• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
சரஸ்வதி ஆசிரமத்துக்கு நன்கொடைகள் நிறைய வந்த வண்ணம் இருப்பதால், அந்தப் பணத்தில் என்னென்ன விதமான வசதி வாய்ப்புக்களைச் செய்யலாம் எனக் கலந்துரையாட வந்திருந்த கவிவர்மன், தன் முன்னால் நின்றிருந்த சின்னப் பெண் பதிலேதும் சொல்லாமல் நீட்டிய கடதாசியை சிறு குழப்பத்துடன் வாங்கி மெல்லப் பிரித்தார்.

லேசாகக் கனிந்து புன்முறுவல் பூத்திருந்த அவரது முகம் கடதாசியில் இருந்த விசயங்களைப் படிக்கப் படிக்கக் கோபத்தையும் வெறுப்பையும் தத்தெடுத்துக் கொண்டது.

அவரைப் பொறுத்தவரையில் அவரால் ஆனந்தரூபியையோ ஈஸ்வரமூர்த்தியையோ துளியளவு கூட மன்னிக்க முடியவில்லை.

தங்கை என்றும் தங்கையின் கணவன் என்றும் தான் காட்டிய பாசத்துக்குக் கொஞ்சம் கூடத் தகுதியற்ற ஜென்மங்கள் அவர்களிருவரும், என அவர் முடிவுக்கு வந்திருந்ததால் தான் ஆனந்தரூபி இறந்த செய்தியைக் கேட்டும் கூட, அவளது இறுதிச் சடங்குக்குக் கூட அவர் வர நினைக்கவில்லை.

சொத்துக்காகச் சொந்தப் பெரியப்பனையே விஷம் வைத்துக் கொன்ற, கேடுகெட்ட எண்ணங் கொண்டவளின் வயிற்றில் பிறந்தவள் தானா தன் முன்னால் நிற்கும் இந்தச் சின்னப்பெண் என்று நினைத்தவருக்கு அனுபல்லவி மீது அவரை அறியாமலேயே வெறுப்பு வந்தது.

இவளும் தாயைப் போலத் தானே இருப்பாள் என நினைத்தவர் அனுவை வெறுப்பான பார்வை ஒன்று பார்த்து விட்டு அவளிடம் எதுவும் பேசாமல் தனது வாகனத்தில் ஏறிச் சென்று விட்டார்.

பதினைந்து வயது மட்டுமே நிரம்பிய பாவைக்கு ஒரு நொடி அவரது பார்வையின் அர்த்தம் புரியவில்லை. பின்னர் தானாகவே அந்த மாமாவுக்கு ஏதோ அவசர வேலை போல அது தான் அவசரமாகப் போய் விட்டார் என நினைத்துக் கொண்டு ஆசிரமத்துள் போய் விட்டாள்.

தன் வீட்டை அடைந்த கவிவர்மனுக்கோ இருப்பே கொள்ளவில்லை. அந்த ஈஸ்வரமூர்த்தி தன் பெண்ணை இங்கே ஆசிரமத்துக்கு எதற்காக அனுப்ப வேண்டும். நாங்கள் ஒதுங்கி வந்தது போதாதாமா மீண்டும் தேடி வந்து எங்கள் நிம்மதியைக் குலைக்கப் பார்க்கிறானா எனப் பெருங் கோபங் கொண்டு அங்குமிங்கும் நடக்கத் தொடங்கினார்.

தன் கணவன் வெளியில் எங்கு சென்றாலும் வீட்டினுள் வந்ததுமே முதலில் தன்னைத் தேடிச் சமையலறைக்குத் தானே வருவார். இன்று என்ன வித்தியாசமாக முகமெல்லாம் சிவந்து போய் வரவேற்பறையிலேயே அங்குமிங்கும் நடக்கிறார் என யோசித்த காயத்ரி பதட்டத்துடன் கணவனை நோக்கி வந்தார்.

காயத்ரி தன்னருகே வந்து தன்னை அழைத்ததைக் கூட உணராமல் இருந்த, கவிவர்மனது தோளைத் தொட்டுத் தன் பக்கம் திருப்பினார் காயத்ரி.

லேசாக கண்கள் கலங்கிச் சிவந்து இருப்பதைப் பார்த்ததும் மேலும் பதறிப் போய்,
"என்ன மாமா... என்ன நடந்தது... எங்கே போனீர்கள்?"
எனக் கேட்ட தன் மனைவியிடம் எதையும் மறைக்காமல் படபடவெனக் கொட்டினார் கவிவர்மன்.

"நான் இல்லத்துக்குப் போனேன்மா... அங்கே ஒரு சின்னப் பெண் ஓடி வந்து என்னிடம் ஒரு கடதாசி கொடுத்தாள்..."

