• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பானுரதி துரைராஜசிங்கம்

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 31, 2021
Messages
219
எங்கு பார்த்தாலும் பச்சை என, பசுமையை மட்டுமே சுமந்திருந்த காட்டில், தென்றல் காற்று சாமரம் போல வீசிக் கொண்டிருந்தது.

கஸ்தூரி கை காட்டிய திசையில், காவலதிகாரிகளோடு மகேந்திரனும் கவிவர்மனும் ஏதோ பேசிய வண்ணம் இருந்தார்கள். சூரியனது விழிகளும் தமையனையும் தந்தையையும் தழுவிக் கொள்ள, வீசிய தென்றல் காற்றின் இதத்தின் உணர்வு அப்போது தான் சூரியனுக்கு மெல்லிய சுரணையைக் கொடுத்தது.

அதற்குள் காவலதிகாரிகளோடு பேசிக் கொண்டிருந்த கவிவர்மனது பார்வை, சூரியன் இருந்த திசைப் பக்கமாகப் படியவே, அவர் தன் கடைசி மகனைக் கண்டு கொண்டு விட்டார். மகனதும் தந்தையினதும் பார்வை ஒரு கோட்டில் சந்திக்க, 'சூரியா' என்றபடி கவிவர்மனும் 'அப்பா' என்றபடி சூரியவர்மனும் ஒருவரை நோக்கி ஒருவர் வேகமாக ஓடி வந்து கட்டிக் கொள்ள, அந்தச் சத்தத்தில் தன்னுள் மருகிக் கொண்டிருந்த அனுவும், உயர் காவலதிகாரியோடு பேசிக் கொண்டிருந்த மகேந்திரவர்மனும் ஒன்றாகத் திரும்பிப் பார்த்தார்கள்.

மகேந்திரனது விழிகள் அனுவைக் கண்டு கொண்டு விட, தன் கலங்கிப் போயிருந்த கண்களை மீண்டும் மீண்டும் தேய்த்தபடி சற்றே தூரமாக நின்றிருந்த மகேந்திரனைத் தான் அனுபல்லவியும் பார்த்தாள். அடுத்த நொடியே தன் மகேந்திரன் முழுதாகத் தன் முன்னால் நிற்பதை உணர்ந்து கொண்டவள், வேகமாக எழுந்து கொள்ளப் பார்க்க, தாங்கிக் கொள்ள முடியாத அதிர்ச்சியில் தலை சுத்தி மயங்க, ஏஞ்சல் பதறிப் போய் அவளைப் பிடிப்பதற்கு முன்பாகத் தன் மனைவியைத் தாங்கிக் கொண்டான் மகேந்திரன்.

மயங்கிப் போயிருந்தவளுக்குச் சுமித்திரையும் ஏஞ்சலும் தண்ணீர் தெளித்து, தங்களால் முடிந்த முதலுதவியைச் செய்ய, ஒரு சில நிமிடங்களில் கண் விழித்துப் பார்த்த அனுபல்லவி தன் மாமா கவிவர்மனைப் பார்த்ததும் மீண்டும் மயங்கிச் சரிந்தாள்.

அவளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தங்களைப் பார்த்ததும் தான் மயங்கிச் மயங்கிச் சரிகிறாள் என்ற உண்மை புரிந்ததும், அந்தச் சூழல் சற்றே இலகுவானது.

ஏஞ்சலையும் கஸ்தூரியையும் தவிர மற்றவர்களுக்குக் கவிவர்மனையும் மகேந்திரவர்மனையும் தெரியும் என்பதால், ஏஞ்சலுக்கும் கஸ்தூரிக்கும் தன் இரண்டாவது தமையனையும், தந்தையையும் அறிமுகப் படுத்தி வைத்தான் சூரியன். அவனுக்கு இப்போதும் கூட, இருவரும் தன்னருகே நிற்பதை நம்ப முடியவில்லை.

