• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

19. உறவாக வருவாயா.?

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
ஆனால் இப்போது தன் தவறை ஒத்துக்கொண்டாளே ஆனால் இங்கிருந்து வெளியேற முடியாது போய்விடும் என சரியாக கணித்தவள்,

"சரி நீங்க என்னை தப்பா நினைக்கலன்னே வைச்சுப்போம்.. உங்க வீட்டுக்காரங்களும், அதை மாதிரி நினைப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? நிச்சயமா அதுக்கு வாய்ப்பே இல்லை..

ஏன்னா அந்த நேரம் எல்லார் முகத்தையும் நான் பாத்தேன்.. எல்லார் பார்வையுமே என்னை குற்றம் சுமத்துற மாதிரித்தான் இருந்திச்சு.
யாருக்குமே நான் இப்பிடி பண்ணிருக்க மாட்டேன்னு எனக்கு சப்போர்ட்டா பேசல..


ஒரே வீட்டில இருந்துகொண்டு.. பண்ணாத குற்றத்துக்காக கூனிக்குறுகி, முகத்தை திருப்பிட்டு போறவங்க மத்தியில இருக்க என்னால முடியாது.. இது எல்லாத்தையும் யோசிச்சுத்தான் வீட்டை விட்டு போனேன்" என்றாள் மிக இலகுவாக,


"அவங்க உன்னை புரிஞ்சுக்கலன்னா என்ன? நடந்தது என்னன்னு சொல்லு.. நான் அவங்களுக்கு எடுத்து சொல்லி புரியவைக்கிறேன்" என்றான்.

"யாரு? நீங்க புரிய வைப்பீங்களா?" என நக்கலாக நகைத்தவள்,

"எப்பிடி புரியவைப்பீங்க? உங்களுக்கு தான் தன்மானம் ரொம்ப அதிகமாச்சே! காரணமே இல்லாம, எல்லாரையும் ஒதுக்கி வைச்சிட்டு.. கடமையேன்னு பேசிட்டிருக்கிற உங்க பேச்சை யாரு கேப்பாங்க?


உங்களுக்கு ஒரு விஷயம் மறந்து போச்சுன்னு நினைக்கிறேன்.. இந்த வீட்டில நீங்க ஒரு மெம்பர் கிடையாது. மாதம் மாதம் காசு குடுத்து வாடகைக்கு தங்கியிருக்க சாதாரண ஒரு நபர்.


உங்களோட அதிகார பேச்சை அம்மாவும், பாட்டியும் ஒரு வேளை கேக்கலாம்.. உங்க அப்பா கேட்பாருன்னு நினைக்காதிங்க.


உள்ள வரும்போது அவரை நான் கவனிச்சிட்டு தான் வந்தேன்.. அவர் என்னை பார்த்த பார்வையில அவ்ளோ அருவெறுப்பு. மத்தவங்க உங்களுக்காக என்னை சகிச்சுக்கிட்டாலும்.. உங்க அப்பா நிச்சயமா அனுமதிக்கவே மாட்டாரு. அவரா என்னை துரத்துறதுக்கு முன்னாடி நானா போறது தான் எனக்கு மரியாதை" என்றாள்.


"துரத்திடுவாரா அவரு...? உன்னை துரத்துற அளவுக்கு அவரென்ன பெரிய உத்தமனா? இங்க உள்ளவங்கள வேனா அவரு ஏமாத்தலாம்.. ஆனா அவர் சுயரூபம் தெரிஞ்ச என்னை ஏமாத்த முடியாது.


யாரோ பெத்த பிள்ளைக்கு இன்னைக்கு நான் அப்பனா இருக்கிறதுக்கு காரணமே அந்தாள் தான்!" என ஏதேதோ சொல்லிக்கொண்டு போனவனை மது புரியாது கூர்ந்து பார்க்க,

அவளது கூரிய பார்வையில் கோபத்தில் விட்ட வார்த்தைகள் தாமதமாகத்தான் அவனுக்கே புரிந்தது. உடனே தன் பேச்சை அப்படியே நிறுத்தியவன்,


"அது... நான்…" என தடுமாற தொடங்கினான்.

