• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

04. திகட்டாத தீ நீயே!

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
மதியம் சமைத்த பாத்திரங்களை கிணற்றடியில் உறுட்டி முடித்தவள், எப்போதும் போல் அவற்றை அதற்கான இடத்தினில் ஒவ்வென்றாக அடுக்குவதற்காக கைகளை நிறைத்த பாத்திரங்களை ஒன்றாக எடுத்து சென்றவள், கையிலிருந்த பாத்திரங்களில் ஒன்று நழுவி கிழே விழவே,

"போச்சா....? ஒத்தைக்கு ரெட்டை வேலை...." என மீதியையும் தரையில் போடாது பத்திரமாக பாத்திரத்தையே பார்த்தவாறு முக்கில் திரும்பியவள் மேல் மோதி நின்றான் ஆத்விக்.

எதிர்பாராத மோதலில் கையிலிருந்த மொத்த பாத்திரமும் மண்ணில் சிதறிவிட,

சுருங்கிய முகத்துடனே எதிரில் நின்றவனைக்கூட கருத்தில் கொள்ளாது... பாத்திரத்தை பாவமாக பார்த்தவாறு அவற்றை எடுப்பதற்காக குனிந்தாள் தாமிரா....


திடீர் மோதலில் தரையில் விழாது கால்களை ஊன்றி சுதாரித்து நின்ற ஆத்விக், தரையிலிருந்த பாத்திரங்களை பொறுக்கியவள் யார் என்பதை அறியாது.

"சாரி.... இங்க கிணறு எங்க இருக்குன்னு தெரியாம, அங்க இங்க பார்த்திட்டு வந்ததனால எதிர்ல வந்த உங்களை கவனிக்கல." என குனிந்திருந்த அந்தப்பெண்ணிடம் மன்னிப்பை வேண்ட,

"பரவாயில்லங்க..." என நிமிர்ந்தவளை கண்டதும் விழிகள் பெரிதாய் விரிந்தது.

"ஏய்..... நீயா.....? நீ எப்பிடி இங்க.....?" என்றான் அவளை அங்கு எதிர்பாராத ஆச்சரியத்தில்.

அவளும் அவனை இனங்கண்டு கொண்டாள் தான். வெளியே செய்த குறும்பினை இங்கு செய்திட முடியுமா..? அவனை இதுவரை கண்டும் அறியாதவள் போலவே,

"கிணறாங்க.... அதோ அங்க இருக்கு... போங்க." என்றுவிட்டு பாத்திரங்களை பொறுக்கியவள் மனநிலையோ உள்ளே ஓலமிட்டது.

'இவன் தான் மாப்பிள்ளையா....? இன்னைக்கு செத்தோம்... நேத்து தெருவில நான் பண்ண அடாவடி தனத்தை... இப்போ இவன் அம்மாகிட்ட சொன்னான்னா, ரெண்டு நாள் நடக்க முடியாதளவுக்கு காலை உடைச்சு வைக்கப்போறாங்களே....' என எண்ணியவாறு எழுந்து அவனை விலக்கி நடந்தவள் முகத்தினை கண்டவன் நெற்றியில் குழப்ப ரேகைகள் ஒன்றாய் சங்கமித்தது.

"நான் உன்னை தான் கேட்குறேன். நேத்து...... நீ தானே தெரிவில பஜாரி மாதிரி என்கிட்ட சண்டைக்கு வந்த.? இன்னைக்கு என்ன ரொம்ப நல்லவமாதிரி பம்முற...?" என்றவனது அதட்டலான பேச்சில்

நின்று மெதுவாக திரும்பி அவனை பாவமாக பார்த்தவள்,


"அது..... நேத்து..." என ஏதோ கூற வர

"அடியே மூதேவி.... அங்க என்னடி பண்ணிட்டிருக்க....? தொட்டிக்குள்ள தண்ணி இறைச்சு வைச்சியா இல்லையா......? மாப்பிள்ளை தட்டி விழுறதுக்கா அந்த பாத்திரங்கள இன்னமும் கழுவாம, பரப்பி வைச்சிருக்க.... போ... போய் அத முதல்ல ஒதுங்க வை" என்றார் பற்களை நறநறவென கடித்தபடி வடிக்கரசி.