"சின்னண்ணா... நீ என்னருகே நிற்பதை என்னால் நம்பவே முடியவில்லை... நீங்கள் மூன்று பேரும் இறந்து விட்டீர்கள் என்ற செய்தி எங்களுக்கு வந்து, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்டது தெரியுமா? இன்னும் மூன்று தினங்களில் வருகின்ற வெள்ளிக்கிழமை உங்களுக்கு முதலாவது திதி தெரியுமா... இந்தக் கொடுமை யாருக்கும் வரக் கூடாதுண்ணா..."
என்றபடி மீண்டும் கண்கலங்கிய தன் தம்பியின் கழுத்தைக் கட்டிக் கொண்ட மகேந்திரன்,
"என்னது எனக்குத் திதியா? கேட்கவே சிரிப்பாக இருக்கிறது. அந்த ஈஸ்வரமூர்த்தி எங்கள் மூன்று பேரையும் தனித் தனி அறையில் தான்டா அடைத்து வைத்திருந்தான். நீ எப்படி எங்களை ஒரு வருடமாகப் பார்க்கவில்லையோ அதே போலத் தான் நானும் அம்மாவையும் அப்பாவையும் ஒரு வருடமாகப் பார்க்கவில்லை. ஆமாம் அம்மா எங்கே?"
என்றபடி சுற்றுப்புறத்தைப் பார்க்க, மயங்கிக் கிடந்த அனுவுக்கு விசிறி விட்டுக் கொண்டிருந்த சுமித்திரை,
"அம்மா கொஞ்சம் சோர்வாக இருக்கிறார்கள் என்று, சரணண்ணாவும் மாறனும் வைத்தியசாலைக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள் மகேனண்ணா..."
என்று சொன்னாள்.

அப்போது தான் சுமித்திரையைப் பார்த்த மகேந்திரன்,
"சுமிம்மா... நீயும் இங்கே தான் இருக்கிறாயா?"
என்றபடி அவளது தலையைக் கோதிவிட, கவிவர்மன் அவளை அணைத்துக் கொண்டார்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, மெல்லக் கண்விழித்துப் பார்த்த அனுவின் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்ட மகேந்திரன்,
"என்னடி பட்டு பட்டென்று மயங்கி விழுகிறாய்... ஏதேனும் நல்ல விசயமா... நீ உண்டாகி இருக்கிறாயா..."
என்று குறும்பாகக் கேட்க, பளாரென அவனது கன்னத்தில் அனு விட்டாள் ஒரு அறை.

"என்னடி கை நீட்டி விட்டாய்..."

"கால் நீட்டாமல் கையை நீட்டினேனே என்று சந்தோஷப் பட்டுக் கொள்ளுங்கள்..."

"என்னடி நீ... நானே ஒரு வருடத்திற்குப் பிறகு உன்னைப் பார்க்கிறேன். ஆனால் நீ பார் அடிக்கிறாய்."

"நீங்கள் கேட்ட கேள்விக்கு அடிக்காமல் உங்களைக் கொஞ்சுவார்களா?"

"நான் என்ன கேள்வி கேட்டேன்..."

"கொஞ்சம் முதல் என்னைப் பார்த்துக் கேட்டீர்களே ஒரு கேள்வி."

"ஆமாம் கேட்டேன். நீ உண்டாகி இருக்கிறாயா என்று கேட்டேன். இப்படிப் பொத்துப் பொத்தென்று மயங்கி விழுந்தால், அப்படியென்று தானேடி அர்த்தம்"

"நீங்கள் கண்டு கொண்ட அர்த்தத்தில் கொள்ளிக் கட்டையைச் செருக..."

"ஏன்டி இப்படி எரிந்து விழுகிறாய்..."

"டேய்... நீ எனக்குத் தாலி கட்டி இரண்டாவது நாளிலேயே, என்னைய மட்டும் உருட்டி விட்டிட்டுக் காணமல் போயிட்டாய். அப்புடி உருட்டி விட்ட வேகத்துல மண்டை அடிபட்டு, நான் கிறுக்குப் பிடித்து அலைந்து, பிறகு சுகமாகி எழுந்தால், என்னுடைய கணவன் மகேந்திரன் இறந்து விட்டான் என்று சொல்கிறார்கள். சரி அவனுக்கு விதிக்கப் பட்டது அவ்வளவு தான்... என்னுடன் வாழ அவனுக்குக் கொடுத்து வைக்கவில்லை என்று ஒரு வழியாகத் தேறி வரும் போது, என்னுடைய புருஷன் எனக்கு முன்னால் உயிரோடு குத்துக்கல் போல வந்து நிற்க, அவனைப் பார்த்த சந்தோஷம் தாங்க முடியாமல், நான் பொத்துப் பொத்தென்று மயக்கம் போட்டு விழ, என்னுடைய பன்னாடைப் புருஷன், என்னிடம் வந்து கேட்கிறான் நீ உண்டாகி இருக்கிறாயா என்று அப்படிக் கேட்கும் அவனை என்ன செய்வது..."

