• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
நீலக் கடல் தொலைவிலே தொடு வானுடன் கை கோர்த்தபடி அழகாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது.

மேலே வானத்தில் உயிர் பிரிந்த உடல் போல ஒளி இழந்த சந்திரன் லேசாகக் கண்ணுக்குப் புலப்பட்டுக் கொண்டிருந்தான்.

கடலின் கரையோரமாகச் சுண்டல், மாங்காய், பஞ்சு மிட்டாசி, சோளப்பொரி, அவித்த சோளம், தட்டை வடை, எள்ளுருண்டை விற்போர் தங்கள் விற்பனையில் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

படகில் லேசாகச் சாய்ந்தபடி அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அனுபல்லவி.

சில நிமிடங்கள் தானும் அமைதியாக இருந்த மகேந்திரன் அவளைப் பார்த்து,
"பல்லவி... என்னிடம் ஏதோ முக்கியமாகப் பேச வேண்டும் என்று சொன்னீர்களே..."
என்று மெல்லக் கேட்டான்.

அவன் அவ்விதம் கேட்டதும் தன் பார்வையைத் திருப்பாமல் கடல் அலைகளின் வேகத்தையே பார்த்த படி,
"என்னை உங்களுக்குப் பிடிக்குமா மகேந்தர்..."
என்று கேட்டாள் அனுபல்லவி.

"பிடிக்கும் பல்லவி..."
என்று சட்டென்று சொன்னவனைத் திரும்பிப் பார்த்தவளோ
"யாரையாவது நீங்கள் விரும்புகிறீர்களா?"
என்றும் கேட்டு வைத்தாள்.

அனு கேட்ட கேள்விக்கு மகேந்திரன் ஆமாம் என்று தலையை ஆட்டினான்.
அவனது தலையாட்டலில் ஒரு கணம் திகைத்தவளோ,
"யார் அந்தப் பெண்?"
என்று கேட்டாள் சுதியே இல்லாத குரலில்.

"பெண்ணா..."
என்றபடி புருவங்களை உயர்த்தியவனோ
"எந்தப் பெண்? எந்தப் பெண்ணையும் நான் விரும்பவில்லையே... நான் என் குடும்பத்தினரை விரும்புகிறேன் என்று தான் சொல்ல வந்தேன்..."
என்று கொஞ்சம் அவசரமாகச் சொன்னான்.

அவன் சொன்ன பதிலில் முதலில் கடுப்பானவள் பின்னர் மெல்லச் சிரித்தபடி,
"ஏன் உங்கள் அம்மாவும் ஒரு பெண் தானே... பின்பு ஏன் எந்தப் பெண்ணையும் விரும்பவில்லை என்று சொன்னீர்கள்..."
என்றாள் வேண்டுமென்றே, அவனும் லேசாகச் சிரித்தானே தவிர வேறு எதையும் சொல்லவில்லை. அதன் பிறகும் சில நிமிடங்கள் கடலையே பார்த்திருந்தாள் அனுபல்லவி. மகேந்திரனோ கடலைப் பார்ப்பதும் அவளைப் பார்ப்பதுமாக இருந்தான்.

சிறிது நேரத்திலேயே மீண்டும் அவனைப் பார்த்தவள்,
"மகேந்தர் எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. என் வாழ்க்கையில் நான் எந்த ஆணிடமும் இப்படி இருந்து சுதந்திரமாகவோ இல்லை மனம் விட்டோ பேசியதில்லை. உங்களுடன் பேசும் போது நான் நானாக உணர்கிறேன். அதோடு இது சாதாரண பிடித்தம் இல்லை என்னுடைய மீதி வாழ்க்கையை உங்களுடன் சேர்ந்து வாழ ஆசைப் படுகிறேன். இன்னும் சுருக்கமாகச் சொல்லப் போனால் நான் உங்களை நேசிக்கிறேன் மகேந்தர்..."
என்று எந்தத் தடையும் இல்லாமல் தன் உள்ளக் கிடக்கையை அவனிடம் வெளிப்படுத்தினாள் அனுபல்லவி.

அவள் எதிர்பார்த்ததை விடவும் அதிகமான உணர்ச்சி வெளிப்பாடு மகேந்திரனின் முகத்தில் தென்பட்டது.
இது உண்மை தானா என்பது போலவும், ஐயையோ என்னை இப்படி சொல்லி விட்டாளே என்கிற படபடப்பும், எப்படி இந்த விடயத்தை எதிர் கொள்ளப் போகிறேன் என்கின்ற திகைப்பும் அவனது முகத்தில் மாறி மாறி வந்து போயின. அதனை அனுவால் உணர முடிந்தது.

