• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேல்விழியாள் - 20

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அத்தியாயம் - 20

எல்லோரும் இன்று விகாஷினியின் வீட்டில் கூடியிருந்தனர். பெரியவர்கள் சற்று கவலையுடன் இருக்க... விகாஷினியின் முகத்திலோ, கவலையோடு, சற்று வருத்தமும் சேர்ந்து இருந்தது.

அவனது அண்ணன் கேசில் ஒரு சின்ன நூல் கிடைத்திருக்கிறது. அதை வைத்துக் குற்றவாளியை கண்டு பிடித்து விடலாமா? என்பதே எல்லோருடைய கவலைக்கும் காரணமாக இருந்தது.

அது தான் விதுனுடைய புது நம்பர் பற்றிய தகவல். கடைசியாக அந்த நம்பர் ஏற்காட்டில் தான் ஆக்டிவாக இருந்திருக்கிறது. அதைப் பற்றிய பேச்சு தான் அங்கு ஓடிக் கொண்டிருந்தது.

" ஏன் மது… அந்த நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆனாலும், இப்ப உள்ள டெக்னாலஜியால, எங்க இருக்குன்னு கண்டு பிடிக்க முடியாதா?"

லேசாக சிரிப்பை சிந்தியவன்," அதெல்லாம் சினிமாவுல தான் கண்டு பிடிக்குற மாதிரி காண்பிப்பாங்க. பட் ஃபேக்ட் என்னன்னா இட்ஸ் இம்பாஸிபல் ஹாசினி. நமக்கு கிடைச்சிருக்கிற இன்ஃபர்மேஷன் படி ஏற்காடுல தான் லாஸ்ட்டா அந்த நம்பர் ஆக்டிவா இருந்திருக்கிறது."

" ஓ… எக்ஸேட்டா எந்த இடம் மதி?"

" எக்ஸேட்டா எந்த இடம் என்று காண்பிக்காது. எந்த ஏரியா என்று காண்பிக்கும். ஹன்ட்ரடு மீட்டர் சரவுண்டிங்ல எங்கே வேணாம் இருக்கலாம். ஒரு வேளை போன்ல இருந்து சிம்மை கழட்டி இங்கே சென்னைக்கு எடுத்துட்டு வந்து இருந்தாலோ, இல்லை ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து எந்த இடத்திற்கு எடுத்துச் சென்றிருந்தாலும் நம்மால் கண்டு பிடிக்க முடியாது. பை சான்ஸ் விதுன் அங்கேயே பத்திரமாக வைத்திருக்கலாம். அதற்காகத் தான் நாம இப்போ அங்கே போறோம்."

" அண்ணாவோட போன்ல வேற இரண்டு நம்பர் தானே இருந்தது. இந்த புது நம்பர் வேறே ஃபோன்ல யூஸ் பண்ணியிருப்பாரா?" தனக்குத் தானே கேட்பது போல் யோசித்துக் கொண்டிருந்தாள் விகாஷினி‌.

" ஏற்காட்டுக்கு விதுன் வரும் போது, பழைய பர்சனல் நம்பர்ல இருந்து தான் எனக்கு கால் பண்ணான் விக்கி. ஆனால் ஊருல இருந்து மதிக்கு புதிய நம்பர்ல கால் பண்ணியிருக்கான். அங்கே ஒரு வேளை சிம் கார்டை கழட்டி வைத்து இருக்கலாம். " என சந்தீப் கூற…

" அப்படி இருக்க வாய்ப்பில்லை சந்தீப். சிம்கார்டு வச்சு நமக்கு எந்த தகவலும் கிடைக்காது. இன்னொரு ஃபோன் வாங்கியிருக்கலாம். அதில் நமக்கான தகவல் இருந்தாலும் இருக்கலாம். எல்லாமே யூகம் தான். நாம ஏற்காடு போய், விதுனோட ரூமை சர்ச் பண்ணா தான் நமக்குத் ஏதாவது கிடைக்கலாம்‌. ஃபோனை தான் தேடணும்… பார்க்கலாம்…" என்றவன், விகாஷினியிடம் திரும்பி, " கிளம்பலாமா ஹாசினி…" என...

" ம்." என்றாள் விகாஷினி.

அந்த சிம்கார்டு பற்றிய விவரத்தைத் தேடிக் கண்டு பிடிப்பதற்காக, விகாஷினி, சந்தீப், மதியமுதன் மூவரும் கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். பெரியவர்கள் வரவில்லை என்று கூறிவிட்டனர்‌. அவர்களுக்கு அங்கு வந்தாலும், விதுன் நியாபகம் தான் வரும். எங்களால் உங்களுக்கு தொந்தரவு தான் நாங்கள் இங்கேயே இருந்து விடுகிறோம் என்று கூறி விட்டனர்.

