• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
வீடு முழுதும் இருள் படர்ந்திருக்க, ஈஸ்வரி எங்கே சென்றிருப்பாள் என்று சிந்தித்துக் கொண்டே விளக்கு சொடுக்கியை தட்டிவிட்டு, "ஈஷ்" என்று அழைத்தாள் ஆழி.

"ஈஸ்வரி வீட்ல இல்லே!" என்று அசட்டையாக மொழிந்துவிட்டு அம்புதி தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

"வீட்ல இல்லேனா என்ன அர்த்தம்! எங்கே போனாள்?" என்று படபடப்பாக வினவியபடி அவனைப் பின் தொடர்ந்தாள்.

"ரூம் ஏற்பாடு பண்ணியாச்சு" என்று அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் மொழிந்துவிட்டு துவாலை ஒன்றை எடுத்துக் கொண்டு தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள குளியலறை நோக்கிச் சென்றான்.

"ரூம் கிடைச்சிட்டா மட்டும் போதுமா! சாப்பாடு, காலேஜ் போயிட்டு வர பஸ் வசதி, கை செலவுக்கு காசு எல்லாம் யோசிக்க வேண்டாமா!" என்று குளியலறைக்குள் புகுந்தவனை விரட்டி வந்து கதவை தாழிட விடாமல் குளியலறை வாசலில் நின்று கொண்டு வினவினாள்.

அம்புதிக்கோ 'இவ உண்மையான அக்கறைல தான் சொல்றாளா! இல்லே நடிக்கிறாளா!' என்ற சந்தேகம் எழுந்திட, அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல்

"நாளைக்கு அவ காலேஜ் போயிட்டு வந்ததும் அவளுக்கே ஃபோன் பண்ணி கேளு" என்று கூறி தன்னைத் தொடர்ந்து வந்து குளியலறைக்குள் நிற்பவளை கரம் பிடித்து வெளியே அழைத்து வந்து அறையில் விட்டுவிட்டு குளியலறை கதவை தாழிட்டுக் கொண்டான்.

மீண்டும் கதவைத் தட்டி, "என்கிட்ட ஏன் மொதோவே சொல்லலே!" என்றாள்.

படாரென கதவு திறக்கப்பட கதவின் அருகே நின்றிருந்தவள் சட்டென அதிர்ந்து பின்னால் நகர்ந்து நின்றாள். ஆனாலும் அவன் வெளியே வந்த வேகத்திற்கு அவளை கிட்டத்தட்ட உரசிக் கொண்டு தான் நின்றிருந்தான்.

"அதான் இப்போ சொல்லிட்டேனே! அப்பறம் என்ன?" என்று அவளது தொடர் அதிகாரக் கேள்வியில் பல்லைக் கடித்துக் கொண்டு பேசினான்.

"ஆனா அவ எப்படி இங்கிருந்து போக சம்மதிச்சா? நான் வந்ததுக்கு அப்பறம் தான் போவேன்னு அடம்பிடிச்சிருக்கனுமே!" என்று அவன் முகமாற்றம் குரல் மாற்றம் எதையும் கண்டுகொள்ளாமல் தனது குழப்பத்தின் காரணமாக இடையில் கரங்களை வைத்து குரலை இறக்கி வினவினாள்.

இதற்கு அம்புதி பதிலேதும் சொல்லாமல் சலிப்பான பார்வை பார்த்தபடி 'அக்காவும் தங்கச்சியும் ஒருத்தருக்கு ஒருத்தர் சலச்சதுங்க இல்லே... ரெண்டு பேருக்கும் நடுல கிடந்து என் மண்டை தான் உருளுது' என்று மனதிற்குள் திட்டித் தீர்த்துவிட்டு மீண்டும் குளியலறைக்குள் புகுந்து கதவை தாழிட்டுக் கொண்டான். நேரில் கண்டதைப் போல் ஈஸ்வரியைப் பற்றி அப்படியே சொல்லும் ஆழியை நினைத்து சற்றே அதிர்ந்து தான் போனான் அம்புதி.

