• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 46

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
91
18
8
Chennai
அத்தியாயம் 46

அவனை வெறித்து நின்றவர்களிடம் வந்து, "நல்லா இருக்கியா அனு" என்று சம்பிரதாயத்திற்காக கேட்டு வைத்தான். "ஹா.. ம் நல்லா இருக்கேன் மாமா" என்றாள்.

"ஏன் அனு இங்க நம்ம வீடு இருக்கும் போது எதுக்கு ஹோட்டல்ல தங்கிட்டு இருக்க?. பாவம் அத்தை இந்த மாதிரி வெளி இடத்துலலாம் தங்குனது இல்ல. இங்க யாரும் இல்லனா பரவால்ல அதான் நாங்க இருக்கோம்ல. வீட்டுக்கு வாங்க" என்று பொதுவாக அழைத்தான். சித்து அருகில் நெருங்கியவுடனே கார்த்திகேயன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

என்ன தான் பகை என்றாலும் ஊரிலிருந்து வெளியூர் வந்து நாம் இருந்தும் இப்படி ஹோட்டலில் தங்க வேண்டுமா என்ற எண்ணம் சித்துவுக்கு. ஆனால் அவன் அத்தை மகளுக்கும் அவன் தம்பிக்கும் புரிய வேண்டுமே அது.

அவன் போலீஸ் உடையில் கம்பீரமாய் நிற்கும் தோற்றம் அப்படியே சித்துவின் அப்பாவையை நினைவு படுத்த, 'அப்டியே பெரியப்பா மாதிரியே இருக்கான்' என்று நினைத்து விட்டு, "ஓ நீ இங்க தான் இருக்கியா?. ஏன் காசு குடுத்து வெளில தங்க முடியாத அளவுக்கு இருக்கோமா நாங்க. இங்க ஹோட்டல் நல்லா தான் இருக்கு. நாங்க பார்த்துக்கிறோம்" என்றான் கார்த்திகேயன். சித்து அவனுக்கு அண்ணன் முறை. பாசம் இல்லையென்றால் கூட பரவாயில்லை முறை வைத்துக் கூட அழைப்பதில்லை.

'இதுல எங்கிருந்து வந்தது பணம் காசு தகுதி? ஒரு பந்த பாசத்தில் அழைத்தால்.. இவர்களெல்லாம் என்ன மனிதர்கள்?' என்று நினைத்து விட்டு, "நீ ஆம்பள எங்கள் வேணா தங்கிப்ப. அத்தையும் அனுவும் அவ்ளோ நாள் வெளில தங்க முடியுமா?. அதுவும் ட்ரீட்மென்ட்காக வந்துட்டு வெளி உணவுலாம் ஒத்துக்குமா? அதுக்கூட யோசிக்க மாட்டியா. எல்லாத்தையும் காச வச்சு வாங்க முடியாது. அது என்னைக்குத் தான் புரியுமோ" என்று சலித்துக் கொண்டான் சித்து.

"ப்ச்.." என்று கார்த்திகேயன் எரிச்சலுடன் அனுவைப் பார்த்தான்.

"நீ விடு சித்து. அவங்களுக்கு அதுலாம் எங்க புரியப்போகுது. நான் இன்னொரு நாள் வீட்டுக்கு வர்றேன் சித்து கண்ணா" என்றார் கொடிமலர்.

அனுவுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், 'இவன் வீடும் அவன் பொண்டாட்டி குடும்பம் நடத்துற லட்சணமும் எப்படி இருக்குனு தான் போய் பார்ப்போமே. அப்படி என்னத்துல விழுந்து கிடக்காரு என் மாமன் பெத்த மகன்' என்று நினைத்து, கார்த்தியிடம் "இல்ல மாமா எனக்கும் வெளி சாப்பாடுலாம் சாப்பிட்டு ஒரு மாதிரி இருக்கு. அம்மாவுக்கும் சாப்பிட முடியல்ல. அதுனால சித்து மாமா வீட்ல இருந்து ட்ரீட்மெண்ட் பார்க்கலாமே" என்றாள்.

அவள் கணவனுக்கு அது பிடிக்காவிட்டாலும் அனுவின் பிடிவாதம் தெரிந்து, "சரி நீங்க வேணா அங்க தங்கிக்கோங்க. நான் இங்க ஹோட்டல்ல இருக்கேன். நாளைக்கு டெஸ்ட் எடுத்து டாக்டர் கிட்ட காண்பிச்சுட்டு நான் ஊருக்கு கெளம்புறேன். ஊர்ல நிறைய வேலை இருக்கு. அப்புறம் உன் ட்ரீட்மெண்ட் முடியவும் நீ போன் பண்ணு. வந்து கூப்பிட்டுக்கிறேன்"

அவளுக்கும் அது சரியாகவேப் பட சரி என்று ஒத்துக் கொண்டாள்.