"ஏன்டி அப்போ உண்டாகவில்லையா? இல்லை என்றால் இல்லை என்று சொல்லு... அதை விட்டுக் கையை நீட்டாதே..."

"அடேய் கூறு கெட்டவனே நீ என்னோடு இல்லாமல் போய் சரியாக ஒரு வருடம் ஆகி விட்டது. நான் இப்போது உண்டாகினால் அதற்கு அர்த்தம் தெரியாதாடா உனக்கு"

"என்ன அர்த்தம் அனு..."
என மகேந்திரன் அப்பாவியாய்க் கேட்க, ஐயோ என்றபடி தன் தலையைப் பிய்த்துக் கொண்டாள் அனு.

சற்றுத் தள்ளி நின்ற சூரியன் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தபடி மகேந்திரனைப் பிடித்திழுத்து, அவனது காதுகளில்,
"டேய் அறிவு கெட்ட அண்ணா... அனுவோடு நீ சேர்ந்திருக்காமல் அவள் எப்படி உண்டாக முடியும். அப்படியே உண்டாகினாலும் அதை நடத்தை கெட்டுப் போனது என்று சொல்வார்கள், நீ கேட்ட கேள்விக்கு அனு உன்னைத் திருகாமல் விட்டதே பெரிய விஷயம் என்று நினைத்துக் கொள். எனக்கென்னவோ உன்னை அவன்கள் மறைத்து வைத்திருந்ததில் உனக்கு மறை கழன்று விட்டது என்று நினைக்கிறேன்."
என்று சொல்ல, மகேந்திரனுக்கு அப்போது தான், தான் கேட்ட கேள்வியின் வீரியம் விளங்கியது.

"ஐயோ அனூ... ஏதோ லூசுத்தனமாகக் கேட்டு விட்டேன்."
என்றபடி அனுவின் காலிலேயே விழுந்து விட்டான் மகேந்திரன். பிறகு ஒரு வழியாக அனுவை மகேந்திரன் சமாதானம் செய்ய முயல, அவர்களைத் தனியே விட்டு விட்டு மற்றவர்கள் இங்கிதமாக விலகிப் போய் விட்டார்கள்.

சரியாக ஒரு மணி நேரத்தில், அந்த மண்டபமே மனித சஞ்சாரத்தை இழக்கத் தொடங்கியிருந்தது. அங்கிருந்து எல்லோரும் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்திற்குக் குறுகிய நேரத்திற்கு காவலதிகாரிகளை வரவைத்த ஜோசப்புக்கும், ஜோசப்புக்குத் தகவல் கொடுத்த ஏஞ்சலுக்கும் ஆள் மாற்றி ஆள் நன்றி சொல்லிக் கொண்டே தான் எல்லோரும் புறப்பட்டனர். ஈஸ்வரமூர்த்தியையும் மகாலிங்கத்தையும் காவல்துறையினர் கைது செய்து போய்விட்டனர் என்கிற சந்தோஷமே எல்லோருக்கும் இருந்தது. அதோடு அந்த இருவருக்கும் தங்களது இந்த நிலைக்கு யார் காரணமென்பதே தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை. அவர்கள் செய்த தில்லுமுல்லு வேலைகளுக்குக் குறைந்த பட்சம் பத்து ஆண்டுகளாவது சிறைவாசம் தான்.

அதுவரை ஒரு ஓரமாக நின்றிருந்த தன் தந்தையைப் பார்த்த ஏஞ்சலுக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது. அவரைத் தண்டித்த வரை போதும் என நினைத்த ஏஞ்சல் நொடியும் யோசிக்காமல் தந்தையிடம் ஓடிப் போய் அவரை இறுக அணைத்துக் கொண்டாள். எதிர்பாராத விதமாக மகள் அவ்விதம் அணைத்ததும், ஜோசப்பிற்குக் கண்கள் கலங்கி விட்டது. மகள் தன்னிடம் வர மாட்டாளா? தன்னிடம் பேச மாட்டாளா என்று எத்தனை நாள் கண்ணீர் வடித்திருப்பார். இப்போது அவருக்குச் சந்தோஷ மிகுதியில் பேச்சுத் திக்கியது.

"ரொம்ப ரொம்ப நன்றிப்பா... நான் சொன்னதும் எனக்காக இதைச் செய்து கொடுத்து விட்டீர்களே..."

