• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"ஏன்? ஆழி என்னை விரும்பினாளா?" என்றான் ஒற்றைப் புருவம் உயர்த்தி.

அம்புதியிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்த்திடாத ஈஸ்வரி ஒரு நொடி அரண்டு விழித்து பின் நிதானித்து, எதிர்கேள்வி தொடுத்தாள்.

"ஏன்? விரும்பினா தான் உங்களை கட்டிக்கனுமா! எனக்கு நீங்க கிடைக்கக் கூடாதுனு நெனச்சும் இதை செய்திருக்கலாமே!" என்ற ஈஸ்வரியின் கூற்றில் அவனது அறிவோ 'அப்படியும் இருக்குமோ!' என்று சிந்திக்க, ஆனாலும் முதன்முறையாக அதனையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் பெண்ணவளின் மீது கண்ணிமைக்கா கூர் பார்வை வீசினான்.

ஆனால் மனமோ திருமணம் முடிந்த முதல் ஐந்து நாட்களில் ஆழியின் அமைதியான நடவடிக்கையையும், அதன்பிறகான அவளது அடாவடி பேச்சையும், தற்போது ஈஸ்வரி வந்த பின்னால் இருக்கும் புதுவிதமான ஆழியையும் பற்றி மாற்றி மாற்றி சிந்திக்கத் தொடங்கினான்.

தனது சிந்தனைகள் பலவற்றை ஒன்று திரட்டி சங்கிலி அமைத்திட முயற்சிக்க அதுவோ முடிச்சுகள் நிறைந்த கயிறாக அனுமன் வாலைப் போல் நீண்டு கொண்டே தான் சொன்றது. ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு தெளிவாக விளங்கியது.

ஆழி என்பவள் ஈஸ்வரி கூறுவது போல் வஞ்சகம் கொண்டவளும் அல்லாமல், தான் நினைத்து வைத்திருப்பதும் போல் பொறாமை பிடித்தவளும் அல்லாமல் சற்றே மாறுபட்ட குணம் கொண்டவள் என்று மட்டும் அறிந்து கொண்டான். அவளது மனதில் அப்படி என்ன தான் உள்ளது! என்ன நினைத்து இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாள்! என்று அடுத்த யோசனைக்குத் தாவினான் அம்புதி.

ஈஸ்வரி ஏற்படுத்திய குழப்பத்தில் தான் பேச வந்ததையும் மறந்து, புதுவிதமான குழப்பத்துடன் தனது அறைக்குள் முடங்கினான்.

வழக்கம் போல் இருள் படர்ந்த பின்னரே இல்லம் வந்த ஆழி அதீத கலைப்புடன் தெரிந்திட, அம்புதியின் யோசனைகள் ஆழியின் பொலிவிழந்த வதனத்திற்குத் தாவியது.

'எங்கே சென்று வருகிறாள்! ஏன் இல்லம் நுழையும் போது இவ்வளவு கலைப்பபாக இருக்க வேண்டும்!' அதனையும் அவளிடமே கேட்டு விடலாமா? கேட்டால் பதில் சொல்வாளா? என்று தனக்குள் ஒரு பட்டிமன்றத்தையே நடத்தி முடித்து விட்டு குளியலறைக்குள் புகுந்து கொள்ள இருந்தவளைத் தடுத்து நிறுத்தினான்.

"ஆழி நில்லு"

பல வருடங்களுக்குப் பின் தன் பெயர் அவன் வாய்மொழியாக அழைக்கப்படவே, நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள். ஆனால் வாய் திறந்து எதுவும் பேசவில்லை. ஏன்!!! 'என்ன?' என்று கூட அவனிடம் கேட்டிடவில்லை.