"ஓ... அந்தப் பிள்ளையின் கடந்தகால வாழ்க்கையப் படித்ததும் கவலைப்பட்டீர்களா மாமா... ஆனால்..."

"நான் சொல்ல வருவதை முழுமையாகக் கேள் காயத்ரி... பிறகு உனக்கே வெறுப்பு தான் வரும்..."

"சரி சரி சொல்லுங்கள்..."

"அந்தச் சின்னப் பெண் கொடுத்த கடதாசியில்... அவள் எனக்கு மருமகள் என்று குறிப்பிட்டிருந்தது... அதாவது ஆனந்தரூபியின் மகள் அனு தான் அந்தப் பிள்ளை..."

"அடடா உண்மையாகவா மாமா... நாம் இப்போதே அவளைப் போய்ப் பார்த்து வீட்டுக்கு அழைத்து வரலாமா மாமா..."

"ஏன் அவள் என் பிள்ளைகளுக்கும் விஷம் வைத்துக் கொல்லவா... அவளுடைய அப்பன் புத்தி தானே அவளுக்கும் இருக்கும்... அம்மாக்காரி பற்றி சொல்லவே தேவையில்லை சொத்துக்காக சொந்தப் பெரியப்பனையே விஷம் வைத்துக் கொன்ற பாவி..."

"மாமா... தாய் தகப்பன் செய்த பாவத்துக்குப் பாவம் சின்னப் பெண் என்ன செய்வாள்... அவளைத் திட்டாதீர்கள்..."

"திட்டவில்லை காயத்ரி... நான் உண்மையைத் தான் சொன்னேன்..."

"என்ன பெரிய உண்மையைக் கண்டு விட்டீர்கள்... உங்கள் தங்கை தான் பாவம் செய்து விட்டாள்... அதற்காக உங்கள் மருமகளைத் தனியே அநாதையாகத் தவிக்க விடப் போகிறீர்களா நீங்கள்... அந்தப் பிள்ளையைப் பார்த்தவுடனேயே அவளை வீட்டுக்கு அழைத்து வந்திருப்பீர்கள் என்று நினைத்தேன் ஆனால் இப்படி வந்து அவள் மீதே வெறுப்பைக் கொட்டுவீர்கள் என்று எனக்குத் தெரியாது மாமா..."

"நீ என்ன விளக்கம் சொன்னாலும் என் மனம் மாறாது காயத்ரி..."
என்று சொல்லி விட்டுத் தன் வேலைகளைப் பார்ப்பதற்குப் போய் விட்டார் கவிவர்மன்.

கணவன் சென்ற திக்கையே பார்த்தபடி நின்றிருந்தார் காயத்ரி. அவருக்கு இது நாள்வரை பார்த்தே அறியாத அனு மீது ஒரு தனிப் பாசமே உருவானது. அவள் ஏன் ஒரு சேற்றில் முளைத்த செந்தாமரையாக இருக்கக் கூடாது. என நினைத்துக் கொண்டவர் தன் கணவனுக்குத் தெரியாமல் தன் மருமகளைப் பார்ப்பதற்கு முடிவு செய்தார்.

சரஸ்வதி இல்லத்துக்கு வந்த காயத்ரிக்கு இல்லத் தலைவர் வெண்பா வெகுவான மரியாதை செய்தார். அதையெல்லாம் சிறு புன்னகையுடன் மறுத்த காயத்ரி மெல்ல அனு என்கிற பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்.

காயத்ரியின் விருப்பம் பத்து நிமிடங்களில் நிறைவேற்றி வைக்கப் பட்டது. கண்களில் ஒரு வித அமைதியோடு கலகலவெனச் சிரித்தபடி தன் முன்னே வந்து நின்ற தன் கணவனது மருமகளைப் பார்த்த நொடியே காயத்ரிக்குப் பிடித்துப் போய் விட்டது.

ஒரு இரண்டு வருடங்கள் அடிக்கடி வந்து அனுவைப் பார்த்துப் போன காயத்ரி மறந்தும் தான் யாரென்பதை அவளுக்குத் தெரிவிக்கவில்லை.

அதன் பின்னர் வந்த கால கட்டத்தில் அனுவுக்குப் பதினெட்டு வயது நடந்து கொண்டிருந்த போது... ஆசிரமத்தில் அவளைத் தனியே அழைத்தார் காயத்ரி. அனுவும் காயத்ரியை யாரோ இல்லத்துக்குத் தெரிந்த பெண்மணி என்று தான் அன்பாகப் பழகியிருந்தாள்.

