• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

13. திகட்டாத தீ நீயே!

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
நேற்றைய நிகழ்வின் பின்னர் அவனை கண்டாலே பயமாகத்தான் இருந்தது.. அதே இடத்தில் தயங்கி நின்றவளை.

"கூப்பிடுறேன்ல... இங்க வா.." என மிரட்டியவன் குரலுக்கு பயந்து மெதுவாக அவன் முன் வந்து நின்றவள் கையினை பற்றி இழுத்து தன்னருகே அமர வைத்தவன்..

காயம் பட்ட கையினை ஆராய்ந்தான்..
இன்னமும் அதற்கு மருந்து போடாது இருப்பதை கண்டு..

"ஏன் தாமிரா இன்னமும் மருந்து போடல..." என வருடிக்கொடுத்தவன் குரலில் இப்போது அதிகாரமில்லை. மாறாக அக்கறையே நிரம்பி வழிந்தது.

"ரொம்ப வலிச்சிருக்கும்ல... சாரிடா....

எல்லாரும் உன்னை கஷ்டப்படுத்தினது போதாதுன்னு.. நானும் உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன்ல.. உன்னை பத்திரமா பாதுகாக்க வேண்டிய இடத்தில இருக்கிற நானே உன்னை காயப்படுத்தி பார்த்துட்டேனே..." என அவளை நெருங்கி அமர்ந்து, அவள் தலையினை தன் நெஞ்சோடு சாய்த்து அவளுக்கு ஆறுதல் கொடுத்தானோ இல்லையோ...

உச்சியை முகர்ந்து முத்தம் வைத்தவன் அவளை இறுகக்கொண்டும் அவள் தலைமீதே வாகாக சாய்ந்து தான் ஆறுதல் தேடிக்காெண்டான்.

திடீரென அவன் பொழியும் அன்பின் காரணம் தெரியவில்லை.. அது உண்மையோ... அடுத்த நொடி நிலைக்குமோ என்பது கூட உறுதியில்லை.. ஆனால் அவனது முதல் அணைப்பு பிடித்து போக அவனுக்குள் அடக்கிப்போனாள் பெண்ணவள்.

"இப்ப தான் நான் வந்திட்டேன்ல... இனிமே ஒரு கஷ்டமும் உன்னை நெருங்க விடமாட்டேன்மா.. இதுவரை நீ அனுபவிச்சிராத அத்தனை சந்தோஷத்தையும் உனக்காக தேடி தேடி தருவேன்." என அவள் தாடையில் பற்றி தன்னை பார்க்க வைத்திருந்தவன் கண்கள் கலங்கிப்போயிருந்தது.


தனக்காக அவன் கலங்குகிறானா...? எழுந்த கேள்வியை தொண்டை குழியோடு முழுங்கியவள், அவன் விழிகளையே நம்பமுடியாது பார்த்திருக்க... அவள் விழிகளுக்கும் உதட்டினால் இதமாக ஒத்தடமிட்டவன்... மீண்டும் தன் கழுத்து வளைவுக்குள் அவள் முகத்தை புதைத்துக்கொண்டான்.

அதன் பின் அவளை விட்டு இம்மியளவும் நகரவில்லை அவன். என்னதான் கணவன் தன்னை தாங்கினாலும் பெரியவர்கள் முன் அவளை தாங்கிப்பிடிப்பது சங்கடமாகவே போனது. கண்டிக்க போனால் மீண்டும் மலையேறி விடுவானோ என்ற பயத்தில் அமைதியாகவே இருந்து கொண்டாள்.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் அலுவலகம் செல்லும் வரை அவளை குழந்தை போலவே தாங்கினான்.

திருமணமாகி இத்தனை நாட்கள் கடந்த பின்... மருமகள் மேலான மகனது அன்பினை கண்டவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும்... சிறுவயதில் காணாது போன மகன் மீண்டுவிட்டான்... இனியாவது இருவரது வாழ்க்கையும் நல்லபடியாக அமைந்தால் சரியென அவனது வெளிப்படையான கொஞ்சல் மிஞ்சல்களை கண்டும் காணதவர்கள் போல கடந்து சென்றுவிடுவார்கள்.

