• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
வெளியே தோட்டத்தில் நின்றிருந்த பூமரங்கள் எல்லாம் காற்றில் அசைந்து அசைந்து பூக்களைக் கீழே புல்வெளியில் சிதற விட்டுக் கொண்டிருந்தன.

தோட்டத்தில் கிடந்த பிரம்பு நாற்காலியில் மகேந்திரனும், சூரியனும் அமர்ந்து இருந்தார்கள். மகேந்திரன் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

சூரியன் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தான்.

இருவரும் தோட்டத்தில் இருப்பதைப் பார்த்து விட்டு இருவருக்கும் அருகில் ஏலக்காய் மணக்க மணக்கப் பசுப்பாலைக் கொண்டு வந்து வைத்து விட்டு,
"மகிப்பா,சூரிப்பா நானும் அப்பாவும் இங்கே பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்குப் போய் விட்டு வருகிறோம்..."
என்று சொல்லியபடி போய் விட்டார் காயத்ரி.

பத்திரிகையை வைத்து விட்டு நிமிர்ந்த சூரியன் அப்போது தான் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த தமையனைப் பார்த்தான்.

"சின்னண்ணா... என்ன அப்படித் தீவிரமாக யோசித்துக் கொண்டு இருக்கிறாய் ஒருவேளை பல்லவியுடன் ஏதும் சண்டை போட்டு விட்டாயா? ஆனால் உனக்குத்தான் சண்டை போடத் தெரியாதே... அவள் தான் ஏதும் சண்டை போட்டு இருப்பாள்..."
என்று கேட்டான் சூரியன்.

தம்பி கேட்ட கேள்வியில் தன் யோசனையைக் கை விட்ட மகேந்திரன்,
"அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே..."
என்றபடி தாய் கொண்டு வந்து வைத்து விட்டுப் போன ஏலக்காய் தட்டிப் போட்ட பசுப்பாலை எடுத்து ஒன்றைத் தம்பியிடம் கொடுத்து விட்டு ஒன்றைத் தான் அருந்தத் தொடங்கினான்.

"ஒன்றும் இல்லாவிட்டால் சரி தான்..."
என்றபடி பாலை அருந்தி விட்டு உள்ளே எழுந்து சென்று விட்டான் சூரியன்.

உண்மையில் மகேந்திரனின் தீவிரமான யோசனைக்குக் காரணம் இருந்தது. அனுவைப் பழத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று வந்து இன்றோடு கிட்டத் தட்ட ஒரு மாதம் முடிந்து விட்டது.

இருவரும் ரொம்பவும் சந்தோசமாகத் தான் இருந்தார்கள் என்ன நடந்ததோ தெரியவில்லை ஒரு கிழமை ஆகி விட்டது அனு மகேந்திரனுடன் சரியாகப் பேசி, பார்க்க வருகிறேன் உடம்புக்கு ஏதும் முடியவில்லையா என்று மகேந்திரன் கேட்டாலும், ஒழுங்கான பதில் சொல்லாமல் நிறைய வேலைகள் இருக்கிறது என்று மட்டும் ஒரே பதிலையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள் அனுபல்லவி.

அதையே தான் இப்போது மகேந்திரனும் யோசித்துக் கொண்டிருந்தான். தன்னையும் அறியாமல் அனுவின் மனதை காயப்படுத்தி விட்டேனோ என்று தான் அவனுக்கு எண்ணம் ஓடிக் கொண்டு இருந்தது.

இன்று எப்படியாவது அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தவன் நான் உன்னைப் பார்க்க வருகிறேன் என்று எந்தத் தகவலும் சொல்லாமல் சரஸ்வதி இல்லம் நோக்கிப் புறப்பட்டான்.

இல்லத்தின் முன்னால் குடை பரப்பி நின்று இருந்த வாகை மரத்தின் கீழ் கட்டப் பட்டு இருந்த வட்ட இருக்கையில் அமர்ந்து வானத்தை வெறித்துக் கொண்டு இருந்தாள் அனுபல்லவி. காயத்திரியும் கஸ்தூரியும் கோவிலுக்குப் போய் விட்டிருந்தனர்.

