• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
வரிசையாக நின்றிருந்த கொன்றல் மரங்கள் மஞ்சள் நிறத்து மலர்களை சரஞ்சரமாகத் தொங்க விட்டுக் கொண்டு காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன.

காற்று லேசாக வீசும் போது மஞ்சள் மலர்களில் அதிகமான மலர்கள் உதிர்ந்து மண்ணை மூடிக் கொட்டிக் கிடந்தன.

ஓரிரண்டு மலர்கள் ஒரு கொன்றல் மரத்தின் கீழே அமர்ந்திருந்த பல்லவி மற்றும் மகேந்திரன் ஜோடிக்கு அர்ச்சதை தூவி வாழ்த்துவது போல அவர்களின் தலை மீது விழுந்தன.

அவர்கள் இருவருமே யாருடைய வரவையோ எதிர்பார்த்திருப்பது, அடிக்கடி அங்கும் இங்கும் பார்த்தபடி இருப்பதில் இருந்து நன்றாகவே தெரிந்தது.

"என்ன மகேந்தர் யார் வரப் போகிறார்கள் என்று சொல்ல மாட்டீர்களா?"
என்று அதோடு ஒரு ஐந்து தடவையாவது அனுபல்லவி கேட்டு விட்டாள்.

"இன்னும் கொஞ்சம் நேரம் தான் இப்போது வந்து விடுவார்கள் பல்லவி..."
என்றபடி திரும்பிய மகேந்திரன் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்த ஆதித்யனையும் சூரியனையும் பார்த்ததும் சந்தோஷமாக எழுந்து நின்றான்.

அவர்களும் சந்தோஷமாக இவர்கள் இருவரும் இருக்கும் இடத்தை நோக்கி வந்தனர்.

நால்வரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆகிக் கொண்டார்கள்.

"பல்லவி இவர்கள் என்னுடைய அண்ணாவும் தம்பியும்..."
என்று அனுவுக்குத் தன் சகோதரர்களை அறிமுகப் படுத்தியவன்,
"அண்ணா..."
என்று அழைத்து அனுவை அறிமுகப் படுத்துவதற்கு முன்பாக இடையிட்ட ஆதித்யன்,
"எனக்கு ஏற்கனவே தெரியும்டா..."
என்றபடி பல்லவியைப் பார்த்துப் புன்னகைத்தான்.

அவர்கள் மூவரும் பேசுவதையே சற்று நேரம் வேடிக்கை பார்த்தவாறு நின்றிருந்த சூரியன்,
"உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமா எங்களுக்கு எல்லாம் தெரிய வேண்டாமோ?"
என்று வராத கோபத்துடன் கேட்டான்.

அவனைப் பார்த்துச் சிரித்தபடி,
"நான் அனுபல்லவி... உங்கள் இரண்டாவது அண்ணாவின் வருங்கால மனைவி மற்றும் நிகழ்காலக் காதலி..."
என்றாள்.

அவள் அவ்விதம் சொன்னதும் ஆதித்யன்,
"அதுவும் கூடத் தெரியும்..."
என்றபடி சிரித்தான்.

"ஆனால் எனக்கு இது தெரியாதே இந்தச் சின்னண்ணா இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லவேயில்லை..."
என ஆதங்கத்துடன் சூரியன் சொன்னான்.

அதற்குப் பல்லவி,
"மகேந்தர் சொல்லித் தான் நம் காதல் விஷயம் உங்களுக்குத் தெரிய வருமாக இருந்தால் இந்த ஜென்மத்திற்கு அது தெரிய வந்தே இருக்காது தெரியுமா..."
என்று சிரியாமல் சொன்னாள்.

அதைக் கேட்டதும் சூரியன் வாய் விட்டே சிரித்து விட்டான்.

"பல்லவி... என்ன இருந்தாலும் நீ இப்படி என் தம்பியைக் கிண்டல் செய்யக் கூடாது..."
எனச் சிரித்தபடி சொன்னான் ஆதித்யன்.

"என்ன ஆதியண்ணா நீங்கள் உண்மையை உரக்கச் சொன்னால் கிண்டல் சுண்டல் என்கிறீர்கள்..."
என்று தானும் சிரித்தாள் அனுபல்லவி.

