• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 14

Pandiselvi

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 30, 2021
Messages
33
அத்தியாயம் 14

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவுகளுடன் அந்த இரவு கழிய, பகலவன் பகல் பொழுதை இனிதாக்க பிறந்தான்..

காலையில் எழுந்ததும், 'தன்‌ மகள் என்ன சொல்வாளோ?' என்று பயத்திலேயே இருந்த கற்பகம், அவள் எழுந்ததும் முதல் வேலையாக இரவு நடந்ததை தயக்கத்துடன் சொல்ல "ம்ம் சரிமா" என்றதோடு முடித்துக் கொண்டாள். ஏதாவது சொல்வாள் திட்டுவாள் என்று நினைத்தவருக்கு அவள் அமைதியாக ம் என்று முடிக்கவும் அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. விபத்து நடந்ததில் சோர்வாக இருப்பதால் இப்படி சொல்கிறாள் போல என்று விட்டு விட்டார்.

காலையில் சாந்தி வந்து வீட்டு வேலைகளை முடித்து விட்டு சமையல் செய்து கொண்டிருக்கையில் சந்திரமதி அம்மா மெதுவாக எழுந்து வந்தார்.

"இன்னைக்கு என்ன இவ்வளவு நேரமாச்சு இந்த சித் பையன் இன்னும் எழுந்து வரல. வந்தானா? இல்லை இன்னும் எழுந்து வரலயா சாந்தி" என்றபடி வந்தார்.

"இன்னும் எழுந்து வரலமா. நான் வந்ததுல இருந்து கதவு சாத்தி தான் இருக்குது. தம்பி அலுப்புல தூங்குதோ என்னமோ" என்றார் சாந்தி.

"ம் இருக்கும் நைட் எப்போ வந்தானு தெரியல" என்று அவரிடம் பேசிக் கொண்டே சித் அறையைத் திறந்து பார்த்தவர் உள்ளே கண்ட காட்சியில் மெய்மறந்து நின்றார். உள்ளே சித் கட்டிலில் படுத்திருக்க, ஹாசினியை நெஞ்சில் போட்டுக் கொண்டு ஒரு கை அவளை அணைத்திருக்க இன்னொரு கையை தலைக்குத் தாங்கி உறங்கிக் கொண்டிருந்தான்.

'இவளை எப்போது தூக்கிட்டு வந்தான்' என்று நினைத்துக் கொண்டே, "சித்து கண்ணா எழுந்திரு" என்று எழுப்பினார்.

அவர் குரலில் சித்து மட்டுமல்ல ஹாசினியும் மெதுவாக கண் விழித்தாள். கண்ணை சுருக்கி சுருக்கி மெதுவாக கண் திறந்தவள் தன் தேன்குரலால் மெதுவாக "அப்பா ஆச்சி" என்று சிரித்தது.

"ம் அம்மா குட் மார்னிங். ஹாசினி குட்டி குட் மார்னிங்" என்று கொஞ்சி விட்டு, "இன்னைக்கு லேட் ஆயிடுச்சுமா. நாளைக்கு வாக்கிங் போலாம்" என்று சாகவாசமாக எழுந்து அமர்ந்தான்.

"அது சரி சித். ஹாசினி எப்போ எப்படி இங்க வந்தா?"
அவன் நேற்று நடந்ததை சொல்லி விட்டு, "நான் கூட நைட் அவங்க அம்மாவைத் தேடி அழுவானு நினைச்சேன்மா. ஆனால் சமத்தா தூங்கிட்டா" என்று பெருமை பாடினான். கேட்ட சந்திரமதிக்கும் ஆச்சர்யமாக தான் இருந்தது. அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு நெஞ்சில் முகம் புதைத்து சிறிது நேரம் கண் மூட, பின் விழிக்க என்று அவனிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருப்பவளைப் பார்த்து ஆச்சர்யப்படாமல் என்ன செய்வார்?.

பின் அவளுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு அவளை கற்பகத்திடம் விட்டு விட்டு வந்தான். விடும் போதாவது 'அமுதி எப்படி இருக்கிறாள்?' என்று பார்க்கலாம் என்று நினைத்தவனுக்கு அந்த நேரமும் "உள்ளே அறையில் தூங்குகிறாள்" என்று கற்பகம் சொன்னதால் "சரிங்கம்மா பார்த்துக்கோங்க" என்றதோடு வந்து விட்டான். ஆனால் அவனுக்கு மனதுக்கு ஏதோ உறுத்தலாகவே இருந்தது. மருத்துவர் கவுன்சிலிங் வந்து போகச் சொன்னது ஞாபகம் வந்தது. 'ரொம்ப டிப்பிரஷன்ல தான் இருக்குறாங்களோ? ஆனந்திக்கிட்ட சொல்லி பேச சொல்லலாமா?' என்று கூட எண்ணம் வந்தது. 'இதுபற்றி கண்டிப்பாக யோசிக்க வேண்டும்' என்று முடிவெடுத்துக் கொண்டான். பிறகு அவன் ஒரு வேலையாக வெளியில் தயாராகிக் கொண்டிருந்த நேரம், "சித் டேய் சித்து..." என்று கத்திக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான் வசந்த்.

