• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 12

Pandiselvi

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 30, 2021
Messages
33
அத்தியாயம் 12

இளங்காலைப் பொழுதொன்றில் செங்கொண்டைச் சேவல் ஒன்று குரலெடுத்துக் கூவ, வட்டக் கதிரவன் முகம் மலர்ந்து, தன் செந்நிறக் கதிர்களால் பூமியை வருட, அதற்கு மேல் தூங்க முடியாமல் உலகம் மெல்ல மெல்ல எழுந்து தன் அன்றாடப் பணிகளைத் தொடங்கிய காலை வேளை..

எப்பொழுதும் போல் எழுந்து தன் அன்றாடப் பணிகளை முடித்து விட்டு, சரணை பள்ளிக்கு அனுப்பி விட்டு, தன் அலுவலகத்திற்குத் தயாரானாள். அவள் அலுவலகத்திற்கு கிளம்பி வெளியே வரும் நேரம் சித்தும் வசந்த்தும் அலுவலகம் செல்ல பேசிக் கொண்டே படியில் இறங்குவதைக் கண்டவள் அவர்களைக் பார்த்து சின்னச் சிரிப்போடு அவர்களைக் கடந்தாள். அதிகம் பேசாவிட்டாலும் ஒரு புன்னகையோடு நிறுத்திக் கொள்வாள்.

விடுமுறை நாட்களில் பெரியவர்களுடன் சேர்ந்து அமுதியும் ஆனந்தியும் தத்தம் பிள்ளைகளுடன் பார்க்கில் ஐக்கியமாகி விடுவார்கள். அன்று குழந்தைகளை விளையாட விட்டு விட்டு அமுதியும் ஆனந்தியும் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர்.

"எனக்கு இப்போல்லாம் எதுவுமே சாப்பிட பிடிக்கலை. நல்லா கார சாரமா சாப்பிடனும்னு தோனுது. பாவம் அம்மா அப்பாக்கு ஊருல வேலை இருக்கு. இல்லைனா என் கூட இருப்பாங்க" என்று வருத்தமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

"அவங்களுக்கும் ஊர்ல வேலை இருக்குறதால வர முடியாதுல. காரமா சாப்பிடனும்னு ரொம்ப அதிகமாக காரம் சேர்க்காதிங்க. நாளைக்கு நான் சமைச்சுக் குடுக்குறேன். இந்த மாதிரி நேரத்துல நாமலே சமைச்சு சாப்பிடுறதை விட மத்தவங்க சமைச்சுக் குடுத்தா நல்லா தான் இருக்கும்" என்றாள் அமுதி அனுபவத்தில்.

"இந்த நேரத்துல மட்டும் இல்ல எல்லா நேரமும் யாராவது சமைச்சுக் குடுத்தா நல்லா டேஸ்ட் டா தான் இருக்கும்" என்று சொல்லி சிரித்தாள்.

"அது என்னவோ உண்மை தான். இந்த பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆனபிறகு யாராவது சமைச்சுக் குடுக்க மாட்டாங்களானு இருக்கு" என்று அமுதியும் ஆமோதித்தாள்.

தன் அன்னையிடமும் சந்திரமதியிடமும் பேசி விட்டு ஆனந்திக்கு சாப்பாடு கொடுக்கலாம் என்று முடிவெடுத்து மறுநாள் அதற்கான வேலைகளில் இறங்கினாள். காரசாரமாக உணவு கேட்டதால் அசைவ உணவை சமைக்கலாம் என்று பார்த்து பார்த்து சமைத்தாள்.

கற்பகம், சந்திரமதி மற்றும் குழந்தைகளுடன் சமைத்த உணவுகளையும் பூ, பழங்கள் மற்றும் வளையல் என தன் தன்னையிடம் கேட்டு வாங்கியதையும் எடுத்துக் கொண்டு ஆனந்தியின் வீட்டிற்கு வந்தார்கள்.

ஆனந்திற்கே ஆச்சர்யமாக இருந்தது. சும்மா ஏதாவது வீட்டில் அவர்களுக்கென செய்ததைக் கொண்டு வருவாள் என்று பார்த்தால் இவ்வளவு செய்து கொண்டு வந்திருப்பால் என்று நினைக்கவுமில்லை.

அதிசயத்துப் போய் நின்றவளை "ஏம்மா ஆனந்தி என்னடா ஆச்சு?. வீட்டுக்கு வானு கூப்ட மாட்டியா?" என்றார் சந்திரமதி.

