• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

18. இதயம் பகிர்ந்திட வா

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
684
அன்னை பூஸ்ட் ஆத்தி வைத்திருப்பார் என நினைத்து, ஐந்து நிமிட தாமதத்தின் பின்னர் கிச்சன் நுழைந்தவனை எதிர் பார்த்தது போல், கிச்சன் வாசலை நெருங்கவில்லை அவன், கையிலிருந்த தோசை கரண்டியால் மண்டை மேல் ஒன்று போட்டவர்,


"எரும எரும... என்னை பார்த்தா வேலைக்காரி மாதிரியா தெரியுறேன். உக்காந்த இடத்திலயிருந்தே ஏவிட்டிருக்க... இதில அந்த மகாராசனுக்கு காஃபி பிடிக்காதம்... பூஸ்ட் தான் குடிப்பாராம். நான் என்ன டீகடையா நடத்துறேன். அதில்லன்னா இதுன்னு போட.." மேலும் ரெண்டு போட்டவர் கையினை அடி படாது லாவகமாக பற்றியவன்,


"ம்மா... பேச்சு பேச்சா இருக்கணும். நோ வைலன்ஸ்... இப்போ என்ன...? உன்னால பூஸ்ட் போட முடியாதா..? விடு நான் போடுறேன்." தாயை ஒதுக்கி விட்டு, பூஸ்ட் போட தயாரனவனை கிச்சன் மேட்டின் அருகில் நிற்காது தள்ளி விட்டவர்,

"உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்காடா..? இப்போ என்ன நேரம்ன்னு அந்த பயல இங்க அழைச்சிட்டு வந்த...? எத்தனை தடவை சொன்னாலும் காதில ஏறாதா உனக்கு.? இன்னும் கொஞ்ச நேரத்தில, ஆந்தை அலற ஆரம்பிச்சிடும். பகல்ல நாலு சனம் வீட்டுக்கு வந்தாலே நரம்பில்லாத நாக்கால புறணி பேசுற ஊர். நீ என்னடான்னா சாமத்தில, அதுவும் வயசுக்கு வந்த பொண்ணிருக்கிற இடத்தில அழைச்சிட்டு வந்திருக்க..


தசரதா இது தான் உனக்கு முதலும் கடைசியும். இனிமே இந்த மாதிரி யாரையாச்சும் நேரம் கெட்ட நேரத்தில அழைச்சிட்டு வந்தேன்னு வையி! உன்னையும் அவங்க கூட போன்னு துரத்தி விட்டிடுறேன் பார்த்துக்கோ." எச்சரித்தவாறு பூஸ்டை போட்டு, மேடை மேல் டம்ளர் அடிபட தொம்மென வைத்தார்.


"எடுத்துட்டு போய் அந்த மாடுட்ட குடு! குடிச்சிட்டு சிக்கிரம் இடத்தை காலி பண்ணட்டும். நீ தான் நேரம் கெட்ட நேரத்தி கூப்பிடுறேனனா... வரவனுக்கு அறிவு வேணாம்" திட்டியவாறே தன் வேலையினை பார்க்கத் ஆரம்பித்தவரையும், அவர் வைத்த வைப்பில், தழும்பிய பூஸ்டையும் சிறு வினாடி பார்த்திருந்தவன்,


"ம்மோய்... கையுக்கு மட்டும் வேலை குடுக்காம, அந்த காது சும்மா தானே கிடக்குது? அதுக்கும் கொஞ்சம் வேலை குடும்மா!" கூறிவிட்டு டம்ளரை எடுத்துக் கொண்டு சென்றவன் உதடுகளோ,

"வெளிய விருந்தோம்பல்ன்னா என்னன்னு பக்கம் பக்கமா அவ பாடம் நடத்திட்டிருக்கா.. இங்க இவங்களோட விருந்தோம்பல் பண்பில கிச்சன் அதிருது. ஊருக்கு தான் உபதேசம் போல." முனுமுனுத்து சென்றவன் பேச்சு அவருக்கு கேட்காமல் இல்லை.
ஆனால் நாளுக்கு ஒருவன் என்று அழைத்து வருபவனை எல்லாம், பந்தியில் உக்கார வைத்து விருந்து உபச்சாரமா செய்ய முடியும்?

