐயா சொன்ன மாதிரி ஒன்னுக்குள்ள ஒண்ணா போயடும்ல” என அவர் சொல்லவும்
மாணிக்கமோ “இல்லை மாமா அது வந்து” என ஆரம்பிக்கவும்
“இங்க பாரு மாணிக்கம் உங்க அக்கா இத பத்தி என்கிட்டே பேசுனா..... ஏற்கனவே இந்த மாதிரி கல்யாண விஷயத்துல நமக்குள்ள ஒரு பிரச்சனை இருக்கு.... இப்போ மறுபடியும் அது ஆரம்பிக்கவேண்டாம். எனக்கு உங்க வீட்ல சம்பந்தம் பண்ண விருப்பம் இல்லை.... சரி எனக்கு நேரமாச்சு நீங்க இருந்து சாப்பிட்டு போங்க” என சொல்லிவிட்டு அவர் பேச்சை முடித்துக்கொண்டு எழுந்தரிக்க
“என்ன தம்பி இப்படி வெட்டு ஒன்னு துண்டு ரண்டுன்னு பேசறிங்க...... சின்ன புள்ளைங்க இரண்டும் ஆசப்படுதுங்க என்றவர் கண்ணாலத்தை பத்தி நீங்க அழகன் தம்பிகிட்ட பேசுனிங்களா?” என பெரியவர் பேச்சை அழகன் பக்கம் திருப்பவும்
உடனே கோமதியின் கணவர் “இங்க பாருங்க பெரிய மனுசனா இருக்கிறதனால இவ்ளோ நேரம் உட்கார வச்சு பேசினேன்... என் பையன் கிட்ட என்ன பேசணும் என்ன பேசக்கூடாதுனு எனக்கு தெரியும் என்று அழுத்தமாக சொன்னவர்..... பின்னர் இவனுக குடும்பத்துக்கு இதே பொழப்பா போச்சு... எப்போ பார்த்தாலும் கல்யாண விஷயத்துல வம்பு பண்றதே இவனுக வேலை “என கோபமாக அவர் வார்த்தைகளை கொட்ட
“நீங்க பழசை எல்லாம் மனசுல வச்சுக்கிட்டு பேசாதீங்க மாமா...... உங்களுக்காக தான் அந்த சொந்தமே வேண்டாம்னு நான் ஒதுங்கி இருக்கேன்” என மாணிக்கம் வேகமாக சொன்னதும்
“நான் ஒன்னும் உன்னை ஒதுங்க சொல்லலை மாணிக்கம்... நீ சொன்ன வாக்கை காப்பாத்தலை..... மத்தபடி நீ உன் மச்சினன்கிட்ட சண்டை போட்டதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.... வேண்டாம் மாணிக்கம் பழசை எல்லாம் கிளற வேண்டாம். அது ரெண்டு பேருக்குமே நல்லதில்ல.....எனக்கு தலைக்கு மேலகல்யாண வேலை இருக்கு” என சொல்லிவிட்டு அவர் வீட்டின் வாசலை பார்க்க
வீட்டை விட்டு போங்க என சொல்லாமல் அவர் சொல்வதை புரிந்து கொண்ட மாணிக்கம் சட்டென்று கோபத்துடன் “இங்க பாருங்க மாமா.... நாங்க ஒன்னும் உங்க மகனை கேட்டு வரலை.... உங்க மகன்தான் எனக்கு உங்க பொண்ண திருமணம் செஞ்சு கொடுங்கன்னு எங்க வீட்ல திருவிழாக்கு வந்தப்போ கேட்டான்.... நீங்களும் அன்னைக்கு நடந்ததை பார்த்திட்டுதானே இருந்தீங்க” என சொல்லவும்
இதை எதிர்பார்க்காத கோமதியின் கணவர் உடனே கோபமாக “என்ன மாணிக்கம் நீ வம்பு பண்றதுக்குனே வந்து இருக்கியா... அவன் சிட்டில வளர்ந்த பையன்... உறவுமுறை பத்தி தெரியாது.... அதான் எனக்கு உரிமை இல்லயான்னு பொதுபடையா கேட்டு இருக்கான்.... உடனே நீ அதை இப்படி மாத்தி சொல்றியா என்றவர் படிக்காத பட்டிகாட்டுப் பொண்ணவச்சுக்கிட்டு படிச்சு நல்ல வேலையில அதும் இப்போ வெளிநாட்டுல வேலை