• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
வேந்தன் கோபம் கொண்டு கலையரங்கத்திலிருந்து சென்றுவிட்டான் என்று தெரிந்ததும் ஆழி அவனைத் தேடிச் சென்று நூலகத்தில் கண்டும் கொண்டாள்.

ஆழிக்கு அவனை நெருங்க சற்று பயம் தான். 'கோபம்லா இப்படி பட்டுனா வந்து தொலையனும்! ஆற அமர பொறுமையா வர வேண்டி தானே! சரி வந்தது தான் வந்துச்சு வந்த வேகத்துல பட்டுனு பேகனுமா இல்லேயா! இப்படி ஆற அமர விருந்துக்கு வந்ததாட்டம் இவ்வளவு நேரமா கூடவே இருக்குறது!' என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டு நின்றிருந்தாள்.

மேலும் தன் தந்தைக்கு இந்நேரத்தில் அர்ச்சதை செய்யவும் மறக்கவில்லை. 'Mr.முறுக்குமீசை எல்லாம் உங்களால தான். இந்த சிடுமூஞ்சி ப்ரொஃபசர் வேலை பார்க்குற காலேஜ்ல தான் சேர்த்துவிடுவேன்னு பிடிவாதமா என்னை இந்த சிடுமூஞ்சி சிங்காரத்துகிட்ட தள்ளிவிட்டுட்டிங்களே! வீட்ல அபுவைக் கூட சமாளிச்சிடுவேன். ஆனா இந்த உர்ராங்குட்டான் ப்ரொஃபசரை சமாளிக்கிறது தான் ரெம்ப கஷ்டமா இருக்கு.' என்று தன் கைகளை விசிறி போல் வைத்து காற்று வீசிக் கொண்டு பெருமூச்சு விட்டாள்.

பின் அவளே ஒரு முடிவுக்கு வந்து 'இப்போ என்ன? கோபமா இருக்கார் அவ்ளோ தானே! சிங்கத்தை லைட்டா சுரண்டி தான் பார்ப்போமே! கடிச்சு குதறிடவா முடியும்! இங்கே லைப்ரரில வெச்சு சத்தமா கூட திட்டமுடியாது! அவர் எடுக்குற முடிவு கூட உனக்கு சாதகமாக தான் இருக்குடி டியூரோ...' என்றுரைத்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனக்குத் தானே சிரித்துக் கொண்டு வேந்தனின் எதிரே சென்று நின்றாள்.

வேந்தன் நிமிர்ந்து பார்க்காமலேயே தன் எதிரே வந்து நிற்பவளை அறிந்து கொண்டான்.

முகம் நிமிர்த்தாமல், கண்களை உயர்த்தாமல், "கங்கிராட்ஸ் மேடம்.... கல்யாணம் ஆகிடுச்சாமே!" புத்தகத்திலிருந்து கண்ணை எடுக்காமல் உரைத்தான்.

"தாங்க் யூ சார்" என்றாள் பவ்வியமாக... அதனைக் கேட்ட வேந்தனுக்கு கோபம் சுல்லென ஏற சட்டென நிமிர்ந்து பார்த்தான். அவளைத் திட்டக் கூட முடியாமல் இதழ் மடித்து பற்களைக் கடித்து கோபத்தைக் குறைத்து,

"உன் மனசுல என்ன தான் நெனச்சுட்டு இருக்க? உன் அப்பா என்னை நம்பி தான் உன்னை இந்த காலேஜ்ல சேர்த்திருக்காங்க... ஆனா நீ வந்த நாள்லே இருந்து நான் சொல்றதை கேட்குறதாவே இல்லே! இப்படியே பண்ணிட்டு இருந்தா உன்னை பத்தி உன் ஹஸ்பண்ட் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ண வேண்டி வரும் பார்த்துக்கோ!" என்று மிரட்டல் தொனியில் கூறினான்.