மறுத்து ஒரு வார்த்தை பேசாது அப்பாவியாய் சரியென தலையசைத்து விட்டு, கையிலிருந்த மண் ஒட்டியிருந்த பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு நடந்தாள் கிணற்றடிக்கு.

"மாப்பிள்ளை நீங்களும் அவகூட போய் கழுவிட்டு வாங்க... அப்புறம் உங்க தகுதிக்கெல்லாம் இவகூட நின்னு பேசிட்டிருக்காதிங்க." என்றுவிட்டு பின்பக்க வாசற்படிகளில் இருந்து திரும்பி உள்ளே சென்றவரையே பார்த்திருந்தவனால் சற்றும் நம்பமுடியவில்லை.

நேற்று அவனிடம் ஒரு வார்த்தைக்கு நாலு வார்த்தை எதிராக பேசியவள், இன்று ஒரு வார்த்தை பேசவே திக்குமுக்காடுவதை காணும்போது, இவள் அவள் தானா என்ற சந்தேகம் அவனுக்கும் உண்டாகத்தான் செய்தது.

ஆனால் நேற்று அவன் தான் நன்றாக பார்த்தானே! அவளது உதட்டின் ஓரத்தில் இருந்த கருநிற மச்சம் இவளுக்கும் இருப்பதை.

அந்த மச்சம் அவனுக்கு எதையோ நினைவுபடுத்த, அதை தற்சமயம் ஒதுக்கி வைத்து விட்டு இப்போதைய நடப்புக்கு திரும்பியவன் தாமிராவை திரும்பி பார்த்தான்.


தரையோடு இழுபடும் பாவாடையை இழுத்து சொருகியிருந்தவளது பிளவுஸ்க்கும் பாவாடைக்கும் பொருத்தமற்ற வர்ணங்கள்.

தாவணியின் ஓரத்தில் கிழிந்து அதை பொத்தன் இட்டிருந்தவள் தையல் நூல்கூட தாவணிக் கலரோடு ஒட்டாது, அதை தனியாக புடம் போட்டு காட்ட, கார்கால மேகத்துக்கு ஒப்பாக கலைந்திருந்த முடியினை புறங்கையினால் காதுக்குள் தள்ளி, கிணற்றில் தண்ணீரை அள்ளிக் கொண்டிருந்தவளையே சில நொடிகள் உற்று நோக்கிவிட்டு அவளை நெருங்கினான் ஆத்விக்.



"நீ இவ்ளோ அமைதியான பொண்ணா இருப்பேன்னு சத்தியமா எதிர் பார்க்கல மூதேவி....." என வலியப் போய் வம்பிழுத்தவன்

"அது தானே உன்பேரு....? ஆமா பாட்டி சொன்னப்போ என் காதில தெளிவா விழுந்திச்சு.

சும்மா சொல்லக்கூடாது..... உன்னை விட உன்பேரு ரொம்ப அழகா இருக்கு.... நீ எனக்கொரு பேரு வைச்சல்ல.... அந்த பேரு கூட ஏதோ மண்..........

ஆ.... மக்கி மண்ணு...... உங்க ஊரில ஆசையா இப்பிடி தான் பேரு வைப்பாங்களா.....?" சிரித்தவன்,

"ஆனா அவங்க உன்னை திட்டுறப்போ என்னமோ தெரியல, இன்னமும் உன்னை அவங்க திட்டணும், அதை என் காதால கேக்கணும்ன்னு ஆசையா இருக்கு... இப்போ என்ன பண்ணலாம்......?" என யோசிப்பது போல் பாசாங்கு செய்ய,

கையிலிருந்த வாளியினை கீழே போட்டவள்,

"ஐய்யோ..... அப்பிடி எதுவும் செய்திடாதிங்க.. நீங்க தான் சுவாதி அம்மாவ கட்டிக்க போறவர்ன்னு தெரியாம நேத்து அப்படி நடந்துக்கிட்டேன். அதை எல்லாம் மனசில வைச்சிட்டு என்னை பெரியம்மாகிட்ட காட்டி குடுத்திடாதிங்க. ப்ளீஸ்....." என்றாள் அவள் கெஞ்சலாய்,

