• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"உன் மேல செம்ம காண்டுல இருக்கேன். இதுக்கு மேல வாய் திறந்தே வயசுல மூத்தவேனுலாம் யோசிக்கமாட்டேன்" என்று முஷ்டியை மடக்கி தெய்வஜோதியை முறைத்து நின்றாள் கவிதா.

தெய்வம் அதிர்ந்தே போனார். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராஜா அடுத்த நொடியே "ஏய்! நீ சொன்னதும் உன் கழுத்துல தாலி கட்டிடேன்றதுக்காக, நீ பேசுற எல்லாத்தையும் தலையாட்டி பொம்மையாட்டம் கேட்டுட்டு இருப்பேன்னு நெனைக்காதே... என்ன தைரியம் இருந்தா என் சின்னம்மாவையே எதிர்த்து பேசுவே? கொன்னுடுவேன் உன்னை!" என்று கவிதாவுடன் சண்டைக்கு நின்றான்.

அதற்கும் அசராமல் தெய்வஜோதியின் மேலிருந்த பார்வையை கிஞ்சித்தும் நகற்றாமல், "நீ இங்கேயே இருந்திருந்தா என் தீரன் அந்த சா(ராய)க்கடை பக்கமே போயிருக்கமாட்டார்லே...".

"வேண்டாம் கவி...", "அம்மாவே எதிர்த்து பேசாதே" என்று கவிதாவின் பேச்சினூடே இரண்டு முறை எச்சரித்தான் ராஜேந்திரன்.

"உனக்கு உன் வேலை தானே முக்கியம்... உன் அக்காவும், அக்கா குடும்பமும் எப்படி போனா உனக்கென்ன! அப்படியே போயிடு... இனிமேலும் வீட்டு பக்கம் வராதே. வந்தே சோத்துல மருந்து வெச்சி கொடுத்திடுவேன்" என்று எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தான் பேச வேண்டியதை முழுமையாக கூறி முடித்தாள் கவிதா.

அடுத்த நொடி ராஜேந்திரனின் விரல்கள் கவிதாவின் கன்னத்தில் தடம் பதித்திருந்தது.

"நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன்..." என்று உருமினான்.

தெய்வம் ஒருபுறம் மகனை தடுத்து நிறுத்த, பரஞ்சோதி ஒருபுறம் மருமகளை தன் பின்னால் இழுத்து நிறுத்தினார்.

ஏற்கனவே ராஜேந்திரனின் அடாவடி திருமணத்தில் அவன் மேல் கோபத்திலிருந்தனர் கவிதாவின் பெற்றோர்‌. இதில் திருமணத்தன்றே தங்கள் பெண்ணை அடித்ததில் வார்த்தைகளை தவறவிட்டனர் இரு தரப்பினரும்.

தெய்வஜோதியோ இனியும் மகன் அங்கே இருந்தால் சண்டை தான் பெரிதாகும் என்று எண்ணி அவன் நண்பர்களுடன் அனுப்பி வைக்க போராடினார்.

ராஜேந்திரன் அவ்விடம் விட்டு செல்லும் முன் "என் அம்மாங்க ரெண்டு பேரையும் அனுசரிச்சு போறதா இருந்தா மட்டும் தான் இவ இந்த வீட்ல இருக்க முடியும். இல்லேனா இப்போவே அவளை அவங்க வீட்டுக்கு போக சொல்லிடு" என்று கத்திவிட்டு தான் சென்றான்.

'கள்ளுக்கடை பக்கம் என்மேல் ஆணையாக செல்லக் கூடாது' என்ற நிபந்தனையுடன் அவனை அங்கிருந்து அகற்றினார் தெய்வம்.

கவிதாவும் 'இது வாழ்க்கை. நான் சமாளித்துக் கொள்வேன்.' என்றுரைத்து பெற்றோரை சமாதானம் செய்தாள்.

