• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

15. உன்னாலே உயிரானேன்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
அகலமாக விழிகளை விரித்தவள் உதடுகளோ "தமிழ்........." என்றது ஆர்ச்சர்யம் கட்டி.


ஆம் அவள் தோள்களை பற்றியவன் வேறு யாருமல்ல..... தமிழே தான்.

"இந்த நேரத்தில இங்க என்ன பண்றிங்க மதுஸ்ரீ.......? என விபரம் புரியாது உரக்க கேட்டவன் வாயில் கை வைத்து அடைத்தவள்,


"கத்தாதிங்க தமிழ்...." என்றவள் போகும் அவர்களை கை காட்டி,
"இங்க ஏதோ தப்பு நடக்குது, அது என்னன்னு கண்டு பிடிக்கணும்." என கூறி முன்னால் நடக்க, அவனும் அவள் பின்னாலேயே நடந்தான்.


காடு போன்ற பதை அது. இத்தனை ஆண்டுகள் இந்த ஊரில் தான் இருக்கின்றாள். ஆனால் இந்த இடம் இப்படி காடு போல காட்சி தரும் என்பது சத்தியமாக இவளுக்கு தெரியாது. அதற்கு அவள் இதற்குள் வந்திருக்க வேண்டுமே.....!


தன் கதிர்களில் வீரியத்தை மெல்ல மெல்ல குறைத்து தன்னை இரா மகளுக்கு விருந்தாக்கிகொண்டிருந்தான் சூரியன்.


மாலை என்றாலே இருண்டது போன்று காட்சிதரும் வனம் இப்போது இருள்வேறு சூழ்ந்து கொள்ள சற்று பயம் கொள்ளவே செய்தது.

நிலா வெளிச்சத்தில் அவர்கள் கண்ணுக்கு புலப்பாடாது மரங்களுக்குள் மறைந்து மறைந்து சென்றவர்கள்,


'இன்னும் எவ்ளோ தூரம் தான் நடக்க போறாங்க? இந்த காட்டுக்குள்ள யாரு இருக்க போறாங்கன்னு அந்த குழந்தையை தூக்கிட்டு இங்க வராங்க தமிழ்?" என அவனிடம் திரும்பி கேட்டவளை அவன் புரியாது பார்த்தான்.


"நீங்க பேசுறது எனக்கு புரியவே இல்ல மதுஸ்ரீ! ஆமா நீங்க எதுக்கு இங்க வந்திங்க?" என்று மீண்டும் உரக்கவே அவன் பேச,


"ஊஷ்......" என தன் உதட்டினில் விரல் வைத்து எச்சரித்தவாறே அவர்கள் கவனம் தம்மிடம் திரும்புகிறதா? என அவர்களை பார்த்தாள்.


இல்லை....... இவர்கள் பேச்சு அவர்கள் காதினில் சற்றும் எட்டவில்லை என்பதைப்போல் கண்விட்டு மறையும் தூரம் சென்றவர்களை கண்டவள்,


"தமிழ் அவங்க மறைய போறாங்க, வாங்க நாமளும் போவோம்." என அவன் கேள்விக்கு பதில் தராது ஓடியவள் பின்னே இவனும் புரியாது ஓடினான்.


சிறு நிமிடத்தில் தூரத்தே ஓர் பாழடைந்த மாளிகை அவள் கண்களில் எட்டியது. அவர்களும் அதற்குள் நுழைவதை கண்டவள் அவர்கள் உள்ளே போகும் வரை பொறுத்திருந்துவிட்டு தானும் உள்ளே நுழைந்தாள்.


வெளியே பார்த்ததை விட உள்ளே பெரிய பெரிய தூண்களுடன் பிரமிப்பாக இருந்தது அந்த மாளிகை.


