• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
ஆய்வுக்கூடத்தில் நுண்ணோக்கி வழியாக மரபணுக்களை காணச் செய்து, பாடம் நடத்திக் கொண்டிருந்தான் வேந்தன்.

"கிர்ர்ர்... கிர்ர்ர்" அலைபேசியின் அதிர்வொலி தான் அது.

"Guys, put your phone on silent mode" என்று தன்மையாக உரைத்துவிட்டு தன் பாடத்தைத் தொடர்ந்தான். இரண்டு நிமிட இடைவெளி கூட இல்லாமல், சற்று நேரத்திலேயே மீண்டும் அலைபேசியின் அதிர்வு ஒலி.

"Just switch off your phones..." என்று சற்று அழுத்தமாக கூறிவிட்டு தன் பாடத்தைத் தொடர்ந்தான்.

மீண்டும் அதே குறுகிய கால இடைவெளியில் யாருடைய திறன்பேசியோ அதிர்ந்திட,

வேந்தன் பாடம் எடுப்பதை நிறுத்திவிட்டு, அனைவரையும் ஆராய்ச்சி பார்வை பார்த்தான். மற்ற மாணாக்கரும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர், ஆழியைத் தவிர...

இடையூறுக்கு காரணமாக இருந்தவளோ இப்போது தான் தனது திறன்பேசியை எடுத்து, அவசர அவசரமாக அதன் நிசப்த செயலியை முடக்கி, சட்டென தோள்பைக்குள் போட்டுக் கொண்டு, "சாரி சர்" என்றாள்.

"ஸ்விட்ச் ஆப் பண்ணிடு... அதான் உனக்கு நல்லது" என்று அவளுக்கு தனியாக தமிழில் வேறு எச்சரித்துவிட்டு, வேந்தன் தன் பாடத்தைத் துவங்க, மீண்டும் அலைபேசி அதிர்வொலி. அனைவரின் பார்வையும் தானாகவே ஆழியைத் திரும்பிப் பார்க்க, அவளோ தோள் குலுக்கி தான் இல்லை என்றாள்.

ஓசை முன்னால் இருக்கும் ஆசியர் மேசையிலிருந்து வர, அனைவரிடமும் மன்னிப்பு கேட்கும் பார்வையை வீசிவிட்டு தனது விரிவுரையைத் தொடங்கினான் வேந்தன்.

மீண்டும் குறுந்தகவல் வருவதற்கான அடையாளமாய் அதிர்வொலி விட்டுவிட்டு ஒலிக்க, "sorry guys... Repeat the same process and note down the results... I'll be back soon." என்று கூறி தனது திறன்பேசியோடு வெளியே சென்றான்.

ஆழியும் அவசரமாக தனது திறன்பேசியை எடுத்துப் பார்த்தாள். அழைத்திருந்தது ஈஸ்வரி தான். மறு அழைப்பு விடுக்க மறுபக்கம் அழைப்பு ஏற்கப்படவில்லை..

வேந்தனைப் பற்றி அறிந்திருந்த ஸ்வாதி நட்பிற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாய்...

"ஏய் மித்து... யாரு?"

"சிஸ்டர் தான் டி... எடுக்க மாட்டேங்கிறா... இன்னொருக்க ட்ரை பண்றேன்"

‌‌ "இப்போ வேண்டாம்... சொன்னா கேளு... அப்பறமா பேசிக்கலாம்" என்றவளின் பேச்சை காது கொடுத்துக் கேளாமல், மீண்டும் அழைத்திருந்தாள் ஆழி.

"அப்படி என்ன டி! தலை போற விசயமா என்ன! நீ தேவையில்லாம மாட்ட போறே!" என்று இவள் திட்டிக் கொண்டிருந்த நேரம் மறுமுனையில் ஈஸ்வரி ஆழியின் அழைப்பை ஏற்றிருந்தாள்.

"ஈஷ் நான்..." என்று ஆழி தனது நிலையை எடுத்துரைக்க வாய் திறக்க, அங்கே ஈஸ்வரி அவள் கூற வந்ததை கொட்டி முடித்திருந்தாள்.