"அட... அப்பாவுக்கு எதுக்கும்மா நன்றி..."

"இல்லையப்பா... நான் உங்கள் விஷயத்தில் படு மோசமாக நடந்து கொண்டு விட்டேன். இனிமேல் அவ்விதம் நடந்து கொள்ள மாட்டேன்."

"நீ எவ்வளவு மோசமாக வேணுமென்றாலும் நடந்து கொள். ஆனால் அப்பாவை விட்டு மட்டும் போய் விடாதேடாம்மா..."

"நீங்கள் என்னோடு அம்மாவிடம் வாருங்களேன் அப்பா... அம்மா உங்களைப் பார்த்தால் ரொம்பவும் சந்தோஷப் படுவார்."

"நீ எப்போது உன்னுடன் அழைப்பாய் என்று தானே நான் காத்துக் கொண்டிருந்தேன். இதோ இன்றே புறப்படுவோம்..."
என ஜோசப் சந்தோஷமாகச் சொல்ல, சூரியனிடம் சொல்லிக் கொண்டு, தன் தந்தையோடு தன் தாயைக் காணச் சந்தோஷமாகப் புறப் பட்டாள் ஏஞ்சல்.

ஏஞ்சல் போனதும் மற்றவர்கள் காயத்ரியைப் பார்க்க வைத்தியசாலை நோக்கிப் புறப்பட்டனர்.

இவர்கள் எல்லோரும் போய்ச் சேருவதற்கு முன்பாகவே காயத்ரி கண் விழித்து விட்டார், மருத்துவக் கண்காணிப்பில் இப்போது அவருக்குப் பார்வை தெளிவாகத் தெரிந்தது.

சரணையும் மாறனையும் கண்டு கொண்டும் விட்டார். எழ முடியாமல் எழுந்து அமர்ந்து கொண்டவரோ,
"அப்பன்... மகேந்தேர் எங்கே? மாமா எங்கே? எனக்கு இருந்த அசதியில் அவர்களைப் பார்க்கக் கூடவில்லை. அவர்களும் இருக்கிறார்களா? ஒரு வருடமாக அந்த இருட்டறையில் இருக்கும் போது கூட, மாமாவையும் மகேந்தரையும் அந்தப் பாவிகள் எனக்குக் காட்டவில்லை தெரியுமா?"
என அரற்றத் தொடங்கினார் காயத்ரி.

"இருவருமே நலமாக இருக்கிறார்கள் அம்மா... நீ கவலைப் படாமல் படுத்துக் கொள்ளுங்கள். உடம்பை வருத்திக் கொள்ளாதீர்கள்..."
எனச் சரண் தன்னால் முயன்றவரை காயத்ரியை சமாதானப் படுத்த முயன்று கொண்டிருந்த வேளை, மற்றவர்களும் மருத்துவமனைக்கு வந்து விட்டார்கள்.

முதலில் கவிவர்மன் தான் மனைவியைப் பார்க்கப் போனார். அவரும் தான் தன் மனைவியை ஒரு வருடமாகப் பார்க்கவில்லையே.

சரணும், மாறனும் அறையினுள் நுழைந்த கவிவர்மனைப் பார்த்ததும், இங்கிதமாக வெளியே போய் விட்டார்கள். அமர்ந்த வாக்கிலேயே கண்களை மூடியிருந்த காயத்ரியை
"காயும்மா..."
என்ற கவிவர்மனின் அழைப்புத் திடுக்கிட்டுப் பார்க்க வைத்தது.

தன் முன்னால் முழுமையாக நின்றிருந்த கணவனைப் பார்த்ததும் ஒரு வருடமாக அனுபவித்த துன்பம் ஒரு பொருட்டேயில்லை என்பது போல, காயத்ரியின் மனது சட்டென்று லேசாக,
"மாமா..."
என்றபடி தன் கணவரை நோக்கி அவர் கைகளை நீட்ட, வேகமாக வந்து தன் மனைவியை அணைத்துக் கொண்டார் கவிவர்மன்.

தாய்க்கும் தந்தைக்கும் சில நிமிடங்கள் தனிமை கொடுத்த மகேந்திரனும் சூரியனும் அதன் பின்னரே அறையினுள் நுழைந்தனர். அதிலும் சூரியன் தமையனை முன்னுக்கு அனுப்பி விட்டு, தான் சிறிது நேரம் வாசலில் தேங்கி நின்றான்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
 
Top