பாவனாவை கூப்பிட்டதற்கு, அவள் ஏற்கனவே லீவு அடிக்கடி எடுத்ததால், இப்போது லீவு எடுக்க முடியாது. அதுவும் இல்லாமல் ஒரு முக்கியமான வேலை, அவள் பொறுப்பில் இருப்பதாலும் வர இயலாது என்றுக் கூறி விட்டாள்.


உண்மையிலேயே பாவனா வராததற்கு வேலை ஒரு காரணம் என்றாலும், அவளுடைய வேலையை வீட்டிலிருந்துக் கூட செய்யலாம். அவளது வேலை சம்பந்தமான டீடைல்ஸ் எல்லாவற்றையும் அல்ரெடி கலெக்ட் பண்ணிவிட்டாள்‌. இனி அதை டாக்குமேண்ட்டா ரெடி பண்ண வேண்டியது மட்டும் தான் பாக்கி… அதை எங்கிருந்தாலும் செய்யலாம். ஆனால் அவளுக்கு எல்லோர் மேலும் கோபம். அதனால் அவர்களோடு ஊருக்கு செல்வதில் விருப்பமில்லாமல், வேலையை காரணம் காட்டி வரவில்லை என்று கூறிவிட்டாள்.

ஒரு வேளை அவள் ஏற்காட்டிற்கு சென்றிருந்தால், விதுன் கேஸ் சீக்கிரம் முடிவுக்கு வந்திருக்கும். அதைக் கண்டு பிடிக்கிறேன் என்று விகாஷினியும் ஆபத்தில் சென்று மாட்டிருக்கமாட்டாள். ஆனால் இப்போது அதை பாவனா அறியவில்லை.

பாவனா வரவில்லை என்ற வருத்தம் விகாஷினிக்கு இருந்தது.
அவள் முகம் சஞ்சலத்தை தத்தெடுத்து இருந்தது‌. ஆனாலும் அவள் ஏற்காட்டிற்கு வந்தால், விதுனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாள். அதற்கு அவள் வராததே நல்லது தான் என தன்னை சமாதானம் படுத்திக் கொண்டிருந்தாள்.

சங்கர், விகாஷினியின் முகத்தைப் பார்த்து விட்டு, அவள் அருகே சென்று தலையை வருடி, " எதை நினைச்சும் கவலைப்படாத மா… கடவுள் இனியாவது நல்ல வழிக் காட்டுவாரா பார்ப்போம். ஜாக்கிரதையா இருங்க… நாதனும், சகுந்தலாவும் அங்க தான இருக்காங்க… அந்த தைரியத்தில் தான் நான் உன்னை அங்க அனுப்புறேன்." என்றவர் மதியிடம் திரும்பினார்.

" மாப்பிள்ளை… உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் அவங்க கிட்ட கேளுங்க… அவங்க நம்ம சந்தீப்போட அப்பா, அம்மா… நமக்காக எந்த உதவினாலும் செய்வாங்க. சந்தீப் பார்த்துக்கோப்பா… எனக்கு அந்த கேர்டேக்கர் மேல நம்பிக்கையே இல்லை. அங்க தனியா விக்கியை விடுவது சரியாக படவில்லை. அதனால உங்க வீட்டிலேயே தங்க வச்சுக்கோ." என மூவருக்கும் அறிவுரை கூறிக் கொண்டே இருந்தார்.

" அங்கிள்… விகாஷினியை பத்தி கவலைப் படாதீங்க. நான் பார்த்துக்கொள்கிறேன். பட் அவ உங்க வீட்ல இருந்தா தான், எங்களுக்கு ஹெல்ஃபா இருக்கும். அதுவும் இல்லாமல், உங்க கேர் டேக்கருக்கு எந்த சந்தேகமும் வரக் கூடாது. அவ அங்க இருந்தாலும்‍, எங்களோட முழு கவனமும் விகாஷினிக் கிட்ட தான் இருக்கும். நான் சந்தீப்போட அவங்க வீட்ல ஸ்டே பண்ணிக்கிறேன்."

சங்கர்," மாப்பிள்ளை… உங்களுக்கு சந்தீப் வீட்ல தங்குறதுல ஒன்னும் பிரச்சினை இல்லை தானே?" என வினவ…

" அதெல்லாம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை அங்கிள். சந்தீப் எனக்கு கம்பெனி கொடுப்பான். நீங்க கவலைப் படாமல் ரிலாக்ஸா இருங்க."

மதியமுதனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல், சம்மதமாக தலையசைத்தார் சங்கர்.

ஒரு வழியாக மூவரும் கிளம்பியாயிற்று.
இப்போது தான் மதியமுதனுக்கு நிம்மதியாக இருக்கிறது‌. ஏற்காட்டில் தான் சிம்கார்டு ஆக்டிவா இருந்தது என்ற தகவல் கிடைத்தும், உடனடியாக கிளம்பி முடியாமல் தாமதித்தது அவனுக்கு ரொம்ப இரிடேட்டிங்கா இருந்தது.

விகாஷினிக்கு பள்ளி இருந்ததால், வெள்ளி இரவு கிளம்பலாம் என்று முடிவு செய்தனர். விடுமுறை தினமான, சனி‍, ஞாயிறு அன்று அங்கே போகலாம் என்று தான் இவ்வளவு தாமதமாக கிளம்பியது. இல்லையென்றால் அந்த தகவல் கிடைத்த உடனே கிளம்பி இருப்பார்கள். இவர்கள் அங்கே போய் தேடுவது யாருக்கும் தெரியக் கூடாது. அதற்கு தான் இவ்வளவு மெனக்கெடல்‌.

சந்தீப் கார் ஓட்ட… மதியமுதனோ, இந்த கேஸைப் பற்றியே நினைத்துக் கொண்டு வந்தான்.

ரிதன்யா கூறிய வாக்குமூலம் மதியமுதனை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதை இப்பொழுது நினைத்துப் பார்த்துக் கொண்டு வந்தான் மதியமுதன்.

' விதுன்குமாரின் மரணம், அவனது திறமையை பார்த்து அந்தப் இண்டஸ்ட்ரியில் உள்ளவர்கள் பொறாமையில் செய்து இருக்கலாம் என நினைத்து இருந்தான். ஏனென்றால் குறுகிய காலத்தில், சினி இன்டஸ்ட்ரியில் மிகப்பெரிய இடத்தை அடைந்திருந்தான். அது பலரை அவன் மேல், பொறாமைப் பட வைத்திருந்தது. அப்படி நினைத்து, அதற்கு தகுந்த விசாரணை நடத்திக் கொண்டிருக்க, இப்படி ஒரு திருப்பத்தை அவனே எதிர்பார்க்கவில்லை.

ரிதான்யாவிடம் இருந்து வாக்குமூலம் வாங்குவதற்குள், போதும் போதும் என்றாகி விட்டது.

ஆனாலும் அவர்கள் பாணி விசாரணையில் அனைத்தையும் கூறியிருந்தாள் ரிதன்யா. அவளது வாக்குமூலம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

ரிதன்யாவிற்கு அடிக்கடி ஒரு நம்பரில் இருந்து வாட்ஸ்அப் மெசேஜ் வந்திருந்தது. அதை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இப்பொழுது விசாரிச்சுட்டு இருப்பதற்கும் முற்றிலும் மாறுபட்ட தகவல்கள் .

அந்த வாட்ஸ்அப் தகவல்கள் எல்லாமே, சங்கேத வார்த்தைகளாக இருந்தது. ரிதான்யாவோ அந்த மேசேஜ் என்னுடைய ஃப்ரெண்டு தான், ஜாலிக்காக அனுப்பினாள் என்று சாதித்தாள்.

அப்புறம் போலீஸ் கவனிப்பிற்கு பின்பு தான், அவள் வாயிலிருந்து வார்த்தைகளை வர வைக்க முடிந்திருந்தது.

அந்த சங்கேத வார்த்தைகள் எல்லாம், போதைப் பொருள் பரிவர்த்தனை சம்பந்தமானது. அதில் விதுனுடைய வீட்டிலுள்ள சர்வென்டஸ், அன்ட் ஃபார்ம் ஹவுஸ் மேனேஜர் எல்லோரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

"விதுன எதுக்கு கொலை பண்ண? நீ பண்ண வேலையை அவன் கண்டுபிடிச்சுட்டானு தான் கொலை பண்ணீங்களா?"

" ஐயோ ! சார்… நான் கொலையெல்லாம் பண்ணலை. எனக்கு எதுவும் தெரியாது."

" அப்போ உன் ஃபோனுக்கு வந்த மேசேஜ் எல்லாம் யாரிடமிருந்து வந்தது.?"

