• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

02. உறவாக வருவாயா

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
உள்ளே இழுத்து நிறுத்திய கரத்துக்கு சொந்தக்காரனோ காப்பாற்றிவிட்டேன் என்ற பந்தாவும் இல்லாது, இறுகிய முகத்துடன் விறுவிறுவென சென்று தன் இருக்கையில் அமர்ந்தவன், அருகில் விளையாடியவாறு இருந்த பெண் குழந்தையினை தூக்கி மடியில் இருந்தி அதனுடன் விளையாட ஆரம்பித்தான்.

அவன் இருக்கையின் எதிரேயும் சரி, அருகேயும் சரி யாரும் இல்லை.

அவன் இருக்கையின் எதிரே இருந்த காலியான சீட்டில் தொப்பென அமர்ந்தவளுக்கு இத்தனை மணிநேரம் ஓடிய சோர்வில் கண்மூடி தலை சாய்ந்தவள்,

மூச்சினை வேகவேகமாக இழுத்து விட்டாள்.

கலைந்த மேகமாய் வந்தவள் உடல் வியர்வையில் குளித்து உடைகள் அனைத்தும் வியர்வையின் தயவால் உடலோடு ஒட்டிப்போயிருந்தது.

முகத்தில் எண்ணெய் பிசுபிசுக்க அந்த பிசுபிசுப்பில் தலையின் முடி பாதி ஒட்டிப்பேய் இருந்தது.

தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டியவன், "இந்தா இதை குடி!" என்றவன் குரலில் கண்திறந்தவள் எதிரே நீட்டிய தண்ணீரை கண்டதும்,

சறசறவென பிடிங்கி முழுவதுமாக காலி செய்தாள்.

"ரொம்ப தேங்க்ஸ் சார்! நீங்க மட்டும் இல்லன்னா இன்னைக்கு அந்த கும்பல்ட மாட்டி நான் செத்திருப்பேன்." என உணர்ச்சி பொங்க சொன்னவளை உணர்சியே அற்று கேட்டிருந்தவன் உதட்டை சுழித்துவிட்டு ஜன்னலின் புறம் திருப்பினான்.

அவனுக்கு அவளிடம் எதுவும் கேட்கவேண்டும் என தோன்றவில்லை. அது அவனுக்கு எப்போதுமே வேண்டாத ஒன்று.

இது தான் அவனது உண்மையான குணம். யார் பிரச்சனைக்கும் போகமாட்டான். அதே சமயம் வந்த பிரச்சினைகளையும் விடமாட்டான். இப்போது அவனுக்கிருக்கும் பிரச்சினையே 'வீட்டில் உள்ளவர்களை எவ்வாறு சமாளிக்க போகிறேன்' என்பது தான்.

ஐந்து வருடங்களாக வீட்டினருடன் தொடர்பில்லாது இருந்தவன், இன்று தான் அந்த வீட்டு வாசலையே மிதிக்க போகிறான். அதுவும் அவன் பாட்டிக்கு உடம்பு சரியில்லை.
இவனை பார்ப்பதற்காகவே தவித்துக்கொண்டிருக்கிறார் என்று அவன் உயிர் நண்பனான சிவா மூலம் வந்த தகவலினை அடுத்தே வீடு செல்கிறான்.

'கையில் குழந்தையோடு தன்னை பார்த்தால் அவர்கள் மனநிலை என்னவாக இருக்கும், இதை தன் தாயால் ஏற்றுக்கொள்ள முடியுமா?' என்று தான் அவன் சிந்தனை முழுவதுமே இருந்தது.

இவற்றை சந்தித்து தான் ஆகவேண்டும். ஆனால் எப்படி என்பது தான் தெரியவில்லை. 'குழந்தையை பார்த்த நொடி இவள் தாய் எங்கு என்று கேட்டால் என்ன செய்வேன்? எங்கு போய் அவளை பிடிப்பேன்?' என நினைத்து மரத்துப் போய் இருந்தவன் கண்கள் சிறிதாய் கலங்க ஆரம்பித்தது.