பார்க்கிறான்னு சொன்ன உடனே என் மகன் தலையில கட்டி வைக்கலாம்னு பார்க்கிறியா..... அதுக்கு வேற ஆளப்பாரு...... உங்க வீட்ல பொண்ணு எடுத்ததுக்காக என் பொண்ணு, பையனோட வாழக்கையை என்னால நாசம் பண்ண முடியாது..... உன் வீட்டு பொண்ண கட்டுனா சாணி அள்ளவும் மாடு மேய்க்கவும் தான் அதுக்கு தெரியும் வேற என்ன தெரியும்... நான் இப்போ பார்த்திருக்க பொண்ணு நல்லா படிச்சு நாகரீகம் தெரிஞ்ச பொண்ணு...... என அவர் சொல்லச்சொல்ல மாணிக்கத்தின் கோபம் தலைக்கு ஏற, கண்கள் சிவக்க, கன்னம் துடிக்க அவரை பார்த்துக் கொண்டு இருக்க
அவரோ அதை கண்டு கொள்ளாமல் மேலும் “உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ண வக்கில்லைனா என்கிட்டே சொல்லு.... நான் ஆண்டிபட்டி அரசபட்டினு நல்ல பட்டிகாட்டு மாப்பிள்ளையா பார்த்து கண்ணாலம் பண்ணி வைக்கிறேன்..... அதை விட்டு என் பையனுக்கு வலை போடற வேலையை விடுங்க.... என சொல்லி முடிக்கவும்..... கோபத்தில் கண்கள் சிவக்க வேஷ்டியை மடித்து கட்டி கொண்டு கையை ஓங்கிக்கொண்டே“யார பார்த்து என்ன வார்த்தைடா சொன்ன” என்றபடி அவர் அருகில் மாணிக்கம் வர
நடப்பதை எல்லாம் பயத்துடன் பார்த்து கொண்டிருந்த கோமதி மாணிக்கத்தின் கோபத்தை பார்ததும் வேகமாக “ஐயோ தம்பி வேண்டாம்” என கத்திகொண்டே கணவருக்கும் மாணிக்கத்திற்கும்இடையில வர, அதற்குள் பெரியவர் “மாணிக்கம் வேண்டாம்.... கொண்டான் கொடுத்தான் வீட்ல கை நீட்றது நமக்குத்தான் அசிங்கம் விடு” என அவரை இழுத்து நிறுத்தினார்.
மாணிக்கம் கை ஓங்கியதும் கோமதியின் கணவருக்கு கோபம் தலைக்கு ஏற “என்னடா பிரச்சனை பண்றதுக்குனே வந்து இருக்கியா...... நான் ஒன்னும் உன் மச்சினன் கிடையாது....... நீ எதச்சொன்னாலும் அமைதியா போறதுக்கு...... இனி உன் ஒட்டுஉறவு எனக்கு தேவையில்லை....முதல்லவீட்டை விட்டு வெளியே போ” என அவர் கத்தவும்
கோமதியோ “ஐயோ என்ன வார்த்தை சொல்றிங்க” என அலறவும்
“இங்க பாருடி உனக்கு உன் தம்பி வேணுமா... இல்லை நான் வேணுமா நீயே முடிவு பண்ணிக்கோ.... இனி உன் சொந்தம் பந்தம்னு யாராவது வீட்டு வாசபடிய மிதிச்சாங்க அப்புறம் நீ இந்த வீட்ல இருக்க முடியாது” என கோபமாக சொல்லிவிட்டு விடுவிடுவென உள்ளே சென்றவிட்டார் அவர்.
மாணிக்கமோ ஆத்திரமும் கோபமும் கொஞ்சமும் அடங்காமல் கொதித்து கொண்டிருக்க அதே வேகத்தில் “நீ என்னடா வேண்டாம்னு சொல்றது.... நான் சொல்றேன்...... உன் வீட்டு சம்பந்தம் எனக்கு வேண்டாம்...... உன்னைவிட பெரிய இடத்துல என் பொண்ணுக்கு நான் கண்ணாலம் பண்ணலை நான் மாணிக்கம் இல்லடா என சூளுரைத்தவர் வாங்க ஐயா போகலாம்” என பெரியவரை இழுத்துக்கொண்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினார்.
