• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விஜி ரவி - நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

வானம் பொத்துக்கொண்டாற் போல் மழை கொட்டிக் கொண்டிருந்தது. திறந்திருந்த கதவு , ஜன்னல்கள் வழியே மழைச்சாரல் வீட்டிற்குள் வர ஆரம்பிக்க, சிவராமன் அவற்றை சாற்றினார். ஒரு நாற்காலியை ஜன்னலருகே எடுத்துப் போட்டு அமர்ந்துகொண்டு மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

‘’இயற்கையின் மிகப்பெரிய வரப்பிரசாதம் மழை அல்லவா....? காடு, மேடு, பள்ளம், வயல், வரப்பு, மலை என எல்லா இடத்திலும் பாரபட்சமின்றி கருணையோடு பொழியும் மழை ஒரு ஆச்சரியம். அது ஒருஅமிர்தவர்ஷிணி...” என்ற எண்ணம் அவருள் இழையோடியது.

‘’என்னப்பா.... மழையை இவ்வளவு ஆவலா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க....?’’ எதிரில் அன்புக்கரசி கையில் தேநீர் கோப்பையுடன் நின்றிருந்தாள்

. ‘’மத்தியானத்துலேயிருந்து இந்தா... அந்தானு போக்கு காட்டிட்டு இப்ப அடிச்சுப் பெய்ய ஆரம்பிச்சுருச்சு. அதென்னவோ தெரியலைமா.....மழைல நனையறது... உக்காந்து மணிக்கணக்காஅதை வேடிக்கை பார்க்கறது.. மழை நின்னதும் மரத்துக்கடியில போய் நின்னுக்கிகிட்டு கிளைகளை ஆட்டி மழைத்துளிகளை தலையில அபிஷேகம் பண்ணிக்கறது ..... இதெல்லாம் ரொம்ப பிடிச்ச விஷயங்கள்... அதோட துளித்துளியா டீ குடிச்சிட்டே மழையை வேடிக்கை பாக்கறது இன்னும் சுவாரஸ்யம்....’’ என்றபடி தேநீர்க் கோப்பையை எடுத்துக் கொண்டார்

‘’ஆஹா... ! என்ன அருமையா ஏலக்காய் மணத்தோடு இருக்கு...’’ என சிலாகித்தபடி பருகினார்.

‘’அச்சச்சோ.... மறந்தே போய்ட்டேன்... காலைல மொட்டை மாடியில துவைச்ச துணிகளை காயப் போட்டிருந்தேன். இப்ப எல்லாம் நனைஞ்சு போயிருக்குமே...’’ என்றாள் அன்பு கையை உதறியபடி.

‘’கவலைப்படாத அன்பு..... நான் சாயந்திரம் நாலு மணிக்கே மேலே போய் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து மடிச்சு வச்சிருக்கேன். அங்கே பாத்தியா....?’’ என அவர் சுட்டிக்காட்ட.... ஹாலின் மூலையில் இருந்த ஸ்டூலின் மேல் துணிகள்அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தன. ‘’நைட்டு சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு வச்சிருக்கேன். நீ குருமா மட்டும் வச்சிரு..... நான் அப்புறமா வந்து சப்பாத்தி தேய்ச்சு தர்றேன்....’’

‘’ ஓ... தேங்க்ஸ் பா... ஆனாலும் நீங்க அநியாயத்துக்கு வேலைய இழுத்துப் போட்டுக்கறீங்க... ‘’

‘’அப்பான்னு சொல்லிட்டு தேங்க்ஸ் சொல்றது நியாயமா...?’’

‘’ஓ.கே. ஓ.கே. தேங்க்ஸ் வாபஸ்...’’ என்றாள் சிரித்தபடி.

‘’ ஆமா... ராஜ் எங்க...?’’

‘’ அவரு ரூமில லாப் டாப்ல ஒர்க் பண்ணிட்டிருக்கார்ப்பா. ஏதொவொரு முக்கியமான ரிபோர்ட் அனுப்பனுமாம்...’’

