• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

16. உறவாக வருவாயா.?

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
"ப்ளீஸ் ராஜூ.....! என்ன விட்டிடு. உன்னை அன்னைக்கு அவமானப்படுத்தினது தப்புத்தான்.. அதுக்கு எத்தனை பேர் முன்னாடி வேணாலும் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுக்கிறேன்.. ஆனா இந்த மாதிரில்லாம் பண்ணிடாத. நான் பண்ண தப்புக்கு என் குடும்பம் என்ன பாவம் பண்ணிச்சு? ப்ளீஸ்..... அந்த போட்டோஸ் எல்லாத்தையும் அழிச்சிட்டு என்னை விட்டிடு" என காலேஜ் என்றும் பாராது கெஞ்சினாள்.


"என்ன பேபி அழற? இவ்ளோ நேரம் திமிரா தானே பேசின.. அப்பிடியே பேசு.. நீ அழுதா எனக்கு பிடிக்காதும்மா!
ஒரே ஒரு நாள் போதும்.. அதுவும் ஒரு மணிநேரம்ன்னாலும் ஓகே தான்.. என் வேலை முடிஞ்சதும், உன் கண்ணு முன்னாடியே என் செல் போன்ல இருக்கிற மொத்த ஆதாரத்தையும் டெலிட் பண்ணிர்றேன்.. அதுக்கு பிறகு உன்னை தொல்லையே பண்ணமாட்டேன்.. காட் ப்ராமிஸ்.." என சத்தியம் செய்தான்.


"ராஜூ ப்ளீஸ்....! என்னால அதெல்லாம் பண்ணமுடியாது. உனக்கு என்ன..? என்னை நீ பழிவாங்கணும்.. அதுக்கு உன் கண்முன்னாடியே சாகச்சொல்லு, சாகுறேன்.. ஆனா இதெல்லாம் வேண்டாமே!" என அழுகையோடு அவள் கேட்க.


"நீ சாகிறதனால எனக்கு என்ன ஆதாயம்?
இங்க பாரு.. நான் சொன்ன வாக்கு தவறமாட்டேன்.. இதுக்குமேல நமக்குள்ள பேச எதுவுமில்லை.
இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பதில் சொல்லன்னா, என்னாகும்ன்னு திரும்ப சொல்ல விரும்பல.. நல்ல முடிவோட வருவேன்னு நினைக்கிறேன். பாய்...!" என வைத்துவிட்டான். என ஒன்றரை ஆண்டகளுக்கு முன்னர் ஆரம்பித்து இன்று கல்லூரியில் அவன் அழைப்பு விடுத்தது வரை சொன்னவள் உதடுகள் பயத்தில் துடிக்க,


"எப்பிடியாது இவன்கிட்டயிருந்து என்னையும், என் குடும்பத்தையும் காப்பாத்திடுங்க அண்ணி.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு, இப்பிடி ஒன்னு நடந்திருக்குன்னு எங்க குடும்பத்துக்கு தெரிஞ்சா, என்னை கொன்னுட்டு அவங்களும் ஏதாவது பண்ணிப்பாங்க.


பிக்னிக் போகப்போறேன்னு கேட்டப்பவே.. வயசு பொண்ணுக்கு என்ன பிக்னிக்..? அதெல்லாம் முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. அப்பா தான் இதெல்லாம் அந்தந்த வயசில அனுபவிக்கிறது.. அப்புறம் இதெல்லாம் கிடைக்காது.. அதனால போய்ட்டு வான்னு பாட்டிய சமாதானம் பண்ணி அனுப்பி வைச்சாரு,
இப்போ இப்பிடியாச்சுன்னு தெரிஞ்சா, என்னாகுமோன்னு பயமா இருக்கு அண்ணி" என அவள் தோள்களில் சாய்ந்து செய்வது அறியாது கதறினாள்.


