• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
வாழ்க்கையில் இந்த விஷயம் நடந்து விடாதா நடந்து விடாதா என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த விஷயம் ஒரு நாள் திடீரென நடந்தேறினால் எப்படி இருக்கும்.

நிச்சயமாகத் திகைப்புத் தோன்றும் அல்லவா... அதிலும் அந்த விஷயம் ரொம்பப் பெரிய விஷயமாக இருந்தால் யாராக இருந்தாலும், என்ன செய்வது ஏது செய்வது என்பது போல ஒன்றும் தோன்றாமல் திக்பிரமை பிடித்தது போலத்தானே நிற்பார்கள். அதற்கு ஆதித்யன், சூரியன், கஸ்தூரி போன்ற சாமான்ய மனிதர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? அனுபல்லவிக்குக் குணமாகிச் சுயநினைவு வந்து விட்டது என்ற அந்த ஆகப் பெரிய சந்தோசம் அவர்களைப் பேச்சற்றுப் பிரமை பிடித்தது போல அப்படியே நிற்க வைத்திருந்தது.

ஆனால் தனக்கு நடந்தது என்ன என்றோ அவர்கள் அப்படியே ஏன் நிற்கிறார்கள் என்றோ தெரியாத அனுபல்லவி அவர்கள் மூவரையும் விசித்திரமாகப் பார்த்து வைத்தாள்.

"ஏய்... நானொருத்தி தனியாகப் புலம்பிக் கொண்டிருக்கிறேன். என்ன நீங்கள் மூன்று பேரும் வாயையே திறக்க மட்டேன் என்பது போல நிற்கிறீர்கள். உங்களுக்கு என்னதான் நடந்தது..."
என்று மூன்று பேரையும் பார்த்துக் கேட்டாள்.

மூன்று பேரிலும் சூரியனுக்குக் கொஞ்சம் சுரணை வந்தது. அவன் அனுவை எப்படிச் சமாளிப்பது என வேகமாக யோசித்தான். அவசரமாக யோசித்ததில் அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. எப்படியாவது பேசிச் சமாளிப்போம் என நினைத்தவன் மெல்லப் பேசுவதற்கு வாயைத் திறந்தான்.

"இங்கே பார் பல்லவி... நீ முதலில் பதறாதே நாங்கள் இப்போது வைத்தியசாலையில் இருக்கிறோம். உன் தலைக்காயம் முதலில் குணமாகட்டும் நாங்கள் எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக் கொள்ளலாம். இப்போது நீ படுத்து ஓய்வு எடுத்துக் கொள் வா..."
என்றபடி அவளின் கையைப் பிடித்து வந்து கட்டிலில் படுக்க வைத்தான்.

பல்லவிக்கும் உடலும் மனமும் ரொம்பவே அசதியாக இருந்தது போலும் அவள் மறுத்துப் பேசாமல் படுத்தபடி கண்களை மூடிக் கொண்டாள். கண்களை மூடிக் கொண்டவள் அசதியில் உடனேயே தூங்கியும் விட்டாள்.

அவள் தூங்கி விட்டாள் என்பதனை அவளிடம் இருந்து வந்த சீரான மூச்சுப் பறைசாற்றியது. அதன் பிறகே ஆதித்யனுக்கும் கஸ்தூரிக்கும் பேச்சு வந்தது.

"இது கனவா? இல்லை நனவா? என்னால் நம்பவே முடியவில்லை. எது நடக்க வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் ஆசைப்பட்டோமோ அது நடந்தே விட்டது... எனக்குச் சந்தோசத்தில் மூச்சே நின்று விடும் போல இருக்கிறது ஆதியண்ணா... நான் உங்களைக் கொஞ்சம் கிள்ளிப் பார்க்கட்டுமா... ஐயோ! கடவுளே என்னால் இன்னும் இதை நம்ப முடியவில்லையே..."
என்று கிட்டத் தட்டத் துள்ளியபடி சொன்னவளின் அருகில் வந்த சூரியன் அவளது வலது கையைப் பிடித்து நறுக்கென்று கிள்ளினான்.

அவன் கிள்ளிய வேகத்தில் வலித்த கையைத் தேய்த்தபடி முறைத்தவளிடம்
"இப்போது நம்புகிறாயா... அது என்னவென்றால் எனக்குக் கூட நம்ப முடியவில்லை. அதனால் தான் உன்னைக் கிள்ளிப் பார்த்தேன். நீ உன் கையைத் தேய்த்தபடி வழமையாக என்னை முறைப்பது போல முறைக்கிறாயே... அப்படியானால் இது உண்மை தான்..."
என்று சொன்னவன் தமையனிடம் திரும்பி
"இது ஒன்றும் கனவில்லை அண்ணா... இது நிஜம் தான்... இங்கே பாருங்கள் கஸ்தூரி முறைக்கிறாள்..."
என்றான்.

