• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
சூரியனின் ஒளிக் கற்றைகள் ஊடுருவி, நிலம் படாத அளவிற்கு அந்தக் காட்டில் இருக்கும் மரங்கள், ஓங்கி உயர்ந்து மேலே பின்னிப் பிணைந்து படர்ந்து குடை விரித்து நிற்க, கீழே நிலம் தெரியாத அளவிற்கு, செடிகளும் கொடிகளும் புதர்களும் மண்டிக் கிடந்தன.

அந்தப் பாழடைந்த மண்டபத்திற்கு வெளியே நின்றிருந்தவர்களது மனதிலும் கவலை மண்டிக் கிடந்தது.

சூரியனுக்கு வரதன் சொன்னதை நம்பவும் முடியவில்லை, அதே வேளை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. உள்ளே போய்த் தன் கண்களால் பார்த்தால் தவிர அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது.

அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிந்தனையில் இருக்க, ஏஞ்சல் மட்டும் சற்றே தள்ளிப் போய், நெடு நாட்களுக்குப் பிறகு ஒருவரை அலைபேசியில் அழைத்தாள்.

அவளது அலைபேசி எண்ணைப் பார்த்ததுமே, அந்தப் பக்கம் உடனே அழைப்பு ஏற்கப் பட்டது.

"அம்மாடி... அப்பாவிடம் இப்போது தான் பேசத் தோன்றியதா? நீ என்னை மன்னிக்கவே மாட்டாயா?"

"உங்களை நான் மன்னிக்க வேண்டும் என்றால், நீங்கள் எனக்காக ஒரு வேலை செய்து கொடுக்க வேண்டும்."

"சொல்லும்மா என்ன செய்ய வேண்டும். இயேசப்பா மீது ஆணையாகச் செய்து கொடுக்கிறேன்."

"சரி சொல்கிறேன்..."
என்ற ஏஞ்சல், சூரியனது குடும்பத்தினருக்கு நடந்த விஷயத்தையும், அவர்கள் இப்போது இருக்கும் நிலையையும் சொல்லி, ஈஸ்வரமூர்த்தி மற்றும் மகாலிங்கம் பற்றியும் சொன்னாள்.

மகள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஜோசப்,
"அப்பா... இப்போது என்னடா செய்ய வேண்டும். அவர்கள் எல்லோரையும் இன்றே தூக்கட்டுமா? யாருக்கும் சந்தேகம் வராமல் இப்போதே இரண்டு மணி நேரத்துக்குள் வேலையை முடித்துக் கொடுக்கிறேன். அவர்களுக்கு அங்கே காவல்துறையினர் பக்க பலமாக இருக்கிறார்கள் என்பது புரிகிறது. நான் என்னுடைய காவல்துறை நண்பர்களை வைத்து, கச்சிதமாக வேலையை முடிக்கிறேன்..."
என்று சொல்லி அலைபேசியை வைத்து விட்டு, உடனேயே அதிரடியில் இறங்கினார்.

அவரது நண்பர் ஒருவரது சொந்த இடம் காரைநகர் என்பதால், காரை நகர் எங்கே இருக்கிறது என்ற விளக்கம் அவருக்குத் தேவைப் படவில்லை. ஆனால் அந்த மண்டபம் இருக்கும் இடத்தை மாத்திரம் ஏஞ்சல் தெளிவாக அடையாளம் சொல்லி விட்டிருந்தாள்.

தந்தை ஜோசப்பிடம் பேசி விட்டு வந்த ஏஞ்சல்,
"எல்லோரும் ஒரு அரை மணி நேரம் எதுவும் செய்யாமல், எதுவும் குழப்பிக் கொள்ளாமல் இங்கேயே இருக்கிறீர்களா?"
என்று சொல்ல, அவள் அடுத்து ஏதோ திட்டம் போட்டு விட்டுத் தான் வந்திருக்கிறாள் என்பது மற்றவர்களுக்குப் புரிந்தது. அதனால் அவள் சொன்னது போல அடுத்த முப்பது நிமிடங்களும் சாதாரணமாக அந்த இடத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு மட்டுமே இருந்தார்கள்.

