• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 20

Pandiselvi

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 30, 2021
Messages
33
அத்தியாயம் 20

கதிரவன் உதிப்பதற்கு முன்னும் பின்னும் உள்ள காலை நேரம்..

கதிரவன் நன்றாக தூக்கம் கலைந்து எழுவதற்கு முன்னே புது இடம் என்பதால் சீக்கிரம் எழுந்து விட்டாள் அமுதி. எழுந்தவளுக்கு முதலில் எங்கிருக்கிறோம் என்ற நினைவு வரவே இரண்டு நிமிடங்கள் பிடித்தது. கழுத்தில் உரசிக் கொண்டிருந்த புது மஞ்சள் கயிறு நேற்று நடந்த அனைத்தையும் ஞாபகப்படுத்த, அதன் பிறகே கீழே தன் இரு கைகளையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு வலப்புறம் சாய்ந்து அவர்களைப் பார்த்தவாறு உறங்கிக் கொண்டிருந்த சித்தார்த்தைக் கண்டாள். அவன் படுத்திருக்கும் விதமே சொல்லியது அவனுக்கு தரையில் படுத்து பழக்கம் இல்லையென்று. அவனை சிறிது நேரம் பார்த்தவள், 'ம்ம் பார்த்த இத்தனை நாள்ல கண்ணியமாக தான் நடந்துருக்காங்க. சந்திரமதி அம்மாவும் நல்லவுங்க தான்' என்று அவர்களை சந்தித்த நாளிலிருந்து நினைவுகளை அசைபோட்டு விட்டு எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு அறையிலிருந்து வெளியே வந்தாள்.

அவள் வெளியே வரும் நேரம், அந்த நேரத்திற்கு எப்போதும் வேலைக்கு வரும் சாந்தி, சமையலறையை சுத்தம் செய்து அன்றைய வேலையை ஆரம்பிக்க தயாராகிக் கொண்டிருந்தார். ஆள் அரவம் கேட்டு திரும்பியவர் அமுதி வருவதைப் பார்த்து, "வாங்கம்மா உட்காருங்க. டீ போடுறேன். அம்மாவும் சித்து தம்பியும் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு தான் எழும்புவாங்க. நீங்களும் தூங்கி எழ நேரமாகும்னு நினைச்சேன். நீங்க உட்காருங்க டீ போட்டுருறேன்" என்றார் சாந்தி.

"பரவாயில்லை க்கா. நான் உங்களை விட ரொம்ப சின்ன பொண்ணு தான். வாங்கம்மா போங்கம்மாலாம் வேண்டாம். பெயர் சொல்லியே கூப்டுங்க. அப்புறம் மெதுவாகவே டீ போடுங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை"

"சரிம்மா அமுதி". அமுதி அவரைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டே அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.

"இருக்கட்டும் மா. நான் பார்த்துக்கிறேன். நீங்க வேற வேலை இருந்தா பாருங்க"

"பரவாயில்லை க்கா. பசங்க எழ இன்னும் கொஞ்சம் நேரமாகும். சமையல் மட்டும் நான் பண்றேன். நீங்க எனக்கு உதவி பண்ணுங்க" என்று விட்டு அவர் உதவியுடன் காலை உணவை செய்து முடித்தாள். மறுபக்கம் அவர் டீ போட்டு முடிக்கவும் ஒரு அறையிலிருந்து சந்திரமதியும், மறு அறையிலிருந்து சித்தார்த்தும் கையில் ஹாசினியுடன் வெளியே வந்தான்.

"சீக்கிரமே எழுந்துட்டியா அமுதி" , சந்திரமதி.

