• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விதையாய் விழுந்து மரமாய் எழுந்த மலரே 6

Pandiselvi

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 30, 2021
Messages
33
அத்தியாயம் 6

வெய்யோன் வெண்மதியோடு கலக்கும் நேரம் ஆகாயம் வெட்கம் கொண்டு சிவப்பு நிறத்தைப் பூசிக் கொண்டது..

சூழ்நிலைகள் மாறினாலும் பருவங்கள் ஓடினாலும் விதி என்ற ஒன்று நினைத்து விட்டால் வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். தன் வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத ஒருவரைக் கூட தன் வாழ்க்கையில் இணைக்கும். அது போல் தான் அமுதினி எனும் பிறை நிலவொன்று சித்தார்த் எனும் கதிரவன் கண்ணில் பட்டு இருவரையும் வாழ்க்கையில் இணைத்து முழுமதியாக்கக் காத்துக் கொண்டிருந்தது.

அன்று வெள்ளிக்கிழமை, தன் அன்னைக்கு உடம்பு சரியில்லாமல் இருப்பதாலும் வாரக்கடைசி விடுமுறை என்பதாலும் அலுவலகத்தில் இருந்து சீக்கிரமேக் கிளம்பி வீட்டிற்கு வந்தாள் அமுதினி. தன் அன்னையை வீட்டில் ஓய்வெடுக்குச் சொல்லி விட்டு தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச்சென்றாள்.

கோவிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டு விட்டு தன் குழந்தைகளை விளையாட விட்டு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்தாள். பிள்ளைகளுடன் இருக்கும் போது தன் கடந்த காலத்தின் நினைவை எப்போதும் நினைக்க மாட்டாள். குழந்தைகளோடு சந்தோஷமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்.

கடந்த சில நாட்களாக கற்பகம் அம்மாவுடன் சென்று பழகிய சந்திரமதிக்கு அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் தான் மட்டும் மெதுவாக கிளம்பி கோவிலுக்கு வந்தார் சந்திரமதி. கற்பகம் அம்மா மற்றும் குழந்தைகளுடன் சிரித்து பேசிக்கொண்டு வருபவர் இன்று வெறுமை தாக்க தனியாக வந்து அம்மனை தரிசித்து விட்டு கோவிலில் அமர்ந்தார்.

வெகுநேரம் ஏதோ சிந்தனையில் இருந்தவரை சரண் மற்றும் ஹாசினியின் குரல் நினைவுக்குக் கொண்டு வந்தது. 'ஓஓ இவங்க அம்மா கூட கோவிலுக்கு வந்துருக்காங்களா' என்று நினைத்து விட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்களை பெயர் சொல்லி அழைத்துக் கொண்டே வேகமாக எழுந்தவர் தலைசுற்றிக் கீழே விழுவதற்குள் அமுதினி வந்து தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.

"என்னச்சுமா?. பார்த்து வரக் கூடாதா?. இந்தாங்க தண்ணீக் குடிங்க" என்று தன் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள்.

"ஆச்சி என்னாச்சு?. இன்னைக்கு நீங்க லேட்டா?" என்றபடி சரண் ஓடி வந்தான்.

சந்திரமதி தன் பிள்ளைகளின் பெயரைச் சொல்லி அழைக்கும் போதே 'யார் இவர்?, தன் பிள்ளைகளின் பெயரைச் சொல்லி அழைக்கிறார்' என்று எண்ணியவள் சரண் வந்து ஆச்சி என்கவும் முழித்தாள்.

அவள் முழிப்பதைப் பார்த்து "அம்மா இவங்க தான் சந்திரா ஆச்சி. நான் சொல்வேன்ல" என்றான்.

"ஓஓஓ நீங்க தானா அது. சாரிமா உங்களை நான் இன்னைக்கு தான் நேர்ல பார்க்குறேன்' என்றாள் அமுதினி.

"பரவாயில்லை மா. நீ ஆபிஸ் போயிடுறதால நானும் உன்னைப் பார்த்ததில்லை" என்றார்.

"உங்களுக்கு உடம்பு ஏதும் சரியில்லையா?. ஏன் தனியா வந்தேங்க?".

"இல்லமா கொஞ்சம் பிரஷ்ஷர் அதிகமாகி மயக்கம் வந்துருச்சு. அவ்வளவு தான். வேற ஒன்னுமில்லை" என்றார்.

"சரிங்கம்மா வாங்க வீட்டுக்கு போலாம்" என்று அவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டனர்.

