• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

07. திகட்டாத தீ நீயே!

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
உள்ளே சுவாதி தான் இல்லை. கண்ணாடி ஜன்னலானது இருண்டும் திறந்திருக்க, பார்வைக்கு படும் வகையில் கட்டிலில் கிடந்த கடிதாசியானது பேனா மூடியில் சிக்குண்டு தன்னை விடுவிப்பதற்காக காற்றுடன் போராடி தன் இருப்பை வெளிப்படுத்தியது.

ஏதோ விபரீதம் என்று மூளை உணர்த்தினாலும், அதை உறுதிசெய்ய வேண்டுமே...!

அருகில் இருந்த பாத்ரூம் கதவை திறந்து பார்த்தவர், அவள் அங்கில்லை என்றதும் கட்டிலின் அருகில் வந்து வடிவுக்கரசியின் கையிலிருந்த கடிதத்தினை அவரிடமிருந்து உருவி எடுத்து படிக்க ஆரம்பித்தார்.



'என்னை மன்னித்து விடுங்கள் பாட்டி..!"

ஆரம்பமே திகிலாகத்தான் இருந்தது. மேலே படிக்க தற்போது அவகாசமில்லை என்றாலும், மேலே நிகழ்வுகளை நகர்த்தி செல்லவேண்டியவள் இல்லையே...


"ஆரம்பத்திலிருந்து திருமணத்தில் எனக்கு சற்றும் விருப்பம் இல்லை. கழுத்தில் தாலியை வாங்கிக்கொண்டு அடுப்பில் வேகும் வாழ்க்கைக்குள் நுழைய ஆசைப்படும் சாதாரண பெண்களைப் போல் நான் இல்லை... என் லட்சியமே எனக்கான அடையாளத்தை நானே உருவாக்கிக்கொள்வது.

அதனால் தான் கல்யாண பேச்சினை நீங்கள் ஆரம்பிக்கும் போதே மறுத்தேன்... ஆத்விக்கை கண்டதும் அவன் அழகில் சிறிது தடுமாறி திருமணத்துக்கும் ஒப்புக்கொண்டேன்... அதில் கூட என் சுயநலம் இருக்கின்றது. ஆத்விக்கை திருமணம் செய்து கொண்டால், அந்த குடும்பத்தின் செல்வாக்கினை பயன்படுத்தி சினிமாவுக்குள் நுழைந்து விடுவது தான் என் திட்டமாக இருந்தது.

ஆம் பாட்டி... எனக்கு சினிமாவுக்குள் நுழைந்து, பெரிய நடிகை ஆவது தான் என் லட்சியம்... அதற்காக பலரிடம் சொல்லியும் வைத்திருந்தேன்.


ஆத்விக் குடும்பம் எந்த வகையிலும் எனக்கு உதவிட மாட்டார்கள் என்பதை அவர்கள் கிராமத்து பெண்ணாக தேடியதிலிருந்து தெரிந்து கொண்டேன். அவர்களுக்கு மகனுக்கு பிள்ளை பெற்றுக்கொடுக்கவும், சமைத்து போடவும் ஒரு மெஷினை தான் தேடுகிறார்கள் என்று புரிந்தது.

நேற்றைக்கு முந்தியதினம் எனக்கொரு அழைப்பு வந்தது.. அதில் இன்று பத்து மணியளவில் வந்தால் என் நடிப்பினை பார்த்து சந்தர்ப்பம் தருவதாக கூறியிருந்தார்கள்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது... எனக்கான சந்தர்ப்பத்தை சிறிதும் தவற விட நான் தயாராக இல்லை. நான் ஆசைப்பட்ட வாழ்க்கையே என்னை தேடி வரும்போது... உங்கள் ஆசை எனக்கு பெரிதாகத் தெரியவில்லை.. ஆகையால் என் வாழ்க்கையை தேடிப்போகின்றேன்.' என்று எழுதியிருந்தவளது கடிதத்தை பார்க்கும் போது ஆத்திரமாக வந்தது புவனாவுக்கு.

'எப்படியான பெண் இவள்..? நல்ல வேளை ஆத்விக் தப்பித்தான்.' என நினைக்கும் போதே தாம் எச்சூழலில் சிக்கியிருக்கிறோம் என்பது புரிந்த அதே நேரம்..