"சரி சரி எப்படியோ என் சின்னண்ணாவின் அருமை பெருமைகள் எனக்குத் தெரியாதா என்ன? இப்போது இந்தச் சந்தோஷத்தைக் கொண்டாட வேண்டாமா..."
என்றபடி எல்லோரையும் அழைத்துக் கொண்டு சந்தோஷமாகக் கிளம்பினான் சூரியன்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தோட்டத்தில் சகோதரர்கள் மூவரும் அமர்ந்திருந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஆதித்யன்,
"மகேந்திரா... அம்மாவிடம் பல்லவி விஷயம் பற்றிச் சொல்லி விட்டாயா?"
என்று கேட்டான்.

"இப்போது சொல்லவில்லை அண்ணா..."
என்று சிறு தயக்கத்துடன் சொன்னான் மகேந்திரன்.

"அதற்கு எதற்குச் சின்னண்ணா தயக்கம்... உனக்கு எப்போது சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது சொல்லிக் கொள்..."
என்று தமையனின் தயக்கத்தைப் போக்கும் விதமாகப் பேசினான் சூரியன்.

"மகேந்திரா... நாளைக்குப் பழத்தோட்டத்திற்குப் போவதாகப் பேசிக் கொண்டோமே நீ பேசாமல் பல்லவியையும் அழைத்து வா... அவளுக்கும் சந்தோஷமாக இருக்கும்..."
என்று சொன்ன ஆதித்யன் வேலை விஷயமாக வெளியே போய் விட்டான்.

தமையன் சொன்னதைக் கேட்டதும் சந்தோஷமான மகேந்திரன் உடனேயே பல்லவிக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னான். அவளும் சந்தோஷமாகச் சம்மதம் சொன்னாள்.

அடுத்த நாள் காலை நேரத்தில் மகேந்திரனுடன் பழத் தோட்டத்துகுச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த அனுபல்லவி,
"காயு... நான் வெளியே போய் விட்டு வருகிறேன் திரும்பி வருவதற்கு மாலை ஆகி விடும்... ஏதேனும் வெளியே வாங்கி வர வேண்டுமா?"
என்றபடி காயத்திரியைப் பார்த்தாள்.

"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் அனு... நீ கவனமாகப் போய் விட்டு வா..."
என்று அனுவை வழி அனுப்பி வைத்தாள் காயத்திரி.

"நான் உன்னிடம் மிக மிக முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் காயு... ஆனால் இப்போது சொல்ல மாட்டேன் கொஞ்சம் நாள் போகட்டும் பிறகு ஓடி வந்து உன்னிடம் தான் அது பற்றி சொல்வேன்..."
என்று சொன்னபடி கிளம்பிச் சென்று விட்டாள் அனுபல்லவி.

பழத் தோட்டம் செல்லும் வழி நெடுகிலும் சூரியனும் பல்லவியும் ஒரே அரட்டைக் கச்சேரி தான்... மகேந்திரனும் ஆதித்யனும் மட்டும் லேசாகச் சிரித்தபடி அமைதியாகவே வந்தார்கள். மகேந்திரனுக்கு அமைதியாக இருப்பது ஒன்றும் புதிது இல்லையே... ஆனால் ஆதித்யன் அப்போது தான் காயத்திரியை நேசிக்கத் தொடங்கி இருந்தான். அவளிடம் எவ்விதம் தன் நேசத்தைச் சொல்வது என்ற யோசனையில் அவன் மூழ்கி இருந்ததால் அவன் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை.

"நான் உங்களை எப்படி அழைப்பது... அண்ணி என்று தான் அழைக்க வேண்டுமோ?"
என்று கேட்டான் சூரியன்.

"வேண்டாம் சூரியா... நானும் நீயும் தான் நண்பர்கள் ஆகி விட்டோமே அதனால் நீ என்னைப் பெயர் சொல்லியே அழைக்கலாம்..."
என்று சந்தோசமாகச் சொன்னாள் அனு.

"அது தானே அண்ணி என்று அழைத்தால் ஏதோ வயதுக்கு மூத்த அறிவாளியான பெரியவர்களை அழைப்பது போலத் தான் இருக்கும்... அது உங்களுக்குப் பொருத்தமாக இருக்காது தானே அதனால் நான் பல்லவி என்றே அழைக்கிறேன்"
என்று சிரியாமல் சொன்னவனுக்கு,
"மலைக்குத் தானே போகிறோம்... மேலே இருந்து கீழே பிடித்து உருட்டி விடுகிறேன் உன்னை..."
என்று சிரித்தபடி பதில் சொன்னாள் அனு.