‘’தாத்தா.... ஹோம்- ஒர்க் முடிச்சிட்டோம்’’ என்றபடி சம்யுக்தாவும் அர்ஜுனும் அவரருகே வந்தனர். ‘’இப்படி மழை பெய்யுது.... எப்படி தாத்தா பார்க்குக்கு போய் விளையாடுறது....?’’ என்றான் அர்ஜுன் முகம் சுளித்தபடி.

‘’நாளைக்குப் போய் விளையாடலாம் ராஜா.... அதுக்குப் பதிலா இப்ப நான் உங்களுக்கு கதை சொல்றேன். சரியா...?’’ என்றவுடன் ‘ஹையா... என்ன கதை தாத்தா..?’’ என்றபடி அர்ஜுன் அவர் மடி மீது ஏறி அமர்ந்து கொண்டான். சம்யுக்தா அவரருகில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்துகொண்டாள்.

‘’ அபிமன்யு கதை...’’ அவர் சொல்ல ஆரம்பிக்க ஒரு புன்னகையுடன் எழுந்து கொண்டாள் அன்பு.

இரவு உணவின் போது ‘’இன்னிக்கி காலைல முரளி போன் செஞ்சிருந்தான்’’
என்றார் சிவராமன்.

‘’எப்படி இருக்கான்பா அவன்...?’’ என்றான் ராஜ்குமார்.

‘’ம். நல்லாத்தான் இருக்கான். அவனுக்கென்ன...? என்னை எப்ப அங்கே கூட்டிட்டுப் போறதா உத்தேசம்னு கேட்டேன். சரியா பதில் சொல்லலை. மழுப்பறான்பா..’’ என்ற போது அவர் குரல் கம்மியது.

‘’ சரி.சரி. அப்புறம் பேசலாம். முதல்ல சாப்பிடுங்க’’ என்றாள் அன்பு. அதன் பின் அங்கே மௌனம். முன்பே சாப்பிட்டு முடித்த குழந்தைகள் இருவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர்.

நான்கைந்து மணி நேரம் பெய்து தீர்த்தபின் மழை ஓய்வெடுத்துக் கொண்டது போல சிறு தூறலாக மாறி இருந்தது. தன்மேல் கால் போட்டுக் கொண்டு தூங்கும் ஐந்து வயது அர்ஜுனையும், பார்பி பொம்மையை அணைத்தபடி உறங்கும் ஏழு வயது சம்யுக்தாவையும் வாஞ்சையுடன் பார்த்தார் சிவராமன். தன் சொந்த தாத்தாவைப் போல நினைத்து அன்பு காட்டும் இந்தக் குழந்தைகளுக்கும், பெற்ற தந்தையைப்போல் பாசம் பொழியும் ராஜ்குமாருக்கும் அன்புக்கரசிக்கும் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்...?’’

சிறிதும் ரத்த பந்தம் இல்லாத இந்த நல்ல உள்ளங்கள் தன் மீது இவ்வளவு அன்பு காட்டுகையில் தான் பெற்ற ஒரே மகன் முரளிக்கு எப்படி தன் மேல் ஒரு சிறிதும் பாசம் இல்லாமல் போயிற்று என்பதை நினைத்து அவருக்கு வியப்புத்தான் எழுந்தது . பிறந்தது ஒற்றைப் பிள்ளை என்று தன் தகுதிக்கு மீறி நகரின் பிரபலமான பள்ளியில் படிக்க வைத்தார்.அதேபோல கல்லூரி படிப்பும் அப்படித்தான். ஜானகி உயிருடன் இருந்தவரை ‘’வேற யாருக்கு செய்யப்போறோம்....? இருக்கிற ஒத்தப் பிள்ளைக்குத் தானே.... ?’’ என்று பார்த்துப் பார்த்துச் செய்வாள்.

