• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும், பச்சைப் போர்வை போர்த்திக் கொண்டு, கண்ணுக்கு விருந்து கொடுத்துக் கொண்டிருந்தது மலைத்தொடர். மலையின் உச்சியிலிருந்து வேகமாக வீசிய காற்று, அங்கே பறித்துப் போடப்பட்டுக் கொண்டிருந்த தேயிலைக் கொழுந்தின் வாசத்தையும் சுமந்து கொண்டு, லேசான பனிக் குளிரையும் தாங்கிக் கொண்டு அப்பால் கடந்து சென்று கொண்டிருந்தது.

அந்தக் குளிர் காற்றின் இதம் தேகம் வருடிய போதும் கூட, ஒரு வித இறுக்கத்தில் கவிவர்மனுக்கு உடல் வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது.

பல வருடங்கள் கடந்து விட்டிருந்த போதும் கூட, ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொள்கிற அளவுக்கு, அவர் செய்த துரோகம் பசுமரத்தாணியாகக் கவிவர்மனது மனதில் பதிந்து விட்டிருந்தது.

"நச்சுப் பாம்பென்று தெரியாமல் பால் வார்த்து விட்டேனே வர்மா... அது என்னைக் கொத்தி விட்டது. நீயாவது பார்த்துப் பத்திரமாக இருடா..."
எனத் தன் தந்தை இறுதியாகச் சொல்லி விட்டு இறந்து போனது. இன்றும் அவரது காதுகளில் எதிரொலித்தது.

ஒரு காலத்தில் இந்தத் துரோகியை, என் தங்கையின் கணவன் என்ற ரீதியில் மாமா என்று மனநிறைவோடு அழைத்து, முழுதாக நம்பி ஏமாந்து போனதன் காயத்தின் வடு இப்போதும் அவரது மனதில் இருக்கத் தான் செய்தது.

ஈஸ்வரமூர்த்தியோ ஒரு விதமான திமிர்ப் பார்வையோடு கவிவர்மனுக்கு அருகே வந்தார்.

"என்ன மச்சான் எப்புடிச் சுகம்... மாமாவை நினைவு இருக்கிறதா? உங்களை எங்கே எல்லாம் தேடியலைந்தேன் தெரியுமா? இன்று தான் குடும்பமாகத் தரிசனம் கொடுத்து இருக்கிறீர்கள்..."

"............."

"அனுபவிக்க வேண்டிய சொத்துக்களை நீங்கள் வேண்டாம் என்று உதறி விட்டு, இப்படித் தொலை தூரமாக மறைந்து வந்து விட்டாலும், உங்களைச் சொத்துக்கள் வேண்டாம் என்று விடுவதாகத் தெரியவில்லை."

"............"

"இந்தக் கடவுளுக்கு என்னவொரு ஓர வஞ்சனை மாமா... அனுபவிக்கும் ஆசை இருப்பவனுக்குச் சொத்துக்களைச் சொந்தமாக்காமல், உங்களைப் போன்ற ஆசை இல்லாதவர்களுக்குச் சொந்தமாக்கி விட்டானே அது மட்டும் தான் எனக்கு நீண்ட காலமாகப் பெரிய குறையாக இருக்கிறது."

"............."

"என்ன மாமா... நான் பாட்டிற்குத் தனியே பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் பாட்டிற்கு என்னை அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே... என்னை இன்னும் நினைவுக்கு வரவில்லையா?"

"நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு நீ நல்ல காரியம் ஒன்றையும் செய்யவில்லை. அதே போல மறந்து போகும் அளவிற்கு நீ செய்த துரோகங்கள் சின்னதாகவும் இருக்கவில்லை."

"பரவாயில்லையே மாமாவுக்குப் பேசக் கூட வருகிறதே... நான் கூட என்னைப் பார்த்ததும் பாசத்தில் வாயடைத்துப் போய் நின்று விட்டீர்களோ என்றல்லவா நினைத்தேன்."

"உன்னோடு பேசுவது என்ன உன்னைப் பார்ப்பதே பாவம் என்று நினைக்கிறவன் நான்... தேவையற்றுப் பேசாமல் வழியை விடு."

"என்ன மாமா... இப்படி விரட்டுகிறீர்களே... உங்கள் மேல் பாசம் கொண்ட பாசக்காரன் நான்..."