மெல்லிய குரலில், "இவளைப் பற்றி அவளுக்கு தெரிஞ்சிருக்கு!!! அவளை பற்றி இவளுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு!!! நான் தான் மக்கு மாதிரி ரெண்டு பேரையும் பத்தி தெரிஞ்சுக்காம இருந்திருக்கேன்" என்று தன்னைத் தானே நொந்து கொண்டு தூவாலைக் குழாயைத் திறந்து விட்டான்.

மகாராட்டிர மாநிலத்தின் இரவு நேர குளிருக்கு இதமாக கொதிநீர் உடலை நனைத்த போதும், அவன் மனம் வரை அந்த இதம் பரவவில்லை. மாறாக மாலை நடந்த நிகழ்வுகளால் அவனது மனம் அந்த கொதி நீரை விட அதிகமாகவே கொதித்துக் கொண்டு தான் இருந்தது.
அம்புதி மாலை இல்லம் நுழையும்போதே ஈஸ்வரிக்கு அவளது கல்லூரிக்கு அருகிலேயே பெண்கள் விடுதி ஒன்றில் அறை பார்த்து வைத்திருப்பதாகவும், இப்போதே அங்கே செல்ல வேண்டும் என்றும் கூறி நின்றான்.
ஆழி வரவும் அவளிடம் கூறிவிட்டு செல்வதாக ஈஸ்வரி உரைத்திட அவன் அதனை ஏற்கவில்லை. "ஆழி வந்ததும் நான் சொல்லிக்கிறேன்... ஆறு மணிக்குள்ள உன்னை ரூம்ல விடனும்... அந்த ஹாஸ்டல் ரூல் அப்படி... சோ ஆழி வர்ற வரைக்கும் வெய்ட் பண்ண நமக்கு டைம் இல்லை" என்று அவளது உடைமைகளை பெட்டியில் அள்ளித் திணித்தான்.