"என்னது சுவாதி அம்மாவா....? அப்போ நீ இங்க வேலை காரியா....? உன்கிட்டையா நான் கேவலப்பட்டேன்... இரு உன்னை..." என ஆத்திரமா வந்தவழி திரும்பி நடந்தவன் முன்பு ஓடிச்சென்று வழி மறித்து நின்றவள்,

"அண்ணா ப்ளீஸ்..... தெரியாம பண்ணிட்டேன். சத்தியமா இனிமே யாருகிட்டையும் இந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்.... நீங்க எல்லார்கிட்டையும் நடந்ததை சொன்னீங்கன்னா அம்மா என்னை கொன்னே போட்டிடுவாங்கண்ணா... ப்ளீஸ்.." என அழுபவளைப்போல் கெஞ்சியவளை பார்க்கும் போது பாவமாகத்தான் இருந்தது.

அவன் ஒன்றும் மேல் வர்க்கம் கீழ் வர்க்கம் என்ற பாகுபாடு பார்ப்பவன் அல்ல. அவரவர்கள் நிலையை பொறுத்து அவ்வாறு வாழ்கிறார்கள் என்ற கொள்கை உடையவன்.

படித்தவன் அவ்வாறு இல்லாமல் இருப்பது தான் அதிசயம். ஆனால் நேற்று இவள் அவனை ஆத்திரம் கொள்ள செய்ததற்கு சற்று இவளை மிரட்டி வைக்க வேண்டும் என்று சும்மா மிரட்டிப்பார்க்க நினைத்துத்தான், நேற்று நடந்தவற்றை சொல்கிறேன். என்று பொய்யாக நடந்து கொண்டான்.

ஆனால் இவள் அழுவாள் என்று சிறிதும் நினைக்கவில்லை.

பின்னே நேற்று அவ்வளவு திமிராக பேசியவள், இன்றும் தன் கௌரவத்தை விட்டுக்காெடாது, போய் சொல்லு.. எனக்கு என்ன என முறுக்கிக்கொள்வாள் என்று எதிர்பார்த்தால், இவளோ இப்படி அழவே அவனுக்கு ஒரு மாதிரியாகிப்போனது.

அவள் கண்ணீர் அவனை கரைத்தது என்றால், அவளது அண்ணா என்ற வார்த்தை ஏனோ ஆத்திரத்தை உண்டு செய்தது.

"எதே.... நான் உனக்கு அண்ணாவா....? இன்னொரு முறை அண்ணான்னு சொல்லி பாரு ........." என அவன் அவளை மிரட்டிக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்த பார்த்தீபன்,


"இவ்ளோ நேரம் இங்க என்ன பண்ணிட்டிருக்கிங்க மாப்பிள்ள....?" கேள்வி என்னமோ ஆத்விக்கிடம் தான், ஆனால் அவன் பார்வை தாமிராவையே மேய்ந்தது.

தாமிரா மேலான அவனது பார்வையில் தெரிந்த வித்தியாசத்தை என்னவென உணர்ந்தவன், அவனை இன்னமும் கூரிய பார்வை பார்த்தவாறு,

"இல்ல இவ என்னை அண்ணா என்கிறா... அதான் எந்த முறையில நான் இவளுக்கு அண்ணன்னு கேட்டிட்டிருந்தேன்." என்றான்.

"ஓ.... அப்பிடியா....? அவ எல்லாரையுமே அப்படித்தான் கூப்பிடுவா... நீங்க வாங்க, நம்ம வந்த வேலைய பார்க்கலாம்." என்றவனது குரலில் ஏதோ தெளிவு உண்டானது போல் தோன்றியது ஆத்விக்கிற்கு.

"ம்ம்" என்றவாறு பார்த்தீபனது அழைப்புக்கு இசைந்து நடந்தவன் கண்களோ, தாமிராவையே திரும்பி பார்த்தது.

அவளோ இது தான் சமயமென அந்த இடத்தை விட்டு ஓடியே விட்டிருந்தாள்.


அதன் பின் சுவாதியின் குறுகுறு பார்வையிலும், வடிவுக்கரசியின் பேச்சிலும் எரிச்சல் உண்டானாலும் அதை பொறுத்துக்கொண்டு சாப்பிட்டு முடித்தவன், விட்டால் போதுமென தப்பித்து ஓடிவிட்டான்.