"கடவுளே என் வாழ்க்கையில் மட்டும் ஏனிப்படி விளையாடுகிறாய்... எல்லாவற்றையும் ஒதுக்கித் தூரமாக வைத்து விட்டு என் மகேந்தருடன் சந்தோஷமாக வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு எடுத்த வேளையில் தானா இப்படி எல்லாம் நடக்க வேண்டும்... எத்தனை நாட்கள் தான் மகேந்திரனைப் பார்க்கப் போகாமல் அவனுடன் பேசாமல் காலத்தைக் கடத்துவது..."
என மனதினுள் மறுகிக் கொண்டிருந்தவளுக்கு முன்னால் நிழலாடவே மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் அனுபல்லவி.

முகத்தில் எந்த விதமான உணர்ச்சியையும் வெளிப் படுத்தாமல் அவளது விழிகளையே பார்த்தபடி நின்றிருந்தான் மகேந்திரவர்மன். அவனைப் அங்கே அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராத பல்லவி பட்டென்று எழுந்து நின்றாள். அவளது விழிகள் அலைபாயத் தொடங்கின.

விழித்துக் கொண்டு நின்றவளது கரத்தைப் பற்றி,
"உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும்... என்னுடன் வர முடியுமா? அல்லது இப்போது வேறு ஏதேனும் புதிய வேலை முளைத்து விடுமா?"
எனப் புருவங்கள் உயர்த்திக் கேட்டவன் பின்னால் மறு பேச்சின்றி எழுந்து சென்றாள் பல்லவி.

மகேந்திரவர்மனின் இருசக்கர வாகனம் பல்லவியைச் சுமந்தபடி கடற்கரையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.

இருவரது மனங்களுமே இரண்டு விதமாகப் பிரயாணித்துக் கொண்டிருந்தன.
மகேந்திரவர்மனுக்கோ,
"அப்படி இவளுக்கு என்னதான் பிரச்சினை எதற்காக என்னைப் பார்ப்பதையும் பேசுவதையும் தவிர்க்கிறாள். எப்படியாவது அவளது பிரச்சினையை அறிந்து அதைத் தீர்த்து விட வேண்டும்..."
என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருக்க, அனுபல்லவிக்கோ
"இப்போது என்ன செய்வது... மகேந்தர் என்னிடம் நேரடியாக என்ன பிரச்சினை என்று கேட்டால் அவரது முகம் பார்த்து என்னால் பொய் சொல்ல முடியாதே... அதே போல உண்மையையும் சொல்லி விட முடியாதே... ஒரு வேளை அவர் என்னை வெறுத்து விட்டால் என்ன செய்வது..."
என்ற சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.

இருவரும் அதிக ஆள்நடமாட்டம் இல்லாத இடமாகத் தேடி, ஒரு படகின் அருகில் அமர்ந்து கொண்டு கடலைப் பார்க்கத் தொடங்கினார்கள்.
எப்படித் தொடங்குவது என்று மகேந்திரனும், என்ன கேட்கப் போகிறாரோ என்று பல்லவியும் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்கள்.

அவளை ஒரு தடவை பார்த்த மகேந்தர் அந்த மௌனத்தை உடைத்துத் தானே முதலில் பேச ஆரம்பித்தான்.

"அனு... என்னாயிற்று? எதற்காக என்னைப் பார்ப்பதைத் தவிர்க்கிறாய்? நான் ஏதும் உன் மனதை நோகடித்து விட்டேனா?"
எனக் கவலை இழையோடக் கேட்டவனின் கரத்தை எடுத்துத் தனது கரங்களுக்குள் வைத்துக் கொண்டு,
"ஐயோ... அப்படி எல்லாம் இல்லை மகேந்தர்... உங்களுக்கு யார் மனதையும் நோகடிக்கத் தெரியாது. அப்படி இருக்கும் போது என் மனதையா நோகடிப்பீர்கள்..."
என வேகமாகச் சொன்னாள்.

