• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

06. திகட்டாத தீ நீயே!

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
பட்டுப்பாவடை தாவணி அணிந்திருந்தவள், முடியினை ஒற்றைப் பின்னலிட்டு, அது முழுவதும் மல்லிகை சரம் சூட்டி, நெற்றியின் நடுவில் குட்டியான பொட்டொன்றை வைத்திருந்தவள் முகத்தில் தான் எத்தனை லஷ்மி கடாட்சம்..?

ஏனோ அலங்காரம் அற்ற அந்த கிராமத்து தேவதையை பார்த்த மறுநொடியே புவனாவிற்கு பிடித்துப்போய் விட்டது. என்ன செய்ய..? எல்லாம் காலம் கடந்த சந்திப்பு... சுவாதியை நிச்சயம் செய்வதற்கு முன், இவளை சந்தித்திருந்தால் நிச்சயம் அவர் வீட்டு மருமகளாக தாமிராவே வந்திருப்பாள்.

ஆழமான பெருமூச்சொன்றை வெளியேற்றியவர்,

"யாரும்மா நீ...? உன் பேரென்ன..?" என்றார்.

பதில் கூற தயக்கமாக இருந்தாலும், தன்னையும் மதித்து விசாரிப்பவரிடம் பதில் கூறாமல் இருப்பது தவறென தோன்றியது.




"தாமிரா என் பெயர்..." என்றுவிட்டு கூச்சத்துடன் நெளிந்தவளை பார்க்கும் போது புவனாவிற்கு சிரிப்புத்தான் வந்தது.
மறைக்காது புன்னகைத்தவரே...

"பரவாயில்லையே....! இந்தக்காலத்துலயும் வெட்கப்பட்டா முகம் சிவந்து போற பெண்களும் இருக்கத்தான் செய்யிறாங்க...." என ஆச்சரியப்பட்டு போனவருக்கு அவளது வெட்கச்சிவப்பு இன்னமும் அவளை அழகாக காட்டியது போல.

"ரொம்பவே அழகா இருக்கேம்மா.... உன்னை பார்க்க எனக்கே பொறாமையா இருக்கு....? ஆமா உன் வீடு எங்....." என கேட்டுக்கொண்டிருக்கும் போதே,

"நீங்க இங்கே தான் இருக்கிங்களா...? உங்கள எங்கெல்லாம் தேடுறது....? இங்க ஏன் வந்திங்க....? வாங்க அங்க போகலாம்" என அழைத்தவர் அழைப்பை கண்டுகொள்ளாத புவனா,

"இவ்ளோ அழகா இருக்காளே, இவ யாரு சம்மந்தியம்மா.... இவளை நான் எங்கேயோ பார்த்திருக்கேன்... ஆனா எங்கன்னு தான் நினைவு வருதில்ல..." என அவளையே ஆராய்ந்தார்.

"அவளை நீங்க எங்கேயும் பார்த்திருக்க மாட்டிங்க சம்மந்தி.... இவ எங்க வீட்டில வேலை பார்க்கிற வேலைக்காரி.... இது தான் அவ குடிசை..." என அவள் குடிசையை காட்டினார்.

அந்த குடிலை பார்த்த புவனாவால் அதை நம்ப முடியவில்லை.

"வேலைக்காரியா....? நம்பவே முடியலையே... நான் கூட உங்க சொந்தக்காரங்க பொண்ணுன்னுல்ல நினைச்சேன்.. ஆனா பார்வைக்கு பட்டுப்பாவாடை தாவணியில ரொம்ப அழகா இருக்கா... வெட்கப்படுறப்போ.. அவ வெட்கத்தை கண்ணிமைக்காம பார்த்திட்டே இருக்கலாம்...

ஒரு உண்மை சொல்லவா சம்மந்தி...? சுவாதிய நிச்சயம் பண்ணுறதுக்கு முன்னாடி.... இவளை மட்டும் நான் பார்த்திருந்தேன்... கல்யாணமே வேண்டாம்.. நீ மட்டும் போதும்ன்னு என்கூடயே கூட்டிட்டு போயிருப்பேன்." என்று மனதை மறைக்காது விளையாட்டாக சொன்னவர் பேச்சை கேட்டதும் வடிவுக்கரசிக்கு பற்றிக்காெண்டு வந்தது.