எதிரே உள்ளவள் தன்னை கவனிக்க கூடும் என தன் சிந்தையினை தூக்கி போட்டுவிட்டு மடிமேல் இருந்த குழந்தையை பார்த்தான்.

அது எங்கு அவன் மடியில் இருந்தது?. மதுமதியின் மடியிலிருந்து அவள் கன்னங்களை தொட்டுத்தொட்டு "ம்மா.. ம்மா…" என விளையாடியது.

அவளும் அது கூடவே சேர்ந்து விளையாட ஆரம்பித்தாள்.

சிறுவினாடி அவர்கள் விளையாட்டை பார்த்திருந்தவனுக்கு என்ன தோன்றியதோ குழந்தையை ஆவேசமாக அவளிடம் இருந்து இழுத்து தோளோடு அணைத்தவன், அவளை முறைத்தான்.

அவனது தீடீர் செயலில் முதலில் மிரண்டு விழித்தவள்,
"ம்ஹூம்... ரொம்பத்தான்", என உதட்டை இழுத்து முணுமுணுப்பாய் கூறிவிட்டு தன் பக்கத்து ஜன்னல்புறம் திரும்பினாள்.

குழந்தையாே அவளை பார்த்து "ம்மா.... ம்மா...." என ஏங்க ஆரம்பித்து, அழவே செய்தது..

பொறுத்து பார்த்தவள்.
"என்னய்யா உன் பிரச்சினை? குழந்தை தான் அழுவுதில்ல. அது தூங்கும் வரைக்கும் குடுத்தாத்தான் என்ன? நான் என்ன குழந்தைய தூக்கிட்டு ஓடிடவா போறேன்?" என அவனிடமிருந்து பறித்து எடுத்தவள் தன் மடியினுள் பத்திரப்படுத்திக்காெண்டு முறைத்தாள்.

இவள் முறைத்தால் அவன் பயந்திடுவானா? அவனும் அவளது அதிகப்பிரசங்கி தனத்தில் முறைத்தான்.

"இந்த மூஞ்சிய வைச்சிட்டு குழந்தைய தூக்கினா எந்த குழந்தை தான் இருக்கும்? குழந்தைக்கு அப்பாவா இருந்தா போதாது, காெஞ்சம் சாப்டா இருக்கணும்" என அவனுக்கு கேட்கும் படி முணுமுணுத்து விட்டு குழந்தையோடு விளையாட ஆரம்பித்து அரை மணி நேரம் கடந்திருக்க அவள் மடிமீதே சின்னவளும் உறங்கிப்போனாள்.


உறங்கியவள் தலையினை வாரிவிட்டவாறே ஜன்னல் புறம் சாய்ந்து படுத்தவளை ஒரு மாதிரியாக பார்த்தவன் திரும்பி கொள்ளும் சமயம் டிக்கட் செக்கரும் வந்துவிட்டார்.

"சார் டிக்கட்ட எடுங்க" என்றுவிட்டு காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தவரையும் எதிர் இருக்கை காரியையும் பார்த்தவாறே டிக்கட்டை எடுத்து காட்டியவனை மது பாவமாக பார்த்தவள் முழி பிதுங்கி வெளியே வந்திவிடும் போலவே இருந்தது.

அவனது டிக்கட்டினை ஆராய்ந்துவிட்டு கொடுத்தவர்.

"மேடம் உங்க டிக்கட்" என்றதும் செய்வதறியாது அவரை பார்த்து முழித்தாள்.

"சார் அவங்க அவசரமா ஏறினதனால டிக்கட் எடுக்க முடியல்ல.
இப்போ டிக்கட் போடுறீங்களா?" என அவன் அமைதியாகவே கேட்க,

"சார் இது சட்டப்படி குற்றம்! பைன் கட்டித்தான் ஆகணும்" என்றவரிடம்,

"பரவாயில்ல சார் பைன் பணத்தையும் சேர்த்து சொல்லுங்க தந்திடுறேன்" என்றான்.