"என்ன அது? அப்போ ஸ்ரீ உங்க பொண்ணு இல்லையா?" என்றாள் வார்த்தையில் அழுத்தத்தை கொண்டுவந்து.
என்ன கூறி சமாளிக்கலாம் என திணறியவன் பின் ஓர் முடிவினை எடுத்தவனாய்,


"ஆமா! ஸ்ரீ என் பொண்ணு இல்ல.. இவ ஒரு பாவப்பட்ட அப்பாவியோட பொண்ணு.
நான் பாரின்ல இருக்கிறப்போ பேஸ்புக்ல மேனன் என்கிற ஃப்ரெண்ட் அறிமுகமானான்.

அவனோட டேஸ்ட்டும் என்னோட டேஸ்ட்டும் எப்பவுமே ஒரே மாதிரி இருக்கும்.. அதனாலயே அவன்கூட பேசணும் என்கிற ஆவல்ல பேச ஆரம்பிச்சேன்.
சிவாவ மாதிரி ரொம்ப குளோஸ் இல்லன்னாலும், அவனும் நல்லா பழக ஆரம்பிச்சான். தினமும் ஒருவேளையாவது பேசிடுவோம். அன்னைக்கு அவன்கூட வீடியோ கால் பேசிட்டிருக்கிறப்போ தான் அவளை பாத்தேன்.


பிங்க் கலர் சல்வார்ல, அவ பேச்ச கேக்கமாட்டேன்னு திரும்பத்திரும்ப அடம்பிடிச்சு.. கன்னத்தை உரசிட்டிருந்த அந்த கூந்தல காதுக்குள்ள திணிச்சு விட்டுட்டே யார்கூடவே சிரிச்சு சிரிச்சு சுவாரஷ்யமா பேசிட்டிருந்த அந்த தேவதையை.


அவளை பார்த்த அந்த நொடியில இருந்து... என்னோட கண்ணும், கவனமும் அவகிட்ட மாத்திரம் தான் இருந்திச்சு.

அவ்வளவுக்கு அவ என்னை ஈர்த்துட்டா.
அதுக்குள்ள மேனன் என்னமோ எல்லாம் பேசிருக்கான்.. ஆனா எனக்குத்தான் என்ன பேசினான்னு தெரியல.


"டேய் எருமை மாடே!" என்ற அதட்டல் குரலில் தான் நினைவு திரும்பி பேந்த முழிக்க ஆரம்பித்தவனை கண்டு,


"என்னடா உனக்கு ஆச்சு? உன் கவனமெல்லாம் எங்க இருக்கு? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?" என கேட்டவனுக்கு, தன் பின்னால் இருந்தவளால் தான் அவன் தடமாறிப்போனான் என்பதை அறியவில்லை.


"எதுவுமில்லைடா!" என சமாளித்தவன்.. ஆமா இன்னைக்கு என்ன உன் வீட்டில வழமைக்கு மாறா சத்தமா இருக்கு" என்றான்.


"ஆமாடா இங்க இப்போ எலக்சனினால மூணு நாளைக்கு ஸ்கூல் லீவுடா! எங்க வீட்டு குட்டிச்சாத்தான் இருக்குல்ல.. அது தன்கூட ஒரு வானரத்தையும் அழைச்சிட்டு வந்து வீட்டை ரெண்டாக்கிட்டிருக்கு. வீட்டில போன் கூட நிம்மதியா பேச முடியல... மூணு நாளைக்கு என்பாடு மோசம்தான்." என்றான் கவலையாக,


என்னடா சொல்லுற? மூணு நாளும் உன் வீட்டிலயா? அவங்க வீட்டில அதுக்கு ஒத்துப்பாங்களா?
அதெல்லாம் எனக்கு தெரியாதுடா! அவ ஸ்கூல் ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறா போலருக்கு... லீவ் நாள்ன்னா குட்டிச்சாத்தான் அழைச்சிட்டு வந்திடும்." என அவள் கதையினை சப்பென முடிக்க,


"ஏன்டா எருமை மாடே! வீட்டுக்கு ஒருதங்க வந்தா, அவங்கள பத்தி எதுவும் தெரிஞ்சுக்க மாட்டியா?" என கடுகடுத்தவனிடம்,


"எனக்கு எதுக்குடா இதெல்லாம்? அதை விட்டிட்டு,
நீ சொல்லு படிப்பெல்லாம் எப்பிடி போகுதுன்னு" என்றான்.

