• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 11

Pandiselvi

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 30, 2021
Messages
33
அத்தியாயம் 11

சூரிய ஒளிக்காக மலர காத்திருந்த பூக்கள் சூரியன் முகமலர்ந்து வெளி வந்து தன் மஞ்சள் நிறக் கதிர்களால் பூமியைத் தொடவும் பூக்கள் மெல்ல மெல்ல மலர்ந்து விரிந்தக் காலை வேளை..

அன்று ஞாயிற்றுக் கிழமை, வெகு நாட்களுக்குப் பிறகு மனதில் இருந்த கவலைகள் அகன்றதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள் அமுதி. கற்பகத்திற்கு சென்னை டிராபிக் மற்றும் மாசுப் பிடிக்காததால் நிறைய நேரம் அவர் வெளியில் செல்வதை தவர்த்திடுவார். அமுதி மட்டுமே குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிரபல மால் ஒன்றில் ஸ்பைடர்மேன் படத்திற்கு அழைத்துச் சென்றாள்.

அலுவலகத்தில் இப்போதெல்லாம் மோகன் அவளிடம் தொந்தரவு செய்வதில்லை. ஏன் அவள் இருக்கும் பக்கம் கூட வருவதில்லை. மனதை அரித்துக் கொண்டிருந்த மிகப்பெரிய பிரச்சனை ஓய்ந்ததால் அவளால் அலுவலகத்தில் நிம்மதியாக வேலை செய்ய முடிந்தது. வீட்டிலும் குழ்ந்தைகளுடன் நிம்மதியாக வலம் வந்தாள்.

அதே மாலில் அதே படத்திற்கு வசந்த், ஆனந்தி, அரவிந்த் மற்றும் அவர்களுடன் சித்தார்த்தும் வந்திருந்தான். 'குடும்பத்தோடு செல்லும் போது நான் எதற்கு?' என்று மறுத்தும் விடாமல் வசந்த்தும் அர்விந்தும் அவனை இழுத்து வந்து விட்டனர்.

பின்னால் மூன்று வரிசை தள்ளி அமுதியின் குடும்பம் அமர்ந்திருக்க, முன்னால் உள்ள வரிசையில் சித்தார்த் மற்றும் வசந்தின் குடும்பம் அமர்ந்திருந்தனர். படம் சுவாரசியமாக சென்று கொண்டிருந்தது. இடைவேளை வரவும் கூட்டமாக இருப்பதால் ஆனந்தி கற்பமாக இருப்பதால் கூட்ட நெரிசலில் வர வேண்டாம் என்று அவளையும் வசந்தையும் தியேட்டர் அரங்கு உள்ளயே இருக்கச் சொல்லி விட்டு அரவிந்தும் சித்தும் மட்டுமே ஸ்நாக்ஸ் வாங்க வெளியே வந்தனர்.

அதே நேரம் அமுதியும் சரண் மற்றும் கையில் ஹாசினியைக் கையில் வைத்துக் கொண்டு அவள் கையில் நிற்காமல் செய்யும் சேட்டையால் நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள். கையில் இருந்து நழுவவும் அவளைத் திரும்பத் தூக்கிக் கையில் வைப்பதுமாக இருந்து கொண்டிருக்கும் போது, அமுதியின் கையை தட்டி விட்டு "அப்பாஆஆஆ" என்று இறங்கி ஓடியது. வெகுநாட்கள் கழித்துப் பார்த்த சந்தோஷத்தில் சூரியனைக் கண்ட தாமரை போல் முகம் மலர்ந்து அவன் கால்களை ஓடிச்சென்று கட்டிக் கொண்டது. அவனுக்குமே இன்ப அதிர்ச்சியாக இருந்தது. காலைக் கட்டிக் கொண்டு சந்தோஷத்தில் குதிக்கும் சிறு மலரை என்னிடம் வராதே போ என்றா சொல்ல முடியும். அதனால் அவனும் அவைளத் தூக்கிக் கொஞ்சி "ஹனிக்குட்டி படம் பார்க்க வந்தேங்களா?" என்றான்.