"ஓகே சார்" என்றவர்,
"ஆமா இவங்க எங்க போகணும்?" என்றார் டிக்கெட் போடுவதற்காக.

"தெரியலையே! என பாவமாக சொன்னவள், ஆமா இந்த ரயில் எங்க போகுது?" என்றாள்.


"கிழிஞ்சிது! இதுகூட தெரியாமலா ஏறின?" என்றான் அந்த முசுடு மூஞ்சிக்கு சொந்தக்காரன்.

இருவரையும் வித்தியாசமாக பார்த்தவாறு போகுமிடத்தை அவர் கூற,

"அப்போ அந்த ஊருக்கே போட்டிடுங்க" என அசால்டாக கூறிவிட்டு வசதியாக சீட்டில் அமந்து கொண்டவளை பார்த்தவாறே ஒரு தொகை பணத்தை கொடுத்தவன், அதற்கான பற்று சீட்டினை வாங்கி அதை அவள் கையில் கொடுத்தான்.

"ரொம்ப நன்றி சார்! இந்த பணத்தை கண்டிப்பா திரும்ப தந்திடுவேன்" என்றவளை கேவலமாக பார்த்தவாறு தன் குழந்தையை தூக்கிக்கொண்டான்.



"எதுக்கு இந்த ரியாக்சன்? அப்பிடி நான் என்ன சொல்லிட்டேன். கடனை தரல்லன்னா தானே முறைக்கணும்? தரமாட்டேன்னு முடிவே பண்ணிட்டானோ!

நான் எல்லாம் பரம்பரை கோடிஸ்வரியாக்கும். ஒரே ஒரு போன் போட்டா இந்த ரயிலையே விலைக்கு வாங்குவேன் தெரியுமா?" என இல்லாத காலரை தூக்கியவளை,

"நானும் தான் பாத்தேனே! எவன்கிட்டையோ கடனை வாங்கிட்டு ஏமாத்தினதனால தானே அவங்க உன்னை துரத்திட்டு வந்தாங்க, இது தான் சாக்குன்னு வித்தவுட் ரயில்ல ஏறி ஊரை விட்டு தப்பிச்சு போற உனக்கு இத்தனை வாய் ஆகாது" என்றான் அவன்.

"இதெல்லாம் ஓவர் பெர்ப்பாமன்ஸ். சிரிப்பே வரல்ல. வேணும்னா வேற ட்ரை பண்றீங்களா?" என கேட்டவள்,

"ஏதோ உதவி செய்ஞ்சிங்கலேன்னு பாத்தா ரொம்பத்தான், எனக்கும் காலம் வரும் அப்போ கவனிச்சுக்கிறேன்" என்று விட்டு சிறிது நேரம் இருட்டையே வெறித்திருந்தவளுக்கு தூக்கம் வர, தன் இருக்கையிலேயே சரிந்தாள்.

தூங்கும் அவளையே பார்த்திருந்தவனுக்கு தன் காதலியின் நினைவுகள் வந்து போனது.


ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் காதுகளில் ஏதோ பயங்கரமான இரைச்சல், பேப்பர் பேப்பர், சார் டீ சாப்பிடுறீங்களா? என அவர்களை தாண்டியும் வந்த சத்தத்தில் கண்விழித்தவள் விழித்தது என்னமோ அவன் முகத்தில் தான்.

கையில் குழந்தையை வைத்துக்கொண்டு மறு கையினால் மேலே இருந்த தன் பையினை இழுக்க முடியாது இழுத்தவனை கண்டு,

"ஓ... நீங்க இறங்க வேண்டிய இடம் வந்திச்சா?, குழந்தைய தந்திட்டு பைய எடுக்கலாமே" என்றாள்.