"ஈவ்னிங் வீட்டுக்கு வரேன்... ‌ மாமாவே வந்து பிக்-அப் பண்ணிக்க சொல்லு" என்றாள் திமிராக.

ஈஸ்வரியின் இந்த நேரடி அணுகுமுறைக்கு காரணம், 'தானே தன் கணவனை அவளுடன் இயல்பாக பேச, பழக அனுமதித்தது தான்' என்று ஆழிக்கு நன்றாகவே புரிந்தது. அதனோடு சேர்த்து ஈஸ்வரியின் ரகசியங்கள் அம்பலமானதால் இனி ஒழிவு மறைவிற்கு அவசியம் இல்லை என்று நினைத்தால் போல.

ஆனால் தங்கையவள் எப்போது புரிந்து கொள்வாள்!!! அம்புதிக்கும் ஈஸ்வரிக்கும் இடையில் இருப்பது என்ன மாதிரியான உணர்வு என்று!' என்ற சலிப்பு‌ சற்று அதிகப்படியாகவே தோன்றியது ஆழிக்கு.

"நீயே சொல்ல வேண்டியது தானே!" என்று இப்போது ஆழி திமிராக உரைத்தாள் தன் அபு என்ன பதில் உரைப்பான் என்று அறிந்தவள்.

அதற்குள் தன் எதிரில் நிழலாட, ஆழி நிமிர்ந்து பார்ப்பதற்குள் வேந்தன் அவள் கையிலிருந்த அலைபேசியைப் பரித்து மொத்தமாக அணைத்து வைத்திருந்தான். பற்றாக்குறைக்கு ஆழியின் புத்தகத்தை பிடிங்கி பார்க்க, அது அவன் எடுத்துக் கொண்டிருக்கும் பாடபிரிவே இல்லை.

அதில் மேலும் கோபமுற்றவன், "நேத்து ரெக்கார்ட்ஸ் சப்மிட் பண்ண சொன்னதுக்கு இன்கம்ப்ளீட்டடா வெச்சிருந்தே... இன்னைக்கு அதை விட சூப்பர்... ரெக்கார்ட் புக் மாத்தி எடுத்திட்டு வந்திருக்கே! என் கரியர்ல எனக்கு ஒபே பண்ணாத ஒரே ஸ்டூடன்ட்... பஸ்ட் அன்ட் வொர்ஸ்ட் ஸ்டூடென்ட் நீ ஒருத்தி தான்.

எப்படியும் க்ளாஸ்ல இருந்து ஒன்னும் கலட்ட போறது கிடையாது... வெளியே போனா சீனியர்ஸ் கூட விளையாடத் தான் செய்வே! சோ நீ செய்த தப்புக்கு பனிஸ்மெண்ட்டா ஹோல் டேவும் நீ நான் என் லாப் அஸிஸ்டன்ட்" என்று உரைத்துவிட்டு

கையோடு அங்கே நின்றிருந்த கல்லூரி மேலாண்மையால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்கூட உதவியாளரையும் ஓய்வு அறைக்கு அனுப்பி வைத்தான்.

"மத்த ஸ்டூடன்ட்ஸ் என்ன கேட்குறாங்கனு கேட்டு, எங்கே இருக்கோ பார்த்து எடுத்துக் கொடு..‌‌." என்று அவளுக்கு வேலையை கொடுத்துவிட்டு அவன் ஓய்வாக அமர்ந்து கொண்டான்.

'இவர் மட்டும் க்ளாஸ் டைம்ல ஃபோன் பேசலாம்... ஸ்டூடன்ட்ஸ் பேசினா பனிஸ்மென்ட்... இது எந்த ஊரு நியாயம்?' என்று இதழ் முனுமுனுத்துக் கொண்டே தான் வேலை செய்தாள்.