ஆனால் தன் கோபத்தை அவரிடம் காட்டிட முடியுமா...? வெளிக்காட்டினால் பின் விளைவுகள் பற்றி அறியாத குழந்தை இல்லையே அவர்.


அவருடன் இணைந்து போலியாக புன்னகைத்தவர் மனமோ,
'இருடி இதுங்கள அனுப்பிட்டு வந்து உன்னை வைச்சுக்கிறேன்.' என வஞ்சமாய் அவளை பார்த்து முறைத்தவாறு புவனாவை அழைத்து சென்றார்.

அவர் பார்வையில் அனல் தெறித்ததை கண்ட தாமிராவுக்குத் தான் என்னாகுமோ என்று கால்கள் நடுக்கம் கண்டது.

பாவம் அவளும் என்ன செய்வாள். யார் என்ன பேசினாலும் தண்டனை அவளுக்கெனும் போது....


சிறுது நேரம் பேசிவிட்டு கிளம்பியவர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய வடிவுக்கரசி...

"வேலா.... ஊர் எல்லை வரை இவங்க கூடவே போய் வழியனுப்பி வைச்சிட்டு வா.." என மகனுக்கு கட்டளையிட,

"ஏன் சம்மந்தியம்மா.... கார்ல தானே வந்தோம்... நாங்களே போயிப்போம்.... சம்மந்திய கஷ்டப்படுத்தாதிங்க..." என புவனா மறுக்க.

"இதில என்ன கஷ்டம்....? பைக்ல தானே வரப்போறான். அவங்க அப்பிடித்தான் சொல்லுவாங்க வேலா... நம்ம கடமைய நாம சரியா செய்யணும்... நீ வண்டிய எடுத்துட்டு கிளம்பு." என வழியனுப்பி வைத்தவர், அவர்கள் கார் கண் மட்டத்திலிருந்து மறைந்ததும் வடிவுக்கரசி நேராக சென்றது தாமிராவிடம் தான்.

இதற்காகத்தானே கட்டாயப்படுத்தி வேல்முருகனை அனுப்பி வைத்தார்.

பயத்தில் குடிலில் குறுகிக்கொண்டிருந்தவள் தலைமுடியை கொத்தாகப்பற்றி, குடிலுக்கு வெளியே இழுத்துக்கொண்டு வந்து தள்ளிவிட, அங்கு குவித்திருந்த எருக்குள் போய் விழுந்தாள் தாமிரா.

"ஏன்டி மூதேவி..... இத்தனை வருஷம் உனக்கு சோறு போட்டு வளர்த்ததுக்கு நீ செய்யிற நன்றிக்கடனாடி இது....?

எப்பிடி எப்பிடி.....? என் பேத்திக்கு முன்னாடி உன்னை பார்த்திருந்தா கல்யாணமே வேண்டாம்ன்னு உன்னை கூட்டிட்டு போயிருப்பாங்களாம்ல....

விட்டுடுவேனா நானு.... அப்பிடி ஒரு நிலை மட்டும் வந்திருந்திச்சு.. என் பேத்தி இடத்தில நீ எப்பிடி இருக்கலாம்ன்னு உன்னை கொன்னு புதைச்சிருப்பேன்." என ஆங்காரமாய் கத்திக்கொண்டு அவளை மிதிக்க போனவரை ஓடி வந்து தடுத்தான் பார்த்தீபன்.

"விடுங்க பாட்டி... அவங்க சொன்னதுக்கு அவ என்ன பண்ணுவா...?"

"இவ என்ன பண்ணுவாளா...? இவ ஒரு சூனியக்காரிடா... இவ ஏதோ பண்றதனால தான் எல்லாரும் இவளை பார்த்ததும் மயங்கிடுறாங்க.. முதல்ல உன் அப்பன்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த புவனா... இப்போ நீ...ன்னு மயக்கி எனக்கு எதிரா உன்னையே திருப்பியிருக்கா" என இறுதியில் பார்த்தீபனும் அவளிடம் மயங்கிவிட்டான் என்பதை மறைமுகமாக உணர்த்தினார்.