சிறுவயது முதலே பிடிவாத குணம் உடைய முரளி தான் நினைப்பதை சாதிக்க எப்போதும் ஒற்றை காலில் நிற்பது வழக்கம். படிப்பு, வேலை, திருமணம் என்று எல்லா விஷயத்திலும் அது தொடர்ந்தது. உள்ளூரிலேயே நிறைய பொறியியல் கல்லூரிகள் இருக்க, நான் டெல்லி சென்று தான் படிப்பேன் என்று பிடிவாதம் பிடித்து அங்கேயே படித்தான். அதன்பின் வேலை பார்த்ததும் மும்பையில். ‘’ இந்த பக்கம் சென்னை, பெங்களூரில் ஏகப்பட்ட கம்பெனிகள் இருக்கே.... ஏம்பா அவ்வளவு தூரம்.... ?’’ என்று கேட்ட ஜானகிக்கு, ‘’இல்லமா... மும்பை மாதிரி வராது. உள்ளூரிலேய உழண்டுக்கிட்டு இருக்கனுமா....? ‘’ என்றான்.

தான் சம்பாதித்த பணத்தில் ஒருமுறைகூட தன் பெற்ற அம்மாவிற்கு புடவையோ ஏன் ஒரு ரவிக்கைத் துண்டு கூட வாங்கித் தந்ததில்லை அவன். அதைப்போல் தன்னுடன் பணிபுரியும் ரமாவை அவனே தேர்வு செய்து திருமணத்திற்கு மட்டும் அனுமதி கேட்டான். ‘’அவங்க ரொம்ப வசதியான குடும்பம். அதனால கல்யாணத்த ரொம்ப கிராண்டா பண்ணனும் என்று மும்பை ஓட்டலில் ரிசப்ஷன் வைத்து ஏகப்பட்ட செலவுகள் செய்தான். அத்தனையும் இவருடைய பணம். ‘’ஏண்டா.... இத்தனை நாளா சம்பாதிக்கிறயே... நீ ஏதும் சேர்த்து வைக்கலையா...?’’ என்று கேட்டதற்கு ‘’எங்கப்பா....! மும்பையில காஸ்ட் ஆஃப் லிவிங் ஜாஸ்தி. வீட்டு வாடகை, கார்,பெட்ரோல்னு எத்தனை செலவு... ? எனக்கு செய்யறதுக்கு எதுக்குப்பா கணக்கு பாக்கறீங்க.... ?’’ என கோபிக்க வேறு செய்தான். எப்படியோ நன்றாக இருந்தால் சரிதான் என்று இவர்களும் அவன் சொன்னதற்கெல்லாம் தலையாட்டினார்கள்.

ஜானகிக்கு வயிற்றில் புற்றுக்கட்டி வந்து அவஸ்தைப்பட்ட போது ஒற்றை ஆளாய் தவித்துப் போனார் சிவராமன். வைத்திய செலவிற்கு கூட பணம் வேண்டுமா என அவன் கேட்கவில்லை. ஏகமாய் பணம் செலவழித்தும் பயனின்றி ஜானகி கண்மூடியதும் இடிந்து போனார்.

முரளிக்கும் ரமாவிற்கும் அமெரிக்க கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்தது. ‘’அங்க போய் செட்டில் ஆனவுடன் உங்கள அழைச்சுட்டு போகிறோம்...’’ என்று சொல்லி சென்றான். இடையில் ரமா கர்ப்பமாக, அவளைப் பார்த்துக் கொள்ள அவளுடைய தாயும் தந்தையும் அங்கு சென்றனர். பேறு காலம் முடிந்து குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை அங்கேதான் இருந்தனர்.