"அம்மா வாங்க வாங்க..." என்று விட்டு "அமுதி ஏங்க இவ்வளோ செய்து எடுத்துட்டு வந்தேங்க. கொஞ்சமாக சாப்பிட போதுமே" என்றாள்.

"பரவாயில்லை ஆனந்தி. பிரக்ணன்ட் ஆ இருந்து கேட்டா அவங்க ஆசையை நிறைவேற்றனும்" என்றாள் சிரித்துக் கொண்டே.

"சித்து அண்ணாவும் அவரும் வேற ஏதோ வேலை இருக்குனு வெளில போய்ட்டாங்க. நீங்க இவ்வளவு பண்றது தெரிஞ்சுருந்தா அவங்களை இருக்க சொல்லிருப்பேன்" என்றாள் ஆனந்தி.

"எனக்கும் தெரியாது ஆனந்தி. இல்லனா காலையில் ரெண்டு பேரும் கிளம்பும் போதே இருக்க சொல்லிருப்பேன்" என்றார் சந்திரமதி.

"இருங்கம்மா நான் கால் பண்ணி ரெண்டு பேரையும் வர சொல்றேன்" என்று வசந்திற்கு அழைத்தாள்.

"இருக்கட்டும் ஆனந்தி. நீ சாப்பிடுமா. அவங்க வேலை முடிச்சுட்டு வரட்டும். நல்ல நேரத்துல நீங்க வளையல் போட்டு விடுங்க சந்திராம்மா' என்றார் கற்பகம்.

"நாம வளையல் போடலாம். அவங்க வரும் போது வரட்டும். கால் பண்ணி மட்டும் சொல்லிடு ஆனந்தி" என்று அவளுக்கு வளையல் போட்டு மற்ற சடங்குகளை செய்தார். சித்தார்த்தும் வசந்த்தும் இக்கட்டான வேலையில் இருப்பதால் வேலை முடிந்து வருகிறோம் என்று சொல்லி விட்டனர்.

ஆனந்திக்கு சடங்கு முடிந்து சாப்பிட்டு முடித்து விட்டு அவளுக்கு வயிறும் மனதும் நிறைவாக இருந்தது. பிறகு அவர்கள் அவளிடம் விடைபெற்றுக் கிளம்பவும் "நாத்தனார் முறையில இருந்து செய்யுற மாதிரி சூப்பரா பண்ணேங்க அமுதி. தேங்க்ஸ்" என்று நன்றி சொல்லி வழியனுப்பினாள்.

அன்று மதியத்திற்கு மேல் தான் சித்தும் வசந்த்தும் வீட்டிற்கு வந்தார்கள். ஆனந்தி வாய் ஓயாமல் அமுதியைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள். "நான் கூட சும்மா வீட்ல சமைக்கும் போது எடுத்துட்டு வாங்கனு தான் சொல்லிருந்தேன். இவ்ளோ பண்ணிருப்பாங்கனு நினைக்கவே இல்லை" என்று மனநிறைவாக சொன்னாள்.

வசந்த்தும் சாப்பிட்டு விட்டு " இன்னைக்கு உன் சாப்பிட்டுல இருந்து விடுதலை" என்று கேலி செய்ய, ஆனந்தியின் முறைப்பில் வாயை மூடிக் கொண்டான்.

"முதல்லே தெரிந்திருந்தா நானும் சித்தும் முடிச்சுட்டு அப்புறம் வேலையைப் பார்க்கப் போயிருப்போம். சரி விடு. நான் பார்க்கும் போது நன்றி சொல்லிக்கிறேன்".

"ம் ஆமாங்க. நீங்களும் நன்றி சொல்லிடுங்க" என்றாள் ஆனந்தி.

அதே நேரம் சித்தும், "அவங்க சமையல் வித்தியாசமாக நல்லா இருக்கு" என்று தன் அன்னையிடம் புகழ்ந்து கொண்டிருந்தான்.

இன்னும் அனுபவிக்க வேண்டிய இன்னல்கள் நிறைய இருக்கிறது என்று விதி அமுதியின் வாழ்வில் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தக் காத்திருந்தது.

வானம் கருநிறத்தைக் கடன் வாங்கி பூசிக் கொண்டது போல் இருள் சூழ்ந்த இரவு வேளை..

