• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
கணவன், மனைவிக்குள் இருக்கும் ஊடலோ அல்லது கூடலோ அதனை மூன்றாம் நபர் சித்தரித்து பேசுவதும், விமர்சிப்பதும், கேலி செய்வதும், இழிவுபடுத்துவதும் என இவை அனைத்துமே எப்போதும் முறையற்ற பேச்சுகள் தான்.

நெருங்கிய தோழிகள் இதனைச் செய்வதையே விரும்பாத ஆழி ஈஸ்வரியின் பேச்சில் சீற்றம் எழ, நேத்திரம் கொண்டு ரௌத்திரம் காட்டி, மிரட்டி நின்றாள்.

ஆனால் அடுத்த நொடியே அவளவன் அம்புதியின் நெஞ்சில் மோதி நின்று அவனது கனல் பார்வையில் எரிந்து கொண்டிருந்தாள்.

இங்கே ஈஸ்வரியோ, 'என்னவாயிற்று இந்த ஆழிக்கு! தன்னை இங்கிருந்து பின்னங்கால் பிடரியில் இடிக்க ஓடும் அளவிற்கு மிரட்டி, விரட்டி நின்றவள் மந்திரம் போட்டதைப் போல் எங்கே மாயமாக மறைந்து போனாள்? எதிலோ மோதியது போல் அல்லவா கத்தினாள்!' என்ற யோசனையோடு வியர்வை வடிய சுவற்றோடு சுவராக ஒன்றிப் போனாள்.

ஆழிக்கு என்ன நேர்ந்தது என்ற அவா தலை தூக்க, கதவு இடுக்கின் வழியே கூர்பார்வை செலுத்தி தமக்கையவளைத் துளாவினாள். அங்கே அம்புதியின் கனல் பார்வையில் பஸ்பம் ஆகிக் கொண்டிருந்தவளைக் காண உள்ளம் குதூகலித்தது ஈஸ்வரிக்கு...

இருக்காதா பின்னே! சிறு வயதிலிருந்தே ஈஸ்வரிக்கு ஒன்று என்றால் முதலில் துடித்துப் போவது அம்புதியின் இதயம் தானே! எத்தனைமுறை அம்புதியின் கோபத்திற்கு ஆளாகியிருப்பாள் ஆழி!

அவனுக்கு திருமணம் ஆன பின்பும் கூட அதே அம்புதியாய் தனக்காக தன் மனைவியை எதிர்த்து நிற்கும் தன் காதலனைக் காண அவளுக்கும் கசக்குமா என்ன!

'மாட்டினே டி...' என்று நினைத்து கை கொண்டு இதழ் மூடி சிரிப்பை அடக்கி அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆர்வமாக கவனிக்கத் தொடங்கினாள்.

அங்கே ஆழியோ அம்புதி தன்னை முறைக்கிறான் என்று தெரிந்ததும், அதற்காக உள்ளுர மெல்லிய அச்சம் படர்ந்திருந்தபோதும் அதனை மறைத்து அவனை எதிர்க்கொண்டாள்.

திருமணத்திற்கு முன்பிருந்த ஆழியாக இருந்திருந்தால் இன்னேரம் அஞ்சி நடுங்கி அவனது பார்வையிலேயே பிற்பிறந்தாளிடம் மன்னிப்பு கோரிவிட்டு அவ்விடம் விட்டு சென்றிருப்பாள். ஆனால் இன்றைய நிலை அதுவல்லவே!

இதுவரை பயந்து நடுங்கியதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம்.... ஆனால் தற்போதைய தைரியத்திற்கு காரணம் அவன் அவளது கணவன் என்பதாலோ! அல்லது என்றுமில்லாமல் நேற்றிரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமோ! அதுவுமன்று காலை அவளிடம் அவன் செய்த சில்மிஷன்களோ! இவற்றில் ஏதோ ஒன்று தான் அவளுக்கு அந்த தைரியத்தைக் கொடுத்திருந்தது.

தன் அபு தன்னை முறைக்கிறான் என்று தெரிந்தபோதும், இவ்வளவு நெருக்கத்தில் நிற்கும் தன்னவனின் வதனத்தை கொஞ்சமே கொஞ்சம் அங்கம் அங்கமாக ரசித்துக் கொண்டிருந்தாள் ஆழி.

'கலைந்திருந்த கேசத்தை அவன் விரல்களால் கோதி நிற்க வைத்திருக்கும் அழகே அழகு தான்!'

