• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேல்விழியாள் - 29.2

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
" என்ன ஹீரோ சார்? நான் ஆபத்துல இருக்கிறேன்னு காப்பாத்த ஓடி வந்தீங்களாக்கும். என்னை காப்பாற்றிக்குற அளவுக்கு எனக்கு தைரியம் இருக்கு. அது உங்களுக்குத்
தெரியாதா?" என மெதுவாக கிசுகிசுத்தாள்.

அவளைப் பார்த்து முறைத்தவன், ஏதோ கூறுவதற்காக வாயை திறக்க முயல…

வேகமாக அவனது வாயை மூடியவள்," கொஞ்ச நேரம் பொறுங்க மதி. அக்யூஸ்ட் வருவாங்க பார்ப்போம்." என்றாள்.

அவளை தனது கை வளைவில் வைத்துக் கொண்டே, அந்த இடத்தை பார்வையிட்டான். நான்கு பேர் விழுந்துக் கிடப்பதை பார்த்தவன், விகாஷினியை நினைத்து பெருமைக் கொண்டான்.

இவர்கள் காத்திருக்கும் போதே புயல் போல தனது காரில் வந்து இறங்கினான் ரூபக்.

உள்ளே வந்தவன் வேகமாக அங்கு கீழே விழுந்து கிடந்தவர்களின் அருகில் சென்று என்னவென்று விசாரித்தான்.
" டேய் தடிமாடுகளா… என்னாச்சு…" என.

" சார்… ஒரு பொண்ணு இங்கே வந்து எங்களை அடிச்சுப் போட்டுட்டா…" என்றான் ஒருவன். அவன் மட்டும் தான் கொஞ்சம் நினைவோடு இருந்தான். அதுமட்டுமல்லாமல் ரூபக்கிற்கு ஃபோன் செய்ததும் அவன் தான்.


"இதைக் கூற உனக்கு வெட்கமா இல்லையா? போயும், போயும் பொண்ணுக் கிட்ட அடி வாங்கி விழுந்து கிடக்கிறீங்களே‌‌. தடிமாடு … தடிமாடு." என திட்ட…

" சார் பொண்ணா அது. ராட்சசி சார். ஒரே அடி… எல்லோரையும் ரத்தக்களறி ஆக்கிட்டா."

" சரி விடு… அந்த பொண்ணு இப்போ எங்கே? " என்றவாறு பார்வையை சுற்றிலும் படர விட.

" அந்த பொண்ணு ஏன் வந்தது என்று தெரியலை சார். எங்களை அடிச்சிட்டு ஓடிப் போயிடுச்சு."

" ஓ… இன்னைக்கு ரெண்டு பசங்களை வரச் சொல்லியிருந்தோமே…. அப்போ அந்த பொண்ணு வந்துருக்குமோ… யாரா இருக்கும்." என்று வினவ.


" பசங்க இருக்கும் போது வரலை சார். அவங்க போனதுக்கப்புறம் தான் அந்த பொண்ணு வந்துச்சு… அப்புறம் அந்த பொண்ணு வந்து, நம்ப ஸ்கூல்ல தான் வேலைப் பார்க்குது போல… கழுத்துல நம்ம ஸ்கூல் ஐடி கார்டு மாட்டி இருந்தது." என்று சொல்ல…

" முட்டாள்… முட்டாள்… அவ அந்த பசங்களோட தான் வந்துருக்கா… எல்லாம் அந்த விகாஷினியா தான் இருக்கணும். யெஸ் கரெக்ட்… அவ தான் ஒரு வாரமா லைப்ரரியில் உட்கார்ந்து படிக்கிறேன் என்று தினமும் லேட்டா வீட்டுக்கு போயிட்டு இருந்திருக்கா… இன்னைக்கு கூட அவளை தேடி வாட்ச்மேன் கிட்ட யாரோ விசாரிச்சிருக்காங்க… ஓ… காட் பதட்டத்துல யாரையும் கூப்பிடாம வந்துட்டேன். முதல்ல நம்ம பசங்களுக்கு ஃபோனை போட்டு வரச் சொல்லு… " என்றவன், தனது ஃபோனிலிருந்து விகாஷினியின் ஃபோட்டோவை காண்பித்து, " இந்த பொண்ணா பாரு." என்று காட்ட…

அவனோ, "ஆம்." என தலையசைத்தான்.