அவன் கவனம் முழுவதும் பின்னால் இருந்தவளிடம் சென்றதனால், கடமையே என அவன் கேள்விகளுக்கு ஒற்றை வரியில் பதிலுரைத்தவாறு இருந்தான் கேஷவன்.


"நேரம் ரெண்டாகுது.. சாப்பாட்டை மறந்து அப்பிடி என்னத்தை தான் ஓயாம பேசிட்டிருப்பீங்களோ?
ஏன்ம்மா மயூரி, உனக்குமா பசிக்கல?" என கேட்டவாறு வந்த மேனனின் அன்னை பேச்சில் அவள் பெயரை மாத்திரம் மனதில் சேமித்துக்கொண்டவன்,


"மயூரி....." ரொம்ப அழகான பேரு.. என சிந்தனை வயப்பட்டவனை மீண்டும் கலைத்தது மேனனின் குரல்.


"டேய் ஏன்டா....! என்னை கத்த வைக்கிற? கிட்டக்கா இருந்தேன்னாலும், மண்டை மேலயே கொட்டி உன் பித்தம் தெளியவைச்சிருப்பேன். எங்கேயோ இருந்திட்டு என்னை சாவடிக்கிறியேடா!" என அழாத குறையாக சொன்னவன்,


"சரிடா மச்சான், உன்கூட கத்தியே எனக்கு பேட்டரி லோ ஆகிடிச்சு, சாப்பிட்டு சார்ஜ் ஏத்திட்டு வந்து பேசிக்கிறேன்" என போனை வைத்தான்.
அவன் போனினை வைத்ததும் அவன் சிந்தை முழுவதும் மயூரியே இடம் பிடித்திருந்தாள். அவள் புன்னகையின் வசீகரமும், அடிக்கடி அந்த முடியினை வெண்டை பிஞ்சு விரல்களால் கோதிவிடும் அழகுமே கண்முன் வந்து இம்சிக்க.. அவளை அடிக்கடி பதிவு செய்ய வேண்டுமென்று அவன் விழிகள் ஏங்கத்தொடங்கியது.


அதனாலோ என்னவோ...! அந்த மூன்று நாட்களுக்குள், முன்னூறு முறை மேனன் போன் வெடிக்கும் அளவிற்கு அழைத்துவிட்டான். ஆனால் ஒரு சில தடவைகள் மாத்திரமே அவள் தரிசனம் அவனுக்கு கிடைத்தது.


ஆறு மாதங்கள் அவளது நினைவிலேயே நாட்களை நகர்த்தியவன்.. வெளிநாட்டுக் கல்வியும் நிறைவு பெற, யாரிடமும் கூறாது மனதில் மறைத்து வைத்திருந்த காதலை அவளிடம் நேரில் கண்டு கூற பறந்து வந்து விட்டான் கேஷவன்.


பலவருடங்கள் கடந்து ஊருக்கு வந்தவனை வீட்டினர் தாங்கிப்பிடிக்க, அவர்கள் மனம்புரிந்து சிறிது நாட்கள் தன் காதலியை காணும் ஆசையினை ஒதுக்கி வைத்தவனுக்கு.. பதினைந்து நாட்களுக்கு மேல அது முடியவில்லை.


அதனாலயே ஊரிலுள்ள நண்பன் ஒருவனை பார்க்கப்போவதாக கூறிவிட்டு புறப்பட்டு விட்டான்.
வீடுதேடி வந்தவனை இன்முகத்தோடு உபசரித்த நண்பன் குடும்பத்தினரை நலம் விசாரித்து சிறுதுநேரம் பேசியவன், யாருமற்ற தனிமையில் மயூரி பற்றி மேனனிடம் கேட்டான்.


பாவம் கேஷவன்...
இத்தனை மைல் கடந்து, தன்னவளை காண ஆசையோடு வந்தவனுக்கு.. கிடைத்த செய்தி அவள் யாரோ ஒருவனை காதலித்து அவனுடன் ஓடிவிட்டாள் என்பது தான்.


அந்த செய்தியினை கேட்டதும் ஒரு புறம் ஏமாற்றமாக இருந்தாலும், ஏனோ அது உண்மையாக இருக்காது என்றே தோன்றியது.


ஒருவரை பார்த்தமட்டில் இவர்கள் இப்படித்தான் என எளிதில் கனித்து விடுவான் அவன். அப்படி கனித்தான் என்றால் அதில் தவறு நேராது. அப்படியிருக்கும் போது இதற்கு சாத்தியம் இல்லை என உள்மனம் கூற, அதை பொய் என்பது போல் மயூரியின் தோழியான மேனனின் தங்கை உண்மை அதுதான் என அடித்து கூறினாள்.