"இங்க என்ன பண்ணிட்டிருக்கிங்க... ஐயர் அங்க பொண்ணை அழைச்சிட்டு வாங்கன்னு திரும்ப திரும்ப சொல்லிட்டிருக்காரு.. நீங்க என்னன்னா சாவகாசமா இப்பத்தான் கடிதம் படிச்சிட்டிருக்கிங்க." வாசலில் வரும்போதே மனைவி கையிலிருந்த கடிதத்தை கண்டுவிட்டு, பேசிக்கொண்டு வந்தவருக்கு இரு பெண்களின் பீதியான முகமே எதையோ உணர்த்தியது.

அவசரமாக சென்று கடிதத்தை பிடிங்கி படித்தவருக்கு புவனாவைப்போல் ஆத்திரத்தினை அடக்க தெரியவில்லை. கையிலிருந்த காகிதத்தை அப்படியே கசக்கி ஆவேசமாக தரையில் ஏறிந்தவர்,


"என்னம்மா பிள்ளை வளர்த்து வைச்சிருக்கிங்க...? இப்போ எப்படி நான் மத்தவங்க முகத்தில முழிப்பேன்.. மண்டபம் வரை கூப்பிட்டு வைச்சு இப்படி அசிங்கப்படுத்திட்டிங்களே..." என்றவரை வடிவுக்கரசி சமாதானம் செய்வதற்காக,

"அவ இப்பிடி பண்ணுவான்னு நான் கொஞ்சமும் நினைக்கல சம்மந்தி......" என மேலே ஏதோ பேச வர,

"என்ன சம்மந்தி.... அதான் மொத்தமா போட்டு விட்டுட்டிங்களே நாமத்தை.. அப்புறம் என்ன சம்மந்தி..? ஏன்க, கல்யாணத்தில விருப்பம் இல்லன்னு சொல்லிட்டு... என்ன மண்ணாங்கட்டிக்கு ஒத்துக்கிட்டா..?" என அந்த அறையே அதிர கத்தியவர் குரலானது வெளியேவும் கேட்டு விட்டது போல.

மேடையில் ஐயருக்கு உதவிக்கொண்டிருந்த வேல்முருகன் யோகலிங்கம் போட்ட சத்தத்தில் வேட்டியினை மடித்து கட்டிக்கொண்டு அங்கு ஓடிவர, அவரது பதட்டம் கண்ட கூட்டத்தினருக்கு ஏதோ பிசகிவிட்டது என்று புரிந்து போனது.

தமக்குள் சலசலத்தவர்களை மேடையில் அமர்ந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த ஆத்விக் அதற்குமேல் பொறுமை அற்றுப்போக எழுந்து கொண்டான்.

"தாலி கட்டுற வரைக்கும் எந்திரிக்க கூடாது மாப்பிள்ளை... உக்காருங்க." என்ற ஐயர் பேச்சை கேட்டு அமரப்போனவன் காதினில் பொண்ணு ஓடிப்போயிட்டாளாம்... என பின்னால் நின்ற பெண்கள் பேசியது தெளிவாகவே விழுந்தது.

அதற்குமேல் பைத்தியம் தான் அங்கு அமர்வான்.

கழுத்திலிருந்த மாலையினை கழட்டி எறிந்துவிட்டு, அவனும் மணப்பெண் அறைக்கே ஓடினான்.

வடிவுக்கரசிக்கும், யோகலிங்கத்திற்கும் இடையே பெரிய கலவரமே நிகழ்ந்து கொண்டிருந்தது.

தவறை தம்மேல் வைத்துக்கொண்டு, "பேத்தி ஓடிப்போனால் நான் என்ன செய்வேன்?" என்று நியாயம் பேசியவர் பேச்சு யோகலிங்கத்தின் இடத்தில் யார் இருந்தாலும் அவர்களுக்கு ஆத்திரத்தை தானே உண்டு பண்ணும்.

"அம்மா கொஞ்சம் அமைதியா இருங்க.. நான் பேசிக்கிறேன்.." என தாயை அடக்கிய வேல்முருகன்.

"உங்ககிட்ட மன்னிப்பு கேக்கிற தகுதிகூட எங்களுக்கு இல்லை. ஆனா எங்களுக்கும் சுவாதி இந்த மாதிரி பண்ணுவான்னு தெரியாதப்போ... எங்க மேல கோபப்படுறதும் நியாயமில்லையே... ஒரு மணி நேரம் அவகாசம் குடுங்க... முகூர்த்த நேரம் முடியிறதுக்குள்ள அவளை நான் அழைச்சிட்டு வரேன்." என்றதும் தான்..