தங்கத்திரளான சூரியனை முழுங்கிய வானமானது, அதன் வெப்பமதை சகித்துக்கொள்ள முடியவில்லை போலும்... உடலெங்கும் அதன் பிரதிபலிப்பாக வெந்ததற்கு அடையாளமாக சிவந்து போயிருந்த அந்தி மாலை பொழுததில்...

காரினை அதற்கான இடத்தில் விட்டு விட்டு, வீட்டுக்குள் நுழைந்தவனை எதிர்பார்த்து காத்திருந்தவர் போல், பிரமாண்டமான அந்த வரவேற்பறையின் சோபாவில் கால் மேல் கால் போட்டு வசதியாக வாசலையே பார்த்தவாறு அமர்ந்திருந்தவரை, வாசலில் வரும் போதே கண்டுவிட்டான் ஆத்விக்.

இருந்தும் எப்போதும் போல் அவரை கண்டும் காணாதவனாட்டம் பார்வையினை மறுபுறம் திருப்பிக் கொண்டவன், எங்கும் தன் கால்களுக்கு தடைவிதிக்க மனமற்று, நேராக தன் அறை நுழைய மனதிலேயே உத்தரவிட்டு அதன் படி நடந்தான்.


"இவ்ளோ நேரம் அங்க தான் இருந்திட்டு வரியா...?" என்றார் சோபாவில் அமர்ந்திருந்தவர் குரலில் அழுத்தத்தை கூட்டி.

தெளிவாகவே அவர் பேச்சானது அவன் காதில் விழத்தான் செய்தது... இருந்தும் அதை காதில் வாங்காதவனாட்டம் முன்னேறிட,

"உன்னை தான் கேட்டிட்டிருக்கேன்..... நீ பாட்டுக்கு அமைதியா போயிட்டிருக்க.." என்றவரது அதிகாரமான குரலில் அதே இடத்தில் நின்றவன் அவர் புறம் திரும்பவே இல்லை.

இன்று மாத்திரமல்ல.... எப்போதுமே அவர் பால் அவன் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கும். அவர் முகம் ஏறெடுத்து பார்ப்பதும் இல்லை... அவர் பேச்சுக்கு செவி சாய்த்ததும் இல்லை... அவர் சொல்வதை கடமையே என செய்வதோடு சரி... தவறாக இருப்பினும் மறுத்து ஒரு வார்த்தை பேசமாட்டான்... வெளி நாட்டு கல்வி கூட அவர் இஷ்டப்படி தான். அதற்கு பெயர் மரியாதை இல்லை.... அது ஒரு வெறுப்பு.

அவனது எட்டாவது வயதில், தாயை விட அதிகமாக அவனை நேசித்த ஒரே உடன் பிறப்பான தமக்கையவளை அவனிடமிருந்து பிரித்தவர் அவராயிற்றே....
அன்று மாத்திரம் அவள் ஆசைக்கு அவர் இணங்கி இருந்தால், அவனை அவள் பிரிந்து போயிருக்க மாட்டாள்.

அன்று அவள் எந்தளவிற்கு அழுது அவர் காலில் எல்லாம் விழுந்து கெஞ்சியிருப்பாள்...

குடும்ப கௌரவம், மானம், மரியாதை என்றெல்லாம் கண்ணுக்கு தெரியாததை கொண்டாடி, அவன் உயிரானவளை யாருமற்ற அனாதை ஆக்கிவிட்டார் என்ற கோபம் அவனுக்கு.

தமக்கை அந்த வீட்டை விட்டு சென்றதிலிருந்து, யாருடனும் மனம் விட்டு பேசியதில்லை அவன். கடமையே என தந்தையை அப்பா என அழைப்பவன் மனதில் அவர் மேலிருந்த மரியாதை விலகி வெறுப்பே துளிர் விட்டிருந்தது.

அவ்வப்போது தமக்கையை நினைத்து அழுபவனை தந்தை சமாதானம் செய்வதே..
"நீ தான்டா அவளை நினைச்சு உருகிட்டிருக்க.... அவளுக்கு உன்மேலயோ, இல்லை எங்க மேலயோ பாசம் இருந்திருந்தா.... கண்ட நாய் கூடல்லாம் குடும்ப மானத்தை கப்பல் ஏத்திட்டு போவாளா....? வருவாடா......! அவ கண்டிப்பா வருவா...... இருபது வருஷம் என் பொண்ணு என் பொண்ணுன்னு பொத்திப்பொத்தி வளர்த்த எங்களை, ஊரே சிரிக்க வைச்சிட்டு போனவளை எங்க வயித்தெரிச்சல் சும்மா விட்டிடுமா..?