"நான் மட்டுமில்ல. இந்த ரயில்ல இருக்கிறவங்க பூரா இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு. ஏன்னா இதுக்குமேல ரயில் போகாது. எரும மாட்டில மழை பேஞ்ச கணக்கா தூங்கினா இதெல்லாம் எங்க தெரிய போகுது?" என கடுமையாய் கூறியவன் தன் பையினை வேகமாக இழுத்துக்கொண்டு வாசலை நோக்கி நகர்ந்தான்.





ரயில் வாசலில் நின்றவாறே தன் நண்பன் சிவாவை கண்களால் தேடியவன் கண்களில் அவன் ஜன்னல் ஜன்னாலாக தேடுவது தெரிந்தது.


"டேய் சிவா...! நான் இங்க இருக்கேன்." என பெரிதாக சத்தம் கொடுத்தான்.


அவன் குரலை வைத்தே தன் நண்பனது குரல் தான் என ஓடிவந்து குழந்தையையும் பாராது கழுத்தை கட்டிக்கொண்டவன்,

"எப்பிடிடா இருக்க? இத்தனை நாள் ஏன்டா எங்கள பாக்க வரல்ல?" என அவன் தோற்றத்தை ஆராய்ந்தான்.

அவனது கையில் குழந்தை ஒன்று புதிதாக இருக்கவே!
"இது யாரு குழந்தை கேஷவா?. பாக்கிறப்போ உன் ஜாடையில இருக்கிற போல இருக்கே!" என ஆச்சரியமாக கேட்டான்.



அவன் கேள்விக்கு பதில் சொல்ல வாயெடுத்தவனை கேஷவனது மொத்தக்குடும்பமும் சூழ்ந்து கொண்டது.

இதை கேஷவன் சிறிதும் எதிர் பார்க்கவில்லை.
அவன் ஊருக்கு வரும் தகவலை அவன் சிவாவிடம் மட்டும் தான் கூறியிருந்தான். அப்படியிருக்கும் போது அவனது மொத்தக்குடும்பமுமே டேஷனை நிறைத்திருந்தால் அவனால் அதிர்ச்சியாகமல் என்ன செய்ய முடியும்?

இதில் வினோதம் என்னவென்றால் உடம்புக்கு முடியவில்லை என யாரை காரணம் காட்டி அவனை இங்கு வர வைத்தானோ, அவரே முதலாளாக நிற்பதை கண்டவன் விழிகள் சிவாவை முறைத்தது.

"எதுக்கு அவனை முறைக்கிற? நான் தான் எனக்கு உடம்புக்கு முடியலன்னு ட்ராமா பண்ணேன். அதை நம்பி இந்த கிறுக்கு பயலும் உன்னை வரவைச்சிட்டான்.

எனக்கு தெரியும் நீ இருக்கிற இடம் யாருக்கு தெரியலன்னாலும், இவனுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு,
ஐஞ்சு வருஷமா உன்னை நினைச்சு ஏங்கிட்டு ஒரு குடும்பமே இருக்கிறப்போ, நீ எங்கள கண்டுக்காம இருந்தா நாங்க என்னடா பண்றது?.

அதான் ஒரு வாரமா தொடர்ந்து நோயில கிடக்கிறவ போல நடிச்சேன். அது இவ்ளோ சீக்கிரம் வேலை செய்யும்னு நினைக்கல"
என தன்னை தானே பெருமை பேசி சிரித்தவர் குணம் அவர் செல்ல பேரனுக்கு தெரியாதா?.

சிறு வயதிலிருந்து கேஷவா கேஷவா என்று யாரிடமும் தராது கைகளுக்குள் அவனை பொத்திப்பொத்தி வளர்த்தவராயிற்றே!
அவன் மேற் படிப்பிற்காக பாரின் செல்லும் போது கூட அவனை அனுப்பி வைக்க மாட்டேன் என்று எவ்வளவு முரண்டு பிடித்தார். பின் கேஷவனே கெஞ்சிய பிறகு தான் அனுமதியே தந்தார் வடிவழகி பாட்டி.