ஏதேனும் கேட்பாள் என்று நினைத்து அவள் விழியின் மேல் தன் பார்வையை பதித்து காத்திருந்தவன், அவளிடம் அதற்கான அறிகுறியே இல்லை என்றவுடன் சிறிய குழப்பத்துடன் அவனே ஆரம்பித்தான்,

"காலேஜ் முடிச்சிட்டு லாங்குவேஜ் க்ளாஸ் போற ஓகே... ஆனாலும் அதுக்கப்புறம் த்ரீ ஹவர்ஸ் எங்க தான் போற? நைட் நேரத்துல தனியா வர்றது உனக்கு சேஃப் இல்லைனு சொன்னா உனக்கு ஏன் புரியமாட்டிங்குது?" என்று எப்போதும் இருக்கும் சிடுசிடுப்பு துளியும் இல்லாமல், அதே நேரம் பரிவும் காட்டாமல் அக்கறையற்ற குரலை சிரமப்பட்டு வரவழைத்து வினவினான்.

அவனது குரல் மாற்றம் ஆழிக்கும் புரிந்திட 'இப்போ எதுக்கு பம்முறாரு! எதுக்கும் நாமளும் அமைதியாவே பேசுவோம்... தேவைபட்டா வாய்ஸ் ரைஸ் பண்ணிக்கலாம்' என்று மனதோடு மொழிந்துவிட்டு,

"நான் லேட்டா வர்றது உங்களுக்கு வசதி தானே! நீங்க எப்படியோ அது எனக்குத் தெரியாது... ஆனா உங்க த்...." என்று ஆரம்பித்து அவனது முறைப்பில் அப்படியே பாதியோடு நிறுத்தி, "ஈஷ் ஹாப்பியா தானே இருக்கா... நீங்க பேசி தீர்த்துக் கொள்ளவும், ஒருத்தருக்கு ஒருத்தர் உங்க சிட்டுவேஷனை புரிய வைக்கவும் பல விஷயங்கள் இருக்கும். அவளுக்கும் உங்களுக்குமான தனிமைய நான் ஏன் கெடுக்கனும்" என்றாள்.

ஆழியின் குரலிலும் சிறு மாற்றத்தை உணர்ந்தான் அம்புதி. வழக்கம் போல் குத்தல் பேச்சாக ஆரம்பித்திருந்த போதும் கடைசியில் அவள் முடித்திருந்த விதம், வெகு இயல்பாக அப்பழுக்கற்ற வார்த்தைகளாகத் தான் இருந்தது. ஏதோ ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு தான் இப்படி எல்லாம் செய்கிறாள் என்று அம்புதிக்கும் தெளிவாக விளங்கியது.

அவளது இலகுப் பேச்சு இன்று அவனையும் சற்று அதிகமாகவே பேச வைத்திருந்தது. "நடக்காத ஒரு ஆசையை அவ மனசுல ஏன் வளர்த்து விடுறே?" என்று எதார்த்தமாக வினவினான்.

"அப்படி என்ன ஆசையை வளர்த்துவிட்டேன்! அவங்க அவங்களுக்கு யோசிக்கிறதுக்கு மூளை இருக்கு தானே!" என்று தான் முதல் நாள் ஈஸ்வரியிடம் பேசியது பற்றி அறிந்து தான் கேட்கிறான் என்று நினைத்து சுல்லென விழுந்தாள்.

உண்மையில் அதனை அறிந்திடாத அம்புதியோ தான் நினைத்ததைக் கூறத் தொடங்கினான். "கணவனோட வேலி அவனோட பொண்டாட்டியும், அவ கழுத்துல இருக்கிற தாலியும் தான். நீ வீட்ல இல்லாத நேரம் தான் அவ என்கிட்ட அதிகமா பேச ட்ரை பண்றா. நீ என் கூடவே இருந்தா அவளும் என்கிட்ட பேசாம மனசுல தப்பான ஆசைய வளர்த்துக்காம இருப்பால்ல!" என்றான் ஈஸ்வரியின் மேல் உள்ள அக்கறையில்.

ஈஸ்வரிக்காக அக்கறை கொள்ளும் அம்புதியின் மேல் கோபம் தான் தோன்றியது ஆழிக்கு. "யார் தன்னோட மனசுலே ஆசையை வளர்த்துகிட்டு, இப்போ ஏமாந்து நிக்கிறாங்கனு தெரியாம பேசாதிங்க மாமா" என்று கத்தும் போதே அவளது கண்கள் சற்றே குளம் கட்டி நின்றது.