ஆதித்யனோ மற்ற இருவரும் சொன்னதைக் கேட்கும் நிலையில் இல்லை. அவனது பார்வை படுத்திருந்த அனுவின் முகத்தில் பதிந்திருந்தது. ஆனால் எண்ணங்கள் வேறு எங்கெங்கோ சுழன்று கொண்டிருந்தன.

அண்ணா ஏதோ தீவிரமாக யோசிக்கிறான் என்பதை அவனது முக பாவனையில் இருந்து புரிந்து கொண்ட சூரியன் தன் வேடிக்கைப் பேச்சை விட்டு அவனது தோளைத் தொட்டு என்னவென்பது போலப் புருவங்களை உயர்த்தினான்.

சூரியன் தொட்டதும் அவனைத் திரும்பிப் பார்த்த ஆதித்யன்
"என்னடா சூரியா இப்போது செய்வது... இவள் சுயநினைவுக்கு வந்து விட்டாள் என்று நினைத்துச் சந்தோசப் படுவதா... இல்லை என்றால் இப்போது அவளது கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்பதை நினைத்துக் கவலைப் படுவதா... என்று தெரியவில்லையடா..."
என்றான் மெல்லிய கவலை இழையோட, தன் தமையன் சொன்னதைக் கேட்டவனோ
"அண்ணா... பல்லவி குணமானதே நமக்குக் கிடைத்த பெரிய சந்தோசம். இப்போது அதை எந்தத் தடங்கலும் இல்லாமல் நாம் அனுபவிக்க வேண்டுமே தவிரக் கண்டதையும் நினைத்துக் கவலைப்படக் கூடாது. இதற்குப் பிறகு பல்லவியை எப்படிச் சமாளிப்பது யாரைக் கொண்டு சமாளிப்பது என்று எனக்குத் தெரியும். அதனால் நீங்கள் ஒன்றும் அதிகமாக யோசித்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள்..."
என்று அவனுக்கு ஆறுதல் சொன்னான்.

அவன் அவ்விதம் சொன்னதுமே
"என்னடா சொல்லுகிறாய்... யாரை வைத்துச் சமாளிக்கப் போகிறாய்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை."
என்றபடி தன் தம்பி சூரியனைப் பார்த்தான் ஆதித்யன்.

அண்ணனின் கேள்விப்பார்வைக்கு
"அண்ணி..."
என்று பதில் சொன்னான் சூரியன்.

அந்தப் பதிலைக் கேட்டதுமே
"யார் காயத்திரியைச் சொல்லுகிறாயா? அவள் என்ன செய்ய முடியும் எப்படிப் பல்லவியைச் சமாளிக்க முடியும்..."
என்ற தனது ஐயத்தை முன் வைத்தான் ஆதித்யன்.

"அது தானே அக்காவால் என்ன செய்ய முடியும்... அவர்கள் இப்போது இங்கே இல்லையே..."
என்று தன் சந்தேகத்தையும் முன் வைத்தாள் கஸ்தூரி.

அவர்களது சந்தேகத்தைத் தீர்ப்பது போலப் பதில் அளித்தான் சூரியன்.

"அண்ணா... இந்த உலகத்திலேயே பல்லவிக்கு மிக மிகப் பிடித்த முதலாவது நபர் என்றால் அது நம் அண்ணி மட்டும் தான்... அவர்களுக்குப் பிறகு தான் கஸ்தூரி, நீங்கள், நான்... இவ்வளவு ஏன் சின்னண்ணா கூட அண்ணிக்குப் பிறகு தான்... அப்படி இருக்கும் போது சின்னண்ணா இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம் என்று பல்லவி ஆர்ப்பாட்டம் செய்யும் போது அவள் முன்னால் நம் அண்ணியை நிறுத்தினால் போதும்... அவ்வளவு தான் அவள் அப்படியே அடங்கி விடுவாள். அப்புறம் அண்ணியை வைத்தே பல்லவியைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேற்றி விடலாம்..."
என்று சொன்னவனையே மற்ற இருவரும் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்தவனோ
"என்ன இப்படியே விழித்துக் கொண்டு நின்றால் என்ன அர்த்தம்... வாயைத் திறந்து என் அறிவைப் பாராட்டினால் இருவரும் தேய்ந்தா போய் விடுவீர்கள். ஆனாலும் அண்ணா நீங்கள் சுத்த மோசம் கஸ்தூரி எது செய்தாலும் சொன்னாலும் மட்டும் உடனே விழுந்து விழுந்து பாராட்டுவீர்கள்... ஆனால் என்னை மட்டும் பாராட்டவே மாட்டீர்கள் அப்படித்தானே..."
என்று சிரியாமல் சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்ட ஆதித்யனோ வந்த சிரிப்பை அடக்கியபடி அவனது முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தபடி
"நீயும் கெட்டிக்காரன் தான்டா..."
என்றான்.