"நீங்கள் செய்தாலும் செய்வீர்கள்..."
என்றபடி வாயை மூடிக் கொண்டு பணிவாக இருப்பது போலக் காட்டிக் கொண்டான் சூரியன்.

பழத் தோட்டத்து வீட்டின் வாசலில் புதிதாக வரும் அனுவை வரவேற்பதற்காகச் சந்தோசமே உருவாக நின்றிருந்தாள் சுமித்திரை.

அனுபல்லவிவுக்கு ஏனோ சுமித்திரையைப் பார்த்த உடனேயே பிடித்துப் போய் விட்டது. சுமித்திரையோ எந்தவிதக் கள்ளங்கபடமும் இல்லாமல் அனுவை அணைத்துத் தன்னுடைய சந்தோசத்தை வெளிப்படுத்தினாள்.

"மகேந்திரன் அண்ணாவை நேசிக்கும் உங்களுக்கு எவ்வளவு பொறுமை இருக்கவேண்டும்... நான் உங்களை அக்கா என்று அழைக்கட்டுமா? என்னடா இவள் மகேந்திரனை அண்ணா என்கிறாள் என்னை அக்கா என்கிறாள் என்று நினைக்கிறீர்களா? ஆனால் உங்களைப் பார்த்ததுமே எனக்கு அக்கா என்று தான் அழைக்கத் தோன்றுகிறது..."
என்று தன்னிலை விளக்கம் கொடுத்தாள் சுமித்திரை.

"நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்... எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைம்மா..."
என்று சிரித்தபடி பதில் சொன்னாள் அனு.

"என்ன ஒரு பெருந்தன்மை... இது தான் வாய்ப்பு என்று சுமி உங்களை எருமை, கழுதை என்று அழைக்கப் போகிறாள்..."
என்றபடி சிரித்தான் சூரியன்.

"குரங்கை விட்டு விட்டாயே சூரியா... வாய்ப்புக் கிடைத்ததும் என்னை அவ்விதம் நீ தான் அழைப்பாய் என்று எனக்கு தெரியாதா..."
என்று சிரித்தாள் அனு.

"சரி சரி வாசலில் நின்று கொண்டே பேசாமல் உள்ளே வாருங்கள்..."
என்று எல்லோரையும் உள்ளே அழைத்தான் ஆதித்யன்.

"நான் கொஞ்சம் வெளியே போய் விட்டு வருகிறேன் அண்ணா..."
என்ற சுமித்திரையிடம்,
"கொஞ்சம் வெளியே என்று ஏன் பொய் சொல்கிறாய் சுமி... மாறன் தரிசனம் தானே நீ இப்போது வெளியே செல்வதற்குக் காரணம்..."
என்று கண்சிமிட்டிச் சிரித்தபடி சொன்னான் சூரியன்.

"உங்களுக்குத் தான் தெரிகிறதே... பிறகு என்ன அண்ணா..."
என்று பழிப்புக் காட்டி விட்டு வெளியே ஓடி விட்டாள் சுமித்திரை.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தன் வீட்டின் சமையலறையில் மதியநேர உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தான் சுமித்திரையின் மனங் கவர்ந்த மணிமாறன்.

அவனது வீட்டு வாசலில் அவிழ்த்து விடப் பட்டிருந்த அவனது வளர்ப்பு நாய் தெருவில் போவோர் வருவோரைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தது. சுமித்திரை வருவதைப் பார்த்ததும் அவளிடம் ஓடிச் சென்று செல்லங் கொஞ்சியது.

"வீரா... இப்படி வாசல் கதவைத் திறந்து வைத்து விட்டு இந்த மாறன் எங்கே போய் விட்டார்... நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய்..."
என்று நாயை மெல்ல வருடிக் கொடுத்தாள்.

வீரன் அவளது பிடியில் இருந்து விலகி வீட்டின் உள்ளே ஓடியது. அதனைத் தொடர்ந்து உள்ளே சென்றவள் வீரன் சமையலறை வாசலில் நிற்பதைப் பார்த்ததும்
"அப்போதும் நினைத்தேன் கத்தரிக்காய்ப் பொரியல் வாசனை வாசலில் வரும் போதே நினைத்தேன் மாறன் மடைப்பள்ளிக்குள் தான் நிற்கிறார் என்று..."
என மெல்ல முணுமுணுத்தபடி சமையலறையினுள் எட்டிப் பார்த்தாள்.