அவளது வார்த்தைகளை ஜீரணிக்க அம்புதிக்கு ஒரு முழு நிமிடமே தேவைப்பட்டது. பதிலேதும் கூறாமல் ஆழியை குழப்பமாகப் பார்த்தான் அவன். அதில் அவளது 'மாமா' என்ற அழைப்பு கூட அவனது செவிகளைத் தொடவில்லை.

அவன் தன்னை கவனிப்பதாக உணர்ந்தவள், பேச்சை மாற்றும் பொருட்டு "ஆண்களோடு வேலி எப்பவும் அவங்க மனசு மட்டும் தான். ஆண்களின் வசீகரப் பேச்சு பெண்களை மயக்குவது இயல்பு தான். சோ ஒரு பெண்ணை தள்ளி நிறுத்துவதும், நெருங்க விடுவதும் உங்களது பேச்சு மட்டும் தான். இதுல என் பங்கு எதுவும் இல்லே...

ஈஷ் நான் இருக்கும் போது ஒரு மாதிரியும், நான் இல்லாத போது ஒரு மாதிரியும் நடந்துக்கிறானா தப்பு யார் மேலனு உங்களுக்கு நல்லாவே தெரியும் நினைக்கிறேன்!" என்று சொல்லம்பு கொண்டு தாக்கினாள்.

அம்புதிக்கும் அது புரிந்த போதும், காதல் கொண்டவளின் மேல் தவறுள்ளது என ஒப்புக்கொள்ள முடியாமல், ஆழியை மடக்க நினைத்து 'ஏன்! நீ நடிக்கவில்லையா? ஆளுக்கேற்றார் போல் பேச்சை மாற்றி பேசக் கூடியவள் தானே நீயும்?' என்று தன் இவ்வளவு நேர யோசனையின் முடிவைக் கொண்டு வாதம் புரிந்திட வாயெடுக்க, ஏதோ ஒன்று அவனைப் பேச விடாமல் தடுத்து வாயடைத்திருந்தது.

அவனது எண்ண ஓட்டங்களை சரியாக ஊகித்தவள், "நடிக்கிறவங்களை தானே உலகம் நம்புது! நான் உண்மையா இருந்த போது அது உங்க கண்ணுக்கு நடிப்பாகத் தானே தெரிஞ்சது! இப்போ நடிக்கிறேன். தினம் தினமும் நடிக்கிறேன். இப்போ மட்டும் இல்லே... இனி என் அம்மா, அப்பா முன்னாடியும், உங்க கூட சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிக்கத் தான் செய்வேன்.

இப்படி ஒரு கேவலமான வாழ்க்கை வாழுறதுக்கு டிவர்ஸ் வாங்கிட்டு போயிடலாமானு இருக்கு" என்று புலம்பலில் ஆரம்பித்து கத்தலில் முடித்திருந்தாள்.

அவளது பேச்சு அம்புதிக்கு உச்சந்தலையில் சுல்லென உரைக்க, சட்டென அவளது தாடையைப் பிடித்து, உடைக்குள் மறைத்து வைத்திருந்த திருமாங்கல்யத்தை வெறி கொண்டு எடுத்து வெளியே தொங்கவிட்டான்.

"இந்த தாலி.... மேடை வரை வந்த கல்யாணம் நின்னுடுச்சே! உன்னை இனி யார் கட்டிப்பானு நெனச்சு, உனக்கு வாழ்க்கை அமைச்சு கொடுக்கனுமேனு உன் மேல பாவப்பட்டு உன் கழுத்துல கட்டலே... என் மாமாவுக்காக கட்டினேன். உன் அப்பா இருக்கிற வரைக்கும் டிவர்ஸ் தருவேன்லாம் நினைக்காதே! உனக்கு பிடிச்சாலும் பிடிக்கலேனாலும் என் கூட சேர்ந்து நீ வாழ்ந்து தான் ஆகனும்" என்று மிரட்டல் விடுத்துச் சென்றான்.