"ம்ம் அம்மா.. அம்மா" என்று அமுதி இருக்கும் பக்கம் கை காண்பிக்கவும் எதிரே தர்ம சங்கடத்தில் கையைப் பிசைந்து நின்று கொண்டிருந்தாள் அமுதி. 'தான் தான் அன்று வேண்டாம் என்று முகத்தில் அடித்தார் போல் சொன்னோம். இப்போது தன் பிள்ளை அவனிடம் தாவுவதற்கு அவர் என்ன செய்ய முடியும்' என்று மனதுக்குள் புலம்பி தயக்கமாய் நின்றிருந்தாள்.

"ஹாய்.. பாப்பா ஓடி வந்துட்டா" என்று விட்டு, அவனுக்குமே என்ன சொல்லி நிலைமையை சமாளிப்பது என்று புரியாமல் "நீங்க வேனா அங்க நில்லுங்க. என்ன வேனும்னு சொல்லுங்க நான் வாங்கிட்டு வர்றேன்" என்றான் சிறிது பயந்து கொண்டே எங்கே அன்று போல் இன்றும் ஏதாவது பட்டென்று பேசிவிடுவாளோ என்று.

அவள் ஒன்றும் சொல்லாமல் என்ன வேண்டும் என்பதை சொல்லி விட்டு, பணத்தைக் கொடுக்கவும் சித்தும் மறுக்காமல் வாங்கிக் கொண்டு அரவிந்தை அவளிடம் விட்டு விட்டு ஹாசினியை அழைத்துச் சென்றான். ஸ்நாக்ஸ் வாங்கி விட்டு திரும்பும் போது ஹாசினி அமுதியிடம் செல்ல மறுக்கவும் "படம் முடியவும் தூக்கிக்கோங்க. இங்க தான் இருக்கிறேன்" என்று அவன் இருக்கையைக் காண்பித்தான். அவளும் வேறு வழியில்லாமல் பொது இடத்தில் குழந்தை கத்திக் கூப்பாடு போட்டால் என்ன ஏதென்று கேள்விகளை சமாளிக்க முடியாது என்றெண்ணி வேறு வழியில்லாமல் "சரி' என்று சரணுடன் சென்று அவள் இருக்கையில் அமர்ந்தாள்.

அவன் குழ்நதையுடன் வருவதைப் பார்த்த ஆனந்தியிடம் "நான் அன்னைக்கு சொன்னேன்ல இதான் அந்த பாப்பா. ரெண்டு பேரும் எப்படி இருக்குறாங்கனு மட்டும் பாரு. பார்க்க நிஜமான அப்பா பொண்ணு மாதிரி இருக்கும்" என்றான் வசந்த் அவள் காதில் மெதுவாக.

சிறிது நேரத்திலே இருவரும் கொஞ்சிக் கொள்வதையும் மழலை மொழியில் பேசிக் கொள்வதையும் பார்த்த ஆனந்திற்கே சந்தேகம் வந்து விட்டது. 'இந்த பாப்பா எப்படி அண்ணாவோட இப்படி அட்டாச் ஆயிடுச்சு?. அண்ணாவும் பாப்பாக்கூட மனசு விட்டு சிரிச்சு பேசுறாரே!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு படத்தைப் பார்ப்பதை விட்டு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

'சொன்னேன்ல' என்று வசந்தும் கண்களாலே கேட்கவும் 'ஆமா' என்று தலையாட்டினாள். இது எந்த மாதிரியான உறவு என்று அவர்களுக்கும் புரியவில்லை. இதைப் பார்க்கும் சமூகம் என்ன சொல்லும் என்பதைத் தாண்டி இரு உள்ளங்களும் மகிழ்ச்சியாக இருந்தது. வசந்த் மற்றும் ஆனந்தியோடு அமுதியின் கண்களும் சித்தார்த் மற்றும் ஹாசினியை வட்டமிட்டது. குழந்தையை கொடுத்து விட்டாளே ஒழிய ஒருமனதாக அவளுக்கு படத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