அவன் அன்பில் தாமிராவுக்குமே மூச்சடைத்து தான் போனது. எப்போதடா அலுவலகம் கிளம்புவான். மற்றவர்களோடும் நேரத்தை செலவு செய்வோம் என காத்திருக்க வைத்துவிட்டான். அவன் இருக்கும் சமயங்களில் தன்னை விட்டு சற்றும் நகரவிடவே மாட்டான். தூங்கும் போது கூட அவன் கையணைவில் தான் அவள்.


அலுவலகம் சென்றாலும் மணிக்கு ஒரு முறை அழைத்து சாப்டியா.. தூங்கினியா என்று அதில் வேறு அன்பு தொல்லை...

சிறுவயதில் அன்புக்காக ஏங்கியவளுக்கு அத்தனை சந்தோஷங்களையும் திகட்டத் திகட்ட பொழிந்தவன் அன்பு.. மேலும் மேலும் வேண்டுமென்றுதான் மனம் ஏங்கியது. ஆனால் இடம் பொருள் இல்லாது அவன் காட்டும் அன்பு தான் அவளுக்கு சங்கடத்தை தந்தது.


இரவு முழுக்க மனப்பாடம் செய்கிறேன் என்று பன்னிரண்டு மணியை தாண்டி முழித்திருந்தவளால். காலையில் கண் திறக்கவே முடியவில்லை.. நன்றாக விடிந்தும் தூங்கிக்கொண்டிருந்தவளை தட்டி எழுப்பியவன்..

"என்னடி இன்னமும் தூங்கிட்டிருக்க.. சீக்கிரம் ரெடியாகி வா.. போலாம்.."

"இன்னும் கொஞ்சம் தூங்குறேனே.. எழுந்து என்ன செய்யப்போறேன்." என பினாத்திவிட்டு கவுந்து படுத்தவளை எழுப்பி உக்கார வைத்தவன்.

"உனக்காக கீழ நிறைய பேரு காத்திட்டிருக்காங்க.. அவங்கள பார்த்திட்டு வந்து தூங்கிக்கோ.. எந்திரி..." என எழுப்பி பாத்ரூம் வரை அழைத்து சென்று விட்டான்.

தூக்க கலக்கத்தில் யாரென கேட்கத்தோன்றாது.. குளித்து விட்டு வந்தவளை அழைத்துக்கொண்டு வரும்போதே கீழே இருப்பவர்களை கண்டவள் விழிகள் விரிய.. கேள்வியாய் ஆத்விக்கை நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் பார்வையின் பொருள் புரிந்தவனோ.. விழிகளை அழுத்தமாய் மூடி திறந்தவனின் உதட்டில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது.

அதன் பொருள் புரியவில்லை தாமிராவுக்கு.. மீண்டும் அங்கு வந்திருப்பவர்களை நோக்கினாள்.

அது வேறு யாருமல்ல... வடிவுக்கரசி உள்பட வேல்முருகனின் மொத்த குடும்பமுமே கூடியிருந்தது.
நகர மறுத்து சிலைபோல் உறைந்து நின்றவளை
"வா.." என வலுகட்டாயமாக அவர்கள் முன் அழைத்து செல்ல.. தாமிராவை கண்ட வடிவுக்கரசியோ...

"அம்மாடி..." என ஏக்கமாக அழைத்தவாறு அவள் முன் ஓடி வந்தவர்., அவள் கன்னங்களை தன் இரு கைகளிலும் தாங்கி..

"பாவம் பண்ணிட்டேம்மா.... ரொம்ப பெரிய பாவம் பண்ணிட்டேன்... என் பேத்திய நானே இத்தனை நாள் கொடுமை படுத்தி... அவ கஷ்டப்பட நானே காரணமா இருந்திட்டேனே.. அம்மாடி என்னை நீ மன்னிச்சிடுவல்ல... இந்த பாட்டிய மன்னிச்சிடுவல்ல..." என வேண்டியவர் குரலானது தளதளத்து கண்கள் கண்ணீரை உமிழ்ந்தது.

