• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
சூரிய தேவனின் ஒளிக் கதிர்கள் பட்டுக் காலை நேரம் மெல்ல மெல்ல உதயம் ஆகிக் கொண்டிருந்தது.

படுத்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்ட அனுபல்லவி தன் அலைபேசியில் இருந்து ஒரு குறுஞ்செய்தியைத் தட்டி விட்டு, தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றாள்.

அனு எங்கோ செல்வதற்காகத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்த காயத்ரி
"என்ன அனு அவ்வளவு அவசரமாக எங்கு செல்லக் கிளம்புகிறாய்..."
என்று அனுவின் அருகில் வந்து கேட்டாள்.

காயத்திரியின் கேள்விக்கு மெல்ல முறுவலித்தபடியே
"ஒரு முக்கியமான நபரைச் சந்திக்கப் போகிறேன் காயு... வந்து சொல்கிறேன்..."
என்று பதில் சொல்லியபடி வெளியே வந்தாள் அனுபல்லவி.

இல்லத்தை விட்டு வெளியே வந்தவள் இரண்டு தெரு தள்ளி இருக்கும் பூங்காவை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அவளது ஆழ் மனம் ஏதோ ஒன்றைத் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தது என்பதை அவளது முகம் பிரதிபலித்தது.

யோசித்தபடியே பூங்காவின் வாசலுக்கு வந்தவள் உள்ளே எட்டிப் பார்த்தாள். அவளது விழிகள் நாலாபக்கமும் யாரையோ தேடின.
தேடிய நபரைக் கண்டதும் இதுவரை யோசனையில் வாடியிருந்த அவளது வதனம் மெல்ல மலரத் தொடங்கியது.

பூங்காவின் வாசலில் இருந்து குறிப்பிட்டளவு தூரத்தில் கொன்றல் மரமொன்றின் கீழ்ப் போடப் பட்டிருந்த மரக் கதிரையில் அமர்ந்திருந்தான் மகேந்திரன்.

காலையில் தான் அனுபல்லவியிடம் இருந்து அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.
"இன்று ஏதேனும் முக்கியமான வேலைகள் இருக்கிறதா? இல்லையென்றால் எங்கள் இல்லத்துக்கு அருகில் இருக்கும் பூங்காவில் பத்து மணியளவில் சந்திக்கலாமா?"
என்று அனுப்பியிருந்தாள்.

உண்மையிலும் மகேந்திரனுக்கு அன்று முழுவதும் வேலைகள் இருந்து கொண்டே தான் இருந்தது. அவனுக்கு ஏனோ அவளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அதனால் 'வருகிறேன்' என்று வழமை போல ஒற்றை வரியில் பதில் அனுப்பி விட்டு அவசர அவசரமாகக் கிளம்பி இங்கே வந்து விட்டான்.

மகேந்திரனைப் பார்த்ததும் மலர்ந்த முகத்துடன் மெல்ல அவனை நோக்கி நடந்தாள் அனு.

தன் முன்னே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களையே பார்த்திருந்த மகேந்திரன் அப்போது தான் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தவளைப் பார்த்தான்.

அவனது உதடுகள் அவனையும் அறியாமல் மெல்லிய புன்னகையைத் தத்தெடுத்துக் கொண்டது.

அருகே வந்தவள் வேறு எங்கும் அமர்ந்து விடக்கூடாதே என்று வேகமாக அவளுக்குத் தன்னருகே இடம் விட்டு மெல்ல நகர்ந்து அமர்ந்தவனை ஓரக் கண்ணால் பார்த்தபடி அவனருகே அமர்ந்தாள் அனுபல்லவி.

அவள் அருகில் அமர்ந்ததும் என்ன பேசுவது என்று புரியாமல் தன் விரல்களையே திருப்பித் திருப்பிப் பார்த்தபடி இருந்தவனைப் பார்க்கப் பார்க்க அனுபல்லவிக்குச் சிரிப்பு வந்தது.

பட்டென்று அவனது கையைப் பற்றி இழுத்து அவன் கையை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தபடி
"ஐந்து விரல்களும் அதே இடத்தில் தானே இருக்கிறது. பிறகு ஏன் சுத்திச் சுத்திப் பார்க்கிறீர்கள்..."
என்று புன்னகையுடன் சொன்னாள் அனுபல்லவி.