அவளையும் அவள் பிடித்திருந்த கரத்தையும் பார்த்தபடி,
"நான் உன்னிடம் எதையுமே எப்போதுமே மறைத்துப் பேசியதில்லை அனு... அப்படி ஒரு சூழ்நிலையும் எனக்கு வரவில்லை..."
என்றவன் ஒரு நொடி தயங்கி,
"ஒரு வேளை உனக்கு அப்படி ஏதும் சூழ்நிலை வந்து விட்டதா? அப்படி ஏதும் என்றாலும் தயங்காமல் சொல்லி விடு நான் புரிந்து கொள்வேன்..."
என்று சொல்லி முடித்தவனை இமைக்காது பார்த்திருந்தாள் பல்லவி.

இனிமேலும் பேசாமல் இருப்பது முறையில்லை என நினைத்தவள்,
"மகேந்தர் என்னுடைய இப்போதைய சூழ்நிலையை உங்களிடம் எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அதோடு நான் உங்களிடம் இருந்து நிறைய விசயங்களை மறைத்து விட்டேன். அதை உங்களிடம் சொல்லி விட வேண்டும் என்று எனக்குத் தோன்றும். ஆனால் சொன்ன பிறகு நீங்கள் என்னை வெறுத்து விடுவீர்களோ என்று பயமாக இருக்கிறது மகேந்தர்..."
எனத் தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.

தன்னருகில் இருந்தவளை நெருங்கி அமர்ந்து அவளதை தோளை அணைத்தபடி,
"எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன் அனு... நீ கொலையே செய்திருந்தால் கூட என்னால் உன்னை வெறுக்க முடியாது. அந்தளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன்..."
என்றவனது தோளில் சாய்ந்தவளது உள்ளம் அவனது அன்பு தனக்குக் கிடைத்த பெருமையில் பூரித்துப் போனது.

அவனது தோளில் சில நிமிடங்கள் சாய்ந்திருந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட பல்லவி தனது மனதினுள் இது நாள்வரை புதைந்து கிடந்த அந்த விசயத்தை அவனிடம் சொல்லி விடலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.

எப்படியும் அவளில் பாதியாகப் போகிறவனிடம் இனியும் உண்மையை மறைப்பது சரியில்லை. ஒரு வேளை தான் சொல்லப் போகும் உண்மையைக் கேட்டு அவன் தன்னை வெறுத்தாலும் கூட, வாழ் நாள் முழுவதும் அவனையும் அவன் இதுநாள் வரை கொடுத்த அன்பையும் நினைத்தபடியே வாழ்ந்து முடித்து விட வேண்டும் என நினைத்தவள். அவனிடம் தன் கடந்த காலம் பற்றிய உண்மையைச் சொல்லத் தொடங்கினாள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

வசதியான குடும்பத்தைச் சேர்ந்த கவிவர்மன் ஏழைப் பெண்ணான காயத்ரியை நேசித்துக் கொண்டிருந்த காலம் அது, கவிவர்மனது குடும்பம் கிட்டத்தட்ட ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஊர் முழுவதும் சொத்துக்கள் இருந்தது.
அத்தனை சொத்துக்களுக்கும் ஒரே வாரிசாகக் கவிவர்மனே இருந்தார்.

கவிவர்மனின் தந்தையான ஆதித்யவர்மனுக்கு ஒரேயொரு தம்பி மட்டுமே... தம்பிக்கு ஆண் வாரிசு இல்லாமல் பெண் வாரிசு பிறந்தது. பெண் வாரிசுகளுக்குச் சொத்தில் உரிமையேதும் இல்லை என்பதால் அத்தனை சொத்தும் கவிவர்மனுக்கும் சொந்தமாகி விட்டது.