எதுவும் புரியவில்லை தாமிராவுக்கு... அவர் அங்கு வந்ததே அதிர்ச்சியாய் இருக்க.. புதிதாய் அவளை பேத்தி என உறவு கொண்டாடினால் குழப்பமாக இராதா...? திரும்பி ஆத்விக்கை பார்த்தாள். அதே புன்னகை மாறாது நின்றவன்..

"அவளுக்கு எதுவும் தெரியாது பாட்டி..." என்றவன் முன் வந்த புவனா..

"இங்க என்னடா நடக்குது... எனக்கு எதுவுமே புரியல.. அப்போ சம்மந்தி மண்டபத்தில சொன்னது தான் உண்மையா...? இவ அவரோட சொந்த மக தானா...?" என்றார் அவரும் குழம்பிப்போய்.

"ம்ம்.. தாமிரா வடிவுக்கரசி பாட்டியோட பேத்தி தான்... இவருக்கும் மகள் தான்.... ஆனா சொந்த மகளில்லை." என்றான் புது பீடிகை போடும் விதமாய்.

"என்னடா உளர்ற...." என்றார் காலநேரம் தெரியாது அவன் போட்ட பீடிகையில் கோபத்தை வெளிக்காட்டி..

"ஆமாம்மா.. தாமிரா அவங்களுக்கு மட்டும் பேத்தியில்ல... உனக்குமே தான்." என்றான்.

அதிர்ந்து போயினர் தம்பதியினர்.. கூடவே தாமிராவும். விரிகள் விரிய அங்கு நின்றவரை பார்த்தவர்கள் விழியானது இறுதியில் தாமிராவிடம் பதிந்து ஆத்விக்கிடம் திரும்பியது.

"ஆமாம்மா... தாமிரா வேற யாருமில்ல. நம்ம சந்தியாக்கா மக.." என்றான்.

சந்தியா வேறு யாருமில்லை.. அவனது அக்கா..

அவளை அக்கா என்று சொல்வதை விட அவனது இரண்டாவது அன்னை என்றே சொல்லலாம்.
அம்மாவை விட அவளை தான் அவனுக்கு பிடிக்கும்.
ஆத்விக்கை விட பதின்மூன்று வயது பெரியவள்.. அத்தனை வயது வேறு பாட்டினாலோ என்னமோ தம்பியை தாயைவிட அக்கறையோடு கவனித்துக்கொள்வாள்.

எழுந்ததும் பல் விளக்கி விடுவதில் இருந்து.. உறங்கும் போது தன் விரல்களை சப்பக்குடுப்பது வரை எல்லாமே அவள் தான். விளையாட்டு வயதில் பொம்மைக்கு செய்து விடுவதாக நினைத்து ஆரம்பித்த அவளது பணி... நாளடைவில் அக்கா அக்கா என அவன் உருகுவதினாலேயே விரும்பி அவற்றை செய்ய ஆரம்பித்தாள்.

அவளுக்குமே தம்பி என்றால் உயிர்.. தம்பி உடனில்லாத பயணம் எதுவும் ரசிக்காது..
இருவரது பாசத்தை கண்டு ஊரில் மெச்சிக்காெள்ளாத நபர்களே இல்லை.


அப்போது ஆத்விக்கிற்கு எட்டு வயது. அன்று கோவில் திருவிழா என்று படு குஷியாக தயாராகி வாசல் வரை வந்தவன் தமக்கை தம்முடன் கிளம்பவில்லை என்றதும்...

"ம்மா.... அக்கா நம்ம கூட வரல்லையா.?"

"இல்லடா... அக்காக்கு உடம்புக்கு முடியாது.. அதனால வரமுடியாது.." என்க.

"அக்கா வரலன்னா நானும் வரலம்மா..." என்றவாறு தமக்கை இருந்த அறைக்குள் ஓடியவன் முன் வந்த சந்தியாவை கண்டவன்.

"அம்மா உனக்கு உடம்பு முடியலன்னு சொன்னாங்களே... நீ நல்லாத்தானே இருக்க.. கிளம்பு நம்ம போலாம்..." அடம் பிடித்தவனிடம் வீட்டுக்கு தூரம் என்று எப்படி சொல்லி புரியவைப்பாள்.