அதாவது அவளது சிறுவயதிலிருந்தே மாமன் மகன்மேல் ஓர் ஈர்ப்பு இருந்ததாகவும்.. அவன் குடும்பத்திற்கும் அவர்கள் குடும்பத்திற்கும் சரிவராது என்பதனால், இருவரையும் பிரித்து வைத்தால் அந்த எண்ணம் மாறும் என்றதனால் தான் மயூரியை ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்ததாகவும் கூறியவள்.


"மூணு மாசமிருக்கும், ஒரு வாரமா அவ ஸ்கூல் வரலன்னு சந்தேகப்பட்டு.. அவ தங்கியிருந்த ஹோஸ்டல்ல போய் விசாரிச்சேன். அப்போ தான் அவகூட தங்கியிருந்த ஒரு சிலர் அவங்க சொந்தக்காரங்களே இந்தமாதிரி சொல்லி டீசி வாங்கிட்டு போனதா சொன்னாங்க.


ஆனா உயிர் தோழியா பழகிட்டு என்கிட்ட அவ மாமன் பத்தி ஒரு வார்த்தை சொல்லாம ஓடிப்போவான்னு எதிர்பாக்கல" என கவலையாக கூறியவள் பேச்சினை நம்பாமலும் இருக்க முடியவில்லை.


முகத்தோடு சேர்த்து உள்ளமும் தளர்ந்து பேக, இருக்கையிலிருந்து எழுந்து கொண்டவன் மாற்றங்களை கவனித்த மேனன்.


"மச்சா... அவளை பத்தி சொன்னதும்.. ஏன்டா நீ ஒரு மாதிரி ஆகிட்ட? அவளை உனக்கு முன்னாடியே தெரியுமா?" என்றான்.


இல்லை என்பதாக தலையசைத்தவனுக்கு, வேறொருவன் மனைவிமேல் தனக்கு உண்டான காதலை பற்றி கூற மனம் ஒப்பவில்லை.

இதற்குமேல் இங்கிருப்பதில் பலனில்லை என எழுந்து கொண்டவனை தனிமையில் அழைத்து வந்து விசாரித்ததும் தான் மேனனிடமே உண்மையினை கூறினான்.


"என்னடா நீ...! எந்தக்காலத்தில இருக்க? நேர்லயே பார்த்து, பேசி உருகிக்காதலிக்கிறவங்களே கழட்டிவிட்டு போற காலத்தில இருந்திட்டு, பேக்றவுண்டில பாத்து காதலிச்சேன்னு சொல்லுற, இப்போ பத்து வயசு பாப்பாவுக்கு கூட ஆளு இருக்கும்டா! காலம் அவ்வளவுக்கு ஸ்பீடா போயிட்டிருக்கு,
அவளையே நினைச்சு வாழ்க்கையை ஸ்போயில் பண்ணிக்காம.. பெத்தவங்கள சந்தோஷமா வைச்சிருக்கிற வழியப்பாரு" என சென்னவன் அறிவுரை கேட்பதற்கு நன்றாக இருக்கும், அந்த இடத்தில் இருப்பவனுக்கு தானே அவன் வலி புரியும்.


நண்பனிடம் சொல்லிக்கொண்டு விடைபெற்று விட்டான்.
அவன் விடைபெற்ற நேரம் மழையோ வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது.


எவ்வளவு முயன்றும் அவளையே நினைத்திருந்த மனதினை கட்டுப்படுத்த நினைத்தவனுக்கு அது முடியாது போனது.


அவளுக்கு தான் கல்யாணமாகிடிச்சுல்ல. அப்புறம் ஏன்...? இன்னொருத்தன் பொண்டாட்டிய நினைக்கிறது பாவம். அந்தப்பாவத்தை நீ செய்யாத... என இருமனங்களுக்கு நடுவே நடந்த தர்க்கத்தில் கேஷியின் கவனம் திதற,


சட்டென எதன் மீதோ மோதிய சத்தத்தில் பிரேக்கிட்டு காரினை நிறுத்தி இறங்கிப்பார்த்தான்.