நின் கோதிய கேசமதை
என் விரல்கள் கலைத்திடவே
உச்சுக்கொட்டலுடன் கூடிய
உன் செல்லக் கோபமதில்
உனைச் செல்லம் கொஞ்சி
மீண்டும் கேசம் கோதிட
வேண்டுமடா நான்!!!

என்று கவிதை வடிக்கத் தோன்றியது ஆழிக்கு...

நெற்றி சுருக்கி முறைத்து நிற்கும் போது மற்றவர்களுக்கெல்லாம் நெட்டுக் கோடுகள் என்றால் உனக்கு மட்டும் எப்போதும் படுக்கைக் கோடுகள் தான்.

நாணேற்றி விரைத்து நிற்கும் வில்லைப் போல் பிறைநுதல் ஏறி நிற்கும் உனது புருவங்களைக் காணும்போது தானாகவே கைகள் அதனை நீவி விடத் துடிக்கிறதே!

திருத்தம் செய்யாமலேயே காண்டீபம் போல் வளைந்திருக்கும் புருவங்கள் பெண்களுக்கு மட்டும் தான் அழகா என்ன! இதோ என்னவருக்கும் கூட கொள்ளை அழகு! கொள்ளையிடும் அழகு! கொஞ்சத் தோன்றும் அழகு!!!'

தன் மனம் செல்லும் போக்கைக் கண்டு அதிர்ந்தவள், தொலைந்து போன தன்னையும் தன் உணர்வுகளையும் வருடங்கள் கழித்தே மீட்டு எடுத்தது போல் பரவசம் கொண்டாள். அந்த உணர்வில் மேலும் கொஞ்சநேரம் திளைத்திட நினைத்து மீண்டும் தன் ரசனையைத் தொடங்கினாள்.

'முறைக்கும் போது கூட கருவிழிகள் இரண்டும் கருந்திராட்சைகளைப் போல் அல்லவா இங்கும் அங்கும் உருண்டு ஓடிக் கொண்டிருக்கிறது!

காலை எழும்போது நான் முறுக்கிவிட்டு ரசித்த மீசை இப்போது இன்னும் கொஞ்சம் நன்றாகவே முறுக்கி விடப்பட்டிருக்கிறதோ? இருக்கும்! இருக்கும்!' என்று நினைத்த நொடி கள்ளத்தனமாக சிரித்துக் கொண்டாள்.

'கோபத்தில் பற்களைக் கடிக்கும் போது தாடையின் இறுக்கங்களில் கூட என்ன ஒரு மிடுக்கு!!!

ஆண்களுக்கே உரிய இலக்கணத்துடன் வடிவமைக்கப்பட்ட சிலை போல் நிற்பவனின் கண்களில் காதல் பெருக்கெடுத்தால்!!!' என்று நினைக்கும்போதே அவளது உள்ளம் சிறகில்லாமல் பறக்கத் தொடங்கியது.

"ஏய்!!! யாரை மிரட்டிட்டு இருக்கேனு தெரிஞ்சு தான் செய்யிறேயா!!! பேசுறதுக்கு முன்னாடி யாரை பேசுறோம்! என்ன பேசுறோம்னு யோசிக்கமாட்டே! இனி ஒருமுறை மிரட்டிப் பாரு! அப்பறம் இருக்கு உனக்கு" என்று சத்தம் குறைவாக வந்த போதும் வார்த்தைகளில் அழுத்தம் அதிகமாகவே இருந்தது, அவனது வதனத்தைப் போலவே...

என்ன தான் சற்று தள்ளியிருந்த போதும் தன் செவிகளைத் தீட்டி கவனித்துக் கொண்டிருந்த ஈஸ்வரிக்கு அம்புதியின் வார்த்தைகள் தெளிவாகவே காதில் விழுந்தது. உள்ளம் பட்டாம்பூச்சியாய் பறந்தது சின்னவளுக்கு.

இங்கே ஆழியின் உள்ளம் கூட பட்டிம்பூச்சியாய் பறந்தது, அம்புதியின் கோபத்தில். இதுநாள்வரை அவனது கோபம் கண்டு நடுக்கம் கொண்டிருக்கிறாள்... பயந்திருக்கிறாள்... ஓடி ஒளிந்தினுக்கிறாள்... ஆனால் அவனது கோபத்தில் காதல் கொண்டது இது தான் முதல்முறை... அதன் காரணம் ஆழி ஒருத்தி மட்டுமே அறிவாள்.