அவள் அவ்விதம் சொன்னதும் லேசாக முறுவலித்தபடி அவளிடம் இருந்து தன் கையை மெல்ல உருவிக் கொண்டான் மகேந்திரன்.

பதிலுக்கு முறுவலித்தபடி அவனது கையை விட்டவள் தலையைச் சாய்த்து அவனையே தான் பார்த்திருந்தாள்.

இருவரும் சற்று நேரம் அமைதியாகவே தான் இருந்தார்கள்.

சில நிமிடங்கள் அவனையே பார்த்தபடி இருந்தவளோ... இவனை விட்டால் இன்று முழுவதும் இப்படியே தான் அமைதியாக இருப்பான் எனத் தனக்குத் தானே சொல்லியபடி மெல்லப் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினாள். அவளது குறும்பு கலந்த பேச்சில் தன்னையறியாமலே மெல்ல மெல்லப் பேசத் தொடங்கினான் மகேந்திரன்.

"மகேந்திரவர்மன்... நான் உங்களை மகேந்தர் என்று அழைக்கலாமா?"

"ம்ம்..."

"அதென்ன ம்ம்... ஒருவர் ஒரு விஷயத்தைச் செய்யலாமா? என்று இப்படிக் கேள்வி கேட்டால் வாயைத் திறந்து ஆமாம் அல்லது இல்லை என்று சொல்ல வேண்டும். அது தான் நல்ல பிள்ளைக்கு அழகு புரிந்ததா?"

"ம்ம்... இல்லை புரிந்தது..."

"சிறப்பு மிகச்சிறப்பு... இன்னொன்றும் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் கேட்கலாமா?"

"ம்ம்... கேட்கலாம்..."

"அந்த ம்ம் என்பதை மட்டும் விட மாட்டேன் என்கிறீர்களே... சரி இப்போதைக்கு அப்படியே இருக்கட்டும். அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்... உங்களுக்கு எத்தனை தோழர்கள் இருக்கிறார்கள்... முதலில் தோழர்கள் என்று யாரும் இருக்கிறார்களா?"

"இல்லையே..."

"நினைத்தேன்... எப்படி இருப்பார்கள்... இப்படி ஒற்றை வார்த்தையில் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் எப்படித் தோழர்கள் இருப்பார்கள் என்று கேட்கிறேன்... சரி அதை விடுங்கள்... உங்களுக்கு ஏன் நண்பர்கள் என்று யாரும் இல்லை..."

"நான் தான் யாரிடமுமே பெரிதாகப் பேச மாட்டேனே..."

"அப்பா சாமி... இரண்டு வார்த்தைகளுக்கு அதிகமாகப் பேசி விட்டீர்களே முன்னேற்றம் தான்... சரி என்னிடமாவது பேசுவீர்களா?"

"இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறேன்..."

"அம்மாடி... நல்ல பதில் இது கனவா நனவா என்று தெரியவில்லையே... ஆனால் பாருங்கள் நான் கேட்ட கேள்வியின் அர்த்தம் என்னிடமாவது மனம் விட்டுப் பேசுவீர்களா? என்பது தான்..."

"தெரியவில்லை..."

"தெரியவில்லையா... நல்ல பதில் தான்... ஆனால் நான் உங்களைப் போல எல்லாம் பேச்சில் கஞ்சத்தனம் காட்ட மாட்டேன். நன்றாகப் பேசுவேன் தெரியுமா... என்னைப் பார்த்துப் பேசுவது எப்படி என்று கற்றுக் கொள்ளுங்கள் சரியா..."

"முயற்சி செய்கிறேன்..."

"இது கூட நல்ல பதில் தான்... அது சரி நான் இங்கே வருமாறு சொன்னதும் உடனே கிளம்பி வந்து விட்டீர்களே... இப்படி வேறு எந்தப் பெண்ணாவது வருமாறு சொன்னாலும் போய் விடுவீர்களா?"

"போக மாட்டேன்..."

"இதுவும் நல்ல பதில் தான்... நான் அழைத்தவுடனே மட்டும் ஏன் வந்தீர்கள் என்று சொல்லுங்கள்..."