ஜானகி நோயில் படுத்த பின்பு சிறு சிறு சமையல் வேலைகளை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு நன்றாகவே சமையலில் தேறிவிட்டார் சிவராமன். அதனால் அவளுடைய இறப்பிற்குப் பின் அவரால் தன் நள பாகத்தை கவனித்துக் கொள்ள முடிந்தது. தன் ஒருவனுக்கு இவ்வளவு பெரிய வீடு எதற்கு என வீட்டின் ஒரு போர்ஷனை மட்டும் உபயோகத்துக்கு வைத்துக் கொண்டு மற்றதை வாடகைக்கு விட்டார். ஆனால் கொல்லும் தனிமையை ஒன்றும் செய்ய முடியவில்லை. என்ன இது உப்புச் சப்பில்லாத வாழ்க்கை என்று அலுப்பு தட்டியது. அதை மகனிடம் போனில் சொல்ல ‘’இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கங்கப்பா.... நான் வந்து உங்களை அழைச்சுட்டு போகிறேன்.’’ என்றான்.

ஒருமுறை ரத்தக் கொதிப்பு அதிகமாகி மார்க்கெட்டில் மயங்கி விழுந்தார். நல்ல வேளையாக அங்கு வந்த முரளியின் பள்ளித் தோழன் ராஜ்குமார் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தான். அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டு இரண்டு நாட்களும் அவரை கூட இருந்து கவனித்துக் கொண்டாள்அன்புக்கரசி. ‘’நீங்க ஏன் தனியா இருந்து கஷ்டப்படுறீங்க... முரளி உங்கள அங்க அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போற வர எங்க வீட்டுக்கு வந்திடுங்க... என்று வற்புறுத்தி தன்னுடன் அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். இரண்டு மாதங்களாக இங்கே இவர்களுடைய அன்பில் கரைந்து தான் போனார் சிவராமன். கணவனும் மனைவியும் ‘அப்பா’ என வாய் நிறைய அழைப்பதும் குழந்தைகள் இருவரும் ‘தாத்தா, தாத்தா’ என அவர் மேல் பாசத்தை பொழிவதுமாய் அவர்
ஒரு புது உலகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார்.

‘ஆனாலும் இவர்களுக்கு பாரமாக இருக்கிறோமே’ என்னும் உணர்வு அவருக்கு அடிக்கடி வரும். முதல் மாத முடிவில் அவர் தந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டான் ராஜ்குமார். ‘’ என்னப்பா நீங்க... உங்களுக்கு சாப்பாடு போடறதுக்குப் போய் காசு தர்றீங்க... ? சின்ன வயசுல எத்தனை முறை உங்க வீட்டில அம்மா கையால சாப்பிட்டிருக்கேன்... ? நீ வேறே.. முரளி வேற இல்லை... ரெண்டு பேரும் ஒண்ணு தான்னு சொல்வீங்களே... எனக்கும் அன்புவுக்கும் பெத்தவங்க தவறிப்போய் என் குழந்தைகளுக்கு தாத்தாங்கற உறவைப் பத்தியே தெரியாம போயிடுச்சு. நீங்க இங்க வந்த பிறகு அவங்களுக்கு தாத்தாவோட அன்பு கிடைச்சிருக்கு. அதுக்கு விலை வேணாம்பா... ‘’ என்றதும் அவர் மனம் பாகாய் கரைந்து தான் போனது. மார்க்கெட்டுக்கு சென்று தன் செலவில் கறிகாய் வாங்கி வருவது, சமையலில் உதவுவது, பிள்ளைகள் பள்ளியில் இருந்து வந்ததும் அவர்களுக்கு தின்பண்டங்கள் கொடுத்து பால் காயச்சித் தருவது, மாலை நேரங்களில் பூங்காவிற்கு அழைத்துச் செல்வது , தூங்கும் முன் கதை சொல்வது என அந்த குடும்பத்தில் ஒருவராகவே அவர் மாறிப்போனார்.

நான்கு நாட்கள் கழித்து முரளி போன் செய்தான். அவருக்கு அல்ல... ராஜ்குமாருக்கு. ‘’ஸாரி ராஜ் எங்க அப்பாவால உங்களுக்கு ரொம்ப தொந்தரவு...’’ என்று தான் ஆரம்பித்தான்.

‘’டேய் அப்படின்னு யார் சொன்னா... ? அவரால நாங்களும் எங்களால அவரும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம். சரி, அவர எப்ப நீ யூ. எஸ் கூட்டிகிட்டு போகப் போற.... முதல்ல அதைச் சொல்லுடா... !’’