“தம்பி... தம்பி... அவசரப்படாத... கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கேளு”....... என்ற கோமதியின் அழுகை அவரை கொஞ்சம் அசைக்க ஆனாலும் ரோசமும் கௌரவமும் அதை தடுக்க திரும்பி பார்க்காமல் நடந்தார் மாணிக்கம்.
வண்டியில் வரும்போது அக்காவின் கணவர் சொன்ன வார்த்தைகளை நினைத்து நினைத்து ஆத்திரத்துடன் பேசிகொண்டே வர நடராஜ் ஐயாவோ “பொறுமையா இரு மாணிக்கம்.... அவன் எல்லாம் மனுசனே கிடையாது........ இனி அவன்கிட்ட நம்ம பேசவேண்டாம்...... நம்ம அழகன் தம்பிகிட்ட பேசிக்கலாம்.... உன்கிட்ட போன் நம்பர் இருக்கா என அவர் கேட்கவும் இல்லீங்க அய்யா...... அக்காகிட்டே அன்னைக்கே கேட்டேன்... உங்க மாமாவுக்குதான் தெரியும்னு சொல்லிடுச்சுங்க..... நானும் வாங்கி வைக்காம விட்டுட்டேனுங்க”...... என்றவர்
“வேண்டாங்கையா இனி அந்த பேச்சை எடுக்க வேண்டாம்... என் பொண்ணுக்கு இவனைவிட நல்ல மாப்பிள்ளையா பார்த்து கண்ணாலம் முடிக்கிறேன்... இல்லை என் பேர் மாணிக்கம் இல்லை... என்ன வார்த்தை சொல்லிப்புட்டான் என்னை பார்த்து” என கோபத்தில் ஆனால் வார்த்தைகளில் உறுதியுடன் அவர் சொல்ல அதற்கு மேல் பேசுவது உசிதம் அல்ல என நினைத்து அமைதியானார் பெரியவர்.
வாசலில் கார் வந்து நின்றவுடன் பூரணியும் மணியம்மையும் வேகமாக வெளியே வந்தவர்கள் முதலில் நடராஜ் அய்யா இறங்க அவரை பார்த்ததும் “தாத்தா என்ன சொன்னாங்க மாமா” என்றபடி பூரணி அவர் அருகில் செல்ல ஆனால் மணியம்மையோ மாணிக்கத்தின் முகத்தை பார்த்தே என்ன நடந்திருக்கும் என்பது லேசாக புரிய......
ஆனாலும் மனதில் சிறு நம்பிக்கையுடன் அவர் அருகில் வந்து “என்னங்க சொன்னாங்க” என கேட்கவும் அதுவரை இருந்த கோபம் எல்லாம் மறைந்து மகளின் முகத்தை பார்த்ததும் தன்னால் அவளுக்கு எதுவும் செய்யமுடியவில்லையே என்ற ஆற்றாமை மனதில் எழ பிரம்மை பிடித்தவர் போல் பூரணியை பார்த்து கொண்டு நின்று இருந்தார் மாணிக்கம்.