அதன் பின் பார்த்தீபனால் எதுவும் பேசிடமுடியுமா..? அவன் திருட்டுத்தனம் பிடிபட்டு விடுமே... சட்டென அவர் கையினை பற்றியிருந்த தன் கையினை விலக்கியவன்,

"என்ன பாட்டி சொல்லுறீங்க...? உங்களுக்கு எதிரா நான் நடந்துப்பேனா...? ஏதோ தோணிச்சு... நீங்க எதை சொன்னாலும் அது சரியாத்தான் இருக்கும்." என அந்த இடத்தில் தன்னை காப்பாற்றிக்கொள்ள பின்வாங்கி கொண்டான்.


"அதானே பார்த்தேன்... என் வளர்ப்பு எப்போ தப்பாகியிருக்கு...?" அப்போதும் தன்னை மெச்சியவாறு தாமிராவிடம் திரும்பிய வடிவுக்கரசி...

"சொல்லுடி...!! அவங்ககிட்ட என்னத்தை பேசி அவன்களை உன் பக்கம் வசியம் பண்ண...?" விட்ட இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்தார்.

"நா... நா.... எதுவுமே பேசலம்மா..... அவங்க தான் தேடி வந்து பேச்சு குடுத்தாங்க..." என்றாள் தயங்கியவாறு.

"ஆமா ஆமா.. இவ ஈழத்து எலிசபெத் மகாராணி... தேடி வந்து பேச்சு குடுக்க... நாத்தம் புடிச்ச நாயி... உன்னை அவங்க தேடி வந்து பேசினாங்களா..?" என திட்டும்போது தான் அவளை முழுமையாக ஆராய்ந்தார்.

எப்போதுமே அவள் அழகி தான் என்பதை அவரும் அறிவார். இன்று புது தாவணியில் இன்னும் அழகாக.. இருக்கவே அவளை கூரிய பார்வை பார்த்தவர்,



"இந்த புது பாவடை தாவணி உனக்கு எப்படி வந்திச்சு..?"என்றார்.

அவளோ பதில் சொல்லாது பயத்தில் முழிக்க...

"உன்னை தான்டி கேட்டுட்டிருக்கேன்.. இதை போட்டு மிணுக்கித்தான் அவங்கள மயக்கினியா..? என் பேத்தி வாழ்க்கையை நாசம் பண்ணலாம்ன்னு எத்தனை நாளுடி கங்கணம் கட்டிட்டு இருந்த...?

பிச்சைகார நாயே... உனக்கு என் வீட்டு பொண்ணுக்கு பார்த்து வைச்சிருந்த பையன் கேக்குதோ....?
உன்னை......" என ஆவேசமானவர்,

இன்னமும் எழுந்திருக்காது தரையில் கிடந்தவள் தாவணியை அங்கு ஓர் ஆண் நிற்கிறான் என்ற எண்ணம் சிறிதும் இல்லாது உருவி எடுத்து தூர எறிந்தாள்.


இதை சற்றும் எதிர்பாராத தாமிரா அவரது திடீர் செயலில், தன் மானத்தை காத்துக்கொள்ள கையிரண்டையும் தாவணியாக்கி... மார்பினை மூடி தன்னை குறுக்கிக்கொண்டவளால், அதற்குமேல் தலையினை நிமிர்த்த முடியவில்லை.

கவிழ்ந்த தலையினை நிமிர்த்தாமல், அப்படியே குழுங்கி அழ ஆரம்பித்தாள்.

பாவம் தன் ஆதங்கத்தினை அவளால் அழுகையாகத்தான் வெளிக்கொண்டுவர முடிந்தது.


"அம்மா....." என அலறல் குரல் கேட்டு திரும்பிய வடிவுக்கரசி, வேல்முருகனின் தோற்றம் கண்டு அதிர்ந்தே போனார்.

ஆம் கண்களின் ரேகைகளாய் இரத்தக்கலரில் நரம்புகள் புடைக்க, விழி வழியே கக்கிய சுவாலையானது, எதிரே நின்றவரை எரிப்பது போல் இருந்தது அவர் கோபம்.