ஆனாலும் அவன் நெடு நேரமாக அமைதியாக இருந்தது அவளுக்குக் கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தது. சட்டென்று எழுந்து கொண்டவள்
"சரி மகேந்தர் உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும் நீங்கள் கிளம்புங்கள்... நானும் கிளம்புகிறேன்..."
என்றபடி நொடி கூடத் தாமதிக்காமல் சென்று விட்டாள் அனு.

அனு சென்ற திக்கையே பார்த்தபடி நெடு நேரமாக அமர்ந்திருந்தான் மகேந்திரன். அவன் மனது மட்டும் எதையோ யோசித்துக் கொண்டிருந்தது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

காலையிலேயே மகேந்திரனிடம் வந்த கவிவர்மன்,
"மகிப்பா... இந்தக் காசோலையைச் சரஸ்வதி இல்லத்திற்குக் கொண்டு சென்று கொடுத்து விட்டு வருகிறாயா? உனக்கு வேறு ஏதேனும் வேலைகள் இருக்கிறதா?"
என்று கேட்டார்.

அவனுக்கு உண்மையில் நிறைய வேலைகள் இருந்தன. ஆனாலும் வேலைகள் ஒன்றுமில்லை என்றபடி காசோலையுடன் இல்லம் நோக்கிப் புறப்பட்டான். அவனுக்கு ஏனோ அவளைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அன்றைய சந்திப்புக்கும் பேச்சுக்கும் பின்பு பல்லவி மகேந்திரனைப் பார்க்கவும் இல்லை பேச முயற்சி செய்யவும் இல்லை.

இல்லத்தினுள் நுழைந்தவனது விழிகள் சுற்றிச் சுற்றி அனுவைத் தான் தேடியது. எங்குமே அவளைக் காணவில்லை.

வெண்பாம்மாவின் அறையின் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தவன் அங்கே ஏற்கனவே நின்றிருந்த அனுபல்லவியைப் பார்த்ததும் சந்தோசமானான்.

அவன் வந்த வேலையை முடித்து விட்டு வெளியே வரும் வரையில் கூட அனுபல்லவி தலை நிமிர்ந்து பார்க்கக் கூட இல்லை. இடை நடுவே அவனுக்குக் குடிக்கப் பழச்சாறு கொண்டு வந்து வைத்த போதும் கூட அவனது முகத்தையும் பார்க்கவில்லை. அவள் அவ்விதம் நடந்து கொண்டதைப் பார்த்தவன் அவள் தன் மீது கோபமாக இருக்கிறாளோ எனக் குழம்பியபடியே வந்து விட்டான்.

ஆனால் அனுபல்லவி வேலை மும்முறத்தில் யார் வந்தது என்பதைக் கவனிக்கவே இல்லை என்பது தான் உண்மை. வேறு யாரும் என்றால் குரலில் அறியலாம். இவன் தான் கதைப்பதற்கே கூலி கேட்பவன் ஆயிற்றே பின்னர் எப்படி இவன் வந்து போனதை அவள் உணர முடிந்து இருக்கும்.

வெளியே வந்த மகேந்திரனுக்கு இருப்பே கொள்ளவில்லை. வாகனத்தைச் செலுத்தியபடியே,
"அன்று நான் எதையாவது வாயைத் திறந்து பேசி இருக்க வேண்டுமோ... கொஞ்சம் அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்திருந்து விட்டேனே... பல்லவியின் உணர்வுகளுக்கு நான் மதிப்பே கொடுக்கவில்லை அது தான் பல்லவிக்குக் கோபம் போல..."
என்று பல்லவியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.

வீட்டிலும் அவனது யோசனை அப்படியே முகத்தில் தெரியவே
"என்னாச்சு மகிப்பா... உடம்பு ஏதும் சரியில்லையா?"
என்று அவனது நெற்றியில் கைவைத்துப் பார்த்துக் கேட்டார் காயத்ரி.

"இல்லை அம்மா..."
என்றபடி மெல்ல நழுவிப் போய் விட்டான் மகேந்திரன்.

அனுபல்லவியை நேரில் பார்த்து அவளிடம் பேச வேண்டும். குறைந்தது தான் அன்று பேசாமல் இருந்ததற்கு மன்னிப்பாவது கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்ட பின்னரே மகேந்திரனுக்குத் தூக்கம் வந்தது.

அவன் எண்ணியபடி கொஞ்சம் பேச, காலையில் கடற்கரையில் சந்திக்க வர முடியுமா? என அனுபல்லவிக்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டி விட்டவனுக்கு அவள் வருகிறேன் என்று அனுப்பிய பதில் செய்தி கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது.

