• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 10

Pandiselvi

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 30, 2021
Messages
33
அத்தியாயம் 10

இவள் மறைய அவன் வர அவன் மறைய இவள் வரவென்று நிலவும் சூரியனும் வானில் ஒரு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் இருள் நிறைந்த இரவு வேளை..

மனதில் குழப்பங்களும் மூளையில் குழப்பத்தைப் பற்றிய சிந்தனைகளும் ஓடிக் கொண்டிருப்பதால் அமுதியால் சரியாக வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் இப்போதெல்லாம் வேலையை முடிக்க நேரமாவதால் இரவும் தாமதமாகியே வீட்டிற்கு வந்தாள். எப்போதும் அவள் வரும் ஆபிஸ் பேருந்தை தவறவிட்டு விட்டு ஓலா கேப்பில் வந்தாள். கடந்த இரண்டு வாரமாக இதுவே தொடர்ந்து கொண்டிருப்பதால் அன்றும் எப்போதும் போல் பிளாட்டில் இறங்கி பணம் கொடுத்து விட்டு பிளாட்டிற்குள் நுழையும் முன் அதுவரை ஓலா கேப் செல்லும் வரை காத்திருந்த அன்று வந்த அதே நபர் இன்றும் அவள் அருகில் வந்து வண்டியை நிறுத்தினான்.

அவனைப் பார்த்து அதிர்ச்சியில் நின்றியிருந்தவளிடம் "நான் கேட்டதுக்கு என்ன பதில்?" என்று கோவமாகக் கேட்டான்.

"உங்களுக்கே இப்படிக் கேட்க அசிங்கமா இல்லை?. நீங்களும் திருமாணவர் எனக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்காங்க. பொண்டாட்டி பிள்ளைங்களுக்குத் துரோகம் பண்ணிட்டு வேற ஒரு பொண்ணு கூட காதல் கத்திரிக்கானு பழக்கம் வச்சுக்க நினைக்கிறீங்களே உங்களுக்குலாம் மனசு உறுத்தல?. நான் அந்த மாதிரி பொண்ணு இல்லைங்க. எனக்கு என் பசங்களை நல்லபடியா படிக்க வச்சு ஆளாக்கனும். அதுக்கு எனக்கு வேலை வேனும். அந்த வேலையை விட வச்சுறாதீங்க மோகன். ப்ளீஸ் இந்த மாதிரி இனிமே என்னைத் தொல்லை பண்ணாம கிளம்புங்க" என்று கண்களில் நீர் வடிய கையெடுத்துக் கும்பிட்டாள்.

"அதான் உங்களுக்கு ஹஸ்பண்ட் இல்லையே இப்போ. அப்புறம் என்ன?. உங்களுக்கு துணை வேனும்னு நினைக்காமயா இருப்பேங்க. எனக்கு பொண்டாட்டி புள்ளைங்க இருக்குறது என்னோட பிரச்சனை. ரெண்டு பேமிலி என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும். உஙக்ளுக்கும் துணை வேனும்ல" என்றான் அவளை மேலிருந்து கீழ் வரை அளந்து கொண்டு கண்களில் நிறைந்த வன்மத்தோடு.

மோகன் அமுதி வேலை செய்யும் அலுவலகத்தில் உடன் வேலை செய்பவன். என்ன தான் பெண்கள் சமூகத்தில் முன்னேறியிருந்தாலும் இது போல் கயவர்களின் கண்ணில் விழாமல் தப்பிப்பது சிரமமே. ஆண் துணை இருக்கும் பெண்களையே விட்டு வைக்காத மிருகங்கள் ஆண் துணையில்லாமல் தனியாக இருக்கும் பெண்ணை விட்டு வைப்பார்களா என்ன?. பெண்களை மனதுள்ள ஒரு ஜீவனாக பார்க்காமல் வெறும் கட்டிலை அலங்கரிக்கும் போதைப் பொருளாக பார்க்கும் இது போன்ற கயவர்கள் சமூகத்தில் பூமிக்கு பாரமாக உலவுகின்றனர். அதையெல்லாம் தாண்டி தான் ஒரு பெண் வேலைக்குச் சென்று வருகிறாள் என்பதை இந்த சமூகம் எப்போது புரிந்து கொள்ளுமோ?. அதுவும் அக்கா, தங்கை, மகள்கள் என்று பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் நபர்கள் கூட சிலர் இப்படித்தான் அடுத்த வீட்டுப் பெண்ணின் மேல் வக்கிரப் புத்தி வைத்திருக்கின்றனர். இவர்களிடமிருந்து தப்பித்து ஒரு பெண் வேலை செய்து முன்னேறுகிறாள் என்றால் அதுவே அவள் செய்த பெரிய சாதனை.