"என்னை இப்படி முதன் முதலில் சந்திக்க வருமாறு அழைத்த பெண் நீங்கள் மட்டும் தான்..."

"இது ரொம்ப நல்ல பதில்... இனிமேல் எந்தப் பெண் அழைத்தாலும் போகவும் கூடாது சரியா... அதோடு இப்படி மரியாதை கொடுத்து என்னை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. மரியாதை மனதில் இருந்தால் மட்டும் போதும்... நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று இருந்தேன். அன்று உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு கன்னத்தில் அடித்த போது உங்களுக்கு நிஜமாகவே கோபம் வரவில்லையா?"

"இல்லையே..."

"எப்படி வராமல் இருக்க முடியும்... சும்மா சொல்லாதீர்கள்..."

"நிஜமாகவே கோபம் வரவில்லை... என்ன ஒரு அடி என்று தான் தோன்றியது..."

"எவ்வளவு நல்ல பையனாக இருக்கிறீர்கள் நீங்கள்... உங்களைப் பற்றி உங்கள் அம்மா நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிறார்கள் தான்... ஆனால் உங்களை அன்று தான் முதன் முதலில் நேரில் பார்த்தேன். என் இரண்டாவது மகன் ஒரு அமைதிவிரும்பி, மௌனச்சாமியார் என்றெல்லாம் உங்கள் அம்மா சொன்ன போது கூட நான் அதை நம்பவில்லை. ஆனால் இப்போது உங்களை நேரில் பார்த்துப் பேசும் போது முழுவதும் நம்புகிறேன்... அது சரி என்னைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?"

"சொன்னால் தெரிந்து கொள்வேன்..."

"ஆஹா... என்ன ஒரு அருமையான பதில்..."
என்று சிலாகித்தாள் அனுபல்லவி.

அதற்குப் பதிலாக மகேந்திரன் லேசாகப் புன்னகைத்தான்.

அதன் பின்னர் தன்னைப் பற்றி ஒரு சில விஷயங்களைத் தவிர்த்து எல்லாவற்றையும் மகேந்திரனிடம் பகிர்ந்தாள் அனுபல்லவி.

தான் சொல்லுவதையே எந்தக் குறுக்கீடும் செய்யாமல் நிஜமான அக்கறையுடனும் சுவாரஸ்யத்துடனும் கேட்ட வண்ணம் இருந்தவனை மெய்யாகவே அனுவுக்கு மிகவும் பிடித்திருந்தது.

சில மாதங்களுக்கு முன்னர் நகைச்சுவையாகக் காயத்திரி
"அனு... உன் வாயாடித் தனத்துக்கு ஒரு மௌனச் சாமியாராகப் பார்த்துக் கட்டிக் கொள். அப்போது தான் குடும்ப வண்டி நிதானமாக ஓடும்..."
என்று அனுவுக்குச் சொன்னது நினைவு வந்தது.

அதே நினைவுடன் மகேந்திரனைப் பார்த்தவளுக்கு இதழின் ஓரம் மெல்லிய முறுவல் மலர்ந்தது.

அதே முறுவலுடன்
"சரி நேரமாகி விட்டது மகேந்தர் நான் கிளம்புகிறேன்... நீங்களும் கவனமாகச் சென்று வாருங்கள்..."
என்றபடி எழுந்து கொண்டாள் அனுபல்லவி.

தானும் எழுந்து கொண்ட மகேந்தர்
"என்னுடன் வாருங்கள் பல்லவி... உங்களை அங்கே இல்லத்தில் இறக்கி விட்டு அதன் பிறகு நான் போகிறேன்..."
என்றான்.

அவன் அவ்விதம் சொன்னாலும் அனுவின் காதுகளில் அவனது பல்லவி என்ற அழைப்பு மட்டும் தான் புகுந்து தொலைத்தது. அதை இரசித்தபடி ஒரு வித சந்தோச உணர்வுடன் அவனோடு சென்றவளுக்கு அவன் இல்லத்தின் முன்னால் வாகனத்தை நிறுத்தும் வரையிலும் கூட அந்த உணர்வு மறையவில்லை.