"யார் நீயா? நீயொரு வேஷதாரி என்பது சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரிந்து விடும்."

"ஆனால் பாருங்கள் மாமா... உங்களுக்கு நான் வேஷதாரி என்பது தெரியவில்லையே... ஐயோ பாவம்..."
என எள்ளலாகப் பேசிக் கொண்டிருக்கவே, அங்கே வேகமாக காவல்துறை வாகனம் வந்து நின்றது.

அதனை ஈஸ்வரமூர்த்தி சற்றும் எதிர்பார்க்கவில்லை. மகேந்திரவர்மன் சற்று முன்னே வந்து, அவரைப் பற்றிய உண்மையைச் சொல்ல, அவர் சுதாரிப்பதற்கு முன்பாக, காவல்துறை அதிகாரிகளினால் கைது செய்யப் பட்டு வண்டியில் ஏற்றப் பட்டார்.
அதுவரை ஈஸ்வரமூர்த்தியின் முகத்தில் இருந்த ஏளனம் கவிவர்மனது முகத்திற்கு இடம் பெயர்ந்தது.

தன் தந்தையோடு, ஈஸ்வரமூர்த்தி பேசிக் கொண்டு இருக்கும் போதே, அவரது குரலில் அவர் யாரென்பது மகேந்திரனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்கவே, அவன் நொடியும் தாமதிக்காமல் யாரும் கவனியாத வண்ணம், காவல்துறைக்கு அழைப்புக் கொடுத்து விட்டிருந்தான்.

கைது செய்யப் பட்டு வண்டியில் ஏற்றப்பட்ட ஈஸ்வரமூர்த்தி தந்தையையும் மகனையும் என்றுமில்லாத வகையில் குரோத விழிகளோடு பார்த்தார்.

ஈஸ்வரமூர்த்தியோடு, அவரது அடியாட்களையும் ஏற்றிக் கொண்டு, காவல்துறையினர் தங்கள் வாகனத்தில் சென்று விட, காயத்ரிக்கும் பல்லவிக்கும் அப்போது தான் மூச்சே வந்தது போல இருந்தது.

பல்லவியையும் காயத்ரியையும் வீட்டில் விட்டு விட்டு, கவிவர்மனும் மகேந்திரவர்மனும் காவல்நிலையத்திற்குப் போய், ஈஸ்வரமூர்த்தி பற்றிய எல்லா விடயங்களையும் எழுதிக் கொடுத்து விட்டு, அவர் மீது புகாரும் கொடுத்து விட்டே வந்தார்கள்.

காயத்ரியோ புதிதாய் மணம் முடித்து வரும் தன் மகனும் மருமகளும் சேர்ந்து தான் வீட்டினுள் வர வேண்டும் என்பதற்காக, அனுவோடு வெளியே பழத்தோட்டத்தில் இருக்கும் அலுவலறையில் தான் அமர்ந்திருந்து, கணவனதும் மகனதும் வருகைக்காகக் காத்திருந்தார்.

காயத்ரியை ரொம்ப நேரம் சோதிக்காமல், போன விடயத்தை முடித்துக் கொண்டு கவிவர்மனும் மகனும் வந்து சேர்ந்து விடவே, மகனையும் மருமகளையும் ஆரத்தி எடுத்து, ஒன்றாக உள்ளே அழைத்து வந்து, அங்கிருக்கும் சுவாமியறையில் அனுவை விளக்கேற்ற வைத்தார் காயத்ரி.

அதன் பிறகு சின்னவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு, பெரியவர்கள் போய் விட, மகேந்தரும் பல்லவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நீண்ட நேரமாக இருந்தார்கள். வழமை போல கடகடவெனப் பேசும் அனு அமைதியாக இருப்பதைப் பார்த்ததும் அவன் தான் முதலில் வாய் திறந்தான்.

"அனூ... எனக்கு எல்லாம் கனவு போல இருக்கிறது. உனக்கு என்ன தோன்றுகிறது."

"எனக்குப் பயமாக இருக்கிறது மகேந்தர்"

"ஏன் என்னாயிற்று என்ன பயம் உனக்கு? அது தான் அந்தாளைப் பிடித்துக் கொடுத்து விட்டோமே..."