இரண்டு நாட்கள் கடந்திருக்கும், மதியம் ஒன்று முற்பதை எட்டியிருந்தது. தன் நண்பனான சந்ரூவோடு வீட்டுக்குள் நுழைந்தவனை கண்டு கொள்ளவே இல்லை அவன் தாயான காஞ்சனா.


"என்னங்க... அந்த போட்டோவ அப்பிடி வைச்சிட்டு, இந்த போட்டோவ பாருங்க. இந்த பையன் அவனை விட ரொம்ப அழகா இருக்கானுங்க. தெரிஞ்ச பையன் வேற, பெரிய படிப்பெல்லாம் படிச்சு, பதவியில இருக்கானாம்... இந்த பையனையே ஓகே சொல்லிடுவோமா...?" என்றவர் கண்கள் பிரகாசித்ததை வாசலில் வரும் போதே கண்டவன், நண்பன் இருக்க ஒரு இருக்கையை அவன் புறம் நகர்த்தி விட்டு,


"என்ன..? தம்பதிகள் சமேத ஏதோ பார்த்திட்டு இருக்கிங்க..!" என எப்போதும் போல், கேலி செய்தவாறு பெற்றவர்களுக்கு நடுவில் வந்தமர்ந்தவன், அவர்கள் கையிலிருந்த புகைப்படங்களை கண்டு விட்டு,


"ஓ.... வரன் பார்க்காறீங்களா..? அதான் பனை மரம் போல ரெண்டு உடுவம் கண்ணுக்கு முன்னாடி வந்து நின்னும், கண்டுக்கலையோ! ஆமா இதெல்லாம் இப்போ எதுக்கு பார்த்துட்டு...? அதை ஓரமா தூக்கி போட்டுட்டு, சாப்பாட்டை போடும்மா... ரொம்ப பசிக்குது." அவனுக்கு அவன் பிரச்சினை.

"அக்கா வாழ்க்கைய விட உனக்கு சோறு தான் முக்கியமா..? உனக்கு வேணும்னா நீ போய் கொட்டிக்க..." என்றார் பொறுப்பில்லாது மகன் பேசியதில் எரிச்சல் கொண்டு.


"பேப்பர மட்டும் கலர் கலரா மாத்துறீங்களே தவிர, கொஸ்டின மாத்துறீங்க இல்லையேம்மா... கொஸ்டின் பேப்பர் அவுட்டான அன்னைக்கே, ஆன்சரும் லீக் ஆகிடிச்சே.. அப்புறம் என்ன?
கொஸ்டின்ன மாத்துங்க, பதிலும் மாறும்." என்றவன் முதுகில் ஒன்று வைத்தவர்,


"ஆரம்பிக்க முன்னாடி நச்சு பல்லி மாதிரி சொல்லாத எரும... அவ மட்டும் இந்த பையனை பிடிக்கலன்னு சொல்லட்டும், வாய் மேலயே மிதிப்பேன்." என்றார் முண்டிய எரிச்சலை மறைக்காது.


பின்னே என்ன? எப்போதாவது ஒரு முறை இப்படி பேசினால் பரவாயில்லை. எப்போது மாப்பிள்ளை பார்ப்போம் என்று போட்டோவை தூக்கினாலும், இப்படி அபசகுனமாக வாய் வைத்து விடுவான். அவன் வாய் வைத்த நேரமோ என்னமோ, அன்று பாரதியுடன் பெரும் தர்க்கமே நடக்கும் தாய்க்கும் மகளுக்கும். தந்தை பழணிசாமி நாசுக்காக எதிலும் சிக்காது நழுவிக் கொண்டு விடுவார்.

மகளுக்கு பிடித்த தந்தை ஆயிற்றே! அவளுக்கு பிடிக்காத காரியத்தை முன்னின்று செய்து விடுவாரா?

"ஆ... ஊன்னா என்கிட்ட வாங்க... அவ கல்யாணம் வேண்டாம்.. இந்த ஏரியாவில இருக்கிற கஷ்டப்படுற நாட்பது குழந்தைங்களை தத்தெடுத்து வளர்க்கப் போறேன். என்னோட நோக்கம் எல்லாம் என்னால நாலு பேரு வாழணும் என்கிறது தான். இப்போ நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, என் புள்ள என் புருஷன்னு சுயநலமா மட்டும் தான் மனசு சிந்திக்கும். அதனால கல்யாண பேச்சையே என்கிட்ட எடுக்காதிங்கன்னு கறார பேசுற அவகிட்ட இந்த வீரம் எல்லாம் வராதே!" என்றான் தன்னை பொல்லாதவன் ஆக்கும் தாயின் பேச்சில்.


