• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

09. திகட்டாத தீ நீயே!

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
670
அவளுக்கு நன்றாகத்தெரியும்... நடந்த அவளது திடீர் திருமணத்தால் அங்கு பெரும் போரே வெடித்திருக்கும் என்று.. அதோடு வடிவுக்கரசியின் அன்றைய அகோரப்பார்வையே சொன்னது... அவள் மட்டும் அவர் கையில் கிடைத்தால் மறு நொடி மரணம் நிச்சயம் என்பதை.

பாவமாக புவனாவை அவள் பார்க்க.. அவள் பார்வையின் பொருள் அறிந்தவரோ..


"அங்க யாரும் உன்னை எதுவும் செய்ய மாட்டாங்க.. அதான் கூடவே உன் புருஷன் வரான்ல.. யாராச்சும் எதுவும் சொல்லிட முடியுமா..?"

என்ன தான் அவர் சமாதானம் சொன்னாலும் அவள் மனம் உள்ளே பதறத்தான் செய்தது.. அதை எதாவது காரணம் காட்டி தவிர்ப்போம் என நினைத்தவள்,

"ஆனா அத்த... எனக்கு கிளாஸ் இருக்கே.." என்றாள்.

"நான் போன் போட்டு சொல்லிட்டேன்ம்மா.." என்றவர் அவள் தோள்களை தொட்டு.. "பயப்படுறதுக்கு ஒன்னுமே இல்ல.. இன்னைக்கு இல்லன்னாலும்.. என்னைக்கோ, நீ அங்க போக வேண்டிய சூழ்நிலை வந்து தான் ஆகும்.. அதனால இப்பவே அவங்கள சமாதானம் செய்திட்டா நல்லது. பயப்படாம கிளம்பு.." என்ற நேரம் எதார்த்தமாக அங்கு வந்தான் ஆத்விக்..

"மேடம் எங்க கிளம்ப போறாங்க...?" என்றான் இறுதி வார்த்தையினை மட்டும் கேட்டுவிட்டு.....

"கிளம்ப போறாளா....? அவ மட்டும் இல்லடா... நீயும் அவகூட மறுவீடு போற.. இப்போ உன் மாமனார் வரபோறாரு உங்களை அழைச்சிட்டு போக..." என்றார் புவனா.

"என்னது அந்த வீட்டுக்கா...? தெரியாமத்தான் கேட்குறேன் நீங்கல்லாம் என்ன நினைச்சிட்டிருக்கிங்க..? நீங்க ஆட்டி வைச்சிட்டிருக்கிற பொம்மையா நானு..?" என்றான் கத்தலாய்..

"உன் பையனை அப்படி என்ன ஆட்டி வைச்சிட்டோம்னு கேளு புவனா.." என்றவாறு அறையிலிருந்து வெளியே வந்தார் யோகலிங்கம்.

தந்தையை கனலாய் நோக்கியவன்..
"என் படிப்பில இருந்து.. இவ வரைக்குமே நீங்க நினைச்சது மட்டும் தானே நடந்திட்டிருக்கு..." என கோபத்தில் வார்த்தையை விட்ட பின்னர் தான், தான் யாருடன் பேசுகிறோம் என்பது நினைவில் வர,

"இதோ பாரும்மா... நீ என்ன வேணாலும் சொல்லு.. இனி நான் யார் பேச்சையும் கேட்கிறதா இல்லை... எனக்கு என்ன தோணுதோ அதை தான் செய்வேன்." என்றான்.

"என்ன புவனா இது....! ஏதோ இதுவரைக்கும் எங்க பேச்சை கேட்ட மாதிரியே பேசுறாரு உன் பையன்.. அப்பிடி என்ன பேச்ச கேட்டுட்டாருன்னு காலங்காத்தால சத்தம் போடுறாரு..." அவனைத்தான் கேட்டார்.. பார்வை என்னமோ மனைவியிடம்.

"இன்னும் என்னத்தைம்மா கேட்கணும்...? என் வாழ்க்கையில எதெல்லாம் முக்கியமானதோ.. அதெல்லாம் இவரோட ஆசைப்படி தானே இருக்கு.. அப்புறம் தெரியாத மாதிரி பாசாங்கு பண்ணுறாரா..?"