மதியம் வெளியே சென்றவன், இரவாகியும் இல்லம் திரும்பாமல் இருக்க, திருமணத்திற்கு வந்திருந்த சுற்றமும் நட்பும் கவிதாவிற்கு சிலபல அறிவுரைகளையும், ஆறுதல்களையும் அள்ளித் தெளித்துவிட்டு அவரவர் வீடு திரும்பினர்.

ஒன்றிரண்டு உறவுகள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாயிலில் பிளாஸ்டிக் நாற்காலியில் வட்டமிட்டு அமர்ந்து கூடிப் பேசிக் கொண்டிருந்தது.

கவிதாவின் பெற்றோரும் கோபித்துக் கொண்டு சென்ற மருமகன் இப்போது வந்துவிடுவான், அப்போது வந்துவிடுவான் என வழி பார்த்து கண்கள் பூத்திருந்தது தான் மிச்சம்.

பொறுத்திருந்து பார்த்த கவிதா, பெற்றோரை சமாதானம் செய்து அவர்களையும் இல்லம் அனுப்பி வைத்துவிட்டு, கப்பல் கவிழ்ந்ததுபோல் கன்னத்தில் கை வைத்து திண்ணையில் அமர்ந்திருந்த இரு மாமியாரின் அருகிலும் வந்து நின்றாள்.

"ஃப்ஸ்ட் நைட்-க்கு முகூர்த்தம் பாத்தாச்சா அத்தே?" என்றாள் அடாவடியாக,

கேள்வி பரஞ்சோதியைப் பார்த்து இருந்தபோதும், பதில் தெய்வஜோதியிடம் எதிர்பார்த்து அவரின் மேல் தெனாவெட்டுப் பார்வை பதித்து நின்றாள்.

இருவரும் வாய் பிளந்து அவளையே பார்க்க, "என்ன என்னையே பாக்குறிங்க? என் நெத்திலேயா நல்ல நேரம் எழுதி ஒட்டிருக்கு?" என்றாள் எகத்தாளமாக...

"அடியேய்... எந்த விஷயத்தை எப்படி கேக்கனும்னு ஒரு வரைமுறை இருக்கு... இப்படி வெக்கமே இல்லாம வெளிப்படையாவா கேப்பே?" என்று தெய்வம் கோபமே வராத போதும் முகம் சுருக்கி வினவினார்.

"த்தோடா... நான் ஃப்ஸ்ட் நைட்-னா என்னனா கேட்டேன்? நேரம் பார்த்தாச்சானு தானே கேட்டேன்" என்றாள் தன் வாய் எப்போதும் ஓயப்போவதில்லை எனும் தினுசில்.

"சரிதான் டி... என் மகன் கொடுத்ததே உன் கன்னத்துல ரெண்டு நாளைக்கு நின்னு பேசும்... இப்போ இன்னொரு பக்கம் என்கிட்ட வாங்கப்போறே நீ" என்று பொய்யாய் மிரட்டினார் தெய்வம்.

"ஹான் அப்பறம்! அந்த நெனப்பு வேற இருக்கா உனக்கு! என் மேல கை வெச்சிடுவேயா நீ?" என்று தன் கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு நிலை கதவில் சாய்ந்து நின்று மிடுக்காய் கேட்டாள்.

அதற்கு தெய்வத்தின் பதிலை எதிர்பாராதவளோ, தானே மீண்டும் தொடர்ந்தாள். "உன் மகன் கொடுத்ததுக்கு நாள காலைல அவரே மருந்து கேட்டு வந்து உன் முன்னாடி நிப்பாரு. நீ தான் மருந்து கலக்குறதுல பெரிய கேடியாச்சே!" என்று ஒரு நொடி நிறுத்தி அர்த்தமாக ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

முதலில் அதிர்ந்த தெய்வம் பின் தமக்கையைப் பார்த்து 'நீ தானா?' என்ற கேள்வியை விழி வழி வினவிட, அவர் தலை தன்னைப்போல் மண்ணைப் பார்த்தது.