ஒரு வழியாக படம் முடிந்து வெளியில் வரும் போது சரணும் அரவிந்தும் ஏற்கனவே நண்பர்கள் என்பதால் அவர்கள் மூலம் தாய்மார்களும் நண்பர்களாகிவிட்டனர். ஆனந்தியின் கலகல பேச்சு அமுதிக்கும், அமுதியின் இனிமையான பேச்சு ஆனந்திக்கும் பிடித்து விட இரு தாய்மார்களும் தத்தம் பிள்ளைகளைப் பற்றியும் படிப்பைப் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டனர். அனைவரும் சேர்ந்து இரவுணவை அங்கயே முடித்து விட்டு, ஆனந்தி அமுதியையும் வற்புறுத்தி அவர்களுடன் காரிலே அழைத்து வந்து விட்டாள்.

ஆனந்திக்கு நன்றி சொல்லி விடைபெற்று விட்டு சித்திடம் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டாள். நல்ல வேளையாக இறங்கும் போது அடம்பிடிப்பாலோ என்று பயந்து கொண்டிருந்தவளுக்கு அவளே தூங்கி விட்டதால் நிம்மதியாக இருந்தது. அவனிடம் குழந்தையை வாங்கி விட்டு நன்றி சொல்லி விட்டு அவள் பிளாட்டினுள் நுழைந்து கொண்டாள்.

அதன் பின் வந்த நாட்களில் மூன்று குடும்பங்களும் நண்பர்களாக மாறி விட்டனர். பெண்கள் தாய்மார்களோடு சேர்ந்து கோவிலுக்குச் செல்லுதல், பார்க்கில் வாக்கிங் செல்லுதல் என்று இருந்தால் ஆண்கள் வேடிக்கைப் பார்க்கும் நபர்களாக இருந்தனர்.

ஐந்தாவது மாத கர்ப்பத்தின் ஆரம்பத்திலே ஆனந்தியின் வீட்டில் இருந்து அவளுக்கு ஐந்தாவது மாத சீமந்த சாப்பாடு கொடுக்க வந்திருந்தனர். ஐந்தாம் மாதம் என்பதால் வசந்த் மற்றும் ஆனந்தி இருவர் வீட்டில் இருந்து நெருங்கிய உறவினர்கள் மட்டும் வந்திருந்தனர். ஆனந்தி வற்புறுத்தி அழைத்ததால் அமுதியும் வந்திருந்தாள்.

ஆனந்தியின் அறையில் அவள் கிளம்புவதற்கு அமுதி உதவி செய்து கொண்டிருக்க அவளின் தோற்றத்தைப் பார்த்த சிலர் தங்களுக்குள் முனுமுனுப்பதும் பின் அவளைத் தீண்டத்தகாதவளாக பார்ப்பதுமென இருக்க, அவர்களின் பார்வையை வைத்தே என்னவென்று உணர்ந்தவள் 'நாம இந்த மாதிரி பங்ஷனுக்கு வந்திருக்க கூடாது. ஆனந்திக்காக வந்தது. ஆனால் எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்களா என்ன?' என்று உள்ளுக்குள் எழுந்த வேதனையோடு அங்கிருக்கவே என்னவோ போலிருந்தது அவளுக்கு.‌

ஆனந்தியை கிளம்புவதற்கு உதவி செய்து விட்டு 'இனி இங்கிருப்பது சரி வராது. நாமளே நம்மை மனசுக்கு வேதனையைத் தர வேண்டாம்' என்றெண்ணி பாத்ரூம் சென்று விட்டு கிள்மபிவிடலாம் என்று பாத்ரூம் சென்றாள்.