"என்ன முக்கியமானது..? படிப்பு மட்டும் தான், நான் சொன்ன படிப்பு படிச்சாரு உன் பையன்... அதுவும் எனக்கு பின்னாடி என் தொழிலை அவரு எடுத்து நடத்தணும் என்கிறதுக்காக தான், அந்த குரூப் படிக்க சொன்னேன். மத்தபடி முக்கியம்னா கல்யாணம் தான்.. அதுகூட நான் சொல்லிட்டேன்னா சம்மதிச்சாரு இவரு...

வாழபோறவன் நானு.. நான் தான் முடிவெடுப்பேன்னு எங்களுக்கே தெரியாம போயி பொண்ணை பார்த்துட்டு வந்ததுக்கப்புறம் தானே சம்மதிச்சாரு... ஏதோ வற்புறுத்தி கட்டி வைச்சோம் என்கிறது போல பேசுறாரு... வார்த்தையில் கோபம் தறித்தது தான்.. ஆனால் பெரிய மனிதனோடு பேசுவதைப்போன்று பன்மை நடையில் கேலியாக பேசினார்.

மீண்டும் அதே அனல் பார்வையை தந்தை மேல் விசியவன்..
"நீங்க பார்த்த பொண்ணுக்கு தானே ஓகே சொன்னேன். இவளுக்கு இல்லையே..!" என அருகில் இருந்தவள் கையினை பிடித்திழுத்து அவர் எதிரில் நிறுத்தியவன்,

"அந்த பட்டிக்காட்டு பொண்ணு ஓடிப்போன வரை சந்தோஷம்ன்னு விட்டு தொலைய வேண்டியது தானே? கவுரவம் அது இதுன்னு இவளை எதுக்கு என் தலையில கட்டிவிட்டிங்க..? அன்னைக்கே சனியன் தொலைஞ்சுதுன்னு விட்டிருந்தா.. மண்டபத்தில மானம் கெடுத்தின அந்த குடும்பத்து முகத்தில திரும்ப முழிக்க வேண்டிய தேவை வந்திருக்குமா..?" என்றான் அன்று வெளிப்படுத்தாத அத்தனை ஆத்திரத்தையும் மொத்தமாக இன்று கொட்டி..


இதற்குமேல் யோகலிங்கத்தால் பேசிட முடியுமா..? பதிலற்று மனைவியிடம் திரும்பியவர் நிலை புரிந்தவரோ..

"என்னடா சொல்லுற..? அவ ஓடிப்போயிட்டா.. அப்பிடியே விட்டிடணுமா...?
நீ சொல்லுற கவுரவம் அடுத்த பட்ஷம் தான்.. மண்டபம் வரை வந்த பொண்ணு திடீர்ன்னு ஓடிப்போயிட்டான்னா... நீ தான் சரியில்லை.. உன்கிட்ட தான் ஏதோ குறை இருக்கு.. பாரின்ல படிச்சவன்.. அது இதுன்னு கண்ணு மூக்கு வைச்சு பேசி தவறை பூரா உன்மேல திருப்பிடுவாங்க.. அப்புறம் உன் வாழ்க்கை...?



ஏதோ நம்ம நல்ல நேரம்.. தங்கமான பொண்ணு உனக்கு பொண்டாட்டியா அமைஞ்சிருக்கா.. அதுக்கு நன்றி சொல்லுறத விட்டுட்டு.. வாய்க்கு வந்ததை பேசிட்டிருக்க..

இதை பாருடா.. அவ இப்பிடி செய்வான்னு அவங்களுக்கு என்ன தெரியும்? தெரிஞ்சிருந்தா இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருப்பாங்களா..? நமக்கு அவளால எந்தளவுக்கு அவமானமோ.. அதே அவமானம் அவங்களுக்கும்..


பொண்ண பெத்தவரு, தன்னோட கடமைய செய்ய ஆசையா வறாரு.. பாவம் மனுஷன் மனச இந்தமாதிரி பேசி நோகடிச்சிடாத.. இன்னைக்கு ஒரு நாளைக்கு தானே...!
மாட்டேன்னு சொல்லாம ஒத்துக்கடா.. அம்மாவுக்காக... இனிமே அம்மா அங்க போன்னு வற்புறுத்த மாட்டேன்.. சரின்னு சொல்லுடா..."

அவர் நிலையினை விளக்கியவர், பின் கெஞ்சலில் இறங்க..
"இப்போ கூட உங்க பேச்சைத்தான் கேட்கணும்ல... சரி போய் தொலையிறேன்... ஆனா இது தான் கடைசி தடவையா இருக்கணும்." என்றவன் மீண்டும் தந்தையை முறைத்துவிட்டே, தன் அறைக்கு திரும்பி சென்றான்.