"அதனால் தான் பயமாக இருக்கிறது. அவரது பார்வையே சரியில்லை. அவர் உள்ளே போனாலும் வேறு யாரையும் வைத்து, உங்களையும் மாமாவையும் ஏதேனும் செய்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது."

"நீ வீணாகப் பயப்படுகிறாய் அனு... நீ எவ்வளவு தைரியமான பெண்! உண்மையில் நீ தான் இப்போது எனக்கு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும்."

"எனக்கு மனதெல்லாம் ஒரு மாதிரி இருக்கிறது."

"என்ன அனு நீ... நமக்கு இன்று திருமணம் ஆகி இருக்கிறது. அதை நாம் சந்தோஷமாகக் கொண்டாடாமல், இப்படி நீ பயம் அனுஷ்டிக்கலாமா சொல்..."

"ம்ம்ம்..."

"என்ன ம்ம்ம்... இப்போதெல்லாம் நான் உன்னை மாதிரிப் பேசுகிறேன். நீ என்னை மாதிரிப் பேசுகிறாய் தெரியுமா?"

"அப்படியா?"

"என்ன நொப்படியா?"
என்ற மகேந்திரன் தனக்குத் தெரிந்த நகைச்சுவைகளை எல்லாம் கஷ்டப் பட்டுக் கடை பரப்பி, அனுவைத் திசை திருப்பப் பகீரதப் பிரயத்தனம் செய்யத் தொடங்கினான்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

காலைச் சூரியனது கதிர்கள் பட்டுத் தெறித்ததில், அனு உடுத்தி இருந்த சிவப்பு நிறப் பட்டின் மஞ்சள்ச் சரிகை தங்கம் போல ஜொலித்துக் கொண்டிருக்க, உன் நிறத்தை விடவும் என் நிறம் தான் அழகு என்பது போல, அவளது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சளத்தாலியும் சூரிய ஒளியில் மெருகேறிப் போயிருந்தது.

இன்று அனுவுக்கும் மகேந்தருக்கும் திருமணமாகி இரண்டு தினங்கள் ஆகியிருந்தன. அன்றைய நாள் குலதெய்வக் கோவிலில் ஒரு பொங்கல் வைத்திருந்தார் காயத்ரி.
அதற்குத் தான் இப்போது புதுமணத் தம்பதிகள் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

வாகனம் குலதெய்வக் கோவிலை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

"அம்மா எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எங்கள் வீட்டுக்குப் போய் விடலாம்..."

"ஆமாம் அத்தை போய் விடலாம்."

"ம்ம்ம்... இன்றைய பொங்கலை முடித்துக் கொண்டு அப்படியே புறப்படலாம் அனும்மா... அங்கே போய் என் பிள்ளைகளைப் பார்க்க வேண்டும். அந்தக் கிராதகன் செய்த வேலையில் நாங்கள் இங்கேயும் அவர்கள் அங்கேயுமாக எத்தனை துன்பம் குழப்பம் தெரியுமா?"

"சரி சரி கலங்காதே காயு... அது தான் போகப் போகிறோமே..."
என மனைவிக்கு ஆறுதல் சொன்னார் கவிவர்மன்.

சீரான வேகத்தோடு போய்க் கொண்டிருந்த வாகனத்தை, கோவிலை நெருங்குவதற்கு சிறிது தூரம் இருக்கும் திருப்பத்தில், ஒரு வயதானவர் இடைமறிக்க, சட்டென்று வாகனத்தை நிறுத்திய கவிவர்மன்,
"என்ன ஐயா... என்ன வேண்டும்."
என்று கேட்க, தனது கரகரத்த குரலில்,
"எனக்கு கால்வலி தம்பி, கோவிலை அடுத்து இருக்கும் திருப்பத்தில் என்னை இறக்கி விட முடியுமா? உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்."
எனக் கேட்டார் அந்த வயதானவர்.

அவரது தோற்றமும் அனுதாபத்தைத் தூண்டவே சரியெனச் சம்மதித்த கவிவர்மன், முதியவரை முன் இருக்கையில் ஏற்றிக் கொள்ள, ஏற்கனவே முன்னால் அமர்ந்திருந்த மகேந்திரவர்மன் தந்தையை ஒட்டி அமர்ந்து கொண்டான்.