அத்தனை அழகிய வேலைப்பாடு நிறைந்த மாளிகை அது. ஆங்காங்கே சிதறிக்கிடந்த கண்ணாடி துகள்களும், இடிபாடுகளும் அதன் சேதாரத்தை பறைசாற்ற,

உள்ளே வந்ததும் கண்களால் அந்த இடத்தை சுற்றி ஆராய்ந்தவளுக்கு பின்னால் வந்தவனது ஒவ்வொரு காலடி தடங்களும் அந்த இடிபாடுகளில் மிதுபட்டு நிசப்த்தம் நிறைந்த அந்த இடத்தை பயங்கொள்ள வைப்பது போல் இருக்க,
அவனை திரும்பி பார்த்தவள்,


"தமிழ் கொஞ்சம் பார்த்து வாங்க, அவங்க இங்க எங்கேயோ தான் இருக்காங்க, காதில கேட்டிட போகுது." என அந்த இடத்திலிருந்து வேறு பகுதிக்கு நடந்தவள் கண்களில் விழுந்தார்கள் அவ்விருவரும்.


குழந்தையை இன்னமும் கையிலேயே வைத்திருந்தவர்கள் மதுஸ்ரீயை கண்டுகொண்டார்கள் என்பது அவர்களது முறைப்பிலேயே தெரிந்தது.


"நீ யாரு புதுசா? எங்க இடத்தில உனக்கென்ன வேலை?" என்றனர் கோபக்குரலில்.

"நான் யாரெங்கிறது இருக்கட்டும், நீங்க ரெண்டு பேரும் யாரு? எதுக்கு இந்த குழந்தையை கதற கதற இங்க தூக்கிட்டு வந்திங்க? இதோட அம்மா எங்க?" என்றாள் அவர்களுக்கு நிகரான குரலில் சத்தமாய்.


"ஏய்....! இது எங்க இடம்.... எங்க பாஸ் என்ன சொல்லுறாரோ அதைத்தான் செய்வோம். மரியாதையா இங்க இருந்து வெளிய போனேன்னா உனக்கு நல்லது." என்றான் ஒருவன்.


"யாருடா உங்க பாஸ்.... அவனால என்னை செய்திட முடியும்? அவனுக்கும் உங்களுக்கும் குழந்தைகளை கடத்தி பிஸினஸ் பண்றது தான் வேலையா?
மரியாதையா அந்த குழந்தைய என்கிட்ட குடுத்துடு..... இல்லை நீங்க எல்லாரும் இதுக்கு நல்லாவே அனுபவிப்பிங்க." என ஆத்திரம் குறையாது கத்தியவள் கைகளை பற்றிய தமிழ்,


"மதுஸ்ரீ வாங்க நாம இங்க இருந்து போயிடலாம்." என்றான் அவளையே பீதியோடு பார்த்தபடி.


"என்ன தமிழ் நீங்க? இவங்கள பார்த்து எதுக்கு பயப்படுறீங்க? நானும் கராத்தேயில பெல்ட் வாங்கினவ தான். இவங்கள அடுச்சு விரட்ட ஒரு நிமிஷம் போதும்." என அவர்களை நோக்கி வெறியுடன் சென்றவள் கையினை இறுக பற்றி தடுத்தவனால் அது முடியாது போக,

தன் பலம் மொத்தத்தையும் ஒன்று திரட்டி அவளை திருப்பி தன்னை பார்க்க வைத்தவன்,



"என்னாச்சு மதுஸ்ரீ? ஏன் இப்பிடி பைத்தியம் போல நடந்துக்கிறீங்க?" என்றான்.


"என்ன சொல்லுறீங்க தமிழ்? அந்த குழந்தையை இவங்ககிட்டயிருந்து காப்பாத்துறது பைத்திய காரத்தனம்ன்னா நான் பைத்தியமாவே இருந்திட்டு போறேன். ஆனா இவனுங்க ரெண்டு பேரையும் நான் சும்மா விடமாட்டேன்." என அவன் பிடியிலிருந்த தன் கையினை உருவ அவள் போடார,


இன்னமும் அவள் கையினை உருவாதவாறு கெட்டியாக பிடித்து கொண்டவன்,



"மதுஸ்ரீ.......!" என உரக்க அழைத்து அவள் கவனத்தை தன்புறம் திருப்பியவன்,


"இப்போ யார்கூட கோபமா பேசிட்டிருக்கிங்க...?" என்றான் புரியாது.