"அவகூட பேச முடியுமா...? இந்த ஊருக்கு எப்போ விடிவு வருதோ அப்போ தான் அவளோட எண்ணமும் மாறும். நாசமா போன அரசாங்கம். எப்போ தான் எங்களுக்கு ஓட்டுரிமையை கொடுக்க போகுதோ!" புலம்பவே ஆரம்பித்து விட்டார்.


ஆம்.. அந்த மலை கிராமமானது அயல் நாட்டு மக்களால் நிரப்பப்பட்ட ஒரு கிராமம். வெள்ளை இனத்தவன் நாட்டை ஆட்சி செய்த போது, வடக்கே உள்ள நாட்டிலிருந்து அடிமைகளாக குறிப்பிட்ட மக்களை அழைத்து வந்து, அவர்களுக்கென அங்காெரு இடமும் ஒதுக்கி, பெருந்தோட்ட பயிரான தேயிலை கொய்யும் வேலையினை வாங்கினார்கள். அவர்களும் அங்கேயே தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில் தான், வெள்ளையனும் நாட்டை விட்டு வெளியேறினான். அந்த தொழிலுக்கும், சூழலுக்கும் வாழ்ந்து பழகிய மக்களால், வெள்ளையன் போல் சட்டென அந்த நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை.

மக்கள் அங்கேயே தங்கியிருந்து செய்த வேலையினையே செய்து வருகின்றனர்.
என்ன தான் அந்த நாட்டின் பொருளாதாரத்துக்காக அவர்களை அந்த நாட்டின் அரசு பாவித்தாலும், அவர்களுக்கு என்று ஓட்டுரிமையோ, நிரந்தர நிலமோ அங்கில்லை. அடி மட்டக் கூலிக்கே அவர்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தனர். அதனால் அங்கிருக்கும் மக்களின் நிலையோ சொல்லவே தேவையில்லை. ஒரு நாள் கூலி வேலையினை விட்டு விட்டால் மறு நாள் சாப்பாட்டுக்கு மிகவும் சிரமத்தை எதிர் நோக்க வேண்டிவரும், இந்த நிலையில் பிள்ளைகளை எப்படி பள்ளிக்கு அனுப்ப முடியும்?


ஆனால் பிரியாவின் குடும்பம் ஏதோ முட்டி மோதி மேலே வந்திருந்தது. அதற்கு முக்கிய காரணம் பிரியாவின் அன்னை ஆசிரியர். தந்தை மலிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதனாலேயே அந்த கிராமத்தில் ஓரளவிற்கு செல்வம் படைத்த குடும்பமாக அவர்கள் குடம்பம் இருந்தது.


பிரியாவிற்கு தம்மை போல் இருக்கும் சமூகத்தை முன்னோக்கி உயர்த்த வேண்டும் என்ற ஆசை சின்ன வயதிலேயே தோன்றியதால், அதிலேயே தன் மாெத்தக் கவனத்தையும் திசை திருப்ப ஆரம்பித்தாள். அதற்கு அஸ்திவாரமாகத்தான் ஆசிரியர் பணியினை தேர்ந்தெடுத்தாள்.


"புலம்பாதம்மா... இப்போ என்ன உனக்கு...? கல்யாணத்துக்கு சம்மதிக்கணும் அவ்வளவு தானே! நான் சம்மதிக்கிறேன்ம்மா.. எனக்கு ஒரு அழகான பொண்ணா பாரு...!" என்றவனது ஆரம்பப் பேச்சில், தமக்கையை ஏதாவது செய்து சம்மதிக்க வைப்பான் என்று ஆனந்தம் கொண்டவர் முகமோ, அவனது இறுதிப் பேச்சில் இறுகிப் போனது.

"உனக்குத்தான் வயசு போயிட்டு இருக்கு பாரு... கல்யாணம் பண்ணி வைக்க." என்றார் எரிச்சாய்.