(My M.V: இவளுக்கு உண்மை தெரிஞ்சுபோச்சு... இனி இவளை விட்டு வைக்கக் கூடாது... சீக்கிரமே இவளுக்கும் ஒரு பாயாசத்தை போட்டுட வேண்டியது தான். 😅)

"இப்போ ஃப்ஸ்ட் நைட்க்கு வேண்டிய ஏற்பாட்டை செய்துட்டு, காலைல மருந்தையும் ரெடியா எடுத்து வை... நான் போயி குளிச்சிட்டு வர்றேன்" என்று கூறிவிட்டு, எவரது முகபாவனைகளையும் கண்டு கொள்ளாமல் தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கி சென்றாள் கவிதா.

அதன் பிறகு பூத்தோரணங்களும், மலர் அலங்காரங்களும் அந்த அறைக்கு அழகு சேர்த்திட, எந்த வித அலங்காரமும் இன்றி சிறிய ஒப்பனையுடன் தங்க சிலையாய் வந்து நின்ற கவிதா அந்த அறையின் அழகை முழுநிறைவு செய்தாள்.

மிச்சம் மீதி இருந்த உறவுகளின் உதவியால் காற்றுவாக்கில் இந்த சேதி ராஜேந்திரன் காதுகளைச் சென்றடைய அடுத்த அரைமணி நேரத்தில் இல்லம் வந்தடைந்தான் அவன்.

வந்தவனும் எவரிடமும் எதுவும் பேசவுமில்லை, கேட்கவுமில்லை, குளித்து தயாராகி கூடம் வந்து அமர்ந்தான்.

அவர்களது இல்லம் ஒற்றை படுக்கையறையும், கூடத்தில் மட்டுமே குளியலறையும் கொண்ட சிறிய இல்லம் தான். அதனால் இரு ஜோதிகளும் உறவினர் இல்லத்தில் அன்று இரவு தங்குவதாக முடிவு செய்திருக்க, அவர்களை தடுத்து நிறுத்தினான் மகன்.

"இங்கேயே தங்கிக்கோங்க" என்று மட்டும் உரைத்தான்.

"அதுக்கு இல்லப்பா... இன்னைக்கு ஒருநாள் தானே... ஒரு பிரச்சனையும் இல்லே..." என்று பரஞ்சோதி இதமாக பேசிட,

"ம்மா... சொன்னா புரிஞ்சுக்கோயேன் ம்மா... ராத்திரி எனக்கும் அவளுக்கும் சண்ட வந்து கைகலப்பு ஆகிடுச்சுனா என்ன பண்றது... நீங்க இங்கேயே தங்கிக்கோங்க" என்று அழுத்தமாக உரைத்தான்.

"கவலைப்படாதேடா... அவ உன்னை அடிக்கலாம் மாட்டா" என்று குறுநகையுடன் மகனை வாரினார் தெய்வம்.

பதிலுக்கு சிறு முறைப்பை பதிலாகக் கொடுத்தான் மகன். அதில் அன்னையர் இருவருக்கும் இன்னும் கொஞ்சம் சிரிப்பு பீறிக் கொண்டு வந்தது.

"என்ன நக்கலா தெரியுதா உங்களுக்கு?"

"பின்னே என்னடா! அடி வாங்கின அவளே பெத்தவங்களை அனுப்பி வெச்சிட்டு தனியா உன் வீட்ல, அதுவும் உன் ரூம்ல உனக்காக காத்துட்டு இருக்கா... நீ என்னடான்னா எங்களை துணைக்கு இருக்க சொல்றே!"

"யாரு? அந்த ஒடுக்கி என்னை அடிச்சிடுவாளா? அடிக்க ஓங்கின கையை முறுக்கிவிட்டுட மாட்டேன்!" என்று ஏதோ மனைவியை அடிப்பது தான் தன் ஆண் வர்க்கத்திற்கே பெருமை என்பது போல் பிதற்றினான்.