இருள் கவ்வத்தொடங்கிய நேரம்... மழை கொட்டிக்கொண்டிருந்ததனால் சாலையோ வெறிச்சோடிப்போய் கிடந்தது.


காரிலிருந்து ஐம்பது மீட்டர் தொலைவில், வீதியின் ஓரம் விழுந்து கிடந்த பெண்ணை கண்டு ஓடிச்சென்றான்.


தலையில் இரத்தக்கசிவுடன் சுயநினைவற்று கிடந்தவளை தட்டிப்பார்த்தான். அவள் எழுந்துகொள்ளவில்லை என்றதும் தூக்கி காரில் போட்டுக்கொண்டு வைத்தியசாலை சென்றான்.


அவளை பரிசோதித்த டாக்டர்... நெற்றியிலிருந்த காயத்தை ஆராய்ந்து..

"பெரியளவில் அடி ஒன்றும் இல்லை, பயந்ததில் மயக்கமாகியிருக்கலாம். மயக்கம் தெளிந்ததும் அழைத்துச்செல்லலாம்" என கூறினார்.


அரைமணி நேரத்தில் மயக்கம் தெளிந்தவள்.. இருக்குமிடம் தெரியாது விழிக்க,
தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன்,

"ஸாரி.... நான் தான் உங்களோட இந்த நிலைக்கு காரணம்.
ஏதோ ஒரு குழப்பத்தில வந்ததனால" என தடுமாற,


"இல்ல சார்! உங்கமேல தப்பில்ல. நான் தான் அவசரமா ரோட் கிராஸ் பண்ணலாம்ன்னு உங்க வண்டிய கவனிக்காம ரோட்ல பாஞ்சுட்டேன்.. நீங்களும் என்ன பண்ணுவீங்க? எதிர்பாராத நேரம் இந்த மாதிரி ஆனா சட்டுன்னு பிரேக் போட முடியுமா என்ன?" என தன்மேல் உள்ள குற்றத்தை ஒப்புக்கொண்டவளை பார்க்கும் போது பெருமையாக இருந்தது அவனுக்கு.
அதனோடு அவள் மேல் ஓர் மரியாதையும் உண்டானது.


"உங்களுக்கு எதுவுமே இல்லையாம், மயக்கம் தெளிஞ்சதும் வீட்டுக்கு போகலாம்ன்னு டாக்டர் சொல்லிட்டாரு. வாங்க நானே உங்கள டிராப் பண்றேன்" என்றான்.


"என்னால எதுக்கு உங்களுக்கு வீண் சிரமம்..? நானே ஆட்டோ பிடிச்சு போய்கிறேன்"

"இதில என்ன சிரமம் இருக்கு.? நான் ஒன்னும் உங்கள சுமக்க மாட்டேன். கார் தான் சுமக்க போகுது.. அதனால காரணம் சொல்லாம வாங்க" என்றவன் காரை நோக்கி நடக்க, அவளும் அவன் பேச்சில் சிரித்துவிட்டு கூடவே நடந்தாள்.


அவள் சொன்ன பாதையில் காரைவிட்டவன் அவள் வீட்டு வாசலில் காரை நிறுத்த,
காரிலிருந்து இறங்கியவள்,


"தப்பா எடுக்கலன்னா உள்ள வந்துட்டு போகலாமே சார்! உங்கள பார்த்தா அம்மா ரொம்ப சந்தோஷ படுவாங்க" என்றாள்.


அவளது கெஞ்சலுடனான அழைப்பபை நிராகரித்து, அவள் மனதை கஷ்டப்படுத்த விரும்பாது இறங்கியவனை உள்ளே அழைத்து சென்றாள்.
அளவான வீடு... எல்லா பொருட்களும் அந்தந்த இடத்தில் அழகாக அடுக்கப்பட்டு மிகவும் நேர்த்தியாக இருந்தது.


வீட்டினையே ஆராய்ந்தவன், சவற்றினில் மாட்டப்பட்டிருந்த படத்தினை கவனிக்க தவறினான்.


"வீட்டில அம்மா ரொம்ப கண்டிப்பு போலயே!" என்றான்.
அவனது கேள்வியில் அவள் புரியாது பார்க்க,


"வீடு இவ்ளோ அழகாவும்.. நேர்த்தியாவும் இருக்கே, அதான் கேட்டேன்.
ஆமா எங்க யாரையுமே காணோம். வீடு இவ்ளோ அமைதியா இருக்கு" என்க.


