• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 12

"அவே வந்துட்டான் டி!" திண்ணையில் இருந்து வடிவு குரல் கொடுக்கவும் அன்னம் தண்ணீருடன் ஓடி வர, அறைக்குள் கேட்டிருந்தாலும் வெளிவராமல் அமர்ந்திருந்தாள் கல்யாணி.

சென்னையில் இருந்து திரும்பி வீடு வந்து பத்து நாட்கள் கடந்திருந்தது.

வந்ததுமே பவனிடம் சென்று தங்கள் சம்மதத்தைக் கூறி மகிழ்ச்சியையும் தெரிவித்துவிட்டு வந்தார் அரசன்.

பவன் தன் தம்பி சரவனுடன் பேசி முடிவு செய்து ராசுவிடமும் தெரிவித்து விட, அரசனும் அவரிடம் சொல்லிக் கொண்டு பத்தே நாட்களில் நாள் குறிக்கும் அளவிற்கு வந்திருந்தது கல்யாணி ப்ரணித்தின் திருமணம்.

"என்ன சத்தம்லாம் ஊரக் கூட்டுது.. அன்னைக்கு பையன பாத்துட்டு வந்தன்னைக்கு மட்டு மூஞ்ச ஏழு முழத்துக்கு தூக்கி இருந்திய!" என அரசன் தன் அன்னையை நக்கலாய் கேட்க,

"சொல்லி காட்டுத நேரமா இது.. நாளக் குறிச்சியா இல்லயா? என்ன சொன்னான் அந்த ஜோசியக்காரன்?" என வடிவு பரபரத்தார்.

"நீங்க போன பொறவு ஒரு எடத்துல உக்காரல.. என்னனு சொல்லிருங்க.. இதுக்கு மேல தாங்க மாட்டாவ" என்று அன்னம் கூறவும் அரசனும் கையில் கொண்டு வந்த தாளை அன்னை கையில் கொடுத்தார்.

"இதுல தேதி நேரம் எல்லாஞ் சரியா எழுதிருக்கு.. கல்யாணிட்ட குடுத்து படிக்க சொல்லுங்க.." என்றார்.

"கையோட வாங்கியாந்துட்டியலா?" அன்னம் ஆச்சர்யம் காட்ட,

"பின்ன என் மவன என்ன நினச்ச நீ?" என்ற வடிவை,

"இப்போ மட்டு உங்க மவனாக்கும்!" என்று நினைத்துக் கொண்டார்.

"நாப்பது நாளு கிடக்கு ஆத்தா! அதுக்குள்ள எல்லாத்தையும் செய்யணும்.. அவிய வீட்டுலயும் போனப் போட்டு கேட்டுட்டேன்.. சரினு சொன்ன பொறவு தான் நாளக் குறிச்சதே!" என்று அரசன் கூற,

"அவளுக்கும் நாளு தோது படும் சரி தான்" என்றார் அன்னம்.

"பொறவு என்ன! பத்திரிகய அடிக்கத் தான? அந்த கண்ணையன் மண்டபத்த சொல்லிரு.. காசு குறையா கேக்குதான்னு மாரி பய மண்டபத்த சொல்லிராத.. வாரவிய எல்லாம் மெட்ராஸ்காரங்க.. கண்ணையன் மண்டபம் தான் சரியா இருக்கும்" வடிவு கூற,

"சரி த்தா!" என்ற அரசன் முகத்திலும் சிறு புன்னகை.

"கல்யாணிய பத்திரிக்கைக்கு பேரு எழுத சொல்லிருதேன்.. நாளைக்கே அடிக்க குடுத்துறலாம்" அன்னம் கூற,

"ஆமா எங்க அவள?" என்று கேட்டார் அரசன்.

"உள்ள தான் இருந்தா!" என்ற அன்னம் மகளை அழைக்க, சாவதானமாய் வந்து கல்யாணி நிற்கவும் சத்தமே இல்லாமல் அமைதியாய் அங்கே அமர்ந்து கொண்டார் வடிவு.