அதுவரை பொறுத்தவள் அவனின் அசிங்கமானப் பேச்சிலும் பார்வையிலும் கொதித்தெழுந்து விட்டாள். "சீசீ உங்களுக்கு அசிங்கமா இல்லை. எனக்கு எந்த துணையும் தேவையில்லை. என் பசங்களை என்னால தனியா வளர்த்துக்க முடியும். நீங்க போய் உங்க பேமிலியை கவணிங்க. என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். உங்களை மாதிரி ஆளுங்களால தான் நிறைய பொண்ணுங்க வெளியே வந்து வேலை செய்யவே பயப்படுறாங்க. உங்களை மாதிரி ஆளுங்க எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் இந்த மாதிரி தொல்லை கொடுக்காமவாது இருங்க. இதுக்கு மேல் என்னைத் தொந்தரவு பண்ணேங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ண வேண்டிவரும்" என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

"என்னடி ஓவரா பேசுற?. இவ்வளவு நாள் புருஷன் இல்லாமல் தனியா இருக்குற நீ என்ன ஒழுக்கமாகவா இருந்திருப்ப?. என் பேச்சைக் கேட்டு நடந்தா உனக்கு எல்லாத் தேவையும் நான் செய்யுறேன். இல்லை உன்னை எல்லாரும் கேவலமாக பேசுற மாதிரி பண்ணிடுவேன்" என்றான் கோவத்தோடு சீறினான்.

எதை வைத்து அடித்தால் பெண்கள் கலங்குவார்களோ அதை வைத்து அவளின் மனதை நிலைகுலையச் செய்தான். இந்த சமுதாயத்தில் ஒரு பெண்ணை நிலைகுலையச் செய்ய எடுக்கும் ஆயுதம் ஒன்று கற்பு, மற்றொன்று சென்டிமென்ட். அவன் பேசிய பேச்சில் அதுவரை இருந்த கொஞ்சநஞ்ச தைரியமும் போய் மொத்தமாய் உடைந்து அழுக ஆரம்பித்து விட்டாள். படித்திருக்கிறானே ஒழிய வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கூட கீழ்த் தரமானவையாய் இருந்தது அவனுக்கு.

"இப்போ எதுக்கு அழுது சீன் கிரியேட் பண்ற. சிம்பிள். எனக்கு ஓகே சொல்லு. உன்னை நான் சந்..." என்று அவன் அடுத்த வார்த்தை பேசும் முன் கன்னத்தில் விழுந்த 'பளார்' என்று அடியில் உதடு கிழிந்து இரத்தம் வழியக் கீழே விழுந்திருந்தான்.

தலைகுனிந்து அழுது கொண்டிருந்த அமுதி அவன் கன்னத்தில் விழுந்த அறையின் சத்தத்தில் நிமிர்ந்தவள் எதிரே சித்தார்த் ருத்ரமூர்த்தியாக நின்று கொண்டிருந்தான். 'அன்று பார்த்தவன் போல் உள்ளதே' என்று அவன் வரும் போதே நின்று கவனித்தவன் 'என்ன தான் நடக்கிறது? என்று பார்ப்போம்' என்று தள்ளி நின்று கவனிக்கலானான். ஏதோ பிரச்சனை என்றுணர்ந்து'அவளே சமாளித்து பழகட்டும்' என்று பொறுமையாக இருந்தவன், பிரச்சனை எல்லை மீறவும் அங்கே வந்து விட்டான்.

அமுதி அதிர்ச்சியில் கண்கள் விரிய அப்படியே நின்றிருந்தாள்.

அடி வாங்கிய கன்னத்தில் கையைத் தாங்கிக் கொண்டு நிமிர்ந்தவன் எதிரே போலீஸ் உடையில் இருப்பவனைக் கண்டு மிரண்டான். "ஏன்டா நீயே ஒரு பொண்ணுக்கிட்ட பேசுற மாதிரியா பேசுற. தனியா ஒரு பொண்ணு குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு வேலைக்கும் போறவளை பாராட்டானாலும் பரவாயில்லை. ஆனால் அவங்களைப் பார்த்தா உங்களுக்குலாம் அவ்வளவு இளக்காரமா?. அதுவும் பொண்டாட்டி புள்ளைங்கள வீட்ல வச்சுக்கிட்டு அசிங்கமாயில்லை" என்று அங்கயே இரு கன்னத்திலும் மாறி மாறி அரைந்தவனின் அடியைத் தாங்க முடியாமல் "விட்டுருங்க சார்... விட்டுருங்க சார்.. இனிமேல் இப்படி பண்ண மாட்டேன். இவங்களைத் தொந்தரவு பண்ண மாட்டேன்" என்று கையெழுத்தும் கும்பிட்டும் விடாமல் அடி வெளுத்தவன் "உன் மனைவி நம்பர் குடு" என்று வாங்கி வைத்து "ஏதாவது பிரச்சனை பண்ணேனு தெரிஞ்சது உங்க வீட்ல சொல்லி உன்னை உள்ளைத் தூக்கிப் போட்டுருவேன். அப்புறம் குடும்பமும் இருக்காது. ஜெயில்ல தான் கம்பி எண்ண வேண்டி வரும். கிளம்பு இங்கிருந்து" என்று மிரட்டவும் அவன் விட்டால் போதுமென்று ஓடி விட்டான்.