அதனைத் தடுத்து நிறுத்தி, "நானே எடுத்து வைக்கிறேன்" என்று கூறி அவன் அள்ளி திணித்தவற்றை ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கி வைத்தாள். அதன் பிறகும் தன்னால் முடிந்த மட்டும் தேநீர் தயாரிக்கிறேன்! இஸ்திரி கொடுத்த உடைகளை வாங்கி வருகிறேன் என்று நேரத்தைக் கடத்தினாள்.
அதனை அறிந்து கொண்ட அம்புதியும் ஈஸ்வரியிடம் இதற்கு மேல் எதுவாக இருந்தாலும் வார இறுதி விடுமுறை நாளில் வந்து பார்த்துக் கொள் என்று கூறி வற்புறுத்தி அப்போதே அழைத்துச் சென்றுவிட்டிருந்தான். பெண்கள் விடுதியில் கட்டணம் செலுத்திவிட்டு, செலவிற்கு பணம் கொடுத்தவனிடம் மறுத்து நின்றாள் ஈஸ்வரி.
"தேஜூ இது உனக்கு சேர வேண்டிய பணம் தான்" என்றிட வேறு எதுவும் கூறாமல் வாங்கிக் கொண்டாள்.
அழுது சிவந்திருந்த அவளது முகத்தைக் காண அம்புதிக்கு தான் மனம் வேதனையுற்றது.
"தேவையில்லாம எதுவும் யோசிச்சு மனசை குழப்பிக்காதே... இப்போ உன் கவனம் முழுதும் படிப்புல மட்டும் தான் இருக்கனும். எல்லார் வாழ்க்கையும் அவங்க நினைக்கிற மாதிரி சந்தோஷம் மட்டுமே நிறைஞ்சு இருந்திடாது தேஜூ..."
"இத்தனை நாள் உங்களை கண்ணார பார்க்கிற சந்தோஷமாச்சும் எனக்கு கிடைச்சது மாமா... இப்போ அதையும் நீங்களே இல்லாம பண்ணிட்டிங்க. சாயங்காலம் வீடு திரும்புற ஹஸ்பண்டுக்கு வொய்ஃப் செய்து தர வேண்டிய எந்த வேலையையும், எந்த அன்பையும் என் அக்கா உங்களுக்கு கொடுத்தது இல்லே. ஆனா உங்க வீட்ல இருந்த இந்த ஒரு வாரம் எனக்கு அந்த பாக்கியம் கிடைச்சதுல சந்தோஷம் தான் மாம்...." என்று அவள் முடிப்பதற்குள் அம்புதி தன் ரௌத்திரக் குரலால் அவள் வாயடைத்திருந்தான்.
"ஸ்டுப்பிட்.... முட்டாள் மாதிரி பேசாதே... முட்டாள்!" என்று பல்லைக் கடித்துக் கொண்டு சீறிட மீண்டும் பெண்ணவள் கண்கள் கண்ணீர் சொறிந்தது.
அதற்கு மேல் அம்புதியாலும் அங்கே நிற்க முடியாமல் ஏதோ ஒன்று மனதை உறுத்திட, "இங்கே உனக்கு எதுவும் வசதிபடலேனா சொல்லு... வேற ரூம் அல்லது ஹாஸ்டல் பார்க்கலாம்... நான் கிளம்புறேன்" என்று குரலை மட்டுமே தளர்த்திக் கூறிட, அதற்குள் பெண்ணவள்
"நான் ஒன்னும் முட்டாள் இல்லே... ஆழி தான் சொன்னா... நீங்களும் நானும் தான் சேருவோம்... அவ கூட நீங்க சந்தோஷமா இல்லைனு" என்று கண்ணில் நீர் வடிந்த போதும், விறைப்பாகக் கூறினாள்.
"அவ சொன்னா உனக்கு எங்கே போச்சு அறிவு? என்னைப் பற்றி தெரிஞ்சிருந்தும் அவ சொன்னதைப் போய் நம்புற உன்னை முட்டாள்னு சொல்லாம வேற என்ன சொல்லுவாங்க....
நீயும் நானும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு வெச்சுக்கிட்டதை விட அவ நம்ம ரெண்டு பேரையும் நல்லாவே புரிஞ்சு வெச்சிக்கிட்டு கேம் ஆடிட்டு இருக்கா... சும்மா அவ இழுக்கிற இழுவைக்கெல்லாம் போகாம, உன் லைஃப்-க்கு எது சரியோ! எது தேவையோ! அதுல மட்டும் கவனம் வை...
கண்டவங்க பேச்சை மூளைக்குள்ள ஏத்திக்கிட்டு, மூளைய அடகு வெச்சது கணக்கா திரியாதே... சொல்றது புரியுதா!" என்று அதட்டிட, கண்களைத் துடைத்துக் கொண்டு சரியென தலையாட்டினாள்.
அதன்பிறகு தான் அவனால் அங்கிருந்து சற்று நிம்மதியாக புறப்பட முடிந்தது "நான் கிளம்புறேன்"
என்று விடைபெற்றவனை மீண்டும் ஏக்கப் பார்வை பார்த்து நின்றிட, அவளை முறைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான். அதன் பிறகு தான் வரும் வழி எங்கும் ஆழியைப் பற்றியே சிந்தித்து இறுதியில் அவளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவிற்கு வந்தது.

குளித்து முடித்து உடை மாற்றி வந்தவன் இன்னமும் ஆழி தன் அறையில் இருப்பதைக் கண்டு, அவளது உடைமைகளை ஒரு பெட்டியில் அடைத்து பக்கத்து அறையில் மெத்தையில் வைத்தான்... இல்லை இல்லை கிட்டத்தட்ட எறிந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

அதில் ஆடைகள் எல்லாம் பெட்டியை விட்டு வெளியே சிதறிட, அவன் பின்னாலேயே விறைந்தவள் அவனது செயல் கண்டு அறை கதவில் சாய்ந்து நின்று கைகளை கட்டிக் கொண்டு அவனை முறைத்தாள். அறையை விட்டு வெளியேறும்போது அம்புதியும் அவளை ஒரு ஆழப்பார்வை பார்த்துச் சென்றான்.

ஆழியும் கதவை தாழிட்டுவிட்டு அவன் எறிந்து சென்ற பெட்டியின் மேல் ஏறி கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்து கொண்டு ஈஸ்வரியைப் பற்றி சிந்திக்கலானாள். கூடவே அம்புதியைப் பற்றியும்... தன்னவனிடம் தினமும் சண்டையிடக் கிடைத்த ஒரு வாய்ப்பையும் எங்கே தங்க வைத்திருக்கிறான் என்று தெரியவில்லையே என்ற யோசனை தான் அவளுக்கு.