" புல்ஷிட் அவளோட அண்ணன்காரன் மாதிரியே எல்லாத்திலேயும் மூக்கை நுழைக்குறா… ஒரு தடவை பட்டும் அறிவில்லாமல் இவள் விஷயத்தில் அலட்சியமாக இருந்து விட்டேனே." என்று தன்னை நொந்துக் கொண்டான்.

" ஏன் என்னாச்சு தலைவா…" என அந்த அடியாள் வினவ.

" ப்ச்…. எல்லாம் அந்த பண்ணை வீட்டில் பொருள் கை மாற்றும் போது, விதுனை மயக்கத்துல வைத்திருப்பதற்காக ஜூஸ் குடுத்தோம். ஆனால் அவன் அதைக் குடிக்காமல், அங்கு நடந்த எல்லாத்தையும் வீடியோ எடுத்து வைத்திருக்கிறான் ராஸ்கல்." என்று அந்த அடியாளிடம் எல்லாவற்றையும் கூறிக் கொண்டிருந்தான் ரூபக்.

விதுன் ஏற்காடு போய் விட்டு வந்த பிறகு நடந்தவை.

' ஏற்காட்டில் இருந்து வந்த இரண்டு நாட்கள் யோசனையில் இருந்தான் விதுன்.

அவனை பார்த்த சமையல் வேலை செய்பவர், " ஏன் தம்பி டல்லா இருக்க... ஊருக்கு போய்ட்டு வந்தவந்ததிலிருந்து நானும் பார்க்கிறேன். நீங்கள் சரி இல்லை. ஏன் உடம்பு எதுவும் சரியில்லையா? ஹாஸ்பிடலுக்கு போக வேண்டியது தானே? " என கரிசனமாக கேட்டார்.

"ஒன்னும் இல்லை அங்கிள்." என்றான் விதுன்.

அவர் நீண்ட நாட்களாக அங்கு வேலை செய்பவர்.' இவரிடம் உதவி கேட்கலாமா…' என ஒரு யோசனை அவனுக்கு வந்தது. அவன் யாரையும் நம்புவதற்கு தயங்கினான். ஏனென்றால் அந்த பர்த்டே பார்ட்டி முடிந்ததிலிருந்து அவனுக்கு யாரை நம்பவும் அச்சமாக இருந்தது. தன்னுடைய உயிர் நண்பன், டிரைவர் , தன்னுடைய பி.ஏ, ஃபார்ம்ஹவுஸ் மேனேஜர், இப்படி எல்லோரும் தனக்கு துரோகம் செய்து இருக்க… யாரை நம்புவது என்றே தெரியவில்லை.

' சரி இவரிடம் உதவி கேட்போம்.' என்று நினைத்தவன், " அங்கிள் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா. நான் ஒரு வீடியோ கொடுக்கிறேன். அதை என் ஃப்ரெண்ட் சந்தீப்கிட்ட கொண்டு போய் கொடுக்கணும்." என…

அவரோ, " என்ன வீடியோ?" என அவசரப்பட.


சுதாரித்துக் கொண்டான் விதுன்.

"அதுக்கு பிறகு ஒன்னும் இல்லை அங்கிள்." என்றவன் தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்.
இவர் உதவுகிறேன் என்று சொன்னால் விக்கியிடம் சொல்லி, பாவனாவிடமிருந்து அந்த வீடியோவை அனுப்ப சொல்லுவோம் என்று எண்ணியிருக்க… இவரது ஆர்வம் அவனை தேக்கியது. அடுத்து என்ன செய்வது என்று தனது அறையில் யோசித்துக் கொண்டிருந்தான்.



ஆனால் அந்த சமையல்காரர் கொஞ்சம் கூட நன்றி, விசுவாசமின்றி, தகவலை யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு கொடுத்து விட்டான்.

ரூபக்கிற்கு பார்ட்டி முடியவும் சந்தேகம் வந்துவிட்டது. பார்ட்டி முடிந்த நாளுக்கு, அடுத்த நாளிலிருந்து விதுன் சரியாக அவனிடம் பேசவில்லை.