தெய்வம் அவனை முறைக்க, அதெல்லாம் அவன் மர மண்டையில் ஏறவில்லை. மேலும் அவனே தொடர்ந்தான், "இன்னொருக்க அவளை அடிச்சிட கூடாதுனு தான் உங்களை இங்கே இருக்க சொல்றேன்" என்று விளக்கம் கொடுத்தான்.

"அடிக்கக் கூடாதுன்னு இங்கே மட்டும் நினைச்சா பத்தாது " என்று அவன் தலையை சுட்டிக் காண்பித்துவிட்டு, பின் இதயத்தில் கை வைத்து "இங்கேயும் சேர்த்து நினைக்கனும். அதுக்கப்பறம் ஒருநாளும் அவளை காயப்படுத்துற எந்த செயலையும் செய்ய உனக்கே மனசு வராது." என்று, உள்ளர்த்தத்தோடு அறிவுரை வழங்கிச் சென்றார்.

இருவரும் வெளி வாசலை கடக்கும் போது தான் அதன் முழு அர்த்தத்தையும் உணர்ந்தான் அவன்... "ரெண்டு பேரையும் இங்கே இருங்கன்னு தானே சொன்னேன்" என்று ஒரு அதட்டு போட்டான்.

மகனுக்கு 'தான் கூற விழைந்தது புரிந்திருக்கும், இனி மருமகளை சமாதானம் செய்யச் செல்வான்' என்று நினைத்த தெய்வத்திற்கு சலிப்பாக இருந்தது.

"ஏன்டா நீ புரிஞ்சு தான் பேசுறேயா? இல்லே பிடிவாதத்துக்காகனாலும் பேசுறேயா?" என்று அவரும் அதட்டிட,

"பெரியவங்க வீட்ல இருக்கும்போது எப்படி நடந்துக்கனும்னு புரிஞ்சு தான் பேசுறேன்... இன்னைக்கு ஒரு நாளோட என் நான்கு வருட காதலும் தீர்ந்திடப் போறது இல்லே! என் காதல் தீருற வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் வெளியே தங்குறதும் சாத்தியமில்லே! பின்னே இந்த ஒரு நாள் மட்டும் என்ன ஸ்பெஷல்! அதான் சொல்றேன். நாங்க அதுக்கு ஏத்த மாதிரி முதல் நாள்ல இருந்தே பழகிக்கிறோம்"

தெய்வம் பதிலேதும் சொல்லாமல் மகனையே கண்ணெடுக்காது பார்த்திட,

"குடி பழக்கத்தில வேணும்னா நான் என் அப்பா மாதிரி இருக்கலாம்‌ ஆனா குடித்தனத்துல அப்படி இல்லே. அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி, என்னைக்கும் எனக்கு என் பொண்டாட்டி மட்டும் தான்.

நான் அடிச்சதுக்கு அவ கோவிச்சுட்டு அவங்க வீட்டுக்கு போயிருந்தாலும் கண்டிப்பா சமாதானம் செய்து கூட்டிட்டு வந்திருப்பேன்." என்று தன்மையாக அதே சமயம் அழுத்தமாக, தெய்வம் எதிர்பார்த்த வார்த்தைகளை உரைத்தான்.

ஒருவழியாக அன்னையரை சமாளித்து அங்கேயே உறங்கச் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தவன், தன்னவளின் ரௌத்திரம் கண்டு குறுநகை பூண்டான். அவளது கோப வதனம் கூட அள்ளியணைத்து கொஞ்சத் தூண்டியது அவனுக்கு.

பெண்ணவளை நெருங்கிச் சென்று அவள் அருகே இருந்த தண்ணீரை எடுத்துப் பருகினான். அவன் சீமாட்டியோ சற்றும் கண்டுகொள்ளவில்லை.