வார இறுதி மற்றும் அன்று பிராஜெக்ட் டெலிவரி என்பதால் இருக்கிற வேலையெல்லாம் முடித்து விட்டு எப்போதும் போல் அவள் இருப்பிடம் செல்லும் ஆபிஸ் பஸ்ஸிற்காக காத்திருந்தாள். அப்போது ஏதோ உள்ளுணர்வு தோன்ற திரும்பி திரும்பி பார்த்தாள். 'என்னது இது?. சில நாட்களாக யாரோ நம்மளை கண்காணிக்குற மாதிரி இருக்குதே?. நமக்குத் தான் அப்படித் தோனுதா?. இல்லை பிரம்மையா?' என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவள் பஸ் வரவும் ஏறி அமர்ந்து கொண்டாள். பேருந்துக் கிளம்பவும் அவள் செல்லும் பேருந்திற்குப் பின்னாலே ஒரு கார் தொடர்ந்து கொண்டிருந்தது.

அவள் இறங்கும் இடம் வந்ததும் இறங்கி அவள் வீட்டிற்கு மெதுவாக நடந்தாள். ஆள் அரவம் இல்லாத ஒரு வளைவில் அவள் திரும்பும் போது அவளை பாலோ செய்து கொண்டு வந்த அந்தக் காரில் இருந்து முகத்தை கர்சீப்பால் மூடிக் கொண்டு ஒருவன் இறங்கி அவள் முகத்தில் மயக்க மருந்து வைத்த துணியை வைத்து, அவள் மயக்கமடையவும், அவளை அந்தக் காரில் ஏற்றவும் அந்தக் கார் வேகமெடுத்தது.

அன்று சீக்கிரமே வேலை முடித்து வந்த சித்தார்த், தன் அன்னைக்கு மருந்து வாங்கி விட்டு தன் வண்டியில் வந்து கொண்டிருந்தான். அப்போது தான் ஒரு முகம்மூடிய நபர் ஒரு பெண்ணை இழுத்து வண்டியில் ஏற்றுவதைப் பாரத்து விட்டு அதிர்ந்தவன், அதுவும் அந்தப் பெண்ணின் ஹேன்ட் பேக் கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்து விட்டு, ஏதோ விபரீதம் என்று அவன் போலீஸ் மூளைக்கு உரைக்க, அவனது வண்டியைத் திருப்பி வேகமாக அந்தக் காரைத் தொடர்ந்தான். அவனுக்கு அது அமுதி என்று தெரியாது. ஏதோ ஒரு பெண் கடத்தப்பட்டிருக்கிறாள் என்பது மட்டும் புரிந்து அவளைக் காப்பாற்ற பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான்.

பிணத்தைச் சுற்றும் பிணந்தின்னிக் கழுகுகளைப் போல் அந்தக் காரில் இருந்த இருவரின் கண்கள், அப்பாவியாய் மயங்கிக் கிடந்தவளின் அங்கங்களில் மொய்த்தது. அந்தக் கார் ஒரு நடுத்தர வசதியுள்ள ஹோட்டலை அடைந்து அங்கு ரிசப்ஷனில் ஏதோ சொல்லவும், ரிசப்ஷனில் உள்ளவரும் அவர்களை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்து விட்டு ரூம் அலாட் செய்து அவர்களிடம் சாவியைக் கொடுத்தார்.

கார் வண்டியின் நம்பரை நோட் பண்ணியதால், அந்தக் காரைத் தொடர்ந்த வந்தவன், கார் ஒரு ஹோட்டலில் நிற்பதைப் பார்த்தவன் வண்டியை நிறுத்தி விட்டு, கார் உள்ளே யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்து விட்டு ஹோட்டல் உள்ளே நுழைந்தான்.

உள்ளே நுழைந்து, "இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மயக்கநிலைல ஒரு லேடி, அப்புறம் கூட யாராவது வந்தாங்களா?" என்று ரிசப்ஷனிஸ்டிடம் விசாரித்தான்.

அவன் போலீஸ் உடையல்லாது சாதாரண உடையில் இருப்பதால் "நீங்க யாரு சார்?. நீங்க பாட்டுக்கு வந்து விசாரணை பண்றேங்க?. எங்க ஹோட்டல்ல ஸ்டே பண்றவங்க லிஸ்ட் அவங்க பெர்மிஷன் இல்லாம யாருக்கும் குடுக்க மாட்டோம். நீங்க கிளம்புங்க" என்றார்.