"எங்கே ஐயா... போக வேண்டும் என்று சொன்னீர்கள்?
எனக் கவிவர்மன் கேட்க,
"கோவிலைக் கடந்து போக வேண்டும் தம்பி... நீங்கள் போங்கள் நான் சொல்கிறேன்."
எனச் சொன்னபடி வாகனத்தின் ஜன்னலோரமாக சாய்ந்து கொண்டார் முதியவர்.

வாகனம் கவிவர்மனது குலதெய்வக் கோவிலைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. கோவிலில் இருந்து, சற்றுத் தூரமாக வந்ததும், மீண்டும் எங்கே போக வேண்டும் என்று கவிவர்மன் கேட்க, போங்கள் தம்பி சொல்கிறேன் என்றே பதில் சொன்ன முதியவர், நன்றாகச் சாய்ந்து இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
வாகனம் போய்க் கொண்டே இருந்தது. இப்படியே தொடர்ந்து கவிவர்மன் அதே கேள்வியைக் கேட்பதும், முதியவர் அதே பதிலைச் சொல்வதுமாக இருக்கவே கவிவர்மன் ஒரு கட்டத்தில் கடுப்பாகி விட்டார்.

"என்ன ஐயா... விளையாடுகிறீர்களா? ஏதோ கால் இயலாதவர் என்று பாவம் பார்த்து அழைத்து வந்தால், எங்களையே அலைக்கழிக்கிறீர்களே... முடிவாகச் சொல்லுங்கள் எங்கே போக வேண்டும்..."

"கோபிக்காதே தம்பி... அதோ தெரிகிறதே அந்தச் சின்ன வைரவர் சிலை... அங்கே இறக்கி விடு."

"இதை முதலே சொல்வதற்கு என்ன..."
என நொந்தபடி, முதியவர் காட்டிய வைரவர் சிலையருகே கவிவர்மன் வாகனத்தை நிறுத்த, அதில் இருந்து முதியவர் இறங்கவும், சுற்றியிருந்த புதர்களின் மறைவுக்குள் தெரிந்த கறுப்பு நிறத்து வாகனங்களைக் காயத்ரி பார்த்து விட்டார். அவருக்கு உள்ளூர ஏதோ சரியில்லை என்று தோன்றவே,
"மாமா... வேகமாக வாகனத்தை எடுங்கள்... இங்கே ஏதோ சரியில்லை. நிறைய வாகனங்கள் மறைவாக நிற்கிறது."
எனக் கத்தி விட்டார்.

அவரது சத்தத்தில் வாகனத்தை விட்டு இறங்கிய முதியவன் தன் தாடியைப் பிய்த்துக் கொண்டு, சத்தமாகச் சிரிக்க, புதர்களில் நின்ற கறுப்பு வாகனங்கள் வெளியே வந்தது.
அதைப் பார்த்ததும் கவிவர்மன் வேகமாக வாகனத்தை எடுக்க, அந்த வாகனங்கள் அவரது வாகனத்தை விரட்டின.

கவிவர்மனது வாகன ஓட்டத்திற்கு, பின்னால் வந்தவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. விட்டுத் துரத்தினார்கள். இடையில் நிறைய இடைவெளி உருவானது. அதே நேரத்தில் முன்னால் ஓடிக் கொண்டிருந்த கவிவர்மனது வாகனம் திடீரென ஏதோ கோளாறில் நின்று விட, பின்னிருக்கையில் தனக்கு இடது புறமாக இருந்த அனுவிடம்,
"அனும்மா... நீ வேகமாக இறங்கி அந்த பள்ளத்தைக் கடந்து ஓடி விடு, நீ அவர்களது கையில் சிக்கக் கூடாது. போ போய் விடு..."
எனக் காயத்ரி சொல்ல, மகேந்தரும் கவிவர்மனும் கூட அதையே ஆமோதித்தனர்.

அனுவோ பயத்திலும் தயக்கத்திலும்
"உங்களை விட்டு நான் மட்டும் எப்படி அத்தை..."
என்று அழவே தொடங்கி விட, பின்னால் திரும்பிப் பார்த்த காயத்ரி, வாகனங்கள் தங்களை நெருங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தததும், இனி இவளிடம் வாதாட நேரமில்லை என நினைத்தபடி, வாகனத்தின் கதவைத் திறந்து, அனுவைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
 
Top