பெரியவர் ஏதும் சொல்லாமல் மாணிக்கத்தை பார்க்கவும் வேகமாக தந்தையிடம் வந்த பூரணி “அப்பா அப்பா என்ன சொன்னாங்க மாமா...... மச்சான் கிட்ட பேசுனிங்களா.... மச்சான் சரின்னு சொல்லிட்டார்தான” என ஆவலுடன் அவள் கேட்கவும் அந்த நிமிடம் மண்ணில் புதைந்துவிட மாட்டோமா என மாணிக்கத்திற்கு தோன்ற கண்களை மூடி கைகளை இறுக மடக்கி தன்னை நிலைபடுத்த அவர் முயற்ச்சிக்க
அவரையே பார்த்து கொண்டிருந்த மணியம்மை நிலைமை சரியில்லை என புரிந்து கொண்டவர்... பூரணி முதல்ல அவங்க வீட்டுக்குள்ள வரட்டும்... எல்லாம் கேட்டுக்கலாம்என்றவர் மாணிக்கமும் பெரியவரும் உள்ளே வர “போய் குடிக்க தண்ணீ எடுத்திட்டு வா” என சொல்லவும் பூரணி தண்ணீ கொண்டுவர அதை இருவருக்கும் கொடுத்த மணியம்மை பின்னர் பெரியவரிடம் திரும்பி “அய்யா என்ன நடந்ததோ அதை மறைக்காம சொல்லுங்க...... எதா இருந்தாலும் பரவாயில்லை... இவரு இப்படி இருக்கிறத பார்த்தா எனக்கு பயமா இருக்கு..... நீங்க சொல்லுங்க” என அவரை பேச சொல்ல
பெரியவரோ இனி மறைத்து எதுவும் ஆகப் போவதில்லை என உணர்ந்து நடந்தது அனைத்தையும் சொன்னார். கேட்டவுடன் தாய் மகள் இருவரும் கல்லாக சமைந்து நின்றனர்.
மாணிக்கத்தை பற்றி மணியம்மை நன்கு அறிவார். சிறு தகுதி குறைவான பேச்சுக்கூட அவர் தாங்க மாட்டார்...... ஆனால் இன்றோ இவர என்ன என்ன வார்த்தை பேசிவிட்டனர்...... ஐயோ பெத்த பெண்ணை கண்ணாலம் முடிக்க வக்கில்லாதவன் என்பது போல பேசிட்டாங்களே என மனதில் நினைத்து குமறிய மணியம்மை... வேகமாக “அப்படியா சொன்னாங்க என கோபமாக கேட்டவர் இனி அவங்களே வந்து கேட்டாலும் என் பொண்ணை நான் கொடுக்க மாட்டேன்...... யாரை பார்த்து என்ன வார்த்தை கேட்டுட்டாங்க” என சொல்லிக்கொண்டே மாணிக்கத்தை பார்க்க அவரோ என்ன பதில் சொல்வது என தெரியாமல் சிலை போல் அமர்ந்திருக்க... அவர் அருகில் சென்ற மணியம்மை “இங்க பாருங்க... நீங்க கவலைப்படாதீங்க...... அவங்க பையனை விட நல்ல இடத்துல நம்ம பொண்ணுக்கு கண்ணாலம் பண்ணலாம்... நீங்க மனசு விட்டுறாதிங்க என ஆறுதல் சொன்னார்.
இவர்கள் எல்லாம் பேசிக்கொண்டு இருக்க பூரணியோ முழு நம்பிக்கையும் விட்டு போக உயிரில்லா உடலாக அங்கே கிடந்தாள். மாணிக்கத்தின் நிலையை பார்த்து நடராஜ் அய்யா அவருக்கு ஆறுதல் சொன்னவர்

“இங்க பாரு மாணிக்கம்... நீ எதுக்கும் கவலைபடாத...... நம்ம பூரணிக்கு இதவிட நல்ல மாப்பிள்ளை அமையும்... அதுக்கு நான் பொறுப்பு” என சொல்ல
“என்னங்கையா சொல்றிங்க” என மாணிக்கம் கேட்டதும்
“என் தங்கச்சி மச்சினன் மகன் பட்டணத்துல படிச்சுட்டு நல்ல வேலையில இருக்கான். நல்ல இடம்... ஒரம்பரை எல்லாம் நம்ப ஓரம்பரைதான்.... ஒன்னும் பிரச்சனை இல்லை... நான் சொன்னா கேட்பாங்க..... நீ மட்டும் சரின்னு சொன்னா உடனே பேசிமுடிச்சுடலாம் என்ன சொல்ற” என அவர் கேட்கவும்
“அய்யா என்னங்க இது.. இப்படி திடுதிப்புன்னு கேட்கிறீங்க” என மணியம்மை கேட்கவும்