"ஏம்மா நீயும் ஒரு பொம்பள தானே....! எதுக்கு ரத்த காட்டேரி மாதிரி நடந்துக்கிற...?" என அதே கோபம் குறையாது கேட்டவர், வடிவுக்கரசி தூக்கிப்போட்ட தாவணியை எடுத்து தாமிராவிற்கு போர்த்திவிட்டு கைத்தாங்கலாக பிடித்து எழுப்பினார்,

"நீ குடிசைக்குள்ள போம்மா..." என அவளை அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் வடிவுக்கரசியிடம் வந்து,

"உன் வார்த்தையோட வீரியத்தினால, போன உயிர் எண்ணிக்கை உனக்கு போதலையா..? இன்னும் எத்தனை உயிரை போக்காட்ட போற..? அவ தானும் தன் போக்கும்ன்னு இருக்கா, எப்போ பார்த்தாலும் ஏன் அவளை கரிச்சுக்கொட்டிட்டிருக்க..?" என்றான் இன்னமும் அந்த ஆத்திரம் அடக்காது.

பதில் சொல்ல சற்று பயமாகத்தான் இருந்தது வடிவுக்கரசிக்கு... அவ்வளவு உக்கிரமாக நின்றான் வேல்முருகன்.

அவருக்கு தெரியும்... வேல்முருகன் வீட்டில் நின்றால் தாமிரா பெயரை கூறி, தனக்கும் மகனுக்கும் எப்படியும் சண்டை ஆகும் என்று. அவன் நிற்கும் சமயங்களில் முடிந்தவரை வாய்க்கு மூடி போட்டிருப்பவருக்கு, இன்று புவனா அவள் அழகை புகழ்ந்ததும் இல்லாமல், அதன் பின்னர் கூறிய வார்த்தையை கேட்டவருக்கு தன் பேத்திக்கு போட்டியாக இவளா..? என்ற ஆத்திரம் தான் வந்தது.


தான் தோற்றம் கண்டு உள்ளே பீதியானாலும் அதை வெளிக்காட்ட அவர் தன்மானம் இடம் தரவில்லை.

"என்னடா பண்ணிட்டேன்.. அப்பிடி நான் என்ன பண்ணிட்டேன்னு பெத்தவள்ன்னு மரியாதை கூட இல்லாம ஊரெடுக்க கத்துற..?"

"இன்னும் என்ன நீ பண்ணணும்..? வயசு பையனை பக்கத்தில வைச்சிட்டு, அவ தாவணிய உருவுறியே.. அந்த நேரத்தில அவளோட நிலமைய யோசிச்சு பார்த்தியா..? நீல்லாம் என்ன பொம்புளையோ..." என ஆதங்கமாக ஆரம்பித்து ஆற்றாமையோடு முடித்தார் வேல்முருகன்.

"என்னடா என்னையே குறை சொல்லிட்டிருக்க..? அவ என்ன காரியம் பண்ணா தெரியுமா..? எவனோ வாங்கி குடுத்த பாவாட தாவணியை போட்டுக்கிட்டு அந்த புவனா முன்னாடி போய் நின்னு மினுக்கி, அவங்கள மயக்கிட்டா...

அவங்களும் வெட்கமே இல்லாம இவளை முன்னாடியே பார்த்திருந்தா, இந்த பிசாசை தன் மருமகளாக்கியிருப்பேன்னு என்கிட்டையே சொல்லி... ஏதோ பெரிய தமாசு பண்ணா மாதிரி சிரிக்கிறாங்க. முதல்ல எவனுக்கு பல்லை காட்டி... அந்த தாவணி வாங்கி போட்டுக்கிட்டான்னு கேளு..." என்றார் பற்களை நெரித்து.

"யாரை என்ன கேட்கணும்...? உறவுன்னு சொல்லிக்க நம்மளை விட்டா யாருமில்லாதவளுக்கு யாரு வாங்கித்தந்திடுவா...?
அந்த ட்ரெஸ்ஸ வாங்கி தந்தது நான் தான்.

அதுவுமில்லாம தாமிராவா சம்மந்திய தேடிப்போனா....? ஏதோ அவளை அவங்களுக்கு பிடிச்சுப்போக... சும்மா விளையாட்டா அவங்க சொல்லிட்டு போனதுக்கு, அவ எந்த விதத்தில காரணமாவான்னு இரக்கமே இல்லாம நடந்துக்கிற?