"அது எப்பவுமே அப்பிடித்தான் சார்.
நீங்க உக்காருங்க" என பக்கவாட்டில் இருந்த அறையில் நுழைந்தவள், டவல் ஒன்றை எடுத்து வந்து அவனிடம் நீட்டி,


"ஈரத்தோட ரொம்ப நேரம் நிக்காதிங்க... தொடைச்சுக்கங்க. நான் காஃபி எடுத்து வரேன்" என கிச்சன் புறம் நடந்தவறே..


"ம்மா..... ம்மா... இங்க வாம்மா! யாரு வந்திருக்காங்கன்னு வந்து பாரு!" என்றவள் குரல் காற்றில் தேய்ந்து கரைந்தும் உள்ளிருந்து யாரும் வரவில்லை.


பத்து நிமிட தாமதத்தின் பின் தட்டில் இரண்டு காஃபி கப்போடு வந்து அவனது எதிர் இருக்கையில் அமர்ந்தவள், அவனுக்கு ஒன்றை கொடுத்து தானும் ஒன்றை எடுத்துக்கொண்டாள்.


"மழை குளிருக்கு இந்த சூடு இதமா இருக்கும் குடியுங்க" என பருகியவளையே பார்த்தவாறு தன்னதை பருகியவன்.


"உன் பெயர் இன்னமும் நீ சொல்லவே இல்லை" என்றான்.


"ஆமால்ல. என் பேரு மலர்.
பிறந்தப்போ ரோஜா பூ மாதிரி ரொம்ப அழகா இருந்ததனால, மலர்ன்னு வைச்சதா அடிக்கடி அம்மா சொல்லுவாங்க" என்றாள் புன்னகை மாறாமலே.


"அம்மா சரியாத்தான் வைச்சிருக்காங்க.. இப்பவும் நீ அழகா தான் இருக்க மலர்" என்றான்.
அவன் அப்படி கூறியதும் வெக்கம் வந்துவிட,


"தேங்க்ஸ் சார்" என சிரித்தவளிடம்.


"வெக்கப்பட்டது போதும் மலர்.. அம்மாவ கூப்பிடு! சொல்லிட்டு கிளம்புறேன்" என்றதும் அவள் முகம் வெளிறிப்போவதை கண்டவன்,


"இந்த மாதிரி நேரத்தில பொண்ணுங்க இருக்கிற வீட்டில வெளி ஆண் ரொம்ப நேரம் நிக்கிறத தெரிஞ்சா, அக்கம் பக்கம் தப்பா பேசும்மா... நான் இன்னொரு நாளைக்கு வந்து விருந்தே சாப்பிட்டு போறேன்.
இப்போ அம்மாவ கூப்பிடு!" என்றான்.
ம்ம்.. என்றவள்,


"ம்மா.... சார் போயிட்டு வரேன் என்கிறாரும்மா!" என அவனது பின்புறம் பார்த்துக்சொன்னவள் பார்வை சென்ற இடத்தை திரும்பி பார்த்தவன் அதிர்ந்தே போனான்.


ஆம் அங்கு இருந்தது மாலை மாட்டியிருந்த ஐம்பதை எட்டியிருந்தவர் நிழல் படம். படத்தினையும், மலரையும் மாறிமாறிப்பார்த்தவனுக்கு ஆச்சரியம்.
அதனருகில் சென்று அந்த படத்தினை பார்த்தவன்,


"இவங்க.....?"

"என்னோட அம்மா....! இறந்து ஐஞ்சு வருஷம் ஆகிடிச்சு" என்றவள் கண்கள் சற்று கலங்கியது.


"ஒரு பொண்ணா.. யார் தயவுமில்லாம ரொம்பவே அழகா என்னை வளர்த்தாங்க. அவங்க இருக்கிற வரை எனக்கு குறையோ, கஷ்டமோ இருந்ததில்லை.. என் தேவை இதுதான்னு நானா சொல்லுறதுக்கு முன்னாடி அவங்களுக்கு தெரிஞ்சிடும்.
ஆனா இப்போ......!" என்றவள் உதடுகள் துடிப்பது அப்பட்டமாக தெரிய,

முகத்தினை இரு கை கொண்டு மூடி சற்று நேரம் அமைதிகாத்து தெளிந்தவள்.
"அவங்க மட்டும் தான் என் உலகம்ன்னு நினைச்சிருந்த எனக்கு.. திடீர்ன்னு என்னை விட்டிட்டு போனத ஏத்துக்க முடியல.