அதுவரை இவர்கள் வாதத்திற்குள் நுழையாது, பார்வையாளராக விழிபிதுங்கி நின்றவளை தட்டி நிகழ்வுக்கு அழைத்த புவனா..

"மருமகளே... அவன் கோபமா போறான்.. கூடவே நீயும் போய் அவனை சமாதானம் பண்ணு" என்றார்.

"நானா...?" என்றவளுக்கு இப்போதைய அவனது கோபம் பயத்தினை வரவழைத்திருந்தது.

"நீயே தான்.. ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லுறது போல சமாதானம் பண்ணும்மா.. இல்லன்னா அப்பா வந்திருக்கிறப்போ அவருகிட்ட கோபப்பட்டுற போறான்." என்றார்.

பயமாக இருந்தாலும் மாமியார் சொல்லை தட்டமுடியாது தயங்கியவாறு அவன் பின்னாலேயே சென்றாள்.



"என்னடி இந்த மாதிரி பேசிட்டு போறான்..? இவனுக்கு கெட்டதா நான் எதுவும் செய்தேனா...?" என்றவர் முகம் சோர்வினை வெளிப்படுத்தியது.

"கெட்டது எதுவும் நீங்க செய்யல.. ஆனா சொல்லுறதுக்கு விதம்ன்னு ஒன்னு இருக்குல்ல.. மகன்கிட்ட பேசுறது போல பேசினா, அவனுக்கு புரிஞ்சிருக்கும்.. அதை விட்டிட்டு காச்சு மூச்சுன்னு கத்தினா.."

"என்னை என்ன செய்ய சொல்லுற புவனா..? நான் பெத்த பையனே என்னை வேண்டாதவன்னு நினைச்சு விலகிப்போறப்போ.. என்னால எப்பிடி தாங்கிக்க முடியும்..? எனக்கு என்ன பத்து பசங்களா...? இவன் பேசலன்னா மத்த பசங்க பேசுறாங்க தானேன்னு விலகி போக..
நான் மிரட்டுறப்போ.. அவனுக்கும் கோபம் வந்து, அப்பாடியாவது ஒரு வார்த்தை என்கூட பேசிட மாட்டானான்னு ஆசைப்படுறது தப்பா...?

ஏன் புவனா... நிச்சயத்தன்னைக்கு நீ தானே வீட்டுக்கு வந்ததும்... சம்மந்தி வீட்டில ஒரு பொண்ணை பார்த்தேன்.. அப்பிடி ஒரு அழகு... ரொம்ப அமைதி... நம்ப பையனுக்கு நல்ல பொருத்தமா இருப்பா... என்ன அனாதை பொண்ணுன்னு வடிவுக்கரசியம்மா சொன்னாங்க.. அது இதுன்னு அன்னைக்கு பூராவும் அவளை பத்தியே பேசிட்டிருந்த..

அதான் சுவாதி மண்டபத்தை விட்டு போனதும்... நீ ஆசைப்பட்டத தான் கடவுளும் நினைக்கிறான்னு நினைச்சு.. அப்பிடியே விட்டுட்டு வராம, கொஞ்சம் கடுமையா பேசினேன்.

நான் நினைச்சது போல சம்மந்தியும், அவளை அழைச்சிட்டு வந்திட்டாரு.. அவளை சம்மந்தி அழைச்சிட்டு வந்ததும்.. உன்னை பார்த்தேன். உன் முகத்தில அப்பிடி ஒரு சந்தோஷம் தெரிஞ்சிச்சு..

உன் முகத்தில பார்த்த சந்தோஷத்துக்கப்புறம் தான் அவ யாரு பெத்த பிள்ளையா இருந்தா என்ன..? எனக்கு உன்னோட சந்தோஷமும்.. நம்ம பையனோட சந்தோஷமும் தான் முக்கியம்ன்னு அமைதியா இருந்திட்டேன்.
அது ஏதோ தப்புப்போல சொல்லிட்டு போறான்." என கலங்கி போனவரை காணும் போது புவனாவிற்கு கஷ்டமாகிப்போனது.

உண்மையில் ஆத்விக் நினைப்பது போல் யோகலிங்கம் மோசமானவர் கிடையாது. சக மனிதர்களை மதிக்கத்தெரிந்த நல்ல மனிதர்.
அவர் செய்த தவறென்றால் மகள் இன்னொருவனை காதலிப்பது தெரிந்தும்.. வேறொருவனுடன் அவளுக்கு திருமண ஏற்பாடு செய்தது தான்..