அவன் உடனே, விதுனின் பி.ஏ ரிதன்யாவுடன் டிஸ்கஸ் செய்தான்.
" ரிது… உனக்கு எதுவும் விதுனிடம் சேஞ்ச் தெரிகிறதா?" என்று வினவ.

" எனக்கு எதுவும் தெரியல ரூபக்." என்றாள்.

" எதுக்கு அவன் மேல கண்ணு வச்சுக்கோ. இந்த வீட்டில் சிசிடிவி கேமரா ரிப்பேரா இருந்ததே சரியாயிடுச்சா."

" அது சரி ஆயிடுச்சுன்னு ஃபோன் வந்துச்சுனு… போய் வாங்கணும்."

" ஓ….அப்ப வாங்க போகாத. ஊருக்கு போயிருக்கிறேன். சாரும் ஊர்ல இல்லை. வந்து வாங்கிக்கிறேனு சொல்லிடு. அவன் கிட்ட கொஞ்சம் விசாரிக்கணும். எந்த எவிடன்ஸும் இருக்கக் கூடாது." என்றான் ரூபக்.

இவர்கள் இப்படி திட்டம் தீட்டி இருக்க, விதுனோ யாரிடமும் சொல்லாமல் ஏற்காட்டிற்கு சென்று விட்டான்.


அது இன்னமும் இவர்களுக்கு சந்தேகத்தை கொடுத்தது. சரிதான் வந்தவுடன் விசாரிக்கலாம் என்று காத்திருந்தனர்.

இரண்டு நாட்களாக ரூபக்கிற்கு வேலை இருந்தது. அதனால் அவன் நேரடியாக விசாரிக்காமல், சமையல் ஆள் மூலம் பேச்சு கொடுத்து விசாரிக்கச் சொல்லி இருந்தான்.அவரும் ஏதோ வீடியோ இருக்கு என்று விதுன் சொன்னதாக கூறவும்,தான் நினைத்தது சரிதான் என்று எண்ணியவன் உடனே கிளம்பி வந்துவிட்டான்.

வீட்டிற்கு வந்த ரூபக்கைப் பார்த்தவுடன், வழக்கம் போல கேஷுவலாக பேச முயற்சித்தான் விதுன். ஆனால் அவனால் முடியவில்லை.

ரூபக்கோ அலட்சியமாக விதுனைப் பார்த்து, " அப்புறம் என்னமோ உன் போலீஸ் ஃப்ரெண்ட் கிட்ட வீடியோ கொடுக்கணும்னு சொன்னியாமே? அதை எடு. பார்ப்போம்." என்று கேட்டான்.


அவன் நேரடியாக கேட்கவும், விதுனும் கோபமாக, " டேய் உன்னைப் போய் நல்லவன்… உயிர் நண்பன் என்றெல்லாம் நினைத்திருந்தேன். அதற்கெல்லாம் நல்ல கைமாறு செய்துட்ட. ஆனால் உன்னை நான் சும்மா விடமாட்டேன். ஃபார்ம் அவுஸ்ல நீ செய்த வேலை எல்லாத்தையும் வீடியோ எடுத்துட்டேன் அதை போலீஸ் கிட்ட குடுத்து உனக்கு தண்டனை வாங்கித் தராமல் விடமாட்டேன். நீயெல்லாம் இந்த சமுதாயத்திற்கு கிடைத்த சாபக்கேடு. உன்ன மாதிரி ஆளுங்களால் தான் நாடு உருப்படாமல் போகுது. படிக்கிற பிள்ளைகளை இப்படி வீணாக்குறீயே… உன்னையெல்லாம் நடுரோட்டில் வைத்து சுடணும். உங்க அப்பா ஒரு நல்ல அரசியல்வாதி. நேர்மையானவர் என்று நினைத்திருந்தேன். ஒருவேளை அவருக்கும் இதில் சம்பந்தம் இருக்கா?" என்றவாறே அவனை கூர்ந்து பார்க்க.

திடுக்கிட்ட ரூபக் வேகமாக வந்து அவனது கன்னத்தில் ஒன்று விட்டான். திருப்பி விதுனும் அவனை அடிக்க... அங்கிருந்த மேனேஜரும், சமையல்காரரும் ஓடி வந்து விதுனைப் பிடித்துக் கொண்டனர்.