"எப்பிடி.... கல்யாணத்தில விருப்பமில்லன்னு இத்தனை பேரு முன்னாடி என் மூஞ்சில கரியை பூசிட்டு ஓடிப்போனவளை கூட்டிவந்து அதே மேடையில கட்டாய கல்யாணம் பண்ணுற அளவுக்கு என்நிலமை ஆகிப்போச்சா....?

நான் இதுக்கு தான் முன்னாடியே சொன்னேன். பட்டிக்காட்டு பொண்ணே வேணாம்ன்னு... கேட்டிங்களா நீங்க....? இப்போ சந்தோஷமா...?" என்றான் குடும்பமாக சேர்ந்து தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்ற ஆதங்கத்தில்.

"நீ வேற சும்மா இருடா..! நான் தான் பேசிட்டிருக்கேன்ல." என்ற யோகலிங்கம்....

"என்ன வேல்முருகன் பேசுறீங்க...? கடிதத்தில அவ தெளிவாத்தானே எழுதியிருக்கா... எனக்கு இந்த கல்யாணத்தில இஷ்டம் இல்லன்னு.. அப்புறம் எதுக்கு அவளை நெருக்கினீங்க...? இப்போ என்னால எப்படி என் சொந்தக்காரங்க முகத்தில முழிக்க முடியும்...?

இங்க வந்திருக்கிறவங்க பூராவுமே பணக்காரங்க... அவங்கள்ள பாதிப்பேரு வீட்டில பொண்ணு இருந்தும், கிராமத்து பொண்ணுன்னா கட்டுக்கோப்போட இருந்து என் பையனையும், குடும்பத்தையும் நல்லா பார்த்துப்பான்னு தான் பொண்ணு கொடுக்க வந்தவங்க அத்தனை பேரையும் உதறிட்டு, எந்த தராதரமும் பார்க்காம உங்க பொண்ணை கேட்டு வந்தோம்...

இப்போ இப்பிடி ஆச்சுன்னு தெரிஞ்சா என்னல்லாம் பேசுவாங்கன்னு யோசிச்சு பார்த்திங்களா....?" என தம் நிலையினை புரிய வைக்க முயன்றவருக்கு சூழ்நிலை அவரை சிந்திக்க விடவில்லை போலும்.

உண்மை தானே.... என்ன பேசி என்ன பிரயோசனம்... ஒருவரை ஒருவர் தம் பக்கத்து நியாயத்தை எடுத்து கூறுவதால் தான் ஓடிச்சென்றவள் வந்துவிடுவாளா...? இல்லை ஊரவர் வாயினை தான் மூடிட முடியுமா...?



அவர் பேச்சிலிருந்த ஒன்றை வேல்முருகனால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அதாவது அவர்கள் எதிர்பார்ப்பு தம் பெண் என்றில்லை... குடும்பத்தை அழகான முறையில் கொண்டுசெல்ல தெரிந்த கிராமத்து பெண் தான் என்பதை.

"இப்போ வந்திடுறேன்...." என சமையல் பகுதிக்கு ஓடிச்சென்றவன், நடப்பவை எதுவும் அறியாது அங்கு சமையல் செய்பவர்களுக்கு களைப்பு தெரியாது இருப்பதற்கு, மாறி மாறி கூல் ட்ரிங்கினை பரிமாறிக்கொண்டிருந்தவள் கையிலிருந்த தட்டினை பறித்து ஓரமாக போட்டவர்,

"என்கூட வா தாமிரா...." என கைபற்றி இழுக்க.

"எங்கய்யா அழைச்சிட்டு போறீங்க...? அம்மாக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும். எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லுங்கைய்யா...." என்று அவர் இழுவைக்கு போகாது தேங்கி நின்றாள்.

"என்மேல உனக்கு மரியாதை இருக்குல்ல தாமிரா..?"
இந்த கேள்வி அனாவசியமற்றது... அவளுக்கு மறு உயிர் தந்தவர்மேல் மரியாதை என்ன மரியாதை..? அவருக்காக உயிரையும் தருவாள்.

ம்ம்.. என வெறுமனையே தலையசைத்தாள்.


"அப்படின்னா எதுவும் பேசாம என்கூட வா...!" என்றார்.

அதன் பின் பேசுவாளா...? அவர் இழுவைக்கு போனவளை யோகலிங்கம் முன்பு நிறுத்தியவர்.