இரும்பு கட்டிலில் ஒருபுறம் அவள் அமர்ந்திருக்க, மறுபுறம் சென்று அமர்ந்து கொண்டவன், தன் இரு கைகளையும் பின்னால் ஊன்றி தன்னவளை ரசித்தான்.

அவளோ ஓரப் பார்வையால் அவனைப் பார்த்து இதழ் சுழித்து முகம் திருப்பிட, அடுத்த நொடி தன் கவிதையவளை மொத்தமாய் அள்ளி தன்மேல் போட்டுக் கொண்டான்.

"என்னை விடு... கோபிச்சிட்டு போனவன் இப்போ எதுக்கு வந்தே! விடு என்னை"

"என் பொண்டாட்டி தங்க செலையாட்டம் ரெடியாகி எனக்காக காத்திருக்கா-ன்னு சொன்னாங்க..‌‌. அது உண்மையான்னு பார்த்துட்டு போக வந்தேன்"

"பார்த்துட்டேல... கிளம்பு" என்று விரட்டினாள்.

"அடிப்பாவி! தாலி கட்டின புருஷனை இப்படி பட்டினி போட நினைக்கிறேயே! உனக்கே இது அடுக்குமா?"

"புருஷன் பாவம்ன்னு நெனைக்கிறதால தான் சொல்றேன். இல்லேனா கம்பி தான் எண்ணனும் நீ"

"உன்னை கட்டிக்கிட்டத தவிர வேற ஒரு பாவமும் அறியாதவன் டி நான்."

"அதனால் தான் சொல்றேன்... அந்த ஒரு காரணத்துக்காகவே நீ களி திங்க வேண்டி வரும்... நியாபகம் வெச்சிக்கோ"

"ஏன்? நீ என்ன தீவிரவாத கும்பலச் சேர்ந்தவளா! என்ன?"

அவர்களது விவாதங்களுக்கு ஏற்றார் போல் ஒருவரை ஒருவர் கீழே தள்ளி உருண்டு கொண்டும் இருந்தனர்.

"அதுக்கும் மேல" என்றுரைத்து கள்ளமாக சிரித்தாள்.

"அப்படி என்ன அப்பாட்டக்கரு டி நீ?"

"மைனர் பொண்ணை தூக்கிட்டு போயி தாலி கட்டினா முட்டிக்கு முட்டி தட்டாம என்ன செய்வாங்கலாம்!"

சட்டென அவளை விட்டு விலகி, "நெசமாவா சொல்றே?" என்றான்.

பெண்ணவளோ தன் சிரிப்பை அடக்கி ஆமென மேலும் கீழும் தலையசைக்க, தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் அவள் காந்தன்.

"பின்னே எப்படி உன் அப்பன் பொண்ணு பார்க்க வர சொன்னான்?" என்று அவளை நம்பாமல் வினவினான்.

"அதை அவர்கிட்ட தான் கேட்கனும்!"

அவனால் இந்த அதிர்ச்சியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அந்நாளைப் பற்றிய பல வித கனவுகள் அவனுக்கும் இருந்திருக்கும் தானே!

"மவளே..... நீ சொன்னது பொய்ன்னு மட்டும் தெரிஞ்சது..... நாளைக்கு நைட் வரைலாம் காத்திருக்க மாட்டேன். பகல்லேயே உன்னை உண்டில்லேன்னு பண்ணிடுவேன்" என்று மிரட்டினான்.

அவனது கூற்றில் நாணம் பூத்திட, தன் கண்களை தாழ்த்திக் கொண்டாள்.

"மாப்ள பார்க்க வந்தவங்க என்னை பிடிச்சிருக்குனு சொல்லியிருந்தாலும் அடுத்த மாசம் என் பிறந்தநாள் முடிஞ்சதும் தான் கல்யாணம் நடந்திருக்கும்" என்று சன்னமான குரலில் உண்மையை உரைத்தாள்.