இதை பாரும்மா..... இது தான் உனக்கு கடைசி... இதுக்கப்புறம் அவமேல கை வைச்சேன்னு வையி.... அப்புறம் அம்மான்னு கூட பார்க்க மாட்டேன்..." என விரல் நீட்டி எச்சரித்துவிட்டு, அந்த இடத்தில் நில்லாது நடந்தவர், அங்கு வேடிக்கை பார்த்தவாறு நின்ற மகனை கண்டதும், கால்கள் இறுகிக் கொள்ள, நின்று மகனை முறைத்தார்,

"ஒரு பொண்ணு அம்மணமாவே எதிர்ல நின்னாலும், நம்ம பார்வைக்கு அவ அம்மாவாவோ, சகோதரியாவோ தான் தெரியணுமே தவிர, இச்சையை தீர்த்துக்கிற பொருளா தெரியக்கூடாது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில நாகரீகமா நழுவிப்போறது தான் நல்ல ஆணுக்கு அழகு." என்றவர் மேலே பேசாது சென்று விட்டார்.

ஐயர் ஓதிய மந்திரம் மாத்திரமல்ல... அவர் வளர்த்த ஓமத்தில் இருந்து வந்த புகையுமே அந்த மண்டபத்தினை நிறைத்திருந்தது.

தன் இயலாமையுடன் கோபத்தினை அடக்க, கை முஷ்டிகளை இறுக்கி நெருப்பினை வெறித்தவன் கண்களானது, அந்த ஓமத்துக்கு நிகராக நெருப்பை கக்கியது.

திருமணம் என்றால் இப்படித்தான் என்ற இயல்பு நிலை மாறி, எங்கும் சலசலப்பு.. ஒருவருக்கொருவர் தமக்கு தெரிந்த தகவல்களை பரிமாறிக்கொண்டார்களே தவிர, யார் கவனமும் மேடையில் இருக்கவில்லை..

அனைவரது கவனத்தையும் தம் புறம் திருப்ப நினைத்தவர் போல...

"நல்ல நேரம் முடியிறதுக்குள்ள பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ....." திருமணம் என்றாலே எப்போதும் புரோகிதர் கூறும் வார்த்தையைத்தான் அவரும் கூறினார்.

ஆனால் அதுவரை சலசலத்துக்கொண்டிருந்த கூட்டத்தில், திடீரென அமைதி நிலவி, விழிகளில் ஒருவித எதிர்பார்ப்பை தேக்கி வைத்தபடி மணமகளை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அரக்கு நிற பட்டுப்புடவையில், மணப்பெண்ணுக்கான அலங்காரங்களுடனும், கையில் மலர்கொத்து ஏந்தி... நடையினில் தயக்கத்தை காட்டி பதுமை போல் நடந்து வந்தவளை அழைத்து வந்தது வேறு யாருமல்ல... புவனாவே தான்.

அவர் முகமோ வழமைக்கு மாறாக பிரகாசித்தது. இருக்காத பின்னே...! மகனது திருமண நாள் ஆயிற்றே.. அதுவும் மணப்பெண் தன்னை கவர்ந்தவள் எனும்போது பிரகாசிக்காதா என்ன...?

"பூங்கொத்தை ஆத்விக் கையில குடுத்துட்டு பக்கத்தில உக்காந்துக்கோ..." என்றவர் சொல்லை தட்டாது அவனிடம் பூங்கொத்தை நீட்டினாள்.

அதை அவன் வாங்க வேண்டுமே...! அதே இறுக்கம் விலகாது ஆத்விக் அமர்ந்திருக்க... அப்பாவியாய் திரும்பி புவனாவை பார்த்த தாமாராவின் நிலை உணர்ந்தவர்,

"ஆத்விக் எல்லாரும் வித்தியாசமா பார்க்கிறாங்கடா.. எதுவா இருந்தாலும் கல்யாணத்த முடிச்சிட்டு பேசிக்கலாம்." என்றவரை திரும்பி முறைத்தவன் விழிகள் எதையோ உணர்த்த, சட்டென தலை கவிழ்ந்து கொண்டவருக்கு அவன் நிலை புரியாமல் இல்லை.



இவள் தான் மணமகள் என கூறி அவனுக்குள் ஓர் எதிர்பார்ப்பை விதைத்துவிட்டு, தாலி கட்டும் நேரத்தில் பெண்ணை மாற்றினால், யாருக்குத்தான் கோபம் வராது?

ஆனால் புவனாவும் தான் என்ன செய்வார்..? அவருக்கு மட்டும் தெரியுமா என்ன...? கடைசி நேரத்தில் இப்படி ஒன்று நடந்தேறும் என்று.