அதுவும் அவர் தெரிந்து செய்யவில்லை.. நிச்சயம் முடிந்த பிற்பாடு தான், அவர் மகளே அவரிடம் தான் இன்னொருவனை விரும்புகிறேன்.. என்று வந்து நின்றாள்.

பாவம் நிச்சயம் முடிந்த பின் சொன்னால் அவரும் தான் என்ன செய்வார். "உன்னை பெற்ற எனக்கு தெரியும்.. யாருக்கு வாழ்க்கைப்பட்டால் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று... அதனால் அவனை மறந்துவிடு" என்று சொன்னவர்.. அதன் பின் அவளை கண்டு கொள்ளவே இல்லை..

கண்டுகொண்டிருந்தால் அவளில் தெரிந்த மாற்றத்தை கண்டிருப்பாரோ என்னமோ...
காலம் என்ன நினைக்கிறதோ அதன் போக்கில் நாம் நடந்து தானே ஆகவேண்டும்.

"சரி விடுங்க.. சின்னப்பையன் எப்பவாச்சும் ஒரு நாள் உங்க மனசு புரியும்.. அப்போ எனக்கு கூட உங்களை விட்டுத்தர மாட்டான்." என சமாதனம் செய்து சிரித்தவர் சிரிப்பில் உண்மை இல்லை.. அவரை தேற்றுவதற்காக சொன்னவருக்கும் மகன் கணவனிடம் உதாசினம் கொள்வது அவருக்கும் கவலை அளித்தது.

பெற்றவர்களுடன் கத்திவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தவன் கோபத்தில் மூச்சிரைக்க, அவன் பின்னால் வந்து கதவடைத்து கொண்டவளுக்கு.. அவனுடன் பேச பயமாக இருந்தது.. கூடவே இத்தனை நாள் ஏட்டிக்கு போட்டியாக அவனுடன் தர்க்கம் செய்ததை நினைக்கையில் இன்னமும் பயம் கூடியது.

இருந்தும் தன்னையும் நம்பி புவனா ஒரு பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாரே.... அதை செய்யாமல் விடமுடியாது.. வேல்முருகன் வரும் சமயம் இவன் கத்திவிட்டால் அவரால் மட்டுமல்ல, அவளாலுமே அதை தாங்க முடியாது.


அவனையே சிறிது நேரம் பார்த்திருந்தவளுக்கு.. பேச்செடுக்க அச்சமாக இருந்ததால்,

"க்ஹூம்....." என்றாள்.
அதை அவன் பொருட்படுத்தவே இல்லை.. கட்டில் விரிக்கை விரல்களால் கவ்வி, தன் கோபத்தை தணிக்க முற்பட்டவனின் காதுகளில் மீண்டும் மீண்டும் தாமிராவின் செருமல் ஒலிக்க..

"உனக்கு இப்போ என்ன பிரச்சினை...? எதுக்கு இப்போ குதிரை கணக்கா கனைச்சிட்டிருக்க?" என்றான் எரிச்சலாய்.

வார்த்தையில் எரிச்சல் முன்றினாலும்.. அவளை பார்த்தவன் விழிகளில் கோபம் இல்லை..
திடீரென வார்த்தைகளை அம்பாக்கி கேட்டவனிடம் எப்படி ஆரம்பிப்பதென திணறியவள்...

"அ.... அது... பெரியவங்கள எடுத்தெறிஞ்சு பேசுறது தப்பில்லையா....?" பயமாகத்தான் இருந்தது.. இருந்தும் எப்படியோ கேட்டுவிட்டாள்.

"யாரு....? அவரு பெரியவரா...? பார்த்தல்ல எப்பிடி பேசினாருன்னு.... பெரிய மனுஷன் பேசுற விதமா இது...?"

'சரி.. யாருகிட்ட இப்போ பேசிட்டாரு.... பையன் என்கிற உரிமையில கொஞ்சமா, உரிமையோட கேட்டுட்டாரு... அதுக்கு இப்பிடியா சத்தம் போட்டுட்டு வருவீங்க..?"