"டேய் என்னடா? ஏன்டா இப்படி எருமை மாதிரி கத்திட்டு வர்ற? இங்க தான் இருக்கேன்" கையில் வாட்ச்சை கட்டிக் கொண்டே வெளியில் வந்தான்.

"என்ன ஆச்சா? நீ நியூஸ் பார்த்தியா இல்லையா? சே ப்ளடி இந்த மீடியாக்காரங்க... இங்க பாரு" என்று சித்தின் கையில் பேப்பரைத் திணித்தான்.

'இவன் என்ன சொல்றான்? அப்படி என்ன பேப்பர்ல வந்துருக்கு?' என்று கையில் பேப்பரை வாங்கிப் பார்த்தவனுக்கு கண்களெல்லாம் கோவத்தில் சிவந்தது. "எவன்டா இந்த வேலையைப் பார்த்தது? போட வேண்டிய எத்தனையோ நல்ல செய்திகள் இருக்கும் போது... சே என்ன மனுஷங்க? நம்மளை மாதிரி ஆளுங்களுக்கு கூட பரவாயில்லைடா. ஆனால் ஒரு பொண்ணோட மானத்தோட விளையாடும் போது கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்களா?" என்று ரௌத்திரமாகக் கத்தினான்.

அன்று ஹோட்டலில் அமுதி கலங்கிய கண்களுடனும் கசங்கிய உடையுடனும் சித்தின் சட்டையுடன் வந்ததை யாரோ அந்த ஹோட்டலின் தரத்தைக் குறைக்கவோ இல்லை அவன் பெயரைக் கெடுக்கவோ போட்டோ எடுத்து மீடியாவுக்கு அனுப்பி விட்டனர். மீடியாக்காரர்களும் அவர்கள் பசிக்கு அந்த செய்தியை தீணியாக்கிக் கொண்டு அவர்கள் பசியைப் போக்கிக் கொண்டனர். அதுவும் திருமணமாகாத 'உயர் பதவியில் இருக்கும் போலீஸ் அதிகாரி இதுபோல் தன் தேவையைத் தீர்த்துக் கொள்கிறாரோ?' என்று கேள்வியாய் ஒரு கொக்கி போட்டு அவனின் பதவிக்கு ஆப்பு வைக்கவோ அல்லது ஹோட்டலின் பெயரைக் கெடுக்கவோ செய்த முயற்சி ஒரு பெண்ணின் மானத்தையும் சேர்த்து கெடுத்து விட்டனர். ஆனால் அதைப் பற்றியெல்லாம் மீடியாக்களுக்கு என்ன கவலை அவர்கள் பத்திரிக்கையின் பக்கங்களை நிரப்ப ஏதாவது காதிற்கு கேட்ட செய்தி வந்தால் போதும்.

அவன் கத்தலில் வெளியே வந்த சந்திரமதி, "டேய் என்னடா ரெண்டு பேரும் காட்டுக் கத்து கத்துறேங்க. உங்க போலீஸ் வேலையை வீட்லயும் பார்க்க ஆரம்பிச்சுட்டேங்களா? ஏன்டா வசந்த் இந்த சித் தான் கத்துறானா புள்ளைத்தாச்சி புள்ளையை வச்சுக்கிட்டு நீயும் வீட்ல இந்த மாதிரி கத்திட்டு இருக்காத" என்று அறிவுறுத்தினார்.

இருவரும் அவருக்கு விஷயம் தெரிய வேண்டாம் என்று "இல்லமா ஒரு அவசரமான கேஸ்" என்று இருவரும் ஒருசேரக் கூறினர்.

"உங்களுக்கு என்னைக்கு தான் அவசரம் இல்லை" என்று புலம்பிய படி அவர் வேலையைப் பார்க்க சென்று விட்டார்.

"வா வசந்த் அந்த மீடியாக்கு போய் விசாரிச்சுட்டு வரலாம்" என்று அவசரமாக கிளம்பினர்.

அதற்குள் விஷயம் அவன் மேலதிகாரிகள் வரை சென்று அவனுக்கு அவர்களிடமிருந்து அழைப்புகள் வந்தவண்ணமிருந்தது. அதையெல்லாம் எடுக்காமல் முதலில் இந்த செய்தியை நீக்க வேண்டும் என்று மீடியாவுக்கு சென்றார்கள்.