‘’அதுல தாண்டா ஒரு சிக்கல். ரமா மறுபடியும் வேலைக்கு போகணும். குழந்தையை கவனிக்க ஆள் வேணுமில்லையா... ? அதனால ரமாவோட அம்மாவை இங்க கூப்பிட்டுக்கலாம்னு இருக்கோம்.’’

‘’அப்ப உங்க அப்பா... ?’’

‘’ அவரு இப்ப நல்ல ஆரோக்கியமாத் தான இருக்காரு. எங்க வீட்டிலேயே போயி அவரு தனியா சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கலாம். ஒண்ணும் பிரச்சனை இல்ல. பென்ஷன் வருது. பணத்துக்கும் தட்டுப்பாடில்லை. ‘’

‘’அதெல்லாம் சரி. ஆனா, பணம் மட்டும் போதுமாடா...? சொந்த பந்தத்துக்கெல்லாம் என்ன மரியாதை... ? இன்னும் கொஞ்சம் வயசாகி அவருக்கு உடம்பு முடியாமல் போனால் கூட இருந்து பார்த்துக் கொள்வதற்கு பையன் நீ வேண்டாமா..?’’

‘’ நீ எந்த காலத்தில இருக்கிற ராஜ்... ? இப்பதான் எத்தனையோ ஓல்டு ஏஜ் ஹோம்ஸ் வந்தாச்சு... காசு கொடுத்தா நல்லா பாத்துக்கப் போறாங்க.... அப்ப அங்க போய் இருக்க வேண்டியதுதான்.....’’ என்றதும் இரத்தம் கொதித்தது சிவராமனுக்கு.

முரளியிடம் இருந்து வந்த போன் என்பதால் ராஜ்குமார் போனை ஸ்பீக்கரில் போட்டு இருந்தது எதிர் முனையில் இருக்கும் முரளிக்கு தெரிய வாய்ப்பிலலை. சட்டென்று அந்த இடத்தை விட்டு எழுந்த சிவராமன் அந்த அறையை விட்டு வெளியேறினார். அவர் பின்னாலேயே வந்த அன்பு, ‘’அப்பா, நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க... எங்க கூடவே நீங்க கடைசி வரைக்கும் இருக்கலாம் உங்களுக்கு நாங்க ஆதரவு எங்களுக்கு நீங்க ஆதரவு...’’ என்றாள்.

அவளை ஒரு கணம் உற்று நோக்கினார். பெயருக்கேற்ற மாதிரி அன்பின் அரசிதான் அவள். முகத்தில் எப்போதும் இருக்கும் புன்சிரிப்பு அவள் முகத்தை இன்னும் அழகாக்கியது.

மறுநாள் காலையில் நடைப் பயணத்தை முடித்துக்கொண்டு பூங்காவிலுள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார். ‘’ஸார், ரோஜாப்பூ வேணுமா..?’’ என்ற குரல் கேட்டு நிமிர்ந்தார். பத்து வயது சிறுவன் ஒருவன் கையில் ஒரு கூடையுடன் நின்றிருந்தான். அதில் மஞ்சள், சிவப்பு,ரோஸ் நிறங்களில் அழகிய ரோஜாப்பூக்கள் கும்மென்ற நறுமணத்துடன் நாசியை வருடின.

இருபது ரூபாய் தந்து பூக்ளை வாங்கிக்கொண்டார். அவரை சற்றே உற்றுப் பார்த்த அவன் முகத்தில் சட்டென ஒரு மாறுதல். ‘’ஐயா... பச்சை கேட்டுப் போட்ட வீடு தானே உங்களுது... ? பால் டிப்போவுக்கு எதிரே... ?’’

‘’ ஆமா... என்னைத் தெரியுமா உனக்கு... ?’’ என்றார் ஆச்சர்யத்துடன்.