ஆரம்பிக்கும் போது பயமாகத்தான் இருந்தது... அவளையும் ஒரு பொருட்டாக மதித்து.. தன்மையாக பதில் சொன்னவன் பாணியில் பயம் தெளிந்தவள், தன் பயத்தினை களைந்து அவனை சமாதனம் செய்ய முயன்றாள்.

அவனுக்கும் இதுவரை அவன் மனதை பகிர்ந்து கொள்ள ஆளில்லாது தனிமையில் புழுங்கியவன்.. இப்போது தன்னிலை விளக்க ஒருத்தி கிடைத்ததும்.. அந்த நிமிடம் தனக்கு அவள் யார் என்பது மறந்து போக.. இத்தனை நாள் தன்னை அழுத்திக்கொண்டிருந்த கேள்விகளை அவளிடம் அடுக்க ஆரம்பித்தான்.


"அப்பாவா அவரு...? பெத்த பிள்ளைங்க மனச புரிஞ்சுக்காம.. தான் எதை செய்யணும்ன்னு நினைக்கிறாரோ.. அது நடந்தே ஆகணும்ன்னு நினைக்கிறவரு... என்மேல உயிரா இருந்த என் அக்கா.. இவரோட முரட்டு கவுரவத்தினால இப்போ எங்க இருக்கான்னு கூட தெரியல.. மகள் தொலைஞ்சு போய் எத்தனையோ வருஷமாகியும், இன்னும் அந்தாளு அக்காவ கண்டு பிடிக்க எந்த முயற்சியும் பண்ணல..

இவருன்னா அவளுக்கு எவ்வளவு இஷ்டம் தெரியுமா...? இவரு பக்கத்தில உக்காந்து தலை கோதிவிட்டாத்தான் அவ தூங்கவே செய்வா... அப்பிடி பாசமா இருந்தவளையே, சாதாரணமா தூக்கிப்போட்டவரை அப்பான்னு சொல்ல மனசு வருமா....?

அவருக்கு முக்கியம் ஊரவன் அவரை மானஸ்த்தன்னு பாராட்டுற அந்த பாராட்டு தான்... குடும்பமில்லை..." என்றான் ஆதங்கமாய்..


"என்ன நடந்திச்சுன்னு எனக்கு எதுவும் தெரியல....
நீங்க சொல்லுறத வைச்சு பார்க்கிறப்போ.. உங்க மனச பாதிக்கிறது போல ஏதோ சம்பவம் நடந்திருக்குன்னு நினைக்கிறேன்.


ஆனா நீங்க தான் மாமாவ தப்பா நினைச்சிட்டிருக்கிங்களோன்னு தோணுது.. எனக்கு தெரிஞ்சு மத்தவங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிற மனுஷனா தான் தெரியிறாரு..." என மேலே பேச வாயெடுக்க...

"நானா அவரை தப்பா நினைச்சிட்டிருக்கேன்... அவரை பத்தி உனக்கென்ன தெரியும்....? அவரு ஒரு...." என்றவன் பாதியில் நிறுத்தி...

"உன்கிட்ட ஏன் நான் விளக்கம் சொல்லணும்... சொன்னாலும் அவருக்கு தானே வக்கீலா வாதடுவ, ஏன்னா அவருதானே உன்னை என் தலையில கட்டிவிட்டாரு.. அப்போ அந்த நன்றிக்கடனை வெளிப்படுத்தணும்ல... அதான் அவருக்கு பரிஞ்சு என்கிட்டையே அவரை பத்தி நல்லவிதமா பேசிட்டிருக்க... அப்படி தானே.."
என்றான் இம்முறை அவளிடம் எரிந்து விழுவதை போல...


அவனுக்கு தாமிரா மேல் கோபம் வந்ததுக்கு காரணம்.. இத்தனையும் கூறி அதை பொருட்படுத்தாது மீண்டும் அவருக்காக வாதடியது தான்.
அவனை விட அவளுக்கு தன் தந்தையை பற்றி அப்படி என்ன தெரிந்து விட்டது என்ற ஆதங்கம் தான் அது.

"இப்படில்லாம் ஏன் பேசுறீங்க..? என் பார்வைக்கு தெரிஞ்சதை சொன்னேன்." என்றவள் கண்கள் நிஜத்தில் கலங்கியே விட்டது.

"உண்மை தானே.... கிராமம் என்றாலே எனக்கு அலர்ஜி... அந்தாளு அம்மாவ தப்பா பேசிடக்கூடாது என்கிறதுக்காகத்தான் அந்த கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டேன். கல்யாணத்தன்னைக்கு கடவுளா பார்த்து தந்த சந்தர்ப்பமும், உன்னால கெட்டுப்போச்சு...