ஆனந்தியைப் பிடித்து அவள் உறவுக்காரர்களில் ஒருவர் "ஆனந்தி இந்த மாதிரி பொண்ணை எல்லாம் ஏன் இந்த மாதிரி பங்ஷனுக்கு கூப்பிடுற?. நல்ல காரியம் நடக்கும் போது அபசகுணம் மாதிரி. உனக்கு இது கூட தெரியாதா என்ன?" என்று முகத்திற்கு நேராக கேட்கவும், அப்போது தான் பாத்ரூம் சென்று விட்டு வந்த அமுதியின் காதிலும் தெளிவாக விழுந்து விட்டது. அவளால் கண்ணீரை சிந்துவதை விட வேறெதுவும் செய்ய முடியவில்லை.

அவர் கேள்விக்கு ஆனந்தி கோவமாகப் பதில் சொல்வதற்கு முன், "ஏன்மா பெரிய மனுஷங்களா இருக்கேங்க ஆனா இந்த மாதிரி ஒரு பொண்ணு மனசு நோகுற மாதிரி பேசுறேங்க?. வாழ்த்துறதுக்கு நல்ல மனசு இருந்தா போதும்மா. வயசோ தோற்றமோ தேவையில்லை. அதுவும் அவ ரெண்டு குழந்தைக்கு தாய். அவ வாழ்த்தி உங்க வீட்டுப் பொண்ணுக்கு எதுவும் குறைஞ்சு போயிடாது" என்றார் சந்திரமதி.

பின், "அமுதி இங்க வா" என்று கையைப் பிடித்து அழைத்து வந்து அவர் ஆனந்திக்காக வாங்கி வந்த வளையல்களில் சிறிது எடுத்து அவள் இரு கைகளிலும் போட்டு விட்டார். நெற்றியில் பார்ப்பதற்கு தெரியும்படி குங்குமமிட்டு தலையில் மல்லிகை சரத்தையும் வைத்து விட்டார். அவளுக்கே அதைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது. அதைப் பார்க்க பார்க்க கண்களில் துளிர்விடும் கண்ணீரை அணைகட்ட முடியாமல் வழிந்து கொண்டே இருந்தது.

ஆனந்தியிடம் சென்று "நல்லபடியா குழந்தை பிறந்து நீயும் குழ்ந்தையும் சீரும் சிறப்புமாக இருக்கனும்டா" என்று வாழ்த்தினார். பின் அவள் அமுதியிடமும் சந்திரமதியிடமும் நடந்ததிற்கு மன்னிப்புக் கோரினாள்.

"யாரோ பேசியதற்கு நீ என்னடா செய்ய முடியும்?" என்று இருவரும் வாழ்த்தி விட்டு அங்கிருந்து கிளம்பினர்.

ஹாசினியும் சரணும் ஹாலில் விளையாடிக் கொண்டிருக்க கையில் உள்ள கலர் கலர் கண்ணாடி வளையல்களிலே கண்கள் பதித்தவாறு சித்தின் வீட்டின் அமர்ந்திருந்தாள் அமுதி.

"அமுதி அதையே நினைச்சுக் கவலைப்பட்டுக் கிட்டு உன் மனசையும் கெடுத்து பிள்ளைகளைக் கவனிக்க முடியாம ஆக்கிடாத. இந்த மாதிரி ஒன்னுக்கும் உதவாத சம்பிரதாயங்களைப் புடுச்சுக்கிட்டு சிலர் இன்னமும் இருக்கத் தான் செய்றாங்க. வாழ்த்த மனசு தான் மொத வேனும்னு எப்போ தான் புரிஞ்சுக்க போறாங்களோ. அப்புறம் நீ ஏன் இப்படி இருக்க. நீ ஒன்னும் புருஷனை இழந்துட்டு இல்லையேடா. அவனை நினைத்து பூ பொட்டு வளையல் போடாம இருக்குறதுக்கு. கட்டியவன் கயவன் என்றால் அதில் உன் தவறு என்ன இருக்கு. இப்போ பார்க்க எப்டி இருக்கத் தெரியுமா?. மகாலட்சுமி கணக்கா இருக்க. இனி இப்டியே இரு" என்றார். அவருக்கு அவளை அப்படிப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.

அவர் பேச்சில் 'இனி எப்படி இருந்தால் என்ன?. இதெல்லாம் எதற்கு?' என்று வெற்றுப் பார்வை பார்த்தாள்.