அவன் சென்ற பின் "பிரச்சனையை நீங்களே சமாளிக்க பழகிக்கோங்க. தைரியமா இருங்க. இல்லை இந்த மாதிரி ஆளுங்க வாழ விடமாட்டாங்க" என்றான்.

"ரொம்ப நன்றி சார்" என்று நடந்தவைகளை அவனிடம் சொன்னாள்.

"இனிமேல் தொந்தரவு பண்ணா சொல்லுங்க" என்றான்.

"தேங்க்ஸ் சார் அன்ட் சாரி" என்றாள் மெதுவாக.

அவள் எதற்காக சாரி சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் "பரவாயில்லைங்க. ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட். டைம் ஆச்சு கிளம்புங்க" என்று அவள் வீட்டில் நுழைந்ததும் அவன் பிளாட் இருக்கும் தளத்திற்குச் சென்றான்.

இருவரும் 'சே அன்னைக்கு ரொம்ப ஹார்ஷா பேசிட்டோமோ?. என்ன பண்றது என் நிலைமையும் அப்டி' என்று அமுதியும், 'அவங்க சூழ்நிலை அதுனால அப்படி பேசிட்டாங்க. தப்பா நினைச்சுட்டோமே' என்று சித்தும், ஒருவரைப் பற்றி மற்றொருவர் நினைத்துக் கொண்டு அன்றைய இரவைக் கழித்தனர்.

ஒரு பெண் தனியாக இருந்தாலே போதும் அவளுக்கு பல வழிகளிலிருந்து பிரச்சனைகள் வேர் விட்டு கழுத்தை நெறிக்கும். தனியாக சொந்தக்காலில் நின்று தன் பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வரனும் என்று நினைக்கும் அமுதிக்கும் அப்படித் தான் இது போல் அலுவலகத்திலிருந்தும், வெளியிலிருந்தும், ஏன் குடியிருக்கும் வீட்டின் அக்கம் பக்கத்தில் கூட சில கயவர்களின் பார்வையிலிருந்து தப்ப முடியாமல் வருடத்திற்கு ஒரு வீடு மாறி மாறி, இப்போது இங்கு வந்து குடியிருக்கின்றனர். இப்போது பிரச்சனை அலுவலகத்திலிருந்து. அரிதாரம் பூசிக் கொண்டும், திமிர் நடையோடும் சில பெண்கள் அலுவலகத்திற்கு வருவது, அழகை உரைக்கவோ மயக்கவோ இல்லை. தன் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளால் அழுததை மறைக்கவோ, இது போல் கயவர்களின் கழுகுக் கண் பார்வைகளை எரிக்கவோ இருக்கலாம். அதனால் பெண்களை மேக்கப் போடுகிறார்கள், திமிர் அதிகம், தலைக்கணம் என்று பேசும் முன் யோசித்துப் பேசுங்கள் சமூகமே. எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி இல்லை.

சந்திரமதியும் சித்தும் காலை உணவை பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்க "உள்ளே வரலாமா?" என்று ஒருசேர அழைத்த மூன்று குரல்களில் தாயும் மகனும் திரும்பிப் பார்த்தனர். வெளியே சித்தின் நண்பன் வசந்த், ஆனந்தி மற்றும் அரவிந்த் நின்று கொண்டிருந்தார்கள்.

"டேய் என்னடா புதுசா பெர்மிஷன்லாம் கேட்டுக்கிட்டு வாடா உள்ளே" என்றவன் "வாமா ஆனந்தி" என்று அவன் மனைவியையும் உள்ளே அழைத்தான்.

"அண்ணா, அம்மா சாப்பிட்டக் கையோட எழுந்துராதிங்க. சாப்பிட்டு வாங்க. நாங்க வெய்ட் பண்றோம்" என்று ஆனந்தி சொல்லவும் "நீங்களும் வாங்க சாப்பிட" என்றார் சந்திரமதி.

"நாங்க சாப்பிட்டோம் மா. நீங்க சாப்பிட்டு வாங்க சித்" என்றான் வசந்த்.