வேந்தனுக்கோ ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு... மகிழ்ச்சி என்று கூட சொல்லலாம். ஆழியின் பொழுதுகள் நேற்று புவனுடன் செலவிட்டது போல் மகிழ்ச்சி நிறைந்ததாக இல்லாமல் முகம் நிறைந்த வாட்டத்துடன் தன் கண் முன்னே வலம் வருவதாலோ! என்னவோ!

அல்லது அவளது கடைக்கண் முறைப்பில் வெளிப்பட்ட கோபம் மற்றும் தன்னை திட்டும்போது அவளது இதழ்கள் ஆடிய நாட்டியம் என இவைகள் இரண்டில் ஏதோ ஒரு காரணத்தினால் கூட அவன் மகிழ்ந்திருக்கலாம்...

அது அவன் மட்டுமே அறிந்த ஒன்று. இதழ் மறைத்து அவளை மட்டுமே நினைத்து தனக்குத் தானே சிரித்துக் கொள்ளவும் செய்தான்.

அடுத்த பாடவேளைக்கான மணியோசை கேட்கவே, ஆளுக்கு முன்னதாக தன் புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தவளை தடுத்து நிறுத்தினான் வேந்தன்.

"எங்கே எடுத்து வெச்சுட்டு ரெடியாகிட்டிங்க மேடம்! உங்களுக்கு ஹோல் டே பனிஸ்மென்ட்னு சொன்னேன்..." என்று நக்கலாக உரைத்து விட்டு, மீண்டும்

"உள்ளே போயி, டெஸ்ட் டியூப்ஸ் அன்ட் க்லாஸெஸ் எல்லாம் வாட்டர் வாஷ் பண்ணனுமா! இல்லே கெமிக்கல் வாஷ் பண்ணனுமா?-னு கேட்டு அந்த வேலையைப் பார். நெக்ஸ்ட் பேட்ச் ஸ்டூடன்ட்ஸ் வர்றதுக்குள்ள இந்த வேலையை முடிச்சிருக்கனும்... Go and do it quickly." என்று சற்று விறைப்பாகவே அவளுக்கு கட்டளை பிறப்பித்தான்.

அவளும் வேறு வழியில்லாமல் வேந்தன் கூறிய வேலைகளை செய்யச் சென்றாள். தற்போது வந்திருந்த மாணவர்கள் புவனின் வகுப்பைச் சேர்ந்த சீனியர் மாணவர்கள். ஆய்வு கூடத்தில் ஆழியைக் கண்ட புவன், உள்ளே நுழையும்போதே குழப்பமாக "என்ன?" என்று கைகளால் வினவினான்.

ஆழி பதிலுக்கு கண்களால் வேந்தனைக் காண்பிக்க, புவனும் வேந்தனைக் கண்டபோதும் ஒன்றும் புரியாமல் முழித்தான். ஆய்வுக்கூட உதவியாளர் செய்ய வேண்டிய பணிகளை தன் தோழி செய்வதைக் கண்டு, அவள் தன் மேசை அருகே வந்தபோது,

"நீ ஏன் இதெல்லாம் செய்யிறே!" என்றான்.

"பனிஸ்மெண்ட்" என்று மட்டும் கூறிவிட்டு அடுத்த மேசைக்குச் சென்றாள்.

புவனுக்கு இப்போது புரிந்தது அவள் ஏன் வேந்தனை கண் காண்பித்தாள் என்று. அடுத்த முறை ஆழி தன் அருகே வந்தபோது "அப்படி என்ன வேலை செய்து வைத்தாய்?" என்றான்.

"ரெக்கார்ட் புக் மாத்தி எடுத்துட்டு வந்துட்டேன்" என்று அவள் ரகசிய குரலில் உரைக்க, பதிலுக்கு அவனும் இதழ்களை கீழ்நோக்கி வளைத்து, புருவங்களை மேலே தூக்கி முகத்தில் பெருமிதம் காட்டி, இடது கை விரல்களை விரித்து உயர்த்திக்காட்டி 'கிரேட்' என்றும், அடுத்தே 'சூப்பர்' என்று செய்கை காண்பித்தான்.