மீண்டும் தன் உள்ளமதை மறைத்து, உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து, "பின்னே அவ பேசினதுக்கு கட்டியணைச்சு கொஞ்சவா செய்வாங்க!" என்று அவளும் அழுத்தமாக அதேநேரம் அம்புதியைப் போல் மெல்லிய குரலில் உரைத்துக் கொண்டே அவனின் மேல் கூர் பார்வை வீசினாள்.

தன் விருந்தனையின் பிசிறற்ற பேச்சும், பார்வையும் ஈஸ்வரியின் மேல் தான் தவறுள்ளது என்பதனை எதிர்வாதம் செய்யாமல் ஏற்றுக்கொள்ள வைத்திருந்தது ஆழியின் விழைந்தோனுக்கு...

எனவே கோபம் தணிந்து "சரிரிரி... அப்படியே அவ தப்பு செய்ததாவே இருக்கட்டும்... அவ உன்னைவிட சின்னப் பொண்ணு தானே. சொல்ற விதமா சொன்னா புரிஞ்சுப்பா தானே... அப்படி சொல்றதை விட்டுட்டு கொன்னுடுவேன்... குழி தோண்டி புதைச்சிடுவேன்-னு என்னடி பேச்சு இது! அவகிட்ட ஒரு வார்த்தை பேசுறதுக்கு முன்னாடி இனிமேலாச்சும் யோசிச்சு பேசு" என்று ஈஸ்வரியின் தவறு என்னவென்று கேட்டு அறிந்திட முற்படாமல் ஆழியைத் தான் தணிந்து போகச் சொல்லி அடிக்குரலில் கூறினான்.

அது தான் தவறாகிப் போனது. தவறு அவள் மேல் இல்லை என்று தெரிந்தும் தன்னை மட்டுமே கண்டிக்கும் அவனது வார்த்தைகளில் கோபம் கொண்ட ஆழியோ 'அதென்ன அவகிட்ட மட்டும் யோசிச்சு பேசனும்! தணிஞ்சு போகனும்! என்னைவிட அப்படி என்ன ஸ்பெஷல் அவ?' என அம்பக அம்புகள் கொண்டு அன்பனைத் தாக்கினாள்.

அம்புதிக்கோ, ஆழி இத்தனை நாள் வாய்மொழிச் சண்டையிட்டபோதும், சிலநேரங்களில் அவதூறு பேசியிருந்தபோதும், அப்போதெல்லாம் தோன்றாத உரிமை உணர்வு, அஞ்சனம் தீட்டாமலேயே உன்மத்தம் கொள்ளச் செய்யும் விழி வழி மொழிகளில் இப்போது தெரிந்திடவே காந்தவிழியவள் மீது அதீத ஈர்ப்பு கொண்டான் அவளது காந்தன்.

ஆழியின் நயன மொழியை புரிந்து கொண்டவனோ, சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்தவன், யாரும் கண்ணில் தென்படவில்லை என்றவுடன் ஆழியை இன்னமும் கொஞ்சம் நெருங்கி நின்று, கொஞ்சம் கொஞ்சமாக அவளது இடையை வளைத்திட, திடுக்கிட்டுப் போனாள் பெண்ணவள்.

பற்றாகுறைக்கு சமையல் அறையிலிருந்து ஈஸ்வரி வெளியேறினாளா இல்லையா என்று தெரியாததால், வெளியேறாமல் இருந்தால் இன்னேரம் இருவரும் நிற்கும் கோலத்தைப் பார்த்துவிடுவாளே என்ற பதற்றம் வேறு ஏறிக் கொண்டது ஆழிக்கு...

ஈஸ்வரியை நினைத்து பயம் ஏதும் கொள்ளவில்லை என்றபோதும், அவளது மனதில் துரும்பேனும் காயம் ஏற்படுத்தும் என்ற எண்ணமும், பார்க்காத விடயங்களையே சித்தரித்துப் பேசியவள், இப்போது நேரில் கண்டால் வெறும் வாய் மென்றவளுக்கு அவல் கிடைத்தது போல் அல்லவா ஆகிவிடும் என்ற எண்ணமும் தான் ஆழிக்கு.