அவள் முதுகினை ஆதரவாக வருடிவிட்டவளுக்கும், இதற்கு தீர்வினை எப்படி காண்பதென்பது புரியவில்லை.


அவளுக்கும் நன்கு தெரியும் அந்த குடும்பத்தினரை பற்றி.. இப்படி ஒன்று நடக்கிறது என்று தெரிந்தால், விளைவு விபரீதம் தான். ஆனால் இதற்கு தீர்வு தான் என்ன? என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவளாய்,


"இலக்கியா... அவனுக்கு கால் பண்ணி நாளைக்கே வரதா சொல்லு" என்றாள்.


அதிர்வோடு அவள் தோள்மேலிருந்து எழுந்து, அவள் விழிகளை ஆராய்ந்தவள்,


"என்ன அண்ணி சொல்லுறீங்க? நான்... நான் அவன்கூட...," என மீதியை சொல்ல முடியாது தடுமாற,


"உன்கூட நானும் வரேன் இலக்கியா! அவனால உன்னை ஒன்னும் பண்ண முடியாது..
இப்பவே கால் பண்ணி, எங்கே எத்தனை மணிக்கு வரதுன்னு மட்டும் கேளு" என்றாள்.


"எனக்கு பயமா இருக்கண்ணி.. வேற எதாவது வழியில ட்ரை பண்ணுவோமா?" என்றாள்.


"வேற வழி இருக்க வாய்ப்பே இல்லை இலக்கியா. அவன் வழியில போய் தான், இதை சரி பண்ண முடியும். நீ என்னை நம்புறல்ல" என அவள் கண்களை பார்த்து மது வினவ.


"ம்ம்....." என கண்ணீரினூடவே தலையசைத்தாள்.


"அப்போ கால் பண்ணி சொல்லு" என போனை எடுத்து அவள் கையில் வைத்தாள்.


பயமிருந்தாலும் மது தந்த தைரியத்தில் அழைத்து நாளைக்கு வருவதாக கூற, இதை எதிர்பார்த்தவன் போல்,
பெரிதாக நகைத்தவன். "குட் அப்போ நான் சொல்லுற ஹோட்டலுக்கு மார்னிங்க் பத்து மணிக்கு வந்திடு",
என ஹோட்டல் பெயரை கூறி வைத்தான்.



இலக்கியாவின் கதைகளை கேட்ட மதுமிதாவால் நின்மதியாக உறங்கமுடியவில்லை.. எப்படி உறக்கம் வரும்? இலக்கியா ஒன்றும் சிறு பிரச்சினையில் மாட்டிக்கொள்ளவில்லையே!


ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் அந்த ராஜூவுக்கு அழைத்து வரச்சொல்லியாயிற்று.. ஆனால் இரு பெண்களால் அவனை எப்படி சமாளிக்க முடியும் என்ற கேள்வி தாமதமாகத்தான் மதுவிற்கு எழுந்தது.


நிச்சயம் அவர்கள் எதிர்க்கப்போவது பலவீனமான ஒருவனை இல்லை என்பது இலக்கியா கூறியவற்றிலிருந்தே தெரிய, கண்டமேனிக்கு யோசித்தவாறு படுத்திருந்தவளுக்கு யாராவது ஓர் ஆண் துணைக்கு இருந்தால் இலகுவில் அவனை மடக்கிவிடலாம் என்றே தோன்றியது.


ஆனால் அந்த ஆண் யார்? என்பது தான் கேள்வியே!
தரையில் படுத்திருந்தவனை திரும்பி பார்த்தாள்.
கேஷவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கண்டவள் 'இவன்கிட்ட உதவி கேட்டா என்ன?