அப்படியே இறங்கியவள் அவனைக் கூடப் பார்க்காமல் அப்படியே உள்ளே போய் விட்டாள். அவளையே பார்த்திருந்தவனுக்கு
"இவளுக்கு என்ன நடந்தது..."
என்று தான் தோன்றியது. அவள் உள்ளே சென்று மறையும் வரையும் பார்த்திருந்தவன் அதன் பிறகே அங்கிருந்து சென்றான். அவன் மனமும் கூட என்றும் இல்லாத ஒரு வித உணர்வைத் தத்தெடுத்துக் கொண்டிருந்தது.

அது என்ன மாதிரியான உணர்வு என்பதை அவன் ஆராய விளையவில்லை. மாறாக அதை அனுபவித்தபடியே வீடு நோக்கி வாகனத்தைச் செலுத்தினான் மகேந்திரன்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"என்னை இங்கே வரச் செய்தாய்
என்னென்னவோ பேசச் செய்தாய்
புன்னகைகள் பூக்கச் செய்தாய் இன்னும் என்ன...
அருகினில் அமர்ந்தென்னை
உற்று உற்றுப் பார்க்கும் உந்தன்
துருதுருப் பார்வைக்குந்தான்
அர்த்தம் என்ன என்ன..."
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

"அக்கா... அனுவக்காவைக் கவனித்தீர்களா?"
என்றபடி காயத்திரியின் அருகே வந்து அமர்ந்து கொண்டாள் கஸ்தூரி.

"ஏன் அவளுக்கு என்ன?"
என்றபடி துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள் காயத்திரி.

அவள் அவ்விதம் கேட்டதும் அனுபல்லவியை ஓரக் கண்ணால் காட்டியபடி
"இது பூலோகமா இல்லை கைலாயமா என்பது போல நடந்து கொள்வதை நீங்களே பாருங்கள்..."
என்றவாறு சிரித்தாள் கஸ்தூரி.

தங்கையின் காதை வலிக்காமல் திருகியபடி
"அவளைக் கிண்டல் செய்யாமல் உனக்குச் சோறு தண்ணீர் இறங்காது அப்படித்தானே..."
என்ற காயத்திரி தன் வேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டாள்.

வெளியே எங்கோ செல்வதற்காகத் தயாராக வந்த அனு மஞ்சள் நிறத்தில் சிவப்புப் பூ போட்ட சுடிதார் அணிந்து இருந்தாள்.

அவளருகில் வந்த கஸ்தூரி
"அனுவக்கா... சுடிதார் அழகாக இருக்கிறது..."
என்று சொன்னாள்.

அவளது மூக்கைப் பிடித்து ஆட்டியபடி
"அதனால் தான் குட்டி இந்தச் சுடிதாரை அணிந்து கொண்டேன். அது சரி சுடிதார் மட்டும் தான் அழகாக இருக்கிறதா குட்டி..."
என்று செல்லமாக முறைத்தபடி கேட்ட அனுவிடம்
"நீங்கள் எப்போதுமே அழகுதானே அனுவக்கா... அதிலும் இப்போது சில தினங்களாக ரொம்ப அழகாகத் தெரிகிறீர்கள்..."
என்று சொன்ன கஸ்தூரி அனுவுக்குத் திருஷ்டி கழிப்பது போலச் செய்து விரல்களை நெட்டி முறித்தாள்.

தங்கை சொன்னதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரித்தபடியே மீண்டும் அவளது மூக்கைப் பிடித்து ஆட்டிய அனுபல்லவி அதே சிரிப்பு முகத்தில் நிலைத்தபடி வெளியே புறப்பட்டுச் சென்று விட்டாள்.

அனுபல்லவியின் மனதில் ஒரு விஷயம் முடிவாகி விட்டது என்பதை அவளது முகம் உணர்த்தியது.

இல்லத்தை விட்டு வெளியே வந்தவள் எதிரே வந்த முச்சக்கர வண்டியை நிறுத்தி ஏறியபடி கடற்கரைக்குப் போகுமாறு சொல்லி விட்டு மெல்லச் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

உடல் தான் சாய்ந்து அமர்ந்து கொண்டது மனமோ வாகனத்தை விட வேகமாகப் பிரயாணித்துக் கடற்கரையோரமாக அமர்ந்து கொண்டு அவளவனுக்காகக் காத்திருந்தது.