அன்று அவள் கூறிய வார்த்தைகளை சற்றே மாற்றி இன்று அவளவனும் கூறிச் செல்ல, அவளது இதழ்கள் தானாக ஏளனச் சிரிப்பை உதிர்த்தது. அடுத்த நெடியே கண்ணில் நீர் கோத்தபடி நின்றிருந்தாள்.

கண்கள் பனித்த போதும் பெருமூச்சுகள் சில எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஒரு சொட்டு கண்ணீரைக் கூட சிதறி வீணடித்துவிடக் கூடாது என்ற வைராக்கியத்துடன் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு உடை மாற்றி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு இரவுணவு தயாரிக்கச் சென்றாள்.

இவ்வளவு வாக்குவாதங்களுக்குப் பிறகும் ஆழி ஈஸ்வரிக்காக முந்திப்பருப்பு மசாலா மற்றும் பூரி சுட்டு வைத்துவிட்டு அவளை உண்ண அழைத்திட, ஈஸ்வரியோ வேண்டாம் என்று மறுத்துவிட்டாள். அதில் ஆழியின் மனம் சலிப்படைந்தது தான் மிச்சம். அது அவள் முகத்தில் தெரிந்திட, அம்புதியோ "உன் நடிப்பிற்கான கூலி... நல்லா அனுபவி" என்று வெறுப்பாகக் கூறிச் சென்றான்.

'ஆக மொத்தம் இதுவும் நடிப்பு தான்' என்று வாய் திறந்து எள்ளலாக உரைத்துவிட்டு தானும் இரவுணவைத் தவிர்த்து சென்று படுத்துக் கொண்டாள்.

மறுநாள் எந்தவித மாற்றமுமின்றி மூவருக்கும் காலைப் பொழுது விடிந்தது. அவரவர் தத்தம் பணி நோக்கி செல்ல, மாலை இல்லம் வந்த அம்புதி ஈஸ்வரியை அவசரப்படுத்தி அழைத்துக் கொண்டு சென்றான்.

நீல வானம் வெய்யோனின் வேலை நேரம் முடிந்து விட்டதை உணர்த்தும் விதமாக, குளிர் நிலவை வரவேற்க மஞ்சள் உடை தரித்து கதிரவனுக்கு கையசைத்து வழியனுப்பி விட்டு, குளிர் நிலவை கரம் நீட்டி வரவேற்கக் காத்திருந்தது.

சன்னலோர பேருந்தில் பயணம் அம்புதிக்கு வேண்டிய தனிமையையும் அமைதியையும் தர மறுக்க, அடுத்த நிறுத்தத்தில் வந்த பிரசித்தி பெற்ற விநாயகர் கோவிலில் இறங்கிக் கொண்டான்.

கண்கள் முடி ஆனைமுகத்தானை தன் மனதில் நிறுத்தி இன்னல்கள் தீர்க்க வேண்டி வணங்கி நின்றான். கோவிலை வலம் வந்தவன், சாமி சன்னதிக்கு நேரே அமர்ந்து சிந்திக்கலானான்.

அவனது எண்ணங்கள் அனைத்தும் ஈஸ்வரியின் வார்த்தைகளில் தான் நிலை கொண்டிருந்தது. ஒரு மனைவி கணவனுக்கு அன்பு கொண்டு செய்ய வேண்டிய பணிகளை தான் செய்ததில் மகிழ்ச்சியே என்ற ஈஸ்வரியின் வார்த்தைகளில் தன் மேல் தான் தவறுள்ளதோ என்று நேரான பாதையில் யோசிக்கத் தொடங்கினான்.

ஆழியின் உபசரிப்பை தவிர்த்தது போல் தேஜூவின் உபசரிப்பையும் தவிர்த்திருக்க வேண்டுமோ! அப்படிச் செய்திருந்தால் அவள் தன்னை நெருங்கியிருக்கமாட்டாள் தானே!.