"அது பாட்டி!" என கேஷவன் தயங்க,

"ஏன்டா ராசா? உனக்கு யாரு மேலய்யா கோபம்? உனக்கு இங்க யாரு என்ன குறை வைச்சோம்ன்னு எங்கேயோ கண் காணாத தேசத்தில போய் அநாதை போல கிடக்க?" என பல நாட்கள் அவனை காணாத ஏக்கமாக அவன் கன்னத்தை தாங்கி கேட்டார்.

யாரை அவன் குறை சொல்வான்? அந்த குடும்பத்தில் யாரும் அவனுக்கு கேடு நினைக்காத போது.

வாசலில் கேட்ட சலசலப்பில் 'என்னடா இது ஊரு? இதுக்கு கிராமமே தேவல போலயே! என்னா சத்தாேம், என்னா சத்தோம்' என புலம்பியவளுக்கு அந்த ஊரில் யாரையுமே தெரியாது என்ற கவலையே கொஞ்சமும் எழவில்லை.

முதல் முறை என்றால் பயந்திருப்பாளோ என்னவோ! நாடோடி போல் துரத்துபர் கைகளிலிருந்து தப்பிக்கொண்டே ஓடுபவளுக்கு காண்பவர்கள் அனைவருமே சொந்தம் தான்.

'சரி இப்பிடியே இருந்தா வேலைக்காகது. இறங்கி ஒரு சுத்து சுத்தி ஊரை பாத்திட்டு, கொட்டிக்கவும், ஒட்டிக்கவும் ஒரு இடத்தை தேடிட வேண்டியது தான்' என தனக்குள் சொல்லிக்கொண்டவள், உதடுகளோ தன் நிலையினை நினைத்து விரிந்தது.


"என்னை மன்னிச்சிடுங்க பாட்டி! அது நான்...." என சொல்ல முடியாது தயங்கும் அதே நேரம்,
பின்னால் இறங்கியவளை கண்டு அவனது கையிலிருந்த குழந்தை "ம்மா...!" என அழைத்தவாறு அவளிடம் தாவியது.



"ஏய் செல்லக்குட்டி! வா வா வா...!" என ஓடிப்போய் தூக்கிக்கொண்டவள் மேல் இருந்தவாறு,

"ப்பா ம்மாப்பா... ம்மா.. ம்மா.." என மழலை மொழியில் தந்தையின் கன்னத்தை சுரண்டிய குழந்தையின் பேச்சினை கேட்டு மொத்த குடும்பத்தின் கவனமும் அவள் புறம் திரும்ப,
கேஷவனும் திரும்பினான்.

அவளையும் கேஷவனையும் மாறி மாறி சந்தேகமா பார்த்தார்கள் மற்றவர்கள்.

"யாரு மாப்பிள்ளை இது? குழந்தை ஏன் உங்களையும், அந்த பொண்ணையும் அம்மா அப்பாங்கிறா? அப்போ இந்த ஐஞ்சு வருஷமா இது தான் நடந்திச்சா? இதுக்குத்தான் எங்க கூட தொடர்பிலயே இல்லாம இருந்தீங்களா?" என பொது வெளி என்றுகூட பாராது சத்தமிட்டார் மாமனார்.

ஆம் அவர் தான் அவனது தாய் மாமன். அவன் அன்னையோடு கூடப்பிறந்த அண்ணன் பரமானந்தம்.


அவர் மகள் லாவன்யா.
இவனுக்கும் அவள் தான் என்று சிறுவயதிலேயே முடிவு செய்திருந்தனர், அதனால் தான் ஜோடியாக வந்து நின்றவர்களை கண்டு கொந்தளிக்க ஆரம்பித்தார்.

"ஊஸ்.. என்ன இது? இடம் பொருள் இல்லாம சத்தம் போடுறது. எதுவா இருந்தாலும் வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்" என்றவர்.