"இதை ஏன் டி என்கிட்ட மொதோவே சொல்லலே?" என்றான் ஏமாற்றம் நிறைந்த கோபத்தோடு...

"நான் உன்னை பரிசம் போடத் தானே வர சொன்னேன்... நீ தான் பெரிய சண்டியராட்டம் வீடு புகுந்து தாலி கட்டினே!"

"அப்போ எதுக்கு டி இந்த ஏற்பாடு செய்ய சொன்னே? நீ சொல்லி தான் இந்த ஏற்பாடு நடக்குதுன்னு சொன்னாங்க?"

"அதனால தானே வீட்டுக்கு வந்தே!" என்று இதழ்கடை சிரிப்போடு, கீழ் கண் பார்வையால் அவனை நக்கல் செய்தாள்.

அவனது முழி இப்போது திருட்டு முழியாக மாறியது. "அ... அ... அது... அப்படியெல்லாம் ஒன்னும் இல்லே..." என்று பாதி உண்மையாக இருந்த போதும்கூட முழுதுமாக பொய்யுரைத்தான்.

"உன் அழகு முகத்துலேயே தெரியுது!" என்று முதலில் கேலி பேசியவள், பின் தொடர்ச்சியாக,

"நீ பாட்டுக்க கோபத்துல உன் தெய்வத்தே மதிக்கலேனா‌ என் அம்மா வீட்டுக்கு போக சொல்லிட்டே... நான் என் அம்மா வீட்டுக்கு போகலே... இங்கே நம்ம வீட்ல தான் இருக்கேன்னு எப்படி உனக்கு தெரியப்படுத்துறதாம்.." என்றாள் செல்லச் சிணுங்களாய்.

கவிதாவின் 'என் அம்மா வீடு', 'நம்ம வீடு' என்ற வார்த்தைகள் இதமாய் இனித்தது அவள் அன்பனுக்கு.

‌‌ இப்போது இவள் இந்த நொடி இங்கே இருப்பதற்கு காரணம் அவன் மேல் கொண்ட காதல் தான் என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது‌. ஆனால் அதற்காக அவனது மனம் முழுதுமாக மகிழ்ந்திடவில்லை.

"உன் காதலை நினைத்து பெருமை படுற பெரிய மனசு எனக்கில்லே கவி"

சம்மந்தமே இல்லாமல் திடீரென ஏதோ ஒன்றை பேச அவள் குழம்பிப் போனாள். குழப்பைத் தெளிவுபடுத்தும் பொறுப்பு இப்போது அவனதாகியது.

"அனுசரிச்சு பொறுத்துப் போறது என்னவோ நல்ல குணம் தான். அதை வாழ்க்கை முழுதும் எப்போதும் ஒரே பக்கமா செய்திட முடியாது. கொஞ்ச நாளைக்கு அப்பறம், நீ அனுசரிச்சு போறதுக்கு எதிர்வினை என் சின்னம்மா கிட்டேயும் எதிர்பார்ப்பே... அது கிடைக்காதபோதோ அல்லது நீ நெனச்ச மாதிரி அவங்க நடந்துக்காதபோதோ திரும்பவும் சண்டை வரும்..." என்று நிறுத்த,

"ம்ம்ம்" என்று கதை கேட்கும் ஆர்வம் காட்டி கன்னத்தில் கை வைத்து அமர்ந்தாள்.

எப்படியாவது தெய்வஜோதியின் தியாகங்களை தன்னவளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு அடி முதல் நுனி வரை கூறி முடித்தான்.

"இனியாச்சும் சின்னம்மா மனசு கஷ்டபடுற மாதிரி பேசாதே கவி... அதுவே பாவம்... யாருமில்லாத அனாதையாட்டம் டௌன்ல தனியா இருக்கு. இங்கே வர்ற நேரம் முகம் சுழிக்காம பேசு... ப்ளீஸ்" என்று உருகி மொழிந்தான்.