புவன் கேலி செய்கிறான் என்றவுடன் ஆழியும் தன் இதழ் சுழித்து பலிப்பு காட்டிவிட்டு அடுத்த மேசை நோக்கிச் சென்றாள்.

இவை அனைத்தும் வேந்தன் பார்வையிலிருந்தும் தப்பவில்லை. புவனும் ஆழியும் வேந்தன் தங்களை கவனிப்பதை கவனிக்கவில்லை.

ஒவ்வொரு முறையும் ஆழியை தன் மேசைக்கு ஏதேனும் ஒரு காரணம் கூறி வரவழைத்து ஒவ்வொரு செய்தியாக அவளுக்கு கடத்தினான் புவன்.

"இந்தாளு க்ளாஸ் தான் போர் அடிக்காம இருக்கும்... ஆனாலும் இவன் க்ளாஸ்லேயும் மோஸ்ட் அவுட் ஸ்டான்டிங் ஸ்டூடன்ட் நீ தான்" என்று கலாய்த்தான்.

"அவருக்கு என் மேல காண்டு... எப்போடா ச்சான்ஸ் கிடைக்கும் என்னை வெளியே அனுப்பலாம்னு துடியா துடிக்கிறார்." என்று புலம்பினாள்.

"என்ன பாடம் படிக்கிறோம்? என்ன புக் கையில வெச்சிருக்கோம்னு கூட தெரியாம வந்துட்டு, வாத்தியாரை குறை சொல்றேயா!" என்று திட்டி தீர்த்ததுடன், 'அனுபவி' என்று கூறி தன் பங்கிற்கு சற்று நேரம் பம்பரமாக அழையவிட்டான்.

ஆனாலும் ஆழியின் வாடிய முகம் கண்டு, தன் நட்பு வட்டாரம் மற்றும் அருகில் இருக்கும் மாணாக்கர்களிடம் மித்துவை உதவி கேட்டு அழைக்காதே என்று கூறி வைத்திருந்தான்.

அதன் பலனாய் மாணவர்கள் தங்கள் தேவைகளை தங்களுக்குள்ளாகவே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து தீர்த்துக் கொள்ள, மாணவிகள் ஒருசிலர் ஆழியை உதவிக்கு அழைத்தனர்.

அப்படி அழைக்கும் மாணவிகளை கண்களாலேயே 'அழைக்காதே' என்று மிரட்டல் விடுத்து பயம்காட்டினான் புவன். மேலும் ஆழியை அழைத்து தன் அருகே நிற்க வைத்துக் கொண்டான். அதன்பின் மாணவிகளும் அவளை அழைத்து வேலை வாங்கிடவில்லை.

வெகு நேரமாய் ஆழி ஒரே மேசையில் நின்றிருப்பதைக் கண்டு வேந்தன், ஆழியை அழைத்து வேதி திரவியங்களை பாதுகாக்கும் அறைக்கு அனுப்பி அங்கே சுத்தம் செய்து அடுக்கி வைக்கும் பணியை ஏவினான்.

ஆழியோ புவனைப் பார்த்து 'எல்லாம் உன்னால தான்' என்று முறைத்து விட்டுச் சென்றாள். புவனுக்குமே அதே எண்ணம் தான் தோன்றியது. 'வேந்தனுக்கு மித்துவின் மேல் அப்படி என்ன கோபம்! ஏன் இப்படி அவளை பாடாய் படுத்துகிறார்?' என்று யோசித்தபடி தன் பணியைத் தொடர்ந்தான்.

‌‌ அந்த பாடவேளையோடு கல்லூரியும் முடிவடைந்திட, ஆழிக்காக ஆய்வுக்கூடத்தின் வெளியே காத்திருந்தான் புவன். அதேநேரம் ஸ்வாதியும் ஆழியைத் தேடி ஆய்வுக்கூடம் வர, இருவரும் ஒன்றாக இணைந்து கொண்டனர்.