"கேஷவா பொண்டாட்டி, புள்ளைய அழைச்சிட்டு வா! வீட்டுக்கு போகலாம்" என கட்டளையாக சொல்லிவிட்டு திரும்பி நடந்தார் வடிவழகி.

"பாட்டி நான் சொல்லுறத ஒரு வாட்டி கேளுங்க" என கூறியவன் பேச்சு காற்றோடு கரைந்து வீணாகியதே தவிர, அவர் செவிகளை தீண்டவில்லை.

வயதான பெண்மணி என்றாலும் அவர் நடையில் வேகத்தினையும், கம்பீரத்தையும் பார்த்து அவனுமே பெருமையாக உணர்வதுண்டு.

இருக்காதா பின்னே! இந்த வயதிலும் ஒற்றை வார்த்தையில் அனைவரையும் அடக்கி, அந்த குடும்பத்தை நிர்வாகம் செய்வதென்றால் சும்மாவா?.

'ஆனால் இப்போ என்ன செய்யிறது. அவங்க சொல்லுறாங்க என்கிறதுக்காக யாருன்னே தெரியாத ஒருத்திய அழைச்சிட்டு போகமுடியுமா? அதுக்கு இவ ஒத்துப்பாளா?' என நினைத்தவன்,

அவள் புறம் திரும்பி, "அது... நான் சொல்லுறதுக்கு முன்னாடி பாட்டி" என கூறவந்தவனுக்கு வார்த்தைகள் மேல எழவில்லை.

"அங்க என்ன பேச்சு? அதான் வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்ன்னு பாட்டி சொல்லிட்டு போயிட்டாங்களே!
நீங்க வாங்க அண்ணி அவரு கிடக்காரு!" என அவள் கையை பிடித்திழுத்து சென்றாள் அவன் தங்கையான இலக்கியா.


அவள் இழுவைக்கு அவளுடன் சென்ற மதுமதி, "இங்க பாருங்க நீங்க நினைக்கிறது போல எதுவுமில்லை.
பாப்பா என்னை அம்மான்னு கூப்பிடுறத வைச்சு நீங்க எல்லாருமே தப்பா நினைச்சிட்டிங்க.

ஆனா எனக்கு உங்களை எல்லாம் யாருன்னே தெரியாது. என்னை விடுங்க நான் எங்கேயோ போறேன்" என்றவள் வாயினை பொத்தியவள்.

"இதை தான் சொல்லப்போறீங்கன்னு பாட்டிக்கு முதல்லயே தெரியும். சிவாண்ணாவும் பாட்டிக்கு விளக்கமா சொன்னதனால தான் பாட்டி இப்பிடி ஒரு அதிரடி முடிவு எடுத்தாங்க.

அதென்னா ஊருக்கு வந்திட்டு நம்ம வீட்டு்க்கு வராம தனி வீடெடுத்து தங்குறது? என்ன கூட்டமா இருந்தா ரொமான்ஸ் பண்ண முடியாம போகும்ன்னு பயமா?" என சிரித்தபடி கேட்டவளை என்ன செய்யலாம் என்றிருந்தது மதுமிதாவுக்கு,

'இவன் கூடல்லாம் ரொமான்ஸா? உவ்வே… உம்மனா மூஞ்சி! இதுக்கு வடிவேலு கூட ரொமான்ஸ் பண்ண கரடிய கூட்டி வந்து விட்டாலும் பண்ணிட்டு போவேன்' என நினைத்தவள்,

"இந்தாம்மா! நிஜமாவே எனக்கு உங்கள தெரியாது" என்றாள்.

"எங்களுக்கு மட்டும் உங்கள தெரியுமா? எப்போ அண்ணனுக்கு மனைவி ஆகிட்டிங்களோ, இனி தெரிஞ்சுக்கலாம். அதனால இப்போ அமைதியாவே வாங்க" என்றவள் காரின் கதவனை திறந்து விட்டு,

"பாப்பாவ பத்திரமா தூக்கிட்டே ஏறுங்க, அண்ணனை அழைச்சிட்டு வரேன்" என ஓடிச்செல்ல, முன்னர் அவர்கள் குடும்பத்தை நிரம்பிய கார்கள் வரிசை கட்டி பறக்க தொடங்கியிருந்தது.