இல்ல வேண்டாம். இது ஒரு சிடு மூஞ்சி!
இலக்கியா மேட்டர் தெரிஞ்சா, வேற மாதிரி ரியாக்ட் பண்ணி, ஊருக்கே தம்பட்டம் அடிச்சிடும். இது ஒரு பெண்ணோட வாழ்க்கை சம்மந்தப்பட்டது, இதை நாசுக்காத்தான் கையாளவேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்றால் காரியம் கெடுவதோடு இலக்கியாவின் எதிர்காலம் பாதிக்கப்படும்' என நினைத்தவள்,


'வேற நம்பிக்கையானவங்க யாரிருக்காங்க?' என சிந்தித்தவளுக்கு அப்போது தான் அவன் நினைவு வந்தான்.


'அட இவனை எப்பிடி மறந்தோம்..? ஓகே விடிஞ்சதும் முதல் வேலையா இதைபத்தி பேசிடுவோம்' என ஒரு முடிவுக்கு வந்ததன் பின்னர் தான் உறங்கவே செய்தாள்.


மறுநாள் கேஷவனும், அவன் தந்தையும் அலுவலகம் கிளம்பியதன் பின்னர், கோவில் போகப்போகிறேன் என்று காரணம் காட்டி காலேஜ் மட்டம் போட்டுவிட்டாள் இலக்கியா.


இதுவரை காலேஜ் போகமாட்டேன் என்று ஒரு நாளும் கூறாதவள், இன்று கோவிலுக்கு போகப்போகிறேன் என்றதும் யாருக்கும் அது பெரிதாகப்படவில்லை. "ஒரு நாள் தானே போய் வா!" என்றனர்.


"தானும் அவளுடன் செல்லப்போகிறேன்" என மதுவும் கூற, "கோவில் தானே பாப்பாவை நாங்க பாத்துக்கிறோம் நீயும் போ" என அனுப்பி வைத்தனர் பெரியவர்கள்.


"இரு இலக்கியா! போன் எடுத்துட்டு வரேன்" என உள்ளே ஓடியவள் சிறுதுநேர தாமதத்தின் பின்னரே வெளியே வந்தாள்.


அவர்களை கண்டதும் காரினை டிரைவர் ஸ்ராட் பண்ண, வேண்டாம். என நிராகரித்து விட்டு ஆட்டோவினை பிடித்துக்கொண்டு ராஜூ சொன்ன ஹோட்டல் விரைந்தார்கள்.


போகும் வழியெங்கும் எப்படி சமாளிக்க போகுறோம் என இருவர் முகமும் பதட்டத்தில் இருந்தாலும்.. மது அதை வெளிப்படுத்தாது போனையே நோண்டியவாறு வந்தாள்.



சிறுதுநேரத்தில் அவர்கள் வந்து சேரவேண்டிய இடம் வந்ததும் ஆட்டோவிலிருந்து இறங்கியவள், இலக்கியா இறங்கும் முன்பாக,


"நீ ஆட்டோவிலயே இருந்துக்கோ.. தேவைன்னா உன்னை கூப்பிடுறேன்.. அதுக்கு முன்னாடி நீ உள்ள வந்தா காரியம் கெட்டுபோயிடும்" என்றவளை புரியாமல் பார்த்தவள்,


"நான் இல்லாம நீங்க எப்பிடி அண்ணி? உங்களுக்கு அவனை தெரியாதே! அதுவுமில்லாம அவன் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல.
உங்கள அவன்கிட்ட மாட்டிவிட்டு, என்னால இங்க நிம்மதியா இருக்க முடியாது. என்ன நடந்தாலும் பரவாயில்ல.. நானும் உங்ககூடவே வரேன்" என இறங்க போனவளை தடுத்தவள்.


"நீ ஆட்டோ உள்ள இருக்கிற வரைதான் நான் போட்ட பிளான் சக்சஸ் ஆகும்.. இப்போ நீ தானே சொன்ன, அவன் நான் நினைக்கிற மாதிரில்லாம் இல்லன்னு.. ஒருவேளை அவன் இங்கே எங்கயாச்சும் நீ வரீயான்னு கவனிச்சிட்டு இருக்கலாம்ல. நீ உள்ளயே இரு நான் வெற்றியோட வரேன்" என்றாள்.