அதற்காகவே கட்டியவன் பிடியிலிருந்து தப்பிக்கப் போராடினாள் கட்டுண்டவள். அதில் அம்புதியின் பிடி தளர்வதற்கு பதிலாக மேலும் கொஞ்சம் இறுக்கம் கூடியது.

ஆழியின் செவியருகே குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், "அவ என் லவ்வர், நீ என் வொய்ப்... அப்போ நீங்க தானே ஒருத்தருக்கு ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்... இப்படி தினம் தினம் சண்டை பிடிபாங்களா என்ன!" என்று அவன் கூறிய தோரணையில் அத்தனையும் மறந்து கோபத்தில் கொந்தளிக்கத் தொடங்கினாள் அணங்கவள்.

அக்கினி கண் கொண்டு நோக்கியவளின் விழிகளில் உரிமை உணர்வு, வெறும் உணர்வாக மட்டும் இல்லாமல் போராட்டமாக முளைவிடத் தொடங்கியது. அதனை மேலும் கொஞ்சம் தூண்டிவிட்டு அதில் குளிர்காய விரும்பிய அவளது காந்தனோ, "மாமாவே பார்த்தா பாவமா இல்லேயா உனக்கு! பெரியவ நீ தானே சின்னவளை அனுசரிச்சு போகனும்!!" என்றானே பார்க்கனும்...

தன்னிடம் வம்பு வளர்க்கும் நோக்கில் தான் இப்படியெல்லாம் பேசுகிறான் என்று தெரிந்திருந்தபோதும் அவளால் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது‌.‌

"தள்ளிப் போங்க" என்று கடிந்த பற்களுக்கிடையே மெல்லிய குரலில் மொழிந்திட, அம்புதிக்கோ சுவாரசியம் கூடியது.

"தள்ளிப் போகலேனா என்ன பண்ணுவா இந்த ஞானபாண்டி மவ!" என்று‌ நெற்றி சுருங்கி இதழ்களில் நையாண்டி தவழ வினவினான். அவனது கேள்வியிலேயே 'ஞானபாண்டியனின் மகள் இனி என்றும் இந்த அம்புதியை மனைவி என்பதை நொடிக்கொருமுறை நினைவு படுத்த என்னால் முடியும்' என்ற மிதப்பும் அவனது கண்களில் மிளிர்ந்தது.

ஆழிப் பேரலையும், அக்கினி பர்வதமும் ஒன்றாய் சேர்ந்தது போல் நீர் கொப்பளிப்பும், தீக்குழம்புமாக மாற்றி மாற்றி கண்களில் காட்டி மிரட்சி அளித்தாள் ஆழி.

அடுப்பறையில் நின்றிருந்த ஈஸ்வரியோ சண்டையிடும் சத்தம் கேட்காமல் போகவே மெல்லமாக தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்தாள். அம்புதி நின்றிருந்த கோலம் அவளை திடுக்கிடச் செய்ய, செய்வது அறியாது சிலையென நின்றிருந்தது ஒரு நொடி தான்.

அதற்குள் சுயம் பெற்று வெடுக்கென முகத்தை உள்ளே இழுத்துக் கொண்டு, நொடிக்கும் குறைவான நேரத்திற்குள் தன் இருப்பைக் காண்பிக்கும் விதமாக கதவு திறந்து மூடும் சத்தத்தோடு அடுக்களை விட்டு வெளியே வந்து நின்றாள்.

தன் எதிரே, ஆழியின் முதுகிற்கு பின்னால் கலங்கிய கண்களுடன் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தபடி நின்றிருந்த ஈஸ்வரியைக் கண்ட அம்புதியோ, 'இவளை எப்படி மறந்தேன்!' என்ற சிந்தனையோடு அவளது நீர் துளிர்த்திருக்கும் நயனங்களைக் கண்டு ஆழியின் இடை வளைத்திருந்த கைகளை தளர்த்திக் கொண்டான். ஆனால் முழுதுமாக விளக்கிக் கொள்ளவில்லை.

அம்புதியின் முகமாற்றத்திலேயே அவன் ஈஸ்வரியைத் தான் கண்டு செய்வதறியாது நிற்கிறான் என்பது புரிய அவனது அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காத்திருந்தாள் ஆழி.