அவள் பார்வையின் பொருள் உணர்ந்து "நீ இப்படி இருக்குறது தான் உனக்கு பழசை ஞாபகம் படுத்திக்கிட்டே இருக்கும். தப்பு செய்தவனே சந்தோஷமா இருக்கும் போது நீ ஏன்டா இப்படி இருக்குற?" என்று அவள் கண்களின் சோகம் அவரையும் தாக்கியது. அந்தப் பேச்சையெல்லாம் அவரும் கடந்து வந்தவர் தானே. ஆனால் அவர் கணவருடன் இருந்த நினைவுகள் எல்லாம் இனிமையான நினைவுகள்.

வசந்த் வீட்டின் பங்ஷனில் கலந்து கொள்வதற்காக சீக்கிரமே அலுவலகம் சென்று சில வேலைகளை முடித்து விட்டு வந்த சித்தார்த் அமுதி வீட்டில் இருப்பதையும் அவர்கள் இருவரும் தீவிரமாக எதையோ பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.

அவனைப் பார்த்தவுடன் எப்போதும் போல் ஹாசினி "அப்பா ஆஆஆ" என்று தாவ, அவளை அள்ளி அணைத்து முத்தமிட்டான். மகனின் குரலில் அவன் புறம் திரும்பியவர், "பங்ஷனை முடிச்சுட்டு ஆபிஸ் போயிருக்கலாமே சித். இப்போ தான் பங்ஷன் ஆரம்பிக்குறாங்க" என்றார் சந்திரமதி.

"என்ன சொல்றது இருக்கட்டும் நீங்க அங்க போகாம இங்க என்ன பண்றேங்க?" என்றான்.

"அதை ஏன்டா கேட்குற" என்று நடந்ததை சொல்லி "எப்போ தான் இவங்களாம் திருந்த போறாங்களோ?" என்று அங்கலாய்த்தார்.

அவர் சொன்ன பிறகே அமுதியின் புறம் திரும்பியவன் என்றும் இல்லாமல் இன்று தலையில் சூடிய பூக்களுடனும் கைநிறைய வளையலுடனும் நெற்றியில் பளீச்சென்றிருந்த குங்குமத்தைக் கண்டவனுக்கு அவளைப் பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. அதை விட அமுதியின் கண்களில் துளிர்த்த கண்ணீரையும் அவள் முகத்தில் அப்பிக் கிடந்த சோகத்தையும் கண்டவனுக்கு, 'எப்படி இருக்க வேண்டியவள். ஆனால் எப்படி இருந்திருக்கிறாள்?' என்று
நினைக்காமல் இருக்க முடியவில்லை.

"சரி விடுங்கம்மா. மத்தவங்க பேசுறதுக்கு கவலைப்பட்டா கவலைப்பட்டு தான் இருக்கனும் அமுதி. அதையெல்லாம் மனசுல ஏத்தாம தூக்கி தூறப் போட்டுட்டு வேலையைப் பாருங்க அமுதி" என்று அவளுக்கு ஆறுதலளித்தான்.

அவளும் "ம் சார். எனக்கு பழகியிடுச்சு. கொஞ்ச நேரம் என்னவோ போலிருக்கும். அப்புறம் குழந்தைகளால நார்மலாகி என் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுடுவேன். அவங்களுக்காக இதையெல்லாம் கடந்து தானே வரனும்" என்றவளின் பதிலில் அத்தனை விரக்தி. அதன் பிறகு அவர்களிடம் விடைபெற்று கிளம்பி விட்டாள்.

அமுதியின் சோகத்தைத் தாண்டி 'இது மாதிரியே இருக்கலாம் இவங்க' என்று அவளின் அன்றைய தோற்றம் மனதில் பதிந்து விட்டது சித்தார்த்திற்கு.


தொடரும்.
 

Attachments

  • 1635771027189.jpg
    1635771027189.jpg
    235.9 KB · Views: 23
Top