"ஆனா அண்ணி.. உங்கள தனியா அவன்கிட்ட அனுப்புறதுக்கு பயமா இருக்கு", என்றவள் கையினை பிடித்து தட்டிகொடுத்தவள்..


"பயப்படாத இலக்கியா! எல்லாமே சரியாகும்" என்றவாறு அந்த பெரிய ஹோட்டலின் உள்ளே நுழைந்தாள்.


ஆம் அது சாதாரண ஹோட்டல் இல்லை.. முழுக்க முழுக்க செல்வந்தர்களால் மாத்திரமே அந்த பைப் ஸ்டார் ஹோட்டலுக்குள் நுழையமுடியும்.
ஏனெனில் ஒருவரின் நாள் முழுவதற்குமான சாப்பாட்டு செலவினை ஒரு காஃபி முழுங்கிவிடும் அளவிற்கு பில் போட்டு தருவார்கள். அப்படி ஒரு விடுதியுடன் கூடிய ஹோட்டல்.


பணம் ஒரு பொருட்டல்ல என நினைத்து அவ்வளவு எளிதிலும் உள்ளே நுழைந்துவிட முடியாது. ஆன்லைன் புக்கிங்க் செய்தால் மாத்திரமே உள்ளே போக அனுமதி. இல்லை என்றால் வந்தவழி திரும்பவேண்டியது தான்.


கண்ணாடி கதவினை திறந்துகொண்டு உள்ளே வந்தவளை,
"எஸ் கியூ மி மேம்" என ரிசப்ஷனில் இருந்த பெண் அழைத்து, "புக்கிங்க் புரூப் காமியுங்க" என என்றாள் அவள்.


கையிலிருந்த போனினை எடுத்து காமித்தாள்.
அதில் இருந்த கேபின் இலக்கத்தை ஆராய்ந்தவள்,
"அதோ அங்க தெரியுதே.. கண்ணாடி ரூம், அதுதான் உங்க புக்கிங்க் கேபின் மேம்" என வழிகாட்டியவளுக்கு ஒரு நன்றியை தெரிவித்து அந்த இடம் விரைந்தாள்.


ஆம் இலக்கியா செல்லிற்கு ராஜூ ஆன்லைனில் புக் செய்த பில்லினை அனுப்பியிருந்ததால் மதுவால் இலகுவில் உள்ளே போக முடிந்தது.


அவள் காட்டிய கண்ணாடி அறையில் வந்தவளுக்கு இதுவரை இருந்த தைரியம் குறைந்து, நடுக்கம் தொற்றிக்கொள்ள அந்த அறையினை சுற்றி ஒருமுறை பார்த்தாள்.


சிறிய அறையாக இருந்தாலும் முழுவதுமே கண்ணாடி சுவர்கள். உள்ளே இருப்பவர்களுக்கு எப்படி வெளியில் இருப்பவர்களை தெரியுமே அதே போல் வெளியே உள்ளவர்களுக்கு உள்ளே இருப்பவர்கள் தெள்ளத் தெளிவா தெரியக்கூடிய கண்ணாடியின் அமைப்பு.


'நல்ல வேளை! பேசுறது வெளிய கேக்காதுன்னாலும் அசம்பாவிதம் எதாவது நடந்தா, உதவிக்கு யாராச்சும் வருவாங்க' என திருப்தி கொண்டவள், அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள்.