“இல்லை மணியம்மை..... கோமதி புருஷன் பேசின பேச்சு கேட்டு எனக்கே ரத்தம் கொதிச்சுடுச்சு...... அப்படி பேசிட்டான் அவன்...... கிராமாத்தானா அவனுக்கு அவளோ இளக்காரமா போச்சா.......... அவனுக்கு முன்ன நம்ம கண்ணாலத்தை முடிக்கிறோம்.... நீங்க ரண்டு பேரும் யோசிச்சு வைங்க... எனக்கு நாளைக்கு பதில் சொன்னா போதும் என தீர்மானமாக சொன்னவர் பின்னர் பூரணியின் அருகில் சென்றவர் “இங்க பாரு பூரணி..... நம்மளை ச்சீய்ன்னு சொன்னவங்க முன்னாடி நாம சீரும் சிறப்பும்மா வாழ்ந்து காட்டனும்...... இப்போ ஒன்னும் குடிமுழுகி போகலை......... அந்த பையன் ஆசைபட்டான்..... அதனால நம்ம சரின்னு சொன்னோம்.... இப்போ வேண்டாம்னு சொல்றாங்க...... நம்ம வேற இடம் பார்க்கலாம்..... நீ மனச போட்டு குழப்பிக்காத...... உன்ன பெத்தவங்க மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்ல” என கேட்கவும்
அவளோ என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழிக்க
“சொல்லும்மா” என அவர் அழுத்தி கேட்டதும்
எப்போதும் கம்பீரமாக அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கும் தந்தை இன்று தளர்ந்து போய் வாடிய முகத்துடன் அமர்ந்திருக்க அதை பார்த்ததும் பூரணியின் உள்ளம் நைந்து போக
தாயை பார்த்தவள் அவர் கண்களில் இருந்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் அவளை ஏதோ செய்ய
மேலும் குழம்பிய சூழ்நிலையில் எதுவும் யோசிக்க முடியாமல் அவள் தலையை ஆட்ட உடனே நடராஜ் அய்யா உற்சாமாக “அப்புறம் என்ன மாணிக்கம் உன் பொண்ணே சரின்னு சொல்லிட்டா...... நீ கவலைப்படாதே கல்யாணத்தை ஜாம்ஜாம்னு நடத்திடலாம்” என சொல்லிவிட்டு எழுந்தவர்
“இங்க பாரு மணியம்மை இனி கண்ணாலத்தை பத்தி மட்டும் யோசிங்க..... வேற எந்த நினைப்பும் வேண்டாம்... முதல்ல மாணிக்கத்தை நல்லா தூங்க சொல்லு ... நான் நாளைக்கு காலையிலே வரேன்” என சொல்லிவிட்டு கிளம்பினார்.
அவர் சென்றதும் சிறிது நேரம் அப்படியே அவரவர் மனநிலையில் அமர்ந்திருந்தவர்கள் மணியம்மைதான் முதலில் சுதாரித்து இருவரையும் சாப்பிட அழைத்தாள்.
இருவரும் சாப்பிட மறுக்க பின்னர் தனியாக ஒவ்வொருவரிடமும் அடுத்தவரின் மன நிலைமையை எடுத்துகூறி அவர்களை சாப்பிட வைத்த மணியம்மை இரவு நேரத்தில் மாணிக்கத்திடம் தனது மனதில் உள்ளதை கூற அவருக்கும் அவர் சொல்வது சரியாக பட சற்று நிம்மதியாக உறங்கினார்..
பூரணியோ என்ன நடக்கிறது என புரியாமல்....வாழ்க்கையே இருட்டு ஆனது போல் ஒளி இழந்து தெரிய குழம்பி போய் இருந்தாள்.
மறுநாள் திருமண பேச்சு வெளியே கசிய ஊரில் பலரும் பலவாறு பேச ஆரம்பித்துவிட்டனர். மூன்று நாட்களாக வெளியே வராத பூரணி அன்று கோவிலுக்குச்செல்லவெளியே வர அப்போது ஒரு பெண்..... “என்னமா ஆட்டம் போட்டா...... நான் கூட அந்தபையந்தான் ஆசைபட்டானுநினைச்சா... இப்போ இந்த குமரிதான் அவன் பின்னாடி சுத்தி இருக்கா.....தகுதிக்கு தகுந்து ஆசைப்பட்டு இருக்கணும்........ தகுதி மீறி ஆசைபட்டா இந்தநிலைதான்” என ஜாடை பேச்சு பேச மனதிற்குள் ஒடிந்து போனாள் பூரணி.