மறுபக்கம் வெங்கடேஷ்வரியின் வரவையும் கண்டு கொண்ட ஈஸ்வரி, "என்ன மாமா! அக்கா எப்படி சமைக்கிதுனு பார்த்துட்டு போக வந்திங்களா! இல்லே அவளை வேலை செய்ய சொல்லி கஷ்டபடுத்துறது பிடிக்காம கையோட ரூமுக்கு அழைஞ்சிட்டு போக வந்திங்களா!" என புன்னகை தவழ, புதிதாக மனமுடித்த மாமனிடம் வம்பு செய்யும் குறும்புக்கார கொழுந்தியாளாக தன்னைக் காண்பித்துக் கொண்டு பேச, அவளது வார்த்தைகளில் உள்ள இகழ்ச்சி அம்புதிக்கு நன்றாகவே புரிந்தது.

அம்புதி பதிலேதும் கூறாமல் ஈஸ்வரியின் மேல் வலி நிறைந்த பார்வையை செலுத்திட, அவளோ அவனை சற்றும் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் மேலும் கொஞ்சம் அவனது மனதை ரணமாக்கினாள். "ஏன் கேக்குறேன்னா! ஒரு நிமிஷம் கூட அக்காவை பிரிஞ்சு இருக்க முடியாம கிச்சன் வரை பின்னாடியே விரட்டி வந்துட்டிங்களே அதான் கேட்டேன்!" என்றிட, அப்போதும் அவன் பதில் கூறாமல், 'போதுமே! இதற்கு மேல் பேச வேண்டாமே!' என்பது போல் பார்த்து வைத்தான்.

அதற்குள் அவள் அம்புதியிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே அவளின் அருகே நெருங்கியிருந்த வெங்கடேஸ்வரி தன் தங்கை மகளை கண்டித்தார், "ஏய் அதிக பிரசங்கி... வாயே வெச்சிக்கிட்டு சும்மா இருடி" என்றுவிட்டு, "இருங்க தம்பி உங்களுக்கு காபி எடுத்துட்டு வர்றேன்" என்று கூறி நகர்ந்தார். மறக்காமல் மகளின் மேல் 'எனக்கு முன்னால் நீ இதை செய்திருக்க வேண்டும்' என்ற கண்டிப்புப் பார்வையும் வீசிவிட்டு தான் சென்றிருந்தார்.

அடுக்களை நுழைந்தவரை வார்த்தைகளால் மட்டும் நெருங்கினாள் ஈஸ்வரி. வெங்கடேஸ்வரிக்கும் கேட்கும்படி சத்தமாக "பார்றா... மருமகனை வம்பு பண்ணினா மாமியாருக்கு கோபம் வருது... மை டியர் பெரிம்ஸ்... நான் என் மாமாகிட்டே தானே கேட்டுட்டு இருக்கேன்... என் அக்கா ஹஸ்பண்ட் கிட்டே எப்பவும் வம்பு பண்ற உரிமை எனக்கு உண்டு..." என்று அப்போதும் கேலி செய்வது போலவே உரைத்து, அம்புதியின் வலது பக்க புஜத்திற்குள் கைகளைக் கோர்த்துக் கொண்டு அவன் அருகே வந்து நின்றாள்.

மேலும் கொஞ்சம் அம்புதியை திணறடிக்க நினைத்தவள் அத்தோடு நிறுத்தாது, அம்புதியிடமே அதற்கு உரிமம் கேட்டு நின்றாள், "எனக்கு உரிமை இருக்கு தானே மாம்ஸ்?" என்று..‌

ஈஸ்வரியின் கைகள் அம்புதியின் கைகளோடு கோர்க்கப்பட்ட மறு நிமிடமே ஆழி தன்னவனின் அருகாமையை தவிர்த்து அவ்விடம் விட்டு நகர்ந்து செல்ல முற்பட்டாள். ஆனால் ஆழியின் கைவிரல்களை அழுத்தமாக பிடித்து அவள் தன்னைவிட்டு அகலாத படி தன்னோடு சேர்த்து நிறுத்திக் கொண்டான் அம்புதி.

மேலும் ஈஸ்வரியிடம் திரும்பி, "உனக்கு இல்லாத உரிமையா ஈஷ்... வேற யாரையுமா வம்பு பண்றே! என்னைத் தானே!" என்றிட, அடுத்த நொடியே ஆழி, ஈஸ்வரியின் கண்களுக்கு மறைவாக அம்புதியின் இரும்புப் பிடியிலிருந்து தன் கைகளை உருவிக் கொண்டு தங்கள் அறை நோக்கி சென்றாள்.