அங்கே மணிமாறன் அடுப்பில் இருந்து கத்தரிக்காய்ப் பொரியலைக் கீழே இறக்கிக் கொண்டிருந்தான்.

வீரனைப் பார்த்துச் சத்தம் போடாதே என்பது போலச் சைகையில் காட்டியவள் மெல்லப் பதுங்கி உள்ளே சென்று பின்னால் இருந்து மாறனின் கண்களைப் பொத்தினாள்.

"சுமிம்மா... நீ கண்களைப் பொத்தினால் எப்படி நான் குழம்புக்கு உப்புப் போடுவது... பிறகு நீ தான் உப்புச் சரியில்லை புளி கணக்கில்லை என்று புலம்புவாய்..."
என்றபடி அடுத்த அடுப்பில் இருக்கும் குழம்புச் சட்டிக்குள் சரியாக உப்பைப் போட்டபடி கேட்டான் மணிமாறன்.

பொத்திய கைகளை எடுத்தபடி,
"எப்படி மாறா... உங்களால் என்னை இப்படித் தினமும் கண்டு பிடிக்க முடிகிறது..."
என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.

வலிக்காமல் செல்லமாக அவளது தலையில் கொட்டி விட்டு,
"ஆமாம் இது பெரிய உலகமகா கண்டுபிடிப்புப் பார்... தினமும் உனக்கு இது தானே வாடிக்கை பின்னால் வந்து கண்ணைப் பொத்துவது..."
என்றபடி தூள்ப் பேணியை எடுத்தான் மாறன்.

"என்ன மாறா... சுத்த மோசம் நீங்கள் சும்மாவாவது யார் பின்னால் நிற்பது என்று தெரியாதது போல நடித்து இருக்கலாம் தானே..."
என்று ஆதங்கத்துடன் சொன்னபடி அவன் பொரித்து வைத்த கத்தரிக்காய்ப் பொரியலில் ஒன்றை எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டாள்.

"நானும் எத்தனை நாள் தான் அப்படித் தெரியாது போல நடிப்பது"
என்றவன் அவள் பொரியலை எடுத்து வாய்க்குள் போடுவதனைப் பார்த்து விட்டு,
"சுமிம்மா... பொரியலில் சூடும் போகவில்லை எண்ணெயும் இன்னும் வடியவில்லை நாக்கு அள்ளப் போகிறது..."
என்றவாறு பொரியல் வைத்து இருந்த தட்டை எடுத்து அவளுக்கு எட்டாத இடமாக வைத்தான்.

அவனைப் பாவமாகப் பார்த்தபடி,
"என்ன குழம்பு வைத்து இருக்கிறீர்கள் மாறா... எனக்கு ரொம்பப் பசிக்கிறது தெரியுமா? உங்கள் கையால் சமைத்த உணவை உண்டால் தான் எனக்குச் சாப்பிட்ட உணர்வே வரும் தெரியுமா?"
என்று லேசாகப் புலம்பியவளை இடுப்பில் கை வைத்துத் தலை சாய்த்துப் பார்த்தபடி,
"நீ கவலையே படாதே சுமிம்மா... திருமணத்திற்குப் பிறகு உன்னை நான் சுடுதண்ணீர் கூட வைக்கச் சொல்ல மாட்டேன். அதற்குப் பயந்து தானே இப்படி எல்லாம் பொய் பொய்யாய் அவிழ்த்து விடுகிறாய்..."
எனச் சொன்னான் மணிமாறன்.

"அப்படியெல்லாம் இல்லை மாறா..."
என்று சிணுங்கியவளின் கையில், உள்ளியில் செய்த முறுக்கு அடங்கிய பேணியைக் கொடுத்தவன்,
"குழம்பை இறக்கும் வரை இதைக் கொறித்துக் கொண்டு இரும்மா..."
என்றபடி சமையலில் மும்முரமானான் மாறன்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் எனக்கு உள்ளி முறுக்குப் பிடிக்கும் என்று சொல்லி இருந்தாள் சுமித்திரை... அதோடு தான் பசிக்கிறது என்று விளையாட்டுக்குச் சொன்னேன் என்பது தெரிந்து இருந்தும் கூட அவன் தனக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்வதை பார்த்தவளுக்குப் பூரிப்பாக இருந்தது.