"அவளை விட எனக்கு ரெண்டு வயசு தான்ம்மா கம்மி.. ஏதோ பத்து வயசு கம்மி மாதிரி பேசுறீங்க. எனக்கும் கல்யாண வயசு தான்." என்றவன் உதடுகளோ,


"பேரு மட்டும் தான் தசரதன்... ஆனா இங்க ஒத்தை பொண்டாட்டிக்கு வழியில்ல... ஒரு வேளை வேண்டாம் வேண்டாம்ன்னு சொன்னா தான், வற்புறுத்தி பண்ணி வைப்பாங்களோ.. சரி நமக்கில்லன்னு ஆகிப்பாச்சு... சீக்கிரம் இங்க இருந்து கிளம்பிடலாம் வா சந்ரூ... சோத்துக்கு காத்திருந்தோம்னா... அந்த பத்திரகாளியோட ஆட்டத்தில உயிருக்கு உத்தரவாதம் இருக்காது.. எவ்ளோ சீக்கிரம் இங்க இருந்து கிளம்புறமோ அந்த அளவுக்கு நல்லது." என சந்ரூவை அவசரமாக அழைத்துச் சென்றவன் பிடரியையே முறைத்திருந்தார் காஞ்சனா."என்னங்க இவன் இப்பிடிவாய் வைச்சுட்டான்... இப்போ இந்த விஷயத்தை அவகிட்ட சொல்லுவோமா?" கவலையாக கேட்டவர் முகத்தில் தெரிந்த அவ நம்பிக்கையை கண்ட பழணிச்சாமி.


"அவனை பத்தி தான் தெரியுமே உனக்கு.. எப்போ தான் அவன் சரியா பேசிருக்கான் இன்னைக்கு சரியா பேசுறதுக்கு? அவனை கணக்கில எடுக்காமா, இன்னைக்கே கேட்டிடுவோம் கஞ்சனா... பையன் நல்ல பையன். இன்னார் தான் உனக்கு பார்த்திருக்கிற பையன்னா, அவளே ஒத்துப்பா பாரேன்." நம்பாக்கையோடு கூறியவர் பேச்சில் தெளிந்தவரோ,

"ஏதோ... உங்களை நம்பி பேச்சை ஆரம்பிக்கிறேன். அப்புறம் அவளுக்கு சப்போர்ட் பண்றேன்னு பாதியில கழண்டுக்க கூடாது." கணவனின் குணம் தெரிந்தவராய், நிபர்ந்தனைகளுடனே மகளின் வரவை எதிர் பார்த்து காத்திருந்தார்.

மலைக் கிராமத்தின் நுழைய முடியாத சந்து பொந்துகளுக்குள் நுழைந்த ஜீப்பிலிருந்து இறங்கினாள் பாரதி.

"அண்ணா... இந்த கிராமத்துக்கு பஸ் இல்லை என்கிறதனால தான், ஊர் மக்கள் எல்லாரும் அரசாங்கத்திட்ட பேசி, ஜீப்பையாவது விட வைச்சோம். கரடு முரடாண பாதையில இப்பிடியா வண்டிய ஓட்டுவீங்க. கொச்சம் சறுக்கிச்சுதுன்னாக் கூட அவ்ளோ தான். யாரும் மிஞ்ச மாட்டோம்.

அப்பாடி உங்களுக்கு ஏதாவது அவசர வேலை இருந்தா பரவாயில்லை. பசங்கள இங்கேயே இறக்கி விட்டுட்டு போங்க. என்ன கொஞ்சக் கொஞ்ச தூரம் தானே நடந்து போயிடுவாங்க. அவசரத்தில ஓட்டி வண்டியை கவுத்துட்டா, அவங்கள பெத்தவங்க நிலை தான் பாவம். பார்த்து போங்க." டிரைவரை எச்சரித்தவாறு, தன்னுடன் வந்த மாணவர்களுக்கு கையசைத்து விடை கொடுத்தவள், தன் வீடு செல்லும் அந்த ஒற்றையடி பாதையினை நோக்கி விரைந்தாள்.


அந்த பாதையின் முடிவிடம் தான் அவள் வீடு. அங்கு வசிப்பவர்கள் வீட்டிற்கு கேட்டுகள் கிடையாது. கேட்டுகள் என்ன.. வீட்டில் இருந்து இறங்கினாலே மண் தெருத் தான்.