"ஆமாங்க மா. இந்தாங்க டீ எடுத்துக்கோங்க" என்று அவருக்குக் கொடுத்து விட்டு, சித்திற்கும் கொடுத்து விட்டு, ஹாசினிக்கு ஆற்றி வைத்த பாலைக் கொடுத்து விட்டு தானும் ஒரு டீ கப்பை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

சித்துடன் ஹாசினி ஒன்றியிருப்பதை பார்க்கும் போது எப்போதும் ஏற்படும் வியப்பை விட இன்று அதிகமாக சித்தை நினைத்து வியந்து கொண்டிருந்தாள். 'இவர் வயது ஆண்களெல்லாம் தங்கள் எதிர்கால துணையே நினைத்து எத்தனையோ ஆசைகளையும் கனவுகளையும் சுமந்து கொண்டு இருக்கும் போது, இவர் மட்டும் எதற்கு என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்?. அதுவும் இவர் அவள் மேல் காட்டும் பாசத்தில் குறையும் பார்க்க முடியவில்லை. ஆனால் சரண்? ' என்று சித்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே சரணைப் பற்றி நினைக்க அவனே, "அம்மாஆஆஆ" என்று ஓடி வந்தான்.

குடித்துக் கொண்டிருந்த டீயை வைத்து விட்டு, "சரண்... தூங்கி எழுந்தாச்சா? பால் குடிச்சிட்டியா?"

"ம் ஆச்சி பால் ஆற்றி குடுத்தாங்க"

அப்போது தான் அமுதியின் அன்னை தந்தை இருவரும் உள்ளே நுழையவும், சந்திரமதியும் சித்தார்த்தும் அவர்களை வரவேற்று அமர வைத்தனர். பின் அனைவரும் அமர்ந்து காலை உணவை முடித்து விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அமுதி ஹாசினிக்கு உணவூட்டிக் கொண்டிருந்தவள், அவள் அமுதிக்கு போக்குக்காட்டி ஓடவும் அவள் பின்னாலேயே அவளும் ஓடிக் கொண்டிருந்தாள்.

"உன் பொண்ணு ஆரம்பிச்சுட்டாளா? ஒரு குணம் இருந்தா அமைதியா உட்கார்ந்து சாப்பிடுவா இல்லைனா இப்படி தான் ஓடிட்டு இருப்பா" என்று இத்தனை நாள் வளர்த்த தன் பேத்தியின் குணங்களைப் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தார் கற்பகம்.

அங்கும் இங்கும் ஓடி ஒளிந்து கடைசியில் சித்தின் மடியில் அமர்ந்து கொண்டு "அப்பா.. பூவா.. கு..கூகூ" என்று அடம்பிடித்தாள். அப்பா தான் பூவா குடுக்கனும் என்று அமுதியிடம் இருந்த உணவை கொடுக்க சொல்லி அழுகவும், "ஹாசினி வா அம்மாகிட்ட" என்றாள் பொறுமையாக.

"பரவாயில்லை கொடுங்க" என்று அவள் கையில் இருந்த உணவுக் கிண்ணத்தை வாங்கி ஊட்ட ஆரம்பித்தான்.

குழந்தையிடம் பாசமாக பேசுவது கொஞ்சுவதைக் கண்டு வியந்தார் எனில் அவன் அழகாக உணவு ஊட்டுவதைக் கண்டு இன்னும் வியப்பில் ஆழ்ந்தார் சந்திரமதி. அர்விந்துடன் விளையாண்டாலும் இதுபோலெல்லாம் அவனுக்கு செய்ததில்லை. 'இவனுக்கு இப்படியெல்லாம் செய்யத் தெரியுமா? தன் உதிரத்தைக் கொடுத்து தந்தையாகவில்லை என்றாலும் அவன் ஒவ்வொரு செயலிலும் தந்தைக்குறிய அத்தனை பாசங்களும் அக்கறையும் இருந்தது.

அமுதிக்கு அதைப் பார்த்து என்ன சொல்வது என்ன நினைப்பது என்று கூட தோன்றாமல் கண் கலங்க ஆரம்பித்து விட்டது. யாரும் பார்க்கும் முன் அமைதியாக துடைத்தெறிந்து விட்டு அவள் அன்னை அருகில் அமர்ந்து கொண்டாள். அமுதியைப் பெற்றவர்களுக்கோ அதைக் கண் குளிரக் கண்டதோடு, 'இனி தன் மகள் வாழ்க்கை நன்றாக இருக்கும்' என்று மனதும் குளிர்ந்து விட்டது.