சமையல் மேடையில் ஏறி இருந்தபடி மாறன் தனக்காகச் செய்த உள்ளி முறுக்கைக் கொறித்தபடி அவன் செய்யும் சமையலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"சுமிம்மா... நீ கொஞ்சமாவது சமையல் பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டாமா... நான் இல்லாத பொழுதுகளில் நீ ஒன்றும் தெரியாமல் விழித்துக் கொண்டு நிற்கக் கூடாது இல்லையா... பிறகு எல்லோரும் என்னைத் தான் குற்றம் சொல்வார்கள்... இவன் தான் தன் பொண்டாட்டியைச் சோம்பேறியாக வளர்த்து விட்டான் என்று..."
என்று சொன்னவனின் கன்னத்தை வலிக்காமல் கிள்ளியபடி,
"உங்கள் வளர்ப்பைக் குற்றம் சொல்லாதபடி நான் எல்லா வேலைகளையும் கற்றுக் கொள்கிறேன் போதுமா..."
என்று செல்லங் கொஞ்சியபடி சொன்னாள் சுமித்திரை.

உள்ளி முறுக்கை எடுத்துச் சாப்பிட்ட கையால் தன் கன்னத்தைக் கிள்ளியவளின் கையைப் பற்றிய மாறன்,
"எனக்கு என்னவோ நான் உனக்கு ரொம்பவும் செல்லங் கொடுத்து விட்டேனோ என்று தோன்றுகிறது... அதை வைத்தே உன்னை யாரும் குறை சொல்லி விடுவார்களோ என்று எனக்குக் கவலையாக இருக்கிறது..."
என்று அவளைப் பார்த்தபடியே சொன்னான்.

"யார் என்னை என்ன சொல்வது... உங்களுக்கு என்ன இப்போது நான் குழம்பு வைத்துக் கொடுக்க வேண்டுமா? கொடுக்கட்டுமா?"
என்றபடி சுடிதாரின் தாவணியை வரிந்து கட்டிக் கொண்டு இறங்கியவளைப் பிடித்தவன்,
"குழம்பு தான் வைக்க வேண்டுமே தவிரக் களனித்தண்ணீர் வைக்க வேண்டிய அவசியம் இல்லை சுமிம்மா..."
என்று சிரியாமல் சொன்னான்.

"என்னது... நான் வைப்பது உங்களுக்குக் களனித்தண்ணீரா..."
என்று முறைத்தவளைத் தோளோடு லேசாக அணைத்தபடி,
"அப்படி என்று நான் சொல்லவில்லை சுமிம்மா... மூன்று நாட்களுக்கு முன்னர் உன்னுடைய அம்மா இருக்கிறாரே என்னுடைய அத்தை, அவர்கள் உன்னைப் பார்த்து அடிப்பாவி குழம்பு வைக்கச் சொன்னால் களனித் தண்ணீர் வைத்து இருக்கிறாயே இதை மாடு கூட முகர்ந்து பார்க்காதுடி என்று வார்த்தையால் அபிஷேகம் செய்து கொண்டு இருக்கும் போது நான் வெளியே தான் நின்றிருந்தேன்... அதைத்தான் சொன்னேன்..."
என்று வந்த சிரிப்பை அடக்கியபடி சொன்னான்.

"போங்கள் மாறா...நானும் உங்களைக் கிண்டல் செய்து விடுவேன்... உங்களுக்குப் பின்னால் சுற்றிய நேரம் ஏதாவது பாடத்தை எடுத்துப் படித்து இருந்தால் அந்தப் பாடம் முடிந்து அதற்குச் சான்றிதழும் வாங்கி இருப்பேன் தெரியுமா?"
என்று அவனது தோளில் இடித்து விட்டு அவன் தோளிலேயே சாய்ந்து கொண்டு தானும் சிரித்தாள் மாறனின் சுமித்திரை.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உடைந்த வார்த்தையில்
உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்...
என் இரத்த குழாயில்
புகுந்து கொண்டு சத்தம்
போடுகிறாய்...
கண்ணாடி நெஞ்சில்
கல்லை எறிந்து கலகம்
மூட்டுகிறாய்...
இன்று ஐந்தரை மணிக்குள்
காதல் வருமென அறிகுறி காட்டுகிறாய்...

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Top