ஆதித்யவர்மனது தம்பி மகள் ஆனந்தரூபிக்கு முதல் கணவன் இறந்து விட, அவளை ஈஸ்வரமூர்த்தி என்பவர் வந்து பெண் கேட்டு இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். ஆனந்தரூபிக்கு முதல் திருமணத்தில் பிறந்தவள் தான் பல்லவி. ஈஸ்வரமூர்த்தி ஆனந்தரூபியை விரும்பித் திருமணம் முடித்ததே, அவள் மூலம் அந்த ஜமீனின் சொத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான், ஈஸ்வரமூர்த்திக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டிரந்தது. அவனது மனைவி நந்தாவதி. அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொண்டான். இருவரும் திட்டமிட்டுத் தான் ஈஸ்வரமூர்த்தி ஆனந்தரூபியின் கணவன் ஆனான்.

கவிவர்மனே சொத்தின் வாரிசு என்ற எண்ணம் ஈஸ்வரமூர்த்திக்கு அவன் மீது குரோதத்தை வளர்த்து விட்டது.

அதோடு சொத்து முழுவதும் கவிவர்மனுக்கும் அவனது வாரிசுகளுக்குமே என்று முடிவாக எல்லோரும் சொல்லி விட, ஈஸ்வரமூர்த்தி கொலைகாரனாகவே மாறிப் போனான். ஆனந்தரூபிக்கு மூளைச்சலவை செய்து, உன் அண்ணன் உன்னை நடுத்தெருவில் விட்டு விடுவான். அவனது சொத்துகளை நாம் எப்படியாவது அடைய வேண்டும். அதற்கு அவன் இறப்பது தான் ஒரு வழி எனச் சொல்ல, முதலில் அதை மறுத்த ஆனந்தரூபி, பின்னர் மனம் மாறித் தன் கணவன் சொன்னதற்கு எல்லாம் ஆமாம் சாமி போடத் தொடங்கினாள்.

கணவனின் துர்போதனையில் தன் பெரியப்பா ஆதித்யவர்மன் உண்ணும் உணவில், விஷம் கலந்து அவரைக் கொன்றதோடு மட்டுமில்லாமல் கவிவர்மனையும் கொல்வதற்குத் தனது கணவன் ஈஸ்வரமூர்த்தியுடன் இணைந்து சதித்திட்டம் போட்ட போது, அது சரியாக நடக்காமல் போகவே தொடர்ந்து சதிவேலையில் இறங்கினர் கணவரும் மனைவியும். இது எதுவும் கவிவர்மனுக்கு தெரியாது.

கவிவர்மனைக் கொலை செய்து விடுவோம் என்று அடியாட்களை வைத்து காயத்ரியின் குடும்பத்தை மிரட்டி அவளை வேறொருவனுக்குத் திருமணம் செய்து வைத்ததே ஆனந்தரூபியும் ஈஸ்வரமூர்த்தியும் தான்... இந்த விசயம் எதுவும் கவிவர்மனுக்குத் தெரியாது. தன் அன்புக்குரியவள் எங்கிருந்தாலும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கட்டும் என அவர் ஒதுங்கி விடடார்.

அதன் பின்னர் சில மாதங்களில் காயத்ரியின் கணவன் இறந்து போக வயிற்றில் பிள்ளையுடன் நின்ற காயத்ரியை அதற்கு மேலும் தனியாக விடக் கவிவர்மனால் முடியவில்லை. ஏதேதோ சொல்லி அப்போதும் காயத்ரிக்குத் துணையாக நிற்க விடாமல் தடுத்த நந்தாவதியை எதிர்த்துக் கொண்டு காயத்ரியின் கழுத்தில் தாலி கட்டினார் கவிவர்மன்.

அந்தத் தருணத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஈஸ்வரமூர்த்தி வழமை போல ஆனந்தரூபியைத் தூண்டி விடவே, வேற்றுப் பெண்ணைத் திருமணம் செய்தால் சொத்து முழுவதும் எங்களுக்குத் தான் உங்களுக்கில்லை என ஆனந்தரூபி தன் அண்ணன் கவிவர்மனிடம் சொல்லவே, எனக்கு எதுவுமே வேண்டாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று விட்டுத் தனது காயத்ரியுடன் ஊரை விட்டே வந்து விட்டார் கவிவர்மன்.