காயத்ரி தான் யாரென்ற உண்மையைச் சொன்னதும் கோபம் தலைக்கேற எழுந்து போக எத்தனித்தவளது கையைப் பற்றிக் கொண்டு அவளிடம் பேசினார் காயத்ரி.

"இரு அனும்மா... இப்போது உனக்கு ஏன் இத்தனை கோபம்..."

"பின்னே கோபம் வராமல் எப்படியம்மா... என்னைப் பார்த்தால் கொலைகாரி போலவா தெரிகிறது... உங்கள் கணவர் என்னை அன்றொரு நாள் பார்த்த பார்வையின் அர்த்தம் எனக்கு அப்போது புரியவில்லை... இப்போது புரிகிறது..."

"உன் உணர்வு எனக்குப் புரிகிறது அனு..."

"உங்களுக்குப் புரிந்து என்ன ஆகப் போகிறதும்மா... புரிய வேண்டியவருக்கு என்னைப் பற்றிப் புரியவில்லையே... போகட்டும் சின்ன வயதிலேயே அநாதை என்று முத்திரை குத்தப் பட்டவள் தானே நான்... அப்படியே இருந்து விட்டுப் போகிறேன்... நீங்களும் வீணாக உங்கள் கணவருக்குத் தெரியாமல் என்னைப் பார்க்க வராதீர்கள்..."

"நிச்சயமாகப் பார்க்க வருவேன் அனும்மா... ஆனால் உன் மாமனுக்குத் தெரியாமல் இல்லை... அவரையும் அழைத்துக் கொண்டு வந்து அவர் வாயாலேயே மருமகளே என்று உன்னை அழைக்க வைப்பேன்... இது நான் உன் மீது வைத்திருக்கும் உண்மை அன்பின் மீது சத்தியம்..."
என்ற காயத்ரி அவளை ஒரு பார்வை பார்த்து விட்டுப் போய் விட்டார்.

காயத்ரி சென்ற திக்கையே பார்த்திருந்த அனுவோ
"உங்கள் கண்களில் எனக்கான பாசம் அக்கறை நிறையவே இருக்கிறது அத்தை... அதை நான் புரிந்து கொண்டேன்... ஆனால் என் மாமா என்னை ஏற்றுக் கொள்வார் என்று பகற் கனவு காணாதீர்கள்... நான் என்றுமே தனிமரம் தான் எனக்கு உறவுகள் என்று என் காயத்ரியும், கஸ்தூரியும் மட்டும் தான்..."
எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

நேராகத் தன் வீட்டுக்கு வந்த காயத்ரி தோட்டத்தில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த தன் கணவனுக்கு அருகில் போய் அமர்ந்து கொண்டார்.

வெளியில் சென்று வந்த தன் மனைவி ரொம்ப நேரமாக எதையோ ஆழ்ந்து சிந்திப்பதைப் பார்த்த கவிவர்மன் மனைவி பக்கம் திரும்பி அவளது யோசனைக்குக் காரணம் என்னவெனக் கேட்டார்.

"என்ன காயத்ரி... அப்படி என்ன தீவிரமான யோசனை... என்னிடம் சொல்லக் கூடாதா..."

"உங்களிடம் சொல்லாமல் நான் வேறு யாரிடம் சொல்லப் போகிறேன் மாமா..."

"அது எனக்கும் தெரியும்... வந்து ரொம்ப நேரமாகிறதே ஆனால் நீ இன்னும் கூட யோசித்துக் கொண்டே இருக்கிறாயே என்று தான் கேட்டேன்மா..."

"கொஞ்சம் தீவிரமான யோசனை தான் மாமா... அதை எப்படி உங்களிடம் சொல்வது என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்..."

"என்ன இது... வாயால் தானே சொல்வது வேறு எப்படி..."

"இப்போது இப்படி நகைச்சுவையாகப் பேசிச் சிரிக்கிறீர்கள் மாமா... பிறகு நான் சொன்ன விசயத்தைக் கேட்டதும் கோபமாக என்னைத் திட்டுவீர்களோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது..."

"என்னம்மா இது... என்மீது இப்படி அபாண்டமாகப் பழி போடுகிறாயே... நான் என்றாவது எதற்காவது உன்னைத் திட்டி இருக்கிறேனா..."

"திட்டியதில்லை தான் மாமா... இருந்தாலும் இந்த விசயத்தில் எப்படி நடந்து கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியாது தானே... அதனால் என்னை இப்போது திட்டமாட்டீர்கள் என்றும் என் மீது கோபப் பட மாட்டீர்கள் என்றும் சத்தியம் செய்து கொடுங்கள் மாமா..."