"எங்க அப்பாவை இதுல இழுத்தினா நான் சும்மா விடமாட்டான். முதல்ல நீ வச்சிருக்க ஆதாரத்தை குடு‌. இல்லைன்னா உன்னை உயிரோடு விடமாட்டேன்." என்றான்.

" அப்போ உங்க அப்பாவுக்கும் இதுல சம்பந்தம் இருக்கு. ரைட்…" என்றவன் சிரிக்க…

" டேய்.. திரும்பத் திரும்ப எங்க அப்பாவை இழுக்காதே. அந்த ஆளு வேற ஒரு பயந்தாங்கொள்ளி…. ஏற்கனவே அவர் பேரு எங்கேயும் வரக்கூடாது என்று சொல்லியிருந்தார். அதனால தான் உன்னோட ஃபார்ம் ஹவுஸ்ல இந்த வேலையைப் பார்த்தேன்." என்றவன், " சரி தான் இத்தனை காலம் பழகின பழக்கத்திற்காக கேட்கிறேன்‌. ஒழுங்கா அந்த ஆதாரத்தை கொடுத்திடு. இல்லனா…" என்று அவனைப் பார்க்க…

"இல்லைனா என்ன பண்ணுவ? என் கிட்ட இருந்து அந்த ஆதாரத்தை உன்னால் கைப்பற்ற முடியாது. உன்னால என்ன பண்ண முடியுமோ, பண்ணிக்கோ…" என்று நிமிர்வுடன் கூறினான் விதுரன்.

" ஓஹோ அப்படியா? அப்போ உன் உயிரை எடுத்துட்டா?" என்று சிரிக்க….

" என் உயிரே போனாலும், அந்த ஆதாரம் கரெக்டா போலீசுக்கு போய் விடும்.

" அவ்வளவு சீக்கிரம் உயிர் எல்லாம் எடுத்துர மாட்டேன். உன் கிட்ட இருந்து எப்படி வாங்கணும்னு எனக்கு தெரியும் என்று கூறியவன் மீண்டும் ஒரு உதை உதைத்தான். தன்னை இறுக பிடித்து இருந்த மேனேஜரையும்‍, சமையல்காரனையும் வெறுப்பாக பார்த்தான்.


அவனுக்கு உதவுவதற்கு தான் யாருமில்லை. ரூபக் அடித்து. அடித்து ஓய்ந்து போய் விட, விதுனிடமிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை.

ரிதன்யா கூட, "சார் அந்த வீடியோ மட்டும் எங்க இருக்குன்னு சொல்லிடுங்க. உங்கள விட்டுடுவாங்க." என்று நல்லவள் போல கேட்க.

" என் கண்ணு முன்னாடி நிக்காத... அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது." என விதுன் கர்ஜிக்க.


கோபம் வந்த ரிதன்யா அவனது கன்னத்திலே இரண்டு அடி அடித்தாள்.

எல்லோரும் அவள் அடிக்கவும் சிரிக்க… விதுனின் உள்ளம் உலைக்கலனாக கொதித்தது. அவர்களை ஒன்றும் பண்ண முடியாமல் துடித்தவன், கைகளை வேகமாக உதறி ரூபக்கை தாக்கினான்.


ஏற்கனவே அடி வாங்கியிருந்த விதுனை, வேகமாக தள்ளி விட்டான் ரூபக்.

கீழே விழுந்த விதுனோ, மாடிப்படியில் மோதி ரத்தவெள்ளத்தில் மிதந்தான்.

கீழே விழுந்தவனின் நெஞ்சின் மேல் காலை வைத்து ஒரு அழுத்து அழுத்தினான் ரூபக். விழுக்கென்ற சத்தத்துடன் விதுனின் உயிர் பிரிந்தது.