அதுவரை குழந்தையை கடத்தியவர்கள் மேல் ஆக்ரோஷமாக இருந்தவள், அவன் கேள்வியில் இமைகள் இடுங்க அவனை கூரிய பார்வை பார்த்து,


"ஏன் தமிழ்...... இவ்ளோ நேரம் நான் என்ன வித்தையா காமிச்சேன்? ஒரு பொண்ணா இருந்திட்டு இவங்களோட செயல்ல இவ்ளோ ஆத்திரப்படுறேனே! ஆனா நீங்க ஒரு ஆணா இருந்தும் பிரச்சினையில இருந்து தப்பிக்க பார்க்கிறீங்கல்ல?" என்றான் வேதனையாய்.


"பிரச்சினை இருந்தா தட்டிக்கேக்கலாம் மதுஸ்ரீ. ஆனா இங்க என்ன பிரச்சினை நடக்குதுன்னே எனக்கு தெரியல,...




நான் பாட்டுக்கு வந்திட்டிருந்தேன், ரோட்டோரமா உங்க பைக் நின்னத பார்த்திட்டு இங்க எங்கேயோ தான் நிப்பிங்கன்னு உள்ள வந்து பார்த்தா, எதையோ பார்த்து வெலவெலத்து போய் நின்னிங்க, என்னன்னு கேட்டா என் வாயை பொத்தி இங்க ஏதோ தப்பு நடக்குதுன்னு இங்கவரை கூட்டிட்டு வந்திட்டிங்க, இங்க வந்தா வெறும் பாழடைஞ்ச மண்டபத்தை தவிர யாரையுமே காணோம்.



ஆனா நீங்க யார்கிட்டையோ பேசுறது போல ஆத்திரப்பட்டு பேசிட்டிருந்தா பயம் வராதா எனக்கு.? அதான் வாங்கன்னு கூப்பிட்டேன்." என்றவன் பேச்சினை இம்முறை புரியாது பார்ப்பது மதுஸ்ரீ முறையானது.


"தமிழ்......! நீங்க என்ன சொல்லுறீங்க? நான் ஏன் இங்க வந்தேன்னு நிஜமா தெரியலையா? "


"தெரியல மதுஸ்ரீ! தனிய இந்த காட்டுக்குள்ள அதுவும் இந்த நேரம் போறது உங்களுக்கு நல்லதில்லன்னு தான் உங்க கூடவே வந்தேன், ஆனா இந்த மாதிரி பிகேப் பண்ணுவிங்கன்னு எனக்கு தெரியாது." என்றான் கைகளை விரித்து அலட்சியமாய்.


அவன் அவ்வாறு கூறும் நேரம் குழந்தை வீரிட்டு கத்தும் சத்தம் கேட்டதும்,
அவன் விழிகளையே கூரிய பார்வை பார்த்தவள்,


"அந்த குழந்தை இப்போ அழற சத்தம் கூட கேட்டிருக்காதே உங்களுக்கு!" என விரக்தியாய் புன்னகைத்தவள்.


"அவங்க ரெண்டு பேருகிட்டையிருந்தும் அந்த குழந்தையை வாங்கிட்டு வந்து, உங்க கையில அந்த குழந்தையை தந்தா என்னை பைத்தியம் இல்லன்னு நம்புவீங்களா?" என்றாள் அதே அலட்சியமாய்.