நீ வேணும்னா பாரு.... இன்னும் ஒரே மாசத்தில, கண்ண கசக்கிட்டு என் கால்ல வந்து விழத்தான் போறா... அப்போ பார்த்துக்கலாம்...." என அவன் நெஞ்சிலும் நஞ்சை விதைப்பது போல் தோளினை தடவி ஆறுதல் கூறியவர் கையினை உதறிவிட்டவன்... வடிந்த கண்ணீரை அழுத்தி துடைத்துக்கொண்டு, தனக்கான அறையில் முடங்கிக் கொண்டான்.

அவரது அன்றைய பேச்சு ஏனோ அவனுக்கு பிடிக்கவில்லை... அவனுக்கு தான் நிதர்சனம் தெரியுமே.... அவன் என்ன ஐந்து வயது பாலகனா? விபரம் அறியாமல் தந்தை பேச்சை நம்புவதற்கு.

அன்றிலிருந்து தந்தையின் மேலிருந்த வெறுப்பினை வெளிப்படையாகவே காண்பிக்க ஆரம்பித்தான்.

தானாக அவரை நாடிச்சென்று பேச மாட்டான். அவராக வந்து பேசினால் ஒற்றை வார்த்தையில் பதிலுரைத்து விட்டு நகர்ந்து சென்று விடுவான்.


ஆரம்பத்தில் தமக்கையின் பிரிவில் உண்டான விரக்தியில் தான் இப்படி நடந்து கொள்கிறான் என நினைத்தவருக்கு... நாட்கள் நகர நகரத்தான், தன் மேல் உள்ள கோபத்தில் தான் தன்னிடம் மகன் ஒதுங்கிப்போகிறான்... என்பதையே புரிந்து கொண்டார்.

ஆம் எப்போதும் இயல்பாக அன்னையிடம் நடந்து கொள்பவன்... தந்தையின் நிழலானது வீட்டை தொட்டுவிட்டால் போதும்... அப்படியே எதிர்மறையாக மாறி அவ்விடத்தைவிட்டு அகன்று விடுவான்.

அவர் முகத்தை பார்த்து ஓர் வார்த்தை பேசமாட்டான். பதில் கூறுவதென்றால் தூரத்தே எங்கோ தான் வெறித்திருக்கும் அவன் விழிகள். அவ்வளவு ஏன்...? அப்பா என்ற வார்த்தை அவன் வாயிலிருந்து உதிர்ப்பது மிகவும் அரிதாகிப்போயிருந்தது.

அது ஏனோ யோகலிங்கத்திற்கு எரிச்சலை உண்டாக்கியது. இருக்கும் தானே.... மூத்தவள் அவர் பேச்சிற்கு மதிப்பழிக்காது, அவரை மீறி வேறொருவன் தான் முக்கியமென சென்று விட்டாள். இரண்டாவதவன் தந்தை என்றொருவர் இருக்கிறார் என்பதையே கண்டு கொள்வதில்லை.


மகனின் எடுத்தெறிந்த நடத்தை அவருள் இயலாமையினை தோற்றுவிக்க, அந்த இயலாமை அவரை மூர்க்கன் ஆக்கியது.

ஏனோ தானோ என்ற மகனின் நடத்தையினால், எங்கே தன் கையினை மீறி தமக்கையினைப்போல் ஆத்விக்கும் சென்று விடுவானோ என்ற பயம். மகன் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது. அதனாலேயே எப்போதும் அவனிடம் அழுத்தமான வார்த்தைகளையே பயன்படுத்துவார்.

அவர் கோபம் அவனை ஒன்றும் செய்யாது தான்.. ஆனால் மக்கள் மேல் அவருக்கு அன்பு இல்லை என்றாலும், பெற்றவர் என்ற மரியாதையினை அவன் தர மறந்ததில்லை. ஆனால் அவரோ அதை தன்மேல் மகனுக்கு பயம் என்றே எண்ணிவிட்டார்.
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
414
அருமை மா
 
Top