மேனேஜர் தான் முதலில் கவனித்தான். " சார் …. அவரு இறந்துட்டாரு." என்று கூற…

" ஷிட் "என்று தன்னை நொந்துக் கொண்டவன், "சரி முதல்ல இந்த வீட்டை சர்ச் பண்ணுவோம்." என்றவன் அந்த வீட்டை சல்லடை,சல்லடையாக தேடினான். அந்த ஆதாரம் தான் கிடைக்கவில்லை. அவன் போலீசில் கொடுக்க வேண்டும் என்று சமையல்காரரிடம் கூறியதால் ஆதாரம் இங்கு தான் இருக்கும் என்று அவர்கள் தேட‌… அதுவோ ஏற்காட்டில் பத்திரமாக இருந்தது.

ஆதாரம் கிடைக்கவில்லை எனவும் ஏமாற்றத்துடன் அடுத்து என்ன செய்வது என்று திட்டமிட்டான்.

" ரிது… நீ முதல்ல உங்க அம்மாவுக்கு முடியல ன்னு சொல்லிட்டு ஊருக்கு போயிட்டு, அங்கிருந்து தகவல் தெரிந்த மாதிரி வா‌." என்றவன் மேனேஜரிடம் திரும்பி, " நீங்க அந்த சிசிடிவி கேமரா கடைக்கு போன் பண்ணி, சிசிடிவி கேமரா சரியானதை யார்கிட்டயும் சொல்லக்கூடாது என்று மிரட்டி வைங்க." என்றான்.

" முதல்ல நாளைக்கு காலையில இவனோட பாடிய எடுத்துட்டு போய் ஆஸ்பத்திரில சேர்த்திடுவோம். அங்க போஸ்ட்மார்ட்டம் பண்ணி தற்கொலை தான் ரிப்போர்ட் தர மாதிரி நான் ஏற்பாடு செய்துடுறேன். அந்த ஹாஸ்பிடல்ல எல்லாரும் எனக்கு தெரிஞ்சவங்க தான். அதனால எந்த பிரச்சனையும் வராது. நீங்களும் யார் கேட்டாலும் தற்கொலையென்றே சொல்லுங்க . ஊருக்கு போயிட்டு வந்ததிலிருந்து டல்லா இருந்தான். லவ் பெயிலியர் என்று சொன்னான் என்று சொல்லிடுங்க. வேற எந்த பிரச்சினையும் வராது. எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்‌." என்று ஒரு உயிரை கொன்று குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் திட்டம் தீட்டினான் ' அடியாளிடம் எல்லாவற்றையும் ரூபக் கூறிக்கொண்டிருக்க…


அதைக் கேட்டதும் விகாஷினியின் நெஞ்சு கொதிக்க…. துள்ளி குதித்து அவனை கொள்ளும் வெறியோடு தாக்க முயற்சித்தாள்‌‌.'

அவளை இறுக அணைத்து, அவளது வாயைப் பொத்தி, அவளைக் கட்டுப்படுத்தியவாறே காலையில் நடந்தவற்றை யோசித்துக் கொண்டிருந்தவனை நிஜத்திற்கு கொண்டு வந்தாள் விகாஷினி.

" ப்ச்... என்னை விடு... மதி. நீங்க இப்படி அமைதியா இருக்கிறதைப் பார்த்தா, எனக்கு கோபம், கோபமா வருது. அவனைப் பார்த்து பயப்படுறீங்களா. என்னை விடுங்க, நானே அவனை அடிச்சு என் கையாலே கொண்ணுடுறேன்." என்று அவள் திமிற...

அவளைப் பார்த்து முறைத்த மதியமுதன், " நான் காலையில் நடந்ததை நினைத்துப் பார்த்தேன். நான் மட்டும் இன்னைக்கு உன்னை கிண்டல் செய்து ஸ்கூலுக்கு போக வைக்கவில்லைனா என்ன ஆகியிருக்கும் என்று யோசிட்டு இருந்தேன்."

" அது சரி தான் மதி. " என்றாள் கண்கலங்க...

" ஹனி... காம் டவுன். "

விகாஷினியோ, எல்லையில்லாத சோகத்துடன் அவனைப் பார்த்தாள்.


" ஹனி.‌.. தப்பு செய்தவனுக்கு தண்டனை உண்டு. இங்கப் பார்." என்றவன், இவ்வளவு நேரம் ரூபக் பேசிய அனைத்தையும் பட்டன்கேமரா மூலம் ரெக்கார்ட் செய்து இருந்ததை காண்பித்தான்.

 
Last edited:
Top