‘’ உங்க வீட்ல ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வேல செஞ்ச அலமேலுவோட மகன் நான். ரெண்டு மூணு தடவை உங்க வீட்டுக்கு நான் வந்திருக்கேன்.’’ என்றான்.அலமேலு அவர்கள் வீட்டில் முன்பு வேலை பார்த்த பணிப்பெண். கணவனில்லாத அவள் தன் இரு குழந்தைகளுக்காக நான்கு வீடுகளில் வேலை செய்து வந்தாள். ஜானகியின் இறப்பிற்குப் பின் தன் ஒருவனுக்கு ஆள் தேவை இல்லை என்று அவளை நிறுத்தி விட்டார்.

‘’ஓ... அப்படியா... ? சந்தோஷம். சரி, உங்க அம்மா எப்படி இருக்காங்க...? என்றதும் சட்டென சிறுவனின் கண்களில் கண்ணீர் பொங்கியது.

‘’அம்மா, போன மாசம் கொரோனா வந்து இறந்து போயிட்டாங்க.’’கேவியபடி அவன் சொல்ல திகைத்துப்போனார். சட்டென்று நெஞ்சின் மீது ஏதோ பாரம் அழுத்தியது போல உணர்ந்தார்.

‘’அடக்கடவுளே..... அலமேலு ரொம்ப நல்ல மனுஷியாச்சே.... உனக்கு ஒரு தம்பி இருக்கான்ல.... அவன் எங்கே...?’’

‘’அதோ, அங்க பாருங்க சார். அவனும் என்னை மாதிரி ரோஜாப்பூ வித்துக்கிட்டு இருக்கான்....’’ என்று அவன் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தார். ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் கையில் கூடையுடன் நின்று பெஞ்சில் அமர்ந்திருந்த முதியவர்களிடம் பூ விற்றுக்கொண்டு இருந்தான்.

‘’ நீங்க ரெண்டு பேரும் வீட்ல தனியாவா இருக்கீங்க... ?’’ என்றதற்கு ஆம் எனத் தலையாட்டினான்.

‘’பயமா இல்லையா.... ?’’

‘’ வேற என்ன பண்றது..? பக்கத்து வரிசையா குடிசைங்க இருக்குது. ஆனா தம்பி தான் திடீர்னு நைட்ல அம்மாவை நினைச்சிக்கிட்டு அழுவான். நான் சமாதானப் படுத்துவேன். ஸ்கூலுக்குப் போக முடியலையேனு அவனுக்கு வருத்தம். ஸார்... எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா.... ? நான் காலையில வீடு வீடா போய் பேப்பர் போடறேன். அப்புறம் ரெண்டு பேரும் பூ விக்கறோம். எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கித் தரமுடியுமா...? என் தம்பி ஆசைப்படற மாதிரி அவனை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு நான் மட்டும் வேலைக்குபோறேன். கடைகளில் போய் வேலை கேட்டா குழந்தை தொழிலாளர்களுக்கு வேலை தர மாட்டேன்னு சொல்றாங்க.’’ வயதுக்கு மீறிய பக்குவத்துடன் அவன் பேசியது அவர் மனதை பிசைந்தது.

வெகு நேரம் கழித்து தான் அவர் அந்த இடத்தைவிட்டு எழுந்தார். அன்று முழுக்க அவர் மனம் ஒரு நிலையில் இல்லை. ‘’ ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க...?’’ என்றாள் அன்பு.

‘’என்னத்த சொல்றது.... கடவுள் ரொம்பக் கொடுமைக்காரனோனு நினைக்கத் தோணுது.’’

‘’ஏம்பா.... திடீர்னு இப்படி சொல்றீங்க... ?’’