கண்களை விரித்து அதிர்ச்சியாக அவனை நோக்கியவள், பின் நிதானமாக "இப்போ நான் என்ன தப்பு செய்தேன்! அவர்கிட்ட கம்ப்ளைண்ட் பண்றதுக்கு!" என்றாள் அதிர்ச்சியிலும் அதே பவ்வியத்துடன்...

"புவன்கிட்டே உனக்கு என்ன பேச்சு? இப்போவாச்சும் உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு அவனுக்கு தெரியுமா? தெரியாதா?"

வேந்தனின் கோபம் புவனுடன் அமர்ந்து பேசியதாகத் தான் என்று ஊகித்திருந்தவள், அதனை அவனிடம் விளக்கிக் கூற வேண்டும் என்று தான் அவனைத் தேடி வந்திருந்தாள். ஆனால் இப்போது வேந்தன் கேட்ட தோரணையிலும் அவன் விடுத்த மிரட்டலிலும் மேலும் கொஞ்சம் அவனைக் கோபமூட்ட நினைத்து,

‌‌ "புவனுக்குத் தெரியாது" என்று வேண்டுமென்றே மாற்றிக் கூறினாள்.

"பின்னே இவ்வளோ நேரம் உன் பக்கத்துல உக்காந்து என்ன பேசிட்டு இருந்தான்?" என்றான் கோபத்தில் பல்லைக் கடித்தபடி...

"ஐ லவ் யூ"

வேந்தனின் சுருங்கியிருந்த நெற்றி விரிந்து தன் பிரம்மிப்பைக் காட்டிட, அவனது முகம் பனியில் உறைந்தது போல் போனது.

சிறு இடைவெளிவிட்டு "ஐ லவ் யூ சொன்னான். அவன் என்னை விரும்புறதா சொன்னான்... இவ்வளோ நேரம் பக்கத்துல உக்காந்து என் கை பிடிச்சு அவன் காதலைத் தான் சொன்னான்" என்று சில பல பொய்களை வாரி இறைத்தாள்.

பதில் பேச விரும்பாத வேந்தன் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டான். வேந்தன் மனதிலோ 'திருமணமானவள் எப்படி இன்னொருவனின் காதலை ஏற்றுக் கொண்டாள்! இது தவறல்லவா? இது அவள் கணவனுக்கு அவள் செய்யும் துரோகம் அல்லவா?' என்று பல கேள்விகள் மற்றும் குழப்பங்கள். கோபமும் கூட... கோபத்தில், போகிற போக்கில் அருகில் இருந்த சுவரில் தன் கையை ஓங்கி அடித்துக் கொண்டான் தானும் அவளை காதலிக்கத் தொடங்கிவிட்டதை உணராமல்.

சற்று தூரம் வேந்தன் எங்கு செல்கிறான் என்று தெரிந்து கொள்ள அவன் பின்னால் வந்த ஆழி இதனைக் கண்டு அப்படியே நின்று விட்டாள். அதன் பிறகு அவளும் அவனைத் தொடர்வதை நிறுத்திவிட்டு, எதுவும் நடவாதது போல் கலையரங்கம் சென்று ஸ்வாதியின் அருகே அமர்ந்து கொண்டாள்.

மாலை இல்லம் திரும்பும்போது ஆழியின் மனதில் இதே எண்ணங்கள் தான். வேந்தனிடம் கூறிய வார்த்தைகளால் தன் திருமண வாழ்வு கேள்விக்குறி ஆகிவிடுமோ என்ற யோசனை. அடுத்த நொடியே இனியும் கேள்விக்குறி ஆச்சரியக்குறி என தொங்கி நிற்பதற்கு என்ன இருக்கிறது! ஏற்கனவே அந்தரத்தில் தானே ஊசல் ஆடிக்கொண்டு இருக்கிறது.

'முடிச்சுகள் விழும்போதே அதனை அவிழ்க்கும் மார்க்கத்தையும் ஆண்டவன் நிச்சயம் வகுத்திருப்பான்.' என்று நினைத்து மொத்த பாரத்தையும் ஆண்டவன் மேல் திணித்துவிட்டு இல்லம் நோக்கி நடையைக் கட்டினாள்.