"இல்ல ஆத்விக்... வயிறு ரொம்ப வலிக்குது.. என்னால கோவிலுக்கு எல்லாம் வரமுடியாது. நீ தான் கிளம்பிட்டியே... அம்மாக்கூட போயிட்டு வா..."

"இல்ல நீ வரலல்ல.. நானும் போகல" என்றான் மறுப்பாய்.

"சரி விடு! என்னால தான் போக முடியல.. நீயாவது போய்.. அக்காவுக்கு ஏதாவது வாங்கிட்டு வருவேன்னு நினைச்சேன். எனக்கு லக்கு அவ்ளோ தான்" என சோகமாக.. சிறிது நேரம் அவளது வாடிய முகத்தினையே பார்த்து நின்றவன்..

"நீ பத்திரமா இருக்கா.. நாங்க போயிட்டு ஓடிவந்துடுறோம்." என மீண்டும் தாயிடம் ஓடிச்சென்றான்..

வரும் போது ஒரு ஜோடி கண்ணாடி வளையலுடனே வந்தவன்..
தமக்கையின் கையினை நீட்ட சொல்லி அதை தானே அணிவிக்கிறேன். என அணிவித்தவன் கையில் இருந்து ஒன்று நழுவி விழுந்து நொருங்கியதும் அழவே ஆரம்பித்து விட்டான்.

சந்தியாவுக்காக தான் ஆசையாக முதல் முதலில் வாங்கிய பொருள் உடைந்து விட்டதே என்ற கவலை அவனுக்கு...

"ஒன்னு தானே உடைஞ்சிச்சு.. இன்னொன்னு இருக்குள்ள.. இதை நான் எப்பவும் உடையாக பத்திரமா பார்த்துக்கிறேன்." என சமாதானம் கூற.

"நிஜமா அதை பத்திரமா பார்த்துப்பல்ல.. அந்த கடையிலேயே இது தான் அழகானது. உனக்கு இன்னும் அழகா இருக்கும்ன்னு ஆசையா வாங்கி வந்தேன்." என உதடு பிதுக்கியவன் முடியினை கலைத்து விட்டவள்.

"என்னை விட இதை பத்திரமா பார்த்துக்கிறேன்... சரியா..." என்றாள். அதன் பிறகே சமாதானம் ஆனான்.


அதிலிருந்து கிட்ட தட்ட மூன்று மாதங்கள் கடந்திருந்தது.

கல்லூரியில் இருந்து வீட்டுக்குள் வந்தவளை வரவேற்றனர் தந்தை வயதை ஒட்டிய தம்பதியினர்.

"வாம்மா சந்தியா.. உன்னை தான் பார்க்க வந்திருக்கோம். நல்லா இருக்கியா." என கேட்டவரை அவளுக்கு தெரியவில்லை..

அவர்களுடன் கதை பேசியவாறு எதிர் சோபாவில் அமர்ந்திருந்த யோகலிங்கத்தை திரும்பி பார்க்க.. கையசைவில் வரவழைத்து தன்னருகே அமர்த்தியவர்..

"சின்ன வயசில பார்த்ததனால மறந்திருப்பாடா.. சந்தியா இவங்க என்னோட பாலிய சினேகிதன்ம்மா.. பேரு வரதராஜன். இது அவரு சம்சாரம்..." என அறிமுகப்படுத்தியதும் வணக்கம் வைத்தாள்.

"பரவாயில்லையே... நம்ம கலாச்சாரத்தை சொல்லி வளர்த்திருக்கிங்க.." என அந்த பெண்மணி ஆச்சரியம் காட்ட.

"அவ என்ன உங்கள மாதிரி பாரின்லயா இருக்கா.. கலாச்சாரம் மறந்து போக.." என்றார் யோகலிங்கம் கேலியாக.


"அது என்னமோ உன்மை தான்.. இங்க வாம்மா.." என அவளை அழைத்து அருகில் அமர வைத்தவர்..
"என்க வீட்டுக்கு வர உனக்கு சம்மதம் தானே.." என்றார்.