"இந்த வாயி மட்டுந்தா இவியளுக்கு.. இவளுக்கு பயந்துட்டு பம்மிட்டி நிக்கத பாரேன்" என மானசீகமாய் அன்னம் தலையில் அடித்துக் கொள்ள, மகளிடம் திருமண விவரத்தை கூறினார் அரசன்.

"சரி ப்பா!" என கேட்டுக் கொண்டு அமைதியாய் அவள் நிற்க, பார்த்தவருக்கே பாவமாய் போனதோ!

"என்னத்தா! உடம்பு எதுவுஞ் சரி இல்லையா?" என அக்கறையாய் கேட்டு மகளின் நெற்றியில் கையை வைக்க,

"ஒன்னும் இல்ல ப்பா.. சும்மாத் தான்" என்றாள் தந்தையைப் பார்த்து.

எதாவது கேட்டால் சமாதானப்படுத்தலாம்.. தனக்குள் வைத்துக் கொள்பவளிடம் கேட்கவில்லை அரசன். அப்படி கேட்டும் பழக்கம் இல்லையே!

"சரி த்தா.. ஆத்தாட்ட தாளு குடுத்துருக்கேன்.. வாங்கி பாத்துட்டு சாமி முன்னாடி வச்சிரு.. எல்லாம் நல்லது தான் நடக்கும் த்தா.. அப்படியே பத்திரிக்கைக்கு குடுக்க பேரையும் கேட்டு எழுதி வையி!" என்று போகிற போக்கில் அவளுக்கும் சமாதானம் சொல்லி சென்றார்.

"அவ்ளோ பெரிய மெட்ராஸ்ல இருக்கவியளே சின்னதா ஒத்த ஒரத்த தாளுல பத்திரிக்கைய முடிச்சிப்புடுதாக.. நாம மட்டு சொந்தக்காரே, சொக்காரே, அங்காளி, பங்காளின்னு இழுத்தா மாப்பிள வீட்டுல என்ன நினைப்பாவ?" வடிவு கேட்க,

"ஏத்த! அவுக வளந்த விதத்துல அவுக அடிக்கட்டும்.. அதுக்காவ நம்ம ஆளுங்கள விட்டு குடுக்க கூடாது.. நாள பின்ன என் பொண்ணுக்கும் நாளு பேரு வேணும்.. மெட்ராஸுல பொண்ணு குடுக்க பகுமானத்துல எங்க பேர எல்லாம் பத்திரிக்கைல போடலையோன்னு உங்க மவே முன்னாலேயே கேப்பானுவ" என்று அன்னம் கூறவும்,

"ஆமா ஆமா அதுவும் சரி தேன்.. எல்லாம் கோட்டிக் கார பயலுவ" என உடனே மாறிக் கொண்டார் வடிவு.

"பொழுது சாயட்டும்.. பேரு எல்லாத்தையும் எழுதி வச்சிருவோம்.. அதுக்குள்ள நான் மாவாட்டிட்டு வாரேன்" என்று அன்னம் சென்றுவிட, திருதிருவென விழித்து பேத்தி முன் அமர்ந்திருந்தார் வடிவு.

"அதான் மண்டபம் வர பேசி முசிச்சிட்டியே! பொறவு என்ன நல்லவ மாதி முழிப்பு?" கல்யாணி கேட்க,

"இல்ல உனட்ட கேக்காம பேசிப்புட்டேன்ல.. அந்த வருத்தம் தான்" என்றார்.

"இது மட்டும் தான் எனட்ட கேக்காம பேசினியாக்கும்.. நடிக்க வரலைல வுட்ரு அப்பத்தா.. அதான் சொல்லிட்டு போச்சே உன் மவே.. குடு அந்த தாள.."

"உனட்ட நம்பி தரலாமா டி?"

"கல்யாணமே பண்ணிட்டு போவ போறே.. இத நம்ப மாட்டியாக்கும்?" என்றபடி இறங்கி வந்து தாளைப் பிடுங்கி அதில் கண்களை ஓட விட்டாள்.

"இன்னும் நப்பத்தஞ்சே நாளு தான்!" பெருமூச்சை இழுத்து கல்யாணி கூற,

"அவே நாப்பதுன்னு சொல்லிட்டுல்ல போனான்?" என்றார் வடிவு உடனே!