அவளைக் கடந்து சென்ற ஒரு இருசக்கர வாகனம் ஒரு இல்லத்தின் வாயிலில் நிற்க, அதிலிருந்து இறங்கிய புவன் வாயிற்காவலனிடம் பேசிக் கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் ஆழி சற்றும் தாமதிக்காமல் அவனை அழைத்தாள்.

"சீனியர்..." ஆழியின் குரலுக்கு சற்று நிதானமாகக் தான் திரும்பிப் பார்த்தான் புவன். அவன் தான் வரும்போதே தனக்கு முன்னால் நடந்து செல்பவளை கண்டுவிட்டான் தானே!

"என்ன? தமிழ் பொண்ணுக்கு தைரியம் அதிகமாகிடுச்சா! பர்ஸ்ட் டைம் ரோட்ல நின்னு என்கிட்ட பேசுறே?" என்று சிரித்து வம்பு செய்தான்.

அவன் கூறுவதும் உண்மை தான். கல்லூரி தவிர வேறு எங்கு பார்த்தாலும் தெரியாதவரைப் போல் தான் பேசுவாள் அல்லது பார்க்காதது போலவே கடந்து சென்று விடுவாள்.

"தமிழ் பொண்ணுக்கு தைரியத்துக்கு என்ன குறைச்சல்! ஓவரா பேசினே கல்லாலேயே அடிச்சு கொன்னுடுவேன் பார்த்துக்கோ" என்று அவளும் சிரித்தபடியே மிரட்டினாள்.

"யப்பா... கொஞ்சம் பயமா தான் இருக்கு... சரி என்ன விஷயம் சொல்லு... முக்கியமான விஷயம் இல்லேனா நீயும் ரோட்ல நின்னு பேசுற ஆள் கிடையாதே!" என்று முதலில் பயந்தது போல் நடித்து, பின் பேச்சை வளர்க்க விரும்பாமல் நேரடியா விஷயத்திற்கு வந்தான்.

"அம்மா, அப்பா வந்ததுல இருந்து பசங்கள பார்க்க வரமுடியலே... ஃபோன் பண்ணி கூட பேச முடியலே! லீவ் சொல்லி மெசேஜ் மட்டும் தான் அனுப்பினேன். அவங்க ஏதும் தப்பா நெனச்சுக்கப் போறாங்க... நீங்க கொஞ்சம் சொல்லிடுங்களேன்!" என்றால் சற்றே கெஞ்சும் குரலில்.

"அதெல்லாம் எப்பவோ சொல்லியாச்சு... அங்கிள், ஆன்டி வந்திருக்காங்கனு தெரிஞ்சப்பவே மேடம் ஒரு வாரம் லீவ்னு இன்பார்ம் பண்ணியாச்சு... நீங்க இதைப் பத்தி யோசிக்காம பேரண்ட்ஸ் கூட ஜாலியா இருங்க மேடம்... உங்க வேலைய நாங்க பாத்துக்கிறோம்" என்றான்.

அவனைக் கண்டு சிநேகமாக புன்னகைத்து நன்றி கூறிட, கண்டிப்புடன் அதனை மறுத்தான். "நோ தேங்க்ஸ், நோ சாரி" என்று அவள் வாயாலேயே கூறவும் வைத்திருந்தான்.

மேலும் அவனிடம் வம்பு வளர்க்கத் தோன்றிட, "ஏதோ சொன்னா மாதிரி இருந்ததே! என்ன சொன்னிங்க?" என்று யோசிப்பது போல் பாவனை செய்தாள்.

புவனுக்கும் புரிந்துவிட்டது, தான் கூறிய ஏதோ ஒன்றை வைத்து தன்னை கலாய்க்கப் போகிறாள் என்று. உடனேயே "நான் ஒன்னும் சொல்லலே! போ... போ... வீட்ல உனக்காக Mr.முறுக்குமீசை வெய்ட்டிங்... கிளம்பு" என்று விரட்டினான்.