அன்று காலை பொழுது மாணிக்கம் தோட்டத்திற்கு சென்று கொண்டு இருக்க..... அந்த ஊரின் முக்கியஸ்த்தர் ஒருத்தர் அவரை பார்த்ததும் அருகில் வந்து “என்ன மாணிக்கம் இப்படி ஆகிடுச்சு என துக்கம் நடந்தது போல் விசாரித்துவிட்டு அந்த பையன் ஊர்ல அத்தன பேருக்கு முன்னாடி கையை பிடிச்சு இழுத்திட்டு போனானாம்.... உன் பொண்ணும் அமைதியா போச்சாம்... நம்ம ஊர்ல இதெல்லாம் வழக்கமே இல்லை.... புதுசா வவுசு வந்து ஆடுனா இப்படிதான் இருக்கும்..... ஊருக்கு பெரிய மனுசனா இருக்கிற... இது தெரியாதா உனக்கு என்னப்பா நீ” என இறுதியில் அவரை ஏளனமாக சொல்லிவிட்டு போக நொறுங்கி போனார் அவர்..
வீட்டில் இருந்து கிளம்பியவர் உடனே திரும்ப வர மணியம்மை என்ன என கேட்கவும் ஆத்திரம் பொறுக்காமல் கொட்டி தீர்த்தவர் “என்னை பார்த்து கூழ கும்பிடு போடறவன் எல்லாம் இன்னைக்கு என்னை ஏளனமா பேசறாங்க” என சொல்லும்போதே அவர் குரல் கம்ம அதை கேட்டுகொண்டிருந்த மணியம்மையோ கண்ணீர் வடிக்க அதை பார்த்த பூரணி நொந்து போனாள்.

அப்போது அங்கு நடராஜ் அய்யா வர அவரை பார்த்ததும் வேகமாக அவரிடம் சென்ற மாணிக்கம்...... “அய்யா நீங்க சொன்ன அந்த சம்பந்தத்தை பேசிமுடிங்க...... இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு பார்த்தோம்... ஆனா நடக்கிறதை எல்லாம் பார்த்ததா உடனே கண்ணாலத்தை முடிச்சு ஆகணும்....... நீங்க மாப்பிள்ளை வீட்ல பேசுங்க” என படபடவென மாணிக்கம் பேசிகொண்டே செல்ல
அவரோ எதுவும் பேசாமல் தலை குனிய
“என்னங்கையா நான் உங்ககிட்ட தான் பேசிட்டு இருக்கேன் என்றவர் இன்னைக்கு அந்த ஆளு என்ன வார்த்தை சொன்னான் தெரியுமா ? என நடந்தததை சொன்னவர் அவன் எல்லாம் அப்படி பேச நாம இடம் கொடுத்திட்டோம். நீங்க அந்த மாப்பிள்ளையை முடிங்க “ என்றதும்
உடனே “நானும் அத பத்திதான் உன்கிட்ட பேசவந்தேன் மாணிக்கம் என்றவர்... இந்த பேச்சு எனக்கு இரண்டு நாளைக்கு முன்னடியே வந்திடுச்சு...... இனியும் வெளியில மாப்பிள்ளை தேடி கண்ணாலம் செஞ்சா இப்போ இல்லைனாலும் பின்னாடி இது பிரச்சனை ஆகலாம் ” எனச்சொல்லவும்
“என்னங்கையா இது... நீங்களே இப்படி சொல்றிங்க” என மணியம்மை பதறிப் போய்கேட்க
“எனக்கே கஷ்டமாதான் இருக்கு மணியம்மை... ஆனா என்ன பண்றது...... எல்லாத்தையும் நாம பார்த்து தானே ஆகணும்.... பொண்ணு நம்ம பொண்ணு ஆச்சே....... செய்யறதுக்கு முன்னாடி பலமுறை யோசிச்சு செய்யணும்ல” என சொல்லவும்
இதை கேட்டதும் அதுவரை இருந்த நிமிர்வு கொஞ்சம் குறைந்து தளர்ந்து போய் சற்று தடுமாறிய மாணிக்கம் அருகில் இருக்கும் திண்ணையில் அமர
அவரது தளர்வை பார்த்து வேகமாக ஓடி வந்து அப்பாஆஆ என பூரணி அவரை பிடித்துக்கொண்டாள்.