சரியாக பத்து நிமிடத்தில் நெட்டையாய் உள்ளே நுழைந்த ஒருவன், நேராக அந்த அறை நுழைவதை கண்டவள் இதயம் தாறுமாறாக துடித்து. அதை முகத்தில் காட்டாது அமர்ந்திருந்தவள் முன்பு வந்தவன் புருவமோ கேள்வியாய் விரிய,


"ஹாய்…" என புன்னகைத்தவாறு எதிர் இருக்கையை காண்பித்து "உக்காருங்க" என்றவளை எரிப்பது போல் பார்த்தவன்,


"யாரு நீ? கேபின் ஏதாது மாறி வந்திட்டியா?" என சீற்றமாக கேட்டவன்..
"இவங்க கேபின் மாறிவந்தவங்கள கூட கவனிக்காம என்ன பண்ணிட்டிருக்காங்க" என வெளியே போக திரும்ப,


"ஒரு நிமிஷம் சார்.. நான் மாறி எதுவும் வரல்ல.. உங்ககூட கொஞ்சம் பேசணும். டென்ஷனாகாம உக்காந்தா பேசலாம்" என மிக கூலாக சொன்னாள் மது.


அவளது கூலான பேச்சு அவனுக்கு இன்னும் எரிச்சலை உண்டு பண்ணியிருந்தது. பின்னே அவன் இங்கு எதிர்பார்த்து வந்ததவள் இல்லாது வேறு ஒருத்தி அமர்ந்திருந்து அவனுடன் பேசவேண்டும் என்றால் ஆத்திரம் வராதா?


"ஏய்..! உங்கூட எனக்கு பேச்சு? முக்கியமானவங்க வரத்துக்குள்ள வெளிய போ!" என்றான் சூடாக.


"ஓ... அந்த முக்கியமானவங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்றாள் மது.


"யாரா இருந்தா உனக்கென்ன? உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும்னனு அவசியம் எனக்கில்ல.. என் பொறுமைய சோதிக்காம, உன் வேலை எதுவோ அதை பாரு, இல்ல என் கோபத்துக்கு பலியாகிடுவ" என இரைந்தான்.



அவனது கடும் கோபத்தை கண்டும் சாதாரணமாக சிரித்தவள்..
"நீங்க எதிர்பார்த்து காத்திட்டிருக்கிற இலக்கியா இங்க வரமாட்டா" என அவன் அதிர்ச்சியாகும்படி ஓர் செய்தியினை கூறி அமைதியானவள் முன் வந்தவன்,


"என்ன சொல்லுற? அவ பேரு உனக்கெப்பிடி...! அவளுக்காகத்தான் நான் காத்திட்டிருக்கேன்னு உனக்கு யாரு சொன்னா? எதுக்கு அவ வரமாட்டாளாம்? அப்பிடின்னா வரேன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாளா?" என கோபத்தின் உச்சியில் நின்று கேள்விகளை அவன் அடுக்க,


"ஒரே நேரத்தில இத்தனை கேள்வி கேட்டா.. எந்த கேள்விக்கு பதில் சொல்லுவேன்.? இதுக்கு தான் உக்காருங்க பேசலாம்னேன். இப்போவாவது உட்கார்ந்து பேசுவோமா?" என்றாள் அமர்வான குரலில்.


இலக்கியா தந்த ஏமாற்றத்தை அவனால் தாங்க முடியவில்லை. பின்னே அவன் குணம் தெரிந்தும். வருகிறேன் என கூறி ஏமாற்றினால் சும்மா விட்டுவிடுவானா? இதற்க்கும் சேர்த்து எப்படி பழிதீர்ப்பது என்று அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது அவன் எண்ணம்.


ஆனால் அதற்கு தடை போடுவது போல் எதிரில் நிற்பவள் அவன் பதிலுக்காக காத்திருப்பது தெரிய,


"ம்ம் உக்காரு" என அங்கிருந்த இருக்கையினை இழுத்து அமர்ந்தவன், "எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு" என்றான் இறுக்கமாக.


எதிர் இருக்கையில் அமர்ந்தவள்..


"என் பேரு மதுமிதா.. இலக்கியாவோட அண்ணி" என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.