'இவனெல்லாம் திருத்தவே முடியாது. எல்லாம் பணத் திமிரு' என்று நினைத்து விட்டு அவள் டாக்டரைப் பார்க்கும் வரை காத்திருந்து அனுஷாவையும் கொடிமலரையும் மட்டும் அழைத்துச் சென்றான்.

அனுஷாவையும் கொடிமலரையும் ஓலா கார் புக் செய்து ஏற்றி விட்டு, அவன் வண்டியில் பின் தொடர்ந்தான். வீட்டிற்கு வந்து காலிங் பெல் அடிக்க, அமுதி வந்து கதவைத் திறந்து, "இன்னைக்கு என்ன அதிசயம் சீக்கிரமே வந்துட்டேங்க. ஒருவேளை டைம் தெரியாம வந்துட்டேங்களா?" என்று கேலி செய்து கொண்டே நின்றவள், "ம் ஆமா.. என் வாட்ச் ஓடல. அதான் டைம் தெரியாம வந்துட்டேன். ஓவர் நக்கல்" என்று அவள் தலையில் லேசாக தட்டி, "இங்க பாரு யாரு வந்துருக்காங்கனு" என்று அவன் நகர்ந்த பிறகே, அவன் பின்னால் நின்ற அனுஷாவையும் கொடிமலரையும் கண்டாள்.

"அய்யோ.. நான் உங்களை பாக்கல. வாங்க சித்தி.. வாங்க.." என்று இருவரையும் உள்ளே அழைத்து வந்தாள்.

"எப்படி இருக்கடா அமுதி. ஊருக்கு வந்தப்புறம் நீ கூட போன் பண்ணவே இல்ல"

"நல்லா இருக்கோம் சித்தி. இல்லை கொஞ்சம் வேலைல மறந்துட்டோம்" என்று சமாளித்தாள்.

'சித்தியாம் சித்தி.. உறவு வச்சு கூப்புடுற அளவுக்கு எங்கம்மா கூட பழக்கமா.. இந்த அம்மாவும் ஓவரா பாசத்தை பொழியுறாங்க' என்று அனுஷாவிற்கு உள்ளுக்குள் புகைந்தது.

அவர்களை பார்த்ததையும் அனுஷாவின் ட்ரீட்மெண்ட் பற்றியும் சொல்லி, "ட்ரீட்மெண்ட் முடியுற வரை இங்க தான் இருக்கப் போறாங்க அமுதி. அவங்களுக்கு அம்மாவோட ரூம் ஒதுக்கிக்குடு".

"ம் சரிங்க"

சித்து, "ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வர்றேன்" என்று உள்ளே செல்ல, அமுதி அவர்கள் இருவருக்கும் பழச்சாறு எடுத்து வந்து கொடுத்தாள்.

"தேங்க்ஸ்" என்று எடுத்துக் கொண்ட அனுஷாவின் பார்வை முழுவதும் அமுதியிடத்தில் மட்டுமே.

இருவருக்கும் அறையை ஒதுக்கி கொடுத்து விட்டு அவர்களுக்கான உணவைத் தயாரிக்க ஆரம்பித்தாள் அமுதி. சித்து அவன் அத்தையிடம் சிறிது நேரம் பேசி விட்டு அமுதிக்கு உதவி செய்தான். அலுப்பில் கொடிமலர் சிறிது நேரம் தூங்கி விட்டார்.

"அமுதி உன் கிட்ட கேட்காம கூப்டு வந்துட்டேன. உனக்கு ஒன்னும் சங்கடம் இல்லயே.."

அமுதி இடுப்பில் கை வைத்து, "என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது?" என்று முறைத்தாள்.

"இல்ல அமுதி.. ஊரில் இருந்து வந்தவங்களை பார்த்துட்டு அப்டியே வர முடியல.. அதான்.." என்று இழுத்துக் கொண்டிருந்தான் சித்து.

எதையோ எடுக்க அறைக்கு வெளியே வந்த அனுஷாவும், 'இவளுக்கு நாம வந்தது பிடிக்கலயோ' என்று கூட யோசித்தாள்.

"என்னைப் பார்த்தா அவ்ளோ கொடுமக்காரியாவா தெரியுது உங்களுக்கு. இதுல என்ன இருக்கு?. நீங்க பார்த்துட்டு பேசாம வந்தா தான் உங்களை திட்டிருப்பேன். சும்மா இதுலாம் சொல்லிட்டு இருக்கேங்க. போய் வேற ஏதாவது வேலை இருந்தா பாருங்க போங்க"

'எனக்கு வேலையை இதுதான்' என்று அவளுக்கு உதவி செய்கிறேன் என்கிற பெயரில் அவளை இம்சித்துக் கொண்டிருந்தான்.