கடற்கரையில் அன்று அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்திருந்தான் மகேந்திரன். அவளுக்கு அருகில் மண்ணில் படம் கீறியபடி அமர்ந்திருந்தாள் அனுபல்லவி. அவள் ஒன்றுமே பேசாமல் இருப்பதைப் பார்த்தவனுக்குக் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. வாயைத் திறந்து ஏதாவது பேசினால் பவளமா கொட்டி விடும் என நினைத்துக் கொண்டவனுக்கு, அப்போது தான் தானும் அன்று ஒன்றும் பேசாமல் இருந்தது அவளுக்குக் எப்படிக் கடுப்பாக இருந்து இருக்கும் என்ற எண்ணம் வந்தது.

இருவருக்கு இடையிலும் இருந்த அந்த மௌனத்தை உடைப்பதற்காக
"பல்லவி... என்னை மன்னித்து விடுங்கள். அன்று எனக்குக் கொஞ்சம் திகைப்பில் என்ன பேசுவது எதைப் பேசுவது என்று ஒன்றுமே தோன்றவில்லை அதனால் தான் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்து விட்டேன்..."
என அனுபல்லவியைப் பார்த்துத் தன்னிலை விளக்கம் கொடுத்தான் மகேந்திரன்.

அவன் சொன்னதைக் கேட்டவள்
"நானும் யோசித்துப் பார்த்தேன் மகேந்தர்... எனக்கு உங்களின் இந்தக் குணம், இந்த அமைதி பிடித்தது எல்லாம் ஒரு விஷயமே இல்லை. ஏனென்றால் யாருக்கென்றாலும் உங்களின் இந்தக் குணமும் அமைதியும் பிடித்துத் தான் இருக்கும். அதோடு எனக்கு உங்களைப் பிடித்தது போல உங்களுக்கும் என்னைப் பிடிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை தானே..."
என்று தானும் ஒரு விளக்கம் கொடுத்தாள்.

அவள் அவ்விதம் சொன்னதும்
"பல்லவி... அப்படி எல்லாம் ஒன்றும்..."
என மகேந்திரன் ஏதோ சொல்ல வரவும்,
"நீங்கள் ஒன்றுமே சொல்ல வேண்டாம்... என்னுடைய விருப்பத்தை நான் சொன்னேன் அவ்வளவு தான் மற்றபடி உங்களைத் தொந்தரவு ஏதும் செய்து இருந்தால் மன்னித்து விடுங்கள்."
என்றவள் அத்தோடு பேச்சு முடிந்து விட்டது என்பது போல எழுந்து போய் விட்டாள்.

அப்போதும் பல்லவி சென்ற திக்கையே பார்த்திருந்த மகேந்திரனின் மனதில் அவள் காதலெனும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து நெடு நேரமாகி இருந்தது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தோட்டத்தில் அமர்ந்து இருந்து பூந்தொட்டியில் பூத்துச் சிலிர்த்துக் கொண்டிருந்த பல வண்ண நிறத்து ரோஜா மலர்களைக் கன்னத்தில் கை வைத்தபடி பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான் மகேந்திரவர்மன்.

அவனருகில் இன்னுமொரு கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டு அவனையே பார்த்திருந்தான் ஆதித்யன்.

நெடு நேரமாகியும் தான் வந்ததைக் கூட உணராமல் தம்பியுடையான் பூக்களையே இரசித்துப் பார்ப்பதைப் பார்த்தவனுக்கு விசித்திரமாகத் தான் இருந்தது.

மெல்லத் தன் மூத்த தம்பியின் காதருகில் குனிந்து,
"யாருப்பா அந்தப் பொண்ணு..."
என்று மெல்லக் கேட்டான் ஆதித்யன்.

திடுக்குற்றுத் திரும்பிப் பார்த்தவன் அப்போது தான் தன்னருகே இருந்த தமையனையே பார்த்தான்.

"என்ன அண்ணா... என்ன கேட்டீர்கள்..."
என்று ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தான் மகேந்திரன்.

"இல்லை இத்தனை தீவிரமாக இந்தப் பூக்களை இரசித்துக் கொண்டு இருந்தாய்... பொதுவாகக் காதலில் விழுந்தால் தான் இப்படித் தனியே அமர்ந்து ஏதாவது யோசிப்பது எதையாவது இரசிப்பது எல்லாம் நடக்குமாம்... அது தான் யார் அந்தப் பொண்ணு என்று கேட்டேன்..."
என்று சிரித்தபடியே சொன்னான் ஆதித்யன்.

அண்ணன் சொன்னதைக் கேட்டதும்
"அப்படியானால் நம் சூரியன் தான் அடிக்கடி எதையாவது இரசிப்பதும் ஏதாவது யோசிப்பதுமாக இருக்கிறான்... அவனும் காதலில் விழுந்து விட்டான் என்று அர்த்தமா அண்ணா..."
என்று கேட்டான் மகேந்திரன் மெல்லிய புன்னகையுடன்.