அவனிடம் எந்த அதிர்வும் இல்லை. மாறாக ஒற்றை இமையின் உயர்வில் அதுக்கு என்பதுபோல் கேள்வியாய் பார்த்தவன்,


"ஓ..... உன்னை சமரசம் பண்ண இங்க அனுப்பி வைச்சிட்டு.. அவ பதுங்கிட்டாளா?" என்றான் நக்கலாக.

"நீங்க என்னை தப்பா நினைச்சிட்டிருக்கிறீங்க சார்! உங்களுக்கு எப்பிடி இலக்கியாவ பிடிக்காதோ. அதை விட பலமடங்கு எனக்கு அவளை பிடிக்காது" என்று அவன் முகத்தை பார்த்தவள், அவன் அவளை சந்தேகமாக பார்ப்பதை கண்டு.


"நம்புங்க சார்.. அந்த குடும்பத்திலயே ரொம்ப திமிர்பிடிச்சவன்னா அவ மாத்திரம் தான்..
அண்ணன் பொண்டாட்டின்னு கொஞ்சம் கூட என்னை மதிக்கிறதில்லை.. எப்போ பாரு ஏட்டிக்கு போட்டி பேசி வம்பு வளர்ப்பா, அது போதாதுன்னு, எனக்கும் கேஷவனுக்கும் நடுவில ஏதாவது பொய்ய சொல்லி சண்டைய இழுத்து விடுவா.. தினமும் வீட்டில இதே தான்.


நாத்தனார் கொடுமைன்னு கேள்விபட்ட காலம் போய்.. அனுபவிச்சிட்டிருக்கேன். வீட்டில அவதான் செல்லம் என்கிறதனால.. எல்லாருமே அவபக்கம் தான். என் பக்கம் இருக்கிற நியாயத்தை யாருமே காது குடுத்து கேக்கிறதில்லை.


உண்மைய சொல்லணும்னா எனக்கு சொந்தம்ன்னு யாருமே இல்லை. கல்யாணம் பண்ணிக்கிட்டு போற வீட்டிலயாவது என் புருஷன் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கணும் என்கிறது தான் என்னோட ஆசை.


ஆனா இந்த இலக்கியா எல்லாத்துக்கும் தடையா இருந்தா.. இவ ஒழிஞ்சா தான் நிம்மதின்னு நினைச்சிட்டிருக்கிறப்போ தான், அன்னைக்கு காலேஜ்ல இருந்து வரப்போ டல்லா வீட்டுக்கு வந்தா.


வீட்டில எல்லாரும் என்னன்னு கேட்டோம், பதில் சொல்லல. அன்னைக்கு வீட்டில போனை வைச்சிட்டு வெளிய போயிட்டா.


எதார்த்தமா அவ ரூம்க்கு போனப்போ தான் அவ போன் பெட்ல இருந்ததை பாத்தேன்.
சும்மா போட்டோஸ் பாக்கலாம்ன்னு கேலரிக்குள்ள போனா.. உங்ககூட அவ கொஞ்சிட்டு இருந்த போட்டோஸ் இருந்திச்சு.
அதை பாத்ததும் அவளை மிரட்ட ஒரு துருப்பு சீட்டு கிடைச்சுதுன்னு சந்தோஷபட்டேன்.


அவ வந்ததும் அந்த படத்தை காட்டி இது என்னன்னு சொல்லு.. இல்ல வீட்டில எல்லாருக்கும் சொல்லிடுவேன்னு மிரட்டி கேட்டேன். அப்போ தான் எல்லாத்தையும் சொன்னா,


அவமேல தப்பில்லன்னாலும், அதை வைச்சு மிரட்டியே என் காரியத்தை சாதிச்சிட்டிருந்தேன்.
போனை கூட அவகையில குடுக்காம நான் தான் வைச்சிட்டிருந்தேன்.


இதோ அவ போன் தான் இது" என தன் கையிலிருந்த போனை தூக்கி அவனிடம் காண்பித்தவள்..