சற்று நேரத்தில் கதவு தட்டப்பட எழுந்து சென்று கதவைத் திறந்தாள். இன்னமும் குளித்து உடை மாற்றாமல், ஏன்!!! பெட்டியிலிருந்து சிதறிய உடைகளைக் கூட எடுத்து வைக்காமல் இருப்பவளை சந்தேகப் பார்வையோடு மேலும் கீழுமாகப் பார்த்தான் அம்புதி. அவனது பார்வைக்கான அர்த்தம் புரிந்திட, மானசீகமாக தானே தன்னைக் கடிந்து கொண்டு, 'உன்னை நீயே காட்டிக் கொடுத்துவேடி எட்டப்பி!'என்று மனதில் நினைத்தபடி நுனி நாக்கை கடித்து நின்றாள்.

அவளது முகபாவனைகளையும், நுனிநா கடியையும் கண்டவன் 'அரை லூசு' என்று மனதிற்குள் மொழிந்துவிட்டு, வெளியே தலை குனிந்தபடி "இன்னைக்கு ஒரு நாளைக்கு..... அங்கே...... படுத்துக்கோ" என்றான்.

ஆழிக்கு சுத்தமாக ஒன்றும் விளங்கவில்லை. முக்கியமாக அவன் தலை குனிந்து கூறிய விதம்... "அங்கேனா?" என்றாள் அதிர்ச்சியும், ஆச்சரியமுமாக,

"அதான்..... அங்க....... என் ரூ...." என்று குரல் உள்ளே செல்ல பெருமூச்சு ஒன்று எடுத்துக் கொண்டு, அவள் கண்களைப் பார்த்து, "நம்ம ரூம்ல" என்றான்.

அம்புதியின் வார்த்தைகள் காதில் விழுந்த நொடி ஆழி உறைந்தே போய்விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்... கண்ணிமைகளைக் கூட இமைக்காது அவனையே பிரமிப்பாகப் பார்த்திருந்தாள்.

தன்னை ஊடுருவும் அவளது கண்களை பார்த்தபடியே வழியில் நின்றிருப்பவளை உரசிடாமல் ஒரு பக்கமாகத் திரும்பியபடி உள்ளே சென்று சிதறிக் கிடந்த அவள் துணிகளை எடுத்து மீண்டும் பெட்டிக்குள் திணித்து, ஜிப் செய்து பெட்டியை உருட்டிக் கொண்டு அவனது அறைக்குச் சென்றான்.

ஆழியின் கருவிழிகள் மட்டும் ஆடவனைப் பின் தொடர, சில நொடி நேரங்களுக்குப் பிறகே அவன் கூற்று மூளையை உரைக்க,

"என்ன நெனச்சிட்டு இருக்கிங்க? உங்க இஷ்டத்துக்கு ஏதோ வேண்டாத பொருளை தூக்கிப்போடுற மாதிரி நிமிஷத்துக்கு நிமிஷம் என்னை இங்கேயும் அங்கேயும் பந்தாடிட்டு இருக்கிங்க... என்னாலேலாம் உங்க கூட ஒரே ரூம் ஷேர் பண்ணிக்க முடியாது... நான் அந்த ரூமுக்கே போறேன்" என்று அவனது கையிலிருந்த பெட்டியில் கை வைத்தாள்.

அம்புதியும் பெட்டியை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, "ஏன்? ஏன் ஷேர் பண்ண முடியாது! இந்த ஒரு வாரத்துல உன்னை என்னைக்காவது நான் தொட்டிருக்கேனா?...... தேவையில்லாம" என்றான். அவளது 'இல்லேயா!' என்று ஒற்றைப் புருவம் உயர்த்திய பாணியில், கடைசி வார்த்தையை இடைவெளிவிட்டு சேர்த்துக் கூறினான்.