"ம்ம்ம்... பரவாயில்லையே நீயும் இப்போது எல்லாம் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசப் பழகி விட்டாயே..."
என்று சிரித்த ஆதித்யனுக்குத் தான் அனுபல்லவியை நேசிப்பதைச் சொன்னான் மகேந்திரன்.

"வாழ்த்துக்கள்டா..."
என்றபடி தன் தம்பியைச் சந்தோசமாக அணைத்துக் கொண்டான் ஆதித்யன்.

"அதோடு சீக்கிரமாக உன் காதலையும் சொல்லி விடு..."
என்றும் சொன்னான் ஆதித்யன்.

"ம்ம்... இன்றே சொல்லப் போகிறேன் அண்ணா..."
என்றவன் ஒரு வித சந்தோசத்துடன் தன் அலைபேசியில் அனுவுக்கு அழைத்துக் கடற்கரைக்கு வருமாறு சொல்லிவிட்டு வெளியே புறப்பட்டுச் சென்றான்.

வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தவனது மனம் அவனுக்கு முன்பாகப் பயணிக்கத் தொடங்கியிருந்தது அவனவளை நோக்கி,
"இடையில் சில தினங்கள் இருவருமே பார்க்கவும் இல்லை பேசவும் இல்லையே..."
என நினைத்தபடி கடற்கரையில் வாகனத்தை நிறுத்தியவன் கடல் மணலில் நடக்கத் தொடங்கினான்.

அவனுக்கு முன்பாகவே கடற்கரைக்கு வந்திருந்த அனு மணலில் அமர்ந்திருந்தாள்.

அனுவைப் பார்த்ததுமே சந்தோசமான மகேந்திரன் அவளருகில் சென்று அமர்ந்து கொண்டான். தன்னருகில் அமர்ந்தவனைப் பார்த்து விட்டு,
"ஏதோ முக்கியமாகப் பேச வேண்டும் என்று அவசரமாக வரச் சொன்னீர்களே என்னை விஷயம்?"
என்று கேட்டாள் எங்கோ பார்த்தபடி...

அவள் தன் மீது சிறு கோபத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தவனுக்கு லேசாகப் புன்னகை மலர்ந்தது.

"பல்லவி... எனக்கு உங்கள் அளவிற்குத் தைரியம் இல்லை என்றாலும் ஓரளவு இருக்கிறது..."
என்றபடி அவளது வலது கரத்தை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துப் பொத்தியபடி,
"நானும் ஒரு பெண்ணை நேசிக்கிறேன். அவளின் குணமும் குறும்புத்தனமும் கலகலப்பான பேச்சும் அழகான அளவான கோபமும் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். எனக்கு அவளின் இந்தக் குணம் பண்புகள் எல்லாம் பிடித்தது ஒரு விஷயமே இல்லை.. ஏனென்றால் யாருக்கென்றாலும் அவளின் இந்தக் குணங்களால் அவளைப் பிடித்துத் தான் இருக்கும். அதோடு எனக்கு அவளைப் பிடித்தது போல அவளுக்கும் என்னைப் பிடிக்க வேண்டும் என்று இல்லை என்று மட்டும் சொல்ல மாட்டேன்... அவளுக்கு என்னை மட்டும் தான் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சுயநலவாதி ஆகி விட்டேன் இப்போது... அவளின் பெயர் அனுபல்லவி அவள் என் இதயத்தில் அணு அணுவாகக் கலந்து நெடு நாட்கள் ஆகி விட்டது..."
என்று கோர்வையாகச் சொல்லி முடித்தவனைப் பார்த்ததும் அனுவின் விழிகள் விரிந்தன.

அவளுக்குச் சிறகுகள் இல்லாமல் வானில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

"நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்பதை விடவும், நீங்கள் இப்படிக் கோர்வையாக அழகாகப் பேசியது தான் எனக்குப் பிடித்திருக்கிறது மகேந்தர்..."
என்றபடி சந்தோசமாக அவனது தோளில் மெல்லச் சாய்ந்து கொண்டாள் அவனது பல்லவி.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சொன்னது சொன்னது நீதானே சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே நடந்திடும் நெசம் தானே
காத்தாக நான் ஆனாலும்
உன் மூச்சில் கலந்திருப்பேன் கனவாக நான் போனாலும்
உனக்காகக் காத்திருப்பேன் எனக்கென்ன ஆச்சோ
உனக்கென்ன ஆச்சோ
காதல் நமக்குள் வந்தாச்சோ... "

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Top