‘’ இந்தக் கொரோனானு ஒரு வியாதி வந்து எத்தனை மனுஷங்களோட வாழ்க்கையை புரட்டிப் போட்ருச்சு. எத்தனையோ குழந்தைகள் பெத்தவஙகளை இழந்து தனிமரமாக நிற்கிறாங்கன்னு செய்தித்தாள்களில் படிக்கிறோம். இன்னைக்கு நான் நேரிலேயே பார்த்தேன். எங்க வீட்டில முன்னாடி வேலை செஞ்ச அலமேலு தவறிப்போய் அவளுடைய இரண்டு பிள்ளைகளும் இப்ப அனாதரவா நிக்குதுங்க.... பாவம்! தானே சம்பாதிச்சு சாப்பிடறாங்க. கேட்டுட்டு மனசு கனத்துப் போச்சும்மா...’’

‘’ஆமாப்பா.... ரொம்ப பாவம் தான் அந்த குழந்தைங்க...’’

‘’அம்மா அன்பு.... நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.’’

‘’சொல்லுங்கப்பா...’’

‘’ பிள்ளைப் பாசத்துக்கு நான் ஏங்கிக் கிடக்கிறேன். அந்தப் பிள்ளைங்க பெத்தவங்க இல்லாமல் தனி மரமா நிக்குதுங்க . நான் ஏன் அவங்களுக்கு ஆதரவு தரக்கூடாது...? இந்தப் பிள்ளைகளை முறைப்படி தத்தெடுத்து வளர்க்கலாம்னு நினைக்கிறேன்....’’

அன்புவின் முகம் சந்தோஷத்தில் மின்னியது. ‘’ நிஜமாவா அப்பா சொல்றீங்க.. ? ரொம்ப நல்ல காரியம் நீங்க செய்யப்போறது...’’

‘’என் மகனுக்கு நான் தேவையில்லை. ஆனா இந்தப் பிள்ளைகளுக்கு நான் வளர்ப்பு தந்தையா இருக்கலாமே.... மாசம் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் பென்ஷன் வருது. சொந்த வீடு இருக்கு. பேங்க்ல ஒரு பத்து லட்ச ரூபா பணமும் இருக்கு. இந்தப் பிள்ளைகளை நல்லபடியா கரையேத்தலாம்னு ஒரு நம்பிக்கை வருது. உன் கிட்ட ஒரு உதவி கேட்கப் போறேன்மா...’’

‘’ என்னன்னு சொல்லுங்க... செய்யக் காத்திருக்கோம்..’’ என்ற குரல் கேட்டு திரும்பினர் இருவரும். கையில் ஹெல்மெட்டுடன் நின்றிருந்தான் ராஜ்குமார்.


‘’ வாப்பா... நீயும் நான் பேசினதைக் கேட்ட போல... ? ‘’

‘’ ஆமாப்பா...உங்களை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு. பொதுவா உங்கள மாதிரி மனைவியை இழந்த, பிள்ளைகளோட அன்பு கிடைக்காத பெரியவங்க நிறையப்பேர் புலம்பலும், குற்றம் சாட்டுதலுமா, விரக்தியோட இருப்பாங்க... நீங்க இளம் பிஞ்சுகளை வாழ வைக்க நினைக்கறீங்க.... சொல்லுங்க... என்ன செய்யணும் நாங்க..?’’

‘’என் காலம் முடியும் வரை அவங்கள நான் பார்த்துக்கிறேன். அதுக்கப்புறம் உங்க ரெண்டு பேரையும் அந்த பிள்ளைகளுக்கு கார்டியனாக நியமிக்கிறேன். உங்களுக்கு இதுல சம்மதம் தானே...?’’.

‘’என்னப்பா இப்படிக் கேட்கறீங்க... ராமருக்கு அணில் உதவி செஞ்ச மாதிரி எங்க பங்கும் இதுல இருக்கட்டுமே.... ?’’ என்று அன்புக்கரசி சொன்னதும் ‘’ ராமருக்கு அணில் எப்படி உதவி செஞ்சது..? அந்தக் கதையை நீங்க எனக்கு சொல்லவேயில்லையே தாத்தா...” என க் குற்றம் சாட்டும் பாவனையில் அர்ஜூன் சொன்னதும் அங்கே சிரிப்பலை பரவியது.

***
நன்றி.
 
Top