"அண்ணி கார்ல ஏறிட்டாங்க, நீங்களும் வாங்கண்ணா" என அழைத்தாள்.

"இலக்கியா நீயாவது புரிஞ்சுக்கடா! நீ அண்ணின்னு கூப்பிடுறவ உனக்கு அண்ணியே இல்லை" என்றான்.

"ஏன்னா உனக்கும் அண்ணிக்கும் ஏதாவது தகராறா? அதான் இந்த மாதிரி மாறி மாறி பேசுறீங்களா?

எதுன்னாலும் வீட்டில போய் உங்க ரொமான்ஸ்ஸ கண்டினியூ பண்ணுங்க.
இப்போ மத்த கார்லாம் கிளம்பிடிச்சு, அப்புறம் நாம லேட்டாகிட்டோம்ன்னு பாட்டி சத்தம் போடும். வாண்ணா!" என அவனையும் பேசவிடாது இழுத்து சென்றாள்.

செய்வதறியாது காரின் முன்புறம் ஏற சென்றவனை இடித்துக்கொண்டு வந்து தான் முன் கதவை திறந்தவள்,

"வீட்டுக்கு வரத்துக்குள்ள சமாதானம் ஆகிடுங்க, இல்லன்னா உங்களை பிரிச்சு வைக்கிறதுக்குன்னே பெரிய கூட்டம் காத்திட்டிருக்கு." என்றவள் முன்னால் ஏற, வேறு வழியே அற்று பின்னால் ஏறிக்கொண்டான்.


அவன் ஏறியதும் அவனை இடித்தவள்,"உங்க மொத்த குடும்பமுமே லூசா என்ன? கொஞ்சமாச்சும் பேச விடுறாங்களா? ஒன்னு சொன்னா இன்னொன்னு புரிஞ்சுக்க வேண்டியது.
செம கடுப்பாகுது.

அறிவிருக்கிற எந்த பொண்ணும் உங்களை கட்டிப்பாளா?" என வழக்கம் போல அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டவளை பதிலுக்கு முறைத்தான் அவன்.

பாவம் அவனே என்ன சொல்லி இவர்களை சரி பண்ண போகிறோம் என தெரியாது முழிக்க, இவளது லொட லொட பேச்சு எரிச்சலை வரவைத்திருந்தது.

'வீட்டுக்கு போனதும் உண்மைய சொல்லி இவளை முதல்ல துரத்தணும். இல்லன்னா சாத்தானை கூடவே நான் வைச்சிருக்கிறதா ஆகிடும்.' என பலத்த சிந்தனைகளோடு கார் பயணத்தை மேற்கொண்டான்.
 
Last edited:

Jothijo

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 23, 2022
Messages
8
சூப்பர் 👌👌👌👌, மது கேஷவன் குடும்பதில்லமாட்டிகிட்ட இனி 🤔🤔🤔🌺🌺🌺
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
சூப்பர் 👌👌👌👌, மது கேஷவன் குடும்பதில்லமாட்டிகிட்ட இனி 🤔🤔🤔🌺🌺🌺
அதான் மாட்டிக்கிட்டாளே... ஹாஹாஹா
 

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
என்னடா கேஷவா உனக்கு வந்த சோதனை.கரடிகூட வேணாலும் ரொமான்ஸ் பண்ணுவாளாம்.உன்கூட பண்ணமாட்டாளாம்🙄🙄🤣🤣🤣வடிவழகி பாட்டி டிராமா பண்ணி வர வைச்சிருக்கு.இலக்கியா அவங்க சொல்ல வர்றதை புரிஞ்சிக்காம இவளா பேசிக்கறா😅😅
 
Top