அவளது கண்ணாளனோ "வம்பு பண்றது வரம்போட இருந்தா எல்லாருக்கும் நல்லது ஈஸ்வரி..." என்று தன்னைக் கோர்த்திருந்த ஈஸ்வரியின் கைகளை வம்படியாக விலக்கிவிட்டு, சீற்றம் இல்லாமல் அதே நேரம் அழுத்தமான குரலில் ஈஸ்வரிக்கு மட்டும் கேட்கும்படி உரைத்து விட்டு, பின்பு நிதானமாக "படிப்பு முடிச்சிட்டு வேலைக்கு போ... உன்னைத் தேடி ஒருத்தன் வருவான், அவனுக்கு உன்னுடைய உண்மையான காதலை 100% கொடு.... நான் உன் அக்காவை விரும்புறதை விட அவன் உன்னை அதிகமாகவே விரும்புவான்..." என்று நிதர்சனம் எடுத்துரைத்து விட்டு தங்கள் அறை நோக்கிச் சென்றுவிட்டான்.

ஈஸ்வரிக்கு தனது உயிர் வேரறுத்துச் செல்வது போல் உள்ளுக்குள் மொத்தமாக உடைந்து போனாள். மற்றவர்களைப் போல் அக்காளை கட்டியவன் என்ற உரிமையில் கூட இனி அம்புதியை நெருங்கிட முடியாது என்று நினைக்கையில் தனது வரம்பு இனி தள்ளி நிற்பது தான் என்று தெரிந்தும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதவளாய் நின்றாள்.

அம்புதியோ ஆழியின் மேல் கடும் கோபத்தில் இருந்தான். மனம் மாற்றி கொண்டவளிடம் இத்தனை நாள் பெறப்பட்ட உரிமைகள் அத்தனையும் இப்போது மணம் மாற்றிக் கொண்டளுக்கு உரித்தானவை என்றே நினைத்தான். அப்படி இருக்கையில் தன் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டியவள் தன்னை விலகிச் சென்றிட விரட்டிச் சென்று சண்டையிடும் வெறி அவனுக்கு.

அறைக்குள் நுழைந்த கையோடு தாளிட்டுக் கொண்டு, "ஏய்... என்ன நெனச்சிட்டு இருக்கே உன் மனசுலே!" என்று ஆழியைப் பார்த்து கத்தத் தொடங்கினான்.

ஈஸ்வரியுடன் சக கிழத்தி சண்டை செய்யப் பிடிக்காமல் அவசரத்திற்கு அறைக்குள் நுழைந்தவள், அடுக்கி வைத்திருந்த பொருட்களையே மீண்டும் ஒருமுறை தூசு தட்டி அடுக்கியபடி "என்ன நினைக்கனும்?" என்று ஆற அமர எதிர்கேள்வி விடுத்தாள் ஆழி.

ஆழியின் எதிர் கேள்வியில் எறிச்சலுற்ற அம்புதியோ, அவளது சட்டைகெட்ட தனத்தைக் கண்டு சற்றே சிடுசிடுப்பாக "தப்பு தான் டி, அவளை லவ் பண்ணினதும் தப்பு தான். உன்னை கல்யாணம் செய்துகிட்டதும் தப்பு தான். ஆனா அதை சரி செய்யனும் நினைக்கிறேன் நான்." என்று தன் இற்கிழத்தியை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான்.

'அதற்காக என்னை ஏன் வதைக்க வேண்டும்!' என்று கேட்கத் தோன்றினாலும் எதுவும் பேசாமல் தன் பணியே தலையாய கடமை என்பது போல் நின்றவளை முரட்டுத் தனமாக பிடித்து இழுத்து தன்னைக் காணச் செய்தவன்,

"நான் கஷ்டப்பட்டு அவளை வார்த்தையால கூட என்னை நெருங்க விடாம ஒதுக்கி வெச்சா நீ இவ்வளோ ஈஸியா என் கை கோர்த்து நிற்க, என்னை நெருங்க அலவ் பண்ணுறே!" என்று ஈஸ்வரி அவனை நெருங்கி நின்றதற்கு ஆழியின் மேல் பாய்ந்தான்.

"உங்களை யார் நெருங்கினா எனக்கென்ன? உரிமை இருக்கிறவங்க நெருங்கி நிக்கிறாங்க... அப்போ உரிமையில்லாதவங்க விலகி நிக்கிறது தானே சரி!" என்றாள் அவன் வெளியே வைத்து விளையாட்டாய் பேசிய அனைத்திற்கும் சேர்த்து.