சீனியரும், ஸ்வாதியும் பல விடயங்கள் கதைத்துக் கொண்டனர். அதில் பெரும்பாலும் ஆழி சம்மந்தப்பட்டிருப்பாள். நேரம் போவது தெரியாமல் கதைத்துக் கொண்டிருந்தவர்கள், அப்போது தான் ஆழி இன்னமும் ஆய்வுக்கூடம் விட்டு வெளியே வரவில்லை என்பதனை உணர்ந்தனர்.

உள்ளே சென்று அழைத்து வரலாம் என முடிவெடித்து உள்ளே நுழைய அப்போது அவர்கள் கண்ட காட்சி, ஆழியின் கையிலிருந்த அமிலக் குடுவை ஒன்று கீழே விழுந்ததைத் தான்.

அது ஆழியின் கை தவறி விழுந்ததா! அல்லது அருகில் நின்றிருந்த வேந்தனின் கைங்கரியத்தால் விழுந்ததா! என்று புவனுக்குள் சந்தேகம் எழுந்திட, இருவரையும் தள்ளி நின்று கவனிக்கத் தொடங்கினான்..

ஸ்வாதியையும் கைபிடித்து தன்னோடு சேர்த்து மறைவாக நிற்க வைத்துக் கொண்டான்.

அமில நெடியில் ஆழிக்கு இருமல் வந்துவிட, வேந்தன் குழாய் தண்ணீரை மற்றொரு குடுவையில் பிடித்து சிந்திய அமிலத்தின் மேல் ஊற்றினான். அவள் பாதங்களிலும் சில அமிலத் துளிகள் தெரித்திருக்க, கையில் கொஞ்சமாய் நீர் எடுத்து அதனை துடைத்து விட்டான்.

அதில் பதற்றமடைந்த ஆழி, ஓரடி பின்னால் நகர்ந்து அவன் கைபிடித்து தடுத்து அவனைப் போலவே கால் ஊன்றி அமர்ந்து, "சர்... ஒரு ப்ரஃபசர் மாதிரி பிகேவ் பண்ணுங்க ப்ளீஸ்" என்று சிடுசிடுத்தாள்.

அதற்கும் வேந்தன் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆழியை ஓர் ஆழ்பார்வை பார்த்துவிட்டு, "சரி... நீ கிளம்பு... நான் க்ளீன் பண்ணிக்கிறேன்" என்று உடைந்த கண்ணாடி துண்டுகளை எடுக்கத் தொடங்கினான்.

ஆழியும் கண்ணாடித் துண்டுகளை எடுத்தபடி, "பரவாயில்லே... நானே பண்றேன்" என்றாள்.

வேந்தன் ஆழியின் கைபிடித்து தடுக்க நினைத்து, தன் கையை நீட்டிட, அவனது எண்ணம் புரிந்தவள் சட்டென தன் கையை பின்னால் இழுத்துக் கொண்டு அவனை முறைத்தாள்.

வேந்தனும் பெருமூச்சு விட்டபடி தன் பேச்சைக் கேட்காமல் அடம்பிடிப்பவளை தான் முறைத்துக் கொண்டிருந்தான். அவனது பார்வைக்கான அர்த்தம் புரிந்தபோதும், சுத்தம் செய்யும் பணியைத் தொடர்ந்தவள் கையை, ஒரு கண்ணாடி சிள் பதம் பார்த்திருந்தது.

நொடிக்குள் விரல் நுனியில் கிரீடமிட்டிருந்த செங்குருதி வேந்தனின் உள்ளமதை சோதித்துவிட்டிருந்தது.

"இதுக்கு தான் சொன்னேன்" என்று பல்லைக் கடித்துக் கொண்டு பதறியவன், மெல்லிழைத்தாளின் உதவியோடு ரத்தத்தை துடைக்க, அது நின்றபாடில்லை. கொட்டித் தீர்க்கவிவ்லை என்றபோதும் சொட்டு சொட்டாக வடிந்து கொண்டே தான் இருந்தது.

துடைத்த மறுநொடியே செங்குருதி கூடாரமிட்டு நின்றிட, தன் கைகுட்டையை எடுத்து ஈரத்தில் நனைத்து, அவள் விரலில் சுற்றிவிட்டான்.