அவர்களைக் கண்டு மனம் மகிழ்ந்தவர்கள் சரணின் முக பாவனைகளைக் கவனிக்கத் தவறிவிட்டனர். அந்தப் பிஞ்சின் முகம் வாடி அழுநிலைக்கேச் சென்றுவிட்டு வந்தது. முகத்தில் ஏதோ குழப்பமும் பயமும் சூழ தன் அன்னை மற்றும் ஆச்சியின் முகத்தையும் சித்தார்த்தின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். நேற்று அவனுக்கு ஏதோ நடக்கிறது, எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று தானும் மகிழ்ந்து கொண்டிருந்தவனுக்கு, தன் அன்னையின் கடந்த இரண்டு வருடங்களாக இல்லாத புதிய தோற்றமும் அந்த வீட்டில் அவள் கிச்சன் முதல் பெட்ரூம் வரை உலா வந்ததைப் பார்த்து விட்டு வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தான். அதன் பின் வசந்தின் மகன் அர்விந்த் வந்து விளையாட அழைக்கவும் குழந்தை மனம் அதை அப்படியே மறந்து விட்டு அவனிடம் விளையாடச் சென்றான்.

பின் மெதுவாக அமுதியின் பெற்றோர் தாங்கள் சொல்ல வந்த விஷயத்தை சொல்ல ஆரம்பித்தனர்.

"நீங்க அமுதியையும் குழந்தைங்களையும் நல்லபடியாக பார்த்துப்பேங்கனு நம்பிக்கை இருக்கு சந்திராம்மா. அதுனால இங்க இருக்குற பிளாட்டைக் காலி பண்ணிட்டு ஊருக்கு போலாம்னு இருக்குறோம்" என்று கற்பகம் தங்கள் முடிவை சொல்ல ஆரம்பித்தார்.

அவர் முடிவைக் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினாள் அமுதி. புது இடம் புது உறவுகளை நினைத்து ஒரு பக்கம் பயந்து கொண்டிருந்தவளுக்கு இப்போது தன் அன்னையும் உடனிருக்க மாட்டார் என்று சொன்னவுடன் மனம் கலங்க ஆரம்பித்து விட்டது.

"என்ன கற்பகம் திடீருனு இப்படி ஊருக்கு போறோம்னு சொன்னா எப்படி? அமுதியே இன்னமும் தெளிவாகல. இதுல நீங்க ஊருக்கு போயிட்டா பசங்களும் வாடிப்போயிடுவாங்கலே. கொஞ்ச நாளாவது கூடவே இருங்க. இங்க யாரு இருக்குறா? பசங்க நீயும் நானும் தான். இதுல நீங்க சங்கோஜப்படுறதுக்கு கூட ஒன்னுமில்லையே" என்று அவர்கள் எண்ணப்போக்கை அறிந்தவர் போல் கேட்டார் சந்திரமதி.

"உங்க மேல இருக்குற நம்பிக்கையால தான் கிளம்புறோம் சந்திராம்மா. எங்களுக்கென்ன ரொம்பவா வயசாகிடுச்சு? இப்போ நல்லா இருக்குறப்பவே கொஞ்சம் ஊர்ல வேலையை பார்க்குறோம். எங்களுக்கு முடியாதப்போ எங்க போகப்போறோம்?. இங்க தான வரப்போறோம்" என்று தங்களின் முடிவில் உறுதியாக இருந்தார்கள் கற்பகமும் ராமசாமியும்.

"ஏன்மா எங்க கூட இல்லனாலும் நீங்க இப்போ இருக்குற வீட்டிலயே இருக்கலாமே?. திடீர்னு கிளம்புறேங்கனு சொன்னா ஏற்கனவே புது இடம் புது உறவுனு எங்களை ஏத்துக்க டைம் ஆகும். நீங்க பக்கத்துல இருந்தா அமுதிக்கு துணையாவும் இருக்கும்ல" என்று சித்தும் அமுதியின் பயத்தை உணர்ந்து அவர்களை சென்னையிலே இருக்கச் சொல்ல, அவர்களோ பக்கத்தில் இருந்தால் அமுதியும் குழந்தைகளும் தன்னை மட்டுமே சார்ந்திருப்பார்கள். கடைசி வரை ஒரு குடும்பமாக ஒட்டுதலே உருவாகாது என்றெண்ணி விடாப்பிடியாக, 'ஊரில் சிறிது காலம் இருந்து விட்டு வருகிறோம்' என்று சொன்னதால் அவர்களாலும் மேற்கொண்டு வற்புறுத்த விருப்பமின்றி சரி என்றனர்.