"ஆனா நீங்க ஏதோ!!! என் வேலைய நீங்க பார்த்துக்கிறதா சொன்னிங்கல்ல!" என்றால் சிரிப்பை அடக்கிய படி...

புவனின் உறவினர் குடும்பத்து பிள்ளைகளுக்கு ஆழி டியூஷன் எடுக்கிறாள். மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்... டியூஷனுக்கு வெளியே அனுப்பினால் பாதி நாள் கட் அடித்து ஊர் சுற்றுகிறார்கள் என்று அனைத்து பாடத்திற்கும் சேர்த்து ஆழியே தான் டியூட்டர். வீட்டிற்கே சென்று பாடம் எடுப்பாள்... மொத்தம் நான்கு மணிநேரம்.

"ஹாங்... ஆ... ஆமா சொன்னேன்... அ.. அதுக்கு என்ன இப்போ" என்று திருட்டு முழி ஒன்று தான் பாக்கி... மற்ற அனைத்து முகபாவனையும் ஒரு நொடியில் வந்து சென்றது அவன் முகத்தில்...

இப்போது நன்றாகவே கை கொண்டு வாய் மூடி சிரித்து, "சாருக்கு எத்தனை அரியர்ஸ் இருக்கு?" என்றாள்.

நக்கலாக சிரித்தபடி "ஹேய்... லாஸ்ட் செம்ல எல்லா அரியர்ஸையும க்ளியர் பண்ணிட்டேன் தெரியும்ல!" என்றான்.

"பாஸ் பண்ற மூஞ்சைப் பார்... கொரோனா பாஸ்... சரி எத்தனை அரியர்ஸ் எழுதினிங்க? எத்தனை கரெண்ட் சப்ஜெக்ட் எழுதினிங்க? அதை சொல்லுங்க பார்க்கலாம்..."

அதை என்னனு சொல்றது! அவனுக்கே தெரிந்தால் தானே சொல்வதற்கு! கொஞ்சம் சலிப்பாகவும், கொஞ்சம் கெத்தாகவும் "அதெல்லாம் கணக்கு வெச்சிக்கிறது இல்லே..."

"ஆமா... ஆமா... கணக்கு வெச்சிக்க மொதோ கணக்கு பாடம் தெரியனுமே!" என்று வாய்விட்டு சிரித்தாள்.

சற்றே கோபம் போல் முகத்தை வைத்துக் கொண்டு, "வேணுங்குற அளவு தெரிஞ்சு வெச்சிருக்கோம்..." என்றான் வீராப்பாக...

"அப்படியா? எங்கே ஏதாவது ஒரு differentiation rules சொல்லுங்க பார்க்கலாம்!"

"அ.. அது... அதெல்லாம் ஒரு விஷயமா... ப்ராப்ளம் என்னவா வேணும்னாலும் இருக்கட்டுமே! நமக்குத் தேவை சலியூஷன் தானே." என்று சமாளிப்பவனை மேலும் கொஞ்சம் கிண்டல் செய்து நெளியவிட்டாள் ஆழி.

வழக்கம் போல் சிரிப்பொலி மட்டுமே அங்கே பொதுப்படையாக இருந்தது, மொழிகள் அல்ல... இடையே ஒன்றிரண்டு முறை புவனின் கண்கள் ஓர் இடத்தை வெறித்துவிட்டு, மீண்டும் அவளிடம் திரும்பியது. ஆழியோ தெரிந்தவர் யாரையோ பார்த்து தான் சங்கடமாக உணர்கிறான் போல என்று நினைத்து அவனிடம் விடை பெற்றுச் சென்றாள்.

ஆனால் அவளுக்கு எங்கே தெரியப் போகிறது அவர்களை பார்த்தது அவளது அபு என்று. புது வாகனத்தின் எண்ணை பொருத்தி விட்டு இல்லம் சென்று கொண்டிருந்தவன், ஆழி தமிழில் பேசுவதை மட்டும் கவனித்துவிட்டு வண்டியை முறுக்கிக் கொண்டு சென்றுவிட்டான்.