இதற்கிடையே ஆழி பலமுறை தன் கை விரலை உருகிக் கொள்ள முயற்சிக்க, அத்தனை முயற்சிகளும் முயற்சிகளாகவே முடிந்திருந்தது. வெற்றி வேந்தனை சென்றடைந்திருந்தது.

வலியும், தன் இயலாமையும், வேந்தனின் பிடிவாதமும் இணைந்து ஆழிக்கு அழுகை முட்டிக்கொண்டு வர, அவன் முகம் பார்ப்பதை தவிர்த்தாள்.

தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவளை, குனிந்து நோக்கி,

"ரொம்ப பெய்ன்னா இருக்கா?" என்று உருகியவனைக் கண்டு கோபம் கொண்டாள் ஆழி. அதில் தேங்க நின்ற கண்ணீர் கூட கரைந்து போக,

"ப்ரஃபசர் சர்... கன்ட்ரோல் யுவர் நான்-சென்ஸ் எமோஷன்ஸ்" என்று கோபமாக உரைத்து அவன் கட்டிவிட்ட கைக்குட்டையை தன் விரலிலிருந்து உருகி அவன் கையில் திணித்துவிட்டு எழுந்தாள்.

இவ்வளவு நேரம் அங்கே நடந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வாதியும், சீனியரும் சத்தமில்லாமல் வந்ததைப் போல் சத்தமில்லாமல் வெளியேறினர்.

ஆழி தன் புத்தகங்களை எடுத்துக் கொண்டு நான்கடி எடுத்து வைத்து வெளிபாதை நோக்கி நடந்தவள், மீண்டும் வேந்தனை நெருங்கி அவன் அருகே இருந்த தன் திறன்பேசியை எடுத்துக் கொண்டு வெளியேறினாள். அதுவரை வேந்தனும் அசைந்தான் இல்லை.

ஆய்வுக்கூட வாயிலில் தனக்காக காத்திருந்த தன் நண்பர்களைக் கண்டவுடன், தன் மன அழுத்தங்கள் அனைத்தும், காற்றில் கரையும் கற்பூரத்தைப் போல் மறைந்து காணமல் போய்விட, முகம் மலர்ந்து சிரித்தாள் ஆழி.

மூவருமாக பேசிக்கொண்டே பல்கலைக்கழக வாயிலை வந்தடைய, புவன் தான் புறப்படுவதாக கூறி ஆழியிடம் வாய்மொழியால் விடை பெற்றுச் சென்றான்‌. ஸ்வாதியிடம் மட்டும் ஜாடை செய்துவிட்டுச் செல்ல ஆழிக்கு ஏதோ புரிந்தும் புரியாமலும் இருந்தது. அப்போது அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவள்.

"மித்து நீ க்ளாஸ் டைம்ல ஃபோன் யூஸ் பண்றவ கிடையாது... ஆனா இன்னைக்கு அப்படி எந்த விஐபி-கிட்ட பேசி மாட்டிக்கிட்டே?" என்றாள்.

"என்னோட சிஸ்டர் தான். ஈவ்னிங் வீட்டுக்கு வர்றதா சொன்னா"

"ஓ... அவளும் இங்கே தான் இருக்காளா! சூப்பர்... படிக்கிறாளா?"

"ம்ம்ம்..." என்றவள் ஈஸ்வரி படிக்கும் மற்றொரு புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தின் பெயரை குறிப்பிட்டாள்.

"நம்ம யுனிவர்சிட்டிலயே அவளும் சேர்ந்திருக்கலாமே! ஏன் அவ தனியா நீ தனியா?"

"அவ தான் ஃபர்ஸ்ட் புனே-ல படிக்கணும்னு ஆசைப்பட்டு எல்லா வேலையும் பார்த்தா... நான் தான் வழக்கம் போல அவளை விரட்டி இங்கே வந்து நிக்கிறேன்" என்று தன் வாழ்வு திசை திரும்பிய தருணத்தை கருத்தில் கொண்டு உரைத்தாள்.