" எனக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. அவங்க சொன்னதை செய்யலைனா என்னை கொன்னுடுவேன்‌. மிரட்டுனாங்க. அவங்க சங்கேதமா என்னைக்கு போதைமருந்து வரும் என்று சொல்லுவாங்க. அன்னைக்கு எங்கேயாவது பார்ட்டி நடக்கும். அந்த பார்ட்டியில ரூபக் சாரையும், விதுன் சாரையும் குடிக்க வைக்கணும். அது தான் எனக்கு குடுத்து இருந்த வேலை‌. மோஸ்ட்லி ரூபக் சார் தான் பார்ட்டி நடத்துவார்‌. ரேரா விதுன் சார் நடத்துவார். அவங்க சொன்ன வேலையை செய்து முடிச்சிட்டா, என்னோட அக்கவுண்ட்ல பணம் வந்திடும்.

இந்த போதை மருந்து எங்கிருந்து வருது? யாருக்கு போகுது ? என்று கூட எனக்கு தெரியாது சார். ஃபார்ம் ஹவுஸ்ல அந்த மேனேஜர் கைக்கு மாறும். அப்புறம் எங்கே போகுது என்று எனக்குத் தெரியாது சார்." என...

" விதுன் தான் குடிக்க மாட்டானே." சந்தீப் வினவ…

" ஆமாம் சார் … ரூபக் சார் குடிப்பார், அவரால எந்த பிரச்சினையும் இல்லை. பட் விதுன் சாருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால், அவர் குடிக்கிற ஜுஸ்ல போதை மாத்திரை கலந்து குடுத்துடுவேன்." என்று சொல்லிக் கூட முடிக்கலை, பளார் என மதி ஓங்கி ஒரு அறை விட்டான்.

" சார்…" என்றவள் சுருண்டு கீழே விழுந்தாள்.

" நீயெல்லாம் ஒரு பொண்ணா? உனக்கு வேலையும் கொடுத்து, நல்ல சேலரியும் கொடுத்தவருக்கு, நல்ல உபகாரம் தான் செய்துருக்க… அவருக்கு தெரியாமல் போதைப் பழக்கத்தை ஏற்படுத்திருக்க. உன்னை எல்லாம் கொன்னாலும் தப்பில்லை" என மதியமுதன் உறும…

சந்தீப் தான் சமாதானம் படுத்தினான். "கூல் மதி… இன்னும் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுருக்காங்க என விசாரிக்கணும்." என்றவன் கீழே விழுந்து இருந்த ரிதான்யாவின் அருகில் சென்று நின்றான்.

இரண்டு கால்களையும் அகல விரித்துக் கொண்டு, வந்து நின்ற சந்தீப்பை பார்த்தவள், இவனும் அடிப்பானோ என்று பயந்துக் கொண்டே கன்னத்தில் கை வைத்து இருந்தாள்.

"ஏய்… வேக்கப் அப்." என்ற சந்தீப், அவள் எழுந்திருக்காமல் இருக்கவும், அவளது முடியைப் பற்றி எழுப்பியவன், " உண்மை மட்டும் வெளி வரட்டும், அப்புறம் இருக்கு உனக்கு …" என்று அவனும் ஆத்திரம் தீர அவளைப் போட்டு உலுக்க...

பயந்து போய் இருந்தாள் ரிதன்யா.

" சொல்லு… இன்னும் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுருக்காங்க…"

" எனக்கு எதுவும் தெரியாது. விதுன் சாரை மயக்கத்தில் வச்சிருக்கணும், அப்புறம் அவரை வீட்டில் கொண்டு போய் சேர்க்கணும். கார் ட்ரைவர் எனக்கு ஹெல்ப் பண்ணுவார். அவ்வளவு தான் என்னை விட்டுடுங்க சார்…" என ரிதன்யா கெஞ்ச…

"அவ்வளவு சீக்கிரம் உங்களை விட்டுடுவோம் என்று நினைக்காதீங்க மிஸ். ரிதன்யா மேடம். இன்னும் ஏதோ மறைக்கிறீங்க என்று தெரியுது. உண்மை மட்டும் வெளியே வரட்டும், அப்புறம் தெரியும் போலீஸ் அடின்னா என்னன்னு தெரியும் உனக்கு. " என்ற மதியமுதன், அருகில் இருந்த கான்ஸ்டபிளைப் பார்க்க…

அவனது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்தவர், ரிதன்யாவை அருகிலிருந்த அறைக்கு அழைத்துச்சென்று அடைத்தார்.

"விதுனின் கொலையில் நிறைய பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் போலிருக்கிறது. ரூபக்கும் சம்பந்தம் இருக்கிறது. ரிதன்யா ஏனோ மறைக்கிறாள். ஒருவேளை உண்மையை சொல்லக் கூடாது என்று அவளை மிரட்டியிருக்கலாம். சரி இப்போதைக்கு இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும். விகாஷினிக்கும், பாவனாவுக்கும் தெரிய வேண்டாம்." என மதி கூற, சந்தீப்பும் அது தான் சரி என்றான்.'