அங்கு சென்று போட்டோ எவ்வாறு வந்தது என்று விசாரித்து, அவர்களை வார்ன் செய்து விட்டு உடனே அந்த செய்தியை நீக்கவும் செய்துவிட்டனர். உடனே மேலதிகாரிகளுக்கு அழைத்து தன்னிலை விளக்கமும் கொடுத்து விட்டான். இருந்தும் மனது ஆறவில்லை. 'ஏற்கனவே ரொம்ப மனக் கஷ்டத்தில் இருப்பவள் இந்த செய்தியைப் பார்த்தால் என்னாகும்?' என்று நினைக்கவே கோவமும் பயமும் ஒருசேர வந்தது.

"ஏன்டா ஒரு மாதிரி இருக்க? அதான் அந்த நியூஸை எடுத்தாச்சுல" வசந்த் கேட்க, "எனக்கு பிரச்சனையில்லை டா. அமுதிக்கு?" என்று கேள்வியாய் நிறுத்தியவன், "நம்ம பார்த்த மாதிரி நம்ம பிளாட்லயோ இல்லை அமுதியோ பார்த்திருந்தா? பாவம்டா அவங்க ஏற்கனவே லைஃப்ல அடிபட்டு வந்தவங்க. அதுல இதுவும் சேர்ந்துருச்சுனா? ப்ச்" என்று கவலையானான்.

"விடுடா நடந்தது நடந்து போச்சு. அவங்க பார்த்திருக்க மாட்டாங்க. இல்லனா நம்ம கிட்ட சொல்லிருப்பாங்களே. ஆனந்தி கிட்ட சொல்லி அவங்க கிட்ட பேச சொல்றேன்"

"ம் நானும் அதை தான்டா நினைச்சேன்" என்று இருவரும் 'அமுதி அந்த செய்தியை பார்த்திருக்க மாட்டாள்' என்று ஒரு முடிவில் இருக்க, அவளோ காலையில் எழுந்ததுமே பார்த்து விட்டு அவள் வேறொரு முடிவு எடுத்து விட்டாள் என்பது பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை.

மதியம் வரை நடந்த நிகழ்வுகளையே நினைத்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த அமுதி, ஒரு முடிவெடுத்தவளாக முகத்தைக் கழுவிக் கொண்டு, "அம்மா அம்மா..." என்று அழைத்தபடி ஹாலுக்கு வந்தாள். வீடே வெறிச்சென்று இருந்தது. 'இவங்க எங்க போனாங்க?' என்று யோசித்து விட்டு, 'சந்திராம்மா வீட்ல தான் இருப்பாங்க' என்று அங்கு சென்றாள்.

சித்தின் வீட்டிற்குச் சென்று அழைப்பு மணியை அழைக்கவும், சித்தின் அன்னை சந்திரமதி வந்து கதவைத் திறந்து, "அமுதி உள்ளே வாடா. அம்மா பசங்களாம் இங்க தான் இருக்காங்க. தேடுனுயா?" என்றார்.

"ம் ஆமாமா கானுமேனு வந்தேன்" என்று உள்ளே சென்றாள்.

"என்ன அமுதி மாத்திரை போட்டுட்டு தூங்கி ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான. அதுக்குள்ள எழுந்துட்ட" என்றார் மகள் முகத்தில் இன்னும் சோர்வு அப்பிக் கிடப்பதைக் கண்டு.

"அதெல்லாம் எனக்கு ஒன்னுமில்லமா. சரியாயிடுச்சு. ஊர்ல இருந்து அத்தை கால் பண்ணாங்க. அப்பாக்கு ரெண்டு நாளா உடம்பு சரியில்லையாம். நீ உடனே ஊருக்கு கிளம்பு" என்றாள்.

"அய்யோ அமுதிமா அப்பாக்கு என்னாச்சு?. நேத்து பேசும் போது கூட ஒன்னும் சொல்லவேயில்லை" என்று பதறினார்.

"எனக்கு வேற உடம்பு சரியில்லைன்னு அப்பா தான் அத்தைக் கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லிருக்காங்க. நீங்க இங்கயே கேள்வி கேட்டுட்டு இருக்கப் போறேங்களா?. சீக்கிரம் வாங்க. இன்னைக்கு நைட்டே உங்களுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன்" என்று அவசரப்படுத்தினாள்.

"நீ வரலயா அமுதிமா?. நான் மட்டும் எப்படி?" என்றார்.