"தேவை எது? தேவையில்லாதது எதுன்னு அவங்கவங்க தான் டிசைட் பண்ணனும்... உங்க தேவை எதுன்னு எனக்குத் தெரியாது!" என்று அவனை சந்தேகக் கண் கொண்டு நோக்கினாள்.

"ஏய்!!! வீம்புக்குன்னே தப்பா பேசாதே... இத்தனை நாள் இங்கே தானே இருந்தே! இப்போ மட்டும் ஏன் என்னை நம்பாத ஒரு பார்வை பார்க்கிறே!" என்று கடுப்படித்தான்.

"இத்தனை நாள் ஈஷ் இருந்தா... வேற ரூம் எதுவும் ஃபிரியா இல்லே! அதான் இங்கே இருந்தேன்... இப்போ தான் அந்த ரூம் ஃபிரியா தானே இருக்கு!"

"அது.... அது இன்னைக்கு ஒரு நாள் தான் ஃபிரி.... நாளைல இருந்து அங்கே ஆள் வந்திருவாங்க" என்றான் அவளது கண்களைத் தவிர்த்து.

இதுவரை ஆழியை அவன் மொத்தமாக தவிர்த்திருக்கிறானே ஒழிய, அவள் கண்களைப் பார்த்து பேசுவதை தவிர்த்தது இல்லை. அதுவே அவளுக்கு ஏதோ ஒன்றை மறைக்கிறான் என்ற சந்தேகத்தைக் கிளப்பிட,

"ஆள் வர்றாங்களா? குடும்பஸ்தன் ஆகவும் சம்பளம் பத்தாம ரூம் எதுவும் வாடகைக்கு விட்டிருக்கிங்களா?" என்றாள் அவனை சீண்டும் விதமாக,

அவளது வார்த்தைகள் சரியாக வேலை செய்திட, சட்டென்று அவளது நயனங்கள் கண்டு முறைத்தான்.

"எனக்காக...... இன்னைக்கு ஒரு நாள் இங்கே இரேன். நாளைக்கு எந்த ரூம்ல தங்குறதுனு நீயே டிசைட் பண்ணிக்கோ..." என்றிட, அவனது 'எனக்காக' என்ற வார்த்தையிலேயே அடங்கியிருந்தாள் ஆழி. ஆனாலும் உடனே சம்மதம் தெரிவித்தால் இதற்காகவே காத்திருந்தது போல் நடந்து கொள்வான் என்று நினைத்து,

"ஒரு நாள்! ஒரே ஒரு நாள்னு அவ்ளோ சாதாரணமா சொல்லிட்டிங்க! இந்த ஒரு வாரம் என் ரூம் மாதிரி ஃபிரியா இருக்க முடியாம எவ்ளோ கஷ்டபட்டேன்னு எனக்கு தான் தெரியும்..."

"சரிரிஈஈஈஈ... இதை உன் ரூம்மாவே நெனச்சுக்கோ... உள்ளே வரனும்னா நான் கதவை தட்டிட்டு வர்றேன்... போதுமா!" என்று கெஞ்சாத குறையாக பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்.

சற்றே இறங்கி வருவதைப் போல் பாவனை செய்து "ஒரு நாள் தான். நாளைக்கு அந்த ரூம் போயிடுவேன். அதுக்கும் மீறி ஒன்னா தான் இருக்கனும்னா நீங்க அந்த ரூம்ல வந்து தங்கிக்கோங்க" என்றுரைத்து தன் பெட்டியை இத்தனை நாள் வைத்திருந்த இடத்தில் சென்று வைத்துக் கொண்டாள்.

அம்புதியோ 'நாளைக்கு என்னோட நாள் டீ... இதே மாதிரி உன்னை என்கிட்ட கெஞ்சவிடுறேனா இல்லேயா பாரு... நாளைக்கு நீயாகவே வந்து மாட்டுவே' என்று மனதிற்குள் புகைந்து தள்ளினான்.

அம்புதியின் அட்டூழியங்கள் அறை பரிமாற்றலோடு நின்றிடவில்லை. அடுத்த அதிர்ச்சி நாடகத்தை சமையலறையில் அரங்கேற்றியிருந்தான்.



காதல் கரை எட்டுமா!
 
Top