ஏஞ்சல் சொன்ன அரை மணி நேரம் முடிந்ததும், காட்டின் உட் பக்கமாக, அந்த மண்டபம் இருந்த பக்கத்தில் இருந்து, ஏதேதோ சத்தங்கள் வரத் தொடங்க, ஏஞ்சலைத் தவிர மற்றவர்களைப் பதட்டம் தொற்றிக் கொண்டது. அவள் மட்டும் சிறு சிரிப்போடு, தன் அலைபேசியில் வரப் போகும் அழைப்புக்காகக் காத்திருந்தாள்.

"கடவுளே... அதென்ன சத்தம் சரணண்ணா... ஒரு வேளை நாங்கள் இங்கே வந்திருப்பது அவர்களுக்குத் தெரிந்து விட்டதோ? தெரிந்ததால் தானே இந்தத் தடியர்களே எங்களை அடிக்கக் கட்டையோடு வந்தார்கள். இப்போது ஒட்டு மொத்தமாக நாங்கள் எங்கே இருக்கிறோம் என்று தேடுகிறார்களோ..."

"அப்படி இருக்காது சுமி... அவர்கள் போதை மாத்திரை கடத்துபவர்கள் தானே, அதனால் எங்கோ மாத்திரைகளை ஏற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்."

"சத்தத்தைப் பார்த்தால், யாரோ நிறைய ஆட்கள் ஓடுப்பட்டு அலைவது போல இருக்கிறதே அனுவக்கா... ஒரு வேளை மண்டபத்துக்குள் வேறு யாரேனும் புகுந்து விட்டார்களோ..."
என்று சொன்ன கஸ்தூரியைப் பார்த்த ஏஞ்சல் மெல்லச் சிரித்தாள்.

அப்படியே உள்ளே இருப்பவர்களை எப்படிப் போய்ப் பார்ப்பது, வரதன் சொன்னது போல உண்மையிலேயே அங்கே சூரியனின் குடும்பம் இருந்தால், அவர்களை எப்படி அங்கே இருந்து மீட்பது என்று அதைப் பற்றியே பேச்சுப் போய்க் கொண்டிருந்தது.

அங்கிருந்து யாரையும் நகர விடாமல், அவர்களைப் பேசிக் கொண்டிருக்கும் படி சொன்ன ஏஞ்சல், அப்போது தான் ஒன்றரை மணி நேரம் அப்படியே ஓடிப் போயிருப்பதைப் பார்த்தாள். அவள் நேரத்தைப் பார்க்கவும், அவளது அலைபேசியில் அவளது தந்தையிடம் இருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

அழைப்பை ஏற்றவளுக்கு, எதிர் முனையில் இருந்து சொல்லப் பட்ட தகவல் பரபரப்பைக் கொடுக்கவே,
"எல்லோரும் என்னோடு வாருங்கள்..."
எனக் கிட்டத்தட்டச் சத்தமாகச் சொல்லிக் கொண்டே ஏஞ்சல் வேகமாகப் புதர் விலக்கி, மண்டபம் நோக்கி விரைந்தாள்.

அவளது செயல் மற்றவர்களுக்கும் பதட்டத்தையும் பரபரப்பையும் கொடுக்க, இவள் எங்கே போகிறாள், இவளை யாராவது பார்த்தால் என்னவாகும் என்ற பயத்தில் இருந்த மற்றவர்கள், அவளை மறிக்க அவள் பின்னால் விரைந்தனர்.

முன்னால் போன ஏஞ்சல் சட்டென்று முன்னால் கிடந்த கொடியைப் பிடித்திழுக்க, அப்படியே மண்டபம் அவளது பார்வையில் விழுந்தது. அவளைத் தொடர்ந்து வேகமாக வந்தவர்களுக்கும் மண்டபம் பார்வையில் விழுந்தது. அது மட்டுமா விழுந்தது. காக்கி உடை அணிந்து கொண்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் அந்த மண்டபத்தைச் சுற்றி நிற்பதும் விழுந்தது.

முன்னால் நின்ற ஏஞ்சல், மற்றவர்களை வரும்படி சைகை காட்டி விட்டு, மண்டபத்துக்கு முன்னால் நின்றிருந்த தன் தந்தை ஜோசப்பிடம் ஓடிப் போனாள். ஆனால் அவரோடு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. தன்னை நோக்கி ஓடி வந்த மகளைப் பார்த்த நொடியே ஜோசப்பிற்குக் கண்கள் அப்படியே கலங்கிப் போய் விட்டன.