"உங்க கூட குரலை மாத்தி பேசினதும் நான் தான்" என்றவளை அவன் கோபமாக பார்க.


"சாரி சார்! உங்களை ஏமாத்தணும் என்கிறது என்நோக்கமில்ல.. ஆனா அந்த இலக்கியாவை சும்மா விட்டிடாதீங்க..
அதெப்பிடி சார்.. அத்தனை பேரு முன்னாடி ஒரு ஆம்பிளையை அறைவா? அவ திமிருக்கு பெரிய அளவில தண்டனை தரணும். அதுக்கு நீங்க அந்த ஆதாரத்தை அழிச்சிடக்கூடாது.


நான் என்ன சொல்ல வரேன்னா.. உங்க தேவைகளை தீர்த்ததுக்கப்புறம் அதை வைச்சு நீங்க மிரட்டிட்டே இருங்க.. அதுதான் அவளுக்கு சரியான தண்டனையா இருக்கும். அப்போ தான் அந்த வீட்டில நானும் நிம்மதியா இருக்கமுடியும்.. அதுக்காக தான் தனிப்பட்ட முறையில உங்கள பாத்து பேசலாம்ன்னு இலக்கியா மாதிரி பேசி வந்தேன்" என்றவள்.


"எதிரிக்கு எதிரி நண்பன்...." என எதை பேசுவதென்று தெரியாது பேசிக்கொண்டு மது போனாள்.
தன் விஷயத்தில் அதிகபிரசங்கியாக பேசும் அவளையே முறைத்திருந்தவன் செல்போனும் சினுங்கியது.


அதை எடுத்து இலக்கத்தை பார்த்தவனுக்கு.. அது முக்கியமான அழைப்பு இல்லை போல. சைலன்ட் மூடில் போட்டு மேசையின் ஓரமாக வைத்தவன்,


"இங்க பாரு நான் என்ன பண்ணணும்.. என்ன பண்ணக்கூடாதுன்னு எனக்கு நீ சொல்லாத,
எதுவா இருந்தாலும் என் வேலை எனக்கு தெரியும்" என சூடானான் அவன்.


"ஐய்யோ சார் கோவிச்சுகிட்டிங்களா? நான் சொல்ல வந்ததை தப்பா புரிஞ்சுகிட்டீங்க.
அந்த ஆதாரம் இருக்கிற வரையில தான் சார், அவளை நம்ம கட்டுப்படுத்தலாம்.. போன்ல பேசினப்போ உங்க வேலை முடிஞ்சதும் அந்த போட்டோஸ அவகண்ணு முன்னாடி அழிக்கிறேன்னு சொன்னீங்க.


அப்பிடி சென்னது பொய் தானே!" என்க..


"இல்லையே? நான் ஏன் பொய் சொல்லணும்" என அவளை ஒரு மாதிரியாக பார்த்து கேட்டான்.


"ஓ..... புரிஞ்சு போச்சு சார். அவ நம்பணும் என்கிறத்துக்காக.. அவ கண்ணுமுன்னாடியே போன்ல இருக்கிறத அழிச்சிட்டு, அப்புறம் வேற எங்கயாச்சும் சேவ்ல வைச்சிருப்பீங்கல்ல. அதை வைச்சி மிரட்டி நம்ம காரியத்த சாதிச்சுக்கலாம் என்கிறது தானே உங்க பிளான்" என்றாள்.


"உன்னைவிட நான் பரவாயில்ல போலவே! அண்ணி என்ட பெயரில. கூடவே இருந்து குழி பறிக்கிற உன்னை விட, நான் எவ்வளவோ நல்லவன் தான்.