சுவாதின்னாலும் பரவாயில்லை.. படிச்ச பொண்ணு... நாகரீகம் தெரிஞ்சவன்னு சொல்லலாம்... ஆனா நீ சுத்த பட்டிக்காடு... யாருகிட்ட எந்த மாதிரி பேசுறதுன்னு அடிப்படை நாகரீகம் கூட தெரியாத உன்னை.. என் தலையில கட்டி வைச்சிட்டாங்க... உன்னை பார்த்தாலே அருவெருக்குது.. உன்கூட பேசுறப்பெல்லாம் ஏன் ஒதுங்கி போறேன் தெரியுமா...?

அன்னைக்கு தெருவில நின்னு கத்தினது போல கத்தினேன்னா.. எனக்கு தான் அது அசிங்கம்.." என்றவன் காட்டமான பேச்சினை கேட்கக் கேட்க தாமிராவின் கண்ணீர் இன்னும் மடை உடைத்த வெல்லமானது.

அதை அவன் காணாது தலையினை கவிழ்ந்து மறைத்து கொண்டவள்,


"அன்னைக்கு இந்த மாதிரியெல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா.. மண்டபத்துக்கே நான் வந்திருக்க மாட்டேன்..
எந்த சுயநலமும் இல்லாம இத்தனை வருஷம் என்னை வளர்த்தவரு.. அவ்வளவு பேரு முன்னாடி அசிங்கப்படுறத என்னால பார்க்க முடியல.. அதான் உங்களை பத்தி யோசிக்காம ஒத்துக்கிட்டேன்." என தொண்டைக் குழியை அடைத்து நின்ற அழுகைக்கு இடையில் தளதளப்பில்லாது பேசியவளால் அதற்கு மேல் முடியவில்லை..

கையிரண்டையும் கூப்பி அவன் முன் நின்றவள்,

"தயவு செய்து பெரியைய்யா வந்து நிக்கிறப்போ, அவரு மனசு நோகிறது போல எதுவும் பேசிடாதிங்க...
உங்களுக்கு என்னை தானே பிடிக்கல... உங்களை விட்டு போயிடுறேன்.. ஆனா அவரு மனசு நோகடிக்காதிங்க.. ஒரு வாட்டி அவரு தலை குனிஞ்சு நின்னதே போதும்... இன்னொரு தடவை அப்பிடி நின்னா அதை பார்க்கிற சக்தி எனக்கில்லை..

மறுவீடு கூப்பிடுறப்போ நாம போவோம்... வரப்போ நீங்க தனியாவே வாங்க.. எதையாவது சொல்லி நான் அங்கேயே நின்னுர்றேன்." என்றவள் குரலோடு அவளுமே உடைந்தழ... அவள் அழுகையினை கண்டவனால் பேச முடியவில்லை. மனதில் ஏதோ சுமை ஏறிப்போனது போன்ற தோற்றம்.

"அம்மாக்கு சொல்லிட்டு தானே வந்தேன்.. போறேன்னு..
நீ இப்போ ஏன் அழற...?
எனக்கு யார் மேலயும் பகையும் இல்லை... யாரையும் நோகடிக்கணும்ன்னு இல்ல.. ஆனா உனக்கு அவரு மேலயும்.. அவருக்கு உன்மேலயும் இருக்குற அன்ப பார்த்து பொறாமையா இருக்கு..
நிஜமா பெத்த அப்பா கூட இந்த மாதிரி நடந்துக்க மாட்டாரு..

என் பொண்ணுக்கு கிடைக்கலன்னா என்ன..? அந்த வாழ்க்கையை நீ வாழட்டும்ன்னு.. யாரோ பெத்த உன்னை தன் பொண்ணுன்னு பொய் சொல்லி, உன் கழுத்தில தாலி கட்ட வச்சவரு மனசு யாருக்கும் வராது.." என மெச்சியவன்..

"அவர் மேலான உன்னோட அன்பும் பொய்யில்லன்னு நிரூபிப்பேன்னு நம்புறேன்." என்றவன் அவள் தற்போது தனக்கு தந்த வாக்கை நினைவு படுத்துவது போலிருக்க...

ம்ம்... என தலையசைத்தவளுக்கு அதற்கு மேல் அவனுடன் பேச மனம் வரவில்லை..
 
Top