அவன் ஐடியை எடுத்துக் காண்பித்து "இப்போ காண்பிக்குறேங்களா?" என்று மிடுக்காக போலீஸ் அதிகாரியாக கேட்கவும், அந்த ரிசப்ஷனிஸ்ட் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து பின் "சா... சார்.. சாரி சார். இப்போ தான் ஒரு லேடி அப்புறம் அவங்க கூட ரெண்டு ஜென்ட்ஸ் உள்ளே போனாங்க" என்றான் பயந்து கொண்டே.

"அந்த லேடி எப்படி இருந்தாங்க" என்று தன் விசாரணையை ஆரம்பித்தான்.

"அவங்க பாதி மயக்கத்துல இருத்தாங்க சார். நான் கேட்டதுக்கு அதுல ஒருத்தர் அவங்க ஹஸ்பண்ட் அப்புறம் இன்னொருத்தர் பிரதர்னு சொன்னாங்க. அவங்க வெளியூர்ல இருந்து வந்தாங்கனும், அந்த லேடிக்கு டிராவல் ஒத்துக்காம வாந்தி, மயக்கம் வந்ததால ஹோட்டல்ல பிரஷ்ஷப் ஆகிட்டு போலாம்னு வந்தோம்னு சொன்னாங்க சார்" என்று அவர்களிடம் கேட்டதை அவனிடம் ஒப்புவித்தான்.

சித்துக்கு 'ஒரு வேளை ஃபேமிலி மெம்பர்ஸ் ஆ?. ஒருவேளை காரில் இருந்து இறங்கி வாமிட் பண்ணிருப்பாங்களோ?' என்று யோசித்து விட்டு 'இல்லையே அவங்க கைப்பை கீழே விழுந்தது கூட தெரியாமயா கார்ல ஏறுறாங்க?' என்று தன் கையில் உள்ள கைப்பையைப் பார்த்து சந்தேகம் வலுக்கவும் "சரி ரூம் நம்பர் என்ன?. வாங்க என் கூட" என்று அவரையும் அழைத்துக் கொண்டு அந்த அறையை நோக்கி நடந்தனர் இருவரும்.

அறைக்கு முன் நின்று அறைக்கதவை தட்டும் முன் ஒரு நிமிடம் கையை அப்படியே நிறுத்தினான். அவனுக்கு அழுகை சத்தம் முனங்கலாக கேட்டது போல் இருந்தது. பின் தாமதிக்காமல் அறைக்கதவைத் தட்டினான். அறைக்கதவின் சத்தம் கேட்டதும் உள்ளே கேட்ட முனகல் சத்தம் அப்போது கேட்கவில்லை. இரண்டு மூன்று முறை தட்டிய பிறகே உள்ளிருந்து ஒருவன் வந்து பாதிக் கதவைத் திறந்து "என்ன வேனும்?. நாங்க எதுவும் ரிசப்ஷனுக்கு கால் பண்ணலியே" என்றான்.

"ரூமை சோதனை பண்ணனும்" என்று ஐடியை எடுத்துக் காண்பித்தான் சித்தார்த்.

கதவைத் திறந்தவனுக்கு உதறல் எடுத்து "சார்.. சார்.. நாங்க பேமிலியோட வந்துருக்கோம். என் மனைவிக்கு உடம்பு சரியில்லை" என்று உளறிக் கொண்டே சொன்னான்.

அவன் உளறலிலே சந்தேகமுற்றவன் "அதை நாங்க பார்த்து தெரிஞ்சுக்கிறோம்" என்று அவனை உள்ளே தள்ளி அறைக்குள் நுழைந்தவன் அங்கே கண்ட காட்சியில் சிலையென நின்றான்.

அமுதியை அலுவலகத்தில் தொந்தரவு செய்த மோகன் தான் கட்டிலில் அமுதியின் வாயை கையை வைத்து இறுக மூடியிருந்தான். கன்னங்கள் இரண்டும் வீங்கி, உடை கசங்கிய நிலையில் அவனிடமிருந்து விடுபட முடியாமல் போராடிக் கொண்டிருந்தாள் அமுதி.