இல்லம் நுழைந்தவனுக்கு ஆழியைப் பற்றி பல சிந்தனைகள்... 'இந்த ஊர்காரன் கிட்ட தமிழ்ல பேசிட்டு இருக்கா! என்ன டிசைன் இவ!!! இவ பேசுறது அவனுக்கு புரியுதா?' என்று அதிசயித்தபடி முகம், கை, கால் கழுவி வந்தவன் கைலிக்கு மாரி கூடம் வந்து அமர்ந்தான்.

குழம்பி கொதிக்கும் வாசம், சற்று நேரம் வேறு சிந்தனைக்கு இடமளிக்காமல் அவனை கட்டி போட்டுவிட, அடுக்கலையை நான்கு முறை திரும்பிப் பார்த்துவிட்டான். ஞானத்தின் "வெங்கடா" என்ற அழைப்பிற்கு குழம்பியுடன் உடனே வந்து நின்றார் அவரது துணைவி.

அதனைக் கண்டு அதில் மறைந்திருக்கும் காதலை நினைத்து ஒருநொடி இதழ் மட்டும் விரித்து சிரித்தவன், தன் பதியவளை அங்கே நிறுத்தி கற்பனை செய்து பார்த்தான்.

என்ன ஒரு வித்தியாசம்! அழைப்பது அவளாகவும், குழம்பியுடன் வந்து நிற்பது அவனாகவும் தெரிந்திட சட்டென வாய்விட்டு சிரித்துவிட்டான்.

"என்ன மாப்ளே!" என்று ஞானம் கேட்க, தான் நினைத்ததை அப்படியே கூறி மீண்டும் சிரிக்கத் துவங்கினான். ஆனால் ஞானமோ பெயரளவில் சிரித்துவிட்டு, "ஆழி அப்படிலாம் செய்யமாட்டா மாப்ளே! அவளுக்கு சத்தமா கூட பேச தெரியாது!" என்றார்.

அம்புதிக்கு குழம்பு கொடுக்க வந்த வெங்கடாவோ 'ம்க்கும்... இவர் தான் மெச்சிக்கனும் அவர் பொண்ணை!' என்று முனுமுனுத்துவிட்டு, "அப்படி கேட்டா வாயிலேயே நாலு அடி போடுங்க..." என்று அம்புதிக்கு அறிவுரை கூறினார்.

"சும்மா இரும்மா... பொட்டப்புள்ளைய அடி, உதை, மிதினுகிட்டு... ஆழிக்கு நம்ம வீட்டைத் தவிர வேற எதுவும் தெரியாது மாப்ளே!" என்று பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டவள் என்ற பாணியில் உரைத்தார்.

'அவளுக்கு!!!... வீட்டைத் தாண்டி எதுவும் தெரியாது!!!... இன்னமும் இதை நான் நம்பனும்!!! இந்த ஏரியால தான் ரெண்டு வர்ஷமா இருக்கேன்... எனக்கு பக்கத்து வீட்ல யார் இருக்கானு கூடத் தெரியாது. ஆனா இவ நாலு தெரு தள்ளி இருக்கவங்கள கூட தெரிஞ்சு வெச்சிருக்கா!' என்று வாய் விட்டுக் கூறமுடியாமல் மனம் புலம்பிட, முகத்தை மட்டும் சிரித்தபடி வைத்திருந்தான் அம்புதி.

"மாப்ளே'க்கு அவளைப் பத்தி தெரியும்... ஏதோ வெளியாள்கிட்ட பேசுற மாதிரி இல்லாத கதையெல்லாம் கட்டாதிங்க..." என்று அதட்டல் இல்லாமல் தன் கருத்தையும் எடுத்துரைத்தார் வெங்கடேஸ்வரி...