ஆனால் அவர்கள் ஊருக்குச் செல்கிறோம் என்று சொன்னதிலிருந்தே அமுதி பேயறைந்தது போல் வெறித்திருப்பதிலே அவளின் எண்ண ஓட்டத்தைக் கண்டு கொண்டான் சித்தார்த். பெண் கொடுத்து விட்டு பெற்றவர்களும் அந்த வீட்டில் இருந்தால் அதற்கும் இந்த சமூகம் ஒரு கதை சொல்லி இழிவாக பேசும். ஒரு பக்கம் இவர்களின் சூழ்நிலை மறு பக்கம் அமுதியின் நிலை என்று யோசித்துக் கொண்டிருந்தவன், "இந்த மாத முடிவில் அமுதி இருந்த வீட்டைக் காலி செய்து விடலாம்" என்ற கற்பகத்தின் பேச்சில் நினைவுக்கு வந்து "ம் சரிங்க மா" என்றான்.

அதன் பின் வந்த நாட்களில், வீட்டைக் காலி பண்ணும் வேலை இருந்ததால், தாய்க்கு உதவியாக அமுதியும் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து விட்டு உதவி செய்தாள். சரணுக்கு பள்ளி விடுமுறை என்பதால் அவனுக்கு தனது ஆச்சியுடன் நேரம் செலவழிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்து விட்டது. ஹாசினிக்கோ எங்கோ தூர அலுவலகத்தில் தன் தந்தை வேலை பார்க்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த பிஞ்சின் மனதில் இப்போது சித்தார்த் கூடவே இருப்பதால் மகிழ்ச்சி பொங்கியது. அவனை விட்டு அகலுவேனா என்றிருந்தாள்.

அதோ இதோ என்று அமுதியின் பெற்றவர்கள் ஊருக்குச் செல்லும் நாளும் வந்து விட்டது. அமுதிக்கு தான் ஏதோ ஒன்றை அவளிடம் பிடுங்கி எடுத்துச் செல்வது போல் இருந்தது. "பார்த்துக்கோங்க தம்பி. எதுனாலும் எங்களுக்கு போன் பண்ணுங்க நாங்க வந்துருவோம்" என்று சித்தாரத்திடம் சொல்லி விட்டு பேருந்தில் ஏறினர். ஹாசினிக்கு விவரம் தெரியவில்லை. ஆனால் சரணோ போக வேண்டாம் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தவனை அமுதி சமாதானம் செய்து வைத்திருந்தாள். அவர்கள் பேருந்தில் ஏற்றி விட்டு காரில் வீடு திரும்பும் போது, சரணும் ஹாசினியும் தூங்கி விட்டனர். தான் கலங்கினால் பெற்றவர்களும் கலங்கிப் போவார்கள் என்று அதுவரை அழுகையை அடக்கி வைத்திருந்தவள் மடை திறந்த வெள்ளம் போல் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தது.

அதைப் பார்த்த சித், "அமுதி நீங்களே இப்படி அழுதா எப்படி? தைரியமாக இருங்க. பார்க்கனும்னு தோனுனா எப்போ வேனாலும் ஊருக்குப் போயிட்டு வரலாம். உங்களுக்கு என்ன வேணும்னாலும் எங்கிட்ட கேளுங்க" என்றான்.

அவளுக்கு அவன் ஆறுதல் சொன்னாலும் கண்ணீர் நின்றபாடில்லை. "ம்ம்" என்றதோடு அமைதியாக இருந்து கொண்டாள்.

அமுதியின் வாழ்வில் அன்றைய இரவோடு இருள் மறைந்து விடியும் பொழுதிலிருந்து பகலவனின் ஒளி வீசத் தொடங்கும் என்ற நம்பிக்கையோடு சித்தார்த் - அமுதினி
என்ற குடும்பமாய் நால்வரும் உறக்கத்தைத் தழுவினர்..

தொடரும்..
 
Top