"இவளும் என் பொண்ணு தான். என் வீட்டில தான் தங்கியிருக்கா.. ரொம்பவே நல்ல பாெண்ணு... நீங்க ஆசைப்பட்டதை விட உங்க பையனை நல்லா பார்த்துப்பா... குணத்தில் சுத்தத் தங்கம்." என்றவரை யோகலிங்கம் புரியாது நோக்க.

"ஆமா... சந்தர்ப்ப சூழ்நிலை... சில உண்மையை வெளிய சொல்ல முடியல... அம்மா எத்தனையோ தடவை கேட்டு சொல்லாத உண்மையை, இன்னைக்கு உங்க மானம் போகக்கூடாது என்கிற காரணத்துக்காக இத்தனை பேர் முன்னாடி பகிரங்கமா ஒத்துக்கிறேன்.

இவ என் பொண்ணு தான். இவ உடம்பில ஓடுறது என் குடும்ப ரத்தம்." என சொல்லிக்காெண்டு போனவரை இடைமறித்த வடிவுக்கரசி..

"ஏன்டா எவளோ ஒரு சிருக்கிக்கா... உன் பெயரை கெடுத்துக்கிற..? நீ என்ன பைத்தியமா...? சுவாதிக்கு இந்த வாழ்க்கை அமையலன்னாலும் பரவாயில்லை... இவ அவங்களுக்கு மருமகளாக கூடாது." என்றார் அப்போதும் வக்கிர புத்தியில்.

"நீ பேசாம இரும்மா... உன் பேத்தி பண்ண காரியம் தான் இவ்வளவும்... நீ ஒழுங்கா அவளை வளர்த்திருந்தா இவ்ளோ வந்திருக்குமா..." என எடுத்தெறிந்து பேசி அவர் வாயை அடைத்தவன்.


"நிஜமா சொல்லுறேன் சம்மந்தி... உங்க மருமகளா இவ வந்தான்னா உங்களை விட புண்ணியம் பண்ணவங்க யாருமே இருக்கமுடியாது. பெண்மைக்கு மாத்திரமில்ல...மென்மைக்கும் உதாரணம் இவதான்." என மகளை புகழ,

"நல்லா இருக்குங்க உங்க பேச்சு... அவ ஓடினதும் இவளை தள்ளிவிட பார்க்குறீங்களா...? சட்டுன்னு நீங்க ஆள மாத்துற மாதிரி, என்னால மனச மாத்த முடியாது." என்றான் முடிவாக.

"ஆத்விக் வெளிய மானமே போயிட்டிருக்குடா... எனக்கு தெரியும்.. என் வளர்ப்ப பத்தி உங்கப்பா தப்பா பேசினதனால தான், நீ வீம்புக்கு சுவாதிய பிடிச்சிருக்குன்னு சொன்னேன்னு...

அந்த சுவாதி பொண்ண விட, இவ நல்லவடா.. ஒத்துக்கோட... அம்மாவுக்காக ப்ளீஸ்...டா" என அவர் கெஞ்சவும் வாசல் புறம் திரும்பி பார்த்தான்.

ஊர் மொத்தமும் தமக்குள் சலசலத்தவாறு இருப்பதை கண்டவனுக்கு, குடும்ப கௌரவத்தை காப்பாற்றும் கடமை தனக்கும் இருப்பதை உணர்ந்தவன், எதுவும் பேசாது வேகமாக மணமேடை சென்று அக்னி முன் அமர்ந்து கொண்டான்.


நடப்பது எதுவும் புரியாது அமைதியாக நின்றவள் கண்ணுக்கு தெரிந்தது எல்லாம், முன்பின் யோசனையற்று சுவாதி செய்த முட்டாள் தனத்தினால்... அத்தனை பேர் முன்பும் கூனிக்குறுகிப்போனவர், அழாத குறையாக தன் பெண்ணின் தவறை சரி செய்ய போராடிக்கொண்டிருந்தது தான்.

அவரை காண அழுகையே வந்துவிட்டது அவளுக்கு.


ஏனோ அவளுக்கு அவர் மேல் கோபமே வரவில்லை.
எப்படி வரும்....? தெய்வத்தின் மீது யாருக்காவது கோபம் வருமா...? அவர் ஒன்றை செய்கிறார் என்றால் அதற்கு காரணம் ஒன்றிருக்கும் என்பதை நம்புபவள்.