"ஏன் ஒரு அஞ்சு நாள் கூட வச்சு பாத்துக்க மாட்டியாக்கும்? அவளவு பாரமா போய்ட்டேனோ நான் உனக்கு?" என கல்யாணி கேட்க,

"ஏத்தா! உன்னைய நான் சொல்லுவேனா? என் ஆத்தா என்னைய விட்டு போனா எனக்கு மட்டு இனிக்கவா போவுது?" என்று வடிவு கண்ணீர் வடிக்க,

"சரி சரி நம்பிட்டேன்! தண்ணிய திறக்காத.. இன்னும் நாப்பத்தஞ்சு நாளு இங்கன தான் சுத்தி வருவேன்.. கொஞ்சம் கொஞ்சமா டேமை திறந்து வுடு" என்று கிண்டல் பேச,

"உனக்கு சங்கடம்னு தெரிஞ்சும் இந்த அப்பத்தா இப்படி பண்ணுதாலேனு நினைக்குத தான நீயி?" என்றார் வடிவு.

"யாரு இல்லன்னா? ஆமாங்கேன்.. ஏன் கல்யாணத்த நிறுத்தி போடுவியா?"

"அத வுட்டு என்னத்த வேணா கேளு த்தா.. சும்மா சொல்லுதேன்னு நினைக்காத.. அங்கன தான் உனக்கு எல்லாம்னு எனக்கு தோணிக்கிட்டே கிடக்கு.." என்று கூற,

"சரி சரி அழுவாத.. அதான் கண்ண மூடி கழுத்த நீட்டுதேன்னுட்டேனே!" என்றாள் சிரித்து தன் அப்பத்தாவிடம் நடித்தும்.

"நமக்கு எந்த வேலையும் இல்லை ராணி! எல்லாம் அவங்களே செய்யுறதா சொல்லிட்டாங்க.. அதுவும் நேரா கல்யாணம் தான்.. ஊருல எல்லாம் நிச்சயம் தான் பெரிய அளவுல செய்வாங்க.. நாம இங்கே இருக்கோம்னு அதுவும் ஒரே நாளா வச்சுக்க சரினு சொல்லிட்டாங்க.." என்று சரவணன் கூற,

"அதுவும் நல்லது தான்ங்க.. ஏற்கனவே அவங்களுக்கு தான் செலவு அதிகம்.. நாம பாதி செய்யுறோம்னு சொன்னதையும் அவங்க கேட்கலையே! நாம வேணா கல்யாணம் முடிஞ்சி ஒரு ஒரு வாரம் அப்புறமா இங்கேயே சின்னதா ரிசெப்சன் மாதிரி வச்சுக்கலாம்.." என்று கூற,

"அதுவும் சரி தான்.. கல்யாணத்துக்கு அங்கே வர முடியாதவங்களுக்கு வசதியா இருக்கும்" என்றார் சரவணனும்.

"அவங்க செய்யுறங்கனு நீங்க சும்மா இருந்துக்காம அப்பப்ப போன் பண்ணி கேட்டுக்கோங்க.. எதாவது வேணும்னா போய் செஞ்சு குடுத்துட்டு வாங்க" என்றதற்கும் சரி என்றார்.

"என்னப்பா வீடே கல்யாணக் களை கட்டுது.. நாள் பார்த்தாச்சா?" என்று ஸ்ரேயாஸ் வர, தேதியைக் கூறினார் சரவணன்.

"என்னப்பா லீவ் நாள்ல வைக்கலையா? பிரண்ட்ஸ் எல்லாம் வருவாங்கல்ல? அண்ணா கூட கூப்பிடணுமே!" என்றவனிடம்,

"நாள் சரியா இருந்திருக்காது டா.. இதுவே இருக்கட்டும்.." என்றவர் ரிசெப்சன் ஐடியாவையும் கூறவும் சரி என ஒத்துக் கொண்டான் ஸ்ரேயாஸ்.

"அண்ணா என்ன சொல்றாங்க மா?"

"சரினு தான் சொல்வான்.. இன்னும் வரலையே வந்ததும் தான் சொல்லணும்" என்றார் சரவணன்.