"இந்த கதையெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியுமே" என்றாள் அசட்டையாக,

"பின்னே ஏன் அப்படி பேசினே!"

"அதெல்லாம் சொன்னாலும் உனக்கு புரியாது..."

அவளது பதிலும், குணமும் உண்மையாகவே அவனுக்கு புரியவில்லை. இதுவரை அவளை தூர நின்று பார்த்து ரசித்ததோடு சரி... அவளிடம் பழகியதில்லை...

அவள் மற்றவர்களிடம் அன்பாகப் பழகக் கூடியவளா, இல்லை அதிகார குணம் நிறைந்தவளா என்று எதுவுமே அவனுக்கு தெரியாது.

ஆனால் தன் மேல் உயிராய் இருக்கிறாள் என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது. காதலித்து கை பிடித்தவளிடம் எக்காரணம் கொண்டும் மீண்டுமொருமுறை கோபத்தை காட்டிவிடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான்.

பத்தனின் யோசனை படிந்த முகத்தைப் பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தி 'என்ன?'வென வினவினாள் பதியவள். இடவலமாக தலையசைத்து 'ஒன்றுமில்லை' என்றான் காந்தன்.

"நீயே என்னை அடிச்சு துரத்தினாலும் இந்த வீட்டைவிட்டு, உன்னைவிட்டு, முக்கியமா என் ரெண்டு மாமியாரையும் விட்டு நான் போகப் போறதில்லே....." என்று வார்த்தைக்கு வார்த்தை அழுத்தம் கூடியது அவளது குரலில்.

இப்போது அவனது அகத் தெளிவு முகத்தில் கொஞ்சமே பிரதிபலித்தது. ஆனாலும் அடுத்த நொடியே நெஞ்சில் சலனம்.

"வந்து தூங்கு. ரொம்ப சோர்வா தெரியுது உன் முகம்." என்று கூறி கையோடு அவனையும் இழுத்து படுக்க வைத்துக் கொண்டாள்.

மறுநாள் காலை ஆளுக்கு முன்னதாக எழுந்து சத்தமில்லாமல் குளித்து வந்தவளை கை பிடித்து நிறுத்தினார் தெய்வம். இன்னமும் சற்றே வீக்கம் கண்டிருந்த கன்னத்தில் கற்றாழை மற்றும் மஞ்சள் கலவையை பூசி விட்டார்.

கவிதாவின் அமைதி தெய்வத்தை அவளிடம் பேச்சுக் கொடுக்கத் தூண்டியது.

"என்ன சொல்றான் உன் புருஷன்?"

தெய்வத்தின் கேள்வியில், விளக்கணைத்தபின் இருவரும் பகிர்ந்து கொண்ட சில தாம்பத்திய ரகசியங்கள் தன்னால் நினைவில் வர, முகம் சிவந்தாள் பெண்ணவள்.

தெய்வம் அவளது முகச் சிவப்பைக் கண்டு மருந்திடுவதை ஒரு நொடி நிறுத்திவிட்டு பின் தொடர்ந்திட, கவிதா அவரை சீண்டத் தொடங்கினாள்.

"பேசிக்கிறதுக்கு எங்கே எங்களுக்கு நேரம் இருந்தது! சீக்கிரமே உன்னை மாதிரியே ஒரு பொண் குழந்தைய பெத்து என் மகளை வெச்சே உன்னை ஒரு வழியாக்குறேனா இல்லேயா பாரு..."

தெய்வத்திற்கு சிரிப்பு தான் வந்தது. மெல்லிய சிரிப்பை உதிர்த்து "ததாஸ்து" என்று கூறி நகர்ந்தார்.