ஆம் அக்கிர காரத்து வீடுகள் எப்படி இருக்குமோ அதே போலொரு தோற்றத்தை தான் கொடுக்கும் அந்த கிராமம். எல்லைகள் என்பது இல்லாது ஒரு வீட்டின் முடிவில் இன்னொரு வீட்டின் தொடக்கமிருக்கும். அதுவும் உயரம் குறைந்த வசதிகள் அற்ற ஒரு கிலோ மீட்டருக்கள் நீண்டு கொண்டே போகும் வீடுகள். நல்ல வேளை மலை கிராமம் என்பதால், வெப்பம் அவ்வளவாக இருப்பதில்லை. வெப்பம் மட்டும் பிற மாணிலம் போல் இருந்திருந்தால், பொசுங்கித் தான் போயிருக்க வேண்டும்.

எங்கோ ஓர் வீட்டின் முன் தான் முற்றம் என்பதையே காணலாம். அதுவும் பறைகள் நிறைந்திருக்கும். வழக்கப்படுத்தியது போல், காலை கழுவி விட்டு வீட்டுக்கள் நுழைந்தவளை கண்ட பழணிசாமி.

"உன் பொண்ணு வரா... உன் பொண்ணு வரா" அவசரமாக மனைவிக்கு மட்டும் கேட்பது போல் கூறி விட்டு, எழுந்து உள்ளே ஓட முயற்சி செய்தவர் கையினை இறுக பிடித்து நகர விடாது, கூடவே அமர வைத்தவரன விழிகளோ, மகளின் மனநிலையினை அறிய அவளது முகத்தில் நிலைத்தது.


உண்மை தான்... பள்ளி முடிந்து வரும் போது, ஆசிரியர் யாரும் நல்ல மனநிலையில் இருக்க மாட்டார்கள் என்பதை முற்பது ஆண்டுகள் பணி புரிந்து ஓய்விலிருக்கும் காஞ்சனா அறிய மாட்டாளா?
போட்டிக்கு பஞ்சமில்லாத உலகம். அதிலும் ஒரு பிள்ளையை சமாளிப்பதற்கே தலை உருண்டு கீழே விழுந்து விடும். வகுப்பிற்கு முப்பது குழந்தைகள் எனும் போது, மண்டை சூடாகி, பீபியே எகிறி விடுமே!
குழப்பம் என்பது இல்லாத தெளிந்த முகம் தான். கை பையினை மாட்ட வேண்டிய ஆணியில் மாட்டியவள் கண்களில், தன்னையே அவதாணித்துக் கொண்டிருந்த இருவரும் விழ,


"என்ன ரெண்டு பேரும் ஒட்டிட்டிருக்கிங்க.. கடைக்கு லீவ் போட்டாச்சோ?" என்றாள் தந்தையை பார்த்து.


"அது.. அது....." பயத்தில் முந்திக் கொண்ட பழணிச்சாமியின் கையினை சட்டென பிடித்து அடக்கிய காஞ்சனா,

"அவருக்கு எப்போ வேலை இல்லாம இருந்திருக்கும்மா.. மதியத்துக்கு சாப்பிட வந்தாரு... நான் தான் மறிச்சு வைச்சிருக்கேன்." உள்ளே என்னாகுமோ என்ற பயம் இருந்தாலும், இலகுவாக பேசினார்.


"ஓ... ஆனா எதுக்கு அப்பாவ புடிச்சு வைச்சிருக்கிங்க.?"

"அவரை விடு! நீ சொல்லு... ஸ்கூல் இன்னைக்கு எப்பிடி போச்சு.?" என்றார் சூழ்நிலை தெரிந்து வாயை விடுவோம் என்ற எண்ணத்தில்.


"அது எப்பவும் போல தான்... முதல்ல பூசி மெழுகாம விசயத்துக்கு வாம்மா..." விபரம் தெரியாத குழந்தையா அவள்.

"அது.. அது வந்து... உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கோம். உனக்குக் கூட அவரை நல்லா தெரியும். படிச்சு பெரிய பதவியில இருக்காரும்மா... உனக்கு பையன புடிச்சிருந்தா ஓகே பண்ணிடலாம்." என்றவாறு புடவைக்குள் மறைத்து வைத்திருந்த புகைப்படத்தை அவளிடம் எடுத்து நீட்டினார்.