கற்பகம் அம்மாவைப் பார்த்து விட்டு "இன்னைக்கு சாந்தி வேற லீவ். காலையிலே சொல்லியிருந்தா கூட சித்து வீட்ல இருந்துருப்பான். நான் தான் போய் ஏதாவது பண்ணனும். சரிடா அமுதி நான் கிளம்புறேன்" என்று கிளம்பவும், "ஆச்சி நானும் வர்றேன்" என்று சரணும் "நானா.. நானா.." என்று ஹாஷினியும் சந்திரமதியுடன் கிளம்புவதற்கு தயாராகவும் 'இவங்க ரெண்டு பேரும் விட மாட்டாங்க' என்றெண்ணி "உங்களுக்கும் உடம்பு சரியில்லை இவங்களும் உங்களை விட மாட்டாங்க. வாங்கம்மா இன்னைக்கு நானே சமைச்சுக் குடுக்குறேன்" என்றாள் அமுதி.

"இல்லடா நானே பார்த்துப்பேன். உனக்கெதுக்கு கஷ்டம் நீயே இன்னைக்கு தான் ஆபிஸில் இருந்து சீக்கிரம் வந்துருக்க. ரெஸ்ட் எடு" என்றார்.

"பரவாயில்லைமா வாங்க" என்று நால்வரும் அவர் வீட்டை அடைந்தனர். இருவர் மட்டும் இருக்கும் வீடு என்பதால் வீடு சுத்தமாக அடுக்கி வைத்தது போல் இருந்தது.

"அமுதி இரு நான் போய் உனக்கு டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்" என்று சந்திரமதி நகர ஆரம்பிக்கவும் "உங்களுக்கு உதவி பண்ண நான் வந்தா எனக்கு நீங்க டீ போடுறேங்களா?" என்று இடுப்பில் கை வைத்து சிரித்து விட்டு "நீங்க இவங்க ரெண்டு பேர் கூட விளையாடுங்க. நான் போய் டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்" என்று 'கிச்சன் எங்கு இருக்கிறது?' என்று கேட்டு கிசச்னுக்குள் நுழைந்து டீ போட்டு எடுத்து வந்தாள்.

சந்திரமதிக்கு கொடுத்து விட்டு ஹாசினி சினுங்க ஆர்மபிக்கவும் "தூக்கம் வந்துருச்சு போல. நீ‌ வேனா உள்ள தூங்க வை அமுதி" என்கவும் அவளும் ஹாசினியை அறையில் தூங்க வைத்து விட்டு வந்தாள் அது சித்தார்த் அறை என்று தெரியாமல்.

சந்திரமதி அவள் சித்தார்த் அறை என்று அவள் செல்லும் போதே பார்த்தாலும் அவன் ஒன்றும் சொல்லமாட்டான் என்பதால் அமைதியாக இருந்தார். பிறகு சந்திரமதியும் சரணும் அவர் அறைக்கு சென்று கதைகள் பேச ஆரம்பித்து விட்டனர். அவருக்கு முதன்முதலாக தன் வீட்டில் கலகலப்பும் குழந்தைகள் சத்தமும் நிறைந்ததில் சந்தோஷம். தன் இத்தனை நாள் ஆசையை சரணுடன் சிரித்துப் பேசி கதைகள் சொல்வதன் மூலம் தீர்த்துக் கொண்டார். அதன் பின் அமுதி கிச்சன் சென்று ஃபிரிட்ஜில் இருந்த மாவை எடுத்து இட்லி ஊத்தி விட்டு தக்காளி சட்னியும் தேங்காய் சட்னியும் வைத்து விட்டு அடுப்படியை ஒதுங்க வைத்துக் கொண்டு இருக்கும் போது ஹாலிங் பெல் சத்தத்தில் 'யாரு வந்துருக்காங்க?' என்று கையைக் கழுவி விட்டு தன் சேலை நுனியில் கையைத் துடைத்துக் கொண்டே வந்து கதவைத் திறக்கவும் வெளியே சித்தார்த் தான் அவளை பார்த்து விழி விரித்து யோசனையுடன் நின்றிருந்தான். வேலைக்கார அம்மா சாந்தி லீவ் என்பதால் சீக்கிரமே வந்திருந்தான்.

முதலில் 'போலீஸ் வந்துருக்கு!' என்று திடுக்கிட்டவள் அவன் விழிப்பதைப் பார்த்தப் பின் "யாரு சார் வேனும்?" என்றாள். அமுதியைப் போலவே சித்தார்த்தும் முதலில் அவளை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் குரலில் நினைவு வந்து 'நம்ம வீட்ல யாரு இது புதுசா?' என்று நினைத்து "நீங்க யாரு?. எங்க வீட்ல என்ன பண்றேங்க?" என்றான் போலீஸ்காரங்களுக்கே உரிய சந்தேகத் தோரணையில் கேள்விகளை அடுக்கினான் தன் கம்பீரக் குரலில்.