இது தான் நடக்கும் என்று அறிந்தே தன் கணவனை அவன் காதலியுடன் தனித்து விட்டுச் சென்ற ஆழியை அறிவிலி என்பதா! இல்லை அக்கறையற்றவள் என்பதா!

அவளை அவ்வளவு எளிதில் அறிவிலி என்றெல்லாம் சொல்லிவிட முடியாது... அக்கறையற்றவள் என்றால் கோபங்களுக்கு நிச்சயம் இடம் கிடையாது... ஆனால் அவளது கண்களில் அவ்வபோது கோபம் வந்து செல்வது உண்டே! இரண்டுமே காரணம் இல்லை என்றால் அவள் என் மேல் கொண்ட நம்பிக்கையா!!!

ஆம் என் மேல் கொண்ட நம்பிக்கை தான். அதான் அவளே கூறினாளே, அவள் இல்லா நேரம் ஈஸ்வரியின் நடவடிக்கை பற்றி!!! ஆனால் என்னை மட்டும் எப்படி நம்புகிறாள்! அவளுக்கு நம்பிக்கையூட்டம் விதமாக நான் எதுவும் அவளுக்கு செய்தது இல்லையே! முதலில் இந்த ஆழியைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.' என்று ஈஸ்வரியில் ஆரம்பித்து ஆழியில் வந்து நிறுத்தினான் தனது யோசனைகளை...

ஒரு தெளிவு கிடைத்தது போல் தோன்றிட, அப்போது தான் சுற்றும் முற்றும் நிமிர்ந்து பார்த்தான் அம்புதி. கோவிலிலிருந்து எப்போது வெளியேறினோ! அவனுக்கே தெரியவில்லை... வீடு நோக்கி பாதி தூரம் சென்றிருந்தான் அவன். இன்னும் அரைமணி நேரம் நடந்தால் வீட்டை அடைந்து விடலாம் என்பதால் தன் நடையைத் தொடர்ந்தான்.

தனது இல்லம் இருக்கும் தெருவிற்கு நான்கு தெருக்கள் முன்னால் வரிசையாக அமைந்திருந்த மாடமாளிகை போன்ற பெரிய வீடுகளில் ஒன்றிருலிருந்து ஆழி வெளியேறி வருவதைக் கண்டவன், ஒரு நொடி நின்று அவள் தானா என்று கவனித்தான்.

அவளே தான்... இது யாரது இல்லம்? இங்கே எதற்காக வந்தாள்? மொழி தெரியாத இந்த ஊருக்கு வந்தே ஒரு மாதம் தான் ஆகிறது! அதற்குள் இவளுக்கு எப்படி இவ்வளவு பெரிய ஆட்களின் பழக்கம் ஏற்பட்டது! என்று பல விடை தெரியாக் கேள்விகள் வரிசை கட்டி நிற்க, அவளைப் பற்றியே எதுவும் சரியாகத் தெரியாத நிலையில் அடுத்த குழப்பங்கள் அவன் மனதில் உதித்திட, அம்புதி மொத்தமாக எரிச்சலுற்றான்.

வீடு வரும் வரை ஆழிக்குத் தெரியாமலேயே அவளைப் பின் தொடர்ந்தவன், அவள் அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருக்கவும், அவளுக்கு பின்னாலிருந்து வந்து கதவைத் திறந்தான்.

'பெல் அடிச்சா உள்ள இருந்து வந்து தானே கதவு திறப்பாங்க! இவர் என்ன வெளியே இருந்து வந்து கதவு திறக்குறாரு! நாம லூசா? இல்லே இவர் லூசா?' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு முகத்தில் எதனையும் காட்டிக் கொள்ளாமல் உள்ளே நுழைந்தாள்.

வீடு முழுதும் இருள் படர்ந்திருக்க, ஈஸ்வரி எங்கே என்ற குழப்பத்துடன் விளக்கு சொடுக்கியை தட்டிவிட்டு, "ஈஷ்" என்று அழைத்தாள்.

"ஈஸ்வரி வீட்ல இல்லே!" என்று அசட்டையாக மொழிந்துவிட்டு அம்புதி தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.



காதல் கரை எட்டுமா?
 
Top