அனுஷாவால் அதற்க்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. எடுக்க வந்ததைக் கூட மறந்து உள்ளே சென்று விட்டாள். 'இவ இவ்ளோ நல்லவளா என்ன..' என்று நினைத்து அவர்களின் நெருக்கத்தையும் அந்நின்யோத்தையும் கண்டவளுக்கு பொறாமையாக இருந்தது.

இரவு அமுதி சமைத்த உணவை உண்ட கொடிமலர் ஆஹா ஓஹோ என்று பாராட்ட, அனுஷாவோ பரவால்ல என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.

சித்து முறைக்க, 'என்ன முறைப்பு? உனக்காகலாம் உன் பொண்டாட்டியை பாராட்ட முடியாது' என்று நிறுத்திக் கொண்டாள்.

"நீ குடுத்து வச்சவன் சித்து. அமைதியா பொறுமையா நல்லா சமைச்சுப் போடுற பொண்ணா கெடச்சுருக்கு" என்க, "என்ன வாருறியா மா நீ" என்று கடுகடுத்தாள்.

"நான் ஏன்டி உன்னை சொல்லப் போறேன். உன்கிட்ட இருந்து தப்புச்சான் எங்கண்ணன் மவன்‌. உன்கிட்ட மாட்டிருந்தா தவிச்ச வாய்க்கு தண்ணி கூட எடுத்து தரமாட்ட" என்றார்.

"தண்ணி வேனும்னா நீயே போய் குடியேன். நான் எதுக்கு எடுத்து தரனும்"

"ம் கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு. இப்டியே வாய்க்கு வாய்க்கு பேசத்தான் லாய்க்கு"

"அத்தை விடு.‌ அவளை எதுக்கு டென்ஷன் படுத்துற"

அனுஷா வெக்கு வெக்கென்று நடந்து சென்று அறைக்குள் அடைந்து கொண்டாள்.

"உண்மையை சொன்னா அவளுக்கு கசக்குது. அமுதி நீ தப்பா எடுத்துக்காதடா. அப்பனும் மகளும் இருக்கும் போதே பாதி துட்டு புத்தி.. இப்போ அந்த குடும்பத்துல போய் வாக்கப்பட்டு திமிரும் அதிகமாயிடுச்சு. காசிருந்தா போதுமா" என்று கொடிமலர் சங்கடப்பட்டார்.

"விடுங்க சித்தி ஒரு குழந்தை வந்தா சரியாகிடுவா.."

"அதுக்கு தான் நானும் கடவுளை வேண்டுறேன். எங்க.."

"எல்லாத்துக்கும் நேரம் வரனும்ல த்தை. நம்ம அவசரத்துக்கு கிடைக்குமா.. ஆனாலும் உன் பொண்ணுக்கு ரொம்ப திமிரு தான்"

"நீ தப்பிச்சனு சொல்லு" என்று அவர் சிரிக்க அமுதியும் சேர்ந்து சிரித்தாள். இன்னும் அவருக்கு அமுதி இரண்டாம் தாரம் என்பது தெரியாது. தெரிந்தால் அவர் மனநிலை எப்படி என்று தெரியவில்லை. ஆனால் அனுஷா அளவிற்கு வார்த்தைகளால் வதைக்க மாட்டார்.

இவர்கள் மூவரின் சிரிப்பும் பேச்சும் கேட்டு உள்ளே இருந்த அனுவிற்கு கோவத்தில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. 'சே நாம வராமயே இருந்திருக்கலாம் போல. இந்த அம்மாவும் ரொம்ப பண்ணுது' என்று எரிச்சலுற்றாள்.

இரவு தூங்கும் முன் பால் வேண்டும், அதில் சர்க்கரை இவ்வளவு போடு, அது சேர், இது சேர் என்று ஏதோ வேலைக்காரியிடம் வேலை வாங்குவது போல் அவளைப் படுத்திக் கொண்டிருந்தாள்.

சித்துவுக்கு கடுப்பாகி விட்டது. "ஏய் அவ என்ன உன் வீட்டு வேலைகாரினு நெனச்சியா. இந்த வீட்டுக்கு எல்லாமே அவ தான். ஒரு வீட்டுக்கு ஹெஸ்ட்டா வந்தா எப்படி நடந்துக்கனும்னு தெரிஞ்சுக்கோ. உடம்பு முழுக்க திமிரு"

"ஓ பொண்டாட்டி வேலை வாங்கவும் கடுப்பாகுதோ மாமாவுக்கு.. வீட்டுக்கு வந்த ஹெஸ்ட்ட எப்படி பார்த்துக்கனும்னு உங்க பொண்டாட்டிக்கு சொல்லிக் குடுங்க மொத"

"இங்க பாருங்க இது என் மாமா வீடு. நான் இப்படித்தான் இருப்பேன். நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க" என்று சித்துவிடம் ஆரம்பித்து அமுதியிடம் முடித்து விட்டு போய் விட்டாள்.