"உங்க வீடா?" என்று திகைத்து விட்டு 'ஓ அவங்களுக்கு பையன் இருக்காருனு சொன்னாங்களே. அவங்களா இருக்குமோ?' என்று யோசித்து விட்டு "நீங்க சந்திரமதி அம்மாவோட பையனா?. சாரிங்க எனக்குத் தெரியாது" என்று அவள் மென்மையான குரலில் சொல்லிக் கொண்டிருக்கையிலே ஹாலிங் பெல் சத்தத்தில் சந்திரமதி வெளியே வந்தார்.

வந்தவர் "சித்துக் கண்ணா என்ன அதிசயம் சீக்கிரமா வந்துட்ட. உள்ளே வாப்பா" என்று அழைத்தார்.

அமுதி வழி விட்டு நிற்கவும் அவன் உள்ளே வந்து சோஃபாவில் அமர்ந்தான். பின் சந்திரமதி அமுதியைப் பற்றி சொல்லி விட்டு இன்று கோவிலில் நடந்ததை சொன்னார்.

"அம்மா எத்தனை தடவை சொல்லிருக்கேன் தனியா போக வேண்டாம்னு. சாந்தியக்கா கூட போங்க. இல்லன்னா போகவே வேண்டாம்னு. என் பேச்சை என்னைக்கு தான் கேட்க போறேங்களோ?" என்று கோவத்தில் கத்த ஆரம்பிக்கவும்,

"அடேய் விடுடா.. அதான் ஒன்னும் ஆகலேல. அப்புறம் என்ன?" என்றார் அவன் தோளைத் தட்டி.

"ம்ம்" என்று அவரை முறைத்து "ஏதாவது ஆகியிருந்தா தெரிஞ்சுருக்கும்" என்றான்.

"அதுக்குத் தான் சொல்றேன் நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணா வீட்டுக்கு மருமக பேரக் குழந்தைகள்னு வந்துருவாங்க. அவங்க கூட வெளில போயிப்பேன். நீ தான் கேட்க மாட்டேங்குற" என்று இதான் சாக்கென்று அவர் ஆசையை தன் மகனிடம் சொன்னார்.

"இதுக்கான பதிலை உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது?" என்று விட்டு "நான் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வர்றேன்" என்று கோவமாக அறைக்குள் சென்று விட்டான்.

'ரொம்ப கோவக்காரராக இருப்பார் போல' என்று அமுதினியும் அப்போது தான் அறையிலிருந்து வெளியே வந்த சரணும் அவன் கம்பீரக் குரலில் மிரட்சியுடன் நின்றிருந்தனர்.

"அவன் அப்படி தான் கல்யாணப் பேச்சு எடுத்தாலே கத்துவான். என்ன பண்ண ஏதேதோ நடந்து போச்சு. அதுக்காக ஒரேயடியா கல்யாணமே வேண்டாங்குறான்" என்று ஏதேதோ நினைவுகளில் மூழ்கியவர் நினைவு வந்து "நீங்க சாப்பிட்டு போங்க அமுதி. சரணுக்கு சாப்பாடு எடுத்து வை. டைம் ஆச்சு பசிக்கும் குழந்தைக்கு" என்றார்.

"வீட்ல சாப்பாடு செஞ்சு வச்சுட்டு தான் வந்தேன்மா. நாங்க வீட்ல போய் சாப்பிட்டுக்குவோம். இருங்க நான் சாப்பாடு எல்லாத்தையும் டைனிங் டேபிள்ல எடுத்து வச்சுடுறேன்" என்று கிச்சனை நோக்கிச் சென்றாள்.

சித்தார்த் அறைக்குள்ளே ஹாசினி பூவின் மேல் பனித்துளி துயில் கொள்வது போல் பூப்போன்ற மெத்தையில் சிறுபனியென உறங்கிக் கொண்டிருந்தாள். வெளியே தன் அன்னையின் கல்யாணப் பேச்சில் பல எண்ண அலைகள் வந்து தாக்க மெத்தையில் ஒரு ஓரத்தில் சில நிமிடம் என்னவோ போல் அமர்ந்து விட்டான். மெத்தையின் மறு ஓரத்தில் சின்னஞ்சிறு பூவொன்று தூங்குவது அறியாமல். பின் நடந்தவகளையெல்லாம் நினைக்கவே கூடாது என்று மனதிலே போட்டு புதைத்து விட்டு பிரஷ்ஷப்பாக குளியலறை சென்று விட்டு முகத்தைத் துடைத்துக் கொண்டே வெளியே வரும் போது "அப்பாஆஆஆ" என்ற அழைப்பில் திடுக்கிட்டு திரும்பினான்.


தொடரும்.


சாரி ஃபிரண்ட்ஸ் கொஞ்சம் வேலை. இனிமே ரெகுலராக அப்டேட் போட முயற்சி பண்றேன்.
 

Attachments

  • 1635771027189.jpg
    1635771027189.jpg
    235.9 KB · Views: 21
Top