எப்பவும் போல என்கூடவே இருக்கிறாங்கன்னு நினைச்சிட்டு எல்லாத்தையும் சேர் பண்ணிப்பேன். அதில எனக்கொரு திருப்தி.. ஆனா வெளிய இருந்து பாக்கிறவங்களுக்கு பைத்தியம்ன்னு தோனும்.

அதை பத்தி எனக்கு கவலையில்ல" என சாதாரணமாக தோளை குழுக்கியவளை பார்க்கும் போது வினோதமாக இருந்தது.


"உன்மேல இவ்ளோ அம்பு வைச்சிருந்தவங்களுக்கு என்னாச்சு? எப்பிடி அவங்க இறந்தாங்க?"


"தெரியல? அவங்க இறப்பு கொலையா? தற்செயலா என்கிறது இதுவரைக்கும் எனக்கே சந்தேகம் தான்.
நான் காலேஜ் போயிட்டா, வீட்டில அம்மா தனியாத்தான் இருப்பாங்க.


அன்னைக்கும் அதே மாதிரி காலேஜ் போயிட்டு சாயந்தரம் வீட்டுக்கு வந்த கதவை தட்டினேன்.


பதிலையே காணோம்... அவ்ளோ நேரம் என்னை காக்க வைக்கமாட்டாங்களேன்னு சந்தேகம் வந்து, லேசா கதவை தள்ளினேன்.


திறந்திடிச்சு... தனிய இருக்கிறப்போ அம்மா கதவு பூட்டாம விடமாட்டாங்க.
அப்பவே ஏதோ விபரீதம்ன்னு தோனிச்சு.. உள்ள போய் பாத்தா, வீட்டோட நிலமைய சொல்லவே வேண்டாம்.


எந்தப்பொருளும் அந்த இடத்தில இல்ல... எல்லாமே தரையில சின்னா பின்னமா விழுந்து கிடந்திச்சு.

அதை பாத்து பயந்துபோய் அம்மான்னு கத்திட்டே வீடு பூரா தேடினேன்.
பதில் வரவே இல்ல... கடைசியில பாத்ரூம் கதவை திறந்தப்போ தான், தலையில அடிபட்டு ரத்த வெள்ளத்தில கிடந்தவங்கள பார்த்து கத்த ஆரம்பிச்சேன்.


ஊரே வந்து பாத்து. இது கொலையாத்தான் இருக்கணும்ன்னு போலீஸ்க்கு தகவல் சொன்னாங்க.


போலீஸும் முதல்ல கொலை தான் என்டாங்க. அப்புறம் இது கொலையில்ல.. பாத்ரூம்ல வழுக்கி விழுந்ததனால தலையில அடிபட்டு இறந்ததா கேஸ முடிச்சிட்டாங்க.
ஆனா எனக்கு நல்லாத் தெரியும், இது கொலை தான்.


அம்மா பாத்ரூம்ல இறந்து கிடந்தப்போ... மோதிரம் ஒன்னு அவங்க கையில பொத்திப்பிடிச்சபடி இருந்து எடுத்தேன்.


ஆனா அந்த மோதிரம் எங்களோடது இல்ல. அதை நான் பார்த்தது கூட இல்ல" என சொன்னவள் பேச்சை கேட்டிருந்தவனுக்கு அவள் கதையில் பல மர்மங்கள் இருக்கும் போல் தோன்றியது.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️
கேஷவ்க்கு first லவ் மயூரி,, ஆனால் மலர் அம்மா கையில இருந்த மோதிரம் 🤔🤔🤔🤔🤔🤔
யாரோடதா இருக்கும் அதுக்கும் கேசிக்கும் சம்பந்தம் இருக்குமோ 🤔🤔🤔🤔🤔
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️
கேஷவ்க்கு first லவ் மயூரி,, ஆனால் மலர் அம்மா கையில இருந்த மோதிரம் 🤔🤔🤔🤔🤔🤔
யாரோடதா இருக்கும் அதுக்கும் கேசிக்கும் சம்பந்தம் இருக்குமோ 🤔🤔🤔🤔🤔
கண்டிப்பா சம்மந்தம் இருக்கு க்கா
 
Top