சித்தார்த்தை அங்கு எதிர்பாராத மோகன் திகைத்துப் போய் நின்றிருந்தான். வந்த கோவத்திற்கு அவனை அடித்துத் துவைத்து விட்டு, அவனது சட்டையைக் கழட்டி ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தவளிடம் வேறு பக்கம் திரும்பிக் கொண்டு நீட்டினான். அவனுக்கு நிமிர்ந்து நன்றி சொல்லும் தைரியம் கூட இல்லாமல் குனிந்த தலை நிமிராமல் கண்ணீரோடு அவன் சட்டையை வாங்கி அணிந்து கொண்டாள். ஏதோ அந்த நேரம் தன்னைக் காப்பாற்ற வந்த கடவுள் என்று எண்ணிக் கொண்டாள் அவனை.

அதன் பின் இருவரையும் ஆத்திரம் தீரும் வரை அடித்து துவைத்து விட்டு அவன் டிபார்ட்மெண்ட் ஆட்களை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்து விட்டு அமுதியை அழைத்துக் கொண்டு கிளம்பத் தயாரானான். அதற்குள் அமுதிக்கு அவள் அன்னை கற்பகத்திடம் இருந்து ஆயிரம் முறை அழைப்பு வந்து அணைந்திருந்தது.

மதியம் உண்டது அதற்குப் பின் எதுவும் உண்ணாததால் வந்த பசி மயக்கம், அவர்களால் முகத்தில் உண்டான காயத்தின் வலி என்று எல்லாம் சேர்ந்து மயக்கத்தைக் கொடுக்க கால்கள் தளர்ந்து கீழே விழ இருந்தவளைத் தாங்கி கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான். அவளை நேராக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வலிக்கு மருந்து கொடுத்து, டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது.

அதன் பின்னே அவள் ஹேன்ட் பேக்கில் வைப்ரேட்டான மொபைலை எடுத்துப் பார்த்தவன் அதிர்ந்தான். கற்பகத்திடம் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட மிஸ்டுகால்கள் இருந்தது. அதன் பின்னே அவள் அன்னையையும் குழந்தைகளையும் நினைவு கூர்ந்தவன் அவசரமாக அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான். அந்தப் பக்கம் "அமுதி எங்கயிருக்க?. என்னாச்சுமா?. அப்போவே கிளம்புறேனு சொன்ன. இன்னும் வீடு வந்து சேரல. பஸ் ஏதாவது பிராபளமா?. எங்கடா இருக்க?" என்று படபடப்பாக பயத்தோடு கேள்விகளை அடுக்கினார் கற்பகம்.

அவர் குரலிலே 'எந்தத் தாயும் இந்த நேரத்திற்கு தன் மகள் வீடு வந்து சேரவில்லை என்றால் பயப்படத் தான் செய்வார்கள்' என்று நினைத்தவன் அவரை மேலும் பயமுறுத்தாமல் அவரை சமாளிக்கும் பொருட்டு "அம்மா நான் சித்தார்த். நான் வரும் போது அமுதிக்கு ஒரு சின்ன ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு. நான் அங்க இருந்ததால உடனே ஹாஸ்பிடல் கூப்பிட்டு வந்துட்டேன். சாரி நான் இன்பார்ம் பண்ண மறந்துட்டேன் அவசரத்துல" என்றான்.

"என்ன ஆக்ஸிடென்ட்ஆஆ!!" என்று அதிர்ந்தவர் "தம்பி அமுதிக்கு என்னாச்சுப்பா?. எந்த ஹாஸ்பிடல்?. எங்க இருக்குனு சொல்லுங்க நான் உடனே வர்றேன்" என்று படபடத்தார்.

"அம்மா பயப்பட ஒன்னும் இல்லை. முகத்துல சின்னக் காயம். பயத்துல மயங்கிட்டாங்க அவ்வளவு தான். நீங்க பசங்களை வேற கூட்டிட்டு வர வேண்டாம் இந்த நேரத்துக்கு. நான் கண்ணு முழிக்கவும் கூப்டு வர்றேன்" என்று சமாளித்தான்.

"இல்லை தம்பி நான் வர்றேன்" என்று விடாமல் நின்றவரை சமாதானப் படுத்தி இருக்க வைத்து விட்டான். இருந்தாலும் பெற்றவருக்கு மனது அடித்துக் கொண்டு ஒரு மனதாக "சரி" என்றார். பின் தன் அன்னைக்கும் அழைத்து விவரத்தைச் சொல்லவும் அவருக்கும் மனது அடித்துக் கொண்டது.

தொடரும்.
 

Attachments

  • 1635771027189.jpg
    1635771027189.jpg
    235.9 KB · Views: 21
Top