தன் முதுகைப் புறங்கையால் தேய்த்தபடி
"அடிக்கடி நீங்கள் எனக்கு அண்ணா என்பதை நிரூபிக்கிறீர்கள்..."
என்றான் சூரியன் வேண்டுமென்றே வராத கண்ணீரைத் துடைத்தபடி,

அந்த நேரத்தில் அங்கு வந்த மருத்துவர்,
"நீங்கள் இரண்டு நாட்கள் இங்கே தங்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் அனுமதித்த இருவருமே இப்போது நன்றாகத் தான் இருக்கிறார்கள். இன்றே கூட அவர்களை அழைத்துச் செல்லலாம். தங்குவதானாலும் தங்கலாம்."
என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

"இங்கே இருந்து என்ன செய்யப் போகிறோம். வீட்டுக்குப் போகலாம் ஆதியண்ணா... அனுவக்கா எழுந்ததுமே கிளம்பலாம். அப்புறம் சுமித்திரையிடம் இங்கே வர வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி விடுங்கள்..."
என்றாள் கஸ்தூரி.

அவள் சொன்னதற்குச் சம்மதம் சொன்ன ஆதித்யன், பல்லவி குணமான சந்தோசத்தைச் சொல்லத் தன் உயிர் நண்பன் சரண்குமாரைத் தேடிச் சென்றான். அவன் வைத்தியசாலையில் அமைந்திருக்கும் சிற்றுண்டிச்சாலையில் எல்லோருக்கும் தேநீர் வாங்குவதற்குச் சென்றிருந்தான்.

சிற்றுண்டிச்சாலையில் நின்றிருந்த சரணை வெளியே அழைத்து வந்தான் ஆதித்யன்.

"என்ன வர்மா... என்ன விஷயம் நான் இன்னும் தேநீர் வாங்கவில்லை. அவசரமாக ஒரு அலைபேசி அழைப்பு வந்தது பேசி விட்டு இப்போது தான் உள்ளே போனேன் அதற்குள் நீ வந்து விட்டாய்..."

"குமரா... ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமான விஷயம் ஒன்று உன்னிடம் சொல்ல வேண்டும்..."

"உன் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது ரொம்பப் பெரிய சந்தோசம் என்று... ஒரு வேளை ஏதாவது ஆதாரம் கிடைத்து விட்டதோ?"

"அதில்லை குமரா..."

"டேய் டேய் வர்மா... சோதிக்காமல் என்னவென்று சொல்லுடா... உனக்குப் புண்ணியமாகப் போகும்..."

"சரி சரி சொல்லுகிறேன்... அதைச் சொல்லத் தானே உன்னிடம் வந்தேன்... அங்கே பல்லவி கண் திறந்து விட்டாள்..."

"அடடா..."

"இருடா... நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை... அவளுக்குச் சுயநினைவும் வந்து விட்டது..."

"வர்மா... என்னடா சொல்லுகிறாய்..."
என்றபடி இரு நண்பர்களும் கட்டியணைத்துக் கொண்டபடி தங்கள் சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

சரண்குமாரும் அனுபல்லவியும் நல்ல நண்பர்கள், சரணுக்கு ஒரு பதினைந்து வயது இருக்கும் போது அவனது சித்தி தற்கொலை முயற்சி செய்தார்... அவரது கணவன் இறந்ததும் அவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். திருமணம் மணமேடை வரை வந்து நின்று போனது. திருமணமேடையில் வைத்து இப்படி ஏற்கனவே திருமணமாகிக் கணவனை இழந்த பெண்ணை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மணமகன் சொன்னதும், ஏதேதோ பேச்சுக்கள் எல்லாம் அதிகமாகிச் சரணின் சித்தி என்னால் தானே எல்லாமே என்ற எண்ணத்தில் தற்கொலை செய்ய முயல அவரைக் காப்பாற்றி அவரது கழுத்தில் தாலி கட்டினார் அவனது சித்தப்பா.

அன்றிலிருந்து அவனுக்குத் தான் திருமணம் என்று ஒன்று செய்தால் அது திருமணமாகிக் கணவனை இழந்த ஒரு பெண்ணைத் தான் என்ற வைராக்கியமே வந்து விட்டது.