“என்னங்க ஆச்சு என்றபடி மணியம்மை அருகே வரவும்... எனக்கு ஒண்ணுமில்லை மணி....... எல்லாரும் இப்படி பேசாறாங்கலே.... பச்சை குழந்தைடி இவ......... இவளைப்போய் என சொல்லி பல்லை கடித்தவர் இவங்களை என்ன பண்ணலாம்” என ஆத்திரத்துடன் பேசவும்
“இங்க பாரு மாணிக்கம்... இனி ஆத்திரப்பட்டு பிரயோஜனம் இல்லை....... நான் சொன்னா நீ திட்டுவ... இருந்தாலும் சொல்றேன்... இதுக்கு நல்ல தீர்வு இருக்கு.... ஆனா அது உன் கையிலதான் இருக்கு” என அவர் சொல்லி நிறுத்த
“என்கைல என்ன இருக்குங்க அய்யா.... என் பொண்ணுக்காக என் உசிரைகூட கொடுப்பேன்....... ஆனா இதுல நான் என்ன பண்ண முடியும்... மறுபடியும்அவங்க கால்ல போய்விழ சொல்றிங்களா” என மாணிக்கம் கேட்கவும்
“நீ யார் கால்லயும் விழவேண்டாம். நீ சரின்னு சொன்னா போதும்... மத்தது எல்லாம் நாங்க பேசிக்கறோம்”என அவர் சொல்லவும்
“நான் என்ன பண்ணனும் சொல்லுங்க”.... என மீண்டும் கேட்கவும்
“நாங்க சொல்ற மாப்பிள்ளைக்கு நீ சரின்னு சொல்லணும்” என பீடிகை போட ......
“அய்யா ஆரம்பத்துல இருந்து நடந்தது எல்லாமே உங்களுக்கு தெரியும்... அதுனால நீங்க என்ன செஞ்சாலும் எனக்கு சம்மதம்” என மாணிக்கம் உறுதியாக சொல்ல
“அப்போ நம்ம புகழ் தம்பியை பூரணிக்கு பேசி முடிச்சிடலாம்” என அவர் சொல்லி முடிக்கவும்
“என்னது புகழாஆஆ “ என கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் கேட்க
அவரோ “ஆமா மாணிக்கம்...... இனி வேற யாருக்கு நம்ம கண்ணாலம் செஞ்சாலும் இந்த சொல்லுமறையாது..... இப்போ சரின்னு சொன்னாலும் கொஞ்ச நாளைக்கு பிறகு ஒரு வார்த்தைசொல்லிட்டா நம்ம புள்ள மனசு தாங்காது. அப்புறம் இழப்பு நமக்குத் தான். அதான் யோசிச்சு பார்த்தேன். புகழும் உரிமைக்காரன்தான....... ஏன் சொல்லப்போனா அவனுக்குத் தான் முதல் உரிமையே இருக்கு...... அதுனால அவனுக்கே பூரணியை கண்ணாலம் பண்ணி வச்சிடலாம்” என அவர் சொல்லி முடிக்கவும் மூவரும் அதிர்ந்து நின்றனர்.


ஊரெல்லாம் சல்லடை போட்டு
தேடி கண்டுபிடித்து நன்கு யோசித்து
மனம் அதை அலசி ஆராய்ந்து
நமக்கும் நம் பிள்ளைக்கும்
பொருத்தமானவன்(ள்) என
நாம் முடிவு செய்ய ஆனால்
இன்னாருக்கு இன்னார்தான்
பொருத்தம் என பிறக்கும்போதே
அவன் எழுதி வைத்திருக்க!
இடைத்தரகர்கள் போல் நாம்
புலம்பி என்ன பயன் ?
விதியை ஒருவன் மதியால் வெல்ல
வென்றுவிட்ட சந்தோசத்தில் அவன் இருக்க
அவன் தலையில் விதித்ததே அது தான்

என விதி அவனை பார்த்துச் சிரித்தது!!!!!!!!!!!.
 
Top