மண்டபத்தினுள் நுழைந்து, அங்கே இருந்த அனைத்துப் போதைப் பொருட்களையும் ஒன்று விடாமல் கைப் பற்றி, சகல கையாள்களையும் ஒருவர் விடாமல் கைது செய்திருந்தார்கள் காவலதிகாரிகள்.

ஜோசப்பின் அருகே வந்து ஏஞ்சல் நின்று கொள்ள, அவளைத் தொடர்ந்து வந்தவர்கள் அங்கே நடப்பதை அதிர்ச்சி மாறாமல் நோட்டமிட, மண்டபத்தின் வாசலோடு கீழே அமர்ந்திருந்தவர்களைப் பார்த்த கஸ்தூரி கண்கள் விரிய, இதயம் படபடக்க, முன்னால் நின்றிருந்த சூரியனது தோளின் மேல் கை வைத்து அழுத்தினாள்.

கஸ்தூரியின் ஸ்பரிசத்தை உணர்ந்த சூரியன்,
"என்ன கஸ்தூரி... இதைப் பார்த்ததும் திகைப்பாக இருக்கிறதா? எனக்கும் தான்..."
என்றபடி அவளைத் திரும்பிப் பார்க்க, அவளது கலங்கிய விழிகள் நிலை குத்தியபடி எதையோ பார்த்தபடி இருப்பதை உணர்ந்தவன், அவளது பார்வை போன திக்கைத் திரும்பிப் பார்த்தான்.

பார்த்தவனது விழிகள் பார்த்தபடி இருக்க, இமைகள் இமைக்க மறந்தது. ஏதோவொரு உறைநிலைக்கு அவன் போய் விட்டான் என்றே சொல்ல வேண்டும். அவனது கால்கள் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் கனத்துப் போனது போல இருக்கவே, எங்கே கீழே விழுந்து போய் விடுவேனோ என நினைத்த சூரியன், அருகில் நின்றிருந்தவர்களில் கஸ்தூரியின் கையை மட்டும் எட்டிப் பிடித்துக் கொண்டான். அவனது நிலையைப் புரிந்து கொண்ட கஸ்தூரி அவனது தோளைத் தட்டிக் கொடுத்தபடி, அவனை முன்னால் நகர்த்திச் சென்றாள்.

மண்டபத்தின் வாசலை நெருங்க நெருங்க, சூரியனது விழிகளில் இருந்து அருவியாகக் கண்ணீர் பெருகத் தொடங்கியிருந்தது. பின்னால் சுமித்திரையோடு நின்றிருந்த பல்லவி பார்வையைச் சுழல விட்டுக் கொண்டிருந்த போது, அவளது பார்வையும் மண்டப வாசலைத் தொட்டு நிற்க, நெஞ்சு விம்மி, மூக்கு விடைத்து அழுகை வர, சூரியனைத் தாண்டி வேகமாக மண்டப வாசலுக்கு ஓடிப் போனாள் பல்லவி.

மண்டபத்தின் வாசலில் சோர்ந்து போய், தலையெல்லாம் கலைந்து, முகம் வீங்கி, கண்கள் சிவந்து போய் அமர்ந்திருந்தார் காயத்ரி. அவருக்கு இருட்டறைக்குள் இருந்து இருந்து வெளியே பார்க்க முடியாமல் கண்கள் கூசவே, கண்களை மூடிக் கொண்டு, தூணோடு சாய்ந்திருந்தார்.

வேகமாக ஓடி வந்த அனுபல்லவி, அவருக்கு முன்னால் மண்டியிட்டு அமர்ந்து, அவரது கன்னத்தில் தட்டி,
"அத்தை அத்தை... என்னைப் பாருங்கள். நான் உங்களின் அனு வந்திருக்கிறேன்."
என்று சொல்லி அழ, அதுவரையிலும் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கூட உணர முடியாமல், தூணில் சாய்ந்திருந்த காயத்ரி, அனுவின் குரல் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தார்.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக, இருட்டு அறைக்குள்ளேயே உணவு, குளியல் என்று தனியாளாகப் பூட்டி வைக்கப் பட்டிருந்த காயத்ரிக்கு கண்ணைத் திறந்து பார்த்தால் எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை. அவருக்கு அனுவின் முகமே மங்கலாகத் தான் தெரிந்தது. ஆனால் அவளது குரலை, யாரின் குரல் என்று உணர முடிந்தது.