சந்திரமதியும் சித்தும் சாப்பிட்டு வரவும் "மாமா ஆச்சி ஸ்வீட் எடுத்துக்கோங்க. எனக்கு தங்கச்சி பாப்பா வரப்போகுது" என்றான் அர்விந்த் முகம்கொள்ளா புன்னகையுடன்.

அவன் சொன்னதில் மகிழ்ந்து, 'அப்படியா?' என்று கண்களாலே வசந்த்திடம் வினவி " சூப்பர்டா வாழ்த்துக்கள். பொறுப்புகள் அதிகமாக போகுது" என்று நண்பனைக் கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.

"ஆமா ஆமா நீ வேற பொறுப்பு பருப்புனு ஏத்தி விடு. சும்மாவே முக்கால்வாசி வேலை நான் தான் பாக்குறேன். இனி ஃபுல் வேலையும் நான் தான்" என்றான் வசந்த். ஆனந்தி முறைப்பதைப் பார்த்து "என்னடி முறைப்பு உண்மையைத் தான சொன்னேன்" என்றான் கொஞ்சம் சத்தமாக.

'ஆளு இருக்குனு ஓவரா கத்துரியா. வீட்டுக்கு வா பாத்துக்குறேன்' என்று கண்களாலே மிரட்டினாள். "இப்டியாவது என் ஆதங்கத்தை கொட்டிக்கிறேன். நமக்கு வாய்ச்சது அவ்வளவு தான்" என்று நக்கலாக மொழியவும் "அப்டிங்களா சார் வேனும்னா வேற பொண்ணு பார்ப்போமா?" என்றாள் இடுப்பில் கை வைத்து.

"பார்த்தா நல்லா தான் இருக்கும். ஆனா எவன் பொண்ணு குடுக்கனும்ங்குறான். இப்போல்லாம் ஒரு கல்யாணம் பண்றதுக்கே பொண்ணு கிடைக்காம பசங்கலாம் நாயா பேயா அலையுறாங்க. இதுல எனக்கு பொண்ணு குடுக்க லைன்ல நிக்குறாங்கலாக்கும். இந்த ஜென்மத்துல நீதான் வேற வழி" என்றான்.

"அய்யய்ய ரெண்டு பேரும் சண்டையை நிறுத்துரேங்களா?" என்ற சந்திரமதி இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து விட்டு ஆனந்திக்கு சில பல அறிவுரைகளைக் கூறிக் கொண்டிருந்தார். "மாமா அம்மா அப்பா ஆச்சி, பாப்பா வந்தாலும் நான் தான் ஃபர்ஸ்ட் எல்லாருக்கும்" என்றான் அர்விந்த்.

அவனுக்கு இப்பவே எல்லாரும் குழந்தையைப் பற்றி மட்டுமே பேசவும் சிறு குழந்தைத்தனமான பொறாமை எட்டிப் பார்த்து விட்டது. அவனின் சிறுபிள்ளைத் தனமான பேச்சில் அங்கே ஒரு சிரிப்பலை எழுந்து "நீ தான் செல்லக் குட்டி மொத" என்றான் சித்து.

"மாமா.. மாமா.. பாப்பா ஹாசினி மாதிரி க்யூட்டா டால் மாதிரி இருக்கும்ல. ஜாலி... நானும் சரண் மாதிரி குட்டி பாப்பாவை பத்திரமா பாத்துப்பேன்" என்று குதூகலித்தான்.

அவன் ஹாசினி என்றதும் துரு துருவென அவனைக் கண்டதும் அன்றலர்ந்த ரோஜா மலர் போல் ஒரு குட்டி பார்பி டால் தத்தி தத்தி ஓடி வருவது போல் வரும் ஹாசினியின் முகம் வந்து போனது சித்துக்கு. அமுதியின் அன்றைய பேச்சிற்கு பின் தூரத்திலிருந்து இரசிப்பதோடு சரி, தூக்கவோ கொஞ்சவோ செய்ததில்லை. அவளின் நிலையும் அவ்வளவே என்று அவனுக்கும் புரிந்தது.

அதன்பிறகு வசந்த்தின் குடும்பத்தார் விடைபெற்றுச் செல்லவும் 'இனிமேல் இங்கிருந்தால் இதை வைத்தே தன் திருமணப் பேச்சே தன் தாய் ஆரம்பித்து புலம்பி விடுவார்' என்றுணர்ந்தவன் அவசர அவசரமாக சந்திரமதியிடம் சொல்லி விட்டு அலுவலகம் கிளம்பினான்.

அவன் நினைத்தது போலவே சந்திரமதியும் 'இந்த சித்தும் எப்போ குடும்பம் புள்ளை குட்டினு ஆகப்போறானோ?' என்று வாய்விட்டேப் புலம்பினார்.


தொடரும்.
 

Attachments

  • 1635771027189.jpg
    1635771027189.jpg
    235.9 KB · Views: 19
Top