"இப்பவும் உன்னை மட்டும் தான் நம்புறேன் மதுஸ்ரீ.... எனக்கும் தெரியும் உனக்கு பைத்தியம் இல்லன்னு, அதனால தான் இங்க வந்திருக்கிங்க." என்றவனது மதுஸ்ரீ மேலான பார்வையோ வேறுமாதிரியாக மாறி பெரிதாக நகைத்தவன்,


"ஏன்னா நீ இங்க வர காரணமே நான் தான். எனக்கு தெரியும் என் மதுஸ்ரீக்கு இரக்க குணமும், உதவி செய்யிற மனப்பாங்கும் ரொம்பவே அதிகம்ன்னு,


அதான் சின்னதா ஒரு வித்தையை காட்டி உன்னை இங்க அழைச்சிட்டு வந்தேன்.


ஆனா நீ பார்த்தது எதுவும் உண்மை இல்லை செல்லம்... எல்லாம் என்னோட மேஜிக்..... அங்க பாரு....." என அவன் காட்டியபுறம் திரும்பியவள் அதிர்ந்தே போனாள்.



ஆம் அவன் சொன்னது போல் அவள் கண்ட காட்சி எதுவுமே உண்மையில்லை.


குழந்தையினை கடத்தி வந்த இருவருமே மதுஸ்ரீ பார்த்த நொடியில் உடைந்த கற்களைபோல படபடவென உதிர்ந்து தரையில் விழு, அழுத குழந்தை மாத்திரம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது.


எங்கே குழந்தை தரையில் விழப்போகிறது என்று அதைநோக்கி ஓடியவள் கைகளில் அகப்படாது காற்றோடு அக்குழந்தையும் கரைந்து போக, ஏமாற்றமாய் கைகளை இழுத்து கொண்டவளுக்கு நடப்பவை எதையும் நம்பமுடியவில்லை.


'ஒருவேளை தான் நான் கனவு காண்கிறேனோ?' என கண்களை அகல விரித்து அந்த இடத்தை ஆராய்ந்தாள்.

இத்தனை நேரம் பட்டப்பகலாய் தெரிந்த அந்த அரண்மனை திடீரென ஔியிழந்தது போல் தோன்றியது.

அது அவள் பிரம்மையே.


ஆம் அரண்மனை இப்போது எப்படி ஓர் தீப்பந்தத்தின் வெளிச்சத்தோடு இருள்மயமாக இருக்கின்றதோ, முன்னரும் அதே போல் தான் இருந்தது.


குழந்தையை காப்பாற்றி விடவேண்டும் என்ற எண்ணம் மட்டும் மதுஸ்ரீக்கு இருந்ததனால் ஏனாே அது அவள் கருத்தில் படவில்லை.


இருளே அதிரும் அளவு சிரித்தவன் மதுஸ்ரீயை நெருங்கி அவள் எதிரில் நின்று,

"நீ எனக்கு வேணும் மதுஸ்ரீ! எனக்கு மட்டும்ன்னே உன் மனசிலயும் உடல்லையும் இடம் வேணும்... அதுக்கு குறுக்க யாரு வந்தாலும் அதை நான் அனுமதிக்க மாட்டேன்.

அதையும் மீறி எவனாவது வாந்தாங்கன்னா அவங்கள கொன்னுடுவேன்." என்றவனது குரூரமான பேச்சில் பயந்தவள் அதை வெளியே காண்பிற்காது,


"என்ன உலறல் இது தமிழ்..? உனக்கென்ன லூசா?" என்றாள் கடுப்பாகி.


"ஆமா உன்மேல பைத்தியமா தான் இருக்கேன்.... அதுவும் இன்னைக்கு நேத்தைக்கில்ல....
பல வருஷமா உன்னால பைத்தியமா இருக்கேன்.... இந்த ஜென்மத்திலயாவது நீ எனக்கு கிடைச்சிடமாட்டியான்னு ஏக்கத்தோடயே இந்த பிறவிய எடுத்தா,

என்னை படைச்ச அந்த பரமேஸ்வரனுக்கு என்மேல என்ன கோபமோ? எனக்கு போட்டியா அந்த ஆதிரனையும், யாழினியனையும் சேர்த்து படைச்சிட்டாரு..." என பற்களை நெரித்தவாறு கூறியவன்,


"அவங்க உன்னை அடையிறதுக்கு முன்னாடி நான் உன்னை அடையணும்..." என அவளது இரு தோள்களையும் பற்றிக்கொண்டவன் பேச்சும், செயலும் தன்னிடம் அவன் தவறாக நடக்க முயற்சி செய்வதைப்போல் தோன்றிய மறு நொடி அவனை தன் பலம் அத்தனையம் திரட்டி தள்ளி விட்டு ஓட ஆரம்பித்தாள்.