"இவளை.." என்று எரிச்சலுற்றவன், "சாரி அமுதி. அவ பேசுனதை தப்பா எடுத்துக்காத. அத்தைக்காக அவ இருக்குற வரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி பார்த்துக்கோ மா ப்ளீஸ்" என்றான்.

"ஓ ஓஹோ.. உங்க அத்தை மகளை நாங்க அட்ஜஸ்ட் பண்ணி இருக்கனுமா.. அத்தை மகளுக்கு அப்புறம் தான் பொண்டாட்டி அப்டி தான" என்றாள் அமுதி கோவமாக இடுப்பில் கை வைத்து..

"நான் எப்பமா அப்டி சொன்னேன்? ஆமா நீ ஏன் இவ்ளோ கோவப்படுற"

"இப்போ சொன்னேங்களே.‌ அத்தை மக மேல அம்புட்டு பாசமோ. மொத அத்தை மக தான்னா அவளையே கட்டிக்க வேண்டியது தான.." என்று கோவமாக செல்வது போல் அறைக்குள் சென்று சிரித்தாள்.

'அடக்கொடுமையே இதென்னடா வம்பா போச்சு. இவளை கூப்டு வந்து எனக்கு நானே ஆப்பு வச்சுக்கிட்டேனா. இந்த அமுதி வேற ஏன் இன்னைக்கு இவ்ளோ கோவப்படுறா. ஸப்பா முடியல.. சிவனேனு அத்தைய மட்டும் வீட்டுக்கு கூப்புட்டு வந்துருக்கனும். இந்த அனுவ அந்த குரங்கு மூஞ்சி கார்த்திக் கூடவே விட்டுட்டு வந்துருக்கனும்'

"அம்முமா.." என்று அழைத்துக் கொண்டே அறைக்குள் செல்ல, அவள் மூஞ்சியை திருப்பிக் கொண்டு கோவமாக இருப்பது போல் படுத்துக் கொண்டாள்.

"ஏய் அவ பேசுனதுக்கு நான் என்னடி பண்ணுவேன்"

"அதெப்படி அவ அப்படி சொல்லலாம். மாமா வீடாமே. அப்போ எனக்கு"

"நீயும் மாமானு சொல்லிக்கோயேன். நல்லாத்தான இருக்கு"

"என்னாது!" என்று முறைக்க..

"இல்லம்மா.. மா..மா..னு"

"அதான் ஒருத்தி கூப்பிட இருக்காள அது போதும்"

"சரி விடு கூப்பிட வேண்டாம்"

"ஓ அப்போ நான் கூப்பிட வேண்டாம்"

"ஏய் இப்போ என்ன தான்டி பண்ணனுங்குற. இங்க பாரு அம்முமா.. அவ சும்மா நாளைக்கு ஊருக்கு போயிடுவா.. அவ கூடலாம் உனக்கு எதுக்கு போட்டி.. உனக்கு மட்டும் தான்மா முதலிடம். நீ கோவப்பட்டா நல்லா இல்லடா"

"ஓ அப்போ நான் நல்லா இல்ல. அவ நல்லா இருக்காளா?"

"நான் எப்போமா அப்டி சொன்னேன்" என்று பாவமாக முகத்தை வைத்தான்.

"சரி ‌சரி விடுங்க கோவம்லாம் இல்ல. ஆனா ரொம்ப ஓவரா அவளை விழுந்து விழுந்து கவனிச்சேங்களா.. அதான்.. லைட்டா பொறாமை வந்துருச்சு.."

"நல்லா வந்துச்சு"

"ஓ அத்தை மக கோவப்பட்டா மட்டும் இனிக்குது. நாங்க லைட்டா கோச்சுக்கிட்டா எரிச்சலா இருக்கோ"

'எப்பா இந்தப் பொண்ணுங்களுக்கு பொஸஸிவ்னஸ் மட்டும் எங்கிருந்து தான் வருமோ. இதுக்கு மேல இதைப்பத்தி பேசுனா விடியும் வரை தொடரும்' என்று நினைத்தவன், அவளின் இதழ்களை மூடினான் அவன் இதழால்..

தேனொழுகும்
இதழ் இருந்தும்
கஞ்சத்தனமாய்
நெற்றிமுத்தம் எதற்கு..

முகம் சேர்த்து
அகம் அணைத்து
மூச்சிறைக்க பசியாற்று..


தொடரும்..