'ஆழியைப் பத்தி அத்தைக்கு தான் நல்லா தெரிஞ்சிருக்கு... சீக்கிரமே இவங்க கூட ப்ரெண்ட் ஆகிட வேண்டியது தான்.' என்று திட்டம் தீட்டிய தன் மனதை அவனே காரி உமிழ்ந்துவிட்டு, 'சேர்க்கை சரியில்லே... ஒரு மாசம் தான் அவளுக்கு ரூம்மேட்'டா இருந்தேன்... அதுக்கே அவளை மாதிரி யோசிக்க ஆரம்பிச்சுட்டேனே!' என்று நினைத்து மேலும் கொஞ்சம் சிரித்துக் கொண்டான்.

ஆழி இல்லம் நுழைய வெங்கடா எப்போதும் போல் முதலில் கடிந்து கொண்டார். "காலேஜ் முடிச்சு இவ்வளோ நேரம் கழிச்சா வீட்டுக்கு வருவே! அப்படி என்ன தான் ஃப்ரெண்ட்ஸ் கூட அரட்டை வேண்டிக் கிடக்கோ தெரியலே! சீக்கிரம் வந்தோமா... மாப்ளேக்கு என்ன வேணும்னு கேட்டு செய்து கொடுத்தோமானு இருக்கிறதில்லேயா!"

"ம்மா... நானே இப்போ தான் உள்ளே நுழையிறேன். அதுக்குள்ள திட்ட ஆரம்பிக்காதிங்க" என்று அவரது திட்டுக்களை எல்லாம் துளியும் காதில் வாங்காமல் அணைத்துக் கொண்டு கொஞ்சி நின்றாள்.

"சரி... சரி... காஃபிய குடிச்சிட்டு தலை குளிச்சிட்டு வா" என்று அவரும் கன்னம் தட்டி கொஞ்சி அனுப்பினார்.

ஏன்? எதற்கு? என்றெல்லாம் கேட்காமல் அன்னை கூறியதை நூல் பிசங்காமல் செய்தாள். ஈரத்தலையுடன் வந்து நின்றவளுக்கு தலை துவட்டி விட்டு, சாம்பிராணி காட்டி காயவைத்து உச்சி வகிட்டின் இரண்டு பக்கமும் கொஞ்சமாக முடி எடுத்து குட்டியாக பின்னலிட்டு அதனை பின்னால் சேர்த்து ஜடையிட்டார்.

அம்புதியையும் ஆழியையும் மட்டும் பக்கத்திலிருக்கும் துர்க்கையம்மன் கோவிலுக்கு சென்று வருமாறு கூறிட, இருவரும் மறுப்பு கூறாமல் சென்று வந்தனர், அம்புதியின் இருசக்கர வாகனத்தில்.

இருவரும் இல்லம் நுழைய நான்கைந்து பெண்மணிகள் அவர்கள் இல்லத்திலிருந்து வெளியேறினர். அம்புதியைப் பார்த்து சங்கடமாக சிரித்தவர்கள் ஆழியை நெட்டி முறித்து ஆசிர்வதித்துச் சென்றனர். அவர்களை குழப்பமாகப் பார்த்த அம்புதி, அருகில் அவர்களை அணைத்து வழியனுப்பிய ஆழியிடம்,

"யாரு இவங்கெல்லாம்?" என்று காதைக் கடித்தான்.

"இது பக்கத்து வீட்டு அர்ச்சனா ஆன்டி, இவங்க எதிர்வீட்ல இருக்க ஷாஷி ஆன்டி, அதோ கடைசியா போறாங்களே அவங்க நேம் தெரியாது... அதனால அவங்களை க்யூட்டி ஆன்டினு தான் அழைப்பேன்." என்றிட, அம்புதி அவளை வியப்பாக பார்த்தான்.

"இவங்கெல்லாம் எப்படி பழக்கம்? நீ வீட்டுக்கே டின்னர் டைம்'க்கு தான் வருவே... பின்னே எப்படி?" என்று புருவம் சுரித்து வினவினான்.