"ஆபிஸ்ல பெண்டிங் வேலை இருக்குமா. சரணுக்கும் எக்ஸாம் இருக்கு. அதெல்லாம் முடிச்சிட்டு ஸ்கூல்ல லீவ் சொல்லிட்டு, என் ஆபிஸ்லயும் லீவ் சொல்லிட்டு வர்றேன்மா. ஊர்ல ஒரு வாரம் இருந்துட்டு வரலாம்" என்றாள்.

"நான் இல்லாம ரெண்டு நாள் எப்டி சமாளிப்ப?. என்னமோ சொல்ற போ" என்று அவர் புலம்பி விட்டு கிளம்பத் தயாரானார். போகும் முன் "சந்திரமதி அம்மா பார்த்துக்கோங்க. நான் இன்னைக்கு ஊருக்குக் கிளம்புறேன்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

பசங்களுக்கு உணவூட்டி "அம்மா கொஞ்ச நேரம் பார்த்துக்கோங்க. நான் அம்மாவை பஸ் ஏத்தி விட்டு வந்துடுறேன்" என்று சந்திரமதியிடம் குழந்தைகளை சிறிது நேரம் ஒப்படைத்து விட்டு கற்பகத்தை ஊருக்கு பஸ் ஏத்திவிடக் கிளம்பினாள்.

நண்பர்கள் இருவரும் மாலை பேசிக் கொண்டே வீடு வந்து சேர்கையில், அவர்கள் பிளாட் காம்ப்பவுண்ட் உள் நுழையும் போதே சிலரின் பார்வைகள் தன் மீது வித்தாயாசமாக படிவது போல் உணர்ந்தான் சித். 'ஒருவேளை நமக்குத் தான் அப்படித் தோனுதோ?' என்று ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு 'சே மஞ்சக் காமாலை கண்ணுக்கு எல்லாமே மஞ்சளாத் தான் தெரியும்' என்று மனதில் குட்டி விட்டு அவன் பிளாட்டிற்குச் செல்ல படிகளில் ஏறி வாசலை நெருங்கும் போது அவன் அன்னை சந்திரமதி அங்கு தான் நின்று கொண்டிருந்தார்.

"என்னமா இந்த நேரத்துல வெளில நின்னுட்டு இருக்கேங்க?" என்று கேட்டுக் கொண்டே தாயும் மகனும் வீட்டுக்குள் நுழைந்தனர்.

"அத ஏன்டா கேட்குற இந்த அமுதி பொண்ணு பாவம். ஒன்னு மாத்தி ஒன்னு தொரத்துது பாவத்தை. அவங்க அப்பாக்கு உடம்பு சரியில்லை. அதான் அவங்க அம்மாவை ஊருக்கு பஸ் ஏத்தி விடப்போச்சு. பசங்களை எங்கிட்ட விட்டுட்டு போனா. இப்போ தூக்கிட்டுப் போக வந்துச்சு. இப்போ தான் மூனு பேரும் போறாங்க"

அவனுக்கு மனது ஏதோ உறுத்த, "ஏன்மா இவங்க போகலியா?" என்றான் சந்தேகத்துடன்.

"நான் கூட நினைச்சேன் சித்து. ஆனால் ஆபிஸ் ஸ்கூல் லீவ் வாங்கிட்டு அடுத்த வாரம் வாறோம்னு சொல்லி அவங்க அம்மாவை அவசர அவசரமாக அனுப்பிருச்சு"

சாகவாசமாக சோபாவில் அமர்ந்திருந்தவன், அவர் அவசர அவசரமாக என்று சொன்ன பிறகே ஏதோ பொறி தட்ட, 'ஒருவேளை அந்த நியூஸ் பார்த்திருப்பாங்களோ?' என்று நினைத்தவன் "அம்மா நீங்க சீக்கிரம் அமுதி வீட்டுக்கு வாங்க" என்று இரண்டு இரண்டு படிகளாக தாவி அமுதி வீட்டை அடைந்தான். அவள் என்ன நினைப்பில் இருந்தாலோ கதவு தாள் போடாமலே இருந்தது. அவன் கதவைத் தட்டுவதற்கு கையை கொண்டு செல்லவும் கதவு தானாக திறந்து கொண்டது.

கதவைத் திறந்து உள்ளே ஓடியவன், "என்ன பண்றேங்க அமுதி?" என்று கோவமாகக் கத்தி அவள் கையில் இருந்த பாட்டிலைத் தட்டி விடவும் அது உருண்டு கீழே விழுந்தது. சித்தின் பின்னே வந்த சந்திரமதியும் அங்கே கண்ட காட்சியில் ஸ்தம்பித்து நின்றார்.


தொடரும்.
 

Attachments

  • 1635771027189.jpg
    1635771027189.jpg
    235.9 KB · Views: 31
Top