கராத்தேயில் பெல்ட் வாங்கியவள் மனநிலை ஏனோ இன்று இவனை எதிர்த்து வெல்வோம் என தோன்றவில்லை.

மாறாக இவன் கண்களில் படாது தப்பித்தால் போது என்றே தோன்றியது.

அதுவும் அவளுக்கு நல்லது தான். எதிரில் நிற்பவன் வித்தை தெரிந்தவனாயிற்றே! அவனை பலத்தினால் வெல்லலாம் என நினைப்பது முட்டாள் தானம்.


தீப்பந்தத்தின் வெளிச்சம் படாத இடமாக சென்று ஓர் அறையின் கதவின் பின் ஒழிந்து கொண்டவள் மூச்சோ பயத்தில் வாங்கத்தொடங்க,
எங்கு மூச்சை கூட பெரிதாக விட்டால் இந்த நிசப்தத்தில் தன்னை கண்டுவிடுவானோ என்ற பயத்தில் வாயினை இறுக பொத்தி கொண்டவள், காதினில் இடிபாடுகள் மிதிபடும் சத்தம் மிக அருகினில் கேட்க,


இதோ பிடித்து விட போகிறான் என பயந்தவள், அவன் அவளை கடந்து செல்வதை கூவ அறியாது சடசடவென எழுந்து ஓடிய சத்தத்தில் திரும்பி அவளை நிழலுருவாய் கண்டவன்,



"மதுஸ்ரீ.....! உன்னை கஷ்டப்படுத்தி பார்க்கிறது என்னோட நோக்கமில்லை... உன்னை காயப்படுத்துறது என் உயிரை நானே கொல்லுறதுக்கு சமன். ஒரே ஒரு வாட்டி என் கண்ணை மட்டும் பார்த்துட்டேன்னா போதும்.

உன்னை ஒன்னும் பண்ணாம விட்டிடுறேன். இல்லை இந்த மாதிரி என் கையில சிக்காம ஓடிட்டு தான் இருப்பேன்னா எனக்கும் உன்கூட விளையாடுற இந்த விளையாட்டு பிடிச்சுத்தான் இருக்கு." என நின்ற இடத்திலிருந்து சத்தமாக கூறியவன் பேச்சு காதில் விழுந்தாலும் மீண்டும் ஓர் அறையின் மூலையில் சென்று ஒழிந்து கொண்டாள்.




இதயம் ஏனோ பலவீனமானதைப்போல் தோன்றிய மறு நெடியே, மூளையினால் எதைபற்றியும் சிந்திக்க முடியவில்லை.

இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்பதை கூட வியூகம் அமைக்க முடியாது வெறுமையானது.

'இதற்குமேல் அவனிடம் இருந்து தப்பிப்பேனா?' என்ற எண்ணமே அவள் பயத்தை அதிகரிக்க, உடல் பயத்தில் நடுக்கம் கண்டது.


"மதுஸ்ரீ..... நீ எங்க ஒழிஞ்சிருந்தாலும் உன் வாசனை எனக்கு தெரியும் மதும்மா....! வெளிய வாடா..... பாரு நேரம் வேற ஆகிட்டிருக்கு, உன் பெத்தவங்க உன்னை காணலன்னு பயப்பட போறாங்களா இல்லையா?" என கேட்டவாறு அந்த அறை வந்தவன் அரவம் கேட்டவள் மூச்சைகூட வெளிவிடாது அவன் வெளியேறும் தருணத்திற்காக காத்திருந்தாள்.