"இவங்க எல்லாம் அம்மாவோட ஃப்ரெண்ட்ஸ்... மொட்ட மாடில துணி காயப் போடும்போது, மார்கெட் போகும்போது, சாமி ஊர்வலம் வரும்போதுனு அடிக்கடி மீட் பண்ணி ஃப்ரெண்டு ஆகிட்டாங்க" என்றால் சிரித்த முகமாக...

அம்புதியோ 'ஒரு வாரத்திலேயே இத்தனை பேரா!!' என்று அதிசயித்தவன், 'என் பொண்டாட்டிக்கு நாலு தெரு தள்ளி ஃப்ரெண்டு கிடைச்சதுல தப்பே இல்லே... தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயத்தானே செய்யும்' என்று நினைத்துக் கொண்டு அன்னை மகள் இருவரையும் நினைத்து சிரித்தபடி வீட்டிற்குள் நுழைந்தான்.

அன்றைய அவனது சிரிப்பிற்கு ஆயுள் குறைவு போல... உள்ளே ஒருத்தி அதனை பறைசாற்றும் விதமாக முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஈஸ்வரியைக் கண்டதும் தன் சந்தோஷங்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக பரி கொடுத்தவனைப் போல் பொழிவிழந்து நின்றான் அம்புதி. நேரே தனது அறைக்குச் சென்று தன்னை நிதானித்துக் கொள்ள நினைக்க, அறை கதவு மூடப்பட்டிருந்தது... மேலும் ஞானம் "இந்த ரூம்ல கை, கால் கழுவிக்கோங்க மாப்ளே... சாப்பிட்டு முடிச்சுட்டு உங்க ரூம் போகலாம்" என்றிட, அம்புதிக்கு ஏன்? எதற்கு? என்ற கேள்வி எழுந்த போதும் யோசிக்கும் திறனற்றவனாய் சொன்னதை செய்துவிட்டு இரவுணவிற்காக உணவு மேசையில் காத்திருந்தான்.

‌‌ வெங்கடா ஆழியையும் அவன் அருகில் அமர்த்தி பரிமாறினார். அம்புதி தோசை கேட்டு காத்திருக்க, ஈஸ்வரி அப்பணியை தனதாக்கிக் கொண்டாள். சுடச்சுட மொறுமொறு தோசை அம்புதிக்கு பரிமாறப்பட முதன்முறையாக விருப்ப உணவு கூட தொண்டைக் குழிக்குள் இறங்க மறுத்தது அவனுக்கு.

ஆழி தனக்கு இனிப்பு தோசை வேண்டும் என்று வினவிட, "எனக்கு இனிப்பு தோசை மொறுமொறுனு வார்க்க வராது பெரியம்மா... அக்காவுக்கு நீங்களே வார்த்துக் கொடுங்க" என்று கூறி நழுவிக் கொண்டாள்.

ஆழியின் தட்டில் இனிப்பு தோசை வைக்கப்பட்ட அடுத்த நொடி அம்புதி இருவர் தட்டையும் மாற்றி வைத்தான். தன் இல்லாளும், இளையளியாளும் தன்னை விசித்திரமாக பார்ப்பதை உணர்ந்து தம்பிராட்டியை மட்டும் நிமிரிந்து பார்த்து, ஒற்றை கண் சிமிட்டி உண்பதில் மட்டும் கவனம் செலுத்தினான் இருவரின் மனதையும் கவர்ந்த ஆழியின் அரசன்.

நடப்பதை நம்ப முடியாத ஈஸ்வரி தன் உணர்வுகளை கட்டுப்படுத்த அடுப்பறை நுழைந்தாள். அவள் பின்னாலேயே கை கழுவ எழுந்து வந்த அம்புதி அங்கே ஒருத்தி நின்று அழுது கொண்டிருப்பதை சற்றும் பொருட்படுத்தாது, வந்த வேலையை கவனித்தான்.