சில நிமிடப் பிரயாணத்தில் கடற்கரையை அடைந்தவளுக்கு என்றும் இல்லாதவாறு கடலும் கரையோரமும் அழகாகத் தோன்றியது.

சில நொடிகள் நின்று அந்த அழகைக் கண்களால் கைது செய்து உள்ளத்தினுள் சிறைப் படுத்திக் கொண்டாள்.

நீலநிறத்துச் சேலையை உடுத்திக் கொண்ட கடல்மங்கை சில பொழுது சிறிய அலைக் கரங்களாலும் பல பொழுது பெரிய அலைக் கரங்களாலும் கரையெனும் தன்னவனை அணைக்க முயற்சி செய்து கொண்டிருப்பது போலத் தோன்றியது.

தன்னுள் கிடந்த கிழிஞ்சல்கள், சிப்பிகள், சங்குகளைத் தன் நினைவாக இருக்கட்டுமே என்று கரையிலேயே கடல் விட்டுச் செல்ல, கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாத சின்னஞ் சிறு வாண்டுகள் அவற்றை எல்லாம் ஓடி ஓடிப் பொறுக்குவது போலவும் தோன்றவே, மெல்லத் தலையில் தட்டியபடி கரையோராமாக மணற்பரப்பில் இருந்த படகு ஒன்றில் சாய்ந்தபடி அமர்ந்து கொண்டாள் அனுபல்லவி.

அவளது விழிகள் அங்கும் இங்கும் யாரையோ தேடிய வண்ணம் இருந்தது. அவளது விழிகள் யாரைத் தேடியதோ அவன் சற்றுத் தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தான்.

தனது கன்னத்தில் கை வைத்தபடி மகேந்திரன் நடந்து வரும் அழகை இரசிக்கத் தொடங்கினாள் அனுபல்லவி. பின்னணியில் தேனிசைத் தென்றல் தேவா இசையமைக்கப் பாடகி சித்திராம்மா
"அழகு நீ நடந்தால் நடை அழகு..."
எனத் தன் இனிமையான குரலில் பாடுவது போல ஒரு கற்பனையும் அவளுள் ஓடியது.

"தேவையில்லாமல் என் குரலில் பாடியிருந்தால் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் மகேந்தர் பின்னங்கால் பிடரியில் அடிபடத் தான் ஓடியிருப்பான்"
என எண்ணியவளுக்குக் குபீரெனச் சிரிப்பே வந்து விட்டது. வாயைப் பொத்தித் தனது சிரிப்பை அடக்கிக் கொண்டவள் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

வேறு பக்கம் பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் அருகே வந்து அமர்ந்து கொண்ட மகேந்திரன்
"வந்து ரொம்ப நேரமாகி விட்டதா பல்லவி..."
என்று கேட்டான்.

அவன் அவ்விதம் கேட்டதும் ஒரு நிமிடம் அனுவுக்குத் தன் காதுகளையே நம்பமுடியவில்லை.
ஆனாலும் அதைப் பற்றி அவள் ஒன்றுமே சொல்லவில்லை. அடிக்கடி அவனைக் கிண்டல் செய்யக்கூடாது என மனதினுள் எண்ணியபடி
"இல்லை மகேந்தர் நீங்கள் வருவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னாடி தான் வந்தேன்..."
என்று பதில் சொன்னாள் அனுபல்லவி.

இன்று எப்படியும் தன் மனதினுள் இருப்பதை ஒளிவு மறைவு இன்றி அவனிடம் சொல்லி விட வேண்டும் என்ற தீர்மானத்தில் தான் அவனை இங்கே கடற்கரைக்கு வரச் சொல்லியிருந்தாள் அனுபல்லவி.

அனுபல்லவியின் வாழ்வில் முதல் முதலாக எந்த விதமான யோசனையும் இன்றி அவள் எடுத்த முடிவைப் பற்றி மகேந்திரனிடம் பேசப் போகிறாள் அவள். அதற்கு மகேந்திரனின் பதில் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"யாரும் நடக்காத சாலையிலே காதலின் தடங்கள் தெரிகின்றதோ தண்டவாளத்தின் ஓரத்திலே பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதோ..."
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Top