ஆதித்யவர்மனும் கொலை செய்யப் பட்டு, கவிவர்மனும் வீட்டையும் ஊரையும் விட்டுச் சென்ற பின்னர் நான்கு வருடங்கள் மட்டும் ஈஸ்வரமூர்த்தி பெட்டிப் பாம்பாக அடங்கி ஒடுங்கி இருந்தார்.

அவர் சொத்துக்காகத் திட்டமிட்டே ஆனந்தரூபியை மணம் புரிந்தார் என்பது ஆனந்தரூபிக்கே தெரியாது. அதுமட்டுமில்லை சொத்து முழுவதும் தனது கைக்குக் கிடைத்த மறுகணமே ஆனந்தரூபியைக் கொன்று விட வேண்டும் என்றும் ஈஸ்வரமூர்த்தி திட்டம் போட்டு வைத்திருந்தார்.
இது எதுவும் தெரியாத நந்தாவதி கணவனது சொல் கேட்டு முதலில் தனது பெரியப்பா ஆதித்யவர்மனுக்கு விஷம் வைத்து அவரைக் கொன்றாள்.

அதன் பின்னர் கவிவர்மனை அவளால் கொல்ல முடியவில்லை. அந்த ஐந்து வருடங்களில் ஈஸ்வரமூர்த்தி மெல்ல மெல்லத் தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினார்.

வாரிசு இல்லாத சொத்துக்களை என் பெயரில் எழுதிக் கொடு என அவர் ஆனந்தரூபியைக் கொடுமைப் படுத்தத் தொடங்கவே, அவர் தன்னை மணந்ததே இந்தச் சொத்துக்காகத் தான் என்பதை அப்போது தான் ஆனந்தரூபி உணர்ந்தாள்.

தான் செய்த பாவங்களை எல்லாம் நினைத்துக் கதறியவளோ தனது இழி செயல்களுக்கு இந்தத் தண்டனை தேவை தான் என நினைத்துக் கொண்டு, ஆறு வயது நிரம்பிய தன் மகளைத் தனது தாயான சிந்தாமணியுடன் தொலைவாக அனுப்பி விட்டுத் தற்கொலை செய்து கொண்டாள்.

அவள் சாவதற்கு முன்பாகத் தனது கணவன் பற்றி எழுதி விட்டு இறந்ததால் ஈஸ்வரமூர்த்தி ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப் பட்டான்.

சிந்தாமணியோ தனது குடும்பம் சிதைந்த கோலத்தை யாரிடமும் சொல்லி அழ முடியாமல் தனது பேரக் குழந்தையுடம் ஊரை விட்டே வந்து விட்டார்

சிந்தாமணி தன் கழுத்தில் போட்டிருந்த சங்கிலியை விற்றுப் பக்கத்து ஊரில் இட்லிக்கடை போட்டு சீவிக்கத் தொடங்கினார்.

ஆரம்ப காலத்தில் அம்மா எங்கே, எங்கே என அழுது ஆர்ப்பாட்டம் செய்த சிந்தாமணியின் பேர்த்தி மறந்தும் தந்தை பற்றிக் கேட்கவில்லை. அந்தச் சின்ன வயதிலேயே அவளுக்குத் தந்தையைப் பிடிக்கவில்லை. ஈஸ்வரமூர்த்தி தான் அவளது தந்தை போல என்ன ஒரு மனிதனாகக் கூட நடந்து கொள்ளவில்லையே.

காலம் யாருக்காகவும் காத்திருக்காமல் விரைந்து ஓடியதில் ஒன்பது வருடங்கள் காணாமல் போயிருந்தன. இப்போது சிந்தாமணியோ முதுமையின் பிடியில் மாட்டிக் கொண்டு மரணத்தின் விளிம்பில் நின்றிருந்தார்.