தன் கணவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்த வெங்கடா ஈஸ்வரிக்கு சத்தம் கொடுத்தார். "ஈஸ்வரிம்மா மாமாவுக்கு கை துடைக்க துண்டு எடுத்துக் கொடும்மா" என்றிட, ஈஸ்வரி தனது துப்பட்டாவை நீட்டினாள்.

அப்போது பார்த்து ஆழியும் உண்டு முடித்து கை கழுவ உள்ளே நுழைய, அம்புதியோ ஈஸ்வரியை தவிர்த்து தன் கண்ணாட்டியின் துப்பட்டாவை இழுத்து கைகளை துடைத்துக் கொண்டான்.

அம்புதியின் செயல்கள் ஈஸ்வரியை ஒதுக்கி வைப்பதற்காகத் தான் என்று தெரிந்தும் ஆழியின் மனம் அவன்பால் சரிய தான் செய்தது. இருந்தும் தான் இயல்பாகத் தான் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக வேணுமென்றே அம்புதியுடன் சண்டையிட்டாள்.

"என் ஷால்'லை ஏன் அழுக்கு பண்றிங்க! இந்த ஷால்'ல இருக்க வெர்க்-குக்காக தான் இந்த ட்ரெஸ் வாங்கினேன்... அதை இப்படி என் கண் முன்னாடியே அழுக்கு பண்றிங்களே!" என்று தன் அன்னை தந்தைக்கு கேட்டிராத படி சண்டையிட்டாள்.

ஆழியின் வார்த்தைகள் ஈஸ்வரிக்கு தேனை வார்த்தது போல் இருக்க, 'இவருக்கு நல்லா வேணும்... என்னை அவாய்ட் பண்ணிட்டு அவகிட்ட போனார்ல... நல்லா வாங்கி கட்டிக்கட்டும். ஆனாலும் இந்த ஆழிக்கு அறிவே இல்லே... கல்யாணத்து முன்னாடி வரைக்கும் உருகி உருகி லவ் பண்ணினா... இப்போ அவரே தானா வரும்போது லூசு மாதிரி சண்டை போட்டுக்கிட்டு இருக்கு...' என்று இதழ் முனுமுனுத்து இருவரையும் திட்டித் தீர்த்தாள்.

ஈஸ்வரியை திரும்பிப் பார்க்காத போதும் அவளது இதழ்கள் ஏதோ முனுமுனுப்பதை கண்டு கொண்ட அம்புதியோ ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல், ஆழியின் துப்பட்டாவில் முகம், கழுத்து, கை என தன்னை சுத்தப்படுத்திக் கொள்வது போல் மொத்தமாக துடைத்து, இரு பெண்களையும் நன்றாக கடுப்பேற்றினான்.

ஆழி ஒற்றைக் கையால் அவன் மேல் தண்ணீர் இறைக்க, அதனையும் துப்பட்டாவிலேயே துடைத்தான் அவளது மனையான்.

"உங்களே... என்ன பண்றேன்னு பாருங்க" என்றபடி அருகில் இருந்த செம்பை எடுக்க அவள் நோக்கம் புரிந்து, தன் மனவாட்டியின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டான் அம்புதி.

ஆழியோ தன் ஆம்படையானின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடிட, கணவன் மனைவிக்கு இடையே சில உரசல்களும் நிகழ்ந்தது. அதனை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரிக்கு தான் அடிவயிறு பற்றி எரிந்தது.

வெங்கடேஸ்வரி எதார்த்தமாக அடுக்களை நுழைய ஆழி, அம்புதியின் சண்டை முடிவுக்கு வந்தது. மூவரும் கூடம் வந்து அமர்ந்து கொண்டனர்.

உடைமாற்றச் செற்ற ஆழியை தடுத்து தங்கள் அறைக்கு அழைத்துச் சென்று சேலை அணிவித்துவிட்டார் வெங்கடா.

சற்று நேரத்தில் இருவரும் அவர்கள் அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட, அங்கிருந்த நிலை கண்டு அதிர்ச்சியில் மூச்சு முட்டி நின்றனர்.

காதல் கரை எட்டுமா!!!
 
Top