ஆம் பத்து நாளைக்குள் திருமணம் என்றதும், ஓய்வெடுக்க நேரமின்றி இருதரப்பினரும் திருமண ஏற்பாடுகளில் மூழ்கிவிட்டிருந்தனர்.

பத்திரிக்கை வைப்பதிலிருந்து, பந்தக்கால் நடுவது வரை அந்த பத்து நாட்களுக்குள் முடித்தாக வேண்டும் என்பதால் யார் முகத்தையும் யாரும் பார்க்கும் நிலையில் இல்லை. இதோ இதோ என்று நாட்கள் கரைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்துக்கு நேற்றைய தினமே இருதரப்பினும் வந்துவிட்டிருந்தனர்.

காலை ஆறு மணியளவிலேயே எழுந்து குளித்து விட்டிருந்த சுவாதியை அலங்கரிப்பதற்காக அழகுக்கலை நிபுணர்களும் வந்துவிட..
தனக்கு மற்றவர்கள் அலங்காரம் செய்தால் பிடிக்காது, தானே தன்னை அலங்கரித்து கொள்கிறேன்... என அவர்களை வெளியே அனுப்பி கதவடைத்து கொண்டவள் தான் அதன் பிற்பாடு அந்த கதவை திறக்கவே இல்லை.

ஒன்பது முப்பதில் இருந்து பதினொன்று பத்து வரை என குறிக்கப்பட்ட முகூர்த்த நேரத்துக்கு அமைவாக, ஐயர் பெண்ணை அழைத்தார்.

அவளை அழைக்க வந்தவர்கள் பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்கபடவே இல்லை. அதற்குள் பெண்ணை தேடி வந்த புவனா, அவர்கள் இன்னமும் வாசலிலேயே நிற்பதை கண்டு,

"ஏன் இங்கேயே நிக்கிறீங்க..? சீக்கிரம் பொண்ணை அழைச்சிட்டு வாங்க." என்றார்.

"ரொம்ப நேரமா கதவை தட்டிட்டே இருக்கோம் ஆன்ட்டி.. திறக்கிறாங்க இல்ல." என்றவர்கள் முகத்தில் இனம்புரியாத கலவரம் தொற்றிக்கொள்ள, அதை பார்த்த புவனா முகமும் கலவரமானது.

"சுவாதி..... நான் அத்தை வந்திருக்கேன்டா.... கதவை திறம்மா...." என தன் பங்கிற்கு தட்டிப்பார்த்தவருக்கும் எந்த வித பதிலும் இல்லை என்றதும்,

அங்கு நின்ற பெண்ணிடம், "சுவாதி பாட்டி வாசல்ல வரவேற்புக்காக நிக்கிறாங்க, போய் அழைச்சிட்டு வா...!" என்றவர் கதவை தானே திறக்க முயற்சி செய்தார்.

"என்னாச்சு புவனா...? ஏன் என்னை அவசரமா அழைச்சிட்டு வர சொன்னீங்களாம்..?" என்றார்.


"பொண்ணை அழைச்சிட்டு வரச்சொல்லி ரொம்ப நேரமாச்சு சம்மந்திம்மா.. சுவாதி உள் பக்கமா பூட்டி வைச்சிருக்கா.. கூப்பிட்டா ஏன்னு கூட கேக்குறால்ல... " என்றார் பீதியாகி.


"என்னது ரொம்ப நேரமாச்சா....? சுவாதி..... சுவாதிம்மா.... கதவை திற..."

"........."

"எனக்கென்னமோ பயமா இருக்கு சம்மந்திம்மா.... நடக்கக்கூடாதது ஏதாவது நடந்திருக்குமோ..."

"பயப்பிடாதிங்க புவனா.... அப்படி எதுவும் ஆகியிருக்காது." என்றவர் அருகில் போய் கொண்டிருந்த பையனை அழைத்து...

"கதவு இறுகிடிச்சு தம்பி.. கொஞ்சம் உதவி பண்றீங்களா...?" என்றதும் அவன் கதவை சற்று பலம் கொண்டு தள்ளியதும் கதவு திறந்து கொண்டது.
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
ஓடிப்போயிட்டாளா தட் கேர்ள்
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
1684230984551.png
 
Top