அந்த அடிப்படையில் தான் அவன் அனுவைத் திருமணம் செய்வது தொடர்பாக ஆதித்யனிடம் பேசி இருந்தான். அப்போது கூடப் பாவப்பட்டு ஒரு பெண்ணுக்கு நான் வாழ்வு கொடுக்கிறேன் என்று நெல்முனையளவு கூட அவன் எண்ணிப் பார்க்கவில்லை.

ஆனால் சரண்குமாருக்கான வாழ்க்கைத் துணை அனு இல்லை அவள் வேறொருத்தி என்று தான் இறைவன் எப்போதோ படைத்து விட்டாரே... இப்போது இருவரையும் சந்திக்க வைப்பதற்கான் அந்த நேரத்தைக் கணித்து விட்டு அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தார் போலும் இறைவன்... சரண்குமாருக்கு என்றே பிறந்தவள் அவன் தான் தானக்கானவன் என்பதை அறியாமலேயே அவன் இருக்கும் இடம் வந்து கொண்டிருந்தாள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

கையில் வைத்திருந்த 'வைரமுத்து எழுதிய தண்ணீர் தேசம்' என்ற புத்தகத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காயத்திரிக்கு ஒரே அலுப்பாக இருந்தது.

ஏஞ்சலினாவிடம் இருந்த புத்தகங்கள் அனைத்தையுமே காயத்திரி படித்து முடித்து விட்டாள். அடுத்து என்ன செய்வது என்பது போல இருந்தவள் அருகில் வந்து அமர்ந்தாள் ஏஞ்சலினா.

"என்ன காயு... எல்லாப் புத்தகமும் வாசித்து முடித்து விட்டாய் போல..."

"ஆமாம் ஏஞ்சல்... அடுத்து என்ன செய்வது... எனக்கு இப்படியே ஒன்றுமே செய்யாமல் ஒரே இடத்தில் இருப்பது அலுப்பாக இருக்கிறது... ஒரு வேலை கூடச் செய்ய விட மாட்டேன் என்கிறாய் நீ... ஏதாவது சமையல் செய்யட்டுமா?"

"அம்மா தாயே! நீங்கள் ஒரு வேலையும் செய்ய வேண்டாம்... என்ன சாப்பிட வேண்டும் என்று சொல்லு செய்து கொடுக்கிறேன்..."

"போடி இவளே... எனக்கு ஒன்றும் வேண்டாம்..."

"சரி சரி உடனே முகத்தை இப்படி முன்னால் இருக்கும் சுவற்றில் முட்டிக் கொண்டு இருக்கும் அளவுக்கு நீட்டாதே... வெளியே எங்கேயாவது போய் வருவோம்..."

"சும்மா போடி... நான் எங்கும் வர மட்டேன்..."

"உன் ஆத்துக்காரர் இருக்கும் இடத்துக்கும் வர மாட்டாயா..."

"என்னது... சும்மா என்னைச் சமாதானம் செய்வதற்காக எதையாவது சொல்லி வைக்காதே..."

"இல்லை காயு... நிஜமாகவே தான் கேட்கிறேன்... இப்படி நீ என் கூடத் தனியாக இருப்பதற்குப் பதில் நீ நேற்றுக் கேட்டது போல நான் உன்னை உங்களின் பழத் தோட்டத்து வீட்டுக்கு அழைத்துப் போகிறேன் போதுமா..."
என்ற தன் தோழியைச் சந்தோசமாகக் கட்டிக் கொண்டாள் காயத்திரி.

"ஏனோ தெரியவில்லை ஏஞ்சல்... எனக்கு ஆதியை பார்க்க வேண்டும் போலவே இருக்கிறது... அவருக்குப் பக்கத்திலேயே இருக்க வேண்டும் போல இருக்கிறது..."
என்று தன் உள்ளக்கிடக்கையைத் தன் தோழியிடம் பகிர்ந்தாள் காயத்திரி.

அதன்படி அடுத்தநாட் காலையில் ஒரு பெரிய வாகனத்தில் காயத்திரியை அவளது உடல் நிலைக்கு ஏற்றவாறு அமர்த்திக் கொண்டு பழத் தோட்டத்தை நோக்கிப் பயணப்பட்டாள் ஏஞ்சலினா.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மலரின் கதவொன்று
திறக்கின்றதா...
மௌனம் வெளியேர
தவிக்கின்றதா...
பெண்மை புதிதாக
துடிக்கின்றதா...
உயிரில் அமுதங்கள்
சுரக்கின்றதா...
முத்தம் கொடுத்தானே
இதழ் முத்துக்குளிதானே
இரவுகள் இதமானதா..
கட்டி பிடித்தால்
தொட்டு எடுத்தால்
வெட்கம் என்ன
சத்தம் போடுதா...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
 
Top