அவள் அரவம் கேளாது அந்த அறைவிட்டு வெளியேறியவன் நீண்ட நேரம் அந்த இடம் பூராகவும் தேடிவிட்டு மீண்டும் அந்த அறைக்குள்ளேயே வந்து, அவள் ஒழிந்திருந்த இடம் முன்கூட்டியே தெரிந்தவள் போல் கைவிட்டு அவள் கைகளை பற்றி கொண்டவன்,


"ரொம்ப நேரம் உன்னை காண்டுபிடிக்க முடியாதவனாட்டம் நடிக்க முடியாது பேபி... டைம் வேற ஆகுது. நீ எப்பிடி தனியா வீட்டுக்கு போவ சொல்லு?" என அந்த தீப்பந்தம் எரியும் இடம் இழுத்து வந்தவன்,



"என் செல்லம்ல... என் கண்ணை ஒரே ஒரு நிமிஷம் அடம்பிடிக்காம உத்து பாருடா....!" என்றான் கெஞ்சலாய்.


மதுஸ்ரீயோ இவன் சொல்வதை எல்லாம் செய்ய வேண்டுமா? என்பதைப்போல் முகத்தை திருப்பிக்கொள்ள,

அவள் தாடையில் கை வைத்து தன்னை பார் என்பது போல் பலமுறை கெஞ்சி பார்த்தவனை மதுஸ்ரீ உதாசினம் செய்தாள்.


அத்தனை நேரம் இருந்த பொறுமை காற்றில் பறந்தவனாய் ஓங்கி ஒரு அறை அவள் கன்னத்தில் விட்டவன்,


"இப்போ மட்டும் நீ என் கண்ணை பார்க்கல, என்னை ஒரு அரக்கனா தான் பார்ப்பே." என்றவனது அதட்டும் தொணியில் கன்னத்தை கைகளில் தாங்கியவாறு பாவமாய் அவள் பார்க்க,
அவள் கலக்கம் கண்டு கலங்கி போனவனும்,



"சாரிடா சாரி செல்லம்...... ஏதோ கோபத்தில அறைஞ்சிட்டேன். இனி இந்த மாதிரி பைத்தியகாரனாட்டம் பண்ண மாட்டேன்ம்மா....! நீ என் கண்ணை மட்டும் பார்த்திடும்மா, நம்ம இங்க இருந்து போயிடலாம்." என்றவன், அவள் கன்னங்களை தன் இரு கைகளால் தாங்கி பிடித்தவாறு அவள் கண்களுக்குள் தன் கண்களால் ஊடுருவ ஆரம்பித்தான்.



இரண்டே வினாடியில் அவனுள் இருந்து ஏதோ ஓர் சக்தி விழிவழியே அவள் உடலில் ஊடுருவி அவளை அவன் வசம் இழுப்பதற்குள் அவள் அரையில் கட்டியிருந்த அந்த நூலின் சக்தி விடவில்லை.


மாறாக அதிலிருந்து ஏதோ ஓர் ஔி அவனை பயங்கரமா தாக்க தரையில் விழுந்து சுயநினைவை இழந்தான்.


மதுஸ்ரீக்கு நடப்பவை எதுவுமே புரியவில்லை. ஆனால் தற்சமயம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இங்கிருந்து தப்பித்து விடவேண்டும். இல்லையேல் இவன் மீண்டும் எழுந்தால் ஆபத்தாகி விடும் என மூளை எச்சரிக்க, விழுந்து கிடந்தவனைகூட திரும்பி பாராது ஓடியவளுக்கு வந்த பாதை மறந்தே போனது.



கால் போன திசை ஓடியவளுக்கு வீதியை கண்டதும் தான் உயிரே வந்தது.

ஆனால் அந்த வழியே தான் நடமாட்டம் இல்லையே!
எங்கு திரும்பினாலும் இருள் மயம். வீடு செல்லும் பாதை இதுதான் என கணித்து ஓடியவள் வீட்டின் தெருமுனை வந்ததும் தான் மூச்சினையே சரியாக விட்டாள்.