'தன்மேல் எத்தனை நம்பிக்கை இருந்திருந்தால்... சம்மதமா என்றொரு வார்த்தையினை அவளிடம் கேட்காது அவர்களுக்கு வாக்கு கொடுத்திருப்பார்.' அதை அவள் காப்பாற்ற வேண்டாமா..?

புவனா அழைப்புக்கு இசைந்தவள், பொங்கிவந்த கண்ணீரினை தட்டிவிட்டு, மணப்பெண் அலங்காரத்திற்கு தயாரானாள்.



முகத்தை திருப்பிக்கொண்டு அவள் கொடுத்த பூங்கொத்தினை வாங்கி கீழே போட்டவன், ஐயர் எடுத்துக் கொடுத்த தாலியினையும் முகத்திருப்பலுடனே அவள் கழுத்தில் கட்டினான்.

அதன் பின் நடந்த சம்பிரதாயங்கள் அனைத்துமே கடமையே என செய்தான்.
ஆனால் தாமிரா ஒவ்வொரு நிகழ்வினையும் ஆர்வத்துடனும், ரசனையுடனுமே செய்ய ஆரம்பித்தாள்.

இவற்றை எல்லாம் பார்வையாளராகக்கூட அவள் கண்டதில்லையே... அதனால் இவை எல்லாம் புதிதாக இருக்கவே இன்முகத்துடனே அவற்றை எல்லாம் ரசித்தவாறு வளையவந்தவளை மேடையின் ஓரமாக நின்று ரசித்தார் வேல்முருகன்.

சடங்குகள் அனைத்தும் முடிய, பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ள சொல்ல, யோகலிங்கம் தம்பதியர் காலில் விழுந்தவர்களை ஆசி கூறி எழுப்பி விட்டவர்,

"மாமாக்கிட்டையும் ஆசீர்வாதம் வாங்கிக்கடா..." என்றார் புவனா. விருப்புமே இல்லை என்றாலும் கூட்டத்தார் முன்னிலையில் மறுக்க முடியாது காலில் விழுந்தவனை தூக்கி நிறுத்தியவர்.

"இதுவரைக்கும் என் பொண்ணு சந்தோஷம் என்ற ஒன்ன பார்த்ததே கிடையாது மாப்பிள்ளை. இனியாவது அவ சந்தோஷமா இருக்கணும்ன்னு ஆசைப்படுறேன். நடந்த எதையும் மனசில வைச்சுக்காம, அவளை நல்லபடியா பார்த்துக்கோங்க மாப்பிள்ளை..." என அவர் கைபற்றி வேண்டியவர் கண்ணீரானது உருண்டு தரையில் விழுந்தது. அதை கண்ட புவனாவோ,


"நல்ல நாள் அதுவுமா கண் கலங்கிட்டு.. நாங்கல்லாம் இருக்கோம்ல சம்மந்தி... அவ சந்தோஷத்துக்கு குறை வரவிட்டிடுவோமா...?

மருமகளே... விட்டா உங்கப்பா அழுதிட்டே இருப்பாரு.. பாட்டிகிட்டையும் ஆசீர்வாதம் வாங்கிட்டு வாம்மா... நல்ல நேரம் முடியிறதுக்கு முன்னாடியே வீட்டுக்கு போகணும்." என்றார்.

புவனா பேச்சில் திரும்பி வடிவுக்கரசியை பார்த்தாள் தாமிரா.

கண்கள் நெருப்பு கக்க, அவளை எரிப்பது போல் பார்த்தவாறு நின்றவர் தோற்றமே சொன்னது, அவள் மேல் எவ்வளவு உக்கிரமாக நிற்கிறார் என்று.
அதை கண்டவளுக்கு உள்ளே நடுக்கம் பரவியது.

அவள் நடுக்கத்தினை புரிந்தானோ என்னமோ... அவரை நோக்கி போவதற்காக முதல் அடியினை தயங்கியவாறு எடுத்து வைத்தவள் கையினை சட்டென நகரவிடாது அழுத்தி பிடித்தவன்,


"அதெல்லாம் தேவையில்ல.... வீட்டுக்கு போலாம் வாங்க." என அழுத்தமாக கூறிவிட்டு நடந்தவன் பிடியில் தாமிரா கையிருந்ததனால் அவன் இழுவைக்கு அவளும் சென்றாள்.
 

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
கதையோட நகர்வு ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
வடிவுக்கரசி சும்மா இருக்கும்னு தோனலையே
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
வடிவுக்கரசி சும்மா இருக்கும்னு தோனலையே
இருக்காது... நன்றி சிஸ்
 
Top