"சரி சரி... உன் திருப்திக்காகச் செய்து கொடுக்கிறேன்... சத்தியமாக உன்னைத் திட்டவோ உன் மீது கோபம் கொள்ளவோ மாட்டேன் போதுமா..."

"ம்ம்ம்... இப்போது நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் மாமா..."

"ம்ம்ம்..."

"மாமா... உங்கள் மருமகள் அனுவை உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை..."

"இதென்ன கேள்விம்மா... அது தான் நான் ஏற்கனவே சொன்னேனே... அவளுக்கும் அவள் ஆத்தாள் அப்பன் புத்திதான் இருக்கும் என்று..."

"நீங்கள் சொல்லும் விளக்கம் ரொம்பத் தப்பு மாமா... அப்படிப் பார்க்கப் போனால் நம் ஆதியையும் நீங்கள் வெறுத்தல்லவா இருக்க வேண்டும்..."

"என்ன உளறுகிறாய்..."

"நான் உளறவில்லை மாமா... நீங்களே கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள்... ஆதியின் அப்பா அதாவது என்னுடைய முதல் கணவன் ரொம்பவும் கெட்டவர் தானே... நீங்கள் ஆதிக்கும் அவன் அப்பன் புத்தி இருக்கும் என்று அவனை ஏன் மாமா வெறுக்கவில்லை..."

"வாயை மூடு காயத்ரி... ஆதி என் மகன் அவனுக்கு நான் தான் அப்பன்... அதே போல நீ எனக்கு மட்டும் தான் மனைவி... இந்த மாதிரி எல்லாம் பேசி என்னைக் காயப் படுத்தாதே..."

"நான் உங்களைக் காயப் படுத்த வேண்டும் என்பதற்காக இதெல்லாம் சொல்லவில்லை மாமா... உங்களைப் போல பெருந்தன்மையான ஒரு பெரிய மனிதன் அந்தச் சின்னப் பெண்ணின் வாழ்க்கையில் வரவில்லை என்று சொல்கிறேன்... உங்களுக்கும் அனுவைப் பிடித்துப் போய் விட்டால் அவளது அப்பனது துரோகம் உங்கள் கண்ணுக்குத் தெரியாது என்று சொல்கிறேன்..."

".................."

"ஏன் மாமா... அமைதியாகி விட்டீர்கள்... பெற்றவர்கள் செய்த பாவத்துக்கு அந்தப் பிஞ்சு என்ன செய்யும்... அவள் சேற்றிலே முளைத்த செந்தாமரை மாமா... அதை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை... என் கவிக்கு யாரையும் வெறுக்கத் தெரியாது என்று ரொம்பக் கர்வத்துடன் இருந்தேன் தெரியுமா..."
என்ற தன் மனைவியை ஒரு முறை வெறித்துப் பார்த்த கவிவர்மன் வேகமாக எழுந்து உள்ளே போய் விட்டார்.

வேகமாகப் போகும் தன் கணவனைப் பார்த்த காயத்ரி ஒரு பெருமூச்சு விட்டபடி சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரமாக அப்படியே கண்கள் மூடி இருந்தவர் வீட்டினுள் செல்ல நினைத்த போது அவரை நோக்கி வேகமாக வந்தார் கவிவர்மன்.

கணவனையே பார்த்திருந்த காயத்ரியின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு அவரது கரங்களை இறுகப் பற்றி,
"என்னை மன்னித்துவிடு காயத்ரி... நீ சொன்னதை எல்லாம் யோசித்துப் பார்த்தேன். பாவம் அந்தப் பிள்ளை அவளை நான் ஏன் வெறுக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் தாயை இழந்து தவிக்கும் என் மருமகளுக்கு ஒரு மாமனாக நான் தானே துணையாக இருக்க வேண்டும். இப்போதே புறப்படு அவளைப் பார்த்துக் கையோடு அழைத்து வருவோம்... நான் அவளிடம் மனமார்ந்த மன்னிப்புக் கேட்க வேண்டும்..."
என்று சொன்னார்.

தன் கணவன் சொன்னதைக் கேட்டதும் கண்கள் கலங்க அவரை இறுக அணைத்துக் கொண்டார் காயத்ரி.

"எனக்குத் தெரியும் அத்தான் உங்களைப் பற்றி... எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது."

"சரி சரி... பேசியது போதும் புறப்படு... என் மருமகளை அழைத்து வர வேண்டும்..."

"இதோ புறப்பட்டு விட்டேன் அத்தான்..."
என்றபடி சந்தோஷமே உருவாகக் கணவனுடன் சரஸ்வதி இல்லம் நோக்கிப் புறப் பட்டார் காயத்ரி.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Top