புரியவில்லை சந்தியாவுக்கு... தந்தையை திரும்பி பார்த்தாள்.

"என்ன தோணுதோ சொல்லும்மா..." என்றவர் பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியவில்லை அவளால். சமாளிப்பதாக புன்னகைத்தவள் செயலை என்னவென நினைத்தார்களோ..

"அப்புறம் என்ன...? என் மருமகளே சம்மதம் சொல்லிட்டா.. உங்களுக்கும் என் பையன பத்தி நல்லா தெரியும்.. பாரின்ல வளர்ந்தவனா இருந்தாலும்... எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன். அவனுக்கும் சந்தியாவை பிடிச்சிருக்கு.. இன்னும் என்ன தயக்கம்..? சீக்கிரம் நல்ல நாள் பார்த்து நிச்சயத்தை பண்ணிட்டோம்ன்னா... அடுத்து கல்யாணத்தையும் முடிச்சிட்டு பொண்ணை கையோட அழைச்சிட்டு போயிடுவோம்." என்றார்.

"ஏன் தேவி இன்னொரு நாள்.. இன்னைக்கே நாள் பார்த்து தானே வந்திருக்கோம். இன்னைக்கே நிச்சயத்தை முடிச்சிடுவோம்." என்க

"இன்னைக்கா..?" என தயங்கினார் யோகலிங்கம்.

"ஏன் இன்னைக்கு என்ன...? யார்கிட்டையாவது சம்மதம் கேட்கணுமா..?"

"அது.... அப்பிடி இல்ல.. ஆனா என் பொண்ணு விருப்பம் என்னன்னு தெரிஞ்சுக்காம எப்பிடி...?"

"என்ன யோகா நீ... உன் முன்னாடி தானே சம்மதம் சொன்னா..? அப்புறம் திரும்ப... சரி உன் திருப்திக்காக இன்னொரு வாட்டி கேட்டுப்போம்." என தன் பர்சினை எடுத்து அதிலிருந்த புகைப்படம் ஒன்றை காண்பித்தவர்...

"இவன் தாம்மா என் பையன்.. உனக்கு இவனை பிடிச்சிருக்குல்ல.." என பட்டென கேட்டுவிட்டார்.

சந்தியாவுக்கு தான் என்ன சொல்வதென்று தெரியவில்லை. தந்தையை திரும்பி பார்த்தாள். அவரோ மகளின் பதில் என்னவாக இருக்கும் என்றே அவளையே பார்த்திருக்க..



"பொது வெளியில கேட்டா, எதுவா இருந்தாலும் சொல்ல தயக்கமா இருக்கும் வரதா.. நீ கிளம்பு உன் சம்சாரம் சொல்லுறது போலவே இன்னொரு நாள் நிச்சயத்தை வைச்சுக்கலாம்." என்றார்.

"ஏன் யோகா.. உன் வளர்ப்பில உனக்கே சந்தேகமா..? ஆனா எனக்கு சந்தேகம் இல்லடா... நீ வளர்த்த உன் பொண்ணு அப்படி எல்லாம் போக மாட்டாடா.. ஏம்மா அப்படி தானே.. உன் மனசில யாரும் இல்லல்ல.."


என்ன சொல்வாள் அவள்.. தந்தையின் பெருமையை காப்பாற்றுவதற்காக இல்லை என்பாளா.? தன் காதலை காப்பாற்ற இருக்கு என்பாளா..? இருக்கு என்றால் தந்தையின் வளர்ப்பினை குறை என்று விடுவார்களோ..

யோகலிங்கமும் அதை தான் நினைத்தார் போலும்.. அவள் பதிலை எதிர்பார்த்து கையினை பிசைந்து நின்றவர் கௌரவம் கெட்டு விடக்கூடாதென நினைத்தவள்.

"அப்பிடி எதுவும் இல்லை." என்ற பொய்யினை கூறிவிட்டு தலைகவிழ்ந்து கொண்டாள். ஆனால் கால்களோ நடுங்க ஆரம்பித்தது.
 
Top