ஆனால் அதற்கு தவறாக அர்த்தம் எடுத்துக் கொண்ட ஸ்வாதி,

"ஓ... சிஸ்டர்-னா ரொம்ப பிடிக்குமா?" என்றாள்.

"பிடிக்கும்" ஒரு சிறு இடைவெளிவிட்டு "பிடிச்சது....." என்றாள் ஆழி.

ஆழியின் வாடிய முகம் கண்டு ஸ்வாதி தான் அடுத்து கேட்க வேண்டிய கேள்விகளை மறந்து, "என்னாச்சு டி? உனக்கும் உன் சிஸ்டருக்கும் எதுவும் ப்ரச்சனையா? ரெண்டு பேருக்கும் செட் ஆகாதா?" என்றிட, ஆழி சுதாரித்துக் கொண்டாள்.

"ச்சீ... ச்சீ... அப்படியெல்லாம் எதுவும் இல்லே... சரி நான் கிளம்புறேன்... பை" என்று உரைத்து விட்டு மெட்ரோ ஸ்டேஷன் செல்லும் பாதை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

கேட்க வேண்டிய விடயங்களை முழுதாக கேட்காமல் போன தன் மதியை நினைத்து தலையில் தட்டிக் கொண்டாள் ஸ்வாதி.

'அந்த பொண்ணு நேம் தெரியாது! என்ன மேஜர் தெரியாது! வெறும் காலேஜ் நேம் மட்டும் வெச்சிட்டு எப்படி அவளை மீட் பண்ணுறது! சீனியர் இப்போ வந்து கேட்டால் என்ன பதில் செல்றது?' என்று புலம்பிட, நினைத்ததும் வந்து நிற்கும் பேய் போல் எதிரில் வந்து நின்றான் புவன்.

"என்ன? எதாவது சொன்னாளா! இல்லேயா!"

சட்டென பொய் கூறத் தெரியாமல் அசட்டு சிரிப்பு சிரித்து மாட்டிக் கொண்டாள் ஸ்வாதி. நடந்தவற்றை தலையை தொங்கப் போட்டுக் கொண்டு கூற, புவன் கொலைவெறியோடு பாய்ந்து அவள் கழுத்தை நெறித்திருந்தான்.

"அம்மன் அருள்வாக்கு மாதிரி அவளே வாய் திறந்து உளறும்போது, உனக்கு இந்த சந்தேகம் தேவையா? நான் கேட்க சொன்னதை மட்டும் கேட்க வேண்டியது தானே!" என்று கிட்டதட்ட சாமியாடினான்.

"எங்க அப்பா... சத்தியமா... அந்த காலேஜ் வாசல்ல நின்னு... கூவி கூவியாச்சும்... அந்த பொண்ணை கண்டுபிடிக்கிறேன் சீனியர்... என்னை நம்புங்க சீனியர்" என்று கோர்வையாக பேசக் கூட விடமால் தொண்டையை நெறித்தவனிடம் கெஞ்சல் விடுத்தாள் ஸ்வாதி.

‌ ‌ அதில் மன்னித்து விட்டவன், "கிளம்பு" என்று அப்போதே அப்பணியை செய்யும்படி ஆணையிட்டு, தன் வாகனம் நோக்கி சென்றான்.

ஸ்வாதியும் கழுத்தை தேய்த்துக் கொண்டு புவனை கரித்துக் கொண்டே தன் வாகனத்தை உயிர்பித்தாள். இருவரும் ஆளுக்கு ஒருபுறமாக பிரிந்து சென்றனர்.

செல்லும் வழி எங்கும் அவளுக்கே சந்தேகம் தான், தன் தோழி மித்துவின் தங்கையை கண்டுபிடித்துவிட முடியுமா என்று...

மாலைப்பொழுது என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த காத்திருக்கிறதோ! நாளையபொழுது எத்தனை அதிர்ச்சிகளை தனக்குள் உள்ளடக்கி வைத்திருக்கிறதோ! பொறுத்திருந்து பார்க்கலாம்.

காதல் கரை எட்டுமா!!!
 
Top