அந்தத் தருவாயில் தனது பேர்த்தியை அழைத்து
"அனுக்குட்டி... அம்மம்மா உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். உன் அம்மா ஒரு துரோகி... அவளுக்குச் சோறு ஊட்டி வளர்த்த பெரியப்பனையே சொத்துக்காக விஷம் வைத்துக் கொன்ற பாதகி அவள்... அவள் செய்த துரோகத்துக்கு தக்க தண்டனை அவளுக்கு கிடைத்து விட்டது. உன் அப்பாவோ உன் அம்மாவை விடவும் கொடூரமானவன். அவனுக்கு உன்னைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. தேவையென்றால் சொத்துக்காக உன்னைக் கூடக் கொலை செய்யத் துணிவான். இனிமேல் உனக்கு ஒரு அம்மாவும் அப்பாவும் இருந்தார்கள் என்பதையே நீ மறந்து விட வேண்டும். இந்த அம்மம்மாவுக்கும் சாவு பக்கத்தில் வந்து விட்டது... உன்னைப் பொறுப்பான இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தவித்துக் கொண்டிருந்தேன்... இதோ இந்தப் படத்தில் இருப்பவன் தான் உன்னுடைய மாமன் கவிவர்மன்... ரொம்பவும் தங்கமானவன்... அவனிடம் நான் கொடுக்கும் கடதாசியை மட்டும் கொடுத்து விடு... அப்புறம் பக்கத்து வீட்டுத் தாத்தா உன்னை ஒரு ஆசிரமத்தில் சேர்த்து விடுவார்... இனிமேல் உனக்கு நீ தான் துணை... உன்னை உன் மாமன் ஏற்றுக் கொண்டால் அது உன் அதிஷ்டம்..."
என்று சொல்லி விட்டுக் கண்களை மூடிக் கொண்டார்.

கிட்டத் தட்ட பதினைந்து வயது நிரம்பிய பெண்ணுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளது அயலவர்களே சிந்தாமணியின் இறுதிச் சடங்கைக் குறைவின்றிச் செய்தார்கள்.

அதன் பின்னர் பக்கத்து வீட்டுப் பெரியவர் இரண்டு ஊரைக் கடந்து இருக்கும் ஊரில் உள்ள சரஸ்வதி இல்லத்தில் அனுவைச் சேர்த்து விட்டார்.

கிட்டத்தட்ட தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்த அனுவுக்குள்ளும் வாழ வேண்டும் என்ற ஆசை வந்ததே காயத்ரிதேவியையும், கஸ்தூரிதேவியையும் சந்தித்த பின்னர் தான்... மூவரும் உடனேயே இணைபிரியாத தோழிகள் ஆகி விட்டனர்.

ஒரு நாள் ஆசிரமத்துக்கு வருகை தந்திருந்த கவிவர்மனைப் பார்த்த அனுபல்லவிக்குத் தனது அம்மம்மா தந்த படமும் கடதாசியும் நினைவு வரவே, தனது பெட்டிக்குள் பத்திரப் படுத்தி வைத்திருந்த கடதாசியை எடுத்துக் கொண்டு அவருக்குப் பின்னால் ஓடினாள்.

தனக்குப் பின்னால் ஓடி வந்த சின்னப் பெண்ணைப் பார்த்ததும் அப்படியே நின்ற கவிவர்மன் அவளைப் பார்த்து
"என்னம்மா... என்ன விசயம்... எதற்காக இப்படித் தலைதெறிக்க ஓடி வருகிறாய்... என்னிடம் ஏதும் சொல்ல வேண்டுமா..."
எனக் கனிவுடன் கேட்டார்.

அவரது கனிவான குரலைக் கேட்டதும் அனுவுக்குத் தொண்டை அடைத்தது. எதுவும் பேசாமல் கையில் வைத்திருந்த கடதாசியைக் கவிவர்மனிடம் நீட்டினாள் அவள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️அனு குடுத்த கடுத்தாசியை கவிவர்மன் படிச்சாரா இல்லையா 🤔🤔🤔🤔
நன்றி சகி.. படிக்காமல் விட்ருவமா நாங்கள்
 
Top