திடீரென கார் சடன் பிரேக் அடிக்க... பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்த மதியமுதன், " வாட் சந்தீப்? என்னாச்சு ? "

" நத்திங் மதி… ஒரு நாய் குறுக்கே வந்ததுடுச்சு." என்றான் சந்தீப்.

அதற்குப் பிறகு இருவரும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டே வந்தனர்.

விகாஷினியோ, அவர்கள் இருவரின் உரையாடலில் கலந்து கொள்ளாமல், அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.

எங்கெங்கே போனாலும், திரும்ப தனது சொந்த ஊருக்கு வரும் போது உதிக்கும் சந்தோசம், அவளுக்குள் ஏற்பட்டாலும், அவளது அண்ணன் நினைவு வந்து‍, அதை அடியோடு தடை செய்தது.

ஒரு வழியாக மூவரும் அதிகாலையில் ஏற்காட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

" சந்து… ஃபர்ஸ்ட் நீங்க வீட்டில இறங்கிக்கிறீங்களா? இல்லை என்னை விட்டுட்டு திரும்ப வரீங்களா?" என விகாஷினி வினவ‌.

" ரெண்டும் இல்ல விக்கி. இப்போ பிளான் சேஞ்ச்டு. நானும், மதியும் உங்க வீட்டில் தான் தங்கலாம் என்று இருக்கிறோம். அங்கிளிடம் அப்புறம் சொல்லிக் கொள்ளலாம். மதிக்கு கம்பெனிக்காக நான் இங்கேயே ஸ்டே பண்றேன்னு சொல்லிக்கலாம். நாங்க இங்கேயே இருந்தால் தான் எங்களுக்கு தேடுவதற்கு வசதியாக இருக்கும்.

நாங்க தங்குவதற்கு விதுனுடைய ரூமையே அரேஞ்ச் பண்ணிக் குடு. இருக்குறதிலேயே அது தானே பெரிய ரூம்‌. மாஸ்டர் பெட்ரூம் வேற… அதுல வருங்கால மாப்பிள்ளையை தங்க வச்சா யாருக்கும் சந்தேகம் வராது.

நாங்க அங்க இருக்கும் போது, சர்ச் பண்ண வசதியா இருக்கும். யாரும் எங்களை வாட்ச் பண்ணவும் மாட்டாங்க… " என…

" வாவ்… குட் ஐடியா." என்ற விகாஷினியின் பாராட்டில் மதியமுதனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. ஏனென்றால் இந்த ஐடியா அவனுடையது.

ஒரு வழியாக மூவரும் விகாஷினியின் வீட்டில் வந்திறங்கினர். விகாஷினி இங்கு வரும் தகவலை தெரிவிக்கவில்லை. அதனால் இவர்கள் வந்ததைப் பார்த்த வாட்ச்மேன், யாராக இருக்கும்? இந்த அதிகாலையில் வந்திருப்பது என்ற சந்தேகத்துடன் கார் அருகே வந்தவன், உள்ளே இருந்த விகாஷினியை பார்த்து, வாயெல்லாம் பல்லாக " நல்லா இருக்கீங்களா மா? " என்றவன் வேகமாக அந்தக் கேட் கதவை திறந்து விட்டான்.

கார் நீண்ட பாதையில் சென்று, அந்த போர்டிகோ முன்பு நின்றது. வேகமாக அவர்களின் பின்னே வந்து வாட்ச்மேன், சந்தீப்பை பார்த்து வணக்கம் வைத்தவன், மதியை யோசனையோடு பார்க்க…

"என்ன துரை? இவர் தான் உங்களோட வருங்கால முதலாளி. அதுக்குள்ள மறந்துட்டீயா?" என சந்தீப் வினவ.

" அச்சோ… மறந்துட்டேன் சார்… வணக்கம் சார்." என மதியமுதனிடம் கூற…

லேசான புன்னகையுடன் தலையசைத்தான்.

"அங்கிள் கதவை திறக்க சொல்லுங்க…" என விகாஷினி கூற...

" மறந்துட்டேன் மா… சாரி மா… சாரி மா…" என பதட்டத்துடன் கூறியவர், தனது போனை எடுத்து கேர் டேக்கருக்கு அழைக்க‌…

கதவை திறந்த கேசவ், இவர்கள் மூவரையும் பார்த்தவுடன், முகம் சுருங்கி, எதற்கு இவர்கள் வந்திருக்கிறார்கள் என யோசனையுடன் பார்த்தார்.


 
Top