நீண்ட காலத்துக்குப் பிறகு, தனக்கு நெருக்கமான ஒருவரின் குரல் கேட்டதும், அவரது இதயத் துடிப்பு அதிகரிக்கவே, அப்படியே மயங்கி அனுவின் மீது விழுந்தார் காயத்ரி.

காயத்ரி மயங்கி விழுந்ததைப் பார்த்ததும் சூரியன் தாயிடம் வேகமாக ஓடி வர, அனு பயந்து போய்க் கத்தியே விட்டாள்.

நொடி கூடத் தாமதிக்காமல் சரணும், மாறனும் காயத்ரியை வைத்தியசாலைக்குத் தூக்கிக் கொண்டு ஓட, பல்லவியை ஏஞ்சலும் சூரியனைக் கஸ்தூரியும் சமாதானம் செய்தார்கள்.

"அழாதீர்கள் பல்லவி... அது தான் அவரை மீட்டு விட்டோமே... இனிமேல் எல்லாம் சரியாகி விடும்..."
என ஏஞ்சல் சொல்ல, ஆற்றாமையோடு அவளது தோளில் சாய்ந்தபடி,
"அத்தையை மீட்டு விட்டோம் தான்... ஆனால் மாமாவும் மகேந்தரும் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லையே ஏஞ்சல்... அது தான் பயமாக இருக்கிறது."
எனப் பல்லவி கண்ணீர் உகுக்க, அவளை என்ன சொல்லிச் சமாதானம் செய்வது என்பது தெரியாத ஏஞ்சல், அவளது தலையை மெல்லக் கோதிக் கொடுத்தாள்.

மண்டப வாசலின் அடுத்த தூணுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த சூரியன் தலையில் கை வைத்தபடி கீழே குனிந்த வண்ணமிருக்க, அவன் அவ்விதம் ஆற்றாமையோடு இருப்பதைப் பார்க்க முடியாத கஸ்தூரி, அவனது தோளில் மெல்லக் கை வைத்தாள். இப்போதெல்லாம் இது போன்ற ஸ்பரிசங்கள் இருவருள்ளும் சாதாரணமாகி விட்டிருந்தன.

சூரியனின் தோளில் கைவைத்த கஸ்தூரி,
"இப்படி இருக்காதீர்கள்... எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. இறந்து போய் விட்டார் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த உங்கள் அம்மாவைத் தான் முழுதாக மீண்டும் பார்த்து விட்டீர்களே... இது எவ்வளவு பெரிய பொக்கிஷ தருணம்... கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்திருங்கள்."
என்று ஆதங்கத்துடன் சொல்ல, மெல்லத் தலையுயர்த்தி அவளைப் பார்த்தவன்,
"அப்பாவும் சின்னண்ணாவும் என்ன ஆனார்கள் என்ற பதட்டம் தான் கஸ்தூரி... அவர்கள் ஒரு முறை இல்லாமல் போய், இந்த முறையும் இல்லாமல் போய் விட்டார்களோ என்று பயமாக இருக்கிறதும்மா..."
எனத் தன்னுள் ஓடிய எண்ணத்தை அவளிடம் சொன்னான்.

அவனது இந்தக் கவலைக்கு என்ன சொல்வது என்ற யோசனையோடு, எதேச்சையாக வலப் பக்கமாகப் பார்த்த கஸ்தூரி அங்கே கண்ட காட்சியில்,
"சூரியா..."
எனத் தன்னையே அறியாமல் சூரியனை அழைக்க, அந்தச் சூழ்நிலையிலும் அவளது 'சூரியா' என்ற அழைப்பு மனதை வருட,
"என்னம்மா..."
என்றபடி அவளைப் பார்த்தான் சூரியன்.

அவளது முகம் சட்டென்று பிரகாசமானதைப் பார்த்த சூரியன், என்னவென்பது போலப் புருவத்தை உயர்த்த,
"அது உங்களின் சின்னண்ணாவும் அப்பாவும் தானே..."
என்றபடி அவள் கைகாட்ட, அவள் காட்டிய திக்கைப் பார்த்தவனுக்கு, மீண்டும் பேச்சற்று மூச்சற்றுப் போனது.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
 

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
அய்யா சூப்பர் காணாமல் போனவங்க வந்துட்டாங்கோ வந்துட்டாங்கோ 😄😄😄😄😄😄
எம்புட்டு கஷ்டப் பட்டுக் கூட்டியாந்தேன். 😇😇😇
 
Top