உன்னை போல ஒருத்திய கூடவே வைச்சுக்கிறது எனக்குத்தான் ஆபத்து. அதுவுமில்லாமா உனக்கு உதவு பண்ணோணும் என்டு அவசியம் எனக்கில்ல. எனக்கும் அவளுக்கும் சின்ன பிரச்சினை, அவளை பழி தீர்த்ததும் என்னோட கோபம் தீர்ந்திடும், நான் என்ன சொன்னேனோ அதையே செய்திடுவேன்.. நீ சொல்லுறமாதிரி வேற இடங்கள்ல வைச்சு நம்பிக்கை துரோகம் பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்ல.


உனக்கு அவளை பழி வாங்கியே ஆகணும்ன்னா வேற வழி கண்டு பிடிச்சுக்கோ.. என்னை பகடைகாயா வைச்சு, உன் காரியத்தை சாதிக்க பாத்தா விளைவு மோசமானதா இருக்கும்.
ஏன்னா நீ உன் நாத்தனாரை விட அழகா இருக்க. என்னோட பார்வை எப்பவும் ஒரே மாதிரியா இருக்காது" என்றவன் பார்வை இப்போது அவளை அளவெடுக்க ஆரம்பித்தது.


மதுவிற்கு அது அருவெருப்பாக இருந்தாலும், வந்த வேலை முடியாமல் திரும்ப முடியாதே!


"என்ன சார் விளையாடுறீங்க? இந்த காலத்தில இப்பிடி பேசினா நம்பிடுவேனா? எத்தனையோ சிஸ்டம் வந்ததுக்கு அப்புறமும் போன்ல மட்டும் ஆதாரத்த வைச்சிருக்கேன்னா காமடியா இருக்கு சார்.
அதுவுமில்லாம ஒரு ஆம்பளயோட தேவை ஒருமுறையோட அடங்கிடுமா? நான் தப்பா எடுக்க மாட்டேன் சார்.. வெக்கப்படாம சொல்லுங்க" என கண்சிமிட்டி கேட்க கொலைவெறியே ஆனது அவனுக்கு.


ஆவேசமாய் இருக்கையிலிருந்து எழுந்தவன்,


"ஏய்! முதல்ல யாரு நீ எனக்கு? நானும் சொல்லிட்டிருக்கேன் நீ பேசிட்டே போற,
இலக்கியான்னு ஏமாத்தி வர வைச்சதுக்கே சாவடிச்சிருப்பேன்.. இருக்கட்டுமேன்னு உக்காந்து பேச்சை கேட்டா... ரொம்பத்தான் நோண்டிட்டிருக்க" என கத்தியவன் கத்தலில் வெகுண்டு எழுந்தவள்,


"சாரி சார்.. நீங்க விளையாடுறீங்களோன்னு தான் நினைச்சேன். ஆனா இவ்ளோ கோபப்படுவீங்கன்னு நினைக்கல" என கண்ணீரை திறந்து விட்டாள்.


"நான் போறேன் சார்" என அவனையே திரும்பி திரும்பி பார்த்தவாறு கதவை நோக்கி நடந்தாள்.


கோபத்தை அடக்குவதற்காக கண்களை இறுகமூடி.. விரல்களால் முடியினை மேல்நோக்கி கோதிவிட்டவன் கவனம் திரும்பும் முன், சட்டென மேசை மீதிருந்த போனை தாவி எடுத்து தரையினில் போட்டு உடைத்தாள்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️
மதுமிதா சரியான தில்லாலங்கடி தான் அவனுக்கு தோதா பேசி நிலவரம் என்னனு தெரிஞ்சுகிட்டு அசந்த நேரம் போன் போட்டு உடைச்சிட்டாளே. 🤔🤔🤔🤔🤔
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️
மதுமிதா சரியான தில்லாலங்கடி தான் அவனுக்கு தோதா பேசி நிலவரம் என்னனு தெரிஞ்சுகிட்டு அசந்த நேரம் போன் போட்டு உடைச்சிட்டாளே. 🤔🤔🤔🤔🤔
நன்றி அக்கா
 

Ugina Begum

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
50
nice
 
Top