அவளது பார்வையோ 'பெரியவளா நான் சரியா அனுசரிச்சு நடந்துக்கிறேனா?' என்றது அம்புதியைப் பார்த்து... அதில் தாடை இறுக, உடல் விரைத்து நின்றவன், அதன் வழியே தன் பதிலையும் உரைத்திருந்தான்.

பிடித்திருந்த அவளது புஜங்களை மேலும் கொஞ்சம் அழுந்தப் பிடித்து இன்னும் கொஞ்சம் தன்னை நெருங்கி நிற்கச் செய்து, "யாருக்கு டி உரிமை இல்லே? உனக்கா?" என்று எகிறியவன், அவளது கழுத்திலிருந்த பொன் சரடை எடுத்துக் காண்பித்து

"இதெல்லாம் இப்போ வந்த உரிமை.... அதுக்கெல்லாம் முன்னாடியே! நீ பிறந்ததிலிருந்தே இருக்கு டி உனக்கும் எனக்குமான உரிமை... ஒரு வயசுல உனக்கு மொட்டை அடிச்சு காது குத்தும் போது உன் தாய் மாமன் மடில உக்காராம என் மடில தான் உக்காருவேன்னு அழுதேயே! அப்போ ஆரம்பிச்சது டி உன் உரிமை.....

உனக்கு பரிசம் போடும் போது நான் வாங்கி வந்த தாவணியைத் தான் உனக்கு மொதல்ல கட்டி விடனும்னு உன் அம்மம்மா கூட நான் சண்டை போட்டேனே! அப்போ ஆரம்பிச்சது என் உரிமை.....

அதெல்லாம் புரியலேனாலும், இதாவது புரியுதா பாரு" என்றவன் நொடியும் தாமதிக்காது அவள் அதரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கினான்.

ஆழியின் நிலையோ சொல்லவே தேவையில்லை என்பது போல் ஸ்தம்பித்து நின்றிருந்தாள்.

அம்புதியின் மனதில் கூட இந்த விடயங்கள் எல்லாம் பதிந்திருக்கிறதா! தான் பருவம் அடைவதற்கு முன்பிருந்தே தன்னோடு முட்டிக் கொண்டு நின்றவர் தானே! இருந்தும் எப்படி தனக்கு தாவணி எடுத்தார்! அதிலும் அதைத் தான் முதலில் அணிவிக்க வேண்டும் என்று சண்டை இட்டு இருக்கிறாராமே! என்ற பிரம்மிப்பு...

அந்த போதையில் திளைத்து இருந்தவளுக்கு அம்புதியின் தற்போதைய ஆக்கிரமிப்பு துளியும் மனதில் பதியவில்லை.

அம்புதியோ தன்னவளுடனான குற்றவுணர்வு அற்ற முதல் இதழ் முத்தத்தில், உள்ளுணர் ஆழிக்குள் மூச்சிரைக்க மூழ்கிக் கொண்டிருந்தான்.

நிதானத்தில் இருந்தவனால் ஆழியைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. அலைகடல் நாமம் கொண்டவள் தனது கொண்கன் செயலை எவ்வாறு ஏற்பாள்! தன்னை புரிந்து கொள்வாளா? அல்லது அன்றைப் போல் இன்றும் கலங்கி நிற்பாளா? என்ற சிந்தனையில் இருந்தவன், தன்னவளை விட்டு விலகி அவள் முகம் கண்டான்.

வதுகையவள் வதனத்தில் அத்துனை காதல்! கண்களில் காதல் மிளிர தன்னை நோக்கியவள் முகத்தில் குழப்பங்களும் ஏராளம்... விலகிய வேகத்தில் மீண்டும் ஒருமுறை அவள் இதழ்களை முற்றுகையிட்டான்.

அம்பகங்களில் சொட்டும் காதலை தனது கண்களால் பருகியபடி, முதலில் மென்மையாக, பின் வன்மையாக, செல்ல கடிகள் கொஞ்சம், கடியினால் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திடும் மார்க்கம் கொஞ்சம், முத்த சித்ரவதைகள் அதிகம், மூச்சடைக்கச் செய்யும் மோதல்களும் அதிகம் என ஒரே முத்தத்தில் ஒட்டு மொத்த உணர்வுகளையும் வெளிக் கொணர முற்பட்டான்.

காதல் கரை எட்டுமா!
 
Top