நடந்தவற்றை எல்லாம் ஒன்றும் விடாமல் யோசித்தவளுக்கு இப்போது கூட எதையுமே நம்பமுடியவில்லை.


அரையில் பற்றியிருந்த கயிற்றனை வருடியவள்,


"என்னை சுத்தி என்ன தான் நடந்திட்டிருக்கு? கண்ணால பார்கிறது எதையுமே நம்ப முடியல, அதே சமயம் நம்பாமலும் இருக்க முடியல,
எல்லாமே மாயமா இருக்கு.

ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி கண் முன்னாடி நிற்கிறவங்க, மறு நிமிஷம் காணாமா போயிடுறாங்க." என புலம்பியவளுக்கு,

வேலைக்கு சென்ற முதல் நாளின் போது கோவிலில் வைத்து அந்த குருக்கள் சொன்னது நினைவில் வந்தது.


"கடந்த சில நொடிகளில் இருந்து உன் கண்களில் புலப்படும் அத்தனையும் மாயையே!
ஏன் நான் கூட மாயையாக இருக்கலாம்.
மனதினில் தெளிவிருந்தால் மாத்திரமே அதை ஒரு நிலைபடுத்தி சிந்தித்து உண்மை எது, பொய் எது என்பதை உன்னால் இனங்காண முடியும்."


"காண்பது எதுவும் உண்மையும் அல்ல, அதே சமயம் பொய்யுமல்ல.
இரண்டிற்குமான வித்தியாசம் ஒரு நூல் அளவே தான்.


நீ விரும்பியதை அடைய வேண்டும் என்றால் நிதானம் என்ற ஒன்றால் மாத்திரமே முடியும்." என அவர் சொன்னது நினைவில் வர,


"நான் எதை அடையணும்ன்னு எனக்கே தெரியாதப்போ எதை நோக்கி நான் ஓடமுடியும்?
தான் கூட உண்மை இல்லன்னு சொன்னாரே....! அப்போ அவரு யாரு? பேசிட்டிருக்கிறப்போ அவரும் தானே மறைஞ்சு போனாரு...."


" ஐயோ யாரு என்ன ரூபத்தில வரப்போறாங்கன்னு தெரியாம நான் என்ன பண்ணுவேன்.

இந்த கயிறு மட்டும் இல்லன்னா நான் என்னாகியிருப்பன்னு கூட என்னால கணிக்க முடியல,

இப்போ தமிழ் போல வந்தவன் யாரு? அவனுக்கு தமிழ எப்பிடி தெரியும்...?" என குழம்பவே ஆரம்பித்தாள்.


அவளுக்கு ஏற்கனவே தெரியும், இன்றைய இரவு நிகழ்ச்சி தமிழினது தான் என்று. 'தந்தை கூறியதைப்போல் தமிழ் அங்கு நின்றான் என்றால், இவன் யார்....?
ஒரு வேளை அந்த கறுப்புடை காறன், குழந்தை போன்று இதுவும் அவனது மாயவித்தையாக இருக்குமோ?


ஆனால் ஏன் தமிழ் உருவில் வரவேண்டும்?
இதில் யாழினியன், ஆதிரன் என்று யார் யாரோ பெயர்களை சொன்னானே! அவர்கள் யார்? அவர்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு?' என பலவாறு யோசித்தவளுக்கு எந்த விடையுமே கிடைக்கவில்லை.

அதே நேரம் பயந்திருக்கும் பெற்றவர்களிடமும் உண்மையினை கூறி அவர்களை இன்னமும் பயமுறுத்த அவள் விரும்பவில்லை.


'ஆனால் இனி எதிலும் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். யாரையும் இனி நம்பிடக்கூடாது.' என தன்னை தானே எச்சரித்தவளுக்கு அன்றைய இரவு தூங்க இரவாகவே கழிந்தது.
 
Top