அதை பார்க்காமலே கோபமாகத் தட்டி விட்டவள், "எத்தனை தடவை கேட்டாலும் என்னோட பதில் முடியாதும்மா.. இதுக்கு மேல இந்த பேச்சை எடுத்துக் கிட்டு என்கிட்ட வராதிங்க." மேலே பேசப்பிடிக்காது திரும்பியவள் கையினை போகாது பற்றிய காஞ்சனா..


"என்னடி பிடிக்கல.. இல்லை என்ன தான் பிடிக்கல என்கிறன்..? நீ பாட்டுக்கு பைத்தியக்காரி போல, கல்யாணமே வேண்டாம் என்கிறியே! நாங்களும் உன்னோட உப்புச் சப்பு இல்லாத காரணத்தை கேட்டுட்டு இருக்கணுமா..? இல்லன்னா வாசலை தாண்டினதும், வயசுக்கு வந்த பொண்ண வீட்டிலயே வைச்சிருக்கிங்களே, எப்போ நல்லது செய்து பார்க்கப் போறீங்கன்னு கேட்கிறவங்களுக்கு, நீ சொன்ன உப்பு சப்பில்லாத காரணத்த எங்களால சொல்ல முடியுமாடி..? சொன்னா சிரிப்பாங்க..

இதை பாரு.. எங்களால உன்னை போல பொது நலமா எல்லாம் யோசிக்க முடியாது. எங்களுக்கும் எங்க பொண்ணுக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சு, பேரன் பேத்தியை கொஞ்சணும் அவ்ளோ தான்." விடாப்பிடியாக நின்றவரை முறைத்தவள்,


"உனக்கு என்ன பேரன் பேத்திய கொஞ்சணும் அவ்ளோ தானே! அப்பிடின்னா உன் பையனுக்கு கட்டி வை! என்னை தொல்லை பண்ணாத..." அவளும் அவள் முடிவிலிருந்து மாறுவதாக இல்லை.


"ஆஹாஹா... என்ற அறிவு பூர்வமான பேச்சு. பொட்டச்சிய வீட்டுக்க வைச்சிட்டு, அவனுக்கு எப்பிடிடி கட்டி வைக்க முடியும். ஊர் மூக்கால சிரிக்கும். வயசுக்கு வந்த பொண்ண வீட்டில வைச்சுக்கிட்டு, முந்தானையில நொருப்ப சுத்தியிருக்கிற மாதிரி நாங்க படுற பாடு எங்களுக்குத் தான் தெரியும். உனக்கு இதெல்லாம் எங்கடி தெரிய போகுது." என்றவர் ஆரம்பிக்கும் போது சத்தமாக தான் ஆரம்பித்தார். இடையில் என்ன தான் சொன்னாலும் மகள் தன் பிடிவாதத்திலேயே நிற்பதில் அவரையும் அறியாது அழுகை வந்து விட, புடவை தகைப்பினால் மூக்கினை உறிஞ்சியவர் நிலை உணர்ந்த பழணிச்சாமி.

"அழாத காஞ்சு... அவ படிச்ச பொண்ணு. நம்மளோட மனநிலை என்னன்னு அவ புரிஞ்சுப்பா..." அரவணைத்தவாறு அழைத்து வந்து இருக்கையில் இருத்தியவர் தோள்களில் ஆதரவாக சாய்ந்து கொண்டவர்,


"அந்த தம்பி ரொம்ப நல்ல தம்பிங்க... இவ மட்டும் சரின்னு சொன்னான்னா.. இந்த ஊரையில்ல... இன்னும் எந்தெந்த ஊர்ல கஷ்டப்பட்டுட்டு நம்ம ஆட்கள் இருக்காங்களோ, அவங்களுக்கு எல்லாம் அந்த தம்பியே உதவி செய்வாரு." என்று மீண்டும் மூக்கினை உறிஞ்சியவரையும், அவர் பேச்சில் தன்னை நிமிர்ந்து பார்த்த தந்தையையும் பார்த்திருந்தவளுக்கு, பெற்றவர்கள் மனம் புரியாமல் இல்லை.


ஆனால் இது எப்படி சாத்தியமாகும்? அரசாங்கமே கை விட்ட ஒரு கிராமத்தை, தனி ஒருவனால் முன்னேற்றிட முடியுமா...? அது சாத்தியம் போல் தெரியாததனால், அதற்கு மேல் அவர்கள் முன் நின்று, தாயரின் கண்ணீரை அதிகரிக்க விரும்பாது உள்ளே சென்று விட்டாள்.
 
Top