"நான் அவனுக்கு மெசேஜ் பண்ணிட்டேன்.. அவனும் பார்த்துட்டான்.. பதில் தான் வர்ல" என்று ராணி கூற,

"இதை என்கிட்ட சொல்லவே இல்லையே நீ?" என்று சரவணன் கேட்க,

"அவனுக்கு தானே கல்யாணம்? அவன்கிட்ட சொல்ல வேண்டாமா?" என்ற ராணியை,

"அவ்வளவு நல்லவ தான் நீ" என்று சரவணன் சிரிக்க,

"நீங்க என்ன நினைக்குறிங்கனு புரியுது.. அது அவன் சம்மதத்துக்கு முன்னாடி.. இது அவன் சம்மதத்துக்கு பின்னாடி" என்று கூற,

"எல்லாத்துக்கும் சரியா காரணம் வச்சுருப்பியே! வர்ற நேரம் தானே.. வரட்டும்" என்றுவிட்டார்.

வந்தவனும் பெரிதாய் எதுவும் கேட்டுவிடவில்லை. சரி என்றுவிட,

"என்ன ண்ணா எதுவுமே கேட்கல?" என்றான் ஸ்ரேயாஸ் சந்தேகமாய்.

"ஆல்ரெடி பேசினது தானே டா? இதுல புதுசா என்ன இருக்கு?" என்றவன்,

"ம்மா! கல்யாணி போன் நம்பர் இருக்கு?" என்று கேட்க,

"பார்றா! ண்ணா!" என்று கிண்டல் செய்ய,

"என்ன சிரிப்பு? அதான் முடிவு பண்ணி மேரேஜ் வரை வந்துடுச்சுல்ல? கேட்க தான் செய்வேன்" என்றான் தம்பி முன்.

"சரி சரி!" என்று ஸ்ரேயாஸ் அதற்கும் சிரிக்க தான் செய்தான்.

"கல்யாணிகிட்ட போன்..." என்று ராணி கூறவுமே!

"அன்னைக்கு போன் பண்ணினா இல்ல.. என்கிட்டயே இருக்கும் ம்மா.. நான் பாத்துக்குறேன்" என்றுவிட்டான்.

ப்ரணித் இத்தனை விரைவாய் இதை ஏற்றுக் கொண்டதை சரவணன் மட்டுமே ஆச்சர்யம் காட்டி விழித்தார்.

மேலும் அவனே திருமணத்திற்கு வர இயலாதவர்களுக்கு என ஒரு கெட் டு கெதர் வைப்பதை பற்றி பேச,

"இதையே தான் டா நாங்களும் பேசிட்டு இருந்தோம்.. ஏற்பாடு பண்ணிடலாம்" என்றார் ராணியும்.

சரி என்ற ப்ரணித் முன்பு கல்யாணி அழைத்த எண்ணை தேடியபடியே மாடிக்கு செல்ல,

"என்ன சொல்லு! இந்த அம்மாங்களுக்கு தான் தன் பசங்களை பத்தி நல்லா தெரியும் போல" என்று சரவணன் கூற,

"அதை இல்லைனு எல்லாம் சொல்ல முடியாது நீங்க" என்றார் ராணியும் பெருமையாய்.

அறைக்குள் சென்று கதவை அடைத்தவன், கல்யாணி எண்ணிற்கு அழைத்துவிட்டு அவள் எடுப்பதற்காய் காத்திருந்து தனது மெத்தையில் விழவும் அழைப்பு ஏற்கப்பட,

"கேன் ஐ ஸ்பீக் டு கல்யாணி!" என்றான் அந்த பக்கம் பேசுவதையே கவனியாமல்.

"லோன் எல்லாம் ஒன்னும் வேண்டாம்.. கல்யாண செலவு கிடக்குன்னு இவனுவளுக்கு எப்படி தான் தெரியுமோ.. உடனே தஸு புசுன்னு வந்துருவானுங்க" என்று பேசியபடியே வடிவு போனை வைத்து விட,இரு நொடி காதில் இருந்து மொபைலை எடுத்து அதை பார்த்திருந்தவனும் தலையில் அடித்தபடி தன்னை நினைத்தே சிரித்துக் கொண்டான்.

தொடரும்..
 
Top