'என்ன ஒரு தெய்வீக சிரிப்பு!' என்று நக்கலாக நினைத்தவள், 'ஒருவேளை இதுக்கு நாம மைனர் பொண்ணுன்ற விசயம் தெரிந்திருக்குமோ!' என்று ஐயம் கொள்ளவும் செய்தாள்.

இரண்டு நாட்கள் மறுவீடு அழைப்பு, விருந்து என்று கலவரம் இல்லாமல் கடந்திட, மூன்றாம் நாள் தெய்வஜோதி மீண்டும் பணியில் சேரப் போவதாகக் கூறி கிளம்பினார். அன்று கவிதாவின் சத்தம் சற்று அதிகமாகவே தான் இருந்தது.

"இது என்ன வீடா இல்லே சத்திரமா? நெனச்ச நேரம் வந்து தங்கிப் போக... இப்போ போறவங்க இனி எக்காரணம் கொண்டும் இந்த வீட்டு பக்கம் வரவே கூடாது" என்று கத்திவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.

கோப முகத்தோடு பின்னோடே செல்லயிருந்த மகனை தடுத்து நிறுத்தி தெய்வம் உள்ளே சென்றார்.

"பேத்தி பிறந்ததும் சொல்லியனுப்பு. சீக்கிரமே உன் ஆசையெல்லாம் நிறைவேத்தி வைக்க, இங்கேயே வந்து தங்கிடுறேன்" என்று கூறி வெளியேறினார் தெய்வம்.

தெய்வம் அறைக்குள் சென்றதிலிருந்து சத்தம் அதிகமாகப் போகிறது என்று எதிர்பார்த்திருந்த ராஜேந்திரனுக்கு மனைவியின் அமைதி புதிதாகத் தெரிந்தது.

அதன்பிறகு கவிதாவின் பதினெட்டாவது பிறந்தநாளைக்குப் பின் இல்லற வாழ்வும் சுமூகமாகவே தொடங்கியது இருவருக்குள்ளும்.

ராஜேந்திரன் முன்னைப் போல் முழு பணத்தையும் கள்ளுக்கடைக்கு கொடுப்பதை நிறுத்திவிட்டு, பாதியை குடும்பத்திற்கும் பாதியை அரசு மதுபானக் கடைக்கும் கொடுத்து வந்தான். குடிப்பழக்கம் உண்டு என்றபோதும் மொடா குடிகாரனல்ல அவன். தன் சுயம் இழக்காதளவு தான் அவன் வரம்பு.

(ஒரு தலைசிறந்த குடிமகன் தானாய் திருந்தினால் தான் உண்டு. சொந்த கருத்து இல்லை மக்களே! சுட்ட கருத்து.)

மதுப்ரியனாக இருப்பவனை கவிப்ரியனாக மாற்ற கவிதாவும் தனக்குத் தெரிந்த பல வழிகளை கையாண்டு பார்த்துவிட்டாள். பலன் தான் சுழியாகவே இருந்தது.

மது உண்ட நாட்களில் திண்ணையைக் காண்பித்தாள். அவனாகவே இல்லம் நுழைவதை நிறுத்திக் கொண்டான். அவனிடம் பேசுவதை நிறுத்திப் பார்த்தாள். அவனோ உண்ணாவிரதம் இருந்து அவளையும் சேர்த்து சோதித்துக் கொண்டிருந்தான்.

இதற்க்கிடையே கவிதா, தான் எடுத்திருக்கும் சபதம் நிறைவேறப் போகும் நாளை எண்ணி, ஒவ்வொரு மாதமும் காத்திருந்தாள். அவள் கணவனோ அவளது காத்திருப்பு பற்றி அறிந்திடாமல், அந்த நாளை தன்னால் இயன்ற மட்டும் தள்ளிப் போட்டான்.

ஆம் குழந்தைப் பிறப்பை தள்ளி வைத்திருந்தான